சனி, 17 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணமக்களின் எதிர்காலம்தான் எங்கே?

தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு, தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக் கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வருகின்றார்கள். 2010.04.08 ஆம் திகதி இடம்பெற்று இருந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே எல்லாச் செயற்பாடுகளை விடவும் மேலோங்கி இருந்தது. எங்குபார்த்தாலும் தேர்தல் சுவரொட்டிகள். யாருமே அறியாத புதுமுகங்கள் பல.. யாழ்ப்பான மக்களுக்கு இவர்களின் பிரச்சாரங்கள் அள்ளி வீசிய வார்த்தைகள், வாக்குறுதிகள் என எல்லாவற்ரையும் கேட்டு காது புளித்துப் போயிற்று. ‘சண்டையென்றால் சட்டை கிழியும்’ என்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் தேர்தல் என்றாலே சட்டை கிழியும் என்ற நிலைதான் காணப்படுகிறது. இங்கு ஆழுந்தரப்பில் போட்டியிட்ட ஒரே கும்பலுக்குள்தான் இந்தக்குத்துப்பாடு நடந்திருக்கின்றது. இதனுடைய விபரம்பற்றி யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளர் இராமநாதன் அங்கஜணிண் வாகனங்கள் தீழூட்டி எரிப்பு, அங்கஜன் துப்பாக்கிச்சூட்டிலிருந்து உயிர்தப்பினார் என்ற செய்திதான் வெளியாகியிருந்தது. இந்தச்சம்பவம் மகிந்த அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாளே இடம் பெற்றிருந்தது. இதற்கு மறுநாள் மாறுபட்ட வகையில் யாழ்ப்பாணப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்தச் செய்தியை யாழ்ப்பாணத்தில் தங்களைத் தாங்களே ஜனநாயகவாதிகள் என்று மார்தட்டும் ஈ.பி.டி.பி'யை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டிருந்தது. அதாவது தமது பிரச்சார வாகனத்தொடரணி மீது அங்கஜன் குழுவினர் பரமேஸ்வராச் சந்திக்கண்மையாகவுள்ள கெற்றப்புள் சந்தியில் வழிமறித்து வாகனங்களை எரித்து நாசம் செய்ததாகவும், தமது யாழ்ப்பாண மேயர் அங்கயனால் இழுத்து தாக்கப்பட்டு தலையில் கைத்துப்பாக்கி வைத்து சுட்டதாகவும் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் ஊடகங்களுக்கு செய்தியனுப்பியிருந்தனர். இந்தச்செய்தியை அறிந்த யாழ்ப்பாண மக்கள் பலர் ‘இனி ஏன்தான் டக்கிளசை மகிந்தவிற்கு?’ டக்கிளசின் செல்வாக்கை குறைப்பதற்கு யாழ்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புப்பட்டுயலில் முதன்மை வேட்பாளராக இராமநாதன் அங்கஜனை நிருத்தியிருகிறார் என்று முனுமுனுத்தார்கள். இதே வேளை இந்த வன்முறை நடந்து முடிந்த சில நாட்களின் பின் இராமநாதன் அங்கஜன் குழுவினர் (சுமார் 10 பேர்) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குள்ளே தமது பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்து துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்தனர். இதனிடையே சில மாணவர்கள், இ.அங்கஜனிடம் சில கேள்விக்கணைகளைத் தொடுத்திருந்தனர். அதற்கு அங்கஜனும் பதில்களை கொடுத்திருந்தார். குறுக்கிட்ட ஒரு நடுத்தர வயதாளி, கட்சிக்குள்ளே இடம் பெரும் குத்து வெட்டுகள் பற்றி கேட்டபோது, அங்கஜனின் பதில் திருப்திதராததால் “கள்ளனுடன் சேர்ந்துதான் அல்லது இருந்துதான் திருத்த வேண்டுமா?” என்று கேட்டு இங்குள்ள அரச ஆதரவு கட்சியை புட்டுப் புட்டுக் காட்டினார். யாழ்ப்பாணத்தில் சட்டம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது. கடந்த வாரம் யாழ்மாவட்டத்தையே பீதிக்குள்ளும், கோபத்திற்குள்ளும் ஆளாக்கிய மிகக்கேவலமான அநாகரியமான செயல் என்று வர்னிக்கப்படும் கபிலநாத்தின் படுகொலை தான். இந்த கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர், நுணாவில் இராணுவ முகாமில் செயற்பட்டு வந்த ஈ.பி.டி.பி யை சேர்ந்த ரஜீவன் என்பவருடன் தொடர்பு பட்டிருக்கிறது. ஆனால் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இதற்கான காரணம் தான் என்ன? மேற்படி முகாமில் இராணுவத்துடன் செயற்பட்டவர் எவ்வாறு? எங்கே? தப்பிச் செல்ல முடியும்? இந்தக் கட்டுரை எழுதும் வரைக்கும் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இலங்கையில் “சட்டம் யாவருக்கும் சமம்” என்று ஜனாதிபதி கூறினாலும் சட்டத்தை சில சந்தர்பங்களில் கணக்கில் எடுப்பதில்லை. கபிலநாத்தின் சம்பவமும் இவ்வாறு தான் செய்யப்பட்டதா? இருந்தாலும் நீதிமன்றம் பிடியானைப் பிறப்பித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தாலும் இதில் அரசியல் செல்வாக்கு சில வேளை குற்றவாளியை தண்டனையிலிருந்து மீட்டுவிடும் என்ற கதையும் இங்குள்ள மக்களால் பேசப்படுகின்றது. கல்விப் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற யாழ்ப்பாணம் இப்போது கலாச்சாரச் சீரழிவுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. இதில் என்ன துர்ப்பாக்கிய நிலை என்றால், வன்னியில் போரின அழிவிற்குப் பின்னர் இடம் பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாண முட்கம்பி வேலிக்குள் அடைப்பட்டுக் கிடந்த எமது மக்கள், ஒருவாறு விடுதலையாகி வெளியே வந்து தமது உறவினர் வீடுகளிலும், தமது சொந்தக் காணிகளிலும் தறப்பாளினால் வீடமைத்து குடியிருக்கும் போது, தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு பாழடைந்த வீடுகளை திருத்தியும், தங்குமிட வசதிகளையும் பணத்தின் பேராசையில் செய்துகொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக்கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வசித்துவருகின்றார்கள். இதுபற்றி எப்போதுதான் இந்தப் பணப்பேராசைக்காரர்கள் உணரப்போகிறார்கள்? இது வெளியுலகு அறியாத பரகசியம். இளையசமுதாயம் வழிதவறிப்போகும் நிலை காணப்படுகின்றது. கல்விச்செயற்பாட்டில் இருந்துகொண்டே மதுக்கலாச்சாரத்தை ஊட்டிவளத்து வருகின்றார்கள். இவற்றுடன் புகைப்பிடித்தல் பளக்கம் தற்போது அதிகரித்தே வருகின்றது. இவை இரண்டையும் தமக்கு ஒரு அந்தஸ்தாகப் பார்க்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கசுர்ணாபீஜ் இற்குப்போனால் இதை நேரடியாகபார்க்கலாம். இவ்வாறு சென்றால் யாழ்ப்பாணமக்களின் எதிர்காலம் எங்கேதான் சென்று முடியுமோ.