ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நான் கிளி நொச்சிக்கு வந்திட்டேன் ....

அக்கா நாங்கள் கிளி நொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன். வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான்.வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது. சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு போட்டுது போல இருக்கு முதல் வந்த ஆட்கள் காணிகளுக்க கல்லுகுவியல்கள் கிடக்குது. மற்றும்படி ஒரு அரச மரமும் மிச்சம் இல்ல எல்லா இடமும் புத்தர் சில வைக்கப்பட்டு இருக்கு. சனங்கள் கூடுதலாக வந்திட்டுதுகள் இப்பதான் மூன்று கடை திறந்திருக்கினம். புத்த கோயில்களுக்கான பூசைகள்தான் இங்க கூட நடக்குது ஸ்பீக்கரில கூட பூசை கேட்கலாம். சிங்கள சனம் நிறைய வந்து புத்த கோயில்ல கும்பிட்டு போகுதுகள். குருகுலம் ஜெயந்தி நகர் பக்கம் போனோம் . அங்க சின்ன அக்காவின்ர காணிபார்த்தோம். அப்படியே இருக்கு வீட்டைதவிர. குருகுலம் கட்டடங்களையும் கள்ளர் வந்து இடிச்சு இருக்கிறாங்கள். பிறகு ஜி.எஸ் (கிராமசேவகர்) அந்த இடத்தில போட் போட்டிருக்கிறார். அந்த இடத்துக்கு உள்ளே யாரும் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று. குருகுலம் ஆட்கள் வந்திட்டினம் இல்லத்தினை திரும்ப ஆரம்பிக்க கதைச்சு கொண்டிருக்கினம். ஈழ நாதம் கட்டடத்தில் ஆமி முகாம் போட்டிருக்கிறான். எல்லாம் சிங்கள மயமாதான் இருக்கு . ஆனால் காணி பறிபோய்விடும் என்பதால் எல்லா சனமும் வந்து காணிபதிவுகளை செய்து காணிகளை துப்பரவாக்குதுகள். ஆமி இப்போ செக் பண்ணுவதில்லை. கந்த சாமி கோயில் பக்கம் புனர்வாழ்வு கட்டடத்தில இருந்த ஆமி வேற இடம் போயிட்டாங்கள். இனி கோயில் பூசை ஒழுங்காக நடக்கும் என்று நினைக்கிறன்.புனர்வாழ்வு கட்டிடம் மேல் மாடி இடிஞ்சு இருக்கு. ஆனால் இப்போ ஒருவரும் இல்லை. இப்போ காணிப்பதிவுதான் மும்முரமாக நடக்குது. தெரிஞ்ச ஆட்களுக்கு சொல்லுங்கோ காணி உரிமையாளர்களை வந்து பதிய சொல்லி பதிஞ்சு துண்டு எடுக்காவிட்டால் அதனை வேறு தேவைக்கு எடுத்து விடுவாங்கள்.ஸ்கூல் எல்லாம் நடக்குது. சென்றல் கொலிஜ் இல் நேற்று கொஞ்ச சனம், 55 ம் கட்டை சனங்கள் வந்திருக்குதுகள் நாளைக்கு விடுவாங்கள் போல இருக்கு. போன 12 ஆம் திகதி ஓமந்தைக்கு தம்பிய பார்க்க போனம் பிரச்சினை இல்லை எனக்கு தெரிஞ்ச போராளிகளையும் பார்த்தனான். எப்ப விடுவாங்கள் என்று எங்களிடம் கேட்டாங்கள். நாங்கள் என்ன செய்வது? கெதியா விடப்போறாங்களாம் என்று சொன்னேன். அடுத்த மாதம் 12 ஆம் திகதி போவேன். எங்கட வீட்டிற்கு பக்கத்தில சானங்களுக்க காணி சண்டை நடக்குது . இனி இஞ்ச அதுதான் நடக்க போகுது. எங்கட காணிக்க கூட சிலபேர் வந்து இருந்தவ ஆனால் நாங்கள் வந்ததும் போயிட்டினம். இஞ்ச சனங்களுக்குள்ள சண்டைகள் நடக்குது. இயக்கத்திற்கு வேலை செய்த ஒரு குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டு சனத்திற்கும் சண்ட நடந்து இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் திரும்பவும் வவுனியா போயிட்டினம். அந்த இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் முகாமில் ஆட்களை காட்டி கொடுத்தார்கள் தங்களின் சொந்த காரர்களை காட்டி கொடுத்தார்கள் என்றே மற்ற ஆட்கள் சொல்லுகினம். சனம் எல்லாம் ஒரு வித்தியாசமான சூழலில் இருக்கின்றார்கள். களவு, சண்டை, குடி வெறி, கூடாத வார்த்தைகள், சேட்டைகள், எல்லாம் மலிஞ்சு போய் இருக்கு.ஆமி காரங்களுக்கும் பொலிசுக்கும் நல்ல பொழுது போக்கு விளக்கம் தீர்க்குறதில அவங்களுக்கு வாழ்க்கை வெறுக்கும் போல இருக்கு. அவரையும் ( கணவர்) எல்லா இடமும் தேடி பாத்திட்டம் ஆனால் ஒரு இடமும் இல்ல, முள்ளிவாய்க்காலில இருந்து சனங்களோட வந்தவர் எண்டு தெரிஞ்ச ஆட்கள் எல்லாரும் சொல்லுகினம். ஆனால் காண இல்லை. எனக்கு பிறகு காயப்பட்டு கப்பலில வந்த ஆட்கள் சொன்னார்கள் இவரை தாங்கள் ஆஸ்பத்திரியில் கண்டது என்று. எல்லா இடமும் அறிவிச்சு இருக்கிறம் பார்ப்பம். ஆமி காரங்கள் நல்லா கதைக்க பழகிவிட்டாங்கள். இனிமேல் சமாதானமாக இருப்பம் உங்க பக்கத்திலையும் இழப்பு எங்க பக்கத்திலையும் இழப்பு இனிமேல் சமாதானமாக இருப்பம் என்று கதைக்கிறாங்கள். தமிழீழம் கிடைக்காட்டிலும் பரவாயில்ல எங்கட சனங்கள திருத்துறதுக்கு தலைவர் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்கட சனம் தங்களுக்கு உள்ளேயே அடிபட்டு சாகும் போல கிடக்கு. இப்பவே எடுத்தது எல்லாத்துக்கும் காசுகேட்க வெளிக்கிட்டங்கள். ஏதோ பார்ப்பம் .... வாற சனி கிழமை ஒருக்கால் எடுங்கோ.. ஒகே அக்கா

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்?

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்: ஒபாமா அச்சம் அனைத்து தரப்பு வளர்ச்சியில் இந்தியாவிடம் இருந்து பலத்த போட்டியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்ற நாடுகள் 2ஆம் இடத்துக்கு போட்டியிட்டு கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் முதலிடத்துக்கு போட்டியிட்டு கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் உள்ள வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், “இந்தியாவும், தென்கொரியாவும் அமெரிக்காவை விட அதிகமான விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், நாம் (அமெரிக்கா) வெற்றி பெற முடியாது. சீனா, 40 அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. ஆனால் நாம் ஒரு பாதையை மட்டுமே அமைத்து வருகிறோம். எதிர்காலத்துக்கு தேவையான கட்டமைப்பை நாம் உருவாக்க தவறிவிட்டோம். இந்தியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகின்றன. தூய்மையான மின்சக்தி தொழில்நுட்பத்தை எந்த நாடு கண்டுபிடிக்கிறதோ அந்த நாடுதான் 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்துக்கு தலைமை தாங்கப் போகிறது. இந்தப் போட்டியில் நாம் காத்திருக்க முடியாது. ஏனெனில் இந்தியா காத்திருக்க போவதில்லை. சீனா காத்திருக்கப் போவதில்லை” என்றார்.

தாஜ்மஹால் என்றால் நினைவுக்கு வருவது ...............

தாஜ்மஹால் என்றதும் நினைவுக்கு வருபவன் சாஜகானே அன்றி, தாஜ்மகாலை கட்டிய கொத்தனார் அல்ல' . அதுபோல் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட்டமைக்கு எமது முறையான தலைமையே காரணம் என மக்கள் நம்புகின்றார்கள். அதனால்தான் நாம் மறுபடியும் வெற்றி கொள்ள முடிந்தது' எனத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறிலங்காவில் சுமுகநிலை தோன்றுவதற்கு இந்தியா மிகுந்த பலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியா எமது உறவினர். உதவி புரிந்துவரும் மற்றைய நாடுகள் எமது நண்பர்கள் ' எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, தமிழ்மக்கள் தமக்கு வாக்களிக்காதது குறித்து தமக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் தாம் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றியீட்டியது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், தமக்கு அந்த ஆச்சரியத்தைத் தந்திருப்பவர்கள் குறிப்பாக சிங்களக் கிராமமக்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகள் வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். தமிழ் அரசியற் தலைமைகள் உரிய உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், புதிய தமிழ்தலைவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதெனவும், அவவ்வாறு உருவாகும் புதிய தலைமைகளுடன், புதிய சிந்தனைகளின் அடிப்படைடயில் பேச்சுவார்த்தை மெற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தைப் பெற முடியுமா?

நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்? யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமாதரியான வரலாற்றைத்தான் சொல்கின்றன. ஒருமுறை படித்து முடித்த பின்னர் செயலில் இறங்குங்கள்! நாம் யூதர்களாக முடியுமா? நம்மிடம் ஒற்றுமையில்லையே ! நாம் யூதர்களைப் போல் வரவேண்டும். அவர்கள் அய்க்கியமாக இருந்தார்கள் என்று யார் சொன்னது? நாம் வேறு வேறு நாடுகளில் வாழும் 7 கோடி மக்கள். நம்மிடம் எல்லா வளமும் இருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும்? வீண் பேச்சுப் பேசுவதையும் எதிர்மறையாகப் பேசுவதையும் சிந்திப்பதையும் நிறுத்த வேண்டும். உங்களிடமும் மற்றவர்களிடமும் நம்பிக்கையை ஊட்டுங்கள்! இலக்கில் கண் வையுங்கள். ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளை உருவாக்குங்கள்! பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நமது இலக்குத் தவறக்கூடாது. பிரான்சுதமிழீழமக்கள்பேரவை , ஐரோப்பியதமிழ்மக்கள்அவை , அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, உலகளாவியதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் அவை, கனடிய தமிழர் பேரவை, பேர்ல் உள்ள அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் அமைப்புக்களை ஆதரியுங்கள். செயல் செய்யுங்கள், எண்ணங்களை, நேரம் மற்றும் வளங்களைவழங்குங்கள். புறக்கணிப்பு, ஆதரவுதேடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். எல்லோரும் அழைத்து நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கத் தொடங்கினால் நாம் வெற்றி பெறுவோம்! அழைப்புக்கு நீங்கள் காத்திருந்தால் நாம் வெற்றியடைய மாட்டோம்! ஓரு நாளில்ஒரு மணி நேரத்தையாவது செலவிடுங்கள்! எதைக் கொடுப்பது என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். மழையாகட்டும் வெய்யிலாகட்டும் தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக................

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியயான்று உருவாக்குவதற் குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலை மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி ருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுப் பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் மறை முகமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலமும் என்ற தலைப்பில் பருத்தித்துறை இளைஞர் அணியினரால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றுக்கு எனக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களிடம் நான் ஒரு கருத்தை முன் வைத்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி கட்சி ஒன்று உருவாக்குவோமானால் அக் கட்சியிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் கிராமிய மட்டத்திலிருந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு வேட்பாளராகப் போட்டியிட்டால் நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என இளைஞர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்இன்று முடிபை அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு கூட்டமைப்பின் முடிபு அறிவிக் கப்பட்டால் நாளை எனது முடிபை அறிவிப்பேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை இளைஞர் அணியினரின் கலந்துரையாடல் நேற்று மாலை பருத்தித் துறை சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற் றது. இக் கலந்துரையாடலில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர்.

அர்ஜனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி

நாடாளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் சூடு பிடித்துள்ளது. எதிர்பார்த்திராத பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் களத்தில் இவர்கள் குதிப்பது கராம்பு போட்ட கறிபோல தேர்தலிலும் கமகம வாசம் வீசவே செய்யும். முன்னைய மூன்றாம் தரத் தமிழ்ப் புத்தகத்தில் ஒரு கதை. நிமால் பந்தையடி. பாலா பந்தைப்பிடி. அது அந்தக் கதையின் சாரம். சிங்கள நிமாலும் தமிழ்ப் பாலாவும் ஒற்றுமை யாக விளையாடுகின்றனர் என்பதை காட்டுவதற் காக அந்தக் கதை சோடிக்கப்பட்டது. கதைகதையாக இருந்தமையால் பாடம் பாதை மாறியது. நிமாலும் பாலாவும் பந்தை மட்டுமல்ல; வெடி குண்டையும் அடித்துப் பிடித்து விளையாடி பார் வையாளர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். நிமாலும் பாலாவும் சேர்ந்து பந்தை அடியுங் கள், பாகிஸ்தானையும், சீனாவையும் தோற்கடி யுங்கள் என்று பாடப்புத்தகத்தில் கதை எழுதியி ருந்தால் நிலைமை வேறாகி இருந்திருக்குமோ என ஏழை மனம் எண்ணுகிறது. விளையாட்டின் ஊடாக இன ஒற்றுமையை வலியுறுத்தியதெல்லாம் கடந்து இப்போது எல்லாம் விளையாட்டாக மாறிவிட்டது. இந்த விளையாட்டில் நாடாளுமன்றமும் விளையாட்டு மைதானமாக மாறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் ஏற்படுத்திக் கொடுக்குமென நம்பலாம். ஆம். எதிர்வரும் தேர்தலில் இலங்கை கிரிக் கெட் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெய சிங்கா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும். நாடாளுமன்றத்தில் அடிக்கப்படும் பந்து எங் கள் தமிழ் எம்.பிக்களின் தலைகளில் படாமல் இருக்க-சுசந்திகாவின் மூச்செறிந்த ஓட்டத்தால் எங்கள் மூத்த தமிழ் எம்.பிக்களின் இதயத் துடிப்பு தடைப்படாமல் இருக்க அந்த ஆண்டவன் தான் உதவவேண்டும்.

விசாரணை மே 14 ஆம் திகதிக்குள் நடத்தவேண்டிய நிலை

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் மேமாதம், 14 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய ஒருவர் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு இராணுவச்சட்டத்திற்கு உட்படுத்தப்படுவர் என்ற அடிப்படையில் இந்த வரையறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிக்குள் அவர், இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாவிட்டால்,சிவில் நீதிமன்றத்திலேயே அவருக்கு எதிரான விசாரணையை நடத்தமுடியும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சிரேஸ்ட படையதிகாரியான லெப்டினன்ட் ஜெயசூரிய மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோர் சரத் பொன்சேகாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், இராணுவத்தின் நீதிபதி சட்டத்தரணி ஜெனரல் இந்திர விஜயரட்ன, வழக்கு விசாரணை தொடர்பான திகதி உட்பட்ட தீர்மானத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், ஊடக இணைப்பாளர், தங்குமி;ட வசதிகளை செய்து கொடுத்தவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைகளுக்கு கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வடக்கிலும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளது

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது. இத் தகவலை கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். வடபகுதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி, வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சி கிழக்கு பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.