இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 24 ஏப்ரல், 2010
தொடரும் கருணாநிதியின் துரோகம்
ஒரு கோட்டை சிறியதாக்க அதன் அருகிலேயே ஒரு பெரிய கோடு போட்டால் அது சிறியதாகி விடுகிறது.இதையே தான் கலைஞர் கருணாநிதி வேத வாக்காகக் கொண்டிருக்கிறார் போலும்.ஒரு துரோகச்செயலை மூடி மறைக்க இன்னொரு துரோகம் அதைவிட பெரியதாய் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். ஈழப்பிரச்சினையில் கடிதம் எழுதி எழுதியே மூண்டெழுந்த உணர்வலைகளைக் காலம் தாழ்த்தியபடி இந்தியா செய்த அத்தனை துரோகத்துக்கும் ஒத்து ஊதிக்கொண்டிருந்த இந்தக் கலைஞர் ,பேரனுக்கும் மகனுக்கும் மந்திரி பதவி வாங்க முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் தில்லிக்கு சென்று சண்டையிட்டார். முத்துக்குமார் உயிரை ஈகம் செய்த பொது மாணவர் பிரச்சினை வந்துவிடக் கூடாதென்று கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுப்பளித்து மாணவர் சமுதாயத்தை இழிவு படுத்தினார். இப்படி தன் சக்திக்கு மீறி துரோகமிழைத்து வரும் கருணாநிதியிடம் நளினியின் ஆயுள் தண்டனையை குறைக்கப் பரிந்துரை செய்யும் கருணை மனு வந்தபோது தன்னிடம் சகல அதிகாரங்கள் இருந்த போதும் அதை மறுத்து தண்டனைக்குறைப்பு செய்யவில்லை. பொய் வழக்கில் சிறையிலிருக்கும் நளினிக்கு கருணை காட்டாத கலைஞர் தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் சிறையிலிருந்த குற்றவாளிகளுக்கு கருணை காட்டினார். நளினியின் கருணை மனு மீதான வழக்கு விசாரணையின் போது நிதிபதி கேட்ட கேள்விக்கு அரசு வழக்கறிஞர் பதில் அளித்ததைக் கேட்டு நீதிமன்ற வளாகமே சிரித்தது. நளினி விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நளினியின் தாயார் வசிக்கும் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியதைக்கேட்டு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது தான். விசாரணையில் தான் பிடியில் இருக்கும் கைதி ஒருவரிடமே தான் நினைத்ததை வாக்குமூலமாக வாங்கும் சக்தி படைத்த காவல்துறை ஆய்வாளர் தரும் வாக்குமூலம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள பெரிய ஞானம் தேவையில்லை தானே. நளினியிடமே பொய் வாக்குமூலம் வாங்கி பத்தொன்பது ஆண்டுகள் சிறை வாசம் வாங்கிக்கொடுத்த கயவனின் வாக்குமூலம் மட்டும் நீதியோடு இருக்குமா என்ன ? பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துத் திருப்பியனுப்பியதை மறைக்க சிறையிலிருக்கும் நளினியிடம் கைபேசி இருந்ததாகப் பொய்வழக்குப்போடுகிறார் கருணாநிதி. நளினி வெளியே வர இருந்த அத்தனை வாய்ப்புகளையும் தட்டிவிட்டு அவரை மென்மேலும் சிறைவாசியாக்கி விடுதலைக்கான எந்த வாய்ப்பும் அந்ததாய்க்கு கிடைக்கவிடாமல் செய்த கருணாநிதியின் துரோகம் முடிவே இல்லாமல் தொடர்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு.
சிறிலங்காவின் ‘பெருமை’யை கூட்ட இந்திய அரசின் ‘முயற்சி’ - துணை போகும் பாலிவுட்!
இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy - IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழா ஐஃபா விருது வழங்கு விழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஐஃபா விருது விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும். 2000வது ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும், 2001இல் தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியிலும், 2002இல் மலேசியாவிலும், 2003இல் தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004இல் சிங்கப்பூரிலும், 2005இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006இல் துபாயிலும், 2007இல் இங்கிலாந்தின் யார்க்சயர் நகரிலும், 2008இல் பாங்காக்கிலும், 2009ஆம் ஆண்டு மக்காவிலும் ஐஃபா விருது விழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வந்த நாளில் இருந்தே இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், கொழும்புவில் இதை நடத்துவதற்கான பின்னணிக் குறித்தும் பல விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், ஐஃபா விருது விழாவை நடத்த அயர்லாந்து அரசும், தென் கொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் ஐஃபா அமைப்பை மிகவும் நெருக்கின. இதற்குக் காரணம் இந்த விழா நடைபெறும் நகரம், அந்த நாட்டு அரசிற்கு மிகப் பெரிய நிதிச் செலவு ஏதுமின்றி, ஐஃபா விழா நடப்பதாலேயே அந்த நகரை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இது அந்த நாட்டிற்கு சுற்றுலா வருகையை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாக, இந்த விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர். சிங்கப்பூரில் ஐஃபா விழா நடக்கும்போது 30,000 சுற்றுலா பயணிகள் கூடுதலாக அந்நாட்டிற்கு வந்தனர். மூன்றாவதாக, இந்த விழாவின்போது ஏற்படும் வணிக ஒப்பந்தங்கள். பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழா நிக்ழ்ச்சி தொலைக்காட்சியின் மூலம் 50 முதல் 60 கோடி பேர் வரை கண்டுகளிப்பதால் அந்நாட்டின் சுற்றுலா மையங்களையும், இயற்கை எழிலையும் காட்டி, அதன் மூலம் திரைப்படப் படபிடிப்புகளுக்கு வாய்ப்பை மேம்படுத்தலாம். இதுவே இவ்விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முன்னேறிய நாடுகள் கூட அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா அதற்காக ஐஃபாவிற்கு ரூ.50 கோடி அளிப்பதாகக் கூட உறுதியளித்திருந்து என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், சற்றும் எதிர்பாரா வண்ணம் இந்த விழாவை கொழும்புவில் நடத்த இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன பின்னணி என்றும் கேள்வி எழுந்தது. இந்தியப் பின்னணி! பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்க அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து இன்று வரை சிறிலங்க அரசிற்கு உலகளாவிய அளவில் அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்கடி அதிகரித்து வருகிறது. தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு தட்டிக்கழித்த காரணத்தினால், அந்நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு அளித்துவந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்துவதென முடிவெடுத்து அறிவித்தது. அயர்லாந்து தலைநகரில் கடந்த ஜனவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நடந்த உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம், தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், வன்னி முகாமில் நடந்த மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை மெய்ப்பிக்கின்றது என்றும் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு எதிரான தமிழினப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஐ.நா.வின் நிதிச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக உள்ளவரும், தனது வாழ்வில் காந்தியின் அகிம்சை கொள்கையை கடைபிடித்து வருவதற்காக விருது பெற்ற பிரான்சுவா ஹூடார்ட் தலைமையிலான நிரந்தரத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியதன் காரணமாக, அதுவரை அசையாமல் இருந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன், போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்தார். தனது நாட்டு மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய சிறிலங்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தி வரும் நிலையில்தான், அந்த நாட்டின் ‘பெருமை’யை கூட்ட, இந்திய அரசின் உந்துதலால் ஐஃபா விருது விழா கொழும்புவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்க அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இந்திய அரசின் ‘முயற்சி’யே என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் போகிறதா? சிறிலங்க அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா விதத்திலும் துணை போனது இந்திய அரசு என்பது உலகளாவிய உண்மையாகிவிட்ட நிலையில், அதனை மறைப்பதற்கு இந்த விழாவை நடத்த இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுட் துணை போகிறதே என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்ச்சியலையாகும். ‘இலங்கை ஒரு அமைதியான, அழகிய தீவு’ என்றும், அருமையான சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்றும் கூறி, அந்நாட்டை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அங்கு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மறைக்க நடக்கும் முயற்சியே இந்த விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திய அரசின் துணைகொண்டு தமிழினப் படுகொலை செய்து முடித்த சிறிலங்க அரசிற்கு, அதனை மறைக்க உதவவே ஐஃபா விருது வழங்கு விழாவை அங்கு தள்ளியுள்ளது டெல்லி அரசு. இல்லையென்றால் லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்கள் தொங்கிக்கொண்டு பின்னால் வர, உலக நாடுகளின் சினத்திற்கு ஆளாகி நிற்கும் இலங்கையை ஐஃபா எதற்குத் தேர்ந்தெடுக்கிறது? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகள் நடந்த அந்த இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாய விசாரணையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுவரும் சூழலில், இனப்படுகொலைக்கு காரணமான அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக தங்கிக்கொண்டு விழா அறிவிப்பை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை. இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டது அமிதாப் பச்சனுக்கோ அல்லது இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கோ தெரியாதா? சிறிலங்க கடற்படையினரால் 400க்கும் அதிகமான தமிழ்நாட்டின் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறைத்து அந்நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்திய அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகம் துணை போகலாமா? தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது. சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டில் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா? உள்நாட்டுப் போரினால் அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் தங்கள் குடும்ப உறவுகளையும், வாழ்ந்த இடங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாகத் திரிகின்றனர் என்பதை அறிந்துதான் அந்த விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லது எதையுமே அறியாத ஒரு கனவுலகில் அமிதாப்பும் பாலிவுட்டும் மிதக்கின்றனவா? புரியவில்லை. தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர். சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் மீனவர்களின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய இரணம் இன்னமும் ஆறவில்லை. அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏங்கித் தவிக்கிறது. இதனைப் புரியாத பாலிவுட், கொழும்புவில் விருது விழாவை நடத்தச் செல்லுமானால், அது இதுநாள் வரை போற்றப்படும் உறவிற்கு பாதமாகவே முடியும்.
கண்ணகி பிறந்த இந்தியாவின் புதிய உலக ஒழுங்கு முறை ஏற்படுத்திய தாக்கம் ...........!
ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோ, பெண்ணுக்கோ, கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது. அதில் இளைஞர்களிடம் உங்கள் வருங்கால மனைவி கற்புடையவராக இருந்திருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் வருங்கால மனைவி கற்போடு இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றனர். 37 சதவீதம் பேர் மட்டும் கற்புடைய பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்றனர். ஆணோ, பெண்ணோ திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று 37 சதவீதம் பேர் கூறினார்கள். லக்னோவை சேர்ந்த நேகர்பர்த் (வயது 28) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கூறும் போது “ஒரு பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியமானது. ஆனால் நல்ல குணத்துக்கும் கற்புக்கும் சம்பந்தம் கிடையாது” நமக்கு யார் பொருத்தமானவள் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர அவள் கற்போடு இருக்கிறாளா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார். அங்கீதாசர்மா (24) என்ற இளம் பெண் கூறும் போது, “திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையை அவர் கற்போடு இருக்கிறாரா? என்று சோதனை நடத்த முடியாது. எனது கற்பு பற்றி கேள்வி எழுப்புபவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார். லக்னோவை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ரேணு மாக்கர் கூறும் போது “என்னிடம் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்களில் 80 சதவீதம் பேர் ஏற்கனவே “செக்ஸ்” உறவு வைத்துள்ளனர்” என்றார்.
தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது. கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது. வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள் இவ்வாலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம். 01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பொது மக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார். 02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது. 03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ஆம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.
டக்ளஸ் தேவானந்தாக்கு ஆப்பு வைத்த மகிந்த
நேற்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில் கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டவர் வன்னியில் தமிழின விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழரது வாக்குரிமையையும் தடுத்த ரிசாட் பதியுதீன் ஆவார். அதே நேரத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். டக்ளஸ் தேவானந்தாவிற்கு சிறுகைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டிருப்பது டக்ளஸை அவமானப்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அரசிற்கு முண்டு கொடுத்த டக்ளஸைப் பின்தள்ளி அண்மையில் அரசில் இணைந்து கொண்ட பதியுதீனுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது குறித்து ஈ.பி.டி.பி வட்டாரங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் அங்கயன் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடி உறுப்பினர்களை முன்னிறுத்த திட்டமிட்டுள்ள ராஜபக்ச சகோதரர்கள் அதற்கு முன்னோடியாகவே இந்தப் பதவிக்குறைப்பு வேலைத்திட்டத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்துள்ளனர் என்கின்றனர் அவர்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் கொழும்புச் செய்தியாளர்கள்
தமிழகத்தில் ஈழத்தமிழ்மகன் கப்பம் கோரி கடத்தல் ....
தமிழகத்தில், ஈழத்தமிழ்மகன் கப்பம் கோரி கடத்தப்பட்டுள்ளார். தாயகத்தில் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஸ்ரீலங்காப்படையினரின் ஒட்டுக்குழுவினரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுவரும்நிலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதேபாணியிலான கடத்தல் சம்பவம் ஒன்று தமிழகத்தின் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் நீலாங்கரையினை அடுத்து கானத்தூரில் குடும்பத்துடன் வசித்துவந்த 35 அகவையுடைய ஜெயமோகன் என்பவரது வீட்டிற்கு சென்ற இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களும் இரண்டு சென்னை தமிழ் இளைஞர்களும், தாங்கள் கியூப்பரிவு காவல்துறையினர் எனவும் விசாரிக்க வேண்டும் என கூறி ஊர்தியில் கடத்தப்பட்டு மாமல்லபுரம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கிருந்துகொண்டு பத்து இலட்சம் ரூபா இந்தியப்பணம் கப்பம் கோரப்பட்டுள்ளது. இன்நிலையில் அவரது துணைவியால் கியூப்பிரிவு காவல்துறையினருக்கு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தின் கியூப்பிரிவு காவல்துறையினர் சென்று கடத்தப்பட்ட ஜெயமேகனை மீட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கடத்தப்பட்ட ஜெயமோகன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ள இன்நிகழ்வு தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை தோற்றிவித்துள்ளது. தாயகத்தில் ஸ்ரீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் இதே பாணியிலான கடத்தல்களை தற்போது மேற்கொண்டுவரும் நிலையில் ஒட்டுக்குழுவினரின் செயற்பாட்டாளர்களாலேயே இக்கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்?
விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும். அதாவது கற்பழிப்பு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின. இவ்விதம் சமூகச் சீரழிவை அடியோடு அழித்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும். இப்போது அவர்கள் இல்லாத துணிவில் சமூகச் சீரழிவு யாழ். குடாநாட்டில் எழுந்து நின்று ஆடத் தலைப்பட்டுள்ளது. கற்பழிப்பு, களவு, கொள்ளை, தனிமையில் இருப்பவர்களை கொலை செய்தல், கோஷ்டி மோதல், மதுபோதை, சந்திச் சண்டித்தனம் என எல்லாம் தலை விரித்தாடுவதை காணும் போது நெஞ்சம் வெடிக் கின்றது. நிலைமை இப்படியே போகுமாயின் தென்பகுதியில் இருக்கக் கூடிய பாதாள உலகக் கோஷ்டி யாழ். குடாநாட்டில் உருவெடுக்கலாம் என்ற அச்சம் நியாயமானதாகவே இருக்கும். எனவே யாழ். குடாநாட்டில் உருவெடுக்கும் கலாசாரச் சீரழிவை அச்சமான வாழ்வை மூலவேருடன் பிரட்ட யாழ்ப்பாணச் சமூகம் முன்வரவேண்டும். இதுவிடயத்தில் நீதி பரிபாலனத்தின் பங்கோ மிகவும் அவசியமானதாகும். காவல்துறையினர் சட்டத்தை நிலைநாட்ட திடசங்கற்பம் பூண வேண்டும். இலஞ்ச ஊழல், பக்கச் சார்பு என எவையும் பொலிஸாரிடம் இருக்குமாயின் சமூகச் சீரழிவில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்ளவும் வலுவடையவும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொலிஸாரின் முன் பாரிய பொறுப்பு உள்ளது. பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தங்கள் நிர்வாகக் கடமைகளை நேர்மையுடன் செய்யும் போது அவர்களின் கட்டுப்பாட்டில் கடமையாற்றும் பொலிஸார் சுயலாபம் தேடுவதில் இறங்க மாட் டார்கள். இதற்கு அப்பால் சமூகச் சீரழிவில் ஈடுபட்டவர் களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது தொடர்பில் யாழ்.குடாநாட்டு சட்டத்தரணிகள் ஒரு தீர்க்கமான முடிபினை எடுக்க வேண்டும். பணத்திற்காக எவரையும் மீட்டுவிடுவது என்னும் கொள்கை அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் பாதிக்கும். இவை யாவற்றுக்கும் மேலாக சமூக உறவு, இளைஞர்களுக்கான வழிகாட்டல், வேலைவாய்ப்பு, புரள்வான வாழ்விலிருந்து மீள்வதற்கான ஆத்மீகச் சிந்தனை, பெற்றோரின் கண்காணிப்பு, பாசமான குடும்ப உறவு, நம்பிக்கை தரக்கூடிய நட்பு என பல வகை சமூக நலமேம்பாடுகளையும் சமநேரத்தில் சமாந்தரமாக கட்டியயழுப்புவது கட்டாயமானதாகும். இது விடயத்தில் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலாசார அலுவலர்கள், பிர தேச சபைகள், அரச சார்பற்ற அமைப்புகள் போன் றன அனைத்தும் தனித்து கூட்டாக இணைந்து பணியாற்றுமாக இருந்தால் கலாசார சீரழிவை மூல வேருடன் பிடுங்கிவிடுவது மிக எளிதாகும். இதனைச் செய்வதற்கு அரசியற்பலம் உதவி தேவையென்பது மறுப்பதற்கில்லை.
விடுதலைப் புலிகள் மீது பொய்யான போர்க்குற்ற வழக்குகள்: இந்தியா ஆலோசனை
சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுப்பதற்கு சிறீலங்கா அரசு முனைந்து வருவதுடன், இது தொடர்பாக கைதான விடுதலைப் புலிகள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். தாம் கூறும் பொய்யான போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற தவறான தகலைத் தெரிவித்தே, இவ்வாறான முயற்சியில் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தோ்தலில் மகிந்த தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்திய அரசின் ஆலோசனையில் இவ்வாறான செயற்பாடுகள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் புரிவதாக்க்கூறியே சிறீலங்கா அரசினால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டவர்களால் இவ்வாறான போர்க்குற்றம் சுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப் புலிகள் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கான உதவிகளைப் புரிவதன் ஊடாக இந்திய – சிறீலங்கா அரசுகளின் இந்த முயற்சியைத் தடுக்க முடியும் என நம்பப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.................!
தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. கடைசியாக எமக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பமாக நாடு கடந்த தமிழீழ அரசு விளங்குகின்றது. அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொதுத் தேர்தலின் பின்னர் தமிழீழத் தனிநாட்டிற்கான ஒரு அரசு நாடு கடந்து அமையப் போகின்றது என்பது ஈழத் தமிழினத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாக அமையப் போகின்றது. நயவஞ்சகத்தனத்தால் எமது விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களிடத்தில் தனிநாட்டுக்கான அவா- விருப்பம்- தேவை அற்றுப் போய்விட்டது என்ற சிங்களத்தின் கபடத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு. புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்குகொண்டு- அலைஅலையாக நீங்கள் அளிக்கும் வாக்குகள் சிங்களத்தின் உச்சிமண்டையை மீண்டுமொரு தடவை பிளந்தே தீரும். புலம்பெயர் தமிழர்களே! இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென சர்வதேசத்தின் முன் சிங்களம் செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள். சிங்களத்தின் கொடூர கரங்களிலிருந்து தப்பித்து நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்து உங்களது உரிமை அவாவை உலகிற்கு எடுத்துக் கூறுங்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதென்று சொன்னவர்களின் முகத்தில் ஓங்கி அறையுங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் அண்ணன் உருத்திரகுமாருக்கு கைகொடுங்கள். அவரது உன்னதமான பணி எழுச்சிகொள்ள வழிசெய்யுங்கள். நாங்கள் பிரிந்து நிற்பது இனியும் வேண்டாம். புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வடிவம் கொடுப்போம். எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவன் நேரடியாக வராவிட்டாலும் அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம். சிந்திப்போம்...விரைந்து செயற்படுவோம்..நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதன் மூலம் தனிநாட்டுக்கு சிறந்த அத்திபாரத்தை இடுவோம்.
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
எண்ணெய்த் தோண்டும் இயந்திரம் தீப்பிடித்ததால் பதற்றம்
மெக்சிகோ நாட்டின் ஹொரிசன் பகுதியிலுள்ள லூசியானா கடலில் எண்ணெய்த் தோண்டும் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. மேற்படி எண்ணெய்த் தோண்டும் பணியில் சுமார் 130 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 8.51 மணியளவில் எண்ணெய்த் தோண்டும் 'ரிக்' இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 115 பேர் 17 ஹெலிகொப்டர்கள் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எரிந்து கொண்டிருந்த இயந்திரம் கடலில் விழுந்து மூழ்கியது. மீட்கப்பட்டவர்கள் போக மீதமிருந்த 11 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் படகுகள் மூலம் அவர்களித் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்
பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளிலில் இருந்தும் யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது சிறிதாக விடுதலை பெற்று வருவதாக Inter Press Service – IPS தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் பெண்களில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான இவ்வூடகத்தின் செய்தியாளர் Feizal Samath மனித உரிமைகளுக்கான இல்லத்தின் (Home for Human Rights) பணிப்பாளரான Shereen Xavier ஐச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதற்காக நடாத்தப்பட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்திருந்தாலும், பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என காலாதி காலமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைக் கடந்து யாழ்ப்பாணப் பெண்கள் தமக்கான புதிய வாய்ப்புக்களையும், வழிகளையும் தேடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என Shereen Xavier கூறியதாக இச்செய்திக் கட்டுரை தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். இதனைவிட, தமக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட துன்பங்கள் காரணமாகவும் யாழ்ப்பாணப் பெண்கள் சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடந்து தமக்கான புதிய வாய்ப்புக்களைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்கியுள்ளனர். சிறிலங்காப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற வேளையில் யாழ் குடாநாட்டிலும், ஏனைய பிரசேங்களிலும் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டியிருந்ததாக Shereen Xavier தெரிவிக்கின்றார். ‘தமது கணவன்மார் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், குடும்பத்திற்குத் தேவையான வெளி வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் சூழல் காரணமாக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போர் இடம்பெற்ற காலங்களில் சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையினரால் ஆண்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதால், பல ஆண்கள் விடுதலை இயங்கங்களோடு இணைந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இக்காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைக் கையாண்டார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் கீழ்வருமாறு விபரிக்கிறார்கள். ‘இவர்களிடம் இரட்டைச் சுமை. குடும்பத்தினை நிர்வகிப்பதோடு, குடும்பம் தொடர்பான தேவையான முடிவுகளைகளையும் எடுக்க வேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே பெரும்பாலான பெண்கள் காலம் காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள்.’ இந்நிலையில், யாழ்ப்பாணப் பெண்கள் புதிய வாய்ப்புக்களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தவர்களின் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய விடயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுத்து வருகின்றார்கள். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்து, இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், பெண்கள் கூட தம்முடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கே உரிய வெட்கம் போன்ற இயல்புகளைக் கொண்ட கிராமத்துப் பெண்களை இலட்சியத்துக்காக ஆயுதங்களை ஏந்த வைத்து ஜீன்சுடனும், சேர்ட்டுடனும் இயங்கும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டியிருந்தார்கள். ‘சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளைப் ஒதுக்கிவிட்டு பெண் விடுதலை என்ற இலட்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடாத்தப்படும் நாளுக்காக காத்திருந்தார்கள். இப்பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் வழங்கினார்கள்’ என Shereen Xavier கூறுகின்றார். கணவருடன் இருந்தாலும் பால் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை தொடர்பில் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் தங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்ட வேளையில் அவரது பாரியாரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததாக Shereen Xavier குறிப்பிடுவதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளது
அகதியின் ஆதங்கம்!
அடிமைகள் அல்ல
அகதிகள் !
ஒன்று தெரியுமா ?
நேற்றைய அதிபதிகள்,
இங்கு அகதிகள்!
உங்கள் நாட்டிற்கு வந்தது
அதிகாரத்தில் பங்கு
கேட்டு வரவில்லை.
உங்கள் அன்பான உறவுகளை
கேட்டு வந்திருக்கிறோம்.இன்றைய நிலைக்கொண்டு ,
எங்க ஏழ்மையை கண்டு ,
எங்கள் வாழ்க்கையை
ஏலம் போடாதிர்கள்!
சோற்றுக்கு கையேந்தும்
பிறவிகள் அல்ல நாங்கள்,
எங்கள் சோகத்திருக்கு
வரலாறு உண்டு .
விடியலை நோக்கும்
விடுதலைக் கதிர்கள்.
எங்களுக்காக எங்களையே
இழப்பத்ருக்கு தயங்காதவர்கள்.
எங்கள் இறப்புக்கூட
மற்றவர்களை காயம்படுத்தக் கூடாது
என்ற எண்ணம் கொண்டவர்கள்.
எங்கள் எண்ணம் எதிரியை நோக்கி,
தவிர அப்பாவி மக்களை அல்ல.
நாங்கள் தீவிரவாதி இல்லை!
பழமைவாதி அல்ல!
சீர்திருத்தவாதியும் அல்ல!
விடியலை நோக்கி
மண்ணுக்காக போராடும்
விடுதலைவாதி!
புத்திஜீவி பிள்ளையான் தமிழ் மக்களுக்கான அறிவுரை ........!
வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. பிள்ளையானின் பிள்ளைத்தனமான கருத்தைக் கேட்கும் போது அவர் மீது அனுதாபம்தான் மேலிடுகின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக அணிதிரண்டு, பிரதேச வாதம் பேசியபோது கிழக்கு மக்கள் உண்மையிலேயே கருணா மற்றும் பிள்ளையான் குழுவினர் தமக்கு நல்லதொரு வழிகாட்டுவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஏனென்றால் கருணாவும் பிள்ளையானும் தமது பிரதேசத்திற்காக - பொதுமக்களுக்காகப் பாடுபடுவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் எண்ணினார்கள். அவர்கள் ஆரம்பத்தில் கூறியதுபோன்று, கிழக்கு மாகாணத்தை வளப்படுத்தத்தான் போகின்றார்கள் என உண்மையாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால் இந்த இரண்டுபேருமே, அரசாங்கத்தின் அடிவருடிகளாக மாறி, ஜனாதிபதிக்கும் அவரது குடும்ப அரசியல்வாதிகளுக்கும் வக்காளத்து வாங்கும் மலினமான அரசியல் நடத்துவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாநகரசபைக்கான தேர்தலிலும், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலிலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியும் அந்த மாகாணத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடுவது பற்றியும் இந்தப் புதிய தலைவர்கள் காட்டிய கற்பனைப் படங்களையும் கலர் கலரான எதிர்காலக் கனவுகளையும் எப்படியும் தாங்கள் அடைந்துவிடுவோம் என்ற நப்பாசை மக்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்தது. இதனால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மாநகரசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் நகர மேயர் சிவகீதா பிரபாகரன் பதவிக்கு வந்ததும், தேர்தல் காலத்தில் வாக்களித்ததைப் போன்று, நகரத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டவில்லை. ஏதோ அரசாங்க ஊழியரைப்போன்று அரசாங்கம் சொல்லியதைச் செய்து கொண்டு. ஜனாதிபதிக்கு நல்லபிள்ளையாக வலம் வந்தார். திடீரென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவர் இணைந்தார். பின்னர் அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். பிள்ளையானும் கருணாவும் சுயநல அரசியல் செயற்பாடு காரணமாக ஓரணியில் இருந்தும் வாக்குவாதப்பட்டார்கள். மோதிக்கொண்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை உலகத்தின் முதல்தரமான பயங்கரவாதம் என படம் காட்டி அதனை அனைத்துலக சக்திகளின் உதவியோடு ஒழித்துக் கட்டுவதில் வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தங்களில் யார் அதிக விசுவாசமிக்கவர் என்பதைக் காட்டுவதற்காகப் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்கள். இதனால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. மக்கள் என்ன நினைப்பார்கள் - என்ன நினைக்கின்றார்கள் என்பதை நாடிப்பிடித்துப் பார்த்துச் செயற்படத் தவறிப் போனார்கள். தாங்கள் சொல்வதே வேதவாக்கு. அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்ற மனப்பாங்கில் செயற்பட்டதன் விளைவையே நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் அவர்கள் அறுவடையாகப் பெற்றுள்ளார்கள். கிழக்கு மாகாண மக்களின் தலைவர்களாகத் தோற்றம் பெற்ற கருணாவும், பிள்ளையானும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கத்தக்க வகையில் என்ன செய்திருக்கின்றார்கள், எந்த அளவிற்கு சேவையாற்றியிருக்கின்றார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. கிழக்கு மாகாண மக்களின் மனங்களை எந்த அளவிற்கு இவர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பதையும் இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்றாலும் மிகையாகாது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் இணைந்து முரண்படாத வகையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் எத்தனை பிரச்சினைகளை கருணாவினாலும், பிள்ளையானாலும் தீர்க்க முடிந்திருக்கின்றது என்பதை இவர்களால் கூறமுடியுமா? கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் அடையக் கூடிய இலக்குகளில் எத்தனையை பிள்ளையான் என்ற சந்திரகாந்தனால் அடைய முடிந்திருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? பொதுமக்கள் மத்தியில் இருந்து அவர்களுக்காகப் பாடுபட்டு. அவர்களில் ஒருவராக இருந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, சூழ்நிலை காரணமாக அரசியலில் புகுந்து மக்கள் மத்தியில் தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, எப்போதும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாகவும், மக்களின் நலன்களை இலக்கு வைத்துச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறுகின்றவர்கள் எவராக இருந்தாலும், மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்களாகத் திகழ முடியாது. இதுதான் நடைமுறை அரசியலாக இருந்து வருகின்றது. ஆயுதக்குழுக்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களாயினும் சரி, பாரம்பரிய அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் நடத்தியவர்களாயினும் சரி அவர்கள் தமது தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருக்க முடியாமல் மக்களினால் தூக்கி எறியப்பட்ட எத்தனையோ உதாரணங்களைக் கடந்த கால அரசியல் வரலாற்றில் கண்கூடாகக் காண முடியும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது நேற்று தற்செயலாக அரசியலுக்கு வந்த பிள்ளையான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் இல்லையென்பதை பிள்ளையான் கருணா போன்றவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் எந்தவிதமான முரண்பாடுகளுமின்றி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் எமது முன்னோர்களான அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் விரும்பினார்கள். அதற்காகத் தம்மாலியன்ற விட்டுக்கொடுப்புகளைச் செய்து எத்தனையோ வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது அரசியல் அனுபவத்தின் மூலம் சிங்களப் பேரினவாதத்தின் மோசமான வஞ்சகம் நிறைந்த பிற்போக்குத் தனமான அரசியல் செயற்பாடுகளையே