வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஊர்காவற்துறையில் EPDP இன் குண்டர் தாக்குதலை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கின்றது

26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குண்டர்கள் கடந்த வியாழனன்று, வடக்கு இலங்கையிலுள்ள ஊர்காவற்துறையில் நடத்திய அட்டூழியங்களை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடந்தது பற்றியும், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவிற்கு ஆதரவு இல்லாதது தெளிவான நிலைமையிலும், ஒரு ஈ.பி.டி.பி கும்பல் டஜன் கணக்கான இளைஞர்களையும் முதியவர்களையும் தாக்கியதோடு, எதிர்த்தரப்பு வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அல்லது சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விஜே டயசுற்கு வாக்களித்ததற்காக திட்டித்தீர்த்துள்ளது. ஒரு தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. ஊர்காவற்துறையிலும் மற்றும் அயலில் உள்ள தீவுகளிலும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் ஒரு துணைப்படைக் குழுவை வைத்துள்ளது. இந்தக் கட்சி இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒரு அமைச்சரவை அமைச்சராவார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் தொடங்கியதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக, உள்ளூர் மக்களை அச்சுறுத்துவதிலும் தொந்தரவு செய்வதிலும் இராணுவத்துடன் நெருக்கமாக இயங்கிவந்துள்ளது. ஜனவரி 28 அன்று சுமார் மாலை 5 மணியளவில், ஹை-எஸ் வான் ஒன்றில் ஊர்காவற்துறை தீவில் அம்பிகைநகர், செட்டிப்புலம், வேலனை ஏழாம் வட்டாரம், துறையூர் மற்றும் புளியங்கூடல் ஆகிய கிரமாங்களுக்கு ஈ.பி.டி.பி. யின் கும்பலொன்று பயணித்துள்ளது. இங்கு பெரும்பாலான கிராமத்தவர்கள் வறிய மீனவர்களாவர். இந்தக் குண்டர்கள் பெரிய மரப்பொல்லுகளை வைத்திருந்தனர். இந்தக் கும்பல் முதலில் கிராமத்தவர்களை வாக்காளிக்காமைக்காக குற்றஞ்சாட்டியது. தாம் வாக்களித்தமையை உறுதிப்படுத்த கையில் இடப்படும் மை அடையாளத்தை கிராமத்தவர்கள் காட்டிய போது, அதை நிராகரித்த குண்டர்கள், "நீங்கள் தேர்தலில் பொன்சேகாவுக்கு வாக்களித்துள்ளீர்கள், நீங்கள் கத்தரிக்கோலுக்கு [சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் சின்னம்] வாக்களித்துள்ளீர்கள், நாங்கள் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவியுள்ளோம், நீங்கள் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் கைமாறு செய்யவில்லை," என திட்டினர். ஈ.பி.டி.பி. குண்டர்கள், ஒவ்வொரு கிராமமாகச் சென்று எந்தவொரு சிறிய ஆத்திரமூட்டலும் இன்றி, வீதியில் சென்ற ஆண் கிராமத்தவர்களை அடித்தனர். பல டசின் கணக்கானவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவ சிகிச்சை பெற முயன்றாலும், மேலதிக தாக்குதல்களுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்லவில்லை என உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். இதே காரணத்துக்காக, மருத்துவமனைக்கு சென்றவர்களும், தாக்கியவர்களின் பெயரும் அவர்களது அரசியல் தொடர்பும் தெரிந்திருந்தும் பொலிசில் முறைப்பாடு செய்யாமல் இருந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை, அதே கும்பல் அம்பிகை நகருக்கு வந்துள்ளது. உள்ளூர் மக்களின் சினத்தைப் பற்றி தெளிவாக எச்சரிக்கை அடைந்த அந்தக் கும்பலின் தலைவர், கடற்படை புலனாய்வுத்துறையினர் மக்களை சுடுவதற்கு தீட்டியிருந்த திட்டத்தை தவிர்க்கவே தனது குண்டர்கள் இத்தகைய வன்முறையை மேற்கொண்டதாக கேலிக்கூத்தாக கூறியுள்ளார். உண்மையில், ஊர்காவற்துறையில் கடற்படை புலனாய்வுத்துறையின் ஒரு இணைந்த பகுதியாகவே ஈ.பி.டி.பி. இயங்குகிறது. வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வந்த ஈ.பி.டி.பி. யினர், வடக்கின் பிரதான நகரான யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்றில் கிராமத்தவர்கள் பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளனர். சிலர் ஏன் என கேள்வியெழுப்பிய போது, அவர்களை கேள்விகள் கேட்க வேண்டாம் என கூறியதோடு வியாழக்கிழமை நடந்த குண்டர் மற்றும் வன்முறைத் தாக்குதலையும் அவர்களுக்கு நினைவூட்டியுள்ளனர். சனிக்கிழமை ஈ.பி.டி.பி. யின் ஹர்த்தால் அல்லது பொது கடையடைப்பு என்பது, யாழ்ப்பாணத்தில் அராசங்கத்துக்கு குறைந்த வாக்குகளே கிடைத்ததால், தான் பதவி விலகப் போவதாக நாடகம் நடத்திய கட்சி தலைவர் தேவானந்தாவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். ஈ.பி.டி.பி. கடைகளை மூடுமாறும் போக்குவரத்து சேவைகளை நிறுத்துமாறும் அழுத்தம் கொடுத்தது. பாதுகாப்பு படைகள் நிலைமையை வழமைக்குத் திருப்புமாறு கேட்டவுடன் கட்சி உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. கடந்த வார வாக்கெடுப்பு, யாழ்ப்பாணத்தில் பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் ஒரு அழிவுகரமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி என்ற வகையில் இராஜபக்ஷவும் அவரது உயர்மட்ட இராணுவத்தளபதி என்ற முறையில் பொன்சேகாவும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கை நாசம் செய்த யுத்தத்துக்கு பொறுப்பாளிகளாவர். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தோல்வியானது "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவரவில்லை. மாறாக, இராணுவ ஆக்கிரமிப்பை பலப்படுத்தியுள்ளது. இரு முதலாளித்துவ வேட்பாளர்கள் மீதும் அதிருப்தி கண்டுள்ள 74 சதவீதமான வாக்காளிக்க தகுதியானவர்கள் வாக்களிக்கவேயில்லை பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஒரு "குறைந்த தீங்காக" கருதியே வாக்களித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தோல்வியடைவதற்கு முன்னர் அவர்களின் அரசியல் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்போது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்தை எதிர்பார்த்து, பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. தேர்தல் தினத்தன்று, பிரதேசத்தில் தீவிரமான பதட்ட நிலைமையை குறிக்கும் விதத்தில் யாழ்ப்பாணத்தில் பல குண்டுகள் வெடித்தன. வடக்கில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதிகளில் ஊர்காவற்துறையில் மட்டுமே பொன்சேகாவை விட இராஜபக்ஷ ஒரு குறுகிய பெரும்பான்மையை பெற்றுள்ளார். அது நிச்சயமாக இராஜபக்ஷ மற்றும் ஈ.பி.டி.பி. மீதான வெகுஜன ஆதரவினால் கிடைத்ததல்ல. ஈ.பி.டி.பி. முறைகேடான வாக்களிப்பில் ஈடுபட்டதாக பலர் எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். தீவின் பெரும்பகுதி கடற்படையின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மாவட்டத்தில் தனது கட்சி அவமானத்துக்குரிய தோல்வியை கண்ட போதிலும், இறுதியாக ஈ.பி.டி.பி. தலைவர் தேவானந்தா பதவி விலகவில்லை. அவர் யாழில் வெளிவரும் தினக்குரலுக்கு "மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டதால் அவர்கள் ஜனாதிபதிக்கு [இராஜபக்ஷவுக்கு] வாக்களிக்கவில்லை. என்னை இராஜனாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதியும் மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டதால் நான் இராஜினாமா செய்யவில்லை." எனத் தெரிவித்ததார். ஊர்காவற்துறையிலோ அல்லது ஏனைய இடங்களிலோ தமிழர்கள் மத்தியில் ஈ.பி.டி.பி. இற்கு கணிசமான ஆதரவும் கிடையாது. அரசாங்கத்தை ஆதரிக்குமாறு மக்களுக்கு இலஞ்சம் கொடுக்கவும், அது முடியாத போது அவர்களை தொந்தரவு செய்யவும் மற்றும் குண்டர் நடவடிக்கைகளை பயன்படுத்தவும் அரசாங்கத்தின் கூலியில் தங்கியிருக்கும் அரசியல் குண்டர் கும்பல் அமைப்பாக இந்தக் கட்சி சீரழிந்து போயுள்ளது. அரசாங்கத்தின் யுத்தத்தை இடைவிடாமல் எதிர்க்கும் மற்றும் வடக்கு, கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் திருப்பியழைக்க கோரும் சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு குறிப்பிடத்தக்க இலக்காக இருந்து வந்துள்ளது. 2000 ஆண்டில், கடற்படையின் மீன் பிடி கட்டுப்பாடுகளுக்கு எதிராக மீனவர்கள் மத்தியில் கட்சி பிரச்சாரம் செய்த பின்னர், ஈ.பி.டி.பி. ஊர்கவாற்துறையில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீதான சரீரரீதியான தாக்குதலுடன் அச்சுறுத்தியது. கட்டுப்பாடுகளை அமுல்படுத்த கடற்படையால் நியமிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி., உள்ளூரில் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்த போதும் யாரும் வரவில்லை. கூட்டமொன்றுக்கு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் ஒருவரை ஈ.பி.டி.பி. குண்டர்கள் இழுத்து வந்ததோடு இன்னுமொருவரை சுட்டதில் அவர் கீழே விழுந்தார். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தால் பழிவாங்கப்படுவர் என சகல உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தப்பட்டது. 2007 மார்ச் 22 அன்று, சோ.ச.க. உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் அம்பிகை நகருக்குப் பயணித்துக்கொண்டிருக்கும் போது ஊர்காவற்துறையில் காணாமல் போயினர். இதுவரையும் அவர்களைக் காணவில்லை. சோசலிச சமத்துவக் கட்சி சேகரித்த சகல ஆதராங்களும், கடற்படையினதும் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும், இத்தகைய நூற்றுக்கணக்கான "காணாமல் போன" சம்பவங்களுக்கு பொறுப்பாளியான ஈ.பி.டி.பி. போன்ற துணைப்படை குழுக்களும் சம்பந்தப்பட்டிருப்தையே பலமாக சுட்டிக்காட்டின. (பார்க்க: "இலங்கை: சோ.ச.க. அங்கத்தவர் நடராசா விமலேஸ்வரன் காணாமல் போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன"). ஊர்காவற்துறையில் நடந்த அண்மைய தாக்குதல்கள், கடந்த வார ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இராஜபக்ஷ அராசங்கமும் அதன் பங்காளிகளும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் மிகப் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். உத்தியோகபூர்வ முடிவுகள் இராஜபக்ஷவுக்கு பிரமாண்டமான பெரும்பான்மை கிடைத்திருப்பதாக காட்டிய போதிலும், அரசாங்கம், அரசியல் ஸ்தாபனத்தின் எதிர்ப்பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்பையும் மற்றும் வாழ்க்கைத்தரம் சீரழிவது சம்பந்தமான பரந்த வெகுஜன அதிருப்தியையும் எதிர்கொள்கின்றது. அரசாங்கம் ஏப்பிரலில் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற நிலையிலும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரும் வெட்டுக்களையும் உழைக்கும் மக்களின் முதுகில் திணிக்கத் தொடங்கியுள்ள நிலையிலும், அது அடக்குமுறையையும் குண்டர் நடவடிக்கையையும் நாடுவதற்கு தயக்கம் காட்டாது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை விடுக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத்தின் பிரதான பங்காளி என்ற வகையில், தயாரிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் பற்றி ஈ.பி.டி.பி. ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது

இலங்கையில் அவசரககால சட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய எதிர்கட்சிகள் தீட்டிய சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அதிகாரிகள் அல்லது படைவீரர்கள். அரசியலில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 10க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டபட்டன என்பதை மறுக்கும் எதிர்கட்சியினர், கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறுகிறார்கள். அரசின் ஊதுகுழலாக செயற்பட்டுவரும் டெய்லி நியூஸ் எனும் தினசரி, ஜனாதிபதி மற்றும் இதர சிலரை கொலை செய்ய முயன்றார்கள் என அது கூறும் செயற்பாட்டில், இவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

டெங்கு காய்ச்சல்: பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அமைச்சு கடும் அறிவுறுத்தல்!

டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு ஜிசியி வழங்கப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு பணிப்பாளர் டாக்டர் நிமல்கா பன்னிலஹெட்டி நேற்றுத் தெரிவித்தார்.இதேநேரம், டெங்கு காய்ச்சலிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதற்குத் தேவையான அறிவூட்டல் நடவடிக்கைகள் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நாட்களில் எவருக்காவது இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதுடன் நீராகாரத்தையும் உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.வடமாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்திருப்பது தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடகீழ் பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சியை தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. என்றாலும், இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருக்கும் பிரதேசங்களில் இரசாயனபுகை விசிறவும், மக்களுக்கு அறிவூட்டவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுளம்புகள் பெருகக் கூடியவகையில் சுற்றாடலைக் கொண்டிருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவது அவசியம். என்றாலும் நுளம்புகளால் பரப்பப்படுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. சுற்றாடலை நீர்தேங்க முடியாதபடி சுத்தமாகவும், உலர்நிலையிலும் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றார்.

வவுனியாவில் தமிழ்ப்பெண் உட்பட நால்வர் படுகொலை

வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டார். ஏ09 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே மர்மமான முறையில் இறந்துள்ளார். சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதன், 3 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காணவில்லை

யாழ்ப்பாணம் சுண்ணாகத்தைச் சேர்ந்த 16 அகவையுடை விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற இளைஞன் கடந்த 26 ஆம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களினை கடத்தி கப்பம் பறிக்கும் செயல்களில் சிறீலங்காப்படை ஒட்டுக்குழுக்கள் ஈடுபட்டுள்ளதால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சஉணர்வு தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்... சம்பந்தன் - பொய்மைந்தன்

தமிழீழத் தாய்மண்ணின் விலங்கொடிப்பதற்காக, தமிழ் மக்களின் விடிவிற்காக, தம்மையே தகர்த்துக்கொள்ளும் கரும்புலிகளையும், இரத்தமும் சதையும் பீறிட உயிர் நீர்த்த மாவீரர்களையும் விடுதலைப் போருக்கு உருவாக்கிய எம் தலைவனால், தமிழீழ அரசியல் போருக்காக, பிரிந்து நின்ற அமைப்புக்களையும், தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயத்துடனான தனித்தமிழீழ அரசுக்கோட்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எங்கள் தேசியத்தலைவரின் விருப்பிற்கிணங்க தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதால், அது தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டது. அதற்குமுன் கூட்டமைப்பினரை யாரும் அடையாளம் கண்டதில்லை. அதிலும் சம்பந்தனை திருகோணமலையிலோ, அல்லது வேறெங்குமோ யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. அவர் மக்களால் தூக்கியெறியப்பட்டு, ஏற்கனவே தேர்தல்களில் முகம்கொடுக்க முடியாமல் இருந்தவர். மக்கள் துன்பப்பட்ட காலங்களில் அவர் மட்டும் சுகமாக இந்தியாவில் வாழ்ந்தவர். பதவிக்கும் புகழுக்கும் பேராசைகொண்டு கூட்டமைப்பில் இணைந்து, பழசு என்ற காரணத்தால் தலைமையையும் பெற்றுக்கொண்டவர். இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார். தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையான வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கிய சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நட்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார். இவ்வாறு தமிழ் மக்களை சரத்திற்கு வாக்களிக்க வைத்து, இனவெறியன் மகிந்தவின் தீராத பகையாளியாக்கியுள்ளார். இதுதான் தமிழ்மக்களுக்கு அவர் ஆற்றியதொண்டு. இலங்கைச் சட்டசபையில் தனித்தமிழீழத்திற்காக குரல் கொடுக்கவேண்டிய சம்பந்தன், எமது தேசியத் தலைமை மீது பலமுறை சேற்றை வாரி இறைத்துள்ளார். சிங்களத்தின் கறுப்புப்பணம் அவர் பைகளை நிரப்பியதால், இனி தனிநாடு கேட்டுத் தனது சிங்கள நண்பர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று கூறிச், சிங்களத்தின் வயிற்றில் பால் வார்த்துள்ளார். விலகித் தூரநின்று துரோகம் செய்பவன் கருணா என்றால் விலகாமல் கூட இருந்தே குழிபறிப்பவர் சம்பந்தன். தமிழ் மக்களின் தமிழீழத் தாகத்திற்கு ஆப்புவைக்கும் சம்பந்தன் போன்ற செயல் வீரர்கள் இருக்கும்வரை எங்கள் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கும். சாக்கடை நீரானது கடல்நீரைச் சேர்ந்தால் அதற்குப் பெயரும் வேறாகிப் புண்ணிய தீர்த்தமாகிவிடும். கடல் பொங்கும்போது கடல்நீர் சாக்கடையில் புகுந்தால் மீண்டும் அது சாக்கடைநீராகி அருவருப்புக்குள்ளாகிவிடும். சம்பந்தனும் இனி சாக்கடைநீர்தான், இனி தமிழ்மக்கள் அருவருப்புடன்தான் அவரை அவதானிப்பர்.

பிழவுபட்ட சிறீலங்காப்படையினரை கட்டுப்படுத்த அரசு கடும் முயற்சி

சிறீலங்காப்படையில் இருந்து தப்பிச்சென்றவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் சிறீலங்காப்படையினரில் இருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி தப்பி ஓடிய சிறீலங்காப்படையினர் அருகில் உள்ள படைமுகாம்களில் இணைந்து கொள்ளுமாறு சிறீலங்காப்படைத்துறைப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை இவ்வாறு சேராதவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஒன்றிற்கு சிறப்பு படைப்பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இராணுவத்துள் பிழவு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நிலமையை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன

உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை-சோமவன்ச

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 26 ம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி சுமார் 18 இலட்சம் மேலதிக வாக்குளினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனினும் இந்த தேர்தல் முடிவுகள் சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தல் முடிவுகள் இல்லை என குற்றம் சுமத்தும் எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து பல்வேறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தன. இந்நிலையில் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணனியின் தொழில்நுட்பத்துடன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் அதேவேளை இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம், பொதுக்கூட்டம் என்பவற்றை நடத்தியது. மோசடி ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டம் என்பன இடம்பெற்றன. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள லிப்படன் சுற்றுவட்டத்றிகருகில் இன்று மாலை 3.15 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடம்வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக ஹைப்பார்க் விளையாட்டரங்கை நேர்க்கி நகர்ந்தது. பொதுக்கூட்டம் நடத்துவதற்காக குறித்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரார்கள் கோஷமிட்டப்படி வந்தனர். இதன் போது மோசடியான ஜனாதிபதி முடிவுகளை ஏற்கமாட்டோம், பொய் குற்றம் சுமத்தி சட்டவிரோதமாக கைது செய்துள்ளவர்களை விடுதலை செய், ஊடக சுதந்திரத்தில் கை வைக்காதே, சதித்திட்டங்களைத் தீட்டி அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதை நிறுத்து, மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு இடியமீன் சிந்தனையா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இவர்கள் ஒருபுரம் வந்து சேர கொழும்பு கொம்பனிவீதியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ம் இடம்பெற்றதுடன், அவர்களும் கோஷமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள விளையாட்டரங்கை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலும் அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொதுச்செயலாளர், பாராளுமன்றக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அவரது கட்சியைச் சேர்நதவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர, ஜனாதிபதி வேட்பாளர்களான விக்ரமபாகு கருணாரத்தன, சரத் மனமேந்திர உட்பட பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த பொதுக் கூட்டத்தில் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில் இலங்கை வரலாற்றிலேயே இந்த மாதிரியாக ஒரு தேர்தல் முடிவைக் கொள்ளைக் கொண்டதை கண்டிருக்க முடியாது என குறிப்பிட்டார். அத்துடன் தேர்தலுக்கு முந்தைய தினங்களில் இடிஅமீன் ஹிட்லர் ஆகியவர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து சரத்பொன்சேக்கா வெற்றி பெற்றால் நாடு இவர்களின் ஆட்சியைப் போல் மாறும் என குறிப்பிட்டதாகவும் பாராளுமன்றக்குழுத் தலைவர் கூறினார். ஆனால் நாட்டில் தற்போது இடிஅமீனினை நேரடியாகக் காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், இடியமீனைப் போலவே மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த அரசை கவிழ்க்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டு மக்களின் உரிமைகளை, அவர்களின் உன்மையான வெற்றியைப் பெற்றுக் கொடுக்க கட்சிப்பேதத்தினை மறந்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்துள்ளதாக கூறினார். மக்கள் வழங்கிய ஆணையை பிழையான நபர்கள் கையாள்வதைத் தடுப்பதற்காக இன்று கொழும்பில் ஒன்று திரண்டுள்ள மக்களை இலங்கையின் சகல பகுதிகளுக்கும் கொண்டு சென்று மக்கள் புரட்சியை ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பயணத்தில் தமது உயிருக்கு அச்சுருத்தல் வருமாயின் அந்த அச்சுருத்தலை ஏற்று தாம் மரணிக்கவும் தயார் என குறிப்பிடும் சோமவன்ச அமரசிங்க தமது மார்பு மரணத்தைக் கண்டு ஒடுவதில்லை எனவும் மாறாக மரணத்திற்கு முன்வரும் மார்பு எனவும் குறிப்பிட்டார். எனினும் இப்பாடியான ஒரு நிலைமை ஏற்பாடுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புகூறவேண்டும் எனவும், இந்த நிலைமை அரசையே மாற்றியமைக்கும் படி மாறும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த ஜெனரல் சரத்பொன்சேக்கா இந்த நாட்டில் தானே ஜனாதிபதி என மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி தான் என குறிப்பிட்ட அவர் இலங்கை அரசின் லாவகமான சூழ்ச்சி மற்றும் மோசடியால் தனது வெற்றி பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இராணுவத்தினரை கைது செய்வதுடன் பலருக்கு கட்டாய ஒய்வு கொடுக்கப்படுவதை தான் அறிவதாகவும், இதற்கு முன்னால் இவர்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என தனக்கு தெரியாது எனவும், மக்கள் அலை மேலே எழுந்தது போல் உள்ளார்த்தமாகவும் தனக்கான ஆதரவு அலை வீசியுள்ளதை உணர்வதாக அவர் இதன் போது குறிப்பிட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் கைது செய்யப்படுவதாக குறிப்பிடும் அவர், தன்னிடம் கடமையாற்றிய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த கைதிற்கு தான் பயப்படபோவதில்லை என குறிப்பிட்ட அவர் தன்னை கைது செய்து சிறையிலடைத்தாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனாலும் பயப்படவேண்டாம் மக்களே நான் பெற்ற இந்த வெற்றியை கொள்ளையிட்ட இந்த அரசிடமிருந்து அந்த வெற்றியை மீளப்பெற்றுக்கொள்வோம் என தெரிவித்த அவர், இதனால் உயிரைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுமாயின் உயிர்தியாகம் செய்தேனும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எச்சரிக்கைகளை மீறி இன்றைய தினம் போராட்டம் நடத்தப்படும் ‐ எதிர்க்கட்சிகள்:‐ எச்சரிக்கைகளை மீறி இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டும் எனவும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நேரம் முதல் ஆளும் கட்சி பேரணிகளை நடத்தி வருவதாகவும், அரசாங்கமே இந்த சட்டத்தை மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், சட்ட ரீதியான முறையில் ஏழு தினங்களுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும், இதில் சட்ட சிக்கல்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியான சத்தியக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகல கட்சி தலைவர்களின் பங்களிப்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டால் அதற்கு எதிராக எவ்வாறு செய்றபடுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவுதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமாதானத்தை சீர் குலைக்க முயற்சி செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைப் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக..... 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசிக் கொன்றும், அவர்தம் வாழ்வுரிமையைப் பறித்தும், அங்கு வாழும் ஈழத் தமிழர்களையே அழித்துவரும் இன ஒடுக்கல் கொள்கையை, சிறிதும் கூச்சநாச்சமின்றி பின்பற்றியும் வருகிறது இந்த கொடிய அரசு. 1948-முதல் (இலங்கை சுதந்திரம் அடைந்த வருடம்) தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர். 1956-ல் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்டம் கலாச்சாரப் (மொழி) படுகொலையின் தொடக்கமாகும். 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக்கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலையாகும். 1970-லும் அதன் பின்பும் தமிழ் மாணவரின் மேல்நிலைக்கல்வி முடக்கப்பட்டது. 1972 –ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்பட்டது. 1981-ல் அரசின் அமைச்சர்களும், இராணுவ போலிஸ் படையினரும் சேர்ந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரித்தமை, அரசின் இன அழிப்பு நடவடிக்கையின் உத்தேசத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது. இலங்கையை ஆண்டு வந்த பல் வேறு சிங்கள அதிபர்களால் தொடர்ந்து வெவ்வேறு வகைகளில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளில், நாகர்கோவில் விமானக் குண்டுத் தாக்குதல், செம்மணிப் புதைகுழிகள் போன்ற எண்ணிலா நிகழ்வுகள் சாட்சி பகரும். அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு, சித்திரவதை, காணாமற்போதல் ஆகிய யாவும் ஓர் “சாதாரண நாளாந்தர நிகழ்வு” களாகின. இப்படியே இன்னும் பட்டியல் நீண்டு செல்லுகின்றது முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை. எமது பாசத்துக்கும் அன்புக்கும் உரிய புலம்பெயர்வாழ் மக்களே, இவ்வளவு காலமும் நாம் பட்ட துன்பங்கள் நீங்க நாம் அனைவரும் ஒன்றினைந்து உழைக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும். இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் எமது மக்கள் ஒரு செய்தியை சொல்லி தெளிவு படுத்தியிருக்கிறார்கள், அதாவது தமிழர்கள் வேறு சிங்களவர்கள் வேறு என்றும் நாம் ஒரு போதும் இணைந்து வாழமுடியாது என்பதுவே அதுவாகும். உறவுகளே எமது மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் ஆயுத முனையில் இருந்துகொண்டே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள், புலம்பெயர்ந்து வாழும் நாம் இந்நாளில் தமிழர் என்ற ஒரு சொல்லிற்குள் ஒன்றினைவோம் என்று உறுதி எடுத்து கொள்வதோடு மட்டும் நிற்காமல் எங்களது தாயகத்தை மீட்க எமது அளப்பரிய பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். புலம்பெயர் தேசங்களில் வியாபார, முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு அன்பு கலந்த மிகவும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து "ஸ்ரீலங்கா" என்ற வார்த்தை பிரயொகங்களை உங்கள் நிறுவனங்களில் எங்கும் பாவிர்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். நாம் தமிழர்கள் தமிழர்களாகவே இருப்போம், எமது இனத்தை அழித்த தேசத்தின் பெயரை உச்சரிப்பதால் எமது நாட்டுக்காக உயிர் நீர்த்த மாவீர செல்வங்களையும் எமது மக்களினது ஆத்மாவையும் நாம் இழிவு படுத்துவதற்கு சமனாகும். தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் நன்றி தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ். மாவட்டம் கொழும்புத்துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் 34 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் திரும்பாததையடுத்து, நேற்றுக் காலை தேடுதலின்போது கிணறு ஒன்றிலிருந்து அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் கனவு மட்டுமே

எவளோ ஒருத்தி யாசிக்கிறாள் இருட்டில் இருந்து நான் யோசிக்கிறேன்… சங்கரக்குட்டி எவளோ ஒருத்தி தன்னை விரும்புவதாக கற்பனையில் உறங்கிக் கிடந்தபோதுதான் பரணில் கிடந்த பசுமாதி அரிசி மூட்டை முதுகுக் கும்பத்தில் விழுந்ததாக ஞாபகம். முள்ளந்தண்டு முறிந்துவிட்டது.. அந்த எவளோ ஒருத்தி மட்டும் அகப்பட்டால்… பற்களை நறுமிக் கொண்டபோது முதுகுவலி வானின் உச்சத்தைத் தொட்டது.. ஐயோ.. என்று அலறினார்.. வைத்தியசாலையில் இருந்த தாதி ஓடிவந்து ஊசியால் இடித்துவிட்டுப் போனாள்.. மீண்டும் துக்கம் கண்களைத் தழுவியது.. இப்போது சில கனவுகள் அங்குமிங்குமாக இடறிப் போயின.. பட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பழைய தலைவர் அ.சிங்காரலிங்கம் வந்து எதிராக வாக்குப் போடுவது போல, தமிழீழ தனியரசை தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொண்டுவந்து கொடுக்க அதை வாங்கவந்த சங்கரகுமாரன் வாழைப்பழத் தோலில் சறுக்கிவந்து கல்யாணத்திற்குப் பிறகு கற்புக்கரசியாக இருக்கும் மந்திரம் சொன்ன குஷ்புவின் வயிற்றில் இடிப்பதுபோலவும் பிறகு ஆரோ ஒரு நடிகையும் சங்கரக்குட்டியும் கயிற்றில் தொங்க ஏ.ரிவியின் செய்தி வர இற்றுப்போன கயிறு அறுவது போலவும் கனவுகள் நாசமறுத்தன.. சொற்ப நேரத்தில் கொசுறுக் கனவுகளில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த கனவுக்குள் நுழைந்தார். அப்போதுதான் ஆகாசத் தீவில் தேர்தல் நடக்கப் போவதும், வாக்குப் பெட்டிகள் ஏலத்தில் விடப்படுவதும் தெரிந்தது.. கறுப்புத் தொப்பி, கறுப்புக் கோட், கையில் மந்திரக் கோலுடன் ஒரு வித்தைக்காரன் வந்தான்.. ஒரு பெட்டியைத் திறந்து காட்டினான்.. அந்தோ அதற்குள் எதுவுமே இல்லை என்று சபையில் இருந்தவர்கள் கரகோஷம் வைத்தார்கள்… பின் மந்திரவாதி மந்திரக் கோலை எடுத்து பெட்டி மீது சுழற்றிக் காட்டினான்.. அண்ணா பார் அக்கா பார்.. என்று சுற்றிச்சுற்றிக் காட்டினான்… தமிழீழச் சங்கரக்குட்டி எழுந்தார்… இது மோசடி ஒரு சர்வதேச கண்காணிப்புக் குழு இல்லாமல் இதை அங்கீகரிக்க முடியாது என்று தனக்குள்ள ஏ.ரிவி அறிவை ஆதாரம் காட்டி வாதிட்டார்.. மந்திரவாதி சிரித்தான்.. ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா கண்காணிப்பாளர் அனைவரும் ஏற்கெனவே வந்து முன் வரிசையில் இருப்பதை சுட்டிக் காட்டினான்.. மந்திரவாதிக்குப் பக்கத்தில் பளபளக்கும் துடைகள் தெரியும்படி ஒரு குமரி வைன் கிளாசுடன் இருந்தாள்.. இதுவரை அவளைப் பார்த்து புகழ்ந்து கொண்டிருந்த கண்காணிப்பாளர் இப்போது தமது வரவை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் விதமாக பதிவு செய்தனர்.. மந்திரவாதி பெட்டியை திறந்து கொட்டினான்… என்ன ஆச்சரியம் ஓர் இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் கொட்டுப்பட்டன… ஊழல் மோசடி எதுவும் இல்லாத வாக்குப் பெட்டி என்று கண்காணிப்பாளர் உறுதி செய்தார்கள்… கூட்டத்தில் இருந்து சால்வை போட்ட ஒருவன் எழுந்து தனது நாட்டிலும் தேர்தல் நடைபெற இருப்பதாகவும், இரண்டு லட்சம் வாக்குப் பெட்டிகளுக்கு ஓடர் கொடுப்பதாகவும் சொன்னான்.. திடீரென பக்கத்து நாட்டு மந்திரவாதி ஒருவன் மேடையில் தோன்றினான்… அவசரப்பட வேண்டாம்.. என்று கூறிவிட்டு தனது வித்தையை ஆரம்பித்தான்.. சங்கரக்குட்டிக்கு அவனை எங்கோ பார்த்ததுபோல இருந்தது.. அடுக்கு மொழியில் மந்திர உச்சாடனங்களை அவன் நடாத்தியபோது அவையே மெய் சிலிர்த்தது. பக்காக் கில்லாடியான அந்த ஆள் சங்கரக்குட்டியின் நினைவில் வந்தான்.. பழைய காலத்தில் மந்திரவித்தைகள் செய்யும் பூசாரிகளை விரட்டியடித்துவிட்டு ஆட்சிக்கு வந்த அடுக்குமொழி செம்மலே அந்த மந்திரவாதி என்றும் தெரிந்தது.. இப்போது பூசாரிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் பூசாரியாக அவன் மாறியிருந்தான்… மந்திரவித்தை ஆரம்பித்தது.. சட்டென மின்சார வெட்டு ஏற்பட்டது… யாருமே பார்க்க முடியாத கும்மிருட்டு… வாக்காளரிடம் அவன் தலையில் அடித்து சத்தியம் வேண்டிக் கொண்டு சிறு தொகைப் பணத்தைக் கொடுத்தான்… தேர்தல் நடந்தது… பளிச்சென விளக்குகள் எரிந்தன… கில்லாடி மந்திரவாதி வாக்குப் பெட்டியை சரித்துக் கொட்டினான்… இரண்டு இலட்சம் வாக்குகள் கொட்டுப்பட்டன.. வாக்குப் பெட்டிக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் புறநானூறு கண்ட தமிழரே.. நமது கண்கட்டு வித்தை இருக்க வாக்குப் பெட்டி ஏன் வள்ளல்களே என்றான்… கண்காணிப்புக் குழு அடடா இதுவல்லவோ ஜனநாயகத்தின் வெற்றி என்று வாயை வாயை அடித்தது.. ஐ.நா செயலரின் பாராட்டு நாளை வெளியாகும் என்று யாரோ ஒரு விசுக்கோத்து முழங்கியது.. இடையில் வடதுருவத்தில் இருந்து வந்த ஓட்டை விழுந்த சங்கொன்றை எடுத்து ஊதினார்கள்… வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நேர்வே பிரதிநிதி மேடைக்கு வந்து மறுபடியும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்றார்… சங்கரக்குட்டிக்கு மண்டை கிறுகிறுத்தது.. விரைவில் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்து சுவிசிற்கு போக வேணுமென எண்ணினார்… பக்கத்து வீட்டு நயினார்பிள்ளை ஊர்வலத்திற்கு போகாமல் இருப்பான்.. தான் ஊர்வலத்துக்குப் போய்.. நயினார்பிள்ளைக்கு துரோகிப்பட்டம் கட்ட எண்ணிக் கொண்டார்.. ஊர்வலத்துக்கு வந்த சனத்தில் ஒரு பகுதி ஏன் ஊர்வலத்துக்கு வந்தமெண்டதை மறந்து வராதவனுக்கு துரோகிப்பட்டம் கட்டத் துடிதுடிப்பதைப் பார்த்து அவருடைய தோள்கள் தினவெடுத்தன… காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியா டேய் நயினார்பிள்ளை என்று அலறினார்… மறுபடியும் மருத்தவத்தாதி ஓடி வந்தாள்.. அவளுக்கு நயினார்பிள்ளையையும் தெரியவில்லை, காக்கைவன்னியனையும் தெரியவில்லை.. மீண்டும் டோஸ்கூடிய ஊசியால் தொடையில் இடித்துவிட்டுப் போனாள்… சங்கரக்குட்டி ஆழ ஆழ போனார்.. ஆழக்கடலெங்கும் சோழ மகராசன்… ஆரோ ஒரு கவிஞர் பனாகொடவில் இருந்து பாடுவது கேட்டது… மறுபடியும் கில்லாடி மந்திரவாதி வந்தான்.. அப்போது ஈரானில் இருந்து வாக்குப் பெட்டி வாங்கிப்போனவன் ஒரு முறைப்பாட்டுடன் வந்தான்.. பத்தாயிரம் பேர் வாக்களித்த நகரத்தில் உங்கள் வாக்குப்பெட்டி இருபதாயிரம் வாக்குகளை கொட்டிவிட்டதென முறைப்பாடு செய்தான். அதையும் கண்காணிப்புக்குழு ஜனநாயகத்தின் வெற்றியாக பதிவு செய்துவிட்டதை சிலர் சுட்டிக்காட்டி அவனைச் சாந்தப்படுத்த முயன்றனர்… ஆனால் அவன் கோபம் ஆறவில்லை.. அணுகுண்டு ஒன்றைத் தடவி எச்சரித்தான்.. கோபம் வேண்டாம் கோமகனே என்றபடி எலக்ரோனிக் வாக்களிப்பு கருவியுடன் கில்லாடிக்கு கில்லாடி வந்தான்… விளக்குமாத்து சின்னத்தில் அழுத்த அழுத்த தும்புத்தடி சின்னத்தில் புள்ளடி விழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினான்… அவையே கரகோஷத்தில் மகிழ்ந்தது.. ஈரான்காரன் அடுத்த தேர்தலுக்கு ஐந்து இலட்சம் கருவிகள் வேண்டுமென்றான்.. கண்காணிப்புக்குழு அடடா இதுவல்லோ ஊழலே நடைபெறாத தேர்தல் என்றது.. அவர்களின் வெற்று வைன் கிளாசில் யாரோ ஒருவன் ஜனநாயக பிரான்ட் சிகப்பு வைனை ஊற்றிவிட்டுப் போனான்.. ஜனநாயகத்தால் செத்த மண்டையோடுகள் ஐயோ இது எங்கள் இரத்தம் என்ற பாட்டுக்கு ஒரு குத்தாட்டம் போட்டன… அதற்கு இடையில் வந்த யாழ்ப்பாணத்து றப் வரிகள் 99 வீதமும் தேர்தலில் வெற்றியென முழக்கமிட்டன… இடையில் மறுபடியும் பங்களிப்பு என்ற கோலாட்ட ஓசையும் தூரத்தே கோரஸ் ஒலியாக புலம் பெயர் நாடுகளில் இருந்து கேட்டு மறைந்தது.. யாரோ ஒருவர் எழுந்து இராஜினாமா செய்ய எண்ணியதாகவும் இப்போது அதை மீள்பரிசீலனை செய்வதாகவும் அப்பாடலை றீமிக்ஸ் செய்தார்.. அப்போது சபையில் மீண்டும் கரவொலி பிறந்தது.. கணினியில் ஒரு புதிய புறோகிறாமுடன் ஒருவன் வந்தான்… வாக்களிப்பை எண்ணி இதற்குள் போட்டால் புதிய கணக்குகளைத் தரும் என்றான்… அடடா இது பேஷாக இருக்கிறதே… என எல்லோரும் கூத்தடித்தார்கள்… இடையில் ஒரு இன்ரசிற்றி றெயின் ஓடிவந்து கெளித்து நிற்க அதில் எல்லோரும் ஏறினார்கள்.. வேட்டைக்காரனை பகிஷ்கரிப்போம் என்று அதில் ஒரு புதிய திருக்குறள் எழுதியிருந்தது… இன்ரசிற்றி காலத்தில் வேட்டைக்காரன் வர.. அதைப் பகிஷ்கரிக்க… என்ன கோமாளிக்கூத்தடா என்று பிச்சைக்கார மாசிலாமணி யாருக்கோ ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான்.. எல்லோருடனும் இன்ரசிற்றி கிரேக்கம் வந்தது…. ஆகா உலக நாகரிகம் பிறந்த கிரேக்கம் இதுவல்லவா… மரத்தடியில் ஜனநாயகம் பிறந்த மண்ணல்லவா எல்லோரும் அதைத் தொட்டுக் கும்பிட்டனர். அங்கே மக்கள் முதல்முதலாக ஜனநாயக வாக்களிப்பு செய்த மரம் பல்லாயிரமாண்டு பழமையுடன் வானைத் தொட்டு வளர்ந்து நின்றது.. மந்திரவாதிகளையும், வாக்குப் பெட்டிகளையும், கண்காணிப்புக்களையும், ஐ.நா கட்டிடத்தையும் ஒருமுறை சுழன்று சுழன்று பார்த்தது.. ஓவென்று அலறியபடி இன்ரசிற்றிக்கு ஓங்கி அடித்தது… இன்ரசிற்றியின் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது.. அத்தோடு பழமைக்கெல்லாம் பழமையான கிரேக்கத்தின் ஜனநாயக மரம் தீயில் பொசுங்கி சாம்பலாகியது… ஐயோ நெருப்பு நெருப்பென்று சங்கரக்குட்டி கத்த மருத்துவத்தாதி மறுபடியும் ஊசியுடன் ஓடி வருகிறாள்… ஆமாம் இது வெறும் கனவு மட்டுமே…

எல்லாளன் சமாதியும் புதுமாத்தளன் சமாதியும்

மகிந்த ராஜபக்ஷவை நவீன துட்டகைமுனு என்று அடிக்கடி பலர் புகழ்பாடி வருகிறார்கள். மகிந்த ராஜபக்ஷவும் இதை என்றாவது மறுத்தது கிடையாது. துட்டகைமுனுவிற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. சிங்களப் பாமரரிடையே அவன் தமிழருக்கு எதிரான இனவெறியனாகவும், வரலாற்றைப் புரிந்தவரிடையே அவன் தமிழரை மதித்த ஒருவனாகவும் பார்க்கப்படுகிறான். இதில் மகிந்த ராஜபக்ஷ எந்தத் துட்டகைமுனுவாக தன்னை நினைத்திருக்கிறார் என்பதை உணர அவரது செயல்களும், அண்மையில் புதுமாத்தளனில் அவர் வைத்த சமாதியும் போதுமானது. துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் விகாரமாதேவி, காக்கவண்ணதீசன் ஆகியோருக்கு பிள்ளையாகப் பிறந்தவன். இலங்கைத் தீவை 44 வருடங்கள் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்த தமிழனான எல்லாளனுக்கு எதிராக ஒரு படையணியைத் திரட்டிப் போர் புரிந்தவன். கடைசியில் அனுராதபுரத்தில் எல்லாளனுடன் தனிச்சமர் புரிந்து அவனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன். இதுதான் துட்டகைமுனு என்ற அரசன் பற்றிய சுருக்கமான வரலாறு. எல்லாளன் என்றால் தமிழ் தேசியத்தின் வடிவம்போலவும், துட்டகைமுனு என்றால் சிங்களத்தேசியத்தின் வடிவம்போலவும் நோக்கப்படுவது சாதாரண மரபாக இருந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு அரசர்களையும் இனவாதம் பேசுவோர் என்றுமே சரிவரப் புரிந்தது கிடையாது. அதனால்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற இனப்போர் எல்லாளன், துட்டகைமுனு இருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் வேலை என்பதை பலரால் விளங்க முடியாமல் போனது. எல்லாளன் தமிழ் மன்னனாக இருந்தாலும், சிங்களவருக்கு நல்லாட்சி வழங்கிய ஒருவன். அவன் புத்தவிகாரைகளுக்கு ஒழுங்காக நிதி வழங்கி, புத்தமதம் தழைத்தோங்க வழி செய்தவன். தான் வயோதிபனாக இருந்தாலும் தமிழர் – சிங்களவர் என்ற இரண்டு இனங்கள் அரசியலுக்காக மோதுவதை அடியோடு வெறுத்தவன். நடப்பது அதிகாரப் போட்டி, இதில் இனவாதம் தேவையில்லை என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ஆகவேதான் வயோதிபனாக இருந்தும் தனிச்சமருக்காக அவன் அனுராதபுர வீதியில் இறங்கினான் வீரமரணம் அடைந்தான். அதேவேளை துட்டகைமுனு தமிழருக்கு எதிராக பெரும்பான்மை சிங்களவருக்காக போரிட்டாலும் எல்லாளனின் வீரத்தையும், தமிழ் ஆட்சித் திறனின் மேன்மையையும் உயர்வாக மதித்தான். அவனைப் போல எல்லாளனை தமிழர் கூட மதித்து ஒழுகியது கிடையாது. எல்லாளன் இறந்தவுடன் அவன் இறந்த இடத்தில் மிகப்பெரிய சமாதியை தானே முன்னின்று அமைத்தான். போரில் தோற்றவனை மதிப்பதே வெற்றிக்கு அழகு என்பதை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான். போரில் மடிந்த சிங்களவருக்கு அவன் சமாதி அமைக்கவில்லை, தமிழனுக்கே அமைத்தான். அதன் பின்னர் சிங்களவருக்கு கடுமையான உத்தரவொன்றையும் பிறப்பித்தான். எல்லாளன் சமாதியை கடக்கும் போது எந்தவொரு வாத்தியங்களையும் எவரும் இசைக்கக் கூடாது என்று உத்தரவிட்டான். இலங்கைத் தீவின் அதி உயர் மரியாதைக்குரிய இடம் தமிழனான எல்லாளன் சமாதிதான் என்றும் தெரிவித்தான். அந்த உத்தரவை மீறிய பலர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். புத்தமதத்தின் ஊர்வலங்களும் எல்லாளன் சமாதிக்கு தலை வணங்கி விலகிச் சென்றன. போருக்குப் பின் எப்படி நடக்க வேண்டுமெனத் தெரியாதவர்கள் தமிழருக்கு எதிராகப் போருக்குப் போக வேண்டாம் என்பதை அவன் தனது செயலால் உணர்த்தினான். அதன் மூலம்தான் துட்டகைமுனு வரலாற்றில் மிகப்பெரிய பதிவு பெற்றான். துட்டகைமுனு தமிழனுக்காக மாவீரர் சமாதியை அமைத்தான் என்பது ஒரு செயல், ஆனால் அதன் தாக்கமோ பல நூற்றாண்டுகளாக தமிழரின் சிறப்பை அந்தத் தீவில் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அதை விளங்காத ஜே.ஆர்.ஜெயவர்தனா எல்லாளன் தூபி என்பது துட்டகைமுனுவின் சமாதி என்றார். அங்கிருந்த எதையோ சாம்பலென்று தோண்டி எடுத்து அதை அமெரிக்காவிற்கு அனுப்பினார். அந்தச் சாம்பல் துட்டகைமுனுவினுடையது என்று கதையைப் பரப்பினார். அவருடைய இனவாதக் கோமாளித்தனத்திற்கு சிங்கள வரலாற்று பேராசிரியர் பரணவிதானவும் துணை போனார். அன்றோடு துட்டகைமுனு அமைத்த சமாதியின் நோக்கம் சிதைந்தது. தமிழினத்திற்கு எந்த மரியாதையும் கொடுக்காத இனப்போர் உக்கிரமடைந்தது. எல்லாளனுடன் நடந்த போர் வரைதான் நாம் துட்டகைமுனுவை அறிகிறோம். ஆனால் போருக்குப் பின்னர் தமிழருக்கு எதிராக துட்டகைமுனு வேறெந்த இனவாத செயல்களையும் செய்ததாக வரலாற்று செய்திகளில் தகவல் இல்லை. போருக்கு முதல் மக்களை இனவாதத்தில் தள்ளக் கூடாது என்பதற்காக எல்லாளன் உயிர் கொடுத்தான். போருக்குப் பின் எல்லாளனை மதித்து இனவாதத்தை வளரவிடாது தடுப்பதற்காக துட்டகைமுனு தன் எஞ்சிய நாட்களைக் கொடுத்தான். துட்டகைமுனு அமைத்தது மண்மேட்டிலான சமாதியாக இருந்தாலும் அது இலங்கை மண்ணுக்கு பெருமை தேடித்தந்தது. ஆனால் அவனுக்குப் பின்னர் மலையில் ஒரு மாளிகை அமைத்தான் காசியப்பன், அதைத்தான் சிகிரியா என்று அழைக்கிறார்கள். தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவன் அமைத்ததுதான் சிகிரியா மலைக்கோட்டை. சிகிரியாவில் அஜந்தா குகை ஓவியங்களைப் போல அழகான ஓவியங்களை அமைத்து சாதனை படைத்தாலும், தந்தையைக் கொன்றவன் என்ற இழி சொல்லை அவனால் வெல்ல முடியவில்லை. சிகிரியா என்ற நினைவுச்சின்னம் உள்ளவரை அந்த அவப்பெயரை அவனால் அழிக்க முடியாது. அதே மலைக்கோட்டையில்தான் அவன் தம்பியான முகலாளன் அவனைக் கொன்று அண்ணனைக் கொன்ற தம்பி என்ற அவப் பெயரையும் பெற்றுக் கொண்டான். இந்த இரண்டு கதையையும் மகிந்தராஜபக்ஷ சரிவர உணர்ந்திருந்தால், சமாதிகளால் வரும் பின் விளைவுகளை விளங்கியிருப்பார். கொல்லப்பட்டவனை மறந்து கட்டப்பட்ட சிகிரியா அவமானக் கதையை சுமந்து நிற்பதையும், கொல்லப்பட்டவனை மதித்து கட்டப்பட்ட எல்லாளன் தூபி மதிப்பு மிக்க சின்னமாகப் போற்றப் படுவதையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். புதுமாத்தளனில் நாங்கள் அமைக்கப்போவது சிகிரியாவா இல்லை எல்லாளன் தூபியா என்பதை தராசில் போட்டுப் பார்த்திருக்க வேண்டும். மகிந்தராஜபக்ஷ வரலாற்றைப் பார்க்காவிட்டாலும் தன்னுடைய சொந்தப் பெயரையாவது திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். மகிந்த என்பவன் யார் என்று தன்னைத்தானே கேட்டுப்பார்த்திருக்க வேண்டும். கலிங்கத்திற்கு எதிராகப் போர் புரிந்து, அந்தப் போரின் முடிவில் யுத்த களத்திலேயே வாளைத் தூக்கிவீசிய சாம்ராட் அசோகனின் மகன்தான் மகிந்த. போரின் வெற்றியால் மனம் திருந்திய ஒரு குடும்பத்தில் பிறந்து, காவிவஸ்திரம் தரித்த ஓர் இளைஞனே அவன். வெள்ளரசு மரக்கிளையுடன் இலங்கை வந்திறங்கிய மகிந்ததேரர் புதுமாத்தளன் போய் இராணுவத்திற்கு சமாதி அமைப்பானா என்று எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஜீனியர் றிச்சாட் ஜெயவர்தனா என்ற பெயரைத் தாங்கியவர் செய்த செயலை மகிந்த என்ற பெயருடன் செய்யலாமா என்று தன்னைத்தானே கேட்டுப் பார்த்திருக்க வேண்டும். புலிகள் மீது பயங்கரவாதிகள் என்று மலிவான பட்டம் கட்டிவிட்டு எல்லாத் தவறுகளையும் செய்யலாமென எண்ணுவது தவறான செயல். புலிகள் பல இலட்சம் பேர் கொண்ட சிங்களப் படைகளுடன் மோதி உயிர் விட்டுள்ளார்கள். எதிரிகளாக இருந்தாலும் போரில் ஒருவர் வீர மரணம் அடையும்போது தலையில் உள்ள தொப்பியைக் கழற்றி மரியாதை கொடுப்பது உலக மரபு. நெப்போலியன், மகா அலெக்சாண்டர் போன்ற வீரர்கள் கூட தோல்வியை தழுவியவர்கள்தான். அவர்களை அவர்களின் எதிரிகளே அதிகமாகப் போற்றினார்கள், பூவோடு சேர்ந்த நார்போல தாமும் மணம் பெற்றார்கள். தோல்வியில்லாமல் போரை நடாத்த முடியாது. பிரபாகரன் முப்பதாண்டுகள் இந்தப் போரை வெற்றிகரமாக நடாத்தியவர். அவரிடம் இருந்த சக்தியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான உலகப் பெரும் சக்திகளுடன் மோதியிருக்கிறார். உண்மையில் அவர் சிங்களப் படைகளுடன் இந்தப் போரை நடாத்தவில்லை என்பது நம்மைவிட சிங்கள அரசுக்கே அதிகம் தெரியும். இலங்கையில் பிறந்த ஒரு தமிழன் உலகம் முழுவதையும் எதிர் கொண்டு இத்தனை பெரிய போரை நடாத்தியிருக்கிறான் என்றால், அதற்காக பெருமைப்பட வேண்டியது யார்.. சிங்கள மக்களே. துட்டகைமுனு உயிருடனிருந்திருந்தால் மடிந்த புலி வீரர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இன்னொரு தூபியை அமைத்திருப்பான் என்பதை உணர மகாவம்சமே போதுமானது. அதுபோல இறந்த தமிழ் வீரருக்காக அமைக்கப்பட்ட தூபிகளை சிங்கள அரசர்கள் எங்காவது இடித்தாக சரித்ததிரமிருக்கிறதா என்று மகாவம்சத்தில் தேடிப் பாருங்கள். மாவீரர் துயிலும் இடங்களை உடைக்க முன்னர் யோசித்துப் பார்த்திருக்க வேண்டிய பாரிய விடயம் இது. மாவீரர்கள் போரை முடித்துவிட்டார்கள், ஆயுதங்கள் உறங்க வைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். மறுபடியும் போர் வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மாவீரர் சமாதிகளை உடைப்பது தவறான செயல். இரண்டாம் உலகப்போரில் மடிந்த வீரருக்காக கட்டப்பட்ட சமாதிகளை உடைத்தெறிந்தால் மூன்றாவது உலக யுத்தம் வராது என்று கருதுவதைப் போன்ற பாமரத்தனமான வாதம் அது. இயேசுநாதர் என்பவர் கொல்லப்பட்ட 300 வருடங்களின் பின்னர்தான் அவருடைய கதையைத் தோண்டி எடுத்தார்கள். அப்போது அவரைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற மலினமான கதை ஒன்றையும் உருவாக்கினார்கள். அதன் விளைவு இரண்டாம் உலகப்போரில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்றொழித்தான். சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்தாகக் கூறி நம்மூரில் வாய்பேசாத ஓணான்களை அடித்துக் கொல்லும் அறியாமை மிக்க சிறுவர்கள் போல ஹிட்லர் நடந்தார். இதுபோல புதுமாத்தளன் சமாதியில் விட்டுள்ள தவறு எதிர் காலத்தில் பல ஓணானுக்கு மூத்திரம் கொடுத்த கதைகளை உருவாக்கலாம், அதனால் பெரும் அழிவுகளும் வரலாம். பயங்கரவாதம் என்று யாரைப்பார்த்தோ ஜோர்ஜ் புஸ் வடித்த நாறிய மூத்திரத்தை தமிழர்மீது ஊற்றியது போதும். இப்பொழுது அது சிங்களவரின் உடைகளிலும் பட்டு வெடிலடிக்கிறது. அந்த மணம் சர்வதேச நீதிமன்றின் நாசில் இடிக்கும்வரை வீசுகிறது. இதையெல்லாம் மகிந்த உணர வேண்டும். மாவீரர்கள் என்னும் தமிழ் மைந்தர்கள் இலங்கைத் தீவில் பிறந்தவர்கள் என்ற பெருமையை குலைக்க சிறீலங்கா முயலக்கூடாது. நீங்கள் ஒழுங்கான உரிமையை தமிழர்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் போராட வேண்டிய தேவையே இல்லை என்பதை புரிய வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பால் போரில் மடிந்தவர்களை மரியாதைப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நீங்கள் தமிழரை எவ்வளவு மரியாதைப்படுத்தி நடக்கிறீர்களோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அவர்கள் உங்களை மரியாதை செய்வார்கள். தமிழ் மக்களை போரால் வெல்வதைவிட அவர்களுடைய இதயங்களை வெல்வதே சரியான வெற்றியாகும்.

கூட்டமைப்பில் கொள்கையில் உறுதியாக இருப்போரை தேர்தலில் போட்டியிட தலைமைப்பீடம் அனுமதிக்காது

தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது. கடந்த 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 10 பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதுடன் அவர்கள் விடுதலைப் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் சிபார்சு செய்யப்பட்டவர்களாவர். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதன் கொள்கைகளை முற்றாக கைவிட்டு தமிழ் தேசியம் பேசியபடி உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் இறைமையையும் ஏற்றுக் கொண்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரிக்க முற்பட்ட பொழுது அதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுவந்திருந்தனர் என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் திடீரென சனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் தேசிய எண்ணக்கருவை சிதைக்கும் நோக்கில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தபொழுது அந்த முடிவை கடுமையாக எதிர்த்து கூட்டமைப்பு தலைப் பீடத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக இருந்தனர் என்பது யாவரும் அறிந்தது. இவர்களில் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தனித்து செயற்பட்ட காரணத்தினால் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்று சம்பந்தன் தீர்மானத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேவேளை தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம், தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க கூடிய உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காது என்று நம்பகமாக அறிய முடிகின்றது. அவ்வாறான ஒரு முடிவை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுக்கும் போது அதனால் பொது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமைப் பீடத்தின் மேல் ஏற்படக் கூடிய அதிருப்தியை சமாளிப்பதற்காக ஒரு தமிழ் ஊடகம் ஒன்றின் உதவியுடன் முன்கூட்டியே சில உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படக் காரணம் இனிவரும் நாட்களில் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாகவும் 76 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாகவும், 77 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய மக்கள் ஆணைக்கு எதிராகவும் தான்தோன்றித் தனமாக தயாரித்து வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க தடையாக இருக்க கூடியவர்கள் என்று கருதப்படும் அரசியல் கட்சிகள் எதனையும் சாராத கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களை இல்லாமல் தடுப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து தமது திட்டத்திற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சிறீலங்கா இராணுவத்துள் மோதல் - படையினன் பலி

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சுக்கான பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய்க்கும் மேலதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (1) நடைபெற்ற இந்த சம்பவத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கோப்ரல் சுஜித் குமார கொல்லப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட படை சிப்பாய் உசான் மதுசங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மதுசங்கவை எதிர்வரும் 12 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புறக்கோட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதேவேளை சிறீலங்காவின் அருசுத்தலைவர் தேர்தலின் பின்னர், இராணுவத்துள் இரு பிரிவாக பிளவடைந்தமையும், அடிக்கடி இராணுவத்துக்குள் சரத் மற்றும் கோத்தா அணிகளுக்கிடையில் அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். ஜனவரி 30 , 2010 அன்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ் சென்ற அவர் நல்லூர் முருகன் கோவில் சென்று வழிபட்ட பின்னர் யாழ் நூலகம் சென்ற அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து யாழ்ப்பாணத்தில் அரசு உத்தேசித்துள்ள வேலைத்திட்டங்களை அறிவித்தார். அவரின் அறிவிப்புக்களில் முக்கியமானது இரண்டு விடயங்கள், அதாவது அரசு மேற்கொள்ளவுள்ள வர்த்தக அபிவிருத்திகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டுமெனவும் மற்றது வெளிவிவகார அமைச்சின் உதவிக் காரியாலயம் ஒன்று நிறுவ இருப்பதாகவும் தெரிவித்தார். இக்காரியாலயம் புலம்பெயர் தமிழரின் தொடர்பைப் பேணி அவர்களுடன் நல்லதொரு உறவை வளர்க்கும் எனவும் அறிவித்தார். ஆனால் தமிழர் அரசியல் நோக்கர்கள் அரசின் இந்த நடவடிக்கையின் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்கள். அரசாங்கத்தின் சூழ்ச்சி என்னவென்றால் யாழ் பிரதேசத்தை வர்த்தக மையமாக அறிவிப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர் தங்களது பணத்தை யாழில் முதலிடுவார்களென்றும் பின்னர் அந்தப் பணத்தை அரசாங்கம் தமது பிற சுய வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமென்றும் அத்துடன் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை தமது வெற்றிக்கு இந்த நடவடிக்கையை சாதகமாக்கிக் கொள்ளலாமென்றும் நப்பாசையுடன் களம் இறங்கியிருப்பதாகவும் தமிழர் அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அத்துடன் சிங்கள இனவெறி அரசு புலம்பெயர் தமிழருக்குள் ஊடுருவி பல நாசகார வேலைத்திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் மனங்களில் உள்ள தமிழ் ஈழ விடுதலைக் கனலை அணைத்து விடலாமென்றும் இதற்கு இப்படியான காரியாலயங்களை நிறுவி சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தமிழரின் மனங்களை வென்று வெளிநாடுகளில் வதியும் ஈழத்தமிழரின் செயற்பாடுகளை சிதைக்கலாமென்ற மமதையுடன் களம் இறங்கியிருக்கின்றார்கள் போலும். எதற்காக வெளிவிவகார அமைச்சர் வர்த்தகத்தை பற்றி வக்காளத்து? வெளிவிவகார அமைச்சர் தனது இலாக்காவை விட ஏன் மற்றதொரு இலாக்காவான வர்த்தகத்தை பற்றி பேசியுள்ளார் என்று பல நோக்கர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள். அதாவது வெளிவிகார உதவிக் காரியாலயம் ஒன்றை யாழில் தொடங்குவதற்கு ரோகித்தவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் வர்த்தகத்தைப் பற்றி பேசுவதற்கோ செயல் நடவடிக்கையை அறிவிப்பதற்கோ அவருக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருந்தும் யாழில் வர்த்தக மேம்பாட்டை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர் உதவ வேண்டுமென அறிவித்திருப்பதன் நோக்கம் புலம்பெயர் தமிழருக்குள் தனது அமைச்சின் செல்வாக்கை பிரயோகிக்க முனைந்திருக்கின்றார் என்பது மட்டும் தெட்டத்தெளிவாக தெரிகின்றது. சிறிலங்கா அரசாங்கம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுகொண்டுள்ளது என்பது எல்லோரும் நன்கு அறிவார்கள். இதில் இருந்து மீளுவதற்கு பல நடவடிக்கைகளை செய்யவேண்டியுள்ளது. மிக முக்கியமானதொன்று என்னவென்றால் தமிழினத்தை தமது தலைமையின் கீழ் கொண்டுவந்து உலக நாடுகளுக்கு தமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அறியப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் நட்பை சம்பாதிக்கலாமென்றும் பின்னர் பல கோடிக்கணக்கில் பணத்தை கடனாகவோ நன்கொடையாகவோ பெற்று தமது செல்வாக்கை நிலைநிறுத்தி பாராளுமன்ற தேர்தலிலும் தாம் வெற்றிபெற்று அரச நாற்காலியைத் தக்கவைத்து ஆட்சி புரியலாமென்ற முனைப்புடன் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதின் ஒரு வடிவமே இந்தப் பொருண்மிய அபிவிருத்தி நாடகம். உலக நாடுகள் பல சிங்கள அரச பயங்கரவாத ஆட்சியை வெறுத்தார்கள் என்றால் அது மிகையாகாது காரணம் மகிந்த அரசு தமிழருக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள். ஏன் ஐரோப்பிய ஒன்றியம் கூட பொருட்களுக்கான வரிச்சலுகையை நிறுத்தி தமது ஆட்சேபனையைக் காண்பித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை பல முனைகளில் இருந்து மகிந்த எதிர்கொண்டார். இருந்தும், அவர்களை அவமதித்து தனது இராணுவ நடவடிக்கைகள் மூலமாக இந்த நூற்றாண்டில் மனிதகுலமே கண்டிராத அவலத்தை அரங்கேற்றினார். பல வெளிநாடுகள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழிகளின் மூலம் தீர்வுகாணும்படி வற்புறுத்தியும் சிங்கள அடக்குமுறை அரசுகள் செவிசாய்க்காமல் விடுதலைப் புலிகளின் மீது பழியை போட்டுவிட்டு பயங்கரவாதத்திற்கான யுத்தம் புரிவதாக மார்தட்டி உலக சமூகத்தை முட்டாள்களாக்கினார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆயுத முனையிலான தற்காப்பு யுத்தத்தை செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் இந்த உலக சமுகத்தின் கண்மீது ஈழத்தமிழரின் போராட்டம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்தில் எவ்வாறு புலிகள் தமது கொள்கையில் திடமாக இருந்து பின்னர் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களின் பாதுகாப்புக்காகத் தமது ஆயுதத்தை மௌனிக்க செய்ததானது நிச்சயம் பல வெளிநாடுகளின் நற்பெயரை பெற்றுத்தந்தது என்றால் அது மிகையாகாது. இருந்தும் என்ன பலன்? சிங்கள ஆட்சி தமது இனச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்களை தொடந்தும் செய்துகொண்டுள்ளார்கள். இதற்கான களமே யாழில் நிறுவப்பட இருக்கும் வெளிவிகார அமைச்சின் உதவி காரியாலயம். தமிழ் இனத்தையே அழித்து முழுத் தீவையும் சிங்கள பௌத்த நாடாக கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் பூண்டிருக்கும் மகிந்தவிடம் எப்படி நாம் எமக்கு சார்பாய் செயலாற்றுவார் என்று நம்புவது. இந்த நடவடிக்கைகளுக்கு சோரம் போகும் தமிழர்களும் நிச்சயம் தமிழர் துரோக கும்பல் வழிப்பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பது தான் உண்மை. வவுனியா வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 80,000 மக்கள் யாழ் கொண்டு செல்லப்பட்டு இன்றும் அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் தமது உறவினர் வீடுகளில் இருக்கின்றார்கள், மற்றவர்கள் வெளி நிலங்களில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் முகாம்களில் இருந்து விடுவிக்கும்போது அரசாங்கம் கூறியது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமது வாழ்வை மீழ ஆரம்பிக்க பணம் கொடுப்பதாக, ஆனால் இன்று வரை அரசாங்கம் ஒரு சதம் காசு கூட கொடுக்கவில்லை. ஆனால் உலக நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் தாம் இம்மக்களுக்கு பணம் கொடுப்பதாக. ஆக இதிலிருந்து தெரிகிறது இந்த இனவெறி சிங்கள அரசாங்கம் எப்படி தமிழரின் பொருளாதார வளர்ச்சியில் கரிசனை காட்டுவார்களென்று. புலம்பெயர் தமிழர் சிங்கள சதி வலையில் சிக்குவார்களா? யாழ்ப்பாணத்தில் வதியும் ஈழத்தமிழரில் பலர் தங்களுக்குள் நடக்கும் சதிவலைகளை கண்டும் காணாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. தமது இரத்த சொந்தங்கள் ஏதோ வெளிநாடுகளில் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் என்ற மாயையில் பல ஊதாரித்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உண்மை. அவர்கள் தங்கள் சொந்தங்கள் கடும் குளிரிலும் பலர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்து தமது குடும்பத்துடன் சில மணி நேரத்தையாவது கழிக்காது கடினமாய் உழைத்து பணத்தை தமது சொந்தங்களுக்கு அனுப்ப இவர்களோ பொறுப்பற்று செயலாற்றுகின்றார்கள் என்பது உண்மை. "எருமை ஈண முன் நெய்யுக்கு விலை பேசியது" என்ற பழ மொழிக்கு ஏற்ப தாயகத்தில் வாழும் தமிழர் பல வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். இந்திய இராணுவம் அழித்துவிட்டுப் போன பின் சில மாதங்களில் தமது கட்டடங்களை நிர்மாணித்து செயல்பட, பின்னர் சிங்களவன் வந்து அதை அழித்து விட, பின் மீள கட்ட அவைகள் பின்னர் எப்போது அழியும் என்று தெரியுமுன்னரே தமிழரின் கெட்ட நடவடிக்கைகளில் ஒன்றான அதாவது ஒருவர் செய்யும் எந்தவொரு காரியத்துக்கும் மேலாக தனது இயலாமைக்கு எட்டாத நடவடிக்கையில் இறங்கி தன்னையும் அழித்து மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருந்து தமிழரின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பது போன்று இந்த சிங்கள அரசின் அறிவிப்புகளுக்கு நிச்சயம் தாயகத்தில் நிற்கும் சிங்கள ஆக்கிரமிப்பு ஆயுத படைகள் தமிழர்களின் ஆதரவை சில சலுகைகளின் ஊடாக அல்லது ஆயுதமுனையில் தம் பக்கம் இழுத்து வெளிநாடுகளில் வதியும் தமிழரை தம் வசம் கொண்டுவரலாம் என்று கணக்கு போட்டு செயலாற்றிக் கொண்டுள்ளார்கள். இதற்கு புலம்பெயர் தமிழர் தமது ஆதரவை நல்கி தாம் இன்று வரை தாயக விடுதலைக்காக உழைத்த உழைப்பையும் கனவையும் ஈடு வைப்பார்களா என்பது தான் நமது மனங்களில் எழும் கேள்வி. புலம்பெயர் தமிழர் பல வேற்று இன மக்களுடன் பழகி தமது நோக்கங்களை ஒரு சிறு வட்டத்துக்குள் வைத்திருக்காமல் இன்று பரந்த மன ஓட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவர்கள் சிங்கள அரசாங்கத்தின் சதி வலையில் நிச்சயம் விழ மாட்டார்கள் என்று நம்பினாலும் சிலர் தமது தாயகத்தை வளப்படுத்துவதாக எண்ணி சிங்கள சூழ்ச்சி வலையில் சிக்கி தமிழினத்தை அடகுவைத்து அவர்களின் விடுதலையை முற்றிலுமாக இல்லாதொழிக்க உறுதுணையாக இருந்து விடக்கூடாது என்பது தான் நம் அனைவரினதும் அவா. சிங்கள ஆட்சியாளர்களின் தந்திரோபாயங்களை முறியடிக்க வேண்டுமாயின் நிச்சயம் அது புலம்பெயர் தமிழரின் கைவசம் தான் உள்ளது. காரணம் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் சிங்கள அரசையே கடுகலங்க வைத்தது. ஏன் அவர்களின் நடவடிக்கைகள் இன்றும் ஒரு சின்ம சொர்ப்பனமாகவே சிங்கள அரசினால் பார்க்கப்படுகின்றது. மகிந்த மற்றும் அவரின் சகோதரர்கள் செய்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஒரு நாள் வஞ்சிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். இவர்களைக் கூண்டில் ஏற்றும் பலம் இந்த புலம்பெயர் தமிழர் வசம் தான் உள்ளது. ஆகவே மகிந்த தனது ஆட்சியில் தமிழரை தன் வசம் கொண்டு வர என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டார். மகிந்தவிடம் புரையோடிப் போயிருக்கும் கவலை என்னவென்றால் ஜனாதிபதியாக வந்தால் போதுமானதல்ல. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தான் வெற்றி கொண்டு தான் விரும்பியது போன்று வேலைத் திட்டங்களை கொண்டு வந்து தனது அரசியல் இருப்பை தக்கவைப்பது தான் அவரின் அவா. தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி எப்போது பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதென்று ஆலோசித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி தேர்தலை வைக்க தீர்மானித்துள்ளார்கள். பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டதாகக் கூறி தேர்தலை அறிவித்து வெற்றியும் ஈட்டிய கையுடன் பாராளுமன்றத்திற்கான தேர்தலையும் வரும் ஏப்ரல் மாதத்தில் நடாத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் மகிந்த காய் நகர்த்தலை மேற்கொண்டு உள்ளார். ஈ.பி.டி.பியின் திடீர் பல்டி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கில் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்தவிற்கு கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்த சமூக சேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். பின்னர் ஒரு நாடகத்தையே யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றினார் அதாவது இவரின் பதவி விலகலை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி சமூக அமைப்புகள் இணைந்து என்ற பொருள்பட இவரின் அடியாட்கள் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிய 24 மணி நேரத்திற்குள் ஒரு அறிக்கை விட்டார் டக்ளஸ். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜினாமா செய்யத் தீர்மானித்தனர். இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். "மகிந்தவும் ரோகித்த போகொல்லாகமயை திடீரென யாழ்ப்பாணம் அனுப்பி ஒரு கல்லில் பல மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு அடியில் பல திட்டங்களுடன் யாழ் சென்று பல அறிவிப்புக்களுடன் டக்ளஸ்சையும் சந்தித்து தம்மோடு சேர்ந்து இயங்குமாறு வேண்டிக்கொண்டார். டக்ளஸ் மீண்டும் தனது வழமையான பல்டியடிக்கும் தொனியில் இன்னொரு அறிக்கை விட்டார். அதில் அவர் தனது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு, திட்டமிட்டவாறு மாநகர சபையின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றமுடியாமல் போனது. இதனையடுத்து, அரச தலைவர் தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்ற மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச அமைச்சர் டக்ளசின் ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பல வியூகங்களை வகுத்தார். ஈற்றில், அரச கூட்டணியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் மகிந்த படுதோல்வியடைந்தார். இந்நிலையில், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சிச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் பெரு வெற்றியடையப்போவதாக அவர் சூளுரைத்திருக்கிறார். இதேவேளை, ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பெப்ரவரி 5, 2010 - இலங்கையின் சுதந்திர தினத்திற்கு மறுநாள் - நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் வட்டாரத்தினால் நம்பகரமாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எது என்னவென்றாலும் ஒட்டுக்குழுக்கள் எப்பொழுதும் ஓட்டிக்கொண்டேயிருப்பார்கள், ஆனால் சிங்கள ஆட்சியாளர் புலம்பெயர் தமிழரின் மீது ஒரு பகிரங்கப்படுத்தாத ஒரு யுத்த களமுனையை திறக்க தீவிரமாக முனைப்பெடுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இதன் மூலம் எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தாயக கனவை தகர்த்தெறிந்து அவர்களின் ஒற்றுமையை உலக மட்டத்தில் சிதைத்து அவர்களுக்குள் உட்பூசல்களை ஏற்ப்படுத்தி தமிழ் இனமே தரம் கெட்ட இனமாக வர்ணிக்கவைத்து உலக சமூகத்திடம் இருந்து பிரித்து சிங்கள தேசம் உலக சமூகத்திடம் நற்பெயரைப் பெற்று மகிந்த அவர் தன் சகோதரர்களை மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து விடுதலை பெற முழு மூச்சுடன் இறங்கியிருப்பதன் ஒரு செயலே வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமயின் யாழ் பயணமும் யாழ்ப்பாணத்தை வர்த்தக மையமாக உருவாக்குவதென்பதும், அதன் நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக வெளிவிவகார உதவி காரியாலயம் யாழில் நிறுவுவதென்பதும்.

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது. பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை. தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.