புதன், 17 பிப்ரவரி, 2010

சொத்துக்கள் விலை வீழ்ச்சி

கொழும்பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தற்போது காணி மற்றும் சொத்துக்களின் விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் யுத்தம் காரணமாக பெருமளவில் வந்து தங்கியிருந்தனர். இதன் காரணமாக சொத்துக்களின் விலைகளில் ஏற்றம் காணப்பட்டன. எனினும் தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் குடியேறியிருந்த மக்கள் வடக்கு, கிழக்கில் மீண்டும் குடியேற செல்வதை அடுத்தே சொத்துக்களி;ன் விலைகளில் குறைவு ஏற்பட்டு வருவதாக தரகர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கு மக்களின் அதிகரிப்பை அடுத்து வெள்ளவத்தையிலும், கொட்டாஞசேனையிலும் உயர்மாடி குடியிருப்புக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் காணியின் விலை, 30 லட்சம் ரூபாவுக்கும், கொட்டாஞ்சேனையில் ஒரு பேர்ச் காணி: 20 லட்சம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டன. எனினும் தற்போதைய நிலையில் அவற்றில் 75 வீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டி

பாடகி மாயா அருள்பிரகாசத்தின் தந்தையார் அருளர் அருட்பிரகாசம் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோசின் சார்பில் யாழ்.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் இரு மாவட்டங்களிலுமாக மொத்தம் 7மாவட்டங்களில் தாம் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், நுவரேலியா மற்றும் ஹற்றன் ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக இக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோஸின் தவிசாளர் அருளர் அருட்பிரகாசம் யாழ் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். வரலாற்று நாவலான லங்கா ராணியின் ஆசிரியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

ரம்பாவை மணப்பவர் .......................

நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யூ. காரை இந்திரன் பரிசாக வழங்கினார். சமீபத்தில் இருவருக்கும் சென்னை அடையாறு பார்க் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் இந்திரன் பற்றி புது வதந்தி பரவி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு தலைவர்களுடன் இந்திரனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள். இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லை என்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர் இந்தியா வருவதற்கு விசா அளிப்பதன் மூலம் இதை அறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றுவார்கள்

போராட்டங்கள் மூலமாக மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென அதிபர் ராஜபக்சவுக்கு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தனர். ஊர்வலத்திலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய், பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி, தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலை செய், நாட்டின் தளபதியை விடுதலை செய், அதிபர் மாளிகை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் அதிபரை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர். முன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் உரையாற்றுகையில், "இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார்,அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தை கைவிடாது. ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும். தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம்" என்றார்.

கருணாவுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதியமைச்சரான கணேசமூர்த்தி, அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளமை தெரிந்ததே

துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்,,,,,,,,,,,,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோகி ரத்னா பகுதியை சேர்ந்தவர் அசார் இக்பால், மாணவர். இவர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகருக்கு செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். விமானத்தில் ஏற ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரை எக்ஸ்ரே கருவி மூலம் “ஸ்கேனிங்” சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் ஷூக்களில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தாலிபான்களின் முன்னணித் தலைவர் பிடிபட்டார்

தாலிபான்களின் மூத்த இராணுவத் தளபதியும் முன்னணி வியூக வகுப்பாளருமான முல்லா அப்துல் கனி பராதார் இந்த மாத முற்பகுதியில் கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிடிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த செய்தி முதலில் வாஷிங்டனில் இருந்து வந்தது. பின்னர் அதனை பாகிஸ்தானிய அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற முறையில் பிபிசியிடம் உறுதி செய்தனர். ஆனால், இதுவரை பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், ஆப்கானிய தாலிபான்களின் பேச்சாளர் ஒருவர் இதனை மறுத்துள்ளார். அமெரிக்கர்கள் தமது தோல்வியில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவே 'சர்வாதிகாரி'

தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது. இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார். தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.