சனி, 17 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணமக்களின் எதிர்காலம்தான் எங்கே?

தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு, தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக் கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வருகின்றார்கள். 2010.04.08 ஆம் திகதி இடம்பெற்று இருந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே எல்லாச் செயற்பாடுகளை விடவும் மேலோங்கி இருந்தது. எங்குபார்த்தாலும் தேர்தல் சுவரொட்டிகள். யாருமே அறியாத புதுமுகங்கள் பல.. யாழ்ப்பான மக்களுக்கு இவர்களின் பிரச்சாரங்கள் அள்ளி வீசிய வார்த்தைகள், வாக்குறுதிகள் என எல்லாவற்ரையும் கேட்டு காது புளித்துப் போயிற்று. ‘சண்டையென்றால் சட்டை கிழியும்’ என்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் தேர்தல் என்றாலே சட்டை கிழியும் என்ற நிலைதான் காணப்படுகிறது. இங்கு ஆழுந்தரப்பில் போட்டியிட்ட ஒரே கும்பலுக்குள்தான் இந்தக்குத்துப்பாடு நடந்திருக்கின்றது. இதனுடைய விபரம்பற்றி யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளர் இராமநாதன் அங்கஜணிண் வாகனங்கள் தீழூட்டி எரிப்பு, அங்கஜன் துப்பாக்கிச்சூட்டிலிருந்து உயிர்தப்பினார் என்ற செய்திதான் வெளியாகியிருந்தது. இந்தச்சம்பவம் மகிந்த அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாளே இடம் பெற்றிருந்தது. இதற்கு மறுநாள் மாறுபட்ட வகையில் யாழ்ப்பாணப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்தச் செய்தியை யாழ்ப்பாணத்தில் தங்களைத் தாங்களே ஜனநாயகவாதிகள் என்று மார்தட்டும் ஈ.பி.டி.பி'யை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டிருந்தது. அதாவது தமது பிரச்சார வாகனத்தொடரணி மீது அங்கஜன் குழுவினர் பரமேஸ்வராச் சந்திக்கண்மையாகவுள்ள கெற்றப்புள் சந்தியில் வழிமறித்து வாகனங்களை எரித்து நாசம் செய்ததாகவும், தமது யாழ்ப்பாண மேயர் அங்கயனால் இழுத்து தாக்கப்பட்டு தலையில் கைத்துப்பாக்கி வைத்து சுட்டதாகவும் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் ஊடகங்களுக்கு செய்தியனுப்பியிருந்தனர். இந்தச்செய்தியை அறிந்த யாழ்ப்பாண மக்கள் பலர் ‘இனி ஏன்தான் டக்கிளசை மகிந்தவிற்கு?’ டக்கிளசின் செல்வாக்கை குறைப்பதற்கு யாழ்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புப்பட்டுயலில் முதன்மை வேட்பாளராக இராமநாதன் அங்கஜனை நிருத்தியிருகிறார் என்று முனுமுனுத்தார்கள். இதே வேளை இந்த வன்முறை நடந்து முடிந்த சில நாட்களின் பின் இராமநாதன் அங்கஜன் குழுவினர் (சுமார் 10 பேர்) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குள்ளே தமது பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்து துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்தனர். இதனிடையே சில மாணவர்கள், இ.அங்கஜனிடம் சில கேள்விக்கணைகளைத் தொடுத்திருந்தனர். அதற்கு அங்கஜனும் பதில்களை கொடுத்திருந்தார். குறுக்கிட்ட ஒரு நடுத்தர வயதாளி, கட்சிக்குள்ளே இடம் பெரும் குத்து வெட்டுகள் பற்றி கேட்டபோது, அங்கஜனின் பதில் திருப்திதராததால் “கள்ளனுடன் சேர்ந்துதான் அல்லது இருந்துதான் திருத்த வேண்டுமா?” என்று கேட்டு இங்குள்ள அரச ஆதரவு கட்சியை புட்டுப் புட்டுக் காட்டினார். யாழ்ப்பாணத்தில் சட்டம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது. கடந்த வாரம் யாழ்மாவட்டத்தையே பீதிக்குள்ளும், கோபத்திற்குள்ளும் ஆளாக்கிய மிகக்கேவலமான அநாகரியமான செயல் என்று வர்னிக்கப்படும் கபிலநாத்தின் படுகொலை தான். இந்த கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர், நுணாவில் இராணுவ முகாமில் செயற்பட்டு வந்த ஈ.பி.டி.பி யை சேர்ந்த ரஜீவன் என்பவருடன் தொடர்பு பட்டிருக்கிறது. ஆனால் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இதற்கான காரணம் தான் என்ன? மேற்படி முகாமில் இராணுவத்துடன் செயற்பட்டவர் எவ்வாறு? எங்கே? தப்பிச் செல்ல முடியும்? இந்தக் கட்டுரை எழுதும் வரைக்கும் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இலங்கையில் “சட்டம் யாவருக்கும் சமம்” என்று ஜனாதிபதி கூறினாலும் சட்டத்தை சில சந்தர்பங்களில் கணக்கில் எடுப்பதில்லை. கபிலநாத்தின் சம்பவமும் இவ்வாறு தான் செய்யப்பட்டதா? இருந்தாலும் நீதிமன்றம் பிடியானைப் பிறப்பித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தாலும் இதில் அரசியல் செல்வாக்கு சில வேளை குற்றவாளியை தண்டனையிலிருந்து மீட்டுவிடும் என்ற கதையும் இங்குள்ள மக்களால் பேசப்படுகின்றது. கல்விப் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற யாழ்ப்பாணம் இப்போது கலாச்சாரச் சீரழிவுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. இதில் என்ன துர்ப்பாக்கிய நிலை என்றால், வன்னியில் போரின அழிவிற்குப் பின்னர் இடம் பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாண முட்கம்பி வேலிக்குள் அடைப்பட்டுக் கிடந்த எமது மக்கள், ஒருவாறு விடுதலையாகி வெளியே வந்து தமது உறவினர் வீடுகளிலும், தமது சொந்தக் காணிகளிலும் தறப்பாளினால் வீடமைத்து குடியிருக்கும் போது, தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு பாழடைந்த வீடுகளை திருத்தியும், தங்குமிட வசதிகளையும் பணத்தின் பேராசையில் செய்துகொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக்கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வசித்துவருகின்றார்கள். இதுபற்றி எப்போதுதான் இந்தப் பணப்பேராசைக்காரர்கள் உணரப்போகிறார்கள்? இது வெளியுலகு அறியாத பரகசியம். இளையசமுதாயம் வழிதவறிப்போகும் நிலை காணப்படுகின்றது. கல்விச்செயற்பாட்டில் இருந்துகொண்டே மதுக்கலாச்சாரத்தை ஊட்டிவளத்து வருகின்றார்கள். இவற்றுடன் புகைப்பிடித்தல் பளக்கம் தற்போது அதிகரித்தே வருகின்றது. இவை இரண்டையும் தமக்கு ஒரு அந்தஸ்தாகப் பார்க்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கசுர்ணாபீஜ் இற்குப்போனால் இதை நேரடியாகபார்க்கலாம். இவ்வாறு சென்றால் யாழ்ப்பாணமக்களின் எதிர்காலம் எங்கேதான் சென்று முடியுமோ.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மௌனத்தின் மூலம் ....................


ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்!. சொந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் எங்களில் பெரும்பான்மையானவர்கள், இந்த நாட்டு மக்களைப் பார்த்து எங்களது வெளிப்படையான நாகரிகத்தை மாற்றிக்கொள்ள முயல்கிறோமே தவிர, மனதால் மாற்றம் அடைய மறுத்தே வருகின்றோம். எங்கள் கைகளில் முள்ளுக் கரண்டியும் கத்தியும் முளைத்த அளவிற்கு, எங்கள் மனங்களிலும், செயல்களிலும் புதிதாகப் பெரிய மாற்றங்கள் புதிதாக உருவாகிவிடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் யுத்த களம் பின் நோக்கிச் சென்றது போலவே, எங்கள் இலட்சிய சிந்தனைகளும் குறுகிய அரசியல் பிளவுகளோடு இன்னமும் வேகமாகப் பின் நகர்ந்தே வருகின்றது போலவே தோன்றுகிறது. தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் போராட வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கான தேர்தல் களத்தில் பிளவு பட்டு அணி திரண்டதையும், சிங்கள தேசம் போலவே தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதும், தமிழீழத்தின் தேசிய ஆன்மாக்களைக் காயப்படுத்துவதாகவே அமைகின்றது. விடுதலைப் புலிகளின் வேள்வித் தீயில் தம்மையும் அர்ப்பணித்துக்கொண்ட தமிழீழ மக்கள் மௌனமாக அழுவதைக்கூட, தமது அணிக்கான ஆதரவுக் குரலாகக் காட்டும் முயற்சியும் புலம் பெயர் தேசத்தின் கூட்டமைப்பு அணியினரால் மேற்கொள்ளப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் களமுனை வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டிருந்த தவறான நகர்வுகளும், புதிய கற்பிதங்களும் புலம்பெயர் தமிழீழப் போர்க் களத்தில் பலமான சலசலப்புகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியிருந்தது. அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களும் ஓங்கி ஒலித்தன. இந்தத் தேர்தலை முன் நிறுத்தி, ஈழத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு சுவரை எழுப்பும் சதி முயற்சிகளும் கூட மேற்கொள்ளப்பட்டன. நடைபெற்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள். அது, “நாங்கள் சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட விரும்பவில்லை” என்பதாகும். யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 168,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 65,119 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 9 வீதமானவர்கள் என்பதும், வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 41,673 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 15.6 வீதமானவர்கள் என்பதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 333,664 வாக்காளர்களில் 195,368 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 66,235 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 19.85 வீதத்தினர் மட்டுமே. அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 420,835 வாக்காளர்களில் 272,462 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 26,895 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 6.39 வீதத்தினர் மட்டுமே. திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான, அதாவது 80 வீதத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்திற்கான இந்தத் தேர்தலை நிராகரித்து, மௌனமாகத் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். சிங்கள அதிபருக்கான தேர்தலில், மலையகம் உட்பட வட – கிழக்குத் தமிழர்கள் கொடியவன் ராஜபக்ஷவை நிராகரித்ததுடன், பெரும்பான்மையான தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்காமல் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்த புலம் பெயர் தமிழர்களில் சிலர் தற்போது இந்தக் கணக்கைத் தமது வசதிக்காக மாற்றிப் போட்டுப் பார்க்கிறார்கள். ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற விரும்புகிறார்கள் என அவர்களின் விடுதலை உணர்வுகளைக் கொச்சைப்படுத்த முயல்கின்றனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் யாருக்கு வாக்குப் போடச் சொன்னார்களோ, அவர்களுக்கு நாம் வாக்குகளைப் போட்டோம். விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னபோது, நாங்கள் முற்றாகத் தேர்தலைப் புறக்கணித்தோம். இந்தத் தடவை அவர்கள் யாருக்கும் வாக்குப் போடும்படி சொல்லவில்லை. அதனால், தேர்தலைப் புறக்கணித்தோம் என்று கூறினார். ஈழத் தமிழர்களின் முடிவு இப்படித்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சார்பாக, ஓங்கிக் குரல் எழுப்பும் புலம்பெயர் தமிழர்களும் ஈழத் தமிழர்களின் இந்த விடுதலை உணர்வைப் பெருமிதத்தோடு புரிந்து கொள்கிறார்கள். ஈழத் தமிழர்களம சார்பாக சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேல் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது என்பதில்தான் அவர்களது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. எடுப்பார் கைப்பிள்ளையாக, கிடைத்த அரங்கத்தில் தப்புத் தாளங்கள் போட முயற்சித்தால் காலம் அவர்களுக்கான தண்டனையை வழங்கும். தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையோடு கல்லறைகளில் கண்ணுறங்கும் மாவீரர்களும், அந்த மண்ணுக்காய் மரணித்த மக்களும் மீண்டும் எழுவார்கள்.

வியாழன், 15 ஏப்ரல், 2010

வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர் இவர்கள்


கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பதுபோலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பித் தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்க வேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும் தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காகக் குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர். இது இப்படியிருக்க, ஷெல் விழுந்தபோது நாங்கள் அன்றே செத்துப்போயிருந்தால் இதைவிடவும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள். 1.5 லிற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்குக் கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும் அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணெய் வழங்கப்படுவதோடு ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத் தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள், மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்திலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தற்போது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இருமடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இம்மக்களது விருப்பு வாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதி மக்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பே வழங்கப்படவில்லை யென்பதையும் இங்கே சொல்ல வேண்டும். இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டும் அரசு வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியைச் சமீபத்தில் தான் இம்முகாம்வாசிகளுக்கு அரசு வழங்கியுள்ளது. அதுவும்கூட அதிகபட்சமாக இருமாதங்களுக்கு மட்டும் தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொருமுறை முகாமுக்குச் சமூகமளித்து, வெளியே சென்று வேலைபார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த அனுமதிப் பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபைப் பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவுமுறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய்ச் சந்திக்கவிருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும். அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும்கூடக் குறிப்பிட வேண்டும். முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள்கூட அதிநவீன பார்கோட் இலச்சினைகளுடன் இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியின் அனைத்துத் தகவல்களும் அடங்கப்பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள்கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும் முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை. முகாம்வாசிகளுக்குத் தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பிவிட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமைவிட்டு வெளியே செல்ல அனுமதி கிடைப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால்கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றிக் கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இருபுறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்கள். நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால்கூடக் காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம். தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையை நகர்த்திச் சென்ற இம்மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய் விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்குப் பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமையை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக்கொள்கின்றனர். தற்போது வவுனியாவிலும் தற்காலிகத் தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்துபோயிருக்கிறது. குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காகச் சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக்கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்தபோதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். மீள்குடியேற்றம் என்னும் பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக்கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்தபோதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள்குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான். இந்தக் கொத்தடிமை முள்வேலி வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம்முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும் முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டுச் செத்துப்போனார்கள். எப்படியாவது உயிர்பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடிவந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்போது தோன்றுகிறது. அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்.

அறுபத்திரண்டு ஆண்டுகளும் அப்பாவி(ஈழ)த் தமிழர்களும்!

இலங்கை என்னும் சின்னஞ் சிறு தீவு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்திரண்டு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைக் கொண்டாடும் வகையில், இந்த வருட முற்பகுதியில் தென்னிலங்கையில் மிகவும் குதூகலமான முறையில் விழாக்கள் நடந்தேறியிருக்கின்றன. நாட்டின் அதிபர் ‘புதிய துட்ட கெமுனு’வாக மீண்டும் அவதரித்திருக்கிறார்! கி.மு இரண்டாம் நூற்றாண்டில், தமிழ் மன்னன் எல்லாளனை வீழ்த்தி அனுரதபுர நகரினைச் சிங்களருக்கே மீண்டும் பெற்றுத்தந்த இளவரசன் துட்டகெமுனுவைப் போன்று, பிரபாகரன் தலைமையில் தமிழுரிமைக்காகப் போராடியவர்கள் அத்தனைபேரையும்- போராளிகள்,பொதுமக்கள் என்ற பேதமின்றி- அழித்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘சிங்கள அரசனை’ப் பாராட்டி மகிழ்ந்தார்கள் அவ்வினத்தைச் சேர்ந்த பலர்! கூடவே, வரலாற்றில் எப்போதும் இடம்பெறும் ‘விபீஷணக்’கும்பல்களும் தாம் வெற்றி அடைந்துவிட்ட இறுமாப்பில் நெஞ்சை நிமிர்த்திப் பீறுநடை போட்டன. சிங்கள இனம், அண்மையில் அடைந்த ‘வெற்றி’யின் நாயகர்களில் ஒருவரான அதன் படைத் ‘தளபதி’ இப்போது தனது எதிர்காலம் பற்றிய கவலைகளுடன் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க, ஒரே இலங்கை; ஒரே மக்கள் என்று ‘கவர்ச்சி சுலோ’கங்களை முழங்கும் அரசு, முப்பதாண்டுப் போரில் தாம் முறியடித்துவிட்ட ‘எதிரி நாடொன்றில்’கூட அரங்கேற்றமுனையாத செயல்களைப், ’போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்’ என்னும் போர்வையில், அண்டை நாடுகள் சிலவற்றின் பொருளுதவியோடு வெகு துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது! இவையனைத்தையும் அறிந்திருந்தும், சென்ற ஆண்டு முற்பகுதியில் வடபுலத்தில் அரங்கேறிய படுகொலைகளைக் ‘கண்டும் காணாதிருந்ததை’ப் போன்று சர்வதேசம் ‘கள்ள மௌனம்’ சாதிக்கிறது! படுகொலைகளின் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை ‘பொறுமை காத்த’ ஐ.நா வின் தலைவர், திடீரென ‘ஞானோதயம்’ பெற்றுவிட்டவர் போன்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் எரிகுண்டுகளுக்கும், தடைசெய்யப்பட்ட கனரக ஆயுதங்களுக்கும் பலியாகி உயிப்பிச்சை கேட்டு மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில்; மெரீனா கடற்கரையில் ‘குளிரூட்டிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்’ சகிதம் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க மூன்று மணி நேர’ உண்ணாவிரதத்தை மேற்கொண்ட ‘தலைவர்’ இப்போது ‘ஈழத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாவிடில், நாம் சும்மா இருக்கமாட்டோம்’ என்று புதிதாக எதையோ ‘சுமந்து கொண்டு’ அறிக்கை விடுகிறார். தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை அவர்களது நிழல்களுக்கு ஆடைகட்டி அழகு பார்க்கும் கலையில் வல்ல கலைஞர் இப்போது ‘செம் மொழி’ ஆடையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். இதோ இப்போது, இலங்கையின் பொதுத் தேர்தலும் முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் பலரும் எதிர்பார்த்திருந்தது போன்று, அதிபரது கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. தகுதி பெற்ற வாக்காளர்களில் சுமார் அறுபது விழுக்காட்டினர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்கு நடைபெற்றுவந்த பொதுத் தேர்தல்கள் யாவற்றினையும் விடவும், இந்தத் தடவை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது. சிங்களப் பகுதிகளில் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும்; எதிர்க் கட்சியினர் பல குழுக்களாக்ப் பிரிந்து நின்று போட்டியிட்டதால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய் விட்டன எனவும் மக்கள் இவ்வாறான தேர்தல் ‘விளையாட்டுகளில்’ நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் இதற்குப் பலவாறான காரணங்களை அவரவர் சார்பு நிலைகளுக்குத் தக்கவாறு பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்குச் சிங்களர்களது உரிமைக்காகப் போராடும் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. ஆங்கிலேயர் மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டிக் கொழுத்த இலங்கையை விட்டு, மூட்டைமுடிச்சுகளுடன் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போது, ஜனநாயகத்தின் பேரால் தீவின் ஆட்சி அதிகாரத்தினை, ‘தலை’ எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சிங்களரிடம் விட்டுவிட்டுச் சென்றார்கள். எனவே, ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தின் வழியாகக் கிடைக்கவேண்டிய அத்தனை நலன்களையும், தீவின் பெரும்பான்மை இனம் பெற்றுக்கொள்வதில் எவ்வித தடைகளும் அதற்கு இருக்கவில்லை. ஆனால் ஆளப்படும் இனமாக மாறியிருந்த தமிழ்த் தேசிய இனம்; அந் நாடு எதிர் கொண்ட ஒவ்வொரு ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல்களின் போதும், படிப்படியாகத் தனது வாழ்வுரிமைக்கான இருப்பினைப் பறிகொடுத்தே வந்துள்ளது. ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடிய பெரும்பான்மை இனத் தலைவர்கள், தாம் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக நாட்டுக்கு எவ்வாறான நல்ல திட்டங்களை அளிப்போம் என்று கூறி வாக்குக் கேட்பதை மறந்து, தமிழர்களிடமிருந்து எவற்றை எல்லாம் பறிப்போம் என்னுமாப்போல் பேசிவந்ததும், தேர்தல் முடிவுற்ற பின்னர் செயல்பட்டதும், அந்நாட்டின் முதல் முப்பது வருடங்களைச் சிறுபான்மை இனத்தினை அரசியல் போராட்டங்களிலும்; அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடவைத்தது. இப்போது முடிவடைந்துள்ள தேர்தலின் பயனாய், அந் நாட்டில் உண்மையான அமைதியும், அதன் அதிபர் தமது வாயால் கூறும் தமிழர்-சிங்களர் என்ற பேதமற்ற சம உணர்வும் இனியாதல் நிலைபெறவேண்டுமானால்………. சில வருடங்களுக்கு முன்னால் ஓர் மனித உரிமைப் போராளியாகத் தன்னை இனங்காட்டிக் கொண்ட இலங்கையின் இன்றைய அதிபர், இப்போது தமக்குக் கிடைத்திருக்கும் ‘அசுரத்தனமான’ வெற்றியை நன்கு பயன்படுத்தி இனப்பூசலுக்கு ஏற்ற ஓர் தீர்வினை எட்ட இயலும். இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த இரு இனங்களும் ‘நாம் இலங்கையரே’ என்று மார்தட்டிச் சொல்லும் நிலையை உருவாக்குவது ஆளுபவர்களது கைகளில்தான் தங்கியிருக்கிறது. நியாயத்துக்காகக் கூடப் போராடும் திராணியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழினத்தின் தன்மானத்துக்கும், சுக வாழ்வுக்கும் பாதுகாப்பளிக்கும் அரசியல் கடமை ஆளும் பெரும்பான்மை இனத்துக்கே உண்டு. இதனை மறுப்பதும், அந்த இனத்தையே ஒறுப்பதும் மானுட விழுமியங்களை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இவற்றை இனியும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும், அண்டை நாடுகளும்கூட ஒருவகையில் குற்றவாளிகளே.

இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு?

யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், விடுதலைப்புலிகள் இயங்கு நிலையில் இருந்த வரைக்கும் எந்தவொரு இனத்துவேச நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத இலங்கை இனவெறி அரசு தற்பொழுது மிக வெளிப்படையாகவே தனது இனத்துவேச நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் நீண்ட காலமாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களோ, திலீபனின் தூபியோ இடிக்கப்படவில்லை. மாங்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்செயலாக இலங்கைக்கு விடுமுறையில் சென்று வந்தவர் ஒருவர் தனது ஒளிப்பட கருவியில் பிடித்துக் கொண்டு வந்த சில ஒளிப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவர் எடுத்து வந்திருந்த ஒளிப்படங்களில் நயினாதீவு நாகபூஷணியம்மன் ஆலயத்தில் பிடிக்கப்பட்ட ஒளிப்படத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகைகள் என்னை ஒருகணம் அதிர வைத்தது. அந்த அறிவிப்புப் பலகைகள் எல்லாமே சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். அதாவது சிங்கள இனவெறி அரசு தற்பொழுது மிகவும் வெளிப்படையாகவே இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு என்று சொல்லாமல் சொல்வதாகப் படுகிறது. 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்று அதை வெளிப்படையாகவே நடைமுறைப் படுத்துகிறார்கள். கொழும்பில், கண்டியில் ஏன் கதிர்காமத்தில் கூட ஆலயங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அறிவித்தல் பலகைகள் எழுதப்பட்டிருக்குமிடத்தில், யாழ்ப்பாணத்தில் அதுவும் தமிழ் மண்ணில் இருக்கும் ஒரு இந்துக்கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அந்த அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையின் வெவேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் செல்லும் தமிழ்மக்கள், மற்றும் தமிழரோ, சிங்களவரோ அல்லாத வெளிநாட்டுப் பிரஜைகள் அந்த ஆலயத்திற்கு வழிபடவோ பார்வையிடவோ சென்றால், அந்த பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிங்களவரையோ அல்லது சிங்களம் தெரிந்த ஒருவரையோ தான் உதவிக்கு நாடவேண்டும். எனவே இந்த இனவெறி அரசு என்னத்தை சொல்லவருகின்றது என்பதை தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் மனவருத்தம் என்னவென்றால், தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளோ, சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகின்ற தமிழ் கட்சிகளோ, அந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ்மக்களோ கண்டுகொள்ளாததும், கண்டிக்காததும் தான்.

புதன், 14 ஏப்ரல், 2010

ராஜீவ் கொலை - நளினி விடுதலை - தடை என்ன? - கீற்று

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.


நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.


இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.
விரிவாகப் பார்ப்போம்.


நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பும் அரசியல் சாராத பொதுமக்கள், இந்த பிரச்சினை குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவுகளையும், கருத்துகளையும் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தில் பிரபல மனிதர்கள் மீது மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பங்களை உண்மையென்று நம்பி, அதன் அடிப்படையில்தான் பொதுமக்களின் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு சாதகமான இந்த நிலை நீடித்திருப்பதையே ஆதிக்க சக்திகளும், மீடியாக்களும் விரும்புகின்றன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜீவ் காந்தி விவகாரம்தான். ராஜீவ் காந்தி குறிந்து இந்திய மீடியாக்கள் கட்டமைக்க விரும்பும் பிம்பம் இதுதான்! அவர் மலிவான அரசியலுக்கும், ஊழல் கலாசாரத்திற்கும் அப்பாற்பட்டவர்... இளமைத் துடிப்பு மிக்கவர்... அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா மிக எளிதில் வல்லரசாகி இருக்கும்... என்பது போன்ற கருத்துகளையே மீடியாக்கள் மக்கள் மனத்தில் உளவியல் ரீதியாக நிறுவ விரும்புகின்றன. தற்போது ராஜீவ் காந்தி இல்லாததால்தான் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை அடையமுடியவில்லை என்று மக்கள் எண்ணுவதற்கு மீடியாவின் இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம்.


ஆனால் உண்மைகளோ வேறு விதமாக இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. மிக இளம் வயதில் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றதற்கு, அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலே காரணம். உண்மையில் ராஜீவ் காந்தியே அதை அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்திரா காந்தி கொலை சம்பவத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரிக்க அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே நேரு குடும்பம் மற்றும் காந்தி என்ற பெயர் ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரஸின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் பதவியையும் ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று, பல்வேறு பணிகளை செய்த தலைவர்களும், இளைஞர்களும் ஏராளமானோர் இருந்தபோதிலும், “நேரு குடும்பத்து வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியின் அடிப்படையிலேயே அவரிடம் அதிகாரமும், பதவியும் போய்ச் சேர்ந்தது. சீமான் வீட்டு வாரிசாக, சாதாரண மக்களின் எந்த பிரச்சினை குறித்தும் உரிய அறிவோ, தெளிவோ இல்லாத நிலையில் மிகப்பெரும் செல்வந்தர்களின் பொழுதுபோக்கான விமானம் ஓட்டுதலில் ஆர்வம் செலுத்திவந்த ராஜீவ் காந்தியிடம் பதவி வந்து சேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அவரது இயல்புக்கு ஏற்ற ஆட்சியையே நடத்தினார்.

உதாரணமாக, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து சீக்கியர்களை அழித்தொழிப்பதை ஒரு பிரிவு காங்கிரஸ் கட்சியினர் ஒரு வேலைத்திட்டமாகவே நிறைவேற்றினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்த்து. இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீதான விசாரணை இதுவரை முழுமையாக முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருவாளர் ராஜீவ் காந்தி, “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதை தவிர்க்க முடியாது!” என்று கூறினார். அதாவது இந்திரா காந்தி ஆலமரமாம். அவரது மரணத்தைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சீக்கியர்கள் அனைவரும் புல், பூண்டுகள்! ராஜீவ் காந்தியின் இந்தக் கருத்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ராஜீவ் காந்தி தமது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரி அக்கருத்தை திரும்பப் பெற்றார்.

ஆனாலும், சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து எந்த சான்றுகளும், ஆதாரங்களும் இல்லாதவகையில் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கயமைக்கு அப்போதைய இந்திய அரசின் தலைவரான ராஜீவ் காந்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது.


இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தாது மற்றும் இயற்கை வளத்திற்காக அப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களை கொன்றும், பாலியல் உள்ளிட்ட பலவகை வன்முறைகளை செய்தும் அகற்றி, அப்பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஆபரேஷன் கிரீன்ஹன்ட் என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு சிதம்பரத்திற்கு பதிலாக ராஜீவ்காந்தியே தலைமை ஏற்று செயல்பட்டிருப்பார்.


ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை காலத்தில் அறிவிக்கப்படாத அதிகார மையமாக செயல்பட்டதும், ஏராளமான ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியதும் இளைய தலைமுறைக்குத் தெரியாது. மூத்த தலைமுறையோ இதுபோன்ற அராஜகங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் ராஜீவ் காந்தியின் போக்கு அவரது இயல்புக்கு ஏற்றதாகவே இருந்தது. பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில், பிரச்சினை தொடர்பானவர்களை ஆலோசிக்காமலே ஒப்பந்தங்களை தீட்டி அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் மீது திணித்ததில், தமது அரசியல் திறனின்மையை ராஜீவ் காந்தி வெளிக்காட்டினார்.

இதையடுத்து ஏற்பட்ட அரசியல் சூழல்களில் இந்திய ராணுவம் இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் சூழல் ஏற்பட்டது. அமைதி காப்பதற்காக போன ராணுவம், அங்கே செய்த காரியங்கள் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியையும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கைக்கு சென்ற ராணுவம் திரும்பிவந்தபோது அந்த ராணுவத்தை வரவேற்க முதலமைச்சர் கருணாநிதி செல்லவில்லை என்பது வரலாறு!

இதற்கிடையில் இந்திய அரசியலில் சமூக நீதி என்ற புதிய ஆயுதத்தோடு களம் இறங்கிய வி.பி. சிங்-கின் வீச்சால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்திருந்தது. கூட்டணி ஆட்சியின் பிரதமராக வி.பி. சிங் பதவியேற்று, பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்து பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார். வி.பி. சிங்கின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்து வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது.

மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராஜீவ் காந்தி சென்னை அருகே திருபெரும்புதூர் அருகே பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்தபோது மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் வேறெந்த காங்கிரஸ் கட்சித்தலைவரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ பாதிக்கப்படவில்லை என்ற உண்மை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதன்படி கடந்த 19 ஆண்டுகளாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்திய சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது. இந்த தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் ஒரு காரணமாக அமைகிறது.

நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?

தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் – அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது.


கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை – அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி – மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரச்சினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தியனின் மனசாட்சிக்கு எட்டாமல் போகிறது. இந்திய கடல் எல்லைக்கருகில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கையின் கடற்படைதான் காரணம் என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் இந்தியனின் மனசாட்சி அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தாலும், ஏதோ ஒரு சாமியாரின் படுக்கை அறையுள்ளேயை இந்தியனின் மனசாட்சி சிக்கிக் கொள்கிறது.

இந்திய கடல் எல்லையை தாண்டிய மீனவர்களுக்கு இந்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது: சாதாரண மீனவர்களை கொன்றதற்காக இலங்கை மீது போர் தொடுக்கமுடியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது இந்தியனின் மனசாட்சி இலவசத் தொலைகாட்சியிலிருந்து திரும்ப மறுக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட இனத்தின்மீது போர் தொடுத்த ஒரு நபர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதத்தில் அந்த இனத்தை சார்ந்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டபோதும்கூட இந்தியனின் மனசாட்சி “மானாட, மயிலாட” நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போதுமட்டும் இந்தியனின் மனசாட்சி துயிலெழுந்து துள்ளி குதிக்கிறது, நளினியை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறது!

ஆனால் சட்டத்தின் நிலையோ வேறாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ற கருத்தியலின் முன் அனைவரும் சமமே. ராஜீவ் காந்தியை கொன்றவருக்கு கடும் தண்டனை: நடைபாதையில் படுத்துறங்கும் அன்றாடங்காய்ச்சியை கொன்றவருக்கு வேறு சாதாரண தண்டனை என்ற பேதமெல்லாம் சட்டத்திற்கு கிடையாது. சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஒரு குற்றம். அந்த குற்றத்தில் பலியானவரின் சமூக முக்கியத்துவம் குறித்து ஒரு நீதிமன்றம் கவலை கொள்ளக்கூடாது.

ஆனால் நடைமுறையில் இது வேறாக இருக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நடக்கும் எந்த தீவிரமான மனித உரிமை மீறலையும் மிக எளிதாகவும், இயல்பானதாகவும் பார்க்கும் அமைப்புகள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்தவர்களின் சிறு பிரச்சினைகளைக்கூட மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது. எத்தனையோ தொழில் சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு போராடினாலும் திரும்பி பார்க்காத தமிழ்நாடு அரசு, திரைப்படத்துறையினரின் மிகவும் சாதாரண பிரச்சினைகளைக்கூட அதிகபட்ச கரிசனத்தோடு பரிசீலிப்பதை ஒரு உதாரணமாக கூறலாம். இதை எதிர்த்துப் போராட வேண்டிய இந்தியனின் மனசாட்சி அதற்குப் பதிலாக இது போன்ற அநீதிகளையும், முறைகேடுகளையும் இயல்பாக ஏற்க பழகிவிடுகிறது.

இதன் விளைவாகவே தமது உண்மையான பிரச்சினைகளை உணரவும், அதை எதிர்த்துப் போராடவும் தயங்கும் இந்தியனின் மனசாட்சி – அரசியல் தலைவர்களின் இழப்புகளை மட்டும் பிரமாண்டமாக்கி பார்க்கிறது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மீடியா, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசு சார்பு அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.

எனவேதான் அரசின் பார்வையிலேயே, அதாவது மக்களுக்கு எதிரான பார்வையிலேயே மீடியாக்கள் இயங்குகின்றன. அதாவது மக்களின் நலன்களுக்கு எதிரானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை மீடியாக்கள் மூளைச்சலவை செய்கின்றன. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிரான முடிவை மேற்கொள்ள நீதிமன்றங்கள் தயங்குகின்றன.

இவ்வாறு ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிராக ஒரு நீதிபதி தீர்ப்பளித்துவிட்டால், அந்த நீதிபதிக்கு எதிரான பிரச்சாரத்தில் மீடியாக்கள் இறங்கிவிடும். இதனால் அந்த நீதிபதியின் எதிர்கால பதவி உயர்வுகளோ, வேறு வாய்ப்புகளோ பாதிக்கப்படலாம் என்ற நிலை காரணமாகவே இதுபோன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மிக அதிக தண்டனை வழங்கப்படுகிறது.

உண்மையிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் இந்த நிலை மாற வேண்டும். எந்த விவகாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைவிட, அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் பழக வேண்டும். ஆனால் இதை ஆளும் வர்க்கமோ, ஆதிக்க சக்திகளின் மீடியாக்களோ உதவி செய்யாது என்பதுடன், இடையூறும் செய்யும். இதையெல்லாம் மீறினால்தான் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசை அமைக்கமுடியும். இதற்கான பணிகளில் மக்கள் இயக்கங்களும், மாற்று ஊடகங்களும் தொடர்ந்து செயல்பட்டால்தான் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை அமைக்க முடியும்.


நீரடி நீச்சல் எல்லாம் நாம் அறிவோம் துயர் - நீந்திக்கரையேறும் வழியறிவோம் யாரடிச்சாலும் திருப்பியடிப்போம் தன்மான மீட்பிற்க்காய் உயிரை கொடுப்போம்.. நம்பியேமாறும் அண்ணன் அவன் மறுத்து விட்டான் தன்னாட்டின் உரிமைதனை வன்னியிலே நடாத்திவிட்டான் தாய் மண்ணை மீட்டெடுக்கும் தன்னாட்சியாய் மலர்வோம் என்று ஈழத்தமிழா நீயும் எழுச்சி குரல் உறுமலடா.. மண்ணின் விடுதலையும் பெண்ணின் விடுதலையும் கண்ணின் மணியாக நாம் கருதி வாழ்ந்திருந்தோம் புண்ணில் வழிந்தோடும் ரத்தமாய் நெஞ்சம் சிதறி அங்கே நித்தமும் சாக்காடு.. புலம் பெயர் வாழ் தமிழனின் தன்மான காற்று தனதானிக்காற்றாக ஈழத்தை நிரப்பட்டும் வெடிக்கட்டும் மக்கள் புரட்டிச்சியின் வேகாறுகள் அன்னியக் கட்டுக்களை பொசுக்கி எரிக்கட்டும் ஆழுமையும் ஆழுகையும் உந்தனுக்கு இல்லையென்றால் வீடுமில்லை நாடுமில்லை தமிழனே நீயும் நம்பு.. ஈழத்தமிழனின் வாழும் தன்னாட்சி உரிமை தன்னை மறுத்துரைக்கும் சிறப்புரிமை உலகின் எந்த உருப்புரிமை நாடுகளுக்கும் கிடையவே கிடையாது எம் இனத்தை இல்லாதொளிக்கும் இறுதி இலக்கில் சிங்களம் வெற்றி பெறும் என்று நம்பும் இரட்டை நாக்கு உலக நாடுகளின் நம்பிக்கைகளை நாம் தவிடு பொடியாக்காவிட்டால் நாமும் நம் ஈழக்கொள்கைகளும் பின்னடைவிற்கு உள்ளாகும்... நாளைய இருப்பிற்கான எம் இனத்தின் ஈழத்திற்கான எம் கரங்களின் பலங்களின் அசைவிலேதான் வாழ்வா சாவா என்ற எம் இனத்தின் இறுதி மூச்சு.. தமிழனே நீயும் பலமாகு தாயக கோட்பாடு உனதாகும்.. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

ஆழும் கட்சியினுள் தொடரும் உள்வீட்டு மோதல்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுள் விருப்பு வாக்குகளுக்காக இடம்பெற்றுவந்த உள்வீட்டு மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள காலம்சென்ற அமைச்சர் டி.எம் தசநாயக்கவின் மனைவியான இந்திராணி தசநாயக்கவின் ஆதரவாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள ஆனமடுவப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் தேர்தல் காலங்களில் திருமதி இந்திராணி தஸநாயக்க சார்பாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என தெரியவருகின்றது.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழனின் நிலை,!புத்தனின் நிலை,! இனி வரும் காலங்களில் பதில் கூறும் மனித தர்மம் ..........................

இனப்பிரச்சனை தீர்வுக்கான வாய்ப்பை தவறவிட்டால் இன்னொரு இனமோதல் வெடிக்கும்!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், அது இன்னொரு இனமோதல் உருவாவதற்கு வழிவகுத்து விடுமென எச்சரித்துள்ளார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் நிர்மல் தேவசிறி.

விரிவுரையாளர் நிர்மல் தேவசிறியை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினை ஒன்றிணைத்து செயற்படுவதில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க உதவும்படி தேர்தல் பரப்புரையின்போது மகிந்த ராஜபக்ச மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற ஆசனங்களின் அடிப்படையில் மக்கள் அவரது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர் எனக் கருதினாலும், நாட்டின் சுமார் 55 சதவீதமான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளமையானது, நாடு தனக்குப் பின்னால் நிற்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துவரும் கருத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் ஏ.எவ்.பி நிறுவனம் வெளியிட்டுள்ள இவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தினை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டமை அரசியல் நடைமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளரான விக்ரர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதோடு, நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய பெரும் சவால் மகிந்த ராஜபக்சவின் முன்னால் உள்ளதாக அவர் கூறினார்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் மீது மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியின் வெளிப்பாடே இது எனத் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக, மக்களின் ஆணையற்ற ஒரு நாடாளுமன்றம் நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் தமிழ் மக்களும் மிகக் குறைந்தளவே வாக்களித்துள்ளார்கள். நாடு இன்னமும் பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞை இது, ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேசியவாதக் கொள்கை குறித்து தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பெரும் சந்தேகத்தின் வெளிப்பாடே இது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது சிதைந்து போன இப்பகுதிகள் பல பில்லியன் டொலர் செலவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற உறுதி வழங்கியிருந்தார்.

ஆனால், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டத்தில் கூட மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முழு வெற்றி பெறவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு சுயாட்சி வகையிலமைந்த தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலரான நிமல்கா பெனாண்டோ தெரிவிக்கின்றார். இலங்கை இன்னமும் பிளவடைந்திருப்பதை தேர்தல் முடிவுகளைக் காட்டும் மாவட்ட ரீதியான வரைபடம் தெளிவாகக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பலமான நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து தப்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் கூறிவிட முடியாது.

அவர் வாக்குறுதி அளித்ததைப் போல நாட்டில் இன நல்லிணக்கத்தையும், அமைதியினையும் ஏற்படுத்துவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நிமல்கா பெனாண்டோ குறிப்பிடுகின்றார்.

நீதியனதும், நியாயமானதுமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதோடு, தமக்கு மறுக்கப்படடுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் இவ் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான பலம் தமக்கு இல்லை என்று இப்போது தட்டிக் கழிக்க முடியாது. மகிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்து தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க விரும்பினால், அதற்குத் தேவையான மேலதிக அரசியல் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் தற்போது உள்ளது.

தமிழ் வாக்காளர்களில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் தமிழீழ மக்களுக்கான அரசியல் பலமாக உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காலம் அதிக அளவு கடமைகளைச் சுமத்தியுள்ளது. முன்பு போல அவர்களை நேர் வழியில் பயணிக்க வைக்க களத்தில் விடுதலைப் புலிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற இலட்சிய தாகம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் கனலாகக் கனன்று கொண்டே உள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஒட்டு மொத்தமாக 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் தற்போது அளவுக்கு அதிகமாக நம்பிக்கையைத் தொலைத்து விட்டு மௌனித்துப்போய் உள்ளார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களிடம் எதிர்கால நம்பிக்கை ஊட்டும் பணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைத் தடுமாற்றமே புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த நம்பிக்கையின்மை வெளிப்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கிய கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு. புலம்பெயர் தமிழர்கள் தமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்களது விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் கடுமையாகப் போராடி வருகின்றார்கள். அவர்களது ஆத்மார்த்தமான உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தமிழீழம் குறித்த அக்கறைகளையும், அர்ப்பணிப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கான பலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இனியாவது நெருக்கமான உறவினைப் பேண முயல வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே, ஈழத் தமிழர்களின் பலமாக உருவாகிவரும் மக்கள் பேரவைகள், நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவை ஈழத் தமிழர்களுக்கான மேற்குலக ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தி வருகின்றன. புலம்பெயர் தேசம் எங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடாத்தப்பட்ட மீள் வாக்கெடுப்பில் 98 வீதத்திற்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள் 'தமிழீழமே ஒரே தீர்வு' என்ற தமது விருப்பை நிலைநாட்டியுள்ளனர். எண்பது வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் நிராகரித்த இந்தத் தேர்தல் மூலம் சிங்கள நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு மாறான ஒரு தீர்வை ஈழத் தமிழர்களிடம் திணிக்க முயலக் கூடாது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மட்டுமே தமிழீழ மக்களின் ஆணைக்குட்பட்டது. மாறாக, வேறு எந்தத் தெரிவானாலும் அவர்களிடம் மீண்டும் ஆணை பெற்றே தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான எந்தத் தீர்வும் நிரந்தரமானதாக இருக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமான அமைதி வாழ்வு வாழ்ந்த தமிழர்கள் தான் புயலாகச் சினந்து புலியாக மாறினார்கள். இப்போதும் அவர்களது அந்த மாற்றங்களுக்கான காரணங்கள் சிங்கள இனவாதிகளால் அதிகரிக்கப்பட்டே வருவதால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் திசை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களது இந்த மௌனம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜபக்ஷக்களின் இந்த அரசியல் வெற்றிகள் ஈழத் தமிழர்கள் மீது இன வன்முறையையே தொடர்ந்தும் பிரயோகிப்பதற்குப் பயன்படுமானால், மீண்டும் அவர்கள் புலியாக எழுவது தவிர்க்க முடியாமல் போகும். அது, சிங்கள அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படிப் பயணிக்கப் போகின்றது என்பதில்தான் தங்கியுள்ளது

படையினரின் நடமாட்டத்தால் வன்னியில் பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

வன்னியில் படையினரின் நடமாட்டத்தினால் தமிழ்ப்பெண்கள் அச்சத்துடன் வாழ்து வருகின்றார்கள் என்று ஐக்கிய நாடுகளுக்கான அகதிள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அரசின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளை வன்னியில் பார்வையிட சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு, அபிவிருத்தி மற்றும் ஒத்திசைவிற்குமான சுவிசின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்கள். வன்னியில் தமிழ்ப்பெண்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்பு தமது நாளந்த வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக இருப்பிடங்களை அமைப்பதற்கும் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக்கொள்வதிலும் மற்றவர்களில் தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கை தொடர்பில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருசதாகவும் தெரிவிக்கப்டப்டுள்ளதுஇவ்வாறு பலதமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ள நிலையிலும், துணைவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்டப்டுள்ள நிலைகளில் இருப்பதால் படையினரின் அதிகளவான நடமாட்டத்தினால் இவ்வாறு ஆண்துணையின்றி வாழும் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப்போரின் போது இடம்பெயர்ந்த மக்கள பல இன்னல்களை சந்தித்து வதைமுகாம்களுக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையினால் ஒருதொகை உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் தற்போது பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 ஏப்ரல், 2010

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை!

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை என்று உதயா என்ற முன்னாள் பெண்போராளி குறிப்பிடுகிறாள். நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அவள் போராளியாக மாறியிருந்தாள். மிக மென்மை கொண்ட உதயாவால் எப்படி அந்த களங்களை எதிர் கொள்ள முடியும் என்றுதான் வியப்பாக இருந்தது. மிக மெல்லிதாகவே அவள் பேசுகிறாள். உதயா இப்பொழுது புன்னகைத்தபடியிருக்கிறாள். இரண்டு ஊன்றுகோல்களை ஊன்றியபடி கனி என்ற மற்றொரு பெண் வருகிறாள். வெட்டப்பட்ட அவளது தலைமுடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. அதை இழுத்துக் கட்டியபடி கனி வருகிறாள். வன்னியில் புளியங்குளத்தை சேர்ந்த கனி இறுதி நாட்களில் தன் அண்ணாவின் தொடர்பையும் இழந்து விட்டாள். இராணுவப் பகுதிக்குள் போகும்படி அவளையும் அவளின் தாயையும் அவளது அண்ணன் கூறியிருந்த பொழுதும் அதற்கு இடையில் அவளும் சூழ்நிலைக்காக போராளியானாள். செல்வி தனது ஒற்றைக் கையை இழந்தபடி வருகிறாள். செல்வி துடிதுபடிப்பானவள். ஷெல்லில் தன் ஒற்றைக் கையை இழந்த அவரை பார்த்து எப்படி இப்படியானது என்று கேட்கும் தைரியமும் மனநிலையும் யாருக்கும் வராது. செல்வியைத் தொடர்ந்து, ஒற்றைக் கையில் காயமற்று இயங்காது தூங்கும் கையை ஏந்தியபடி அருளினி என்ற இன்னொரு பெண் வருகிறாள். அருளனி தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற மிகுந்த சிரமங்களை அனுபவிப்பதாக கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இயங்காத அந்தக் கை தன்பாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. எழுதும் வலது கையை இழந்ததினால் அவள் பல நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் எனவும் உதயா சொல்லுகிறாள். ஒரு திடமான பெண்ணாக நம்பிக்கையளித்தபடி அருளினி இருக்கிறாள். எனக்கு என் நண்பிகள் எல்லா உதவிகளையும் செய்வார்கள் என தன் பாதிக்கப்பட்ட ஒற்றைக் கையை மடியில் தூக்கி வைத்தபடி குறிப்பிடும் அருளினி ஒரு குழந்தையை மாதிரிதான் புன்னகைக்கிறார். இப்பொழுது நம்பிக்கை கொண்டபடி தன்னைக் கட்டியெழுப்புவதைப்போல அவரது புன்னகை இருக்கிறது. இது எப்படியான சித்திரவதைச்சாலை என்பதை சொல்லுவது மிகச் சிரமமானது என்று குறிப்பிடும் கனி அங்கு யாரும் எங்களை தடிகளால் தாக்கவில்லை. ஆனால் தண்ணீருக்காக நாங்கள்தான் அடிபட்டுக் கொண்டிருப்போம். ஒரு வாழி தண்ணீரில் தோய வேண்டும். அந்த ஒரு வாழி தண்ணீரும் வடிய எவ்ளவு நேரம் ஆகும்? அந்த கொஞ்ச நீருக்காக வரிசையில் நிற்கத் தொடங்கினால், காலை மாலை என்று வரிசை கட்டி எங்களை எண்ணுவார்கள் நாங்கள் ஓடிவிடலாம் என்பதற்காக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கார் பார்ப்பதாக சந்திப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வர முடியும். அதுவும் கிராம சேவையாளரின் அனுமதி ஒவ்வொரு முறையும் எடுக்க வேண்டும். அப்படி வரும் பொழுது கொண்டு வரும் பொருட்களை தந்து விட்டு திரும்பிச் செல்லுவதற்குத்தான் அவர்களது நேரம் சரியாகி விடும். பிறகு விசில் சத்தம்தான் எங்கள் காதை கிழிக்கும். நாங்களே சமைத்து சாப்பிடுவோம். ஊத்தையும் புழுதியுமாக எமது நாட்கள் நிறைக்கப்பட்டிருந்தன என்று கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவர்களுக்கிடையில் தனது இரண்டு வயது மகனை வைத்துக் கொண்டு மற்றொரு பெண் எனது பார்வைக்கு தெரிகிறாள். மிக நீண்ட காலமாக அவரும் அவரின் கணவரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததின் காரணமாக கணவர் மற்றொரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். நிறைய பெண்போராளிகள் தங்கள் கணவர்மார் எங்கு எப்படி இருக்கிறார்கள், உயிருடன் இருக்கிறார்களா என்றே தெரியாதபடி இருக்கிறார்கள். இப்படி அவர்கள் சொல்லியது பின்னர் பசில் ராஜபக்ஷ பெயரில்லாதவர்கள் இறந்து விட்டார்கள் என்றே அர்த்தப்படும் என்பதுடன் பொருந்துகிறபோது அதிர வைக்கிறது. அண்ணாவை இறுதியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொழுது சந்தித்தேன். அவன் நெருப்பாய் எரியும் களத்தில் நின்று சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். எங்களைப்போய் சரணடையுங்கள் என்று சொல்லியவன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்று கனி முகத்தை கோணலாக்கியபடி குறிப்பிடுகிறாள். ஓற்றைக்காலை இழந்தபடி கால்சிதைவுகளால் ஊன்றுகோல்களுடன் நடந்தபடி உடல் காயங்களுடன் என்று ஒவ்வொருதரும் வெளியில் வந்து செல்லுகிறார்கள். இன்னும் உயிர் இருக்கிறது எனபதை புரிய வைத்தபடி ஏக்கங்களும் பிரிவுகளும் காத்திருப்புகளும் ஆறாத உள் காயங்களும் என்று வலிகளை தங்களுக்குள் வைத்திருக்கும் இந்த முன்னாள் பெண்போராளிகளை ஒரு யுத்தத்தின் பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளாக்யிருக்கிறது காலம். இவர்களில் கொஞ்சப் பேர் மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பெண்கள் தொடர்ந்தும் வாழ முடியாதபடி காலத்திற்கும் சூழலுக்கும் பொருந்தாபடி சித்திரவதைகளை விரிக்கும் அந்த முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விரைவில் விடுதலை செய்து புன்னகைகளையும் அவர்களது உள்ளங்களையும் காப்பாற்றும் அவசியம் அனைவரிடமும் இருக்கிறது.

ஈழத்துச்சூரியனே...

வேங்கையாக வந்தவரே! அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை எழுப்பிய அயனே. குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர் அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர். நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர். வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர். புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர். கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர் காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர். தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை களமாட விட்டு கண்ட ரசித்தீர். அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர். அகப்பையோடு அலைந்த அவளை ஆட்லறியோடிங்கு விளையாடச்செய்தீர் அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர். அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும் வானிலும் தரையிலும் மிடுக்குடன் நடப்பது உம்மால்.. தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம் எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம் ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய் நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம் என நாம் உயர்ந்தோம். காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான் இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில் தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன் பலர் உங்களின் படை தொடர்வோம். காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன் பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்.. வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற எழியவர்கள் தலைகுனிந்தார் அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள் உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான் இறுதிவரை உமைத் தொடர்வார். மலையென எதிரி எம் குகை புகுந்தாலும் இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும் உம்முன்னே நாம் நடப்போம் வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன் உங்களின் வழி தொடர்ந்திருப்போம்...

மார்பில் வெடிகுண்டு!

விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது. அல் குவைதாவின் பெண் தற்கொலை படையினர் இந்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பெண்களின் மார்பில் அறுவை சிகிச்சை மூலம் இந்த வெடிக்கும் திறன் கொண்ட திரவப் பையைப் பொருத்துகின்றனர். பெண்களின் மார்பகப் பகுதியில் இயல்பாக திரவம் இருப்பதால் ஸ்கேனிங்கில் இதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இதுபோல் ஆண்களின் பின்புறத்திலும் ( அமரும் பகுதி) இதே திரவப் பொருளை நிரப்பி வெடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டு இளைஞரைப் பிடித்து விசாரித்‌த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரிட்டனில் மருத்துவம் படிக்கும் அல் கொய்தா ஆதரவாளர்கள் இது போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை பயின்று, பின் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு அல் குவைதா இயக்கத்திற்காக இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

அம்பாறையில் இனியபாரதி குழுவினரின் அட்டகாசம் ...

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய கருணாகுழு(இனியபாரதி குழு)வினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேரின் வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு 7.00மணியளவில் அக்கரைப்பற்று 7ஆம் குறிச்சிப்பகுதியில் கமலகம் வீதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீடுகளே உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைவானில் வந்த ஆயுதம் தாங்கிய இனியபாரதி குழுவினர் வாசல்கதவுகளை வெட்டி வீட்டுக்குள் புகுந்து வீடுகளை உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் கடும் தாக்குதலுக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இனியபாரதி குழுவினரை நிராகரித்துள்ள இந்த வேளையில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அம்பாறை மாவட்டத்தின் இனியபாரதி குழுவினர் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் கடும் கவலைவெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கில் இனியபாரதி குழுவினர் சிறுவர்களை தமது ஆயுதப்படையில் சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது