இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 20 பிப்ரவரி, 2010
சக்தி தொலைக்காட்சியில் மின்னல்.............
சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர்.
அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்மையை கூறுவதாக பலர் கருதினார்கள்.
ஆனால் உண்மை மறுதலையானது, மகிந்த ராஜபக்சாவின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சாவின் அமைப்பான தருன்யட்ட ஹெடக் என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள உறுப்பினராக சிறீரங்கா செயற்பட்டு வருகின்றார். அவர் நமால் ராஜபக்சாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக சித்தரித்து நாமலை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் சிறீரங்கா ஈடுபட்டு வருகின்றார்.
சிறீலங்கா மகிந்தாவையோ அல்லது நாமாலையோ ஆதரிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் தமிழ் மக்களால் நல்லவர் என நம்பப்படும் ஒருவர் அவர்களை ஏமாற்றுவது துன்பமானது.
ஹமாஸ் தலைவர் கொலை .........?
ஹமாஸ் இயக்க தலைவர் மஹமூத் அல் மபூவாவைக் கொலை செய்தது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பினர்தான் என்பது நிரூபணமானால் மொசாத்தின் தலைவர் மெயர் டேகனைக் கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துபாய் போலீஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி 20ம் தேதி துபாய்க்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர் மபூவா அவரது ஹோட்டல் அறையில் கொல்லப்பட்டார்.
ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.
அவரை எந்தவித ஆயுதமம் இல்லாமல், தரையில் தள்ளி மூச்சுத் திணறடித்துக் கொன்றனர். இந்தக் கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மொத்தம் 11 இஸ்ரேலியர்கள் இந்தக் கொலைச் சதியில் இடம் பெற்றிருந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பெண் ஆவார். இந்தக் கும்பல், 11 ஐரோப்பியர்களின் பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தி துபாய்க்கு வந்துள்ளது. அவர்களில் 6 பேர் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டுகளில் முறைகேடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மபூவா கொலை வழக்கில் மொசாத்துக்குத் தொடர்பு இருந்தால், மொசாத் தலைவருக்கு எதிராக இன்டர்போர் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாய் காவல்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டாஹி கல்பான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மபூவா கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பது உறுதியானால், மெயர் டேகனுக்கு எதிராக இன்டர்போல் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்து துபாயிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தக் கொலையில் இஸ்ரேலுக்குத் தொடர்பு இருப்பதாக 99 சதவீதம் நான் நம்புகிறேன்.
மொசாத் இந்த குற்றத்தின் பின்னணியில் இருந்தால் நிச்சயம் அது தண்டிக்கப்பட வேண்டும். அதன் தலைவர் கொலையாளியாக கருதப்பட வேண்டும் என்றார்.
இதற்கிடையே மபூவா படுகொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 11 இஸ்ரேலியர்களின் புகைப்படங்ளையும் துபாய் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்ய ரெட் அலர்ட் உத்தரவை இன்டர்போல் பிறப்பித்துள்ளது. இந்த 11 பேருமே தற்போது இஸ்ரேலில் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இந்த கூற்றுகளையெல்லாம் இஸ்ரேல் நிராகரித்துள்ளது. சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. மேலும், துபாய் காவல்துறை தலைவர் மொசாத் குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமே இல்லை. அடிப்படையற்ற புகார் கள் இவை என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மபூவா முதலில்எந்தச் சூழ்நிலையில் இறந்தார் என்பதையே துபாய் காவல்துறை விளக்கவில்லை. வெறும் கண்காணிப்பு காமராவில் பதிவான சில வீடியோ படங்களை மட்டுமே அது காட்டி வருகிறது. அதில் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர், சிலர் நடந்து கொண்டுள்ளனர். இதை ஆதாரமாக கருத முடியாது என்றார்.
இதற்கிடையே பாஸ்போர்ட்டில் மோசடி செய்தது தொடர்பாக இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உரசல்கள் தொடங்கியுள்ளன.