கண்டார்களே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்றத்தை ஆக்கபூர்வமாகக் காணவே முடியவில்லை. தந்தை செல்வா முதல், அமரர் அமிர்தலிங்கத்திலிருந்து அனைத்து மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்களினதும் அரசியல் அனுபவம் இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் தான் ஆயுதப் போராட்ட வழிமூலம் இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என தமிழ் இளைஞர்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்து செயற்பட்டார்கள். அவர்களின் அளப்பரிய தியாகங்களை கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்து சரணாகதி அரசியலில் இறங்கியிருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அடையப்போவது எதுவுமே இல்லை என்பதை அவர்கள் இதுகால வரையில் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேசத்தைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து, தமிழ் மக்களின் கலை கலாசாரம், பொருளாதார நிலைமைகளைத் தவிடு பொடியாக்கி அவர்களைக் கையேந்தி நிற்கின்ற ஒரு நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, உறுதியாகவும் இராஜதந்திர ரீதியிலும் சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இந்தப் பேரினவாத அரசியல் போக்கைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரிந்து கொள்ளாதவர்களைப் போல செயற்படுகின்ற கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தலைவர்களாக இருக்க முடியாது. இதனைத் தமது வாக்களிப்பின் மூலம் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். எதிர்ப்பு அரசியல், இணக்கப்பாட்டு அரசியல், சரணாகதி அரசியல் என்ற மூன்று விதமான அரசியல் சாணக்கியச் செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்டு வந்துள்ள அரசியல் சூழ்நிலைகள் - அரசியல் சூறாவளிகளில் வடக்கு கிழக்கு மக்கள் சிக்கி இன்ப துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். இந்த அரசியல் போக்குகளில் அவர்கள் அளப்பரிய அனுபவங்களை அடைந்துள்ளார்கள். சொல்லொணாத துயரங்களையும், சோகங்களையும், அவமானங்களையும், அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சரியான தலைவர்களை அடையாளம் காண்பதில் அவர்கள் பல்வேறு சிரமங்களையும், சங்கடங்களையும் சந்தித்து வருகின்றார்கள். இதன் மூலம் பழுத்த அனுபவசாலிகளாக அவர்கள் மாறியிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் தமது முன்னால் வருகின்ற கோமாளிகள், வஞ்சகர்கள், தில்லுமுல்லு நிறைந்தவர்கள், நேர்மையானவர்கள், கபடம் நிறைந்தவர்கள், அமைதியான ஆதரவான தோற்றம் கொண்ட அரசியல் சாணக்கியம் நிறைந்த சண்டியர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மக்கள் அனைவருமே இத்தகைய தேர்தல் சந்தர்ப்பங்களில் சிலர் தெளிவானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும் இருந்து தமது வாக்குகளை அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அண்மைக்கால தேர்தல்களின் வாக்களிப்பு வீதத்தைப் பார்த்தால், இவர்களில் பலர் இந்த நாட்டின் அரசியல் போக்குகளில் மனம் கசந்து சலிப்புற்று அக்கறையற்றவர்களாக மாறி தமது அதி உன்னத வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்தவர்களாக இருப்பதை மிக மிகத் தெளிவாகக் காண முடியும். மொத்தமாகச் சொல்லப்போனால், வடக்கு கிழக்கு மக்கள் சிங்களப் பேரினவாதிகளினாலும், அவர்களது அடிவருடிகளின் ஊடாகவும் திட்டமிட்ட வஞ்சகமான அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். இதுதான் யதார்த்தம். வடக்கு கிழக்கு மக்கள் அடைய முடியாதவற்றைக் கேட்கவில்லை. அடைய முடியாதவற்றை இலக்காக வைத்துக் கொண்டு ஆசைப்படவும் இல்லை. சுதந்திரமாக, கௌரவத்தோடு, கண்ணியமாகத் தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமது நிர்வாகக் கடமைகளைத் தாங்களே செய்து வாழ வேண்டும் என்பதைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இது சாத்தியப்படமாட்டாது என்று எவரும் கூறமுடியாது. இது அடைய முடியாத இலக்கு அல்ல என்று எவரும் கூறமுடியாது. இவ்வாறான ஒரு நிலைமைக்கு வடக்கு கிழக்கு மக்கள் ஆசைப்படக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் அருகதையும் கிடையாது. எனவே வடக்கு கிழக்கு மக்களைப் பார்த்து, “நீங்கள் விழிப்படையவில்லை. அடைய முடியாத இலக்குகளுக்கு ஆசைப்படுகின்றீர்கள்” என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுவது சிறுபிள்ளைத் தனமாதே தவிர வேறொன்றுமில்லை.
இலங்கையர்களை அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றிச் சென்ற படகு மலேசியாவில் கைது
இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாட்டில் ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75 ஈழத்தமிழர்கள் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வருகின்ற போதிலும், தாங்கள் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்பதால் தரையிறங்க மறுத்த ஈழத்தமிழர்கள் தங்களை ஏதிலிகளாக ஏற்று கொள்ளக்கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு மலேசிய பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் நம் உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.
கப்பம், கடத்தலுடன் தொடர்பு; மானிப்பாயில் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரி கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் பொலிஸாரால் நேற்று விடுவிக்கப்பட்டதுடன், கடத்தலுடன் தொடர்புடையவ ர்களென சந்தேகிக்கப்படும் மூவர் மானிப்பாய் பொலி ஸாரினால் கைது செய்யப்பட் டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
யாழ். மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துனர் ஒருவரும் கடந்த 20ஆம் திகதி இனந்தெரியாத கும்பலொன்றி னால் கப்பம் கோரி கடத் தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுப்பிரமணியம் மகேந்திரன் மற்றும் டி. மகேஸ்வரன் ஆகியோரை விடுவிப்பதாயின் 50 இலட்சம் ரூபா பணம் அல்லது 25 பவுண் நகையுடன் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக தர வேண்டுமெனவும் அக்கும்பல் கேட்டுள்ளது.
குடும்பத்தார் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் தீட்டிய திட்டத்தின் படி கப்பம் வழங்குவது போல சென்று சந்தேகநபர்கள் மூவ ரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
எங்கே? போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்
தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறையில் சிக்கி அழிந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் மறுபிறவி எடுக்கவைத்து தமிழர்களை தரணியெங்கும் தலை நிமிரவைத்த தமிழ் இனத்தின் தேசியத் தாய்க்கு,தமிழக இந்திய அரசுகளால் இழைக்கப்பட்ட இந்த வக்கிரமான கொடுமையை கண்டிக்கத்தவறியது ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுடைய பொறுப்பில் இருந்துகொண்டு இந்தியத் தூதரகங்கள் முன் இதற்க்கான எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியது ஏன்? இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்கூட இவர்கள் எதிர்ப்புக்களைக் காட்டி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கத் தவறியதன் காரணம் என்ன? சரி திருகோணமலையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூட இந்திய மத்திய அரசிற்கோ தமிழ் நாட்டு அரசிற்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன் தமிழீழத் தேசியத் தாய்க்கு நடந்த கொடுமைக்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத நீங்கள் தமிழ் இனத்தின் ஏகப்பிரதிநிதிகளா நீங்கள் தமிழ் இனத்தின் தலைமைகளா? இவற்றுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டப்போகிறீர்களா? அல்லது இதுவும் இராஜதந்திரம் என்று எம் இனத்தின் காதுகளில் சந்தணம் பூசப் போகிறீர்களா? இந்த ஏகப்பிரதிநிதிகள் சொல்வதை கேட்பவர்கள் கேனயனாக இருந்தால் சம்பந்தரின் தலையில் சண் தொலைக்காட்சி தெரியுமாம், கிணத்துத் தவளைபோல பதவி மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு சிங்கள இனவெறி அரசையும் இந்தியப் பாதக அரசையும் இராஜதந்திரமான முறையில் அணுகுவதாகக் கூறி எம் மக்களை ஏமாற்றிக்கொண்டு, இனவெறி பிடித்த அரசுகளிடம் அடிபணிந்து தன்மானத்தை விற்று, இதுவரை காலமும் எந்த உரிமைகளுக்காக, எமது சந்ததி அகிம்சை வழியிலும் ஆயுதம் ஏந்தியும் உயிராயுதங்களாகவும் களத்திலே போராடி வெடியாக வெடித்துக் களப்பலியாகி, எம் தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனார்களோ! அந்த வித்துக்களை பிடுங்கி எறிந்து, அந்த மான மாவீரர்களின் இலட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்து, அவர்களின் தாயகக் கனவுகளையெல்லாம் கலைத்து, தாய்மண்ணின்காவல்த் தெய்வங்களுக்கும், எம்தேசியத்தலைமைக்கும்,ஏன்ஒட்டுமொத்த தமிழ் இனத்திர்க்குமே நம்பிக்கைத் துரோகம் செய்து, தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட இவர்களா? தமிழர்களின் ஏகப்பிரதி நிதிகள்! இவர்கள்தான் தமிழினத்தின் உரிமைகளை வென்று தரப்போகிறவர்களா? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக சிந்தித்து செயற்பட்ட தவறிய இவர்கள் கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பணத்திற்காக கொடுத்த வாக்குறுதிகள் காரணமாக தற்போது சுயமாக எந்த முடிவுகளும் எடுக்க இயலாத இவர்கள்! இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறார்கள்? சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர,சம்மந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பத்திரிகை அறிக்கையும்,வானொலிக்கு வழங்கிய பேட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளது அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து? பி,பி,சீ,தமிழ் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில,இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கி எமக்கு வாக்களித்துள்ளனர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற இனி வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட விரும்புகிறோம்! இரா சம்மந்தரின் பத்திரிக்கை அறிக்கை? தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருக்கிறது,பிளவு படாத இலங்கைக்குள்,(தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட)தமிழ் மக்களுக்கென ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும்,அவ்வாறான செயற்ப்பாடு தமிழ் மக்களின் நலனை மட்டுமல்ல முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும் என்று திருமலையில் நடந்த மாநாட்டின் பின்னர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார், இந்த அறிக்கைகளில் இருந்து ஒவ்வெரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியது, இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்ப்பாடுகளில் எமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கும், இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உரிமைகளை விற்று விற்றுப் பிழைப்பு நடத்தப் பிறப்பெடுத்தவர்கள் , இவர்கள் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், வன்னி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வாழுகின்ற எம் மக்களின் மீள் குடியேற்றத்தை காரணம் காட்டி, அவர்களுக்கு உதயுவதற்கு என்ற போர்வையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து பெருமளவான பணத்தினைப் பெற்று, அந்தப்பணத்தில் கூட்டமைப்பின் முக்கியமானவர்கள் ஒருசிலர் ஏப்பம் விடத் துணிந்துவிட்டனர் அவர்களை இனம்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்! தமிழன் என்று சொல்லடா தலைவன் வழி நில்லடா தன்மானமுள்ள தமிழனாக வாழடா! இன்று தமிழர் பிரதேசம் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்களின் சுதந்திரமான நிம்மதியான சுயகவுரவத்துடன் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும் என்ற இலச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி அந்த மண்ணிலே மக்களுக்காக செத்து மடிந்து வித்தாகிப்போன மாவீரர்களின், வீரமறவர்களின் துயிலும் இல்லங்கள் நினைவுச் சின்னங்கள் தூபிகள் அனைத்தும் சிங்கள இனவெறி காடையர்களால் அடித்து உடைத்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்க அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களும் அரசியல்த் தலைவர்களும் தமக்கும் அந்தக் கல்லறைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போன்று வாய்பொத்தி கண்மூடி கைகட்டி சூடுசொரணை அற்ற தன்மானமற்ற நன்றிமறந்த மானங்கெட்ட சுயநல வாழ்வில் என்னசந்தோசம் காண்கிறார்களோ தெரியவில்லை தமிழன் தமிழனாக மட்டும் வாழ வேண்டும் பச்சோந்திகளாக அல்ல !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









