ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சிறிலங்காவின் ஜனாதிபதித்தேர்தலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முற்றான முடிவுகளும்

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பல தில்லுமுல்லுகளுக்கும் மோசடிகளுக்கும் மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842,749 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி மீண்டும் மகிந்த இராஜபக்சவே ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தும்விட்டார். இதன் ஊடாக தமிழ் மக்களை கொன்று குவித்த முதன்மையான போர் நாயகன் மகிந்தவே என அழுத்தம் திருத்தமாக சிங்களவர்கள் தீர்ப்புக்கூறி அவருக்கு முடி சூட்டியுள்ளனர். நாடளாவிய ரீதியில் கணிசமான அளவு வாக்குப்பதிவுகள் இடம் பெற்றிருந்தும் கூட இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்திருந்ததாக வெளியாகியிருந்த தகவல்கள் கூறின.இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சிங்களதேசத்துக்கான ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தமிழீழ தேசத்து மக்கள் ஆர்வம் காட்டவில்லையென்பதும், இதனால் தமக்கு எவ்வித நன்மையும் வந்து சேரப்போவதில்லை எனவும் அவர்கள் கருதியது, இரண்டு, இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி அதர்மமானமுறையில் யுத்தத்தில் வழிநின்று கொன்று குவித்ததுடன் தங்களினதும் தங்கள் உறவுகளினதும் சொத்துகளுக்கும் உடமைகளுக்கும் பெரும் அழிவினைச்செய்தவர்கள் என எண்ணியதும், இவ்விருவரும் இனவாதத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என கருதியதுமாகும். எனினும்,தமிழர் தாயகப்பகுதியான வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கமைய கணிசமான மக்கள் ஆட்சிமாற்றம் ஒன்றினை மட்டும் நோக்காகக்கொண்டு வாக்களிக்க முடிவெடுத்திருந்தனர். ஏனெனில், இதற்கு சில புறநிலைக்காரணிகளும் இருந்தன. எனினும், அரசினதும் அதன் அடிவருடிகளினதும் அடாவடித்தனமான செயல்களாலும், சதிகளாலும், அச்சுறுத்தல்களாலும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தார்கள் என வெளிவந்த செய்திகள் அனைத்தும் எடுத்துக்காட்டியிருந்தன. இதற்காக வடக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலுள்ள தேசத்துரோகக்கும்பலையும் இன்னும் சில உதிரி ஒட்டுண்ணிகளையும் அரசு பயன்படுத்தியது. இதே போன்று கிழக்கில் தமிழ் பகுதிகளில் கருணா, பிள்ளையான் போன்ற எட்டப்பர்களையும் முஸ்லீம் பகுதிகளில் அதாவுல்லா போன்ற பதவிசுகத்தை மையமாக வைத்து சிங்களத்துக்காக எதையும் செய்ய துணிகின்ற காடையர்களையும் அரசு தீவிரமாக ஈடுபடுத்தியிருந்தது. வடக்கில் எட்டப்பன் டக்ளஸ் முதலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும் ஆசை வலை வீச்சுக்களையும் அள்ளி அள்ளிவீசினார். பின்னர் தன் எஜமானர்களை எப்படியும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றினால்தான் தொடர்ந்து பிழைப்பை நடத்த முடியும் என்பதற்காக கபடத்தனமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டி மக்களை திசைதிருப்ப முயன்றார். அதிலும் திருப்தி கொள்ளாத அந்த கோடாலிக்காம்பு வாக்களிப்பு நாளில் தன் கூலிகளை ஏவி பெற்றோல் குண்டுகளை வீசியும், கைக்குண்டுகளை வெடிக்கவைத்தும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதவாறு அச்சுறுத்தி மிக மோசமான ஜனநாயக மீறலையும் செய்தார். இதே போன்றே கிழக்கிலும் மேற்சொன்ன கருணா பிள்ளையான் அதாவுல்லா போன்ற எச்சிலைப்பொறுக்கிகளை வைத்து மகிந்த சகோதரர்கள் தமது அடாவடித்தனமான ஜனநாயக விரோதச்செயற்பாடுகளை தேர்தல் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து நடாத்தி வந்தனர். இதற்கமைய, தமிழ்ப்பகுதிகளில் கருணாவும் பிள்ளையானும் தமது அதி உத்தம சிங்கள எஜமானர்களுக்காக போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் கைவரிசையக்காட்டி மக்களை சொல்லொணா வகையில் துன்பப்படுத்தினர். தமிழினத்தின் கிழக்கிற்கான முதன்மையான இவ்விரு துரோகிகளும் ஆளாளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு தேர்தல் பிரச்சார காலங்களில் பலவந்தமாக மக்களை பிடித்து வந்து தமது எஜமானர்கள் கண் முன் கூட்டங்களை நிரப்பி பொய்யான வாக்குறுதிகளையும் வெற்று வாய்ஞாலங்களையும் அள்ளி அள்ளி வீசி எறிந்தனர். அத்தோடு அந்த வீணர்கள் சிங்கள இராணுவ பலத்தின் கால்ச்செருப்பாக தேய்ந்து கொண்டு ஒவ்வொரு தமிழ் மக்கள் வீடுகளுக்கும் படியேறிச் சென்று தமிழ் மக்களை வயது பால் வேறுபாடின்றி கொத்துக்கொத்தாக அழித்தவனுகாக தமது இழிவான வல்லமைகளின் மூலம் வாக்குத்தேடினர். அது மட்டுமின்றி தமிழ் இனத்தின் அக் கழிவுகள் வாக்குச்சாவடி வாசல்களிலும் போய் நின்று கொண்டு மக்களைப்பயமுறுத்தி அவர்கள் சுயமாக வாக்களிக்கமுடியாதவாறு தடுத்து குழப்பங்களை ஏற்படுத்தியதுடன் தமது எஜமானான அதிமேன்மை தங்கிய மகிந்தவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று கைகாட்டி கட்டளையிட்டும் கட்டாயப்படுத்தியுமிருந்தனர் இந்த புத்திபேதலித்தவர்கள். இது இவ்வாறிருக்க, மகிந்த சகோதரர்களின் கிழக்கு முஸ்லீம் பகுதிகளுக்கான முகவர்களில் ஒருவனான சிங்கள அடிவருடியும் ரவுடி அமைச்சருமான அதாவுல்லா தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே குரோதத்தையும் பகைமையையும் தூண்டி தனது மானசீக தலைவன் மகிந்தவிற்காக வாக்கு வேட்டையில் மிகத்தீவிரமாக இறங்கியிருந்தார். அந்தச்சமயம் காத்தான்குடி பிரதேசத்தில் வாக்குக்கேட்டுச்சென்ற அதாவுல்லாவை அப்பிரதேசமக்கள் கல்லால் அடித்துத்துரத்தியுள்ளனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்டு ஒத்த கொள்கையுடன் ஒரே குறிக்கோளுக்காக தேர்தலை சந்தித்தவேளை இதனை விமர்சனம் செய்து தனது நயவஞ்சக நஞ்சு விதைக்கொள்கையான தமிழ் முஸ்லீம் இனவாதத்தைத்தூண்டி சகல முஸ்லீம் மக்களிடமும் மிகக்கேவலமான முறையில் வாக்குப்பிச்சை கேட்டு அலைந்துதிரிந்தார். அத்துடன், இவரும் தனது வழமையான அடாவடி அரசியல் தனங்களையும் அட்டூழியங்களையும் முஸ்லீம் மக்கள் மீதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் மீதும் ஏவி அநியாயங்களைப்புரிந்திருந்தார். எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த தேர்தல் மூலம் சிறிலங்காதேசத்தின் ஜனநாயக விரோதப் போக்கு கொண்ட இந்த பயங்கரவாதக்கூட்டணி தமிழர் தாயகத்தில் மூக்குடைபட்டு தங்கள் முகத்தில் கரியைப்பூசிக்கொண்டு நிற்பதை அனைவரும் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.அதாவது, பெரும்பான்மையில் இத் தேர்தலை நிராகரித்துள்ள தமிழ் மக்கள் தங்களை எந்தவிதமான அழுத்தங்களை பிரயோகித்தும் எந்தவகையிலுமான பயங்கரவாதங்களைத்திணித்தும் தமது உணர்வையும் எண்ணப்பாட்டையும் மாற்ற முடியாது என்பதனையும் கட்டுப்படுத்த இயலாது என்பதனையும் அடித்துச்சொல்லியுள்ளார்கள். அதே நேரம் சில புற நிலைக்காரணிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுதலின் பேரில் மாற்றம் ஒன்றிணை மட்டும் நோக்காகக்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பினையும் சில மக்கள் கருத்தில் எடுத்து தமது ஆதரவையும் வழங்கியிருக்கின்றார்கள். அது, சுதந்திர தமிழீழம் நோக்கிய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதலில் அவர்கள் பயணிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் எண்ண ஓட்டத்துக்கும் நாட்டத்துக்கும் கிடைத்த ஆதரவேயன்றி வேறொன்றுமில்லை என்பதை அனைவரும் மனதில் நிறுத்துதல் வேண்டும். ஆகவே,சிறிலங்காவின் 2010 அரசதலைவர் தேர்தலைப்பொறுத்தவரை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மனநிலை என்னவென்பதை தமிழ் மக்களால் மீண்டுமொருமுறை இந்த உலகுக்கும் இதுவரை உணராத எல்லோருக்கும் அறுதியிட்டுச்சொல்லப்பட்டுள்ளது. அதாவது, சிறிலங்கா அரசு எந்த இராணுவப்பல கொடுமைகள் மூலமும் எவ்வகையான அடக்குமுறைகள் அநியாயங்கள் ஊடாகவும் தங்கள் எண்ணங்களையும் தங்கள் எதிர்பார்ப்புக்களையும் தங்கள் மேல் திணிக்கமுடியாது என்பதையும், ஒட்டுக்குழுக்களினது எட்டப்பர்களினதும் பசப்பு வார்த்தைகள் தம்மிடம் ஒருபோதும் எடுபடாது என்பதையும், சோரத்தில் கருவான அந்த இழிபிறவிகள் தமிழ்மக்கள் மேல் செலுத்தும் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதையும் இத் தேர்தல் மூலம் மிக ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.மொத்தத்தில், எமது மக்கள் நீங்கள் வேறு நாடய்யா நாங்கள் வேறு நாடய்யா என்பதை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர்.

வியாழன், 7 ஜனவரி, 2010

மகிந்தவின் சாதனையும் எட்டப்பர்களின் வேண்டுகோளும் தமிழர்களின் கேள்வியும்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட முழுநிலப்பரப்பையும், மன்னார் வவுனியா யாழ் மாவட்ட பகுதி நிலப்பரப்புக்களையும் சுடுகாடாக்கி அங்கு வாழ்ந்த தமிழ் முஸ்லீம் மக்களை அடியோடு வேரறுத்து முள்ளிவாய்க்கால் வரை ஓட ஓட விரட்டி கொத்துக்குண்டுகளாலும் எறிகணைகளாலும் இரசாயனக்குண்டுகளாலும் விமானக்குண்டுகளாலும் ரொக்கேட் குண்டுகளாலும் பல்வகை வேட்டுக்களாலும் குண்டு மாரி பொழிந்து நாற்பத்தையாயிரத்துகும் மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை பலியெடுத்து முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் உடலுக்குள் இரும்புத் துகள்களை செலுத்தி பல நூறு பேரின் அங்கங்களை பறித்து கோடான கோடி சொத்துக்களை அழித்து மந்தைக்கூட்டத்துக்கு உள்ள சுதந்திரத்தைக் கூட வழங்காது எமது உடன் பிறப்புக்களை முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து விட்டு எமது இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த உத்தமர்கள் உறங்கும் கல்லறைகளையும் நினைவுத்தூபிகளையும் மதிக்காமல் இடித்தழித்து உலகெங்கும் கோடி கோடியாக அன்பளிப்பும் கடனும் பெற்று பெற்றதில் முப்பது வீதத்தை மக்களுக்கு பிச்சை போடுவதுபோல் போட்டுவிட்டு மிகுதி எழுபது வீதத்தை தானும் தனது எட்டப்பர் கூட்டங்களும் சூறையாடி அகதிமுகாமில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் கடன் சுமைகளை செலுத்தி மக்களின் பணத்தை சுரண்டி மக்களின் பார்வைக்காக நான்கு பாலங்களைக் கட்டி நான்கு வீதிக்கு கறுப்புத்தார் ஊற்றி நான்கு தெருவுக்கு மின் கம்பங்களை நாட்டியதுதான் மகிந்த இதுவரை செய்த சாதனையாகும்.

யுத்தத்தை யுத்தத்தின் மூலம் அழித்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை அரசியல் தீர்வு மூலம் முடிப்பதாக கூறிய மகிந்த இன்றுவரை புலிகள் ஆயுதங்களை மௌனித்து வைத்திருக்கும் நிலையிலும் எவ்வித தீர்வையும் வழங்காது தமிழ் மக்களை அடிமைகள் போல் கருதி தமிழர் தாயகத்தில் இராணுவ அதிகாரிகளை மாவட்ட அதிபர்களாகவும் மாகாண ஆளுனர்களாகவும் நியமித்து தனது பேரினவாத சுயரூபத்தை வெளிப்படுத்தியதன் ஊடாகவும் சர்வாதிகார வெறி கொண்டு தனது பதவிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் இரத்தம் குடித்த கனவான் நானே என சிங்கள மக்கள் முன் தன்னை நிலை நிறுத்த மகிந்த அமைத்த தேர்தல் களமே இப்போதைய தேர்தல் களம். பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சிறைக்கூடங்களிலும் வதை முகாம்களிலும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டு இருக்கையிலும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து ஏதிலிகளாக்கி சுதந்திரங்களைப் பறித்து நிர்க்கதியாக்கி அனைத்து தமிழ் மக்களையும் பேசா மடந்தையாக்கியுள்ள நிலையிலும் குண்டு மழை பொழிந்து காயப்படுத்திய எமது உடன் பிறப்புக்களின் பச்சைப் புண் ஆறும் முன் அவர்களின் வேதனைகளின் குரலை தனது தாண்டவத்தின் ராகமாக்கி தமிழர் செங்குருதி குடித்த மகிந்தவிற்கு வரும் தேர்தலில் வாக்குப்போட்டு தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் அவரின் ஆட்டத்துக்கு தாளம் போட்டு துணை போகப்போகின்றீர்களா?

தமிழர்களை கொல்லும் நெஞ்சத்துடன் கொச்சை தமிழ் பேசி முகம் மலர்த்தி கை குலுக்கி கட்டி அணைத்து விட்டு எமது முதுகில் குத்தும் மகிந்தவிற்கு எட்டப்பர்களின் பசப்பு வார்த்தைகளை கேட்டு வாக்குப் போடப்போகின்றீர்ளா? தமிழர்களின் தாயகத்தை மாகாண ரீதியாகப் பிரித்து தமிழர் தலையில் மிளகாய் அரைத்த அத்தனை எட்டப்பர்களையும் கொண்டு குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ராளுமன்றம் செல்லாதவர்களை வைத்து மாவட்ட ரீதியாக தமிழர் தாயகத்தை எவ்வித அதிகாரங்களுமின்றி அதிகார பலத்தால் தனது கட்டுப்பாட்டுக்குள் அடவடித்தனமாக வைத்திருக்கிறார் மகிந்தர். எடுத்துக்பாகாட்டாக, கிழக்கு மாகாண முதல் அமைச்சரான எட்டப்பன் கூட தனது மாகாணத்துக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கோ மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ சென்று சுயமாக நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலையே உள்ளது. அம்பாறயில் காமவெறியன் இனியபாரதியை வைத்தும் மட்டக்களப்பில் எட்டப்பன் கருணாவை வைத்தும் அதிகாரம் செய்யும் மகிந்த, தமிழ் மக்களின் அறிவினது மையமாக விளங்கும் யாழ் மாவட்டத்தில் பொன்னுக்கும் பொருளுக்கும் புகழாரத்துக்கும் ஆசைப்பட்டு கிடக்கும் எட்டப்பன் டக்ளஸ் தேவானந்தாவை வைத்தும் தனது தேவையை நிறைவேற்றுகின்றார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தனித்துவத்தை விலை பேசிய இத் தேசத்துரோகி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கோசமிட்டு வீணையைத்தூக்கி நாதம் இசைத்தவன் இப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வெத்திலை தட்டத்தை ஏந்தி மகிந்தவின் புத்தியில் யாழ் மாவட்டத்துக்குள் முடங்கிப் போய் கிடக்கிறான். இப்படிப்பட்ட மகிந்தவின் பிரித்தாளும் அரசியலுக்காகவா தமிழ் இனம் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் மக்களின் உயிர்களையும் முப்பத்திமூவாயிரத்துக்குமேற்பட்ட மாவீரர்களையும் கோடான கோடி சொத்துக்களையும் பல்லாயிரம் பேரின் அவயங்களையும் பல்லாயிரம் லீற்றர் செங்குருதிகளையும் வியர்வைகளையும் கண்ணீர்களையும் பறி கொடுத்தார்கள் இவ்வாறு தமிழ் தேசியத்தை பிரித்தாண்டு அடிமைப்படுத்த முகாம் அமைத்து செயற்படும் எட்டப்பர்களின் பேச்சை கேட்டு மகிந்தவிற்கு ஓட்டுப்போட்டு அடுத்த தலை முறைக்கும் சவக்குழி வெட்டப்போகின்றீர்களா?

யுத்தம் நடந்த போது வயது பால் வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த மகிந்த, யுத்தம் முடிந்து விட்டதாக அறிவித்த கடந்த ஏழு மாதத்துக்குள் வடக்கு கிழக்கு தாயகத்திலும் ஏனைய இடங்களிலும் இரண்டு டசினுக்கு மேல் எமது மக்கள் காணாமல் போயினர். பல டசின் கணக்கான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மகிந்த அங்குறாணை என்ற இடத்தில் பொலிசாரால் இரண்டு சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டவுடன் துடித்துப் பதைத்து அவர்களின் வீட்டுக்குச் நேரில் சென்று மன்னிப்புக்கேட்டு ஆறுதல் கூறிவிட்டு பல இலட்சம் ரூபா பணத்தையும் நட்ட ஈடாகக் கொடுத்தார். ஆனால், இரண்டு டசினுக்கு மேற்பட்ட தமிழர்களை கொன்ற சூத்திரதாரிகளை இன்றுவரை கண்டு பிடிக்கவில்லை அதற்கான முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை. அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவுமில்லை இப்படி எந்தவித கரிசனையும் கொள்ளாத மகிந்தவினை எட்டப்பர்களின் சொல்லையும் தேசத்துரோகிகளின் பேச்சையும் கேட்டு அரச சிம்மாசனத்தில் அமர வைக்கப் போகின்றீர்களா?

யுத்தம் நடந்த போது தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்து அவர்களின் இரத்தத்தையும் குடித்து கோர தாண்டவம் ஆடிய மகிந்த யுத்தம் முடிந்து ஏழு மாதத்துக்குள் தனது ஏவற் கூட்டத்தை வைத்து கண்டியில் வீதியோர பிள்ளையார் கோயிலை புல்டோசர் கொண்டு தகர்த்து வீதியோரத்தில் தள்ளியுள்ளான். காலி கதிரேசன் ஆலயம் சேதமாக்கப்பட்டு தெய்வ விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளது. திருமலையில் திருக்கரையம்பதி ஆலயம் சேதமக்கப்பட்டு சிவனின் தலை துண்டிக்கப்பட்டு விக்கிரகங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க யாழ் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் புத்த விகாரை அமைக்கப்படுவதுடன் மற்றும் பல இடங்களிலும் புத்த விகாரைகள் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. அன்று திருமலை மத்தியில் புத்த விகாரை அமைக்க முயன்றவர்களை தமிழ் மக்கள் தடுத்த போது இராணுவத்தை வைத்து பாதுகாப்பு வழங்கிய அரசு இன்று தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது. புத்தனுக்கு ஒரு நீதி அல்லாவுக்கும் ஜேசுவுக்கும் சிவனுக்கும் ஒரு நீதியா? இப்படிப்பட்ட புறம் போக்கு மகிந்தவிற்கா எட்டப்பர்களின் சொல்லைக் கேட்டு வாக்குப்போடப்போகின்றீர்கள்?

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்து சிங்கள பேரினவாதிகள் இன ஒடுக்கலை பற்றி வந்ததன் காரணமாக எமது தாயகத்தையும் எமது பண்பாட்டையும் எமது மொழியையும் காப்பாற்றுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக எண்ணற்ற உயிர் விலை கொடுத்தும் பல தியாகங்களை செய்தும் தமிழ் மக்களாகிய நாங்கள் போராடி வருகின்றோம் . உலக வல்லாதிக்க கரங்களை கொண்டு தமிழ் இனத்தை தோற்கடித்து விட்டோம் என்ற வேற்றி மமதையில் மூழ்கி நிற்கும் மகிந்த அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக 20/09/2009 அன்று தோணிதாண்டமடு என்ற இடத்தில் குடியிருந்த எழுபத்தியொரு தமிழ் குடும்பங்களை ஊரை விட்டே விரட்டி அடித்து நிஜாப் திட்டத்தில் அவர்களுக்கு கட்டிக்கொடுத்த வீடுகளை அவர்களை கொண்டே இடித்து காட்டுமிராண்டித்தனத்தை காட்டி அம் மக்களை ஏதிலியாக்கியுள்ளான். இந்த குடி அழிப்புக்கு பச்சை கொடி காட்டியவனும் இந்த மகிந்த இராஜபக்சதான் . இந்த கழுத்தறுப்புக்கு துணையாக நின்ற பச்சைத் துரோகிகளான எட்டப்பர்களின் பேச்சைக் கேட்டா இந்த படு பாதகனுக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்?