சந்தேகப்படும் 11 பேரில் 6 பேர் இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆறு பேரும், பிரிட்டிஷ் இஸ்ரேலியர்கள் ஆறு பேரின் பாஸ்போர்ட்டுகளைத்தான் மோசடியாக திரித்து துபாய் போயுள்ளனர். இதுதவிர 3 அயர்லாந்து பாஸ்போர்ட்டுகள், ஒரு பிரெஞ்சு மற்றும் ஒரு ஜெர்மனி பாஸ்போர்ட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கான விமான டிக்கெட்டை வாங்குவதற்கு அமெரிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்தும் துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடி செய்தது உண்மையாக இருக்குமானால் இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கும் என்று இங்கிலாந்து தகவல்கள் கூறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் நிவாரணம் என்ற பெயரில்...........
நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் உறுப்பினர்களை சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தின் முன்னால் நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தி;ல் மீள்குடியமர்ந்துள்ள, மக்கள் மத்தியில் காணாமல் போனோரின் விபரங்களை பெற்றுக்கொடுத்தல், தொழில் வாய்ப்பு, நிவாரணங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தே இந்த உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மற்றும் வன்னியின் அமைப்பாளர் திலக்குமார உடுகமவின் தகவல்படி இதுவரை யாழ்ப்பாணத்தில் 26 ஆயிரம் பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இந்த விடயங்களுக்காக நிரப்பப்படும் விண்ணப்பம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்தோரிடம் இருந்து 20 ரூபா அறிவிடப்படுகிறது.
இடம்பெயர்ந்தோரில் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை விண்ணப்பங்கள் எனத் தெரியாமல், தமது காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடிக்கும் விண்ணப்பங்களாக அதனை கருதி அதில் கையொப்பமிட்டு கையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில், மக்களிடம் இருந்து பல்வேறு உறுதிமொழிகளின் அடிப்படையில் பணம் அறவிடப்பட்டு வருவதாக முறைப்பர்டுகள் கிடைத்துள்ளன.
கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி விட்டனராம் ..
கொழும்பில் கடந்த இருபது வருடங்களில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இருபது வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்தார்கள் என்றும் தற்போது 30 வீதமாகக் குறைந்து போய்விட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் - 2001இல் இறுதியாக எடுக்கப்பட்ட சனத் தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தின் சனத் தொகை 2,251,274 ஆகும். இதில் சிங்களவர்கள் 1,724,459 பேர்.
இங்கு இலங்கைத் தமிழர்கள் 247,739 பேரும், இந்தியத் தமிழர்கள் 24,821 பேரும் முஸ்லிம்கள் 202,731 பேரும் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் - மகிந்த ராஜபக்ச கொழும்பில் சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து விட்டதாகத் தவறான புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடும் கருத்தாகவும் இது அமைந்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவை
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயம் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்தா கொக்னி ரெக் என்ன அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட கானொளிகள் உண்மையானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ?
இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் கூட்டமைப்பு அலுவலகம் ஒன்று இந்தியாவின் தலைநகர் புதுடெலகியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவில் உள்ள அலுவலகம் துணை புரியும் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் ஒரு அலுவலக்தை கூட இயங்கு நிலையில் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலேயே அலுவலகங்கள் வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கானதா அல்லது இந்தியாவிற்கானதா
அரசின் அடுத்த குறி ..........?
வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. “வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு
புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ராஜதந்திகளை அண் மையில் சந்தித்த போது மேற்படி விடயம் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் இந்த பாரதூரமான விடயம் குறித்து கவலை கொண்டுள்ளது. இத்தகைய கொடுக்கல்வாங்கல் குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுவினர் குறித்தும் கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப் படும் இத்தகைய கொடுக்கல்வாங்கல்களு டன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள தனிப்பட்ட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக அந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்,
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள இரு ஆயுதக் குழுக்களின் முகாம்க ளையும் அகற்றி வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி வர்த்தகர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதேசத்தில் கடந்த ன்று மாத காலப் பகுதிக்குள் எட்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட் கள் கொள்ளையிடப்பட்டதையடுத்து வர்த்த கர்கள், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்கள் சூழ இருக்கின்ற செங்கலடிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது ஆயுதக்குழுக்களின் கைவரிசையே என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலத்தில் செங்கலடி வர்த்தகர்களிடம் தொலைபேசி லமாக கப்பம் கோரப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. எனினும் முறைப்பாட்டாளர்கள் பின்னர் தொலை பேசி மூலம் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரான் அணு ஆயுதம் தயாரிக்காது,,,,
இரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல என்றும், அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்றும் இரானின் அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனி கூறியுள்ளார்.
இரானின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது நாசகாரி கப்பலின் வெள்ளோட்ட வைபவத்தில் உரையாற்றிய அவர், சில மேற்குலக அதிகாரிகள் காலாவதியான, அர்த்தமற்ற கருத்தை திரும்பத்திரும்பக் கூறிவருவதாக கூறினார்.
இரானின் தற்போதைய மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை தயாரிப்பதுடன் தொடர்பு பட்டவை என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் முதல் தடவையாக கூறிய மறு தினம் அவரது இந்த அறிக்கை வந்துள்ளது
இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் படம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இயேசு கிறிஸ்து ஒரு கையில் சிகரெட்டையும், இன்னொரு கையில் பீர் டப்பா ஒன்றையும் வைத்திருப்பது போன்ற படங்களுடன் அச்சிட்டு வெளியான ஆரம்பப் பள்ளி பாடப் புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேகாலய மாநில கல்வி அமைச்சர் அம்பரீன் லிங்டோ அறிவித்துள்ளார்.
இவ்வாறு பாடப் புத்தகம் அச்சிடப்பட்டது, சர்வமதத்தவர்களும் ஒன்றாக இணைந்து வாழும் இந்தியப் பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கத்தோலிக்கத் தேவாலாய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குறிப்பிட்ட பதிப்பாளர், கத்தோலிக்கப் பள்ளிகளில் எந்தவிதப் புத்தகங்களையும் விற்பனை செய்வதற்கு இந்திய கத்தோலிக்க தேவாலயம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் பயங்கரவாதம் - மனிதாபிமானம் தொடர்பான பிரித்தறியும் வழக்கு,
அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அல்-ஹை டா, குர்திஸ் விடுதலை அமைப்பு, விடுதலைப்புலிகள் ஆகியன அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டன. ஆனால் குறித்த அமைப்புக்களுடன் தொடர்பான அல்லது அந்த இனம் மதம் சார்ந்த மனிதாபிமான அமைப்புக்கள் நிவாரணம், புனர்வாழ்வு, சமாதானம் தொடர்பில் பணிபுரிகின்றன. ஆனால் இந்த தன்னார்வ அமைப்புக்களை பயங்கரவாதத்திற்கு உதவியவர்கள் என்ற பேரில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மட்டுமன்றி பயங்கரவாத அமைப்புக்களிற்குள்ளும் மனிதாபிமான அமைப்புக்கள் பல பணிகளை செய்து வருகின்றன. ஆகவே இவைகளை இனம் கண்டுஇவர்களது தடைகளை நீக்கி செயற்படவைக்கவேண்டும் என இடது சாரிஅமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மனிதாபிமான சட்டங்களிற்கான திட்டம் என்ற அமைப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
வீட்டில் யாழப்பாணப் பெண் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு
தெஹிவளை, களுபோவில ஜயசிறி மாவத்தையிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தமிழ் பெண் ஒருவரின் சடலத்தை தெஹிவளைக் காவல்துறையினர் நேற்று காலை மீட்டுள்ளனர்.
பெண்ணின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குறித்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டபோது அவர் தனது கையில் கூரிய ஆயுதமொன்றை வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான சின்னத்தம்பி கனகதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் அவரது மூளைவளர்ச்சி குன்றிய மகளுடன் தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்திய வீட்டில் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெஹிவளைக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வணங்காமண்ணில் வந்தவையா?
அரசதலைவர் தேர்தலை நோக்கியதான ஏ-9 வீதி 24மணிநேரமும் திறக்கப்பட்டதனை அடுத்து யாழ்.குடாநாட்டிற்கான தென்னிலங்கை மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாமல் தென்னிலங்கை வியாபாரிகளின் யாழ்ப்பாணத்திற்கான படையெடுப்பும் அதிகரித்துள்ளதாக அறியவருகின்றது. தென்னிலங்கை வியாபாரிகளால் விற்கப்படும் பொருட்கள் இலங்கையின் வர்த்தக மையமான தலைநகரான கொழும்பு விலைகளிலும் அரைவாசி வீதம் குறைந்தவையாகவே காணப்படுவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிகள், நல்லூர் ஆலயச் சூழல் உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரதான பகுதிகளில் சிங்களவர்களால் மலிவு விலைக்கு விற்கப்படுகின்ற பொருட்களின் விலைகள் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கொழும்பு வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அவர் யாழ்ப்பாணத்தின் நிரந்தர வர்த்தகர்கள் இந் நடவடிக்கையினால் பாரிய நெருக்கடிகள் ஏற்படுவதனை தாம் உணர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட பொருட்களை விலைகொடுத்துப் பெறுவதில் யாழ்ப்பாண மக்களைவிடவும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா நோக்கில் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொள்ளும் மக்களே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த இடத்தில்த் தான் புலம்பெயர் மக்களால் வன்னியில் நெருக்கடிக்கு உட்பட்ட மக்களுக்கு என அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கேட்கவேண்டிய நிலை எழுந்துள்ளது. மக்களுக்கு வழங்கவென நிவாரணப் பொருட்களைச் சுமந்தபடி பயணித்த வணங்காமண் கப்பலை நாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்று தடுத்துநிறுத்திய சிங்கள அரசு அதனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது. இந்த இடத்தில் தமிழ் மக்களின் உயிர்நாடி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கருணாநிதி வணங்காமண் கப்பலின் கொண்டுவரப்பட்டிருந்த பொருட்களை இந்தியாவில் வேறு கப்பலில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைப் பரப்புரையாக்கினாரே தவிர அந்தப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்ந்தனவா? என்பது பற்றிய எந்த ஒரு அக்கறையினையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
சர்வதேச ரீதியாக வன்முறைச்சூழலில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பதற்காகவே தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டுச் செயற்படும் செஞ்சிலுவைச் சங்கங்கள் பொருட்களைப் பொறுப்பேற்பதாகவும், பொறுப்புக் கொடுப்பதாகவும் இரண்டொரு அறிக்கைகளை விட்டதுடன் அந்தப் பொருட்கள் தொடர்பான முழுமையான விபரங்களும் தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது? அந்தப் பொருட்கள் பழுதடைந்திருந்தால் அது பற்றிய தெளிவினை செஞ்சிலுவைச் சங்கங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் அது குறித்த விபரங்களை வெளியிடும் என்றோ மனிதாபிமான ரீதியில் அது நடைபெறும் என்றோ எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. செஞ்சிலுவைச் சங்கம் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த பகிரங்க அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை. மாறாக மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தான தகவலையாவது வழங்கியிருக்க வேண்டும். புலம் பெயர் தேசங்களில் அங்கிருக்கும் காலநிலைகளை எதிர்கொண்டு மிகவும் கடினங்களுக்கு மத்தியில் உழைத்த உழைப்புக்களைக் கொண்டே வன்னி மக்களுக்கென பொருட்களை வழங்குவதற்கென அவர்களால் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் மக்களது உழைப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பான சரியான தகவல்களை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிடவேண்டும்.
வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்காப்படாமைக்கும் யாழ்ப்பாண தெருவோர தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுகின்றது. தமக்கான பொருட்களை தென்னிலங்கையின் அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒருவரின் முக்கிய வலது கையாகச் செயற்படும் தொழில் அதிபர் ஒருவரே வழங்கிவருவதாக தென்னிலங்கை வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களின் உடனடியான உதவிகளை இழிவு படுத்தும் வகையிலான செயற்பாடாக இது இருக்கலாம் என்று கருதப்படுகின்ற அதேவேளை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் வரையான மக்களது வாழ்வியல் என்பது குறித்த அரசின் அக்கறையீனமும் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளமை புலப்படுகின்றது. தனியாக அரிசி, மா, சீனி, பருப்பு உட்பட்ட பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது. அங்கிருக்கும் மக்கள் தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் போர் அனர்த்த காலங்களில் தமக்கான குடும்பத்தினரில் பல உழைப்பாளர்களை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
அதனை விடவும் உழைப்பாளர்கள் இருந்தாலும் சொந்த இடங்களில் இருந்து அவர்கள் பிடுங்கப்பட்டுள்ளமையால் அவர்களால் சுயமாக பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தமது பொருளாதாரத்தை ஈடு செய்வதற்காக சில பெண்கள் நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டு வருவதாக முகாம் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் அந்த மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான அடுத்த கட்ட ஆரோக்கியமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேசம் புரிந்து கொள்ளுமா?
வாடகை வானூர்தி .,,
உலகில் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைப் பெருக்கம் போக்குவரத்து நெருக்கடியை நாளாந்தம் அதிகரித்தவண்ணமுள்ளது. நேரமே பணமாகிப் போய்விட்ட வர்த்தக உலகில் போக்குவரத்து நெரிசல் மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளைத் தாமதப்படுத்துவதென்பது வர்த்தக உலகை செயலற்றதாக்கிவிடும். இவ்வாறான பிரச்சினைகளிற்குத் தீர்வுகாண்பதற்காக இப்பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் பல்வேறுபட்ட வழிகளில் முயற்சித்தவண்ணமுள்ளனர். இவ்வாறான முயற்சிகளின் விளைவுகளில் ஒன்றே வாடகை வானூர்தி (Air Taxi) ஆகும்.
இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால் சென்று குறித்த விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வானில் பறக்கவல்லதுமான ஒரு வாகனமே வாடகை வானூர்தியாகும். ஒரு நாட்டின் வான் எல்லைகளுக்குட்பட்ட வானூர்திப் பறப்பு என்பது அந்நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. சாதாரண தரைவழிப் போக்குவரத்துப் போன்று வான்வழிப் போக்குவரத்தினை பொதுப்பாவனைக்காகத் திறந்துவிடுவதென்பது, ஒரு நாடு தனது பாதுகாப்பைத் தானாகவே முன்வந்து முடக்குவதற்கு ஒப்பானது. இதன்காரணமாக தகுந்த பாதுகாப்பு உத்திகளுடன் இந்த வாடகை வானூர்தியினை பொதுப்பாவனைக்காகக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முயற்சிக்கின்றன.
அமெரிக்காவின் இவ்வாறான வாடகை வானூர்தித் திட்டம் சிறிய விமான போக்குவரத்துத் தொகுதி (Small Aircraft Transport System) என்றழைக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கமைவாக அமெரிக்கா முழுவதும் 5000 வரையான சிறிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு அவ்விமான நிலையங்களினூடாகவே இவ்வானூர்தித் தொகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்விமான நிலையங்கள் அனைத்தும் பொதுமக்களால் இலகுவில் அடையக்கூடியவாறு அவர்களின் குடியிருப்பு, வேலையிடம் மற்றும் நாளாந்தச் செயற்பாட்டு இடங்கள் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்படும். இவ்வாறாக தொகுதிகளை இயக்குவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
பிரதான பாரிய விமான நிலையங்களின் போக்குவரத்து நெருக்கடி குறையுவடையும்.
சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி குறையுவடையும்.
போக்குவரத்துத் திட்டமிடலைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
சிறிய விமானங்களை இயக்குவதற்கான பொருட்செலவு குறைவடையும்.
பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு வரும் உல்லாசப்பயணிகள் அந்நாட்டின் விமான நிலையத்திலிருந்து தொலைதூர இடங்களிலுள்ள சுற்றுலாத்தளங்களுக்குப் செல்வது கிடையாது. இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் விமான நிலையங்களைக் கொண்டிருக்கும். இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகின்றது.
இருந்தபோதிலும் இங்கு பல்வேறுபட்ட பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. முதலாவதாக வாடகை விமானங்களுக்கான பொருட்செலவு. ஆரம்ப நிலையில் இவ்வகை வாடகை விமானங்களை குறைந்த விலையிற் பெற்றுக்கொள்வதென்பது இயலாத காரியமாகும். இவற்றுக்காக கொள்வனவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமானதாகவே காணப்படும். இதன் காரணமாக பெருமாபாலானோர் இவற்றைக் கொள்வனவு செய்வதிற் தயக்கம்காட்டுவர். அடுத்து, மேலே பறத்தற் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. குறித்தவொரு வான்பரப்பு பெரும்தொகையான சிறியரக விமானங்களின் பறப்பினைக் கொண்டிருக்கும்போது, அவ்விமானங்களின் பாதுகாப்பினைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதென்பது சிரமமான காரியமாக மாறலாம். இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்கு பெரும்தொகையான ஆளணி மற்றும் கண்காணிப்புக் கருவிகள் தேவைப்படும். தொடர்ந்து அவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அனவே, இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிகளை இயக்குவதென்பது பொரும் பொருட்செலவைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
NASA நிறுவனம் தன்னியக்கமாக விமானப் பறப்புக்களைக் கட்டுப்படுத்தும் Robotic Air Traffic Controller என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளிற்கேற்ப அவை தரையிறங்குவதற்குத் தேவையான தரவுகளைத் தன்னியக்கமாக வழங்கும். இன்னொரு வகைக் கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் அவ்விமானங்களின் பறக்கும் உயரம், ஆள்கூறு என்பவற்றைப் பெற்று அவற்றுக்கான பதிற் தகவல்களை வழங்குவதுடன் அத்தகவல்களை ஏனைய விமானங்களுடனும் பகிர்ந்துகொள்ளும். இவ்வகைக் கருவிகளின்மூலம் ஆளணி எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைக்க முடியும்.
இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிக்கான திட்டத்தின் ஆரம்ப நிலையில், இத்திட்டத்தை 2015 இல் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், ஆரம்பத்தில் சிறியளவிலேயே அவற்றைப் பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். இவ்வகை வானூர்திகள் பெருமளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நாம் இன்னமும் காத்திருக்க வேண்டியேயிருக்கும்.
வழிமறிக்கப் போவது யார்?
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பங்களை இம் முறை வழங்காது என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இவற்றில் கணிசமான உண்மைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தான் பாரிய அச்சுறுத்தல் நிலை எதிர்வரும் தேர்தல் ஊடாக எதிர்நோக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தேசியப் பற்றாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் கொள்கைகள் தமக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பிரதான கட்சி ஒன்றின் பொதுச்செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம் முறை தான் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கொள்கை தனி நாட்டை வலியுறுத்துவதாக அமைவதாகவும் அவர் தனது கொள்கையில் இருந்து இம்மியேனும் பிசகாது உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் ஏனைய பிரதான தலைமைகள் இலங்கை ஒரு நாடு அதற்குள் தான் தீர்வு அமையவேண்டும் என வலியுறுத்தி இதற்கு அவரை உடன்படுமாறு வலியுறுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் ஏற்படவுள்ள ஆபத்து நிலை குறித்து சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.
குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர் எடுத்திருக்கின்ற முடிவு அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அவர் தனித்துப் போட்டியிடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும் அவருடன் கூட்டுச் சேர ஏற்கனவே விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்டு கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்கள் மத்தியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பலர் இவருடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் குதிக்கவுள்ளதாக அறியவருகின்றது.
உண்மையில் குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களுடைய விசுவாசிகள் என்ற காரணங்களைக் காட்டியே மகிந்த அரசு அவர்களை தமது அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உடன்பட்டுச் செயற்பட வைத்தது. இந்த நிலையில்த் தான் நடைபெற்ற ஜனாபதித் தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று விதமான நகர்வுகளை அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது என்பது அரசியல் அவதானிகளுக்கு நன்கு புலப்பட்ட விடயமாகும். இவற்றின் காரணமாகவே திசைமாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் இருந்து ஓரங்கப்பட்டதாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னின்று முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தெரிகின்றது. இந்த நிலையில் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து போட்டியிட எத்தனிக்கும் கட்சித் தலைவருக்கு முண்டு கொடுத்து போட்டியில் தீவிரமாக ஈடுபடுவர் என்பது வெளிப்படை.
இந்த இடத்தில் கூட்டமைப்பினைத் தீர்மானிக்கின்ற முக்கிய உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலைகளும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அதாவது தமிழ் மக்களின் அனைத்து விதமான பின்னடைவுகள் அல்லது அழிவுகள் தேசிய விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டமை அனைத்துக்கும் பிரதான காரணியாகச் செயற்பட்ட இந்தியாவின் அட்டவணைக்கு அமையவே அவர்களின் செயற்பாடுகள் அமைவதாகவும் ஒவ்வொரு முக்கிய நகர்வுகளையும் அவர்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகளுக்கு அமையவே முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாத விடத்து தமிழ்மக்களுக்கு இருக்கின்ற வாக்குப் பலம் என்பது சிதைவடைவதற்கான அதிக சந்தர்ப்பங்களே ஏற்பட்டுள்ளன. இதனை உணர்ந்து உடனடியான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய அல்லது மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகத் தலைமைகள் உட்பட்டுள்ளன. இரண்டு பிரதான தரப்புக்களாக பிரிந்து கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாக இருந்தால் யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் பிரமாண்டமான பூதாகாரமாக வெளிப்படும். இந்த இடத்தில் மக்கள் முடிவெடுப்பதில் குழப்பம் அடைந்து கணிசமான வாக்களிப்பு வீதம் குறைவடையக் கூடிய அதேவேளை மக்களின் வாக்குகள் சிதைவடையும். அதன் போது அணில் ஏறவிட்ட நாய் போலக் காத்திருக்கும் ஏனைய சக்திகள் குறைந்த வாக்குகளிலேயே தொகுதிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.
தேசியம் என்பது ஒற்றைச் சொல்லால் ஆனது என்று மட்டும் கருதியதாகவே தற்போதைய அரசியல்த் தலைமைகளின் தேசியத்திற்கான அரசியல் முன்னெடுப்புக்கள் அமைகின்றன. யாரும் தூர நோக்கம் கொண்டவர்களாகவோ, ஏற்கனவே இறைக்கப்பட்ட தியாகங்களுக்கான பெறுமதி அறியாதவர்களாகவோ செயற்படுவதனைப் பார்க்க அருவருப்பாக இருப்பதாக மிக மூத்த தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை கூட்டமைப்பிற்கான போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் ஆலோசனைகளில் இன்னொரு அசிங்கமும் நிகழ்ந்து வருகின்றமையை சுட்டிக்காட்டுகின்றோம். தற்போது ஒரு கல்விச் சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் முன்மொழியப்பட்டுள்ளார். அவர் யார் என்றார் நீண்டகால அரச விசுவாசியாக விளங்கி வருகின்ற அமைச்சர் ஒருவரின் பிரதான புதிய ஆலோசகர் ஒருவரால் தேசியத்திற்கெதிரான எழுத்தளார்களில் ஒருவராக வளர்க்கப்பட்டு வருகின்ற ஒருவராவார். இவரையும் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கான முனைப்பினை கூட்டமைப்பின் பிரதான கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் முனைந்து செயற்படுவதாக அறிய முடிகின்றது.
தமிழ் மக்களின் தற்போதைய கையறு நிலையில் மக்களின் தவிர்க்க முடியாத தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விளங்கிவருகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பின்னடைவுகளுக்கு பிரதான காரணங்களாக காட்டிக்கொடுப்புக்களும், விட்டுக்கொடுப்புக்கள் அற்ற தன்மையும் தான் என்ற கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இவ்வாறான இக்கட்டான சூழலில் கூட்டமைப்பின் வழிப்படுத்த யாராவது முன்வருவார்களா? இல்லையேல் தமிழ் மக்களின் அபிலாசைகள் ஒரு கோடி 38 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களுடனும், வருடாந்த ஐம்பது இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதியுடனும் போய்விடுமா? என்ற கேள்விகளை தமிழ் மக்கள் கேட்கத் தலைப்பட்டுவிடுவர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மக்களை நோக்கியோ தேசியத்தை நோக்கியோ நகரவில்லை என்பது மட்டும் புலனாகின்றது. இந்த இடத்தில் மற்றொரு விடயம் பற்றிய தெளிவான பார்வையை ஏனைய கட்சிகளுக்கும் முன்வைக்கின்றோம். கொழும்பில் அலரிமாளிகைக்கு நிகரான மாளிகை ஒன்றில் அனைத்து வசதிகளுடனும் கொழும்பின் நட்சத்திரவிடுதிகளின் ஊழியர்களின் உபசரிப்புக்களுடனும் வாழ்ந்து வருகின்ற உலகம் அறிந்த உலகம் சுற்றிய முன்னாள் முக்கியஸ்தர் தற்போது தமிழ்த்தேசியத்தை இலங்கையில் சிதைக்கும் நடவடிக்கையினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் அரசகுடும்பத்தின் சகோதரர்களை தோள்களில் கைபோட்டு அணைத்து மகிழ்கின்ற அளவிற்கான அதிகாரங்களைப் பெற்றுள்ளமை குறித்து அவரைத் தரிசிக்கச் சென்று தரிசனம் பெற்றவர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பிட்ட நபர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உட்பட்ட அனைத்துக் கட்சிகளையும் பூரணமாக ஒழிக்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறுவதாகவும், புதிதாக ஏதாவது செய்து புதிய தமிழ்த் தலைமைகளை முன்வைக்குமாறும் தொடர்ந்தும் கோரி வருகின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கமைய கிளிநொச்சியில் முன்னாள் அரச முக்கிய அதிகாரி ஒருவர் வெற்றிலைச் சின்னத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. அதேபோல ஏனைய பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலில் நிற்குமாறு வற்புறுத்தல் விடுப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்தச் செயற்பாட்டின் தொடர் நடவடிக்கை தான் தேர்தல்த் தொகுதிகளில் சுதந்திரக்கட்சியினை எதிர்கொள்ளும் நிலைக்கு அரசில் அங்கம் பெற்ற முன்னணி தமிழ் அமைச்சர்கள் இருவர் தள்ளப்பட்டுள்ளனர் என கருதமுடிகின்றது. தமிழர் தாயகத்தில் அதாவது வடக்கு கிழக்கில் மட்டும் இம் முறை பத்திற்கு மேற்பட்ட கட்சிகள் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் இறுதியாக இருக்கின்ற ஒரே ஒரு தெரிவான வாக்கின் ஊடான ஒருமைப்பாடும் சிதைக்கப்படுவதற்கான சாத்தியங்களே தென்படுகின்றன. இன்னமும் பொறுமை காக்க வேண்டிய தேவை உரியவர்களுக்கு இருக்கின்றதா? காலம் கடந்த ஞானம் யாருக்கும் உதவாது?
பள்ளியில் புகுந்து ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவன்
ஜெர்மனியின் மேற்கு பிராந்தியத்தில் லுட்விங்ஸ் கேபின் நகரம் உள்ளது. அங்கு ஒரு தொழிற்பள்ளி உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் அங்கு 23 வயதான முன்னாள் மாணவர் ஒருவர் புகுந்தார். அவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார்.
பின்னர், திடீரென வகுப்பறைக்குள் புகுந்த அந்த நபர் 58 வயது ஆசிரியரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அந்த ஆசிரியர் அவருக்கு சரியான முறையில் பாடம் கற்றுத்தரவில்லை. மாறாக அவரை தவறான முறையில் வழி நடத்தி உள்ளார். எனவேதான் அவரை பழிக்கு பழி வாங்க குத்திக்கொன்றது தெரிய வந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)