சனி, 15 ஜனவரி, 2011

ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக கடற்கரையில்  ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க காக்கி நிற அரைக்காற்சட்டையுடன் காணப்படும் சடலத்தின் இடது கையில் "கே. குப்புசாமி" என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்தச் சடலத்தின் வலது கால் தொடையில் நட்சத்திர அடையாளமும் காணப்படுகிறது என்றும் தலைப்பகுதி மோசமாக அழுகி சிதைந்துள்ளது என்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது

கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!

தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதாஜப்பெருமாள், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான தீவிர முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் அரங்கத்தில் செயற்பட்டுவந்த குறித்த கட்சிகளின் குழுவினருக்கும் கூட்டமைப்புக் குழுவினருக்கும் இடையிலான குழு நிலைச் சந்திப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை பயணம்!

இந்திய விமானப்படைத் தளபதி  எயார் சீப் மார்சல் ஜீ.வீ.நயிக் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பயணமாகவுள்ள அவர் இலங்கையில் காணப்படும் இராணுவ முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!

இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் சவால் விடுத்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நாட்களின் முன்னர் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.

80 முன்னாள் போராளிகள் யாழில் விடுதலை

யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட செயலகம்,, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், யாழ் பல்கலைக்கழகம், கல்வித் திணைக்களம் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையோடு தைப்பொங்கல் கலாசார விழா நடைபெற்றபோது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 80 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன