இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
103 சிறுமிகளை கற்பழித்த காமுக மருத்துவர்
அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள டேலவேர் மாகாணத்தில் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருப்பவர் எர்ல் பிராட்லி. இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதால் இவர் 103 சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெலவேர் மாகாணத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட வழக்காக இது உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த படுபாதகச் செயலை அந்த மருத்துவர் செய்து வந்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை பாலியல் கொடுமைப்படுத்தும் போது அதனை அவர் வீடியோவிலும் பதிவு செய்து வைத்துள்ளார்.
இதனிடையே பிராட்லியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதிக்ப்பட்டவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு.......................
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார்.
முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார்.
இவரது முதலாவது கருத்தான அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்று எதனை கூறுகின்றார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? மா நில சுய ஆட்சியா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ தாயக நாட்டினையா?
இவருக்கு எதிலுமே தெளிவு இல்லை அல்லது தேர்தலிற்காக எதனையும் கூறி நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஏற்றால் போல் கதைத்து தேர்தலில் வெல்லவேண்டும் என்பதே நோக்கம். அதாவது இலங்கை அரசாங்கமோ அன்றி இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது 13 வது சீர்திருத்தத்திற்கு மேலாக எதனையும் வழங்கவோ தயாராக இல்லை. இதனை மஹிந்த உறுதியாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு மேல் இலங்கை பாராளுமன்றில் எதனையாவது பெற முடியும் என மக்களுக்கு உறுதி மொழி கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.
ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுடன் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறுவது ஒரு நியாயப்பாடாக இருந்தாலும் அதனை கூட கூட்டமைப்பினால் தீர்க்கமுடியாது மாறாக அரசாங்கத்திடம் தம்மை காப்பாற்றி கொள்வதற்காக எதனையாவது செய்ய வேண்டும். நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை.
இதில் இருந்து அவரது அரசியல் சாணக்கியம் எப்படி இருக்கின்றது என கூறமுடியும். ஆகவே மக்களை வைத்து தனக்கு விருப்பம் இல்லாதவர்களை வெளியேற்றுவதும் மக்களின் துன்பங்களை வைத்து தேர்தலில் எவ்வாறு வெல்லலாம் என திட்டமிடுவதும் அரசியல் சாணக்கியம் அல்ல அரசியல் போலித்தனம் என்றே கூற வேண்டும்.
2004 ஆம் ஆண்டில் இவர் மக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான ஒற்றுமையினை வலியுறுத்தி , விடுதலைக்கான போராட்டத்திற்கு ஜன நாயக ரீதியான ஆதரவு திரட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிட வைத்தனர். 1000 மேற்பட்ட அரசியல் போராளிகளும் மக்களும் தமிழர் தாயகத்தில் வீடு வீடாக சென்றுதான் கூட்டமைப்புக்கு வாக்கு கேட்டார்கள்.
வாக்கு கேட்கும் போது எந்த ஒரு போராளியும் கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்புவதுஇலங்கை அரசாங்கம் எதுவும் தரும் என்பதற்காக அல்ல. அபிவிருத்திக்காக அல்ல எமது உரிமைகளுக்கான நியாயங்களை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் ஜன நாயக ரீதியில் எடுத்து உரைப்பதற்காகவே என தெளிவாக கூறி வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால் சம்பந்தன் வானொலியில் கூறும்போது என்ன சொல்கின்றார். கடந்த வருட தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள் அதே மக்கள் தாம் ஏமாந்து போனதாகவும் தாம் தெரிவு செய்த பிரதி நிதிகள் வெறும் சுலோகங்களை சொன்னார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என கூறியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக கஜன் மற்றும் பத்மினி அவர்களின் நீக்கத்தினை நியாயப்படுத்தினார்.
இங்கு கேள்வி என்னவெனில் யாழ் உதயன் நிர்வாகமும் ஒரு சில யாழ் புத்திஜீவிகளும் மக்களின் ஒட்டுமொத்த கருத்தினை கூறமுடியாது. தவிர கடந்த தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆலோசனைப்படி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. அவர்களின் கருத்தின் படியே அனைவரும் நடந்தனர். தவிர யதார்த்தம் என்னவெனில் கோசங்களைத்தான் போடலாமே தவிர கூட்டமைப்பு எதனையும் செய்ய முடியாது.
சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும். அவ்வாறு எனின் யாழ்ப்பாணம் சொலமன் சிறில் அவர்களும் கோசம் மட்டும் தான் போட்டார். ஏன் அவரை புதிய பட்டியலில் இருந்து நீக்கவில்லை.
சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? சுலோகம் போடுகின்றவர்களை விடுத்து இராஜ தந்திரமாக கருமம் ஆற்றும் தலைவர் என உங்களை புகழ்பவர்களும் நீங்களும் இதுவரை முள்ளீவாய்க்காலிற்கு பின்னர் என்ன செய்தீர்கள்?
ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள்.
தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட கிசோர், சிவாஜி ஆக்யோரின் முயற்சியே. இதற்காக அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் சிவாஜி, கிசோர் ஆகியோரின் முயற்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தாமே எல்லாம் செய்ததாக வெள்ளை வேட்டியுடன் முன்னுக்கு நின்றார்கள். படம் பிடித்து பத்திரிகைகளிலும் போட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மஹிந்தவுடன் சேர்ந்தார்கள் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ வேறு விடயம் ஆனால் அதனை சம்பந்தன் கூறுவதற்கு அருகதை இல்லை.
ஏனெனில் அவரும் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது.
ஆகவே சம்பந்தன் நிலைமைக்கேற்ப ஆள் மாறாட்டம் செய்வதனை நிறுத்தவேண்டும். ஒப்பீட்டு ரீதியாக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களே பல தடவை மக்களை ஏமாற்றியுள்ளனர். வெறும் சுலோகங்கள் என்று கூறும் சம்பந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தினையும் அதனை கொண்டுவந்த அரசியல் தலைவர்களையும் எதிர்த்தோ அல்லது தூக்கி வீசியோ பேசுவாரா? அதுவும் மக்களால் வாக்கு மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே.
தமிழ் மக்களின் தலைமை என்பது மக்களுக்கு தெளிவான கருத்துக்களை கூறி சரியான தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களை வழி நடாத்தி செல்வதாகும். சுயாதீனமாக மக்கள் வாக்களிப்பது வேறு, அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், தனி நபர்களின் செல்வாக்கு, அரச செல்வாக்கு ஆகியனவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையினை சொல்லி அரசியலை நடாத்தவேண்டும். அதனை விடுத்து இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கு எதனை சொன்னால் மக்கள் ஏற்பார்கள் எதனை சொன்னால் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று திட்டம் போட்டு தனது வெற்றியினையும், தனது இருப்பிற்காக மற்றவர்களை புறம் தள்ளுவது ஜன நாயகம் அல்ல.
இந்தியா ஒரு வருடத்திற்கு தீர்வு தரும், இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து தரும் என கூறுவதும் அதனை கஜேந்திரன், கஜன், பத்மினி ஆகியோர் எதிர்க்கின்றனர் என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள்.
ஆனால் உண்மை அப்படி அல்ல இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா? தவிர சிங்களவன் இலங்கை முழுவதும் சிங்கள பெளத்த நாடு என்று கூறும்போது ஒரு சில தமிழ் எம்.பிக்கள் அதனை மறுத்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. அது வெறும் கோசம் என்றால் சம்பந்தனின் உண்மையான கோசம் என்ன?
டக்ளசின் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுய ஆட்சியா? அப்படி எனில் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது.
அமெரிக்க நீதிமன்றில் இன்று வாதாடுகிறார் ருத்திரகுமாரன்
தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப் பட்ட அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இன்று நேரில் ஆஜராகி வாதிடவுள்ளார் என இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன.
மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு களை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத் தில் வாதிடுவார் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந்நாட்டு தேசப்பற்றுச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், அது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முதல் தமிழர் அவர்தான் என்றும் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது?
இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை
புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்,
.விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு. இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசுடன் முரண்படாமல் கையாளுவதற்கு சிறிலங்காவில் அரசியல் அதிகாரம் படைத்த தமிழர் சக்தி ஒன்று இந்தியாவுக்கு அவசர தேவையாக உள்ளது. தனது இந்த தேவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரே சரியான தெரிவாக இருக்கமுடியும் இந்தியா கருதுகிறது. அப்படிப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தபோது, தனது திட்டம் கைமீறிப்போய்விட்டதாக இந்தியா பீதியுற்றபோதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வசமான களமாக தற்போது வந்து வாய்த்திருக்கிறது.
இந்த தேர்தலில் தமது ஆளுகைக்குள் செயற்படக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்குவதன்மூலம் மட்டுமே சிறிலங்காவில் தனது ஏனைய திட்டங்களை முன்னகர்த்த முடியும் என்று இந்தியா நம்புகிறது. அவ்வாறு தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரக்கூடிய கூட்டமைப்பினில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தீவிர சக்திகள் இடம்பெறுமாயின், அது கூட்டமைப்பின் ஊடாக முன்னகர்த்த உத்தேசித்துள்ள எதிர்கால முயற்சிகளுக்கு பாரிய தடங்கலாக அமையும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கூட்டமைப்பினுள் நிச்சயம் இடம்பெறக்கூடாது என்பதில் இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தமிழ் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு தாம் இடமளிப்பதாக கட்சியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது, அதற்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைமை ஒப்புதல் அளிக்காததிலிருந்து, கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரை வெளியகற்றவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைமை எவ்வளவுதூரம் உறுதியாக நிற்கிறது என்பது புலனாகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை இந்தியாவின் மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டால், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டின் அழுத்தத்துக்கு உள்ளாகவேண்டிய தேவையில்லை என்று சோனியா அரசு ஆழமாக நம்புகிறது. கருணாநிதி தலைமையிலான மாநில அரசு தனக்கு சார்பாக என்றென்றும் இருந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உள்ளபோதும், தெலுங்கானாவில் தற்போது தனிமானிலமாக அமைக்கக்கோரி மேற்கொள்ளப்படுகின்றன மக்கள் கிளர்ச்சி போல எனையா மாநிலங்களிலும் வேறு விடயங்களில் தலைதூக்குமா என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, எந்த ஒரு விடயத்திலும் மாநில அரசுகள் மத்திய அரசினை பணயக்கைதியாக வைத்திருக்கக்கூடிய - சாத்தியமான - விடயங்களை விட்டுவைக்காமல் அவற்றை தானே நேரடியாக அணுகவேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவாக உள்ளார்கள்.
இதன் ஒரு நகர்வாகவே, சிறிலங்கா அரசியலையும் தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் அதனை தான் நினைத்ததுபோல வைத்திருக்கவும் இந்தியா தீர்க்கமான முடிவுடன் காய்நகர்த்திவருகிறது.
சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல்,,,,
பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள எவருக்காவது தெரியுமா? ஏன்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டான நிலமையிலேயே ஒன்றிணைய ஒத்துக்கொண்டார்கள். ஏன்பதும் உண்மையே.
கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி சிவநாதன், கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள்.
கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதம் யாருக்கும் தெரியாமலிருக்கலாம்.
ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலக்கியம் பற்றி பேசி வருகின்றார்.
புளொட் தலைவர் மதில் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று.
மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது. என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் அவசியத்துக்கான எண்ணக்கருவையே சிதைத்துவிட்டது. இவ்வாறான கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்பு இன்னும் மேலும் பலப்பட வேண்டும். என்ற மக்களின் எண்ணம் தவிடு பொடியாக்கப்பட்டதும் அல்லாமல் இருந்த ஒற்றுமையே சின்னாபின்னமாக்குமளவிற்கு நிலவரம் முற்றியுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையினால் தமிழ்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளார்கள் என்பது வருத்தத்தைக் கொடுக்கின்றது. தந்திரோபாய அணுகுமுறையும் கொண்ட இலட்சியத்தில் பற்றுமில்லாததாலேயே இத் தேர்தல்களம் அசிங்கமான முகத்தை வெளிக்காட்டி நிற்கிறது.
இவை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளாகும். தமிழ் மக்களிடையே ஒற்றுமை குலைவது அவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தானே.
சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் தமிழ் மக்களின் வருங்கால நலனையிட்டு சிரத்தை கொள்ளாமல் தங்கள் தங்கள் கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் நலனை முன்னெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.
திங்கள், 22 பிப்ரவரி, 2010
மீண்டும் உருவாக்கப்படும் மனிதப் புதைகுழிகள்......
வவுனியா புறநகர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா செட்டிக்குளத்திற்கு அண்மையாக உள்ள பகுதியில் உள்ள சுடுகாட்டில் தினமும் 50,100 உடல்கள் கொண்டுவரப்பட்டு மண் அகழும் பாரிய இயந்திரங்கள்(பெக்கோ) மூலம் குழிகள் தோண்டப்பட்டு ஒன்றாகப் போட்டு புதைக்கப்படுவதாக நேர்கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரால் கொண்டுவரப்படும் உடல்கள் புதைக்கப்படுவதை அடுத்து வவுனியாவில் பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விசாரணை நடாத்திவருவதாகவும் தெரியவருகின்றது.
முள்ளிவாய்க் கால் பகுதியில் கடந்த மே மாதம் தமிழரின் வாழ்வு, கலை, கலாச்சாராம், பண்பாடு, சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த பல இலட்சக்கணக்கிலான மக்கள் முட்கம்பி வதைமுகாமில் சிறை வைக்கப்பட்டும் சரணடைந்த போராளிகள், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுமார் பதினோராயிரத்திற்கு மேற்பட்டோர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் அண்மை நாட்களாக வவுனியா புறநகர் பகுதியில் கொத்து கொத்தாக உடல்கள் புதைக்கப்பட்டு வருவதை அடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எதுவித தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பதினோராயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளது குடும்பத்தவர்கள், உறவினர்கள் இதனால் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமது உறவுகளது நிலை தெரியாது இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என பரிதவித்துக் கொண்டுள்ளனர்.
என்ன கொடுமை உலகுக்கு தமிழர்களே சொல்ல போராடுங்கள் எப்படி தமிழர்கள் மறைமுகமாக் எந்தவித ஆரவராம் இன்றி கொள்ளபடுகிறான் தமிழ்நாட்டு உறவுகளே புலம்பெயர் தமிழர்களே ஈழ தமிழர்களை காப்பாற்றபோராடுங்கள்
ஈழமைந்தன்
மொழி காத்த தலைவன்
மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.
ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.
தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.
அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.
ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.
ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.
சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.
இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.
தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.
ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.
இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.
தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.
ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?
ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.
அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.
எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.
தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.
ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.
-கண்மணி-
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
நான் கிளி நொச்சிக்கு வந்திட்டேன் ....
அக்கா நாங்கள் கிளி நொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன்.
வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான்.வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது.
சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு போட்டுது போல இருக்கு முதல் வந்த ஆட்கள் காணிகளுக்க கல்லுகுவியல்கள் கிடக்குது. மற்றும்படி ஒரு அரச மரமும் மிச்சம் இல்ல எல்லா இடமும் புத்தர் சில வைக்கப்பட்டு இருக்கு. சனங்கள் கூடுதலாக வந்திட்டுதுகள் இப்பதான் மூன்று கடை திறந்திருக்கினம்.
புத்த கோயில்களுக்கான பூசைகள்தான் இங்க கூட நடக்குது ஸ்பீக்கரில கூட பூசை கேட்கலாம். சிங்கள சனம் நிறைய வந்து புத்த கோயில்ல கும்பிட்டு போகுதுகள். குருகுலம் ஜெயந்தி நகர் பக்கம் போனோம் . அங்க சின்ன அக்காவின்ர காணிபார்த்தோம். அப்படியே இருக்கு வீட்டைதவிர. குருகுலம் கட்டடங்களையும் கள்ளர் வந்து இடிச்சு இருக்கிறாங்கள்.
பிறகு ஜி.எஸ் (கிராமசேவகர்) அந்த இடத்தில போட் போட்டிருக்கிறார். அந்த இடத்துக்கு உள்ளே யாரும் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று. குருகுலம் ஆட்கள் வந்திட்டினம் இல்லத்தினை திரும்ப ஆரம்பிக்க கதைச்சு கொண்டிருக்கினம். ஈழ நாதம் கட்டடத்தில் ஆமி முகாம் போட்டிருக்கிறான். எல்லாம் சிங்கள மயமாதான் இருக்கு . ஆனால் காணி பறிபோய்விடும் என்பதால் எல்லா சனமும் வந்து காணிபதிவுகளை செய்து காணிகளை துப்பரவாக்குதுகள்.
ஆமி இப்போ செக் பண்ணுவதில்லை. கந்த சாமி கோயில் பக்கம் புனர்வாழ்வு கட்டடத்தில இருந்த ஆமி வேற இடம் போயிட்டாங்கள். இனி கோயில் பூசை ஒழுங்காக நடக்கும் என்று நினைக்கிறன்.புனர்வாழ்வு கட்டிடம் மேல் மாடி இடிஞ்சு இருக்கு. ஆனால் இப்போ ஒருவரும் இல்லை.
இப்போ காணிப்பதிவுதான் மும்முரமாக நடக்குது. தெரிஞ்ச ஆட்களுக்கு சொல்லுங்கோ காணி உரிமையாளர்களை வந்து பதிய சொல்லி பதிஞ்சு துண்டு எடுக்காவிட்டால் அதனை வேறு தேவைக்கு எடுத்து விடுவாங்கள்.ஸ்கூல் எல்லாம் நடக்குது. சென்றல் கொலிஜ் இல் நேற்று கொஞ்ச சனம், 55 ம் கட்டை சனங்கள் வந்திருக்குதுகள் நாளைக்கு விடுவாங்கள் போல இருக்கு.
போன 12 ஆம் திகதி ஓமந்தைக்கு தம்பிய பார்க்க போனம் பிரச்சினை இல்லை எனக்கு தெரிஞ்ச போராளிகளையும் பார்த்தனான். எப்ப விடுவாங்கள் என்று எங்களிடம் கேட்டாங்கள். நாங்கள் என்ன செய்வது? கெதியா விடப்போறாங்களாம் என்று சொன்னேன்.
அடுத்த மாதம் 12 ஆம் திகதி போவேன். எங்கட வீட்டிற்கு பக்கத்தில சானங்களுக்க காணி சண்டை நடக்குது . இனி இஞ்ச அதுதான் நடக்க போகுது. எங்கட காணிக்க கூட சிலபேர் வந்து இருந்தவ ஆனால் நாங்கள் வந்ததும் போயிட்டினம்.
இஞ்ச சனங்களுக்குள்ள சண்டைகள் நடக்குது. இயக்கத்திற்கு வேலை செய்த ஒரு குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டு சனத்திற்கும் சண்ட நடந்து இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் திரும்பவும் வவுனியா போயிட்டினம். அந்த இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் முகாமில் ஆட்களை காட்டி கொடுத்தார்கள் தங்களின் சொந்த காரர்களை காட்டி கொடுத்தார்கள் என்றே மற்ற ஆட்கள் சொல்லுகினம்.
சனம் எல்லாம் ஒரு வித்தியாசமான சூழலில் இருக்கின்றார்கள். களவு, சண்டை, குடி வெறி, கூடாத வார்த்தைகள், சேட்டைகள், எல்லாம் மலிஞ்சு போய் இருக்கு.ஆமி காரங்களுக்கும் பொலிசுக்கும் நல்ல பொழுது போக்கு விளக்கம் தீர்க்குறதில அவங்களுக்கு வாழ்க்கை வெறுக்கும் போல இருக்கு. அவரையும் ( கணவர்) எல்லா இடமும் தேடி பாத்திட்டம் ஆனால் ஒரு இடமும் இல்ல, முள்ளிவாய்க்காலில இருந்து சனங்களோட வந்தவர் எண்டு தெரிஞ்ச ஆட்கள் எல்லாரும் சொல்லுகினம். ஆனால் காண இல்லை. எனக்கு பிறகு காயப்பட்டு கப்பலில வந்த ஆட்கள் சொன்னார்கள் இவரை தாங்கள் ஆஸ்பத்திரியில் கண்டது என்று. எல்லா இடமும் அறிவிச்சு இருக்கிறம் பார்ப்பம்.
ஆமி காரங்கள் நல்லா கதைக்க பழகிவிட்டாங்கள். இனிமேல் சமாதானமாக இருப்பம் உங்க பக்கத்திலையும் இழப்பு எங்க பக்கத்திலையும் இழப்பு இனிமேல் சமாதானமாக இருப்பம் என்று கதைக்கிறாங்கள். தமிழீழம் கிடைக்காட்டிலும் பரவாயில்ல எங்கட சனங்கள திருத்துறதுக்கு தலைவர் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்கட சனம் தங்களுக்கு உள்ளேயே அடிபட்டு சாகும் போல கிடக்கு.
இப்பவே எடுத்தது எல்லாத்துக்கும் காசுகேட்க வெளிக்கிட்டங்கள். ஏதோ பார்ப்பம் .... வாற சனி கிழமை ஒருக்கால் எடுங்கோ.. ஒகே அக்கா
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்?
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்: ஒபாமா அச்சம்
அனைத்து தரப்பு வளர்ச்சியில் இந்தியாவிடம் இருந்து பலத்த போட்டியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்ற நாடுகள் 2ஆம் இடத்துக்கு போட்டியிட்டு கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் முதலிடத்துக்கு போட்டியிட்டு கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் உள்ள வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், “இந்தியாவும், தென்கொரியாவும் அமெரிக்காவை விட அதிகமான விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், நாம் (அமெரிக்கா) வெற்றி பெற முடியாது.
சீனா, 40 அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. ஆனால் நாம் ஒரு பாதையை மட்டுமே அமைத்து வருகிறோம். எதிர்காலத்துக்கு தேவையான கட்டமைப்பை நாம் உருவாக்க தவறிவிட்டோம். இந்தியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகின்றன.
தூய்மையான மின்சக்தி தொழில்நுட்பத்தை எந்த நாடு கண்டுபிடிக்கிறதோ அந்த நாடுதான் 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்துக்கு தலைமை தாங்கப் போகிறது. இந்தப் போட்டியில் நாம் காத்திருக்க முடியாது. ஏனெனில் இந்தியா காத்திருக்க போவதில்லை. சீனா காத்திருக்கப் போவதில்லை” என்றார்.
தாஜ்மஹால் என்றால் நினைவுக்கு வருவது ...............
தாஜ்மஹால் என்றதும் நினைவுக்கு வருபவன் சாஜகானே அன்றி, தாஜ்மகாலை கட்டிய கொத்தனார் அல்ல' . அதுபோல் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட்டமைக்கு எமது முறையான தலைமையே காரணம் என மக்கள் நம்புகின்றார்கள். அதனால்தான் நாம் மறுபடியும் வெற்றி கொள்ள முடிந்தது' எனத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறிலங்காவில் சுமுகநிலை தோன்றுவதற்கு இந்தியா மிகுந்த பலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியா எமது உறவினர். உதவி புரிந்துவரும் மற்றைய நாடுகள் எமது நண்பர்கள் ' எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, தமிழ்மக்கள் தமக்கு வாக்களிக்காதது குறித்து தமக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையில் தாம் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றியீட்டியது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், தமக்கு அந்த ஆச்சரியத்தைத் தந்திருப்பவர்கள் குறிப்பாக சிங்களக் கிராமமக்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகள் வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் அரசியற் தலைமைகள் உரிய உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், புதிய தமிழ்தலைவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதெனவும், அவவ்வாறு உருவாகும் புதிய தலைமைகளுடன், புதிய சிந்தனைகளின் அடிப்படைடயில் பேச்சுவார்த்தை மெற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தைப் பெற முடியுமா?
நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்?
தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம்.
தமிழீழத்தைப் பெற முடியுமா?
நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும்.
எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்?
யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்!
நாம் என்ன செய்ய வேண்டும்?
யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமாதரியான வரலாற்றைத்தான் சொல்கின்றன. ஒருமுறை படித்து முடித்த பின்னர் செயலில் இறங்குங்கள்!
நாம் யூதர்களாக முடியுமா?
நம்மிடம் ஒற்றுமையில்லையே !
நாம் யூதர்களைப் போல் வரவேண்டும். அவர்கள் அய்க்கியமாக இருந்தார்கள் என்று யார் சொன்னது?
நாம் வேறு வேறு நாடுகளில் வாழும் 7 கோடி மக்கள். நம்மிடம் எல்லா வளமும் இருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும்?
வீண் பேச்சுப் பேசுவதையும் எதிர்மறையாகப் பேசுவதையும் சிந்திப்பதையும் நிறுத்த வேண்டும். உங்களிடமும் மற்றவர்களிடமும் நம்பிக்கையை ஊட்டுங்கள்! இலக்கில் கண் வையுங்கள். ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளை உருவாக்குங்கள்! பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நமது இலக்குத் தவறக்கூடாது.
பிரான்சுதமிழீழமக்கள்பேரவை , ஐரோப்பியதமிழ்மக்கள்அவை , அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, உலகளாவியதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் அவை, கனடிய தமிழர் பேரவை, பேர்ல் உள்ள அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் அமைப்புக்களை ஆதரியுங்கள். செயல் செய்யுங்கள், எண்ணங்களை, நேரம் மற்றும் வளங்களைவழங்குங்கள்.
புறக்கணிப்பு, ஆதரவுதேடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
எல்லோரும் அழைத்து நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கத் தொடங்கினால் நாம் வெற்றி பெறுவோம்! அழைப்புக்கு நீங்கள் காத்திருந்தால் நாம் வெற்றியடைய மாட்டோம்! ஓரு நாளில்ஒரு மணி நேரத்தையாவது செலவிடுங்கள்! எதைக் கொடுப்பது என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.
மழையாகட்டும் வெய்யிலாகட்டும் தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக................
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியயான்று உருவாக்குவதற் குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலை மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி ருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுப் பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் மறை முகமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலமும் என்ற தலைப்பில் பருத்தித்துறை இளைஞர் அணியினரால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றுக்கு எனக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களிடம் நான் ஒரு கருத்தை முன் வைத்தேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி கட்சி ஒன்று உருவாக்குவோமானால் அக் கட்சியிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் கிராமிய மட்டத்திலிருந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு வேட்பாளராகப் போட்டியிட்டால் நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என இளைஞர்களிடம் தெரிவித்தேன்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்இன்று முடிபை அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு கூட்டமைப்பின் முடிபு அறிவிக் கப்பட்டால் நாளை எனது முடிபை அறிவிப்பேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
பருத்தித்துறை இளைஞர் அணியினரின் கலந்துரையாடல் நேற்று மாலை பருத்தித் துறை சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற் றது. இக் கலந்துரையாடலில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர்.
அர்ஜனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி
நாடாளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் சூடு பிடித்துள்ளது. எதிர்பார்த்திராத பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் களத்தில் இவர்கள் குதிப்பது கராம்பு போட்ட கறிபோல தேர்தலிலும் கமகம வாசம் வீசவே செய்யும்.
முன்னைய மூன்றாம் தரத் தமிழ்ப் புத்தகத்தில் ஒரு கதை. நிமால் பந்தையடி. பாலா பந்தைப்பிடி. அது அந்தக் கதையின் சாரம். சிங்கள நிமாலும் தமிழ்ப் பாலாவும் ஒற்றுமை யாக விளையாடுகின்றனர் என்பதை காட்டுவதற் காக அந்தக் கதை சோடிக்கப்பட்டது. கதைகதையாக இருந்தமையால் பாடம் பாதை மாறியது.
நிமாலும் பாலாவும் பந்தை மட்டுமல்ல; வெடி குண்டையும் அடித்துப் பிடித்து விளையாடி பார் வையாளர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். நிமாலும் பாலாவும் சேர்ந்து பந்தை அடியுங் கள், பாகிஸ்தானையும், சீனாவையும் தோற்கடி யுங்கள் என்று பாடப்புத்தகத்தில் கதை எழுதியி ருந்தால் நிலைமை வேறாகி இருந்திருக்குமோ என ஏழை மனம் எண்ணுகிறது.
விளையாட்டின் ஊடாக இன ஒற்றுமையை வலியுறுத்தியதெல்லாம் கடந்து இப்போது எல்லாம் விளையாட்டாக மாறிவிட்டது. இந்த விளையாட்டில் நாடாளுமன்றமும் விளையாட்டு மைதானமாக மாறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் ஏற்படுத்திக் கொடுக்குமென நம்பலாம்.
ஆம். எதிர்வரும் தேர்தலில் இலங்கை கிரிக் கெட் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெய சிங்கா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும்.
நாடாளுமன்றத்தில் அடிக்கப்படும் பந்து எங் கள் தமிழ் எம்.பிக்களின் தலைகளில் படாமல் இருக்க-சுசந்திகாவின் மூச்செறிந்த ஓட்டத்தால் எங்கள் மூத்த தமிழ் எம்.பிக்களின் இதயத் துடிப்பு தடைப்படாமல் இருக்க அந்த ஆண்டவன் தான் உதவவேண்டும்.
விசாரணை மே 14 ஆம் திகதிக்குள் நடத்தவேண்டிய நிலை
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் மேமாதம், 14 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய ஒருவர் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு இராணுவச்சட்டத்திற்கு உட்படுத்தப்படுவர் என்ற அடிப்படையில் இந்த வரையறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் காலப்பகுதிக்குள் அவர், இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாவிட்டால்,சிவில் நீதிமன்றத்திலேயே அவருக்கு எதிரான விசாரணையை நடத்தமுடியும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
சிரேஸ்ட படையதிகாரியான லெப்டினன்ட் ஜெயசூரிய மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோர் சரத் பொன்சேகாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், இராணுவத்தின் நீதிபதி சட்டத்தரணி ஜெனரல் இந்திர விஜயரட்ன, வழக்கு விசாரணை தொடர்பான திகதி உட்பட்ட தீர்மானத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், ஊடக இணைப்பாளர், தங்குமி;ட வசதிகளை செய்து கொடுத்தவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைகளுக்கு கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வடக்கிலும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளது
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது.
இத் தகவலை கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
வடபகுதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி, வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி கிழக்கு பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)