திங்கள், 5 ஏப்ரல், 2010

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி

நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது. 13 வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட கிழக்கு பிரதேசங்களின் இனச்செறிவை சீர்குலைக்கும் முயற்சிகளை இதே அரச துணைக்குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துத்தெரிவித்துள்ளார்

ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்?

ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா? வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார். அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்று சொல்றாங்கள் நிறைய தடவை கச்சேரிக்கு போனம் ஆனால் காசு இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்லுகினம். தொழில் ஒன்றும் செய்யேலாதுதானே நிவாரணத்தோட இருக்கிறம். எனக்கு சைக்கிளும் இல்லை. பக்கத்து வீட்டு காரரிட்ட சைக்கிள் வாங்கிதான் வவுனியாவிற்கு இவரை பார்க்க நானும் தம்பியும் போறனாங்கள். இவர் உங்களிட்ட சொல்ல சொன்னார்... தங்களை 5 வருஷத்திற்கு வைச்சிருக்க போறாங்களாம் ஆனால் அது உண்மையோ பொய்யோ தெரியாது. கலியாணம் முடிச்ச போராளிகள் 1682 பேர் இருக்கினம் இவர்களை முன்னமே விடப்போறம் என்றும் சொல்றாங்களாம். அதோட புதிதாக ஒரு முகாம் அமைத்து கலியாணம் முடிச்ச ஆட்களை அங்க கொண்டுபோக போறாங்களாம் என்றும் சொன்னவங்களாம். எது உண்மை எது பொய் என்று தெரியாது அடிக்கடி மாத்தி மாத்தி கதைபாங்களாம்.போன வெள்ளி, சனி கிழமை காயப்பட்ட ஆட்களை விடுறது என்று அதற்கான கடிதங்களும் எல்லாருக்கும் கொடுத்தாங்கள் கூட்டிக்கொண்டுபோக பெற்றோர்கள் வந்திருந்தார்கள். ஆனால் கொஞ்சப்பேரைதான் விட்டவங்கள். என்று கூறியுள்ளார் அந்த போராளி. மேலும் தமக்கு அரச தொலைகாட்சி, வானொலி , பத்திரிகை செய்திகளை படிக்க கொடுப்பதாகவும் கூறியுள்ள போராளி தம்மை பார்க்க வரும் பெற்றோர்கள், உறவினர்கள் இணைய செய்திகள் சிலவற்றை அச்சிட்டு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். எங்கள எவ்வளவு காலத்திற்கு வைச்சிருக்க போறாங்கள் என்று தெரியாது ஆனால் ஆக குறைந்தது 5 வருஷம் என்று இங்க உள்ள ஆமி சொல்லுறாங்கள். வெளி நாட்டில இருக்கிற அமைப்புக்கள், மக்கள் ஏதாவது எங்கள எடுக்கிறதுக்கு அலுவல் பார்க்கிறாங்களா? அங்க என்ன நடக்குது? முடிந்தால் அறிய தாருங்கோ. எங்களை போன்ற சிறையில் உள்ள போராளிகளை பார்க்க வாறதுக்கு சில பெற்றோர், துணைவிமார் சரியான கஸ்டப்படுகினம். போக்குவரத்துக்கு காசு இல்லை, சிலபேருக்கு சைக்கிளும் இல்லை. இவர்களுக்கு முடிஞ்சால் இதுக்கு மட்டுமாவது கொஞ்சம் உதவி செய்யுங்கோ. சிலபேருக்கு உதவி கிடைச்சதாக கேள்விபட்டோம் நன்றி ஆனால் எம்மை போன்ற இயக்க கொடுப்பனவை நம்பி வாழ்ந்த போராளி குடும்பங்களுக்கு சரியான கஸ்டம். தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள். எங்கள் வாழ்க்கை சிறையோடு முடிந்துவிடும் . எங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள் ஏனென்றால் அதுதான் எங்கள் ஆறுதல். போராளிகள் எல்லோரும் காட்டி கொடுப்பதாக சிலர் ஏசுகின்றார்களாம். சிறைக்குள் இருந்து கொண்டு வெளியில் நடப்பதனை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் நடக்குறது நடக்கட்டும் என்று சிறையிலேயே வாழ்க்கையினை கழிக்க தயாராகிவிட்டோம். விடுவாங்கள் என்ற நம்பிக்கை துளி கூட எமக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட வீத போராளிகள் வெளியில் நடமாடி திரிகின்றார்கள் சிலர் வெளியே சென்றுள்ளார்கள். ஏன்? எப்படி? இதெல்லாம் நடக்கின்றது என என்னால் சொல்ல முடியாது. ஆனால் பெரும்தொகையான போராளிகள் சிறையில்தான் உள்ளோம். ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக எங்களை கைவிட்டுவிட வேண்டாம். ஒன்றவிட்ட கிழமைதான் என்னை பார்க்க வருவினம் ஏதும் இருந்தால் சொல்லி விடுங்கோ. இவ்வளவும் அந்த போராளியினால் எமக்கு கூறும்படி தனது துணைவியாரிடம் சொல்லப்பட்டவை. கிளிநொச்சியில் இருந்து வெள்ளிகிழமை காலை இரவல் சைக்கிளில் புறப்பட்ட அந்த போராளியின் துணைவியார் சனி மாலை வவுனியாவில் இருந்து வளர்ப்பதற்காக கோழி குஞ்சுகள் வாங்கி கொண்டு வந்துள்ளார். கிளியில் கைவிடப்பட்ட சைக்கிளை இராணுவத்தினர் சனங்களுக்கு கொடுக்க போகின்றார்களாம் அதற்காக தான் பதிந்து இருப்பதாகவும் சொன்னார்.

அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்

கடந்த வருடம் போர் உச்சக்கட்டமடைந்திருந்த வேளை, ஏப்பிரல் மாதத்தில் ஆனந்தபுரத்தில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை பெட்டி அடித்து அதனைச் சுற்றி வளைத்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக கடும் போர் மூண்டது. கேணல் தீபன் தலைமையில் முதலாவது அணி களமிறங்க, இராணுவ முன் நகர்வு வெகுவாகத் தடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சமரை சமாளிக்க முடியாத இராணுவத்தினர், மேலதிக துருப்புக்களை வரவழைத்து முன்னேற முயன்றவேளை, தீபன் காயமுற்றார். அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தளபதி, விதுசா, மற்றும் துர்க்கா ஆகியோர் களமிறங்கினர். தலைவர் தங்கியிருந்த வீட்டை பெட்டியடித்து தாக்கி வந்த இராணுவத்தை, எதிர்த்து தாக்குதல் களத்தில் குதித்தனர் விதுசா மற்றும் துர்க்காவின் அணிகள். அகோரத் தாக்குதல் காரணமாக, பல இழப்புக்களைச் சந்தித்த இராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இச் சமரில் கடாபி நேரடியாக களமிறங்கி பெட்டியடித்த இராணுவத்தை சுற்றி தாம் ஒரு பெட்டி அடித்து பாரிய தாக்குதலை தொடுத்தார். (அதாவது இராணுவத்தை சுற்றிவளைத்தார்) இதனை சற்றும் எதிர்பார்க்காத இராணுவம் பல இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது.

நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது. இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இலட்சியத்தை வெல்லும் பணி”

ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறி லங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது. * ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போதிலும், காத்திரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தமிழர் அரசியலின் மையம் யாழ் குடாநாட்டிலேயே இருந்து வந்தது. தொடர்ந்தும்; இருந்து வருகின்றது. அத்தகைய யாழ் குடாநாட்டுத் தேர்தல் களம் இன்று கவனத்திற்கு உரிய ஒன்றாக மாறியுள்ள நிலையிலும், அங்கு வசிக்கும் வாக்காளப் பெருமக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருப்பதற்குப் பிரதான காரணம் எதுவாக இருக்க முடியும்? நாடாளுமன்ற முறைமைகளுக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது முடியாதது என்ற புரிதலின் வெளிப்பாடாகவே ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைபெற்ற தேசம் எவ்வகையினதாக அமையும் என்ற மாதிரியைத் தமிழ் மக்களுக்குக் காண்பித்தது. அது மட்டுமன்றி நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக இது சாத்தியமற்றது என்ற நிதர்சனத்தையும் உறுதிப் படுத்தியது. 1977 இன் பின்னான எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் உணர்வுடன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தேர்தல்களை அவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட ஒரு தந்திரோபாயமாகவே கருதியிருந்தனர். * கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைமை துடைத்தழிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை பரவியுள்ளதை மறைப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடே மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மை. தமிழ் மக்களுக்கு முன்னரும் தேர்தல்களில் உண்மையான அக்கறை இருந்திருக்கவில்லை. ஆனால், அத்தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்ற புரிதல் அவர்களிடையே இருந்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் கூறியவாறு மக்கள் நடந்து கொண்டார்கள். அதாவது, தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு தந்திரோபாய நடவடிக்கையே என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்பவர்கள், தாம் தேர்தல்களைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி போன்றவற்றை வெற்றி கொள்ள எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. இதுவே, மக்களின் தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மைக்குப் பிரதான காரணம். தேர்தல்களை ஒரு தந்திரோபாயமாக உயயோகிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் கூறிய பொழுது அவர்கள் சமாந்தரமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கூற்றை நம்பி, ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயற்பட்டார்கள். இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு தெளிவான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைளை வென்றெடுக்க என்ன வழி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில், எந்த வழிமுறைகளுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என முன்னர் பரப்புரை செய்து, அதனை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்களோ, அதே வழிமுறைகளுக்கு ஊடாக தாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போவதாக இன்று கூறும்போது மக்கள் அதனை நம்ப மறுப்பதில் வியப்பில்லை. எனவே, இன்று மக்களுக்கு இரண்டு விடயங்கள் புரிய வைக்கப்பட வேண்டும். * முதலாவது, நாங்கள் முன்னைய போராட்ட வடிவத்தை – அதாவது ஆயுதப் போரட்டம் சார்ந்த போராட்ட வடிவத்தை – முற்று முழுதாகக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி(?) தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறியாக வேண்டும். இதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள யதார்த்தத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான போரட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். ஊடக அறிக்கைகளூடாகவோ, செவ்விகளூடாகவோ மாத்திரம் அதனைச் சாதித்துவிட முடியாது. மக்களின் காலடிக்குச் சென்று விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்ததன் பிற்பாடே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு மாற்றீடாக அரசியல் நடத்த முன்வருபவர்களும் தமது நம்பகத் தன்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்குப் பின்னரே மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும். * இரண்டாவது விடயம். நாடாளுமன்ற மார்க்கமே தற்போது எம்முன்னே உள்ள ஒரேயொரு மார்க்கம் என்பதை மக்களுக்குப் புரியச் செய்வது இது மிகவும் கடினமான ஒரு செயன்முறையே ஆயினும் செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதற்கு முறையான நீண்டகாலச் செயற்திட்டம் ஒன்று அவசியம். அதிலே இலக்கு மாத்திரமன்றி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும், குறித்த வழிமுறைகள் பயனளிக்காதவிடத்து மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியமான மாற்று வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட வேண்டும். இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களை விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவம் செய்துவந்து நிலையில் முன்னர் இவ் இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது. இந்நிலையில் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான மக்கள் போராட்டங்களை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும். தடுப்பு முகாம்களில் வாடுவோரின் விடுதலை, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மற்றுமொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்தலும், மேம்படுத்தலும், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொடரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல்களைத் தடுத்து நிறுத்துதல், சிதைக்கப்படும் தமிழர் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், தமிழ் மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுதல் எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியின் பின்னர் சிறி லங்காவில் எங்குமே தமிழ் அரசியல் கட்சிகளால் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டதாக நினைவில் இல்லை. இந்நிலையில் அரசியற் கட்சிகளிடம் இருந்து மக்கள் விலகியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இது மாத்திரமன்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைக்கொண்ட அதே அணுகுமுறை காலத்துக்கு ஒவ்வாதது. பயன் தராதது. எனவே, புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும். அத்துடன் புதிய முகங்களும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும். மாற்றம் என்பது சடுதியாக நிகழும் ஒன்றல்ல. அது சூழலைப் பொறுத்து விரைவாகவோ அன்றி மெதுவாகவோ நிகழக் கூடும். எனினும் அதற்கு குறிப்பிட்ட காலம் அவசியம். * இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும். அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே.

அடிப்படை வசதியின்றி அல்லல்படும் தமிழ் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளை இழந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முதல் போரினால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்தவர்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். புனர்வாழ்வு அமைச்சு முஸ்லீம் கிராமங்களில் புனரமைப்பு பணிகளையும் அபி;விருத்தி பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தமிழ் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்களை கவனிக்காது இருந்த ஆளும் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் இத்தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் கிராமங்கள் அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பல அரச சார்பற்ற நிறுவனங்களாலும் அரசினாலும் பல உதவித்திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் கூட எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பல தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. தேசத்தை கட்டி எழுப்புவோம் மகிந்த சிந்தனை யாவருக்கும் குடியிருப்பு வசதி என்றெல்லாம் பல திட்டங்கள் இருந்தாலும் இந்த திட்டங்களினூடாக தமிழ் மக்கள் பயனடைவதில்லை.

துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச் சின்னங்கள், நினைவுத் தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன. இந்த நிலையில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்புப் பகுதியில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அரசின் கைக்கூலியான ஈபிடிபியின் தலைவர் மற்றும் குழுவினரது விளம்பரங்கள் ஒட்டப்பட்டு மாவீரர்களை இழிவு படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.