கடந்த 2009 மே மாத நடுப்பகுதியில் தமிழர்களின் இதயப்பகுதியான வன்னி மண்ணில் வசித்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் பிடித்து வந்து வதை முகாம்களிலும் முட் கம்பி வேலிகளுக்குள்ளும் அடைத்து விட்டு தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கென்று உலகெங்கும் கையேந்தி பிச்சையாகவும் கடனாகவும் பெற்ற கோடி கோடியான பணத்தில் இற்றைவரைக்கும் குறைந்த பட்சம் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபா வீதம் புனர்வாழ்வு அளித்திருக்க வேண்டும் ஆனால் மக்களுக்கு வழங்கப்பட்டதோ சில ஆயிரம் ரூபாக்களும் நுகர்வுப்பொருட்களும் மட்டும்தான் இந்த பாதகச் செயலுக்கும் காரணமானவன் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த இராஜபக்சதான் என்பதை மக்கள் புரிந்து நடக்க வேண்டும். தமிழ் மக்களின் இத்தனை அவலத்தின் மத்தியிலும் மேலும் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க நினைக்கும் மகிந்த இராஜபக்சவுக்கு எட்டப்பர்களின் நயவஞ்சக வார்த்தைகளைக் கேட்டு அடிமை சாசனம் எழுதப் போகின்றீர்களா?

அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஆண்டாண்டு காலமாக நாம் காத்து வந்த மானத்தையும் வீரத்தையும் விவேகத்தையும் விலை பேச எட்டப்பர்கள் முயலலாம் ஆனால், வீரமும் விவேகமும் நிறைந்த தமிழ் மக்களாகிய நாங்கள் விலை போகக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொள்வோமாக.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மானத்தமிழ் மகன்

செவ்வாய், 29 டிசம்பர், 2009

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்?

சிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பு தமது முடிவினை விரைவினில் வெளிப்படுத்தவேண்டிய நிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தின் மூலம் சாதிக்கப்போவது என்னென்னவென்பது பற்றியும் அதற்கு அவசியமான காரணங்கள் பற்றியும் அலசுகிறது இக்கட்டுரை.
ஆட்சிமாற்றம் ஏன் அவசியம் என்பதற்குப் பத்துக்காரணங்களை இக்கட்டுரை இனங்கண்டுள்ளது. முன்னர் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி முழுமையான தொகுப்பாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் அதிகமாகவே இருக்ககூடும்.
ஆட்சி மாற்றத்தின் மூலமே டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றோரிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்க சாத்தியம் உள்ளது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகளை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் விடுவதன் மூலம் தமிழர்களது இருப்பையே இலங்கைத்தீவில் இல்லாமல் செய்துவிடுவதே மகிந்த சிந்தனையின் திட்டமாகும். மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை இவர்களும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வேலைகளுக்கே துணை போய்க்கொண்டிருப்பார்கள்.
சிங்கள தேசத்தின் அரசனாக வலம் வரும் மகிந்த ராஜபக்ச, தான் சிங்கள தேசத்தின் மன்னன் என்பதை நிலைநிறுத்தவே முயற்சி செய்கிறார். சிறிலங்காவில் சிறுபான்மையினங்கள் என்ற ஒன்று இல்லையெனக் கூறும் அவர் தேசப்பற்றாளர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் இரண்டு இனங்களே இருப்பதாகக் கூறுகிறார். இப்படியான மகிந்தவை ஆட்சியில் தொடரவிட்டால் தமிழர்களுக்கு நிச்சயமான அழிவென்பதே உறுதியாகிவிடும்.
மகிந்தவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச – போர் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லும் இன்றைய நிலையிலும் – தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகளுக்கும் முழுக்காரணமாக இருந்து வருகின்றார். தற்போது தேர்தல் காரணத்திற்காக தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் குறைந்தாலும் மீண்டும் ஆட்சி அதிகாரம் உறுதியானவுடன் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் சமயத்திற்கூட தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பிரான துரைரட்ணசிங்கத்தை விடுவிக்கும் எண்ணமோ அல்லது திஸ்ஸ நாயகத்தை விடுவிக்கும் எண்ணமோ இவர்களுக்கு இல்லை.
தற்போதைய சிறிலங்கா அரசானது மேற்குலகின் எந்தக் கருத்துக்களையும் செவிமடுக்ககூடிய நிலையில் இல்லை. அண்மையில் ஜிஎஸ்பி வரிச்சலுகை விடயத்திலோ அல்லது போர்க்குற்றங்களுக்கான விசாரணை தொடர்பிலோ மேற்குலகின் கரிசனைகளைக் கேட்கின்ற நிலையில் இல்லையென்பதைக் கண்டுகொள்ளலாம். மேற்குலக அரசியலானது தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் தற்போதும் அது அக்கறையுடனே செயற்பட்டு வருகின்றது. எனவே மேற்குலகின் கரிசனைகளைச் செவிமடுக்கக்கூடிய ஓர் அரசை மாற்றீடு செய்வதே தமிழர்களுக்குப் பலமாகவிருக்கும்.
தமிழ்மக்கள் தமது முக்கிய அரசியல் உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையோ அல்லது அவர்களது கருத்தைத் தெரிவிப்பதற்கான சூழ்நிலையோ இல்லாமல் இருக்கின்றது. தமிழர்கள் தமது கருத்தை தமது தாயகத்திலிருந்து பயமின்றித் தெரிவிக்க முடியாதவிடத்து எவ்வாறு எமது பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர முடியும்? ஆட்சி மாற்றத்தின் மூலம் ஒரளவுக்காவது அதற்கான சூழ்நிலை ஏற்படுமென எதிர்பார்க்ககூடிய நிலைமையுள்ளது. அவ்வாறான இடைவெளியே தாயகத்திலுள்ளவர்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுக்கும்.
தமிழ்வேட்பாளராக நிற்கும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்த இந்தியா விரும்புகிறது. தமிழர்களது போராட்டத்தைச் சிதைப்பதில் இறுதிவரை உறுதியுடன் செயற்பட்ட இந்தியா தமிழர்களது தேசிய ஆன்மாவைச் சிதைத்து சிறிலங்காவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்களது தேசிய அரசியலைக் கரைத்துவிட முனைகிறது. தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய நிலைமை தாயகத்தில் இல்லை. அதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தாதவரை அவ்வாறான முடிவுகளை எடுப்பது சரியாக இருக்காது. சிவாஜிலிங்கத்தின் தேசிய அரசியலை இந்தியா ஏற்றுக்கொள்ளாத அதேவேளை மகிந்தவை வெற்றிபெறவைப்பதற்கு சிவாஜிலிங்கத்தைப் பயன்படுத்த விரும்புகிறது.
தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின்போது சிவாஜிலிங்கத்தைக் கண்டு மகிந்த ராஜபக்ச கண்சிமிட்டியதாக தினக்குரலின் கட்டுரையாளர் கும்பகர்ணன் தெரிவித்துள்ளார். அந்தக் கண்சிமிட்டலின் பின்னுள்ள விடயங்களை எச்சரிக்கையுடனே நோக்கவேண்டும். மகிந்தவுடன் இணக்க அரசியல் நடத்தவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் சிறிகாந்தாவும் சிவநாதன் கிசோரும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது ஏன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். சிவநாதன் கிசோர் ஒருபடி மேலேபோய் மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக ஆதரவளிக்கப் போவதாகவும் தகவல்கள் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளையே பயன்படுத்தி தமிழ்மக்களின் வாக்குகளைப் பிரிக்க மகிந்த அரசு பயன்படுத்தும் உத்திகள்தாம் இவை.
தமிழர்களுக்குப் போரின் அவலத்தைப் பரிசளித்த படைத்தலைவர் என்ற வகையில் சரத் பொன்சேகா இருந்தாலும் அவர் ஆட்சி பீடம் ஏறினாலும் அவரால் முன்னைய அரச தலைவர்கள் போல செயற்படமுடியாது. பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பைப் போன்ற நிலையில்தான் சரத் பொன்சேகாவின் பதவி நிலை இருக்கும். பாராளுமன்றத்திற்கே அதிக அதிகாரங்கள் இருக்கும். அதன் மூலம் அதிகாரமற்ற அரச தலைவராகவே சரத் பொன்சேகா இருப்பார். எதிரிகள் பலவீனமாக இருக்கும்போதே தமிழர்களது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளில் ஜேவிபி தவிர்ந்த மற்றைய கட்சிகள் இனவாதத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அல்ல. ஜேவிபியில் கூட கடும் இனவாதத்தை முன்னிறுத்திய விமல் வீரவன்ச போன்றோர் மகிந்த அரசுடன் சென்றுவிட்டார்கள்.
மகிந்த அரசானது மலையகத் தமிழ் கட்சிகளைக் கையாளும் விதத்தைப் பார்க்கவேண்டும். அமைச்சுப்பதவிகளைக் காட்டி அவர்களது அரசியல் விலை பேசப்படுகின்றது. தற்போதைய நிலையில் மலையக அரசியல் தலைமைகள் சுயமாக தமது கட்சி தீர்மானங்களை எடுக்கமுடியாமல் இருக்கின்றனர். இதேபோல அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலிலும் தனது கட்சியின் சின்னத்திலேதான் போட்டியிடுமாறு டக்ளஸ் கூட
'அன்போடு' அறிவுறுத்தப்பட்டிருந்தார். தமிழர்களது அரசியலை முன்னெடுக்கும் எவரும் தமது கட்சியுடன் இணைந்துதான் செயற்படவேண்டும் என்பதில் மகிந்த அரசு கவனமாகவே இருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட காரணங்களிலிருந்து சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்றே தமிழர்களுக்கான தற்காலிகத் தளர்வொன்றை உடனடியாக வழங்கக்கூடியதாக இருப்பதுடன் அதுவே தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல் வேலைத்திட்டங்களுக்கும் பொருத்தமாகக் காணப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

ஈழநேசன்

அலைகள் ஓயாது....!

இதயத்தில் இனத்தின் விடுதலை நெருப்பை சுமந்து தமிழ் ஈழத்திற்காய் கடைசி மூச்சு வரை போராடி மடிந்த மாவீரர்கள் உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.... தேசத்தின் சுமையை தோள்களில் சுமந்து தமிழீழ தாயகத்திற்காய் உயிர் துறந்த மக்களே உங்களுக்கும் எங்கள் வீர வணக்கம்... தமிழினம் முடிந்து போன இனமல்ல எங்கெல்லாம் தமிழன் இருக்கின்றானோ அங்கெல்லாம் கனன்று கொண்டிருக்கும் விடுதலை நெருப்பு வாழும் போதும் தலைவன் வழித்தடத்தில் வாழ்ந்து வீழும் போதும் வெல்வோம் என்றபடி வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் மனங்களில் எறிந்த நெருப்பு நீதியை மறந்த உலகத்தின் கண்களுக்கு தமிழீழம் பொய்த்துப் போன கனவாகத் தெரியலாம் சற்று தாண்டவம் ஆடி தமிழ் இனத்தையே அழித்த கொடுங்கோலாட்சி சிங்களம் அழிந்து விட்டதாக நினைக்கும் ஆனாலும் நாங்கள் ஓயாத அலைகளாய் வீசிக் கொண்டிருப்போம் எங்களை உலகம் விரைவில் புரிந்து கொள்ளும் என்றுமில்லாதவாறு எழுகின்ற தமிழினத்தின் ஒன்ரினைவே இனியொரு விடுதலையை படைக்கும் என்பதை தமிழர்கள் மனங்களில் தெரிந்து கொள்ள வேண்டும் உலக வல்லரசுகளின் ஆசீர்வாதமும் சிங்கள அரக்க தாண்டவமும் உலகின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்த ஒரு குழந்தையின் குரல் வலையினை நசுக்கி விட்டிருக்கிறது உலக வல்லரசுகளின் மௌனம் கொடுத்த அங்கீகாரம் ஒரு இனத்தை கொடுமையாக அழித்து விட்டிருக்கிறது பிரசவிக்கப் போகின்ற தமிழீழ குழந்தையின் குருதி குடித்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும் எப்படி மன்னிக்க முடியும் விடுதலை நெருப்பைச் சுமக்கின்ற மனங்களே உங்கள் கரங்கள் எப்போதும் ஒன்றாய் இணையட்டும் விடுதலை சுமைகளை சுமக்கின்ற தோள்களே அவை எப்போதும் வலுவாய் இருக்கட்டும் அந்நிய தேசங்களில் அலைந்து திறந்தபடியே தாயகத்தை மறந்து அப்படியே காலம் கழிக்க முடியுமா? மீண்டும் நிமிர்வோம் என்ற நம்பிக்கை எங்கள் மனங்களில் நிறையவே இருக்கிறது நமக்கான வரலாற்றை படைக்க இனி அலையாய் எழுவோம் இன்று வரை நடந்து முடிந்த துயரங்களை எல்லாம் துடைத்து விடுதலை காற்றை சுவாசிக்கும் ஒரு காலம் நமக்கு கிடைப்பதற்காய் வீறுகொண்ட தாயக கனவை மனங்களில் நிறைப்போம்
உலக வரலாற்றில் தமிழீழம் படைப்போம்
"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"