புதன், 31 மார்ச், 2010


மண்எண்ணெய், பெற்றோல் மடைக்கதைகளுக்கும் பிரபாகரன் பெயரை பயன்படுத்தும் அரசு

நான் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை. தாய்நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டும் என்றே கருதினேன். அதற்கு முதலில் பிரபாகரனை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்போதே அது சாத்தியமாகும். அதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்” என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவையில் சகலரும் அமைதியாக இருந்த போது நான் குரல் கொடுத்தேன், பிரச்சினையை கண்டு முகமூடி அணியவில்லை. பிரச்சினைக்கு முகம்கொடுத்தேன். தேர்தல் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளமைதான் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “யுத்தத்திற்காக 2008 ஆம் ஆண்டில் 470 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டு 250 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரிகள் அதிகரிக்கப்பட்டு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. தற்போது பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு முழுமையாகவே வரி அறவிடப்படுவதில்லை. பருப்பு மற்றும் சீனி போன்ற பொருட்களுக்கு அறவிடப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. எனினும் இம்முறை குறைவடைந்துள்ளது. இதுவே எனக்குப் பிரச்சினையாக இருக்கின்றது. பொருட்களின் விலைகள் குறையாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சந்தோஷமாக இருந்திருக்கும். அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுத்தோமே தவிர அமைச்சுப் பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்குச் சேவையாற்றவேண்டும் என்ற நோக்கிலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன். காஸ் விலை குறைக்கப்பட்டமையினால் நுகர்வோர் மாதத்திற்கு 300 ரூபாவினையும் பெற்றோல் விலை குறைந்தமையினால் 100 லீற்றர் பெற்றோலை பாவிக்கும் ஒருவர் 4200 ரூபாவையும், டீசல் விலை குறைக்கப்பட்டமையினால் 50 லீற்றர் டீசலை பயன்படுத்தும் ஒருவர் 1800 ரூபானையும் மீதப்படுத்த முடிந்துள்ளது” என்றார்.

சிறீலங்காவின் உறவு தொடர்பில் எதிர்காலததில் கவனிக்கவேண்டிய விடயங்கள்: டேவிட் மிலிபாண்ட்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறீலங்காவின் உறவுநிலை தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய விடயங்கள் பற்றி தெரிவித்துள்ளார். வன்முறைகளை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வன்முறைகள் எந்த நாட்டுக்கும் சமூகத்திற்கும் உதவப்போவதில்லை எனவும் அதனை கட்டுபடுத்தவேண்டும் எனவும் இரண்டாவதாக மனித சமூக பொருளாதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் சமமான தரப்பில் கையாளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக ஐனாதிபதி தேர்தல்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் கவலை வெளியிட்டுள்ளார். ஒரு சமூகத்தில் சிறந்த ஐனநாயகம் தேர்தல்களை நடாத்துவதில் மாதிரமல்லாமல் சுதந்திரமாக தகவல்களை வெளியிடுவதிலும், சுதந்திரமான நீதித்துறையிலும் இருந்துதான் உருவாகிறது என மேலும் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் சகல மக்களையும் சமமாக மதித்து சமஉரிமையுடன் வாழக்கூடியவகையில் காப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் இது ஒருசவாலான விடயம் எனவும் சிவில் சமூதாயத்தில் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை மதித்து நடப்பது முக்கியமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசாங்கத்துடன் வர்த்த உறவுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் வர்த்தக சலுகைகளை வழங்குவதில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பார்க்கப்படுவதால் சிறீலங்காவிற்கு அச்சலுகைகளை வழங்குவதில் இருந்து பலவந்தமாக சலுகைகளை நிறுத்தவேண்டியேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் இவ்விடயங்களில் இந்தக்காலப்பகுதியில் கவனம் செலுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பியும் முடியாத துயரம்

சிறிலங்கா அரசு 1.9 லட்சம் இடம்பெயர்ந்த தமிழர்கள் மீள்குடியேறி விட்டதாக அறிவித்து வருகின்றது. ஆனால் பல ஆயிரக்கணக்கான மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. ராணுவ பாதுகாப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டதை மட்டுமே மீள்குடியேறியதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது வசிப்பிடங்களை அமைப்பதற்கான உதவியாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் [UNHCR] இதுநாள் வரையும் வழங்கி வந்த உதவியினை இடைநிறுத்தியிருக்கிறது. தமது அமைப்புக்கான நிதி வழங்கல்கள் குறைந்திருப்பதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்தே அகதி முகாம்களில் இருப்பவர்களும் மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பிற உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படும் பெண்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை எதிகொள்ள வேண்டிய அவலமும் நீடிக்கிறது. போரினால் கணவனை இழந்த மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தங்கள் கணவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளில் குடியேறும் இந்த பெண்கள் மீள்குடியேறிய பகுதிகளில் தங்களுக்கு ஏற்படக்கூடிய சட்ட விரோத செயல்களை நினைத்து அச்சமும் மிகுந்த கவலையும் அடைந்துள்ளதாக ஐ.நா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மீள்குடியேறி வரும் பகுதிகளில் சரியான குளியல் மற்றும் கழிப்பிடங்கள் இல்லாதது இந்த பெண்களுக்கு மேலும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற நிலையையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளதுடன் அவர்கள் அந்தரங்கங்களை பாதுகாக்க தனியாகவும் ஆபத்து நிறைந்த நிச்சயமற்ற பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய அவசியத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். முகாம்களிலேயே பரிசோதனை செய்யப்பட்ட பின்னரும் கூட முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் விடுதலை புலிகளுடனான தொடர்பு குறித்த கேள்விகளை தாங்கள் எதிர்நோக்கியதாகவும் அவை ராணுவம் மற்றும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக மீள்குடியேறி வரும் மக்களுக்கும் அந்த பகுதிகளில் உள்ள காவல் துறை மற்றும் ராணுவத்திற்குமிடையே மொழிப்பிரச்சினையும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீள்குடியேறிய பகுதிகளில் வாழ்க்கைதரம் மற்றும் அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருந்த போதிலும் கூட உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த மக்கள் முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்கு வந்தது பொதுவாக சற்று திருப்தியளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எதிரிகளை இனம்கண்டு சிங்களத்தை எதிர்கொள்ளுமா நாடு கடந்த தமிழீழ அரசு...?

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்ட ஸ்ரீலங்கா புலனாய்வு அதன் அறிகுறியாக கனடா மற்றும் ஜெர்மனியில் அதன் புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விட்டு புலம் பெயர் மக்களிடையே பிளவை ஏற்ப்படுத்தி வருகிறது. மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் செயற்பட்டதைப் போன்று பிரித்தானியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் ஸ்ரீலங்கா புலனாய்வு செயல்பட முடியாத காரணத்தினால் பணத்திற்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் விலை போகும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இலங்கைக்கான ஜெர்மனி நாட்டின் தூதர் ஜெகத் டயஸ் கடந்த வாரம் லண்டன் வந்து இருப்பதாக தகவல் கசிகிறது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும் எனும் சூத்திரத்தை பரிசீலித்து பார்க்க நாடு கடந்த அரசாங்கத்திட்க்கு அரணாக இருப்பவர்களையும் தூணாக தாங்கி நிற்பவர்களையும் முதலில் இனம் கண்டு அவர்களை பேரம் பேசி தங்கள் வலையில் வீழ்த்த சதித் திட்டம் நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்க உயர் மட்டத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அச்சம் கொண்டு பார்க்கும் இலங்கையும் இந்தியாவும் முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என சதி திட்டங்களை வகுத்து வருகின்றன. சகல நாடுகளிலும் உள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கட்டமைப்பின் இறுக்கம் குறித்தும் தற்பொழுது புலனாய்வு அமைப்புக்கள் தகவல் திரட்டி வருகின்றன. இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம் என தெரிவித்துள்ளன.


இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியாகக் கருதலாம்!

இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 62 அயல் நாடுகளின் ஆதரவுகளை பெறுவது அவசியமானது. அதனை ஈரான் முன்னெடுத்து வருகின்றது. முஸ்லீம் உலகத்தின் ஆதரவுகளை இந்தியா பெற மேற்கொண்டுவரும் முயற்சிகள் அண்மைக்காலமாக தோல்வியடைந்து வருகின்றன. சவுதி அரேபியாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தோல்வியுடன் திரும்பியுள்ளார். துருக்கி அரச தலைவரை இந்திய அழைத்துள்ள போதும், அவரும் இந்தியா வருவதை விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்த்தானை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியா ஈரானுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயன்றபோதும் ஈரான் அதில் அக்கறை கொள்ளவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், அதனை இரு தடவைகள் மாற்றி அமைத்த ஈரான் பின்னர் அதனை கைவிட்டுள்ளது. எதிர்கால விஜயம் தொடர்பிலும் எதனையும் ஈரான் தெரிவிக்கவில்லை. அணுசக்தி திட்டத்தின் மீதான தடை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தனது ஆதரவுகளை தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவுக்கான 6 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்தையும் ஈரான் இரத்துச் செய்துள்ளது. இந்த எல்என்ஜி திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது. இதனிடையே இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவுகளும், ஈரானை கடும் விசனமடைய வைத்துள்ளது. இந்தியாவின் இரட்டை அணுகுமுறைகள் ஈரான் விடயத்தில் தோல்வி கண்டுள்ளது. பாகிஸ்த்தானின் பிரச்சனையானது புதுடில்லிக்கு சிக்கலானது. 1980 களில் ஈரானும், பாகிஸ்த்தானும் போட்டியான நாடுகள். தமது அனுபவங்களில் இருந்து அவர்கள் தற்போது பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர். மன்மோகன் சிங்கின் ஈரான் விஜயம் தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், தற்போது அதில் அக்கறை அற்ற நிலையில் ஈரான் உள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் பல வேற்றுமைகள் தோற்றம்பெற்று வருகின்றபோதும், ஒரு விடயத்தில் இரு நாடுகளும் ஒரே கொள்கையை கொண்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோ படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் தான் இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன. ஆப்கான் பிரச்சனை தொடர்பாக இஸ்ரன்புல் பகுதியில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படவில்லை. இந்த மாநாட்டை ஈரான், பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகள் ஒழுங்கு செய்திருந்தன. இது தொடர்பில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவுக்கு இரண்டாம் தர வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரானில் இருந்து பாகிஸ்த்தான் ஊடாக எண்ணை விநியோக குழாய்களை அமைப்பதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. பாகிஸ்த்தானில் இருந்து ஈரானின் தலைநகருக்கு தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு துருக்கி பல பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்த்தானுடன் தாஜிகிஸ்தான் மற்றும் உபெஸ்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் வீதிகளையும் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லீம் உலகத்தின் இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்புரிமை பெறும் இந்தியாவின் கனவும் கலைந்து விடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சொல்வதொன்று செய்வதொன்று என எப்பொழுதுமே இரட்டை நிலையை கையாண்டு வரும் இந்தியா மீது மேற்குலகின் முக்கிய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ளன.இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்தாலும் இந்தியா அல்லாத மாற்று சக்தியினால் மேற்குலகின் நலன்கள் பாதுகாக்கப்படுமிடத்து இந்தியாவை மேலும் தனிமைப் படுத்தும் ஒரு நிகழ்வாகவே இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு அமையலாம். சீனா ரஷ்ய விசயங்களில் ஆர்வம் காட்டும் மகிந்த இந்தியாவினால் மகிந்தவுக்கு இரண்டு முறை விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் மகிந்தவினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்தவின் இத்தகைய நிலைப்பாடு சீன, பாகிஸ்தான், ரஷ்யவுடன் இணைந்த முஸ்லிம் நாடுகளின் கூட்டு நடவடிக்கையாகவே கருத வாய்ப்புண்டு. இந்தியாவை 26 துண்டுகளாக உடைப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க முடியும் என தெரிவித்துவரும் சீனா தற்போது முஸ்லீம் நாடுகளை தனது பக்கம் திருப்பியுள்ளது இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படுகின்றது.

செவ்வாய், 30 மார்ச், 2010

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய “எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம்” அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர்…? யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரவோடு இரவாக ஒரு காரியம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவமே அது. இது தற்செயலானதொரு சம்பவம் அல்ல. அதேவேளை வர்த்தக நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு காரியமும் அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு- ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் விட்டு வைக்காது- அவற்றைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றதையும் அரசு விரும்பவில்லை. இந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும்” என்று அரசாங்கம் கூறியதன் பின்னணியில் தான் இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள் நடக்கப் போவதில்லை. அப்படி நடந்தால் கூட அதற்குக் காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படப் போவதும் இல்லை. காரணம் இப்போதைய சூழ்நிலை அப்படியானது. திலீபனின் நினைவுத்தூபியை உடைத்த சக்திகளின் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது யாழ்ப்பாண மக்களிடையே மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவரிடமும் தோன்ற ஆரம்பித்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் கட்டியமைக்கப்படும் புதிய புதிய நினைவுச் சின்னங்களும், தமிழரின் வழக்கில் இல்லாத பௌத்த மத சின்னங்களும் பல்வேறு அச்சங்களைத் தோற்றுவித்துள்ளன. தமிழ் மக்கள் மீதான இன அடக்குமுறை வேறொரு வடிவத்தை அடைந்து கொண்டிருப்பதன் சாட்சியாகவே இவை அமைந்துள்ளன. இனக்கலவரங்கள், போர் ஆகியவற்றின் பெயரால் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பற்ற சூழல் நிலவுவதால், தமிழரின் வரலாற்று- பாரம்பரிய அடையாளங்களையும் கலாசாரப் பின்னணிகளை விளக்கும் நினைவுச் சின்னங்களையும் அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே திலீபனின் நினைவுத்தூபி சிதைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசிடம் நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபனின் நினைவுத் தூபியை எங்கிருந்தோ வந்தவர்கள் சிதைப்பதை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு தமிழரின் நிலை வந்து விட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. அதற்கான துணிவும் யாரிடமும் இருந்ததில்லை. ஆனால் தமிழரிடம் இருந்த ஆயுதபலம் என்ற கவசம் உடைக்கப்பட்ட பின்னர் தான் இப்படியொரு துணிவு அவர்களுக்கு வந்திருக்கிறது. * புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிங்களச் சமூகமோ சாதிக்கப் போவது எதுவுமில்லை. அது வரலாறு. புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போர் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தொன்று. அந்த வரலாற்றை யாரும் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதற்கான வலு இலங்கை அரசிடமோ சிங்கள சமூகத்திடமோ கிடையாது. புலிகளினதோ தமிழரினதோ வரலாற்று அடையாளச் சின்னங்களை சிதைத்து விடுவதன் மூலம் தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என்று கருதுவது வியப்பானது. ஏனென்றால் இந்த வரலாற்று- நினைவுச் சின்னங்களில் இருந்து தான் உரிமைக் கோரிக்கைகள் பிறப்பெடுக்கப் போவதில்லை. அது தமிழரின் இரத்தத்தில் ஊறிப் போயிருப்பது. தமிழரின் வரலாற்று- நினைவுச் சின்னத்தில் இருந்தா புலிகளின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது? இல்லையே. புலிகளின் நினைவுச் சின்னங்களை- அடையாளச் சின்னங்களை சிங்கள மக்கள் வியப்புடன் பார்ப்பதை அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் தான் இந்த நினைவுச் சின்னங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச ரீதியாக போர் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் என்று ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்களின் கல்லறைகளையோ நினைவுத்தூபிகளையோ அழிக்கக் கூடாது என்பதே அது. இந்த உயர் விழுமியம் இப்போது இலங்கையில் செத்துவிட்டது. தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம் அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர் அதற்கு மாறான செயல்களின் ஈடுபடுகின்றனர். புலிகளைப் போன்றே அவர்களின் நினைவுத்தூபிகள் கல்லறைகளையும் சிதைத்து விடுவதன் மூலம்- புலிகளின் கனவு, அவர்களின் நினைவுகளையும் இல்லாது அழித்து விடமுடியும் என்று கருதுகிறது அரசாங்கம். புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு எதிரானது- அவர்களின் சுதந்திரத்துக்கு தடையாக இருந்தது- தமிழரின் நலனுக்கு விரோதமானது என்ற, அரசின் வாதங்களும் பிரசாரங்களும் உண்மையாக இருக்குமேயானால் இத்தகைய நினைவிடங்களையிட்டு ஒரு போதும் அது கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளை இந்த நினைவிடங்கள் அடையாளச் சின்னங்களை அழிப்பதன் மூலம் தமிழரின் மனங்களில் இருந்து புலிகள் பற்றிய நினைவுகளை அழித்து விடலாம் என்று கருதினால் அதுவும்; முடியாது. * ஏனெனில் புலிகள் இயக்கம் கடந்த முப்பதாண்டு காலம் தமிழரினது வாழ்வுடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது. தீதோ நன்றோ அது தவிர்க்க முடியாதாக அமைந்திருந்தது. அதைவிட புலிகள் என்ற பிரமாண்டத்தைக் காண்பித்தே அரசாங்கம் தனது படைகளின் வீரதீரத்தை எடுத்துக் கூற முடியும். புலிகள் என்பது மாயை- என்று அதன் அடிச்சுவட்டை அழித்து விட்டால் புலிகளை அழித்ததற்கான பெருமை இலங்கைப் படைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் திலீபனின் நினைவுத்தூபியைச் சிதைத்துள்ளனர். இது அநாகரீகத்தின் உச்சம் என்றால் மிகையில்லை. இரவோடு இரவாக நடந்து முடிந்த இந்தக் காரியத்தை யாழ்ப்பாண மாநகரசபை பார்த்துக் கொண்டிருந்ததா அல்லது பின்னணியில் இருந்ததா என்பது கேள்வி. ? அப் பிரதேசத்தை நிர்வகிப்பது யாழ்ப்பாண மாநகரசபை தான். அதன் நிர்வாகம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிம் இருப்பதால் மௌனம் காக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் நடந்திருக்கின்ற இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது. * யாழ்ப்பாணம் தமிழரின் தொன்மையான பண்பாட்டுப் பூமி. அதற்குள் புகுந்து தமிழரின் உரிமைக்காக- அமைதி வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஒருவரின் நினைவுத்தூபியை உடைக்கும் சக்தி யார் யாருக்கோ எல்லாம் வந்து விட்டது. இது தமிழ் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கின்ற போக்கின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிரான இன ரீதியான காழ்ப்புணர்வுகள் மறைந்து போகவில்லை என்பதன் வெளிப்பாடு இது. அதுவும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இப்படியொரு காரியத்தை செய்யும் இந்த இனக்குரோதம் வளர்க்கப்பட்டு வருகிறது. * இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுறை, ஒரே நாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் அதற்கு மாறான சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. திலீபன் நினைவுத்தூபி உடைப்பே இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான ஈழத்தமிழ் பெண் வைத்தியசாலையில் மரணம்

தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர். காவல்நிலையத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தனே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் பலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டு கொன்றுவிடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்தள்ளார். இதனிடையே பத்மதேவியின் உடலை காவல்துறையினர் தகனம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுத்த போதும் அதனை அவர்கள் பொருட்படுத்தாதது அதிக சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஈழத்தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக நடாத்திவரும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அகதிகளாக சென்றுள்ள அப்பாவி மக்கள் மீது பல தரப்பட்ட வன்முறைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈபிடிபி யினர் தமது சாவகச்சேரி , வவுனியா அலுவலகங்களிலிருந்து தப்பியோட்டம்.

சாவகச்சேரி மற்றும் வவுனியா பிரதேசத்தில் இரு அப்பாவி இளைஞர்கள் கடந்த தினங்களில் கொல்லப்பட்டிருந்தனர். இக்கொடிய கொலைகளை ஈபிடிபி அமைப்பினரே செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் சாவகச்சேரி பிரதேச மக்கள் ஈபிடிபி அலுவலகத்தினுள் நுழைந்து காரியாலயத்தை துவம்சம் செய்துள்ளதாக தென்மாராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அலுவலகத்தினுள் நுழைந்தபோது அக்காரியாலத்திலிருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பியோடியுள்ளதாகவும், காரியாலயத்தை மீண்டும் கைப்பற்ற அமைச்சரினால் இராணுவ உதவி நாடப்பட்டபோதும், அங்கு மக்கள் கொதித்த நிலையில் காணப்படுவதை சுட்டிக்காட்டிய வட பாதுகாப்புத் தலைமையகம் உடனடியாக செயலில் இறங்க முடியாது என கைவிரித்துள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்த தெரியவருகின்றது. அதேநேரம் வவுனியா மக்களும் அங்குள்ள ஈபிடிபி அலுவலத்தை தாக்க முன்னேற்பாடுகள் செய்திருந்ததை அறிந்து காரியாலய பிரதேசத்தில் மேலதிக பொலிஸ் ரோந்து இடம்பெறுவதாகவும், காரியாலத்திலிருந்து ஈபிடிபி யினர் தற்காலிகமாக வெளியேறியுள்ளதாகவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸ் தரப்பிலிருந்த ஈபிடிபி யினருக்கு வெளிப்படையான உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறமாட்டாது என நம்பகரமாக தெரியவருகின்றது.

வன்னியில் பெய்த கடும் மழையால் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்

வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்ட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி தெரியவருவதாவது:- இலங்கைப் படையினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட காலமாக வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்வதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பகுதிகளுக்கும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு 12 தகரங்களும், 5தீராந்திகளும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள் அனைத்தும் முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட தகரங்களைப் பயன்படுத்தி மரங்களுக்குக் கீழே கொட்டில்கள் அமைத்தே வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு பாரிய அளவில் நிலவுகின்றது. பழைய கிணறுகளை இறைப்பதற்கான எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மல சல கூடங்கள் இல்லாத நிலையில் மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் ஆற்று நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் வன்னியின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய காவலரண் முதல் மிகப் பெரிய படை முகாம் வரை அனைத்தினது கூரைகளுக்கும் ஓடுகள் போடப்பட்டே படையினர் நிலை கொண்டுள்ளனர். வன்னி இடப்பெயர்வுகளின் போது மக்களால் ஓடுகள் கழற்றப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. இந்த நிலையில் மக்களது எஞ்சிய வீடுகள் ஓடுகள், வீட்டு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்குள் தண்ணீர் சென்றதாகவும், குழந்தைகள், பெரியோர்கள் தடிமன் உட்பட்ட நோய்த் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னியில் மக்கள் எதிர்கொண்ட பாரிய அவலத்தை தமக்கு நினைவூட்டியதாக தற்போது வன்னியில் மீளக் குடிமயர்ந்த இளந் தாய் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் நந்திக்கடலுக்குச் சமாந்தரமான களப்பு பகுதியில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு நாள் பெய்த கடும் மழையால் அனைத்து வீடுகளுக்குள்ளும் முழங்கால் வரையில் தண்ணீர் புகுந்ததால் இரவுப் பொழுதுகளை குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி நின்று கொண்டே கழித்தனர். அந்த வேளையில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பதுங்குகுழிகளுக்குள் செல்ல முடியாமலேயே நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா வருத்தம் தெரிவிப்பு

இலங்கையின் போர் நிறுத்த காலத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டமைக்காக பிரித்தானிய, பொதுச்சபை தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளது. அதேநேரம், ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான 9 அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய ரத்துச்செய்தமை தொடர்பிலும் பொதுச்சபை தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. பொதுச்சபையில் உரையாற்றிய, பிரித்தானியாவின் பொதுநலவாய வெளியுறவுத்துறை அமைச்சர், தமது நாடு இலங்கையின் நிலைமையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். இதேவேளை தமது கருத்தை வெளியிட்டுள்ள, ஆயுத பரிகரண திணைக்களத்தின் உதவி தலைவர் டேவிட் ஹோல், இலங்கையின் கடந்த கால நடைமுறைகளை கொண்டு எதிர்க்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக்குறிப்பிட்டார்

திங்கள், 29 மார்ச், 2010

"உங்களின் அரசியல் நலன்களுக்காக விடுதலைப் புலிகளை விலை பேசுவது" நியாயமா........?

ஈபிடிபியின் கைங்கரியம் தொடர்கிறது!!

வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. தங்கராசா குடும்பத்தினரது ஒரே ஒரு பிள்ளையான கிருஸ்ணகோபால் என்ற இளைஞருக்கு நேற்று பிறந்தாள் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் அவரது பிறந்தநாள் குறித்து அறிந்த ஈபிடிபியினர் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு வற்புறுத்தி அவரை மதுசாலைக்கு அழைத்திருக்கின்றனர். அங்கு சென்ற இருபது ஈபிடிபியினர் மது அருந்தியிருக்கின்றனர். இதனை அடுத்து மதுப் போத்தலால் கிருஸ்ணகோபாலின் தலையில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து கிருஸ்ணகோபால் வவுனியாவின் வீதி வழியாக ஓடியிருக்கின்றார். அவரை இருபது ஈபிடிபியினரும் துரத்திச் சென்றுள்ளன். வீதியில் அலறியபடி ஓடிய கிருஸ்ணகோபாலது செருப்பு அறுந்ததில் அவர் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.அவரை சுற்றிவளைத்துத் தாக்கிய ஈபிடிபியினர் அருகில் இருந்த எல்லைக் கலினைத் தூக்கி கிருஸ்ணகோபாலது தலையின் மீது போட்டிருக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அவசர சேவைப் பிரிவிற்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற நோயாளர் காவு வண்டி கிருஸ்ண்கோபாலனை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றுள்ளது. படுகாயம் அடைந்த அவர் தன்னை ஈபிடிபியினரே தாக்கியதாக சிறீலங்கா காவல்த்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இதேவேளை வவுனியாவில் இளைஞர்கள் ஈபிடிபியினர் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கொதிப்படைந்து உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 28 மார்ச், 2010

பிள்ளையான் தலைமையில் தாக்குதல்

மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ( Sunday) பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமாரும் இன்று பிற்பகல் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம் இடம்பெற இருந்தது. பிற்பகல் 4மணிக்கு கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் சுமார் 3மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் 13 வாகனங்களில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் சென்ற குழுவினர் அங்கு கூடி இருந்த மக்கள் மீதும் கூட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியதாக கொக்குவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கட்டப்பட்டிருந்த பனர்கள் மற்றும் கொடிகளையும் கிழித்து எறிந்ததுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் சேதமாக்கியுள்ளனர். பிள்ளையான்குழுவினர் சுமார் ஒரு மணிநேரமாக அந்த இடத்தில் நின்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். நேற்று கொக்குவில் பிள்ளையாரடி சத்துருக்கொண்டான் பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு சென்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஏசித்துரத்தியதாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் சத்துருக்கொண்டான் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா அரசாங்க படைகளே பெருந்தொகையான பொதுமக்களை படுகொலை செய்ததாகவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் கருணா குழுக்களுக்கு தாம் வாக்கு வழங்கப்போவதில்லை என அப்பிரதேச மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதற்கு பழிவாங்கும் முகமாகவே இன்று பிள்ளையான்குழு தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி: அன்றாட வாழ்க்கை போராட்டமே!



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சி, சிறிலங்கப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அன்றாடப் போராட்டமாக உள்ளதென்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2008இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 90,000 மக்கள் வசித்து வந்தனர். 2009ஆம் ஆண்டின் துவக்கத்தில் மக்களெல்லாம் வெளியேறிவிட்ட நிலையில் சிறிலங்க இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அங்கிருந்து மக்களனைவரும் புலிகளுடன் வெளியேறி முல்லைத் தீவில் - மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்தனர். போருக்குப் பின் வன்னி வதை முகாம்களில் அடைப்பட்டுக்கிடந்த அம்மக்களில் தற்போது 24,000 பேர் அவர்கள் வாழ்ந்த கிளிநொச்சியில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும், அங்கு குடியிருக்கும் வீடுகள் என்றோ அல்லது தற்காலிகமாக தங்குவதற்கோ எந்த ஒரு கட்டடமும் முழுமையாக இல்லை. சிறிலங்க படைகளின் தொடர் குண்டு வீச்சால் கடும் தாக்கதலிற்கு உள்ளான நகரம் கிளிநொச்சியாகும்.  மீள் குடியமர்த்தலிற்கு அளிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு முழுமையாக வீட்டை கட்டிக்கொள்ள முடியவில்லை என்று அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு அளித்த பொருட்களைக் கொண்டு தாங்கள் அமைத்துள்ள வீட்டின் மேற்கூரையைக் கூட முழுமையாக கட்டிக்கொள்ள போதுமானதாக இல்லை என்று ஐரின் செய்தி நிறுவன செய்தியாளருக்கு அம்மக்கள் தெரிவித்துள்ளனர். “அரசின் உதவியால் தாங்கள் கட்டிக்கொண்ட தற்காலிக வீட்டில் கூரை கூட உறுப்படியாக அமையவில்லை” என்று குமாரி தேவராசா என்ற பெண்மணி கூறியுள்ளார். குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என்று எந்த வசதியிமின்றி தங்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும்போது அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக் குறியுடன் அம்மக்கள் உள்ளதாக ஐரின் தெரிவிக்கிறது. அரசு அளித்த தகரத்தையும், கட்டைகளையும் கொண்டு பலர் இந்த தற்காலிக வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். மற்றவர்கள் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் அளித்த கூடாரங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். அரசு அளித்துள்ள சொற்பமான நிவராண உதவியில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நளினி ஜபேசன், உழைத்து சம்பாதித்து வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

சனி, 27 மார்ச், 2010

இந்திய தூதரகம் திறக்கப்படுவதால் திலீபனின் நினைவுத்தூண் இடிப்பு?

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக கிளை அலுவலகம் திறக்கப்படுவதற்கும், தியாகி திலீபனின் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே நினைவுத்தூண் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'ஈழமுரசு' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவு தூண் தகர்க்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூண் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், போர் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபித் தகர்ப்பினை சிங்களக் காடையர்களோ அல்லது அவர்களின் இராணுவமோ மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது. குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன. தியாகி திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர். இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவைத் தழுவினார்.இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுத்தூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது. திலீபனின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.எனவே, இந்த நினைவுத்தூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.