வியாழன், 30 டிசம்பர், 2010

தம்பி பசிலின் வேண்டுதலை அண்ணா மஹிந்த புறக்கணித்தார்.

வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்‌ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார்.பசில் இராஜபக்‌ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்‌ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே  டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் கொல்லப்பட்டவர் ஈழத்தமிழர் (படம்)

அமெரிக்காவில்  பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்  ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ர இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை  சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிர் பிரிந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்

புதன், 29 டிசம்பர், 2010

கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கனகம் புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
 

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி , சங்கானை, சித்தன்கேணி , தொட்டிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே,வழங்கி வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே, நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். சர்ச்சைக்குரியவகையினில் நடந்து முடிந்த, தேசிய அனர்த்த தினத்தினில் முன்னதாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தினைப் பாட தாம் முடிவெடுத்திருந்ததாக தமிழ் அதிகாரியொருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சிங்கள மொழியில் ஆரம்பித்து அடுத்த வரிகளை தமிழென மாறிமாறி பாடவே மாணவர்கள் பயிற்றப்பட்டிருந்தனர். 

யாழ்.குடாநாட்டில் மீண்டும் குருதியுறையும் “பயப்பீதி’ நோய்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் குருதி உறைந்து போகும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. வன்னி யுத்தத்திற்குப் பின்னர் புறவய அமைதி காணப்பட்ட போதிலும் அப் புறவய அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.மீண்டும் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த ஆரம்பம் சங்கானையில் அந்தணச் சிவாச்சாரியரை பலியடுத்தும் அவரின் இரண்டு புதல்வர்களைக் காயப்படுத்தியும் தனது தாண்டவத்தின் ஒத்திகையைக் காட்டி நின்றது.

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய உறுப்பினரும் கைதியுமான சதீஸ் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதப்புர சிறைச்சாலைக்கு மாற்றியதை கண்டித்து வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா இராணுவத்தினர் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மன்னார், வவுனியா, மதவாச்சி பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடச் சென்ற உறவினர்களையும் அனுமதிக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது

தமிழ் இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

பொறியிலாளரான வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 25 வயதுடைய அமரசிங்கம் சுஜன் என்பவராவர்.ஒரு வருடத்திற்கு முன்னர் புலமைபரிசில் பெற்று அங்கு சென்றிருந்த இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவு கொள்ளையர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பெற்றோர் தெரிவித்தார். மேற்படி இளைஞரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள், 27 டிசம்பர், 2010

என் முதல் புகைப்படத்தை அமைதியாய் பார்ப்பவர்களே....

எட்டு மாதம் எனக்கு
உயிர் இருப்பதை உணரும்
வயதில்லை..
தாயென்னும் உயிருக்குள் உறங்கும்
வயது...
தாய் சாப்பிட்ட உணவு செரிக்கும்
சத்தம் மட்டுமே தெரியுமெனக்கு..
என் செவி வலிக்குமோ என அஞ்சி
என் தாய்,
திரவமாய் குடித்ததும் தெரியுமெனக்கு..
திடீரென வெடிச்சத்தம்...
கருவறை திரைகளுடன் சேர்ந்து
முழுதாய் வளராத
என் செவிப்பறைகளும் கிழிந்தன....

தாயின் உடலில் இருந்து
குழந்தையின் தலைதானே வெளிவரும்!!??
எனக்கு என் முழு உடலும் வந்தது..விழுந்தது...
பிய்ந்து பிய்ந்து..
நைந்து நைந்து..
அதிகமாய் குங்குமப்பூ தின்றாயோ தாயே?
நான் சிவப்பாய்..
நீயோ அதைவிட சிவப்பாய்..
உனக்குப் பிரசவம் பார்த்தது வெடிகுண்டல்லவா?

யாழில் தொடரும் துப்பாக்கிக் கலாச்சாரம் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் பலிவாங்கியது _

யாழ். வலிகாமத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55)  இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்குக் கொள்ளையிட வந்த ஆயுததாரிகள் தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற நான்காவது தப்பாக்கிப் பிரயோகம் இதுவாகும்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்

இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உட்பட 7 பேர் கொண்ட தூதுக்குழுவினர்  இலங்கை வந்தடைந்துள்ளனர். இக் குழுவினர் இலங்கை அதிகாரியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை வந்த அவர் பாதுகாப்புச் சம்பந்தமாக பல்வேறுபட்ட அதிகாரியுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபடவுள்ளார்.

புலிகளின் தொழில்நுட்பத்துடன் கடற்படைத்தாக்குதல் படகுகள் - வெளிநாட்டுச் சந்தையில் கிராக்கி

இறுதிக் கட்ட போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்துபோன இன்னொரு விடயம்தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள்  என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.

விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைதாகின்றனர்

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப் பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்று காரணம் கூறப்பட்டாலும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

சனி, 25 டிசம்பர், 2010

தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை: டக்ளஸ்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார். அந்த வகையில்  யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

ஓ! இறைமகனே! யேசு பாலகா!

ஓ! இறைமகனே! யேசு பாலகா! எங்கள் மண்ணில் நடப்பவற்றை ஒரு கணம் பார்! சிலுவையில் அறையப்பட்ட போது உன் திருவுடலில் இருந்து உதிர்ந்த குருதியை விட அதிக குருதியை எங்களுக்காக சொரிவாய். அந்தளவிற்கு துயரம் அதிகமாக இருக்கும். பாதை தெரியாமல், இருளில் வாழ்ந்த மானிடத்தை வழிப் படுத்த அவதரித்த யேசு பாலகா! எங்கள் மண்ணிலும் உன் பிறப்பு நடக்கட்டும்.உன் பிறப்பால் எங்கள் பாவம் ஒழி யட்டும்.நீதி பிறக்கட்டும்.நியாயம் மலரட்டும்.மோசமான அரசியல் ,அதற்காகத் துதிபாடும் நிர்வாகக் கலாசாரங்கள் அத்தனைக்கும் முடிபு கிடைக்கட்டும்.பாலகனே உன் இரண்டாவது பிறப்பு எல்லாம் இழந்த தமிழ் மக்களின் மண்ணில் நடக்கட்டும். ஆமேன்

மானிப்பாயில் யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம்

யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்றினை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அந்த அமைப்பிற்கான இணைப்பாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் தெரிவித்திருக்கின்றார். யுத்த சூழ்நிலையினால் இந்தச் சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்துள்ள குறித்த நபர், சுமார் 100 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பத்தில் இயங்கிய இந்தச் சங்கத்தின் ஊடாக பௌத்த தர்மத்தை போதிக்கும் பாடசாலையொன்றை மானிப்பாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது