திங்கள், 15 மார்ச், 2010

சிறீலங்கா அரசு 1,422 ஊனமுற்றவர்களையும், 397 சிறுவர்களையும் தடுத்து வைத்துள்ளது

சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 11,000 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர். பயிற்சி பெற்ற 19 தொடக்கம் 24 வயதுள்ள 4,580 பேரும், 25 தொடக்கம் 34 வயதுள்ள 4,220 பேரும் தடுப்பு முகாம்களில் உள்ளனர். தடுப்புக்காவலில் உள்ள 11,000 பேரில் 4,953 பேர் கடந்த இரு வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்கள். அவர்களில் பெருமளவானவர்கள் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் அவர்களில் 1,422 பேர் ஊனமுற்றவர்கள். நான்கு பேர் முற்றாக கேட்கும் சக்தியை இழந்துள்ளனர். ஒருவர் பகுதியாக கேட்கும் சக்தியை இழந்துள்ளார். மூவர் முற்றாக பார்வையை இழந்துள்ளனர். 144 பேர் பகுதியாக பