இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்
செட்டிகுளம் மெனிக்பாம் தடுப்பு முகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 14ஆம் திகதி வவுனியா சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து 10 பேரும், கிளிநொச்சியிலிருந்து 17 பேரும், முல்லைத்தீவிலிருந்து 14 பேரும், மன்னாரிலிருந்து 4 பேரும் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா, புத்தளம், அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களிருந்து தலா ஒருவர் பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தொடர்ந்தும் விளக்க மறியலில்,,
எல்லாளன் படை நடவடிக்கையான அனுராதபுரம் விமான படை விமான நிலைய தாக்குதலில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் இன்று அனுராத புரம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். விசாரணைக்காக மேலும் தடுப்பு நாட்களை நீடித்து தருமாறு இரகசிய பொலிசாரினால் கோரப்பட்டதற்கு அமைவாக நாட்கள் நீடிக்கப்பட்டது.
அனுராத புரம் தாக்குதலினை வெளியில் இருந்து படம் பிடித்து வன்னிக்கு சற்றலைட் தொலைபேசி ஊடாக அனுப்பியது.வன்னியில் இருந்து புலிகளின் விமானங்களை தாக்குதலிற்கு அனுப்புமாறு கட்டளை அனுப்பியது. வன்னியில் உள்ள தலைவர்களிடம் சற்றலைற் தொலைபேசி யூடாக தொடர்பினை மேற்கொண்டது ஆகிய குற்றசாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கிளி நொச்சியினை பிறப்பிடமாக கொண்ட இவர் இரகசிய தகவல்களின் அடிப்படையில் தடுப்பு முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
பெளத்த பீடங்களின் கீழ் உள்ள கோயில்களை பறிக்க போவதாக மிரட்டல்
பெளத்த பீடங்கள்தமது சொல்லை கேட்காவிட்டால் அதன் கீழ் உள்ள கோயில்களை பறித்து புதிய அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என ஆளும் தரப்பு மிரட்டியுள்ளது.
மேற்கு மாகாணத்தில் உள்ள 500 வரையான கோயில்களை இவ்வாறு பிரித்து புதிய பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொண்டுவரப்படும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேல்மாகாண அரசியல் வாதிகள் பெளத்த பீடங்களை மிரட்டியுள்ளனர்.
ரோகண நிக்காய என்ற அங்கீகரிக்கப்படாத பெளத்த அலகு ஒன்றினை புனரமைத்து அதனை அங்கீகரித்து அதன் கீழ் பெளத்த கோயில்கள் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர் மஹிந்தவின் சகாக்கள்.
போகின்ற போக்கினை பார்த்தால் மஹிந்த மகா சங்கம என்ற புதிய பீடத்தினை உருவாக்கி அனைத்து பீடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார் என்ற பதட்டம் பிக்குகளுக்கு வந்துள்ளதாம். எது எப்படி இருப்பினும் இலங்கையில் ஐந்தாவது பீடம் ஒன்று உருவாகலாம் என விமர்சகர்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி....
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்காவின் பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவுடன் விடுதலைப்புலிகளால் கடந்த 2009 ஜனவரி இறுதியில் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் இணைந்து செயற்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் சிலரிடம் இருந்து எமக்குக் கிடைத்த செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர் என்றும் அவற்றில் பெருமளவானவற்றை தாங்கள் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் மேலும் தொடரப்பட வேண்டும் என்றும், அவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளராக தான் இருக்கும் நிலையில் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளதாகவும், எனவே வெளிநாடுகளில் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த முறியடிப்பிற்கு கோத்தபாய ராஜபக்சவினால் நேரடியாக இறக்கிவிடப்பட்டுள்ள குமரன் பத்மநாதன், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக சில வெளிநாடுகளுக்கு அவர் பயணங்களையும் மேற்கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது கொழும்பில் தங்கியிருந்துகொண்டு புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் இருக்கின்ற தனது ஆதரவாளர்கள் மூலம், விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்கும் நடவடிக்கையில் இவர் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அவுஷ்திரேலியா நாடுகளில் இந்த கட்டமைப்பு உடைப்பு நடவடிக்கை தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலருடன் தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள குமரன் பத்மநாதன், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறி வருவதாகவும், அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவர்கள் குறித்து ஆராய்ந்து தனக்கு தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி வருவதுடன், மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணிகளையும் மேற்கொள்ளுமாறு இவர் தனது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தனக்கு நெருக்கமான சிலரது தொலைபேசி இலக்கம் கிடைக்காத நிலையில், பல்வேறு வழிகளினூடாக அவர்களின் தொலைபேசி இலக்கங்களை தேடிப்பெற்று இவர் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாகவும், இவ்வாறு தொடர்புகொள்ளப்பட்ட சிலர், தங்களுக்கு இந்தச் செயற்பாடுகளில் விருப்பமில்லையெனக்கூறி அவருடனான தொடர்புகளைத் துண்டித்து ஒதுங்கிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
தற்போது தனது முன்னைய ஆதரவாளர்கள் ஊடாக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இவர், விடுதலைப் புலிகள் குறித்து ஆதரவான கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை அச்சுறுத்தும் அல்லது அம்பலப்படுத்தும் வகையில் பிரத்தியேக இணையத் தளங்களை இயக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தற்போது தனிமனிதர்களை கொச்சைப்படுத்தும் இணையவலைகள் அதிகளவில் உருவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.இதேவேளை, விடுதலைப் புலிகளின் இந்த சர்வதேச வலைப் பின்னலை சிதறிடிக்கும் நடவடிக்கையில் ஒருசில சர்வதேச கரங்களும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், தற்போது கோத்தபாய ராஜபக்ச ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் பாதுகாப்பு தரப்பின் முக்கியஸ்தர்களை கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் நடைபெறும் தெற்காசியாவின் மிகப் பெரிய ஆயுத தளபாட கண்காட்சியை பார்வையிடும் இவர், சிறீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகளை நவீன மயப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியில் ஈடுபட்டுள்ள ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து புதிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
இதுஇவ்வாறிருக்க, இன்னொரு பக்கத்தில் சிறீலங்கா அரசின் நாச வேலைகள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் இணையத் தளங்களையும் அரச எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களையும் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் ஒரு கட்டமாக இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீன நிபுணர் குழுவொன்று சிறீலங்காவிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டு சீனாவில் அவற்றைச் செயற்படாமல் தடுத்த சீன நிபுணர்களே இவ்வாறு சிறீலங்காவிற்கு வந்துள்ளனர் எனவும் இன்னும் சில தினங்களில் செயலிழந்துபோகும் இணையத் தளங்களில் இருந்து இவர்களது நடவடிக்கை தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் இயக்கப்படும் ஊடகங்களே பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு சிறீலங்காவினால் தடை விதிக்கமுடிகின்றபோதிலும் மாற்று வழிகளூடாக (தேடுதல் தளங்கள்) சென்று பார்வையிடுபவர்களை தடுக்க முடியாது இருப்பதனால், இவ்வாறான மாற்றுவழித் தேடுதல் தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் கூகிள் இணையத்தளம் இலங்கையில் செயற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா இறங்கியுள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழீழ கனவு இன்னும் அப்படியே உள்ளது என்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாகவும் சிறீலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா எச்சரித்துள்ளார். தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் கல்லடி, தொப்பிகல, வாகரை, புனானை இராணுவ முகாம்களுக்கு பயணம் செய்து இராணுவத்தினரிடம் பேசியபோது இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மோசடி….
நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர்.
ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.
இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர்.
அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின் சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம் அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின் சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர்.
இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில் யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும் ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும்.
அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும் உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான் அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள் இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்.
தென்னிலங்கைப் பயணிகளுக்கு வயிற்றோட்டம்...
தென்னிலங்கையில் இருந்து A9 பாதையூடாக வடபகுதிக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகளில் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பயணிகள் நேற்றிரவு கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். கிளிநொச்சியில் சுத்தீகரிக்கப் படாத தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மைக் காலமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தொகை அதிகரித்து வருவது தெரிந்ததே. சரியான தங்குமிட வசதிகளோ அடிப்படை வசதிகளோ வடபகுதியில் அற்ற நிலையில் பாரிய தொகையில் பயணிகளின் வருகை சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இராணுவ ஆட்சி பிரகடனம். ......
நைஜீரியாவில் அதிபர் மமாடோ தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாலு டிஜ்போ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கையெழுத்திட்ட அறிவிப்பை இராணுவ அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்தார். அரசு நிர்வாகம் அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கட்டடத்தில் விமானத்தை மோதி தாக்குதல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டடத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் ஒருவர் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார். இதில் 2 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமுற்றனர். டெக்சாஸ் மாகாண தலைநகரான ஆஸ்டின் நகரில், உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தையொட்டி, 7 மாடி கட்டடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது.
இந்நிலையில், அந்த கட்டடத்தின் மீது நேற்று இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியளவில் `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கட்டடத்தின் மீது குட்டிவிமானத்தை மோதச் செய்தவர் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர் என்பது தெரிய வந்தது. ஜோசப் ஆண்ட்ருஸ்டேக் (வயது 53) என்ற அந்த நபர் ஆஸ்டின்நகரை சேர்ந்தவர்.விமானத்தை ஓட்டி வந்த இவர் கட்டடத்தின் மீது மோதிய போது இறந்து விட்டார்.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, அவரது `இணையதளத்தில்' ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், தனக்கும், வரிவசூல் செய்யும் அதிகாரிகளுக்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை பழிவாங்க இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அமெரிக்க விமான நிலையங்கள் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது,
மாணவி ஒருவரைக் காணவில்லை
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விகற்கும் 18 வயதான மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். யாழ் நகரிலுள்ள தனியார் கல்விநிறுவனத்தில் கல்விகற்பதற்காக அன்றையதினம் மாலையில் தனது சைக்கிளில் வீட்டைவிட்டு கிளம்பிய அவர் பின்னர் திரும்பி வரவில்லை என யாழ்ப்பாண போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோரால் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவரின் பெயர் லங்கேஸ்வரன் குணதீபா. இவர் கொக்குவிலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவராவார்.
தமது மகளைக் காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் தெரிந்தவர்களைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களிலும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
வியாழன், 18 பிப்ரவரி, 2010
சிங்களவர்களிற்குள் பிளவு !
இலங்கையில் சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
"குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைg கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல.
எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.
இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.
முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது.
நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது.
ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.
இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும்.
இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்." இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சோமவன்ச அமரசிங்க
"ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும்.
இந்த அரசாங்கத்திடம் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், புத்திசாலித்தனம் கிடையாது. அண்மையில் லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் சீல் உடைக்கப்பட்டது.
அதேபோன்று அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் சென்றார்கள். குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத் தீர்ப்பு வெளியாகி அரை மணித்தியாலத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்யும்போது தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அரசாங்கம் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இதனால் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் பறிபோயுள்ளது."
திஸ்ஸ அத்தநாயக்க
"ஜெனரல் பொன்சேகாவை எதுவிதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்."
இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தவிசாளர் ருக்ஷன் சேனாநாயக்க, பிரதித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் ஆர். யோகராஜன், எம். சச்சிதானந்தன், மேல் மகாண சபை உறுப்பினர்களான முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், எஸ். சதாசிவம் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்
சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது.
போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன. வறுமையில் வாடும் தமிழ் மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவு பணங்களை கொடுத்து அவர்களின் நிலங்களை பெரும்பாலான சிங்களவர்கள் வாங்கிவருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் வடபகுதி எங்கும் அதிகளவான சிங்களவர்கள் குடியேறிவிடுவர். அதன் பின் அவர்களுக்காக சிங்கள பாடசாலைகளும், பெளத்த விகாரைகளும் எங்கும் முளைக்கும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுபோகும்.
அத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் சிங்களவர்களும் போட்டியிட்டு தேர்வாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கவே இது போன்ற நடவடிக்கைகள் வழிகோலும் என்பதில் ஐயமில்லை.
எனவே இலங்கை வாழ் தமிழர்கள் என்ன நிலை ஏற்படினும் தமது நிலங்களையோ, சொத்துக்களையோ ஒரு சிங்களவருக்கு கூட விற்கக்கூடாது. முடிந்தவரையில் தாமே அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டு. அதையும் மீறிய தேவைகள், கஷ்டங்கள் ஏற்படுமிடத்து நிலங்களை விற்பதாயின் அதனை தமிழர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தமிழர்கள் தமது பூர்வீக தாயக நிலங்களை பாதுகாப்பாக தமிழர் நிலங்களாகவே பாதுகாக்க முடியும்.
அத்தோடு புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழீழ தமிழர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இனிவருங் காலங்களிலாவது தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு தமது முதலீடுகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடியளவு செலவிடவேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.
இதுவரை காலமும் தமிழர் தாயகப்பகுதிகளில் கணிசமான அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தையும், நில அபகரிப்புக்களையும் செய்து வந்த சிங்கள பேரினவாத அரசு தற்போது மிகவும் புத்திசாலித்தனமாக தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள நிலங்களை தமிழர்களின் விருப்புடனேயே அவர்களின் வீடுகளையும், காணிகளையும் பணத்தைக்கொடுத்து வாங்கும் தந்திரத்தை அரங்கேற்றி வருகிறது.
இந்த சதிவலைக்குள் சிக்கி தமிழர் தாயக நிலப்பரப்புக்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரதும் இன்றைய வரலாற்றுக் கடமையாக உள்ளது.
இந்த மண்ணையும், மக்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி சுதந்திர தமிழீழத்தை உருவாக்கி அதில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே 33,000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களும் போராடி தமது விலைமதிப்பற்ற இன்னுயிர்களை தமிழீழ விடுதலைக்காக உரமாக்கி விதைகுழிகளில் விதைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஆயுதப்போராட்டம் நடாத்திய போதும் சரி, பேச்சுவார்த்தைகள் என்று பல நாடுகளுடன் ஈடுபட்டிருந்த போதிலும் சரி தமிழரின் உரிமையையோ, தமிழீழக்கோட்பாட்டையோ விட்டுக்கொடுக்காது தமது பிரதிநிதித்துவத்தை சரிவர செயற்படுத்தி வந்தனர்.
இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு சிறீலங்கா அரச இயந்திரம் மிக மூர்க்கமான தாக்குதல்களையும், சர்வதேசங்களினால் தடைசெய்யப்பட்ட போர் ஆயுதங்களையும் பயன்படுத்தி தமிழர் நிலங்களையும், தமிழ் மக்களையும் அழித்து தமிழினம் என்றும் கண்டிராத மிகப்பெரும் இனப்படுகொலையை சந்தித்த போது சர்வதேச நெருக்கடிகளை கருத்திற்கொண்டும், சர்வதேசம் தமிழர் பிரச்சனையில் அணுகமுனையும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டும் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்தனர். இது அனைவரும் அறிந்த உண்மையே!
ஆனால் ஆயுதங்களை மெளனித்ததின் பின்னர் எத்தனை போராளிகள் மிகக்கொடூரமாக கொன்றழிக்கப்பட்டனர். தமது மண்ணினதும், தம் மக்களினதும் மானம் பெரிதென போராடியவர்கள் உடல்கள் கிழிக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தியும், பல துண்டுகளாக்கப்பட்டும் மனிதநேயமற்ற முறையில் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும், கேட்டும் அதன் பின்னரும் உணர்வுள்ள தமிழராய் ஒன்றிணையாது தமிழர்களிடையே பிளவுகளை அதிகரித்துக்கொண்டே இருப்போமானால் தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்.
இதை விடுத்து இன்னொருவரை தாக்குவதிலும், நான் பெரிதா? நீ பெரிதா? என முட்டி மோதிக்கொள்வதிலும் எந்த பலனும் இல்லை. தமிழ்த் தேசியத்தையும், தமிழர் நலன்களையும் விட்டு விலகி சலுகைகளுக்காக அரசியல் செய்வோரை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை மக்கள் புறம்தள்ளி அவர்களின் கருத்தை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் தமது பலத்தைக் கட்டிக்காப்பதோடு உட்பூசல்களை தவிர்த்து உறுதியான தமிழர் பிரதிநிதிகளின் வழியில் தமிழீழத்தை அடையமுடியும்.
அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தாயக நிலப்பரப்புகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகளையும், அனாதைகளாக, அடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களையும் காப்பதே இன்று ஒட்டுமொத்த தமிழர்கள் (தமிழ் அமைப்புக்கள்) முன்னும் உள்ள மிக முக்கிய செயற்திட்டங்களாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
பர்மாவில் பிக்குகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்று மகிந்த எச்சரிக்கை
பெளத்த பிக்குகளின் சங்க சம்மேளனக் கூட்டம் நடத்தப்பட்டால் பௌத்தர்கள் வாழும் பர்மாவில் ஏற்பட்ட சம்பவம் இலங்கையிலும் ஏற்படக் கூடும் எனவும் இந்த நிலைமையில் பௌத்த தேரர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் அரச தலைவர் மகிந்த நேற்று முற்பகல் மல்வத்தை மாநாயக்க தேரருக்கு அறிவித்திருந்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சங்க சம்மேளக் கூட்டம் நடைபெற்றால் அங்கு புகுந்து பாரிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு பெருமளவிலான பிக்குகள் தயாராகியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் அரசதலைவர் மகாநாயக்கருக்கு கூறியுள்ளார்.
பர்மாவில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படாது தடுக்க மாநாயக்க தேரர்கள் முனைப்பு காட்டவேண்டும் எனவும் மகிந்த வலியுறுத்தியுள்ளார்.
இதனைத்தவிர மேலும் பல பௌத்த தேரர்கள் ஊடாகவும் மாநாயக்க தேரர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்திய மகிந்த, ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் மாநாயக்க தேரர்களின் சங்க சம்மேளனத்திற்கு எதிராக பெருமளவில் ஊடகப் பிரசாரங்களை கடந்த சில தினங்களில் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலைமையில் நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு கண்டி மாமலுவ பிரதேசத்தில் நடைபெறவிருந்த சங்க சம்மேளக் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள மாநாயக்க தேரர்கள், பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள், தலதா மாளிகையின் கௌவரம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு கூட்டத்தை ஒத்திவைத்ததாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
வெற்றிக்கிண்ண சின்னத்தில் போட்டியிட முடிவு!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழ் 'ஜனநாயக தேசிய முன்னணி' என்ற புதிய கட்சியின் கீழ் ஜே.வி.பியினர் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, வெற்றிக்கிண்ண சின்னத்தின் கீழ் இரு பிரதான தரப்பினரும் தேர்தலில் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் கூட்டாக அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கே தொடர்ந்து விருப்பம் தெரிவித்ததால், ஜெனரல் சரத் பொன்சேகா ஜனநாயக தேசிய முன்னணி என்ற கட்சியின் பேரில் வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவார் என்று பொன்சேகா தரப்பு செய்திகள் முன்னர் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த புதிய கட்சியின் தலைவராக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அதன் பொதுச் செயலாளராக ஜே.வி.பியின் விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவின் பின்னால் அணிதிரண்டுள்ள ஜே.வி.பியினர் இம்முறை தமது மணி சின்னத்தில் போட்டியிடாமல் வெற்றிக்கிண்ண சின்னத்திலேயே போட்டியிடவுள்ளனர்.
இந்தக் கட்சியின் அலுவலகத்தின் முகவரியாக கொழும்பு ரோயல் கல்லூரி மாவத்தையிலுள்ள ஜெனரல் பொன்சேக்காவின் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக தமது இறுதித் தீர்மானம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இரகசியமான கடிதமொன்றை அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு......
ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி த.தே.கூட்டமைப்பிற்குக் கிடையாது என்று புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அடித்துக் கூறுகின்றார்கள். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்திய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரிவினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காண்பிக்கும் சிலர், த.தே.கூட்டமைப்பு ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து வெளிவரும் இணையத் தளங்கள், பத்திரிகைகள் சம்பந்தன் அவர்களைத் துரோகி என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தீண்டத்தகாத ஒரு அமைப்பு என்றும் குற்றம் சுமத்தி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
த.தே.கூ. தாம் தனி நாடு கோரவில்லை என்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது சரியா?
இது தனிநாடு கோரி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட போராளிகள், பொதுமக்களுக்கு த.தே.கூ. இளைக்கின்ற துரோகம் இல்லையா? த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி என்று நாம் கூறுவதில் என்ன தவறு?
இன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.
ஒருவன் துரோகியா இல்லையா என்கின்ற முடிவினை எடுப்பதற்கு முன்னர், அவன் வாழுகின்ற சூழ்நிலையையும், அவனைப் பற்றிய உண்மையையும் நாம் புரிந்துகொண்டு அதன் பின்னரே நாம் அந்த முடிவினை எடுக்கவேண்டும். உணர்சிவசப்பட்டு, ஒரு முடிவினை எடுத்துவிட்டு ஒவ்வொருவரையும் துரோகியாக நாம் தீர்த்து, தீர்த்துத்தான், எமது விடுதலைப்பாதையில் துரோகிகளின் முகாம்களுக்கு பலரை நாம் அனுப்புகின்ற கைகங்காரியங்களை வெற்றிகரமாகச் செய்துவிட்டிருக்கின்றோம்.
முதலாவது, இலங்கை மண்ணின், சிறிலங்கா பேரினவாதத்தின் கொடுரமாக இரும்புக்கரங்களுக்கு நடுவில் நின்று, இன்றைக்கு யாருமே தமிழீழம் தனி நாடு என்று இலகுவாகக் கூறிவிட முடியாது.
அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்கின்ற- உலகிலேயே மிகவும் கொடுரமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற சிறிலங்காவில், வெள்ளைவான் கடத்தல்கள், படுகொலைகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்ற அந்த மண்ணில், நீதிக்குப் புறம்மான ஆட்கடத்தல்கள், சட்டமே மேற்கொள்ளுகின்ற பயங்கரவாதங்கள் பரவலாகவே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அந்த தேசத்தில்- நின்றுகொண்டு, தமிழீழம்தான் எங்கள் ஒரே முடிவு என்று ஒரு தலைவன் கூறினால், அவரனது உயிருக்கு அடுத்த கனம் என்ன நடக்கும் என்று யாருமே உத்தரவாதம் கொடுக்க முடியாது.
நாம் இங்கு புலம்பெயர்ந்த மண்ணில் நின்றுகொண்டு எதுவும் பேசலாம். வீரம் கதைக்கலாம் ஆனால் சிறிலங்கா போன்ற ஒரு இரக்கமற்ற தேசத்தில் இது முடியாது.
இல்லை, அது முடியும் என்று கூறுபவர்கள் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் அல்லது தமிழீழம் என்று எழுதப்பட்டு டீசேர்டுடன் ஒருதடவை சிறிலங்காவிற்கு சென்று பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இலங்கைக்கு உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்குக் கூட, ’வெள்ளைப் புலி’ முத்திரைகளைக் குத்துவதற்குத் தயங்காத தேசம்தான் சிறிலங்கா.
ஒரு தேர்தலில் போட்டியிட்டு 41 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற எதிர்கட்சி வேட்பாளரின் நிலையை எண்ணிப்பாருங்கள். அந்தத் தேசத்தின் தலைநகரில் நின்றுகொண்டு எங்களுக்குத் தனிநாடுதான் தேவை, நாங்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று த.தே.கூட்டமைப்பால் இலகுவாகக் கூறிவிடமுடியாது.
„இல்லை அது முடியும்“ என்று கூறுபவர்கள், தயவுசெய்து அங்கு சென்று அதனைச் செய்யுங்கள். உங்களை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் பின் அணிதிரள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
இந்த இடத்தில் சில புலம்பெயர் ஊடகங்கள் முன்வைக்கின்ற மற்றொரு குற்றச்சாட்டுப்பற்றிப் பார்பது அவசியம்.
„தமிழீழம் கேட்கத் துனிவில்லாவிட்டால், பின்னர் எதற்காக த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்? – என்று சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.
இந்தக் கேள்விக்கான பதிலை நாம் பார்பதானால், முதலில் இலங்கையின் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் பற்றி ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.
இலங்கையில் தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கை மிகவும் உட்சகட்டமாக முன்வைக்கப்ட 80களின் ஆரம்பத்தில், தமிழீழத்தை சட்டரீதியாகத் தடைசெய்யும் நோக்கத்தில் ஜே.ஆர் அரசு, ஒரு முக்கிய திருத்தச் சட்டத்தை சிறிலங்காவின் அரசியல் யாப்பில் இணைத்துக்கொண்டது.
இலங்கையின் அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச்சட்டம் 1983ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைமுறைக்கு வந்தது.
இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்பது, இலங்கையின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு முக்கியமான சட்டம்.
இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்ன கூறுகின்றதென்றால், இலங்கையில் யாருமே பிரிவினை கோரமுடியாது. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக யாருமே கோரிக்கை முன்வைக்க முடியாது. அப்படிக் கோரிக்கை முன்வைத்தால், அது சட்ட விரோதமானது என்று இந்த இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டம் கூறுகின்றது.
இதை இன்னும் தெளிவாகக் கூவதானால் இலங்கையில் யாருமே தனிநாடு கோரமுடியாது. அப்படிக் கோரினால் சட்ட ரீதியாக அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களைத் தண்டிக்க முடியும்.
இந்த ஆறாவது திருத்தச் சட்டத்திற்கு இன்னும் ஒரு விசேஷமும் இருக்கின்றது. இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறமாட்டோம்- அதாவது தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் வழங்கித்தான் எவரும் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்லமுடியும்.
நாடாளுமன்றம் செல்ல மாத்திரம் அல்ல, பிரிவினையை மறுதலிக்கும் இந்த 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டபின்னர்தான் இலங்கையில் எவருமே எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமுடியும்.
இதுதான் சட்டம். இதுதான் இலங்கையில் இருக்கின்ற நடைமுறை.
’இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று கூறித்தான் 1983ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அந்தநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும், அவருடன் சேர்த்து - தற்பொழுது த.தே.கூட்டமைப்பு தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட 16 தமிழர் விடுதலைக் கூட்டனி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளைத் துறந்து, வெளியேறியிருந்தார்கள்.
அதாவது தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதாக ஒப்புக்கொள்ளும் 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறித்தான் அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டனியினர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் துறந்தார்கள்.
ஆனால் அதனைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அரசியல் செய்த அனைவருமே இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் கையொப்பம் இட்டுத்தான் அரசியல் செய்தார்கள்.
இன்னும் தெளிவாகக் கூறுவதானால், தமிழீழக் கோரிக்கையை உத்தியோகபூர்வமாக, பகிரங்கமாகக் கைவிட்டே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கையில் அரசியல் செய்தார்கள்.
மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கமாக இருந்தாலும் சரி, மாமனிதர் ரவிராஜாக இருந்தாலும் சரி மாமனிதர் சந்திரநேருவாக இருந்தாலும்சரி, வல்வைச் சிங்கம் சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சிகளில் த.தே.கூட்டமைப்பை வாங்கு வாங்கென்று வாங்கித்தள்ளுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியாக இருந்தாலும் சரி, யாழ்பாணத்தில் இருந்து 40ஆயிரம் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சூழுரைத்த கஜேந்திரனாக இருந்தாலும்சரி - இவர்கள் அனைவருமே தமிழீழத் தனியரசுக்; கோரிக்கையை கைவிட்டுத்தான் இலங்கையில் அரசியல் செய்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் நாடாளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களுமே, தாம் தனிநாடு கோரமாட்டோம் என்று கையொப்பம் இட்டுவிட்டுத்தான் அரசியல் செய்திருந்தார்கள்.
இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம்.
இலங்கையை அரசியலைப் பொறுத்தவரையில் தமிழீழம் கோரி யாரும் நாடாளுமன்றம் செல்வது கிடையாது. அப்படி தமிழீழம் கோரிக்கொண்டு நாடாளுமன்றம் செல்லவும் யாராலும் முடியாது.
தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் ஈழத் தனியரசை நிறுவுவதற்காக அல்ல.
அவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்காகத்தான். தமிழ் மக்களின் தேவைகளை உலக அரங்கிற்கு நாசுக்காகக் கொண்டு செல்வதற்காக...சர்வதேச நாடுகளிடம் இருந்து தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை தேடிக்கொள்வதற்காக...சிறிலங்காவின் கோர முகத்தை, அதன் ஜனநாயக விரோத முகத்தை, அது மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்துவதற்காக...-இதுபோன்ற இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளுவதற்காகத்தான் தமிழ் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்:
தவிர தமிழீழம் கோருவதற்கு எந்தத் தமிழ் தலைவர்களும் பாராளுமன்றம் செல்வது கிடையாது.
இன்றைய காலகட்டத்தில், த.தே.கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்காகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வழிகளை தேடுவதற்காகவுமே, சிறிலங்கா தேசத்தில் அரசியல் செய்யத் தலைப்படுகின்றார்கள்.
எனவே சிங்கள மண்ணில் நின்றுகொண்டு கட்டப்பொம்மன் பாணியில் தமிழீழம் அது இது என்று அவர்கள் வீர வசணங்கள் பேசவேண்டும் என்று புலம்பெயர்ந்து பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எதிர்பார்ப்பது நல்லதல்ல என்றே நான் கருதுகின்றேன்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வினைச் செய்யவேண்டிய நிலையில் இருக்கின்ற ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையான த.தே.கூட்டமைப்பு, தனது வியூகங்களுக்கு ஏற்றாற் போன்று வெளிப்படையான சில பேச்சுக்களைப் பேசித்தான் ஆகவேண்டும். உலகிற்காக என்று நிலைப்பாடுகளையும் எடுத்தத்தான் ஆகவேண்டும்.
தமிழீழத்தை தாம் கோரவில்லை என்று அவர்கள் உலகிற்குக் கோருவது, உலகை நம்ப வைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஆதாயப்படுத்துவதற்கும்தான்.
பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வீறுநடைபோடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதுதான் - தற்போது தமிழ் இனம் செய்யவேண்டிய முக்கிய நகர்வு.
சதாசிவம் கனகரட்ணம் பொதுசன ஐக்கிய முன்னணியில்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்
சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஊடாகத்தான் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் மக்களுடைய தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும் எனவேதான் ஆளும் கட்சியில் இணைந்துதான் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறினார்
.இன்று செவ்வாய் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான புதியவகுப்பறைகளை தொடங்கிவைக்கும் வைபவத்திலும் திரு கனகரட்ணம் கலந்து கொண்டார் இந்த வைபவத்தின் பின்னர் செய்தியாளர்கள் கேட்டகேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்
கப்பம் கேட்டு மிரட்டல்......
யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழில் வலிகாமம் பகுதியில் அராலி கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற துணைஇராணுவக் குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என கோரி மிரட்டல்களை விடுத்துள்ளனர்.
தமக்கு இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்த ஆயுதக்குழுவினர் அவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இரண்டு கைக்குண்டுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு வீசியுள்ளனர்.
அவற்றுள் ஒரு குண்டு வெடித்துள்ளது. அதனை தொடர்ந்து பொதுமகனை தொலைபேசியில் தொடர்புகொண்ட துணை இராணுவக்குழுவினர் பணத்தை தரமறுத்தால் படுகொலை செய்யப்படுவார் என மிரட்டியுள்ளனர்.
உந்துருளிகளில் வந்தவர்களே கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று கடந்த புதன்கிழமை (17) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் முன்னர் பல தடவைகள் பணம் கேட்டு மிரட்டப்பட்ட போதும், அவர் பணத்தை வழங்க மறுத்துவிட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அவர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் யாழில் உள்ள வர்த்தகர்கள், சட்டவாளர்கள், கல்விமான்கள் மற்றும் ஏனைய நிதிவசதி உள்ள மக்களை மிரட்டி பணத்தை கப்பமாக பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளவதில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)