ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சிறிலங்காவின் ஜனாதிபதித்தேர்தலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முற்றான முடிவுகளும்

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பல தில்லுமுல்லுகளுக்கும் மோசடிகளுக்கும் மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842,749 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி மீண்டும் மகிந்த இராஜபக்சவே ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தும்விட்டார். இதன் ஊடாக தமிழ் மக்களை கொன்று குவித்த முதன்மையான போர் நாயகன் மகிந்தவே என அழுத்தம் திருத்தமாக சிங்களவர்கள் தீர்ப்புக்கூறி அவருக்கு முடி சூட்டியுள்ளனர். நாடளாவிய ரீதியில் கணிசமான அளவு வாக்குப்பதிவுகள் இடம் பெற்றிருந்தும் கூட இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்திருந்ததாக வெளியாகியிருந்த தகவல்கள் கூறின.இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சிங்களதேசத்துக்கான ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தமிழீழ தேசத்து மக்கள் ஆர்வம் காட்டவில்லையென்பதும், இதனால் தமக்கு எவ்வித நன்மையும் வந்து சேரப்போவதில்லை எனவும் அவர்கள் கருதியது, இரண்டு, இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி அதர்மமானமுறையில் யுத்தத்தில் வழிநின்று கொன்று குவித்ததுடன் தங்களினதும் தங்கள் உறவுகளினதும் சொத்துகளுக்கும் உடமைகளுக்கும் பெரும் அழிவினைச்செய்தவர்கள் என எண்ணியதும், இவ்விருவரும் இனவாதத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என கருதியதுமாகும். எனினும்,தமிழர் தாயகப்பகுதியான வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கமைய கணிசமான மக்கள் ஆட்சிமாற்றம் ஒன்றினை மட்டும் நோக்காகக்கொண்டு வாக்களிக்க முடிவெடுத்திருந்தனர். ஏனெனில், இதற்கு சில புறநிலைக்காரணிகளும் இருந்தன. எனினும், அரசினதும் அதன் அடிவருடிகளினதும் அடாவடித்தனமான செயல்களாலும், சதிகளாலும், அச்சுறுத்தல்களாலும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தார்கள் என வெளிவந்த செய்திகள் அனைத்தும் எடுத்துக்காட்டியிருந்தன. இதற்காக வடக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலுள்ள தேசத்துரோகக்கும்பலையும் இன்னும் சில உதிரி ஒட்டுண்ணிகளையும் அரசு பயன்படுத்தியது. இதே போன்று கிழக்கில் தமிழ் பகுதிகளில் கருணா, பிள்ளையான் போன்ற எட்டப்பர்களையும் முஸ்லீம் பகுதிகளில் அதாவுல்லா போன்ற பதவிசுகத்தை மையமாக வைத்து சிங்களத்துக்காக எதையும் செய்ய துணிகின்ற காடையர்களையும் அரசு தீவிரமாக ஈடுபடுத்தியிருந்தது. வடக்கில் எட்டப்பன் டக்ளஸ் முதலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும் ஆசை வலை வீச்சுக்களையும் அள்ளி அள்ளிவீசினார். பின்னர் தன் எஜமானர்களை எப்படியும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றினால்தான் தொடர்ந்து பிழைப்பை நடத்த முடியும் என்பதற்காக கபடத்தனமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டி மக்களை திசைதிருப்ப முயன்றார். அதிலும் திருப்தி கொள்ளாத அந்த கோடாலிக்காம்பு வாக்களிப்பு நாளில் தன் கூலிகளை ஏவி பெற்றோல் குண்டுகளை வீசியும், கைக்குண்டுகளை வெடிக்கவைத்தும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதவாறு அச்சுறுத்தி மிக மோசமான ஜனநாயக மீறலையும் செய்தார். இதே போன்றே கிழக்கிலும் மேற்சொன்ன கருணா பிள்ளையான் அதாவுல்லா போன்ற எச்சிலைப்பொறுக்கிகளை வைத்து மகிந்த சகோதரர்கள் தமது அடாவடித்தனமான ஜனநாயக விரோதச்செயற்பாடுகளை தேர்தல் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து நடாத்தி வந்தனர். இதற்கமைய, தமிழ்ப்பகுதிகளில் கருணாவும் பிள்ளையானும் தமது அதி உத்தம சிங்கள எஜமானர்களுக்காக போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் கைவரிசையக்காட்டி மக்களை சொல்லொணா வகையில் துன்பப்படுத்தினர். தமிழினத்தின் கிழக்கிற்கான முதன்மையான இவ்விரு துரோகிகளும் ஆளாளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு தேர்தல் பிரச்சார காலங்களில் பலவந்தமாக மக்களை பிடித்து வந்து தமது எஜமானர்கள் கண் முன் கூட்டங்களை நிரப்பி பொய்யான வாக்குறுதிகளையும் வெற்று வாய்ஞாலங்களையும் அள்ளி அள்ளி வீசி எறிந்தனர். அத்தோடு அந்த வீணர்கள் சிங்கள இராணுவ பலத்தின் கால்ச்செருப்பாக தேய்ந்து கொண்டு ஒவ்வொரு தமிழ் மக்கள் வீடுகளுக்கும் படியேறிச் சென்று தமிழ் மக்களை வயது பால் வேறுபாடின்றி கொத்துக்கொத்தாக அழித்தவனுகாக தமது இழிவான வல்லமைகளின் மூலம் வாக்குத்தேடினர். அது மட்டுமின்றி தமிழ் இனத்தின் அக் கழிவுகள் வாக்குச்சாவடி வாசல்களிலும் போய் நின்று கொண்டு மக்களைப்பயமுறுத்தி அவர்கள் சுயமாக வாக்களிக்கமுடியாதவாறு தடுத்து குழப்பங்களை ஏற்படுத்தியதுடன் தமது எஜமானான அதிமேன்மை தங்கிய மகிந்தவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று கைகாட்டி கட்டளையிட்டும் கட்டாயப்படுத்தியுமிருந்தனர் இந்த புத்திபேதலித்தவர்கள். இது இவ்வாறிருக்க, மகிந்த சகோதரர்களின் கிழக்கு முஸ்லீம் பகுதிகளுக்கான முகவர்களில் ஒருவனான சிங்கள அடிவருடியும் ரவுடி அமைச்சருமான அதாவுல்லா தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே குரோதத்தையும் பகைமையையும் தூண்டி தனது மானசீக தலைவன் மகிந்தவிற்காக வாக்கு வேட்டையில் மிகத்தீவிரமாக இறங்கியிருந்தார். அந்தச்சமயம் காத்தான்குடி பிரதேசத்தில் வாக்குக்கேட்டுச்சென்ற அதாவுல்லாவை அப்பிரதேசமக்கள் கல்லால் அடித்துத்துரத்தியுள்ளனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்டு ஒத்த கொள்கையுடன் ஒரே குறிக்கோளுக்காக தேர்தலை சந்தித்தவேளை இதனை விமர்சனம் செய்து தனது நயவஞ்சக நஞ்சு விதைக்கொள்கையான தமிழ் முஸ்லீம் இனவாதத்தைத்தூண்டி சகல முஸ்லீம் மக்களிடமும் மிகக்கேவலமான முறையில் வாக்குப்பிச்சை கேட்டு அலைந்துதிரிந்தார். அத்துடன், இவரும் தனது வழமையான அடாவடி அரசியல் தனங்களையும் அட்டூழியங்களையும் முஸ்லீம் மக்கள் மீதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் மீதும் ஏவி அநியாயங்களைப்புரிந்திருந்தார். எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த தேர்தல் மூலம் சிறிலங்காதேசத்தின் ஜனநாயக விரோதப் போக்கு கொண்ட இந்த பயங்கரவாதக்கூட்டணி தமிழர் தாயகத்தில் மூக்குடைபட்டு தங்கள் முகத்தில் கரியைப்பூசிக்கொண்டு நிற்பதை அனைவரும் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.அதாவது, பெரும்பான்மையில் இத் தேர்தலை நிராகரித்துள்ள தமிழ் மக்கள் தங்களை எந்தவிதமான அழுத்தங்களை பிரயோகித்தும் எந்தவகையிலுமான பயங்கரவாதங்களைத்திணித்தும் தமது உணர்வையும் எண்ணப்பாட்டையும் மாற்ற முடியாது என்பதனையும் கட்டுப்படுத்த இயலாது என்பதனையும் அடித்துச்சொல்லியுள்ளார்கள். அதே நேரம் சில புற நிலைக்காரணிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுதலின் பேரில் மாற்றம் ஒன்றிணை மட்டும் நோக்காகக்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பினையும் சில மக்கள் கருத்தில் எடுத்து தமது ஆதரவையும் வழங்கியிருக்கின்றார்கள். அது, சுதந்திர தமிழீழம் நோக்கிய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதலில் அவர்கள் பயணிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் எண்ண ஓட்டத்துக்கும் நாட்டத்துக்கும் கிடைத்த ஆதரவேயன்றி வேறொன்றுமில்லை என்பதை அனைவரும் மனதில் நிறுத்துதல் வேண்டும். ஆகவே,சிறிலங்காவின் 2010 அரசதலைவர் தேர்தலைப்பொறுத்தவரை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மனநிலை என்னவென்பதை தமிழ் மக்களால் மீண்டுமொருமுறை இந்த உலகுக்கும் இதுவரை உணராத எல்லோருக்கும் அறுதியிட்டுச்சொல்லப்பட்டுள்ளது. அதாவது, சிறிலங்கா அரசு எந்த இராணுவப்பல கொடுமைகள் மூலமும் எவ்வகையான அடக்குமுறைகள் அநியாயங்கள் ஊடாகவும் தங்கள் எண்ணங்களையும் தங்கள் எதிர்பார்ப்புக்களையும் தங்கள் மேல் திணிக்கமுடியாது என்பதையும், ஒட்டுக்குழுக்களினது எட்டப்பர்களினதும் பசப்பு வார்த்தைகள் தம்மிடம் ஒருபோதும் எடுபடாது என்பதையும், சோரத்தில் கருவான அந்த இழிபிறவிகள் தமிழ்மக்கள் மேல் செலுத்தும் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதையும் இத் தேர்தல் மூலம் மிக ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.மொத்தத்தில், எமது மக்கள் நீங்கள் வேறு நாடய்யா நாங்கள் வேறு நாடய்யா என்பதை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர்.