இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 23 மார்ச், 2010
புதிதாகத்தோன்றும் போராட்ட விமர்சன புத்தி ஜீவிகள்........
ஒருவருக்கு செல்வம் வந்தகாலத்தில்,ஆகாயத்தில் விளங்குகின்ற விண் மீன்களிலும் பல அவருக்கு மிக்க உறவினராவர். அவரே தகாத துன்பத்தை அடைந்தால், அவரின் உறவுகளே அவரின் சொந்தமென்று சொல்ல விரும்பார். இதை இன்று உணர்வுள்ள ஈழத்தமிழ் மக்கள் கண்கூடாகக் காண்கின்றனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக வேரோடி விழுதெறிந்து பெருவிருட்சமாகி எம் தமிழீழ மண்ணுக்கு நிழல்கொடுத்த ஆலமரம், ஏறக்குறைய இருபது நாடுகளின் ஆயுதபலத்தாலும்,ஆட்பலத்தாலும்,பல வருடகால சூழ்ச்சித் திட்டங்களாலும்,காட்டிக் கொடுப்புகளாலும் சென்ற ஆண்டு இறுதியாக முள்ளிவாய்க்காலில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டது. அந்த ஆலமரத்தில் கூடுகட்டி பெரும் புயல்களுக்கும், அடை மழைகளுக்கும் ஈடுகொடுத்து,துன்பங்களையே வாழ்க்கையாக வாழ்ந்த பறவைகளும் வீழ்ந்து, கூடுகளும் கலைந்து மாண்டுபோக, உயிரோடிருந்த ஒரு பகுதி பறவைகள் கொடியோரின் கைகளில் அகப்பட,ஓரு பகுதி பறவைகள் எதிரியின் முற்றுகையை உடைத்து தப்பிப் பறந்துசென்றன. அன்று அந்த ஆலமரத்தின் கீழ் பலகாலம் கொடிய வெய்யிலில் இளைப்பாறியவர்களே,இன்று அந்த ஆலமரத்தைப்பற்றி ஒரு சொட்டும் கவலைப்படாமல் நன்றியில்லாதவர்களாக, அதைக் கூறு கூறாகவெட்டி விறகாக்கி விற்பதில் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இதுவரை காலமும் தமிழ்மக்களாகிய எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பார்த்து வாய்மூடி மௌனமாக இருந்தோரில், ஆதரவு வழங்கியோரில், போற்றிப் புகழ்ந்தோரில் சிலர், இப்போது போராட்டத்தின் ஆயுதம் மௌனிக்கப்பட்டு 10 மாதங்களாகிய பின்பு பல விமர்சனங்கள் எழுதத்தொடங்கியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் எதையாவது எழுதவேண்டும், எழுதி எதிரியின் காலடியில் மண்டியிட்டு தங்கள் வசதிகளை ஏற்படுத்த பலபேர் கிளம்பியுள்ளனர்.
அதில் ஒருவர் அதிகப் பிரசங்கித்தனமாக, கப்பல்கட்டிய தமிழன் கப்பலுக்காக இறுதிநாளன்று காத்திருந்து மாண்டான், என எழுதியிருந்தார். மேலும், காட்டிற்குள் தோன்றி, காட்டிற்குள் வளர்ந்து, காட்டிற்குள் பாதுகாப்பாக இருந்த புலிகள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்று மிகவும் வேடிக்கையாகவும் அதேநேரம் வேதனையாகவும் இருந்தது. அவர் கூறும் புலிகள் நாலுகால் புலிகள். அவை காட்டில்தான் பிறக்கின்றன. எங்கள் தேசவிடுதலைக்காகப் பிறந்த இரண்டு கால் புலிகள் வீட்டிலே பிறந்து, உங்களோடே வளர்ந்து,உங்கள் துன்பங்களை, உங்கள் வேதனைகளை நேரில் பார்த்து தாங்கமுடியாமல் உங்களைப்போல் ஜடமாக வாழவிரும்பாமல் மண்ணுகாக மக்களுக்காக விடுதலைப் புலியானவர்கள்.
மற்றும் இறுதிப்போரின்போது விடுதலைப் புலிகளின் கையிலிருந்த கடல் ஆதிக்கம் சுருங்கத்தொடங்கி, போர் முடிவடைவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே அவர்களின் கடலாதிக்கம் முற்றாகக் கைவிட்டபின்பு, எந்தக் காட்டிலிருந்த புலிகளை, எந்தக் கடற்கரைக்கு இறுதிநாளின்போது வரும்படி யார் கட்டளையிட்டார்கள்? எங்கள் தமிழீழ எல்லைகளைச் சரியாக அறிந்திராதவர்கள், முள்ளிவாய்க்கால் எங்கே அமைந்துள்ளது என்பதை விளங்காதவர்கள் கூறும் சோடனைக் கதைகளைக் கேட்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. அவர் அதனுடன் நிற்பாட்டாமல், இறுதிப் போர்முடிந்து கடந்த 10 மாதத்தின் பின்பு ஞானம் பிறந்து, புலிகளின் அரசியல்துறை வெளிநாடுகளில் சரியாக இல்லை, மற்றும் புலம்பெயர் தேசத்திலுள்ள அமைப்புக்களின் தலைமைகள் எல்லாவற்றிலும் தன்னாலான குறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கும் ஒருபடி மேலேபோய், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் விடுதலை இலட்சியத்தையே வரித்து வாழ்வாக்கி போராடி வாழ்ந்து, தமது இரத்தமும் சதையும் பீறிட உயிரைக் கொடுத்த எங்களுக்காகவே தங்கள் உயிரையே தானம்செய்த தளபதிகளை, மாங்காய் தேங்காய் போன்று பொருட்களைப் போன்று டசின்கணக்கென எடைபோடும் இம்மாதிரியான தமிழர்களை எண்ணுகையில் எங்கள் உள்ளம் கொதிக்கின்றது. இவர்களைப் போன்றோர்க்கு இப்போது நேரம் நல்லாக இருப்பதால், பிள்ளையை நல்லாகக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குகிறதெல்லாம் இலாபம் என்ற வக்கரித்த மனப்பான்மையுடன், எதிரி செய்யும் வேலைகளை இவர்களே செய்து முடித்தாலும், காலம் ஒருநாள் பதில் சொல்லும்.
அவர் கூறியதுபோன்று எழும்ப இயலாத அடி விழுந்திருக்கலாம், ஆனால் விழ விழ எழுவது விடுதலைப் புலிகள். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் தமிழீழம் மலர்ந்தே தீரும். காலம் அதை தமிழர் கையில் தந்தேதீரும். கால்மார்க்ஸ் கூறியது போன்று இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லையெனினும் பெறுவதற்கான ஒரு உலகம் இருக்கின்றது. அதை எண்ணி நம்பிக்கையுடன் எம் பயணத்தைத் தெடர்வோம்.
சம்பிக்க ரத்னாயக்கா கேள்வி!
தென்னிலங்கையில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விவாதிக்கின்ற செயற்பாட்டாளர்கள் பலரும், போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் குறித்து எதுவும் பேசாது மறந்து விடுவதாக இடதுசாரி விடுதலை முன்னணியைச் சேர்ந்த சம்பிக்க ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.
சுமார் 50 இலிருந்து 60 வரையிலான விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் போரின் போது கடுமையாகக் காயப்பட்டு கொழும்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற இவ்வமைப்பைச் சேர்ந்த 35 பெண் போராளிகள் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், இப்பெண்களின் நலன்கள் குறித்து எவரும் குரல் கொடுப்பதில்லை என்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பி.பி.சி. சிங்களச் சேவையில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கு நிரந்திர இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தாது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறினார்.
இவ்விவாதத்தில் சம்பிக்கா ரத்னாயக்காவின் கருத்தை மறுத்துப் பேசிய பிரபல நடிகையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவருமான கீதா குமாரசிங்க, விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து இப்பெண்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுவித்திருப்பதாகவும், அவருக்கு இப்பெண்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கீதா குமாரசிங்கவின் கருத்தை ஏற்க மறுத்த சம்பிக்க ரத்னாயக்கா, தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினரின் குடும்பங்களின் மீது எடுக்கப்படுகின்ற கவனம் போல், போரின் போது இடம்பெயர்ந்த, படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பெண்கள் குறித்தும் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் அதற்கான தகுதி படைத்தவர்கள் என்பதையும் அவர் இவ்விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென, அரச மற்றும் எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா உள்ளது போன்று சிறிலங்காவிலும் பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளதாக சிறிலங்காவின் மகளிர் விவகார அமைச்சர் சுமேதா ஜயசிங்க தெரிவித்தார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அனைத்துக் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார். இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனாநாயக்க, உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடொன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் தவறிவிட்டது என குற்றம் சாட்டினார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 4.5 வீதமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விவாதத்தில் கலந்து கொண்ட சம்பிக்கா ரத்னாயக்கா, 50 முதல் 60 வரையான பெண் போராளிகள் படைகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளபோதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் போராளிகளின் எண்ணிக்கை 1200 வரை இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நியுயோர்க்கில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆர்ப்பாட்காரர்களுக்கு விருந்தளித்த கோகன்ன
சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கீ மூன் வல்லுனர்கள் குழுவொன்றை அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்தார். ஐ.நா செயலாளரின் இந்த முடிவினை எதிர்த்து நியுயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா சபையினது தலைமைச் செயலகத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி சிறிலங்காவைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ‘எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை’ ஒழுங்குசெய்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட 16 சிறிலங்காவினர்களுக்கும் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோகன்ன நட்சத்திர விடுதியொன்றில் இரவு உணவு விருந்தொன்றை அண்மையில் வழங்கியிருக்கிறார். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிறிலங்காத் தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த 'எதிர்ப்புப் போராட்டத்தில்' பங்குகொண்டவர்களுக்கு கடந்த 13ம் திகதி இரவு விருந்து வழங்கப்பட்டதோடு ஒவ்வொருவருக்கும் 100 டொலர் பணம் வீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலாநிதி பாலித கோகன்ன ஒழுங்குசெய்திருந்த இரவு உணவு விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரே இந்தப் ஒளிப்படங்களை வெளியிட்டிருந்தார்.
வந்துவிட்டது மார்ச் 27: அந்த 60 நிமிடங்களுக்கு தயாரா?
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வரும் 27ம் தேதி இரவு ஒரு மணி நேரம் மட்டும் மின்சார உபயோகத்தை தவிர்க்க தயாராகி வருகின்றனர். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த, இயற்கைக்கான சர்வதேச நிதியம் (wwf) என்ற நிறுவனமும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து கடந்த 2007ம் ஆண்டில் ‘எர்த் அவர்’ என்ற திட்டத்தை அறிவித்தன. இயற்கையை பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு, மின்சார எரிசக்தி சேமிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அவசியமற்ற விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களையும் ‘ஆஃப்’ செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. முதலில் சிட்னி வாழ் மக்கள் சுமார் 22 லட்சம் பேர் சேர்ந்து செயல்படுத்தியதைப் பார்த்து உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது.
அடுத்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் இதைப் பின்பற்ற மக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து ஒவ்வொரு மார்ச் மாதமும் இறுதி சனிக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை (அந்தந்த உள்ளூர் நேரப்படி)இந்த தி்ட்டத்தை கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாத இறுதி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் 88 நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 88 நகரங்களில் இந்த ‘எர்த் அவர்’ கடைப்பிடிக்கப்பட்டது. சுமார் 100 கோடி மக்கள் இந்த இயக்கத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் இநத திட்டத்தை கடைப்பிடிப்பதில் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில் இந்தாண்டு ‘எர்த் அவர்’ வரும் சனிக்கிழமை (மார்ச் 27) கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்தாண்டை விட அதிகளவில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளன.
வீடுகள், தனியார் நிறுவனங்கள், பல்வேறு அரசு கட்டிடங்கள், வளாகங்கள், நினைவுச் சின்னங்கள் என பல இடங்களிலும் வரும் 27ம் தேதி அந்தந்த பகுதிகளின் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயற்கை இருளை தரிசிக்க தயாராகி வருகின்றனர்.
உலகின் நான்காவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு சவூதி
உலகிலேயே அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நான்காவது மிகப்பெரிய நாடாக சவூதி அரேபியா திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. "ஸ்டாகோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்" - Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சீனா, இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சவூதி அரேபியா உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியா ஆயுதங்கள் வாங்குவதற்காக மொத்தம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆயுத இறக்குமதியில் இஸ்ரேல் கூட ஆறாவது இடத்தில்தான் உள்ளது.அதைவிட சவூதி அரேபியா நான்காவது இடத்தில் முன்னணியில் உள்ளது.
மேலும் அமெரிக்காவிடமிருந்துதான் பெரும்பாலான ஆயுதங்களை வாங்கி வந்தது. இதனால் அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி வாடிக்கையாளராக சவூதி அரேபியா திகழ்கிறது. மேலும் பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி வாடிக்கையாளராகவும் சவூதி அரேபியா திகழ்கிறது.
முட்டாளைப் பார்த்து ஏன் பயப்படுகின்றீர்கள்?
அண்மையில் சிங்கப்பூர் ஸ்ரேய்ட ரைம்ஸ் பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ச அளித்த பேட்டி தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். அக்கடிதத்தில் 10 மாதங்களின் முன்னால் உலகின் சிறந்த இராணுவத் தளபதி எனது கணவர் என புகழாரம் சூட்டிய உங்கள் வாயால், தற்போது எனது கணவன் ஓர் முட்டாள் என தெரிவிக்கப்பட்டிருப்பதையிட்டு மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளளேன். அவ்வாறு அவர் முட்டாளாக இருந்தால் அவர் மீது ஏன் இத்தனை பீதி கொண்டு பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.
அக்கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் வெளியாகும் 'ஸ்ரெய்ட் டைம்ஸ்' பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான பொன்சேகா அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும், எனது குடும்பமும் கவலையும், வேதனையும் அடைந்தோம். இவ்வாறு கூறியிருப்பதை பார்த்து, பத்து மாதங்களுக்கு முன்னர் அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதி என்று புகழாரம் சூட்டியது நீங்கள் தானா என்று நான் வியப்படைகின்றேன்.
அன்று போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் வெற்றிக் கேக்கை வெட்டுவதற்கு உரிமையானவர் ஜெனரல் சரத்பொன்சேகாவே என்று பகிரங்கமாகக் கூறி, அவரைக்கொண்டே கேக்கை வெட்டியதையும் மறந்துவீட்டீர்களா? இன்று யுத்த வெற்றியின் சூடு தணிவதற்குள் அவை அனைத்தும் மறக்கப்பட்டவையாகிப் போயுள்ளன.
எனது கணவர் நீங்கள் சொல்வது போன்று அரசியல் தெரியாதவர் என்றால், அவ்வாறான ஒருவருக்குப் பயந்து சட்டவிரோதமாக கைது செய்து தடுத்துவைத்துப் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தியிருப்பது எதற்காக எனக் கேட்க விரும்புகின்றேன். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.
எனது கணவருடன் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து, தங்களுக்கும் அரசுக்கும் எதிராக அரச விரோதச்சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆதரவாளர்கள் சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சதிக்குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் கடந்த தேர்தலில் மேற்கொண்ட மோசடிகள் எனது கணவரால் நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் படுதோல்வியை தழுவ நேரிடும் என்ற பயத்திலேயே அவரை சட்டத்திற்கு விரோதமாக தடுத்து வைத்துள்ளீர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
மேலும், எனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உங்களிடம் பத்திரிகையாளர் கேட்டபோது நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலளிக்க தவறியுள்ளீர்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்து அரந்தலாவை பிக்குகளைப் படுகொலை செய்த, ஸ்ரீ மகாபோதி முன்பாக பக்தர்களைச் சுட்டுக்கொன்ற, தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்திய கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோருக்கு உயர் பதவிகளும் வசதி வாய்ப்புகளும் வழங்கியுள்ளதுடன், புலிகளின் பிரதானிகளின் ஒருவரான கே.பி க்கும் இன்று உங்கள் தயவு கிடைத்துள்ளது. இந்நிலைமைகள் பார்க்கும்போது, புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி, தனது குடலை தனது கரங்களில் சுமந்து, மரணத்தின் வாசலுக்கு சென்றுவந்த எனது கணவர், இந்நாட்டுக்காக சிந்திய இரத்தத்தை இலகுவாக மறந்துள்ள நீங்கள், எனது கணவருக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறுவதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை.
இந்நாட்டின் மக்கள் 2010ம் ஆண்டு தமது தமிழ்-சிங்களப் புத்தாண்டை ஒன்றுபட்ட இலங்கையில், பயங்கரவாத அச்சுறுத்தல் அற்ற நிலையில், கொண்டாட வழிசமைப்பேன் என எனது கணவர் இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றியிருக்கின்றார். அதன் பலனை இன்று நீங்களும், உங்கள் குடும்பமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் எமது குடும்பத்திற்கு அதனை அனுபவிக்க மறுத்திருப்பது துரதிஸ்டவசமானது.
இன்று எனது கணவருக்கு நீங்கள் இழைக்கும் கொடுமைகள் உங்கள் மனச்சாட்சியை என்றாவது உறுத்தாமல் விடாது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன். அத்துடன் எனது கணவர் உங்களிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்க மாட்டார் என்பதை மாத்திரம் உங்கள் மனதில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் எந்த தவறுகளையும் அவர் செய்யவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு.
என அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன?
நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதுதான் தம்முடைய இலக்கு எனவும், அதன் மூலமாக அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ஸ்ரேட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை மீண்டும் தெரிவித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ, இனநெருக்கடியைத் தீர்ப்பதற்காக எவ்வாறான அணுகுமுறை தன்னிடம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முக்கியமாக வடக்கு கிழக்கு இணைக்கப்படாது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதை மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார்.
ஆக, இன நெருக்கடிக்கான நியாயமான ஒரு தீர்வைப் பொறுத்தவரையில், தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத்தான் ஜனாதிபதியின் இந்தப் பேட்டியும் உணர்த்தியிருக்கின்றது.
அப்படியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்ப்பது எதற்காக என்ற கேள்வி எழலாம். அதேவேளையில், இனநெருக்கடி தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவைச் சந்தித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்து ஒன்று இவ்விடத்தில் கவனத்துகுரியதாக இருக்கின்றது.
இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக்காண வேண்டுமானால், அது மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் எனத் தெரிவித்த ஹக்கீம், சிங்கள மக்களுடைய ஏகோபித்த ஆதரவைக் கொண்ட ஒருவராக மகிந்த ராஜபக்ஷ இருப்பதுதான் இதற்குக் காரணம் எனவும் தன்னுடைய கருத்துக்கான நியாயத்தை விளக்கியிருக்கின்றார்.
இன நெருக்கடிக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வைக்காண விரும்பினால் மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே அதனைச் செய்ய முடியும் என ஹக்கீம் அடித்துக்கூறியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இனவாதக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாகவே கைவிடப்பட்டது. தற்போதைய நிலையில் இனவாதம் பேசக்கூடிய கட்சிகள் அனைத்தும் மகிந்தவுடனேயே உள்ளன, அல்லது செயலிழந்துபோயுள்ளன. அத்துடன் சிங்கள மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுக்கொண்ட ஒருவராகவே மகிந்த இருக்கின்றார். இந்த நிலையில் மகிந்தவினால் முன்வைக்கப்படும் தீர்வு ஒன்றுக்கு எதிராக மக்களைத் திரட்டிக்கொண்டு வீதியில் இறங்கிப் போராடக்கூடியளவுக்குப் பலம்வாய்ந்தவர்களாக சிங்களத் தலைவர்கள் யாரும் இல்லை.
ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பலம்வாய்ந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கக்கூடிய நிலையிலேயே எதிர்க்கட்சிகள் இல்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டும் நிலையில் யாரும் இல்லை.
இதனால்தான் இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்றைக்கொடுக்க வேண்டுமாயின் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருவரால் மட்டும்தான் முடியும் என்பதை ஹக்கீம் வெளிப்படுத்தியிருந்தார்.
இனநெருக்கடிக்கான தீர்வொன்றை முன்வைப்பதற்கான ஆதரவை சிங்கள மக்களிடமிருந்து மகிந்த ராஜபக்ஷ பெற்றிருக்கின்றார் எனக் குறிப்பிடும் மற்றொரு தமிழ் அரசியல் தலைவர், மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களப் பெரும்பான்மையின மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
அதாவது, சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய எந்தவொரு தீர்வையும் முன்வைக்கக்கூடிய சக்தி அல்லது அதிகாரம் மகிந்த ராஜபக்ஷவிடம் உள்ளது. இது கடந்த கால அரசியல் தலைவர்கள் எவரிடமும் இல்லாத ஒன்று!
தன்னுடைய இரண்டாவது பதவிக் காலத்துக்கும் தெரிவு செயப்பட்டுள்ள நிலையில், இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வொன்றைக் கொண்டுவருவது மகிந்த ராஜபக்ஷவுக்குக் கடினமான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, இனநெருக்கடி தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவின் உண்மையான அணுகுமுறை என்ன என்பதிலேயே இதற்கான பதில் தங்கியிருக்கின்றது.
இனநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பது உண்மைதான். ஆனால், நியாயமான தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைத்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி ஐ.தே.க. கூட அதற்கு ஆதரவளிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். இருந்தபோதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இலக்கு வைப்பது இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காகவல்ல!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதை நோக்கமாகக்கொண்டே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அரசாங்கம் திட்டமிடுகின்றது. அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இரண்டு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்திலிருக்க முடியும் என்ற அரசியலமைப்பு விதிமுறையை மாற்றியமைத்து அதனை மேலும் ஒரு பதவிக்காலத்துக்கு அதிகாரத்திலிருப்பதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் சாவதற்கு ஆளும் கட்சி முயற்சிக்கலாம்.
இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொண்டவராக மகிந்த இருப்பதால் அவரால் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்த முடியும் என ஹக்கீம் தெரிவித்திருந்தாலும், அதற்கு மறுபக்கம் ஒன்றும் உள்ளது. அதாவது இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் மகிந்த ராஜபக்ஷவுக்குக்குள்ள விருப்பமே அது.
இனப்பிரச்சினைத் தீர்வு, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்பவற்றை பிரதானமாக முன்வைத்தே சந்திரிகா குமாரதுங்கவும் அதிகாரத்துக்கு வந்தார். 1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் 62 வீதமான மக்களின் ஆதரவுடன் சந்திரிகாவினால் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக இருந்த போதிலும், தன்னுடைய 11 வருட ஆட்சிக் காலத்தில் அவரால் இந்த இரண்டில் எதனையுமே சாய முடியவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பது இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்று அதனைச் சாவதற்கான எந்தவொரு முயற்சியையும் சந்திரிகா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, சந்திரிகாவின் விருப்பமின்மையே இதற்கு உண்மையான காரணமாகக் கூறப்பட வேண்டும்.
தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரும் மகிந்த ராஜபக்ஷ இனநெருக்கடித் தீர்வில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வார் என்ற கேள்வி எழுகின்றது.
தன்னுடைய முதலாவது பதவிக்காலத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று இரண்டாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்துவதிலேயே மகிந்த செலவிட்டார்.
போரில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குள்ள ஒருவராக வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு சலுகைகளைக் கொடுத்து அந்தச் செல்வாக்கை இழந்துவிடத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அண்மைக்காலக் கருத்துக்களின் மூலமாக உணர முடிகின்றது.
இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அது வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய பேச்சுக்களில் அதனை அடிப்படையாகக் கொள்வதற்கு அரசாங்கம் முன்வருமா என்பது தெரியவில்லை.
தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் மூன்று விடயங்கள் எதிர்காலப் பேச்சுக்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் இனநெருக்கடி தொடர்பில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.
* ஒன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை பகுதி 2 இல், 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இரண்டு காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கப்போவதில்லை என்பதை அண்மைக்காலப் பேட்டிகளில் மகிந்த ராஜபக்ஷ தெளிவாகத் தெரிவித்துவருகின்றார்.
இதனை விட பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ்த் தலைமையுடன் பேசப்போவதாகவும் அவர் தெரிவித்துவருகின்றார். ஆனால், புலிகள் கேட்டதை அவர்கள் கேட்கக்கூடாது என பேச்சுக்களுக்கு இப்போதே ஒரு நிபந்தனையையும் வைக்கின்றார்.
தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதையும், மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பு தமிழ்த் தரப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
ஆக, தமிழ்த் தலைமையைப் பலவீனப்படுத்துவதும், தான் நினைக்கும் அரைகுறையான ஒரு தீர்வை வழங்குவதும் தான் அரசாங்கத்தின் திட்டம் என்பது தெரிகின்றது. பலவீனமான ஒரு தமிழ்த் தலைமை தன்னுடைய இந்த முயற்சிகளை நடைமுறைச் சாத்தியமாக்க உதவும் என்பது அரசின் கணிப்பு, அதற்காகவும், ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிகாரத்தில் தொடர்வதற்காகவும்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனக் கூறலாம்.
இந்தியாவின் உளவியல் போர்!
முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திய அரசு மீதான அதிருப்திகள் அதிகரித்தே செல்கின்றது. சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் மீது இந்திய அரசு தொடுத்த மனிதாபிமானமற்ற போர் மட்டுமல்ல, அதற்குப் பின்னரான சிங்கள அரசின் அத்தனை கொடூரங்களையும் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த இந்திய அரசு தொடர்ந்தும் முன்நிற்பது ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு இந்திய அரசு மீது கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனைப் பகிரங்கமாகப் பதிவு செய்தும் வருகின்றார்கள்.
ஈழத் தமிழர்களின் மனங்களில் பெருகி வரும் இந்திய விரோத நிலை குறித்து இந்தியாவும் தற்போது கவலை கொள்ள ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்களின் இந்திய வெறுப்புநிலை உச்சம் பெறும் பட்சத்தில், சிங்கள தேசத்தின்மீதான இந்தியப் பிடி கேள்விக்குறியாகக் கூடிய அபாய நிலை குறித்தும், இதனால் உருவாகக்கூடிய எதிர்கால விளைவுகள் குறித்தும் இந்திய உளவுத் துறைகள் பலமாக ஆராய்ந்துள்ளன. அதற்காக ஈழத் தமிழர்கள் மீது சில உளவியல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர்களால் இந்தியாவைப் பகைத்து, இந்தியாவை மீறி என்னதான் செய்துவிட முடியும்? என்று எம்மில் சிலர் நினைப்பது போலன்றி, இந்தியா இது குறித்து அதிக அக்கறை எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதிக அக்கறை என்றால். ஏதோ இந்தியா மனம் திருந்தி ஈழத் தமிழர்களுக்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறது என்ற அர்த்தம் அல்ல. ஈழத் தமிழர்களது இந்தியா மீதான கோபத்தையும், வெறுப்பையும் வேறு திசையில் திருப்பிவிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவும், சிறிலங்காவும் எதிர்பார்த்தது போல் முள்ளிவாய்காகலுடன் அத்தனையும் முடிவுக்கு வந்துவிடவில்லை. சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக வெளியிடப்பட்ட செய்திகள், ஆதாரங்கள் அத்தனையையும் தமிழ் மக்கள் நிராகரித்ததுடன், அது குறித்துப் பேசுவதையும் தவிர்த்து வருகின்றனர். தேசியத் தலைவர் அவர்களது மரணத்தை உறுதி செய்து விடுதலைப் புலிகளின் சர்வதேசங்களுக்கான தொடர்பாளர் கே.பி. அவர்கள் வெளியிட்ட அறிக்கையையும் அவர்கள் உதாசீனப்படுத்தியிருந்தார்கள். அதே போல், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் குறித்த இந்த இரு தேசங்களின் அறிவித்தல்களையும் தமிழீழ மக்கள் நிராகரித்தே வருகின்றனர். இது சிங்கள - இந்திய அரசுகளின் இலக்கை நிர்மூலம் செய்து வருகின்றது.
தேசியத் தலைவர் அவர்கள் குறித்த பரப்புரைகளை நிராகரித்த புலம்பெயர் தமிழீழ சமூகம், அவரது பாதையில் தொடர்ந்து பயணித்து இறுதி இலக்கினை அடையும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்கள் பேரவைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்குப்பதிவு, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றது. இது, ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் இந்திய ஆதரவு தளத்திலிருந்து பிரித்து, மேற்குலகை நோக்கிச் சாய வைத்துள்ளது.
ஈழத் தமிழர் தமது கைகளில் இருக்கும்வரை மட்டுமே இலங்கைத் தீவில் தனது நலன் காக்கப்படும் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே புரியும். இதன் காரணமாகவே, ஈழத் தமிழர்கள் தன்னை விட்டு விலகிச் செல்லா வண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆயினும், தற்போதுள்ள அரசியல் கள நிலையும், அந்த மக்களது மனநிலையும் தமக்;குச் சாதகமானதாக இல்லை என்பதை இந்தியா உணர்ந்தே வைத்துள்ளது. அதனால், இந்தியா ஈழத் தமிழர்கள் மீது பல்வேறு உளவியல் யுத்தங்களை மேற்கொண்டுள்ளது.
1) தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை தீவிர தமிழ்த் தேசிய விடுதலை அமைப்பாகத் தமிழீழ மக்களை நம்ப வைப்பது. தேர்தலில் வெற்றிபெற வைப்பது.
2) தமிழீழ மக்கள் மத்தியில் பெருகிவரும் இந்திய எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கும் விதமான செய்திகளை உருவாக்கிப் பரப்புதல்.
3) புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலம் பெற்று வரும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவற்றிற்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைத்தல்.
ஆகிய மூன்று இலக்குக்கள் குறித்த நகர்வுகளை அவதானிக்க முடிகின்றது.
அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேர்ணல் ஹரிகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிலையில் இறுக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதும், தமிழ்த் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான சுயாட்சியை வலியுறுத்தி, வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் கடும் போக்காளர்களான த.தே.கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண வலிந்து தெரிவித்துள்ளதும் இந்த முதலாவது இலக்கை நோக்கிய இந்திய நகர்வாகவே கருதப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து பத்து மாதங்கள் கடந்த நிலையில், இந்திய ஊடகங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் ஆகியோர் குறித்த தகவல்கள் திடீர் முளைப்பும், முக்கியத்தவமும் பெற்றுள்ளன. கடந்த பல மாதங்களாக இந்த இருவரும் 'இல்லை, இல்லவே இல்லை' என்ற கோதாவில் தமிழீழ மக்களை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு இப்படி ஒரு தகவலைக் கசிய விட்டதில் நிச்சயம் உள் நோக்கம் இருக்கவே செய்கின்றது. அதுவும், தமிழீழ மக்களது முக்கிய இரு தலைவர்கள் குறித்த செய்தியை இந்தியப் பத்திரிகைகள் அறிந்து கொண்டதும், அதனை முதன்மைப் படுத்தியதும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு உளவியற் போர் வியூகமே. தமிழீழ மக்கள் எதை நம்புவது? எதை நம்ப மறுப்பது? என்ற குழப்பத்தில், தமக்கு முன்பாக உள்ள பெரும் பிரச்சினையிலிருந்து கவனத்தை மாற்றுவதற்கான தந்திரோபாயத்தைக் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. இது இரண்டாவது உளவியல் தாக்குதல்.
மூன்றாவதாக, முள்ளிவாய்க்கால் பேரிழப்பிற்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கான பலமாக உருவாகி வரும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகிய இரண்டு அமைப்புக்கள் மீதான தாக்குதல். இது பிரித்தாளும் தந்திரம் ஊடாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றை முதன்மைப்படுத்துவதன் மூலம் இரண்டிற்கிடையேயும் முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைப்பது என்பது இந்தத் தாக்குதலின் இலக்கு. அண்மைக் காலங்களில் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த பிரமிப்பான செய்திகள், கருத்துக்கள் இந்திய, சிங்கள ஊடகங்களில் வருவதை அவதானிக்கலாம். 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற அற்புதமான தமிழ்த் தேசிய போராட்ட வடிவம் தற்போதுதான் செயல்பட ஆரம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடைக்காது.
அதே போன்றே, ஏற்கனவே உருவாக்கப்பட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பை புலம்பெயர் தேசங்கள் எங்கும் முன்னெடுத்து, வரலாற்றுப் பதிவைப் புதுப்பித்து பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் ஆகியோரை அழைத்து முதலாவது மாநாட்டை நடாத்தி சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, போர்க் களத்தில் நிற்கும் உலகத் தமிழர் பேரவையையும் புறந்தள்ள முடியாது. நாடு கடந்த தமழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களது வார்த்தையில் சொல்வதானால், இந்த இரண்டு அமைப்புக்களும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான இரட்டைக் குழல் துப்பாக்கி. இவற்றிற்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைக்கும் நோக்கோடு மூன்றாவது தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களது விருப்பு வெறுப்புகள்மீது இந்தியா இவ்வளவு அக்கறை கொள்ளுமா? என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயமே. ஆனாலும், இந்திய வல்லாதிக்க நலன் பேண இலங்கையில் கால பதித்திருந்த இந்திய சமாதானப் படை காலத்தில் விடுதலைப் புலிகள் அதிர்ச்சிகரமான ஒரு நகர்வை மேற்கொண்டிருந்தனர். ஈழத் தமிழர்கள் மீதான இந்தியக் கொடுங் கரங்களை அகற்றுவதற்கு விடுதலைப் புலிகள் தமது எதிரியான சிங்கள தேசத்தின் ஜனாதிபதி பிரேமதாசவுடன் சமரசம் செய்து கொண்டதையும், அதன் காரணமாக இந்தியப் படைகள் அவமானத்துடன் வெளியேறிச் சென்றதும் பாடம் படிக்க வேண்டிய வரலாறு.
தற்போதும், ஈழத் தமிழர்களது நிலை அவ்வாறேதான் உள்ளது. இந்தியக் கொடுங் கரங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள அவர்கள் மேற்குலகின் பக்கமோ, அல்லது சிறிலங்காவுடனான நேரடி சமரசங்களிலோ ஈடுபட்டால் நிலமை விபரீதமாகிவிடும் என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. மேற்குலகினதும், சர்வதேச அமைப்புக்களினதும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிங்கள தேசம் இந்திய நலன்கள் சார்ந்து ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்காமல் தொடர்ந்து பயணிக்க முடியாது. ஒரு புள்ளியில் நின்று நிதானிக்க வேண்டிய நிலை நிச்சயம் உருவாகும். அந்தப் புள்ளியில் இந்திய பிரசன்னம் என்பது தேவையற்றதாகிப் போய்விடும் என்பதே இந்தியக் கவலையாக உள்ளது.
திலீபன் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது:நல்லூரில் சம்பவம்
நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது.
திங்கள், 22 மார்ச், 2010
எங்கள் வரலாற்றுப் பதிவுகளை காப்போம்
எமக்கு முன்னுள்ள முக்கிய தேவை பற்றி இந்த கட்டுரை ஊடாக ஆராயவிருக்கின்றோம். முப்பது ஆண்டுகால மிகப் பெரிய உலகம் வியக்கும் வகையிலான தமிழனத்தின் உன்னதப் போரும் அதன் பின்னரான தற்போதைய மாறுபட்ட சூழலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே நகர்ந்துவருகின்றது. அந்தப் போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட விலைகள் சராசரியாக மூன்று இலட்சம் வரையில் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த இடத்தில் நாங்கள் குறிப்பிடுவது விடுதலைக்காய் நேரடியாக வீழ்ந்த மாவீரர்கள் மற்றும் மக்கள். இந்த இடத்தில் ஒரு கனதியான பணி தற்போது உலகப் பரப்பில் வாழ்ந்துவருகின்ற எமது தமிழ் மக்களிடம் உள்ளது. அது மிகவும் இலகுவான பணி ஆனாலும் அது நெறிப்படுத்தல் இல்லாமையால் கவனிக்கப்படாமலேயே கிடப்பது வேதனைக்குரியது. எங்கள் விடுதலைப் போருக்கான அர்ப்பணிப்புக்கள் அதன் பின்னான காலச்சுழற்சி என்பவற்றில் எமது விடுதலைப் போரையும் மக்களையும் வைத்து பிழைப்பு நடத்த பலர் முற்படுகின்றமை அல்லது உண்மையான உள்ளார்ந்த உணர்வு நிலைப்பாட்டுடன் கூடிய முன்னெடுப்புக்கள் என மாறுப்பட்ட சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டாலும், எங்களுக்கான நீண்ட நோக்குடன் கூடிய பார்வைச் செலுத்தவேண்டியவர்களாக அனைத்து மக்களும் இருக்கின்றோம். எங்கள் உயிர்கள், எங்கள் இரத்தம், எங்கள் அங்கங்கள், எங்கள் அர்ப்பணிப்புக்கள், எங்கள் சொத்துக்கள் என எங்களுக்கான அனைத்தும் இழந்தும் மீளமுடியாத துயர் எங்களவர்களின் பிரிவு மட்டும் தான் என்பதை தற்போது நிலத்திலும் புலத்திலும் அனைவரும் புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்கள் போரும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் எங்களை உலகம் இன்று திரும்பிப் பார்க்கின்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எங்கள் போராட்டப் பயணம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது, அதன் வியக்கவைக்கின்ற பிரமிப்புக்கள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை என்பதை கால ஓட்டத்தில் நாங்கள் வார்தைகளால் மட்டும் தான் சொல்லப்போகின்றோமா? என்ற இக்கட்டான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான காரணம் எங்கள் கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமான நேரடியான ஆவணங்கள் எல்லாம் வன்னிலேயே இருந்தன. அனைத்தும் நிலங்களில் தாழ்க்கப்பட்டும் பல எரிக்கப்பட்டும், பல கைவிடப்பட்டும் உள்ளன. கருத்துரைகள், ஒளிப்படங்கள், ஒளிநாடாக்கள், பாடல்கள், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், காலப் பதிவுகள், வரலாறுகள், வரலாற்றுச் சான்றுகள், எங்கள் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், பிரமிப்புக்கள், எங்கள் தெருக்கள், எங்கள் கோவில்கள், எங்கள் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்காக வீழ்ந்தவர்களின் வரலாற்றுப்பதிவுகள், புகைப்படங்கள் எல்லாமும் எங்கள் கைகளில் இல்லை. அனைத்துப் பதிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான இணையம் அல்லது இணைய சேமிப்பு நடவடிக்கையினை புலம் பெயர் தளத்தில் இருக்கின்ற தாயகத்தையும் தாயக மக்களையும், விடுதலைப் போரையும் உண்மையாக நேசிக்கின்ற எவராது முன்வந்து மேற்கொள்ளவேண்டும். இந்த நடவடிக்கையினை தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்ததாகவோ யாருக்கும் முண்டு கொடுப்பதற்கான நடவடிக்கையாகவோ மேற்கொள்ளாமல் உண்மையான தேசநலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்டால் எங்களால் இழக்கப்பட்ட ஆவணங்களில் மிகக் கூடிய அளவினை உலகப்பரப்பில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சின்னசின்ன பதிவுகளை, புகைப்படங்களை, ஒலி, ஒளிப்பதிவுகளை, முன்னைய வெளியீடுகளை, புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இருக்கும் மாவீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் குறிப்பிட்டதற்கு அமைய யாராவது முன்வந்து ஆவணச் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உங்களிடம் இருக்கின்ற தகவல்களின் பிரதிகளை வழங்கியும் எங்கள் தொலைந்துபோகும் வரலாற்று ஆவணங்களை மீள ஒன்று திரட்டி சேமிப்பதற்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும்.
கொந்தளிப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கையின் எதிர்காலம்
உள்நாட்டிலும் குழப்பமான நிலை. வெளியேயும் மேற்குலகின் அதிகரித்து வரும் நெருக்கடிகள்,அழுத்தங்கள். அத்துடன் இந்தியாவா சீனாவா அமெரிக்காவா தங்கள் கால்களை பலமாக ஊன்றிக் கொள்வது என்ற போட்டிகள். இந்தப் போட்டிகள் உள் நாட்டில் உருவாக்கும் குழப்பங்கள். அரசியல் கட்சிகளின் அணிப் பெருக்கம். வெளியே புலம் பெயர்ந்த தமிழர்களைக் கையாள முற்படும் மேற்கின் போக்கு என ஒரு வெப்ப வளையம். இதில் யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் எங்கே, எப்படி நிற்பது என்று தெரியாது தடுமாறிக் கொண்டும் போட்டியிட்டுக் கொண்டுமிருக்கும் நிலைமை. இதற்காக சுருக்குக் கயிறுகளோடு சில நாடுகளும் கத்தி, பொல்லு, குண்டாந்தடிகளோடு சிலநாடுகளும் சவக்குழி, பொறிக் கிடங்குகளோடு சில நாடுகளும் என்று ஒரு மாபெரும் பொறிவெளியில் இலங்கை இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிந்து விட்டது என்று யாரும் ஆறுதலடைய முடியாதபடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எல்லாமே எதிர் மறை நிகழ்ச்சிகள். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா விடாது’ என்பது உலகப் பொதுக்கூற்றல்லவா! முன்னர், நிலைமைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கு போர் இருந்தது. புலிகள் இருந்தார்கள். இலங்கை அரசாங்கம் கொஞ்சம் விலகினால் புலிகளுக்கு நெருக்கமாக வந்து (இந்த நெருக்கம் இரகசிய வழிகளிலானது) அரசாங்கத்தைப் பணியவைக்கும் உத்தியை இந்த நாடுகள் பயன்படுத்தின. அல்லது ஆட்சியிலிருக்கும் தரப்புக்கு எதிராக இருக்கும் தரப்பைப் பலப்படுத்திப் பணிய வைக்க முயற்சித்தன. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதங்களிருக்கவில்லை. எது வாய்ப்பான தரப்பு என்பதே கவனிக்கப்பட்டது. புலிகள் இல்லாத வெளியில் உருவாகியிருக்கும் புதிய சூழலில் இலங்கையின் மீதான ஆதிக்கப் போட்டிகள் மும்முரமாகி விட்டன. இந்தியா புலிகளில்லாத இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை முழுமையாக்க முயற்சிக்கிறது. இதில் அது ஏறக்குறைய பாதி வெற்றியை அடைந்துமிருக்கிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒரு வித இணைநிலை உறவைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவுக்கு இனிப்பான முறையிலேயே அது கூடுதலாக நடந்து கொள்கிறது. இதேவேளை நீண்ட காலத்துக்குப் பின்னர் (புலிகள் இல்லாத சூழலில்) தமிழ் - சிங்கள அதிகார வர்க்கங்களோடு ஒரு இணைநிலை உறவை இந்தியா இப்போது கொண்டுள்ளது. (இந்த நிலை ஒரு அமைதித் தீர்வுக்கு இலங்கையைக் கொண்டு செல்ல உதவும். அதற்கான சூழலையே இந்தியா உருவாக்குகின்றது என்று சொல்வோர் உள்ளனர். இது வேடிக்கையானது. இலங்கையில் அமைதி நிலவ ஒரு போதுமே இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான காரணங்கள் பலவுண்டு. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்). இப்போது இந்தியாவுக்கு மகிந்த அரசோடும் உறவு. தமிழ்க் கூட்டமைப்போடும் உறவு என்ற ஒரு புதிய சூழல். இது இந்தியாவைப் பொறுத்து வெற்றியே. ஆனால் ஒரு எல்லைவரையான வெற்றிதான் இது. இதற்கு எதிரில் பொறிகளோடும் அதிக முனைப்புகளோடும் மேற்குலகம் இருக்கிறது. திரை மறைவிலான முயற்சிகளோடு சீனா உள்ளது. உலக அரங்கில் நிகழும் அதிகரித்த வர்த்தகப் போட்டிக்கு இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். இதனால் அந்தத்தரப்புகள் தமக்கு வாய்ப்பான இடங்களின் வழியாகக் காய்களை நகர்த்துகின்றன. கைகளை வைக்கின்றன. கால்களை ஊன்ற முயற்சிக்கின்றன. போர் முடிந்த நிலையில் நிச்சயமாக ஒரு அமைதி இலங்கையில் இதுவரையில் எட்டப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம், அகதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருதல், போர் நிகழ்ந்த பகுதிகளை அவற்றின் பாதிப்புகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புதல், சனங்களுக்குப்; புனர்வாழ்வழித்தல், அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுதல் என்று நிலைமைகள் மேம்பாடடைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அப்படி எதுவும் எளிதில் நடந்து விடப்போவதுமில்லை. அதற்கு இந்த நாடுகள் அனுமதிக்கப் போவதுமில்லை. போர் மனித உரிமை மீறல்களுடன்தான் நடந்தது என்று இந்த நாடுகள் அனைத்துக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் போரின்போது இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா நாடுகளும் எந்தப் பேதங்களுமில்லாமல் தாராளமாக உதவின. ஆனால், போருக்குப் பின்னர் அகதிகளுக்கு உதவவும் மீள் கட்டுமானம், புனரமைப்புப் போன்றவற்றுக்கு உதவவும் இவை தயாரில்லை. இது எப்படியிருக்கிறது? தமக்கு சார்பாக நடந்து கொண்டால் தாராள உதவி என்ற கொள்கை அன்றி வேறென்ன? இதற்குத் தனியே மகிந்த ராஜபக்ஸ மட்டும் காரணமல்ல. அவருக்கு இந்தக் குறைபாடுகளில் பெரும் பங்கிருந்தாலும் அவருக்கு அப்பால் ஏனைய அரசியல் தரப்பிருக்கும் சகலருக்கும் இவற்றில் பொறுப்பும் பங்குமுண்டு. போர் முடிந்த பின்னர் இரண்டு பெரும் தேர்தல்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால், போர் முடிவுற்றதைத் தவிர நாட்டில் நிலவும் வேறு எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்ததாக இல்லை. பதிலாக இன்னும் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியென்றால், என்னதான் நடக்கிறது? இனி என்னதான் நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதுதான் சுவாரஷ்யமான பகுதி. கொலனி ஆதிக்கத்தின் போது இலங்கை போன்ற நாடுகளை பிரித்தானியா பிரித்தாளும் தந்திரோபாயத்தின் மூலம் கையாண்டது. அங்குள்ள மக்களை இன, மத, மொழி அடிப்படைகளில் வௌ;வேறு சமூகங்களாகப் பிரித்தாண்டது. இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயம் மேற்குலகின் கைவந்த கலை. இதைப் பின்னர் இந்தியா கையாளத் தொடங்கியது. இதன் வெவ்வேறு வடிவங்கள்தான், ஐ.தே.க ஆட்சியிலிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தமக்குச் சார்பாகக் கையாள்வது. அது சாத்தியப்படாதபோது ஜே.வி.பியைக் கையாள்வது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தால் அதை வளைத்துப் போடுவது. முடியா விட்டால் எதிர்த்தரப்பைக் கையாள்வது. (சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1980 களின் நடுப்பகுதியில் ஜே. ஆரால் சிதைக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி யை இந்தியா கையாண்டதை இங்கே நினைவு கூரவேண்டும்). அல்லது தமிழ்க்கட்சிகளை, இயக்கங்களைக் கையாள்வது. இது இந்தியாவின் நடவடிக்கைகள் என்றால், போரின்போது நிகழ்ந்து கொண்டிருந்த சிதைவுகளை மையமாக வைத்துக் கொண்டு மேற்குலகம் ஒரு பக்கத்தாலும் சீனா இன்னொரு பக்கத்தாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இன்னொரு பக்கத்தாலும் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தின. அதாவது போர் எப்போதும் எதிர் எதிரான இரண்டு தரப்புகளைக் கொண்டது என்பதால் இவை இப்படித் தமது காரியங்களை இடையில் நின்று மேற்கொள்ள முடிந்தது. இந்தப் பிரித்தாளும் தந்திரமானது நேரடியான கொலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து அறுபது ஆண்டுகளான பின்னரும் தொடர்கிறது. அதுதான் கவலைக்குரியது. இப்போது இலங்கை அரசாங்கம் மேற்குலகுடன் வெளிப்படையான முரண் நிலைக்கு வந்துள்ளது. மேற்குலகமும் இலங்கையை வெளிப்படையாகவே மிரட்டவும் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடுதான், புலம் பெயர் தமிழர்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பிரித்தானியப் பிரதானிகள் கலந்து கொள்வதும் இவை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் முக்கிய கவனமெடுத்துக் கருத்துரைப்பதுமாகும். இன்னும் தங்கள் தேவைகளுக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாள முயற்சிக்கின்றது இந்த உலகம். எல்லாமே அவரவர் நலன்களுக்காக மட்டுமே நடக்கின்றன. இல்லையென்றால், வன்னிப் போரின்போது ஈழத்தமிழர்கள் கொட்டும் பனியில் நின்று போரை நிறுத்தும் படியும் அங்கே கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றும் படியும் வேண்டிய போது அதையெல்லாம் கண்டு கொள்ளாத மேற்குலகம் இப்பொழுது நடக்கும் இந்தச் சிறு கூட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறதே. இது சிரிப்பாக இல்லையா? மேற்குலகின் இந்த திடீர் மாற்றம் சில தமிழருக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் இப்போது தரலாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பொதுவாகவே தமிழ் சிங்கள மக்களிடம் ஒரு குறைபாடிருக்கிறது. தமிழர்கள் வெளிச்சக்திகளால் நெருக்குவாரப்படும் போது சிங்களர்கள் சந்தோசப் படுவார்கள்;. அதாவது தமிழர்களின் மூக்குகள் உடைபடும் போது சிங்களவர்கள் சிரிப்பார்கள். சிங்களவர்களின் மூக்கு உடைபடும் போ தமிழர்கள் சிரிப்பார்கள். ஆனால், இரண்டு தரப்பினரும் தலைகளும் உடைபடுகின்றன என்பதை இவர்களில் பலரும் கண்டு கொள்வதில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். இந்திய நெருக்கடி அல்லது அழுத்தம் என்பது இப்போது மறைமுகமானது. சிநேக ரீதியானது போல தோற்றம் காட்டுவது. காரணம் மகிந்த ராஜபக்ஸ ஒரு சுதேசியாகத் தோற்றம் தருபவர். அத்துடன் பிராந்திய நாடுகளுடனான உறவில் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தைக் கொண்டவர். மேலும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்குலக நெருக்கம் என்பது புலம் பெயர் தமிழர்களின் மூலமாக இலங்கைத் தமிழர்களை அனுசரிக்க வேண்டி வரலாம் என்ற எச்சரிக்கையுணர்வை உடையவர். மட்டுமல்ல, வருகின்ற காலத்தில் மேற்குலகத்துக்குச் சவாலாக பொருளாதார ரீதியில் சீனாவும் இந்தியாவும் எழுச்சிபெற்று வருவதையும் சரியாக விளங்கிக் கொண்டு காரியமாற்றுபவர் மகிந்த ராஜபக்ஸ. எனவே அவர் மேற்குலகத்தை விடவும் இந்தப் பிராந்தியத்துடனான உறவையே அதிகம் விரும்புகின்றார். இதை மேற்குலகம் விரும்பவில்லை. அதனால் அவரை அது நெருக்குகிறது. பழிவாங்கத்துடிக்கிறது. இந்த நெருக்கடியை தனியே நின்று அவரால் ஒரு போதுமே சமாளிக்க முடியாது. அதற்கு தமிழ் சிங்கள உறவுக்கான அடிப்படைகளை அவர் சீராக்க வேணும். இல்லை என்றால் இந்தியாவிடமோ சீனாவிடமோ சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போதும் மேற்குலகம் இலங்கையைச் சும்மா விட்டு விடாது.
பிரதான கட்சிகளே தமிழர்களைக் கொன்றன
கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தன.
எனினும் ஜே.வி.பி. இதுவரையில் ஒரு தமிழரையேனும் கொலை செய்யவில்லை. தற்போது அழைக்கப்பட்டு வருவது போல, ஜே.வி.பி. ஒன்றும் இனவாத கட்சி அல்ல.
கடந்த 1983ஆம் ஆண்டு, ரோஹன விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. செயல்பட்ட போது, யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கட்சிக் காரியாலயங்களைக் கொண்டிருந்தது.
அதனையடுத்து சுமார் 27 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் தனது கிளைக் காரியாலயத்தை ஆரம்பிக்கிறது” என்றார்.
மேற்படிக் கூட்டத்தின் போது, வெறும் 40க்கும் குறைவான மக்களே வருகை தந்திருந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்களின் உறவினர்களே என்றும் கூறப்படுகிறது.
MTV - SIRASA தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்குள்ளானது.
அமைச்சர் ஒருவரின் அடியாட்களான குழுவொன்று மகாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான பிரேவூட் இடத்தில் அமைந்துள்ள MTV , SIRASA TV தொலைக்காட்சிகளின் தலைமைக்காரியாலயத்தின் மேல் தாக்குதல் நாடத்தியுள்ளனர். சுமார் 100 பேர் கொண்ட குழு அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நாடத்தியுள்ளது. இத்தாக்குதலில் கட்டடத்தின் கண்ணாடிகள் பலவும் நொருங்கியுள்ளதுடன், அங்கு தரிந்துநின்ற பல வாகனங்களும் சேதமாகியுள்ளதாக தெரியவருகின்றது. காடையர்களின் தாக்குதலை எதிர்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் திருப்பித்தாக்கியபோது அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடம்திற்கு விரைந்;த பொலிஸார் கலககாரர்களில் சுமார் 16 பேரைக் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர்களின் சிலர் தாம் அமைச்சர் மேவின் சில்வாவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர். சம்வத்தை தொடர்ந்து எதிர்கட்சி , ஆழும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!
21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன. புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அனைவரும் அவற்றையெண்ணி அதிர்ச்சி, அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. மேற்குலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியும், இந்தியா, சீனா ஆகியவற்றின் வளர்ச்சியும் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தாலும், மற்றைய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்த அணுசக்தி வல்லமை இன்று சீனா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து தாண்டி ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் வரும் வாய்ப்பில் உள்ளன. கணணியின் வளர்ச்சி இன்று ஒவ்வொரு நடுத்தர வசதியுள்ள வீட்டிலும் உணரப்படுவதால் உலகத்தின் தொடர்புவலைப்பின்னல் ஒரு மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது. இங்கு ஆராயப்படும் விடயம் 100க்கு 90 வீதம் ஓர் அரசியல் சார்பானதாக இருந்தாலும், அதைப்பாதிக்கக்கூடிய பல காரணிகள் உருவாகுவதைக் காணலாம். முக்கியமாக பொருளாதார, இராணுவ அரசியல் காரணிகள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்று. இந்தியா தனது அண்டை நாடாகிய இலங்கையை, சுதந்திரமடைந்த அன்றைய தொடக்க காலத்தில் ஒரு சினேகித நாடாக நோக்கியிருக்கலாம். தற்போதய நிலையிலும்கூட இலங்கையை நேச நாடாக இந்தியா நோக்கவில்லை எனக்கூற முடியாது. ஆனால் துரதிர்ஷடவசமாக இலங்கையோ, இந்தியா தனது நேச நாடாக இருக்கவேண்டும் என அன்று தொடங்கி இன்றுவரை நினைத்ததாகச் சான்றுகள் இல்லை. சுமார் 5 இலட்சம் இந்தியர்களின் பிரஜாவுரிமையைப் பறிமுதல் செய்த இலங்கை, மிகுதியாகத் தங்கியிருந்தோர்களில் 40 விகிதத்தினர்க்கு மட்டுமே தனது குடியுரிமையை வழங்கியது. இந்திய-பாகிஸ்தான் யுத்தங்களிலும் இலங்கையின் எதிர் நிலைப்பாடு உலகறிந்த விடயம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் பரம எதிரிகளான, பாகிஸ்தானுடன் பாரிய நட்பைக் கொண்டும் சீனாவைத் தனது ஞானபிதாவாகப் பூஜிக்கும் இலங்கையரசை வேறென்னவென்று கூறமுடியும்? இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளினுள், தற்பொழுது, ஒரு நாடாவது இந்தியாவை ஆதரித்தோ அல்லது நட்புடனோ இருக்கிறதா என்றால் அதற்கு எதிரான பதில்தான் கிடைக்கும். சுருங்கக்கூறின் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்பது போல அவை அனைத்தும் ‘பகை நாடுகளே’ என்று கூறின் அது மிகையாகாது. வாழ்க இந்தியாவின் இராஜதந்திரம்!
எது எவ்வாறாகினும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் இருக்கும் இந்தியாவில் அதன் உள்நாட்டிலேயே அல்கொய்டா அச்சுறுத்தல்களும், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் சீனாவின் ஆதரவுடன் கூடிய விடுதலை நோக்கிய எழுச்சிகளும், மத்திய அரசுக்கு ஒரு தலையிடியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படியான குழப்பநிலையில் ஈழத்தமிழினத்தின் விடுதலை வெற்றியடைந்துவிட்டால், இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களும் ஈழத்தமிழினத்தை பின்பற்றிவிடுவார்களோ என ஐயம் கொண்டு, ஈழதமிழின அழிப்புக்கு இந்தியா துணை போனது என்று கொள்ளலாம். இது இவ்வாறிருக்க, இத்தகைய ‘தற்காப்பு’ மனப்பான்மையுடன் தொடர்ந்து இந்தியாவால், ஈழத்தமிழினத்தை அலட்சியம் செய்ய முடியுமா என்பது இந்நேரத்தில் ஓரு சர்ச்சைக்குறிய விடயமாகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் பொருளாதார, இராணுவ வளர்ச்சியும், இந்தியாவைச் சூழ்ந்த பகுதிகளிலும், முக்கியமாக இந்து சழுத்திரத்திலும்;, சீனா திடிரெனச் செலுத்தும் ஆதிக்கமும் எனலாம். இந்தக் கோணத்தில், சீனாவின் ‘முத்துமாலை வியூகம்’ இராணுவ வட்டாரங்களில் தற்போது பலமாகப் பேசப்படும் ஒன்றாகும். அத்துடன், அம்பாந்தோட்டைத் துறைமுகமும், கச்ச தீவிலும் (பால தீவிலும் உட்பட) சீனாவின் ஆதிக்கமும் இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழ் நாட்டின் சேது சமுத்திரத் திட்டத்தையே சீனாவின் நடமாட்டம் பாதிக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் சீனாவின் ஆதிக்கம் பொதுவாக இந்தியா முழுவதையும் பாதிப்பதோடு, தமிழ்நாடு, கேரளம் ஆகிய கடல் சார்ந்த மாநிலங்களின் பாதுகாப்பையும் பாரிய அளவில் பாதிக்கும். இந்தியாவிற்கும், மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் தேவையான ஆப்பிரிக்க–தூரக் கிழக்கைத் தொடுக்கும் வழங்கற் பாதையானது (இந்து சமுத்திரம்), அவர்களின் எண்ணை, வாயு போன்ற முக்கிய எரிபொருட்களைக் கொண்டு செல்லத் தேவையானதாகும். இத்தகைய முக்கிய வழங்கற்பாதையின் ஆதிக்கத்தைச் சீனாவிடம் இழக்க யாரும் விரும்பமுடியாது. பரந்து விரியும் உலக வாணிபத்தில், மேற்கு நாடுகள்கூட இவ்விடயத்தில் கரிசனையாக இருப்பதைக் காணலாம். அதே சமயத்தில், சீனா இத்தகைய நடவடிக்கையில் மும்முரமாகச் செயற்பட வேண்டிய காரணங்கள் யாவென ஆராய்ந்தால், சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வரலாம். 1. பொருளாதார ரீதியில், சீனா உலகின் ஈடுஇணையற்ற நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், சீன மக்களின் விடா முயற்சியும், சிறந்த கல்வியும், மலிவான உற்பத்தித்திறனும் ஆகும். அத்துடன் சீனாவின் ஊழலற்ற அரசியல் நிர்வாகம் அந்நாட்டை ஒரு தனித்துவமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அந்த பிராந்தியத்தில், தனக்கு ஆடுத்தப்படியாக இருக்கக்கூடிய நாடு இந்தியா என்பதால், பொருளாதாரத் துறையில் இந்தியா வலுவாக முன்னேறுவதைத் தடுத்தால், ஆசியாவில், உலகிலும்கூட சீனா ஒரு தனி உரிமையைப் பெறும் நிலை (ஆழnழிழடல) ஏற்படலாம். 2. ஆபிரிக்கா தூர கிழக்கு நாடுகளின் வழங்குப்பாதையான இந்து சமுத்திரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சீனா உலகின் எண்ணை, வாயு ஆகிய எரிபொருள் சக்திகளின் வினியோகத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கலாம். 3. சீனா இந்தியாவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து முறுகல் நிலையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற எல்லைப் பிரச்சனைகள் இன்னும் தீர்வின்றி சீனாவை உறுத்தி வருகின்றன. 4. பாகிஸ்தானுடன், இந்தியாவின் எதிர்போக்கான அணுகு முறைக்கு சீனாவும் பாகிஸ்தானும் கொண்டிருக்கும் நட்பு ஆசியா கண்டத்தில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 5. திபேத் பிரதேசத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவிற்கு ஏற்றதாக இருக்க முடியாது. 6. இந்தியாவின் அணு சக்தி முன்னேற்றம், சீனாவை (தான் ஒரு அணு சக்தி நாடாக இருந்த போதிலும்) ஓர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலையில் தள்ளும். 7. இலங்கையின் பொருளாதாரச் சீர்கேடு (விடுதலைப்புலிகளின் யுத்தத்தினால் ஏற்பட்டதால்)சீனாவை இந்தியாவுக்கு அண்மையில் சுலபமாக ஈர்க்க முடிந்தது. மேற்கூறிய காரணிகளைக் கருத்தில் கொள்ளும் சீனா, தனக்குச் சாதகமாக இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகளில் இறங்கியது வியப்பினை ஏற்படுத்த முடியாது. எனினும் சீனாவின் இந்த நடவடிக்கையை ஈடுசெய்ய இந்தியாவால் முடியுமா என்பதுதான் இந்திய அரசியல்வாதிகளை மட்டுமின்றி, மேற்குலக அரசியல்வாதிகளைக்கூட விழி பிதுங்க வைக்கும் கேள்வியாகும். இந்து சமுத்திரத்தைத் தக்க வைக்க வேண்டி வந்தால், இந்தியாவுக்கு, இலங்கையில் முழுதாகவோ அல்லது பாரிய ஒரு பகுதியிலோ பூரண ஆதிக்கம் தேவை என்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தக் கோணத்தில் நோக்குமபோது, இலங’கைத் தீவில், தமிழீழக் கடற்பரப்பு மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்குகிறது என்பது முக்கியம். இலங்கை அரசை இனித் தனது கட்டுப்பாட்டிற்குள் நட்புரீதியாக ஆயினும் கொண்டு வருவது என்பது தற்போது இந்தியாவிற்கு குதிரைக் கொம்பு ஆகும். சீனாவின் பொருளாதார அழுத்தம் இலங்கையச் சீனாவுக்கு மீளா அடிமை ஆக்கிவிட்டதை உலகம் முழுவதுமே நன்கு அறியும். இந்த நிலையிலிருந்து இலங்கையை எவருமே மீட்க முடியாது. இன்று, இந்து சமுத்திரத்தின் விதி ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம். இந்தியாவின் தென்புறத்தில் உள்ள இலங்கை சீனாவின் கட்டுப்பாட்டில் நாளுக்கு நாள் விழுங்கப்படும் நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு அதையொரு நுழைவாயிலாகப் பாவிக்கலாம் எனும் நப்பாசையில் சில சக்திகள் இருக்கலாம். இந்தியா கூட இந்த எண்ணத்திற்கு விதிவிலக்காக முடியாது. ஆனால், இதனை இராஜதந்திர முறையில் எவ்வாறு அணுகலாம் என்பதே ஒரு பொன்னான கேள்வியாகும். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன், இந்தியா தனது ‘பழைய வெளிநாட்டுக் கொள்கைகளை’ அறவே கைவிட வேண்டும். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையைக் கிள்ளும் போக்குக்கூட இனிப் பயனளிக்காது போகலாம். காரணம், இந்தியா ஒரு சமஷ்டித் தீர்வினை தமிழர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சில பிரமுகர்களைத் திருப்திபடுத்தி இலங்கையரசின் அரைச்சம்மத்ததைப் பெற்றாலும் 1. அத்தகைய தீர்வால் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. 2. அது தமிழ் மக்களின் போராட்ட உணர்வினை முற்றாக மழுங்கடித்துவிடும் என்று திட்டவட்டமாக ஒருபோதும் கூறமுடியாது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்த் தியாகத்தின் பின் ‘காலம் கடந்த சமஷ்டியை’ ஏற்பது, ‘மலையைக் கல்லி எலியைப் பிடித்தது’ போல் ஆகிவிடும். 3. இராஜபக்சே அரசு சொல்லளவில் சமஷ்டியை ஏற்றாலும், நடைமுறையில் அதை அமுல்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் கதியை எல்லோரும் அறிவர். 4. இந்தியாவின் பழைய தமிழீழத்திற்கெதிரான பிடிவாதக் கொள்கைக்கு வலுச்சேர்பது என்பதே இதன் பலனாகலாம். ஆனால் இராஜதந்திர முறையில் போக்கு சரியானதா என நோக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியோ, அல்லது சுயநிர்ணயமோ எழுத்தளவில் அப்படித் தீர்க்கப்பட்டாலும் கூட அது இந்தியாவின் பூகோள நிலைமையைச் சீர் செய்யுமா என்பதே முக்கியமாகும். ஏனெனில், இத்தகையத் தீர்வை இறுதியில் ஏற்கும் சிலர் இந்தியாவின் ‘கட்டுப்பாட்டில்’ இந்தியாவுக்கு ‘விசுவாசியாக’ இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வலு இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைப் பாதிக்க ஒருபோதும் முடியாது. ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட இலங்கையின் முழு ஆட்சியுமே இராஜபக்சேவினால் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இத்தகைய ‘பிச்சைக்கார அதிகாரத்துடன்’ தமிழ்த் தலைவர்களோ, தமிழ் மக்களோ, இந்தியாவையோ, இந்து சமுத்திரத்தையோ மீட்கவோ, கண்கானிக்கவோ ஒருபோதும் முடியாது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது அரைகுறைத் தீர்வைக் கொடுப்பதன் மூலம் இந்தியா தன்னைத்தானே ஏமாற்றினால் ‘தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை’ என்ற கதை போலாகிவிடும். இதற்கு மாறாக ஏதோ ஒரு காரணத்தால் இந்தியா தமிழீழக் கொள்கையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் இனஅழிப்பை நிறுத்தி, ஒரு புதிய அரசியற் பாதையைத் திறப்பதாக வைத்துக்கொன்டால் அதன் பெறுபேறுகளைக் கீழ்கண்டவாறு நோக்கலாம். 1. தமிழீழத்திற்கு தனது சொந்த வான், காலால், கடற்படைகளை வைத்திருக்கும் உரிமை கிடைக்கும். 2. தமிழ் மக்களின் கல்வித்திறன் உலகம் முழுவதிலுமே நற்பெயர் பெற்றிருக்கும் நிலையில், சிறிய நாடாக இருந்தாலும் அது வலுவுள்ள தொழில்நுட்பம் சார்ந்த படைத்திறனை உடையதாக இருக்கும். 3. தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டதால், அதனுடன் நேசநாடுகளாகப் பல நாடுகள் கூட்டுச்சேர முன்வரும். 4. தமிழீழத் தனியரசால் மட்டுமே சேதுத் சமுத்திரத் திட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். 5. வடக்கே இருக்கும் தமிழ் நாடு, கேரளா ஆகிய கடல் எல்லையில் உள்ள மாநிலங்களின் பாதுகாப்புடன் இந்து சமுத்திரத்தை தமிழீழ அரசு இந்தியாவுடன் சேர்ந்து கண்கானிக்கும். 6. தமிழ் மக்களின் போர் வலிமையை உலக நாடுகள் அனைத்தும் கடந்த 30 வருடமாக நடந்த போரின் மூலம் அறிந்தமையால், சீனா போன்ற நாடுகள் (அணுச் சக்தியில்லாத) சிறிய ரகப் போரை இக்கடற்பரப்பில் தொடுக்க பின் வாங்கும் (உலக அழிவைத் தவிர்ப்பதற்காக, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகளும் நடைமுறையில் அவற்றைப் பாவிக்க மாட்டா). 7. இலங்கையின் கடலோரப் பகுதியில் மூன்றில் இரண்டை தமிழீழக் கடற்பரப்பு கொள்வதால், இந்து சமுத்திரத்தைக் கண்கானிப்பது தமிழீழ அரசிற்கு பெரிய பிரச்சனையாக இருக்க முடியாது. எனவே, இதனால் தென்னிந்தியக் கடற்பரப்பின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும். 8. தமிழர்களின் பிரச்சனை முற்றாக தீர்க்கப்பட்ட நிலையில் மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் அனாவசியமாகத் தலையிடும் வாய்ப்புகள் குறையும். 9. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய ஒரு நாட்டையும் தனது நட்பு நாடாக இந்திய இராஜதந்திரத்தால் மாற்றமுடியாது. ஆனால், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பாரிய அழிவின் பின்னும் தமிழீழத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியா தனது தென்பகுதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்நடவடிக்கை தமிழகத்திலும் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்த உதவும். 10. ஆசியா உபகண்டத்தில் நடைபெற்ற ஈழமக்களின் இனஅழிப்பைக் கண்டிக்காது ஆதரித்து வந்த இந்தியா, அதற்கேற்ற தகுந்த பரிகாரத்தை மேற்கொள்ளாவிடின் அது ஐ.நா.வின் நிரந்தர பாதுகாப்புச் சபைக்குள் நுழையும் வாய்ப்பையும் வலுவாகப் பாதிக்கலாம். எனவே, இந்தியா தனது சொந்த நலன் கருதியாவது, தமிழ் மக்களின் தமிழீழக் கொள்கையை பூர்த்திச் செய்வதே அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தற்போது எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அதனையும் சீனா வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமிக்கும் முன் விரைவுப்படுத்துவதன் மூலம் இதன் முழுப்பலனையும் அடைவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு. முள்ளிவாய்க்காலின் அழிவும் பின்பும் உலகத் தமிழ் மக்கள் தமது வாக்கெடுப்பின் மூலம், தமிழீழக் கொள்கையை மீளுறுதி செய்ததோடு, உலகில் உள்ள 9 கோடி தமிழ் மக்களையும் ஒன்று சேர்க்கும் திராணியுள்ளவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நலனுக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், உலகில் எவருக்கும் தமது வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லையென்பதைப் பல நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்தியாவும் இதை உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி. (Courtesy:Pathivu)
போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைப்பதில் பான் கீ மூன் உறுதி
சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களை தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறீலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம்பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இதனிடையே சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து தனக்கு ஆலோசனைகளை வழங்கும் குழுவை அமைப்பதில் பான் கீ மூன் தீவிரமாக உள்ளதாகவும், அந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்கள் குறித்து நவநீதம்பிள்ளையுடன் அவர் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நாவின் இணைப்பு பேச்சாளர் பார்ஹான் ஹாக் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 21 மார்ச், 2010
புத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை
இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (ஐ.க்யூ பவர்) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும், ஐ.க்யூ. திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது.
ஆயிரக்கணக்கான டீன் ஏஜ் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆய்வின்போது அனுபவ அடிப்படையில் சோதிக்கப்பட்டனர். அப்போது புத்திசாலிகள் (அதிகமான ஐ.க்யூ. திறன் பெற்றிருந்தவர்கள்) பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் திறந்த மனதுடன் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், மற்றவர்களில் இருந்து விதிவிலக்காக அவசியமற்றவற்றை ஒதுக்குபவர்களாகவும் இருந்தனர். பாலியல் ரீதியிலும் விதிவிலக்காகவே உள்ளனர்.
இந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுள்ள பெண்களுக்கு சம்பந்தமில்லை. அவர்களிடம் இருந்து சாதகமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
புத்திக்கூர்மை உடையவர்கள் எண்ணங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று புதுமையான சிந்தனை உடையவர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திறந்த மனப்பான்மை உடையவர்கள் மற்றும் நாத்திகவாதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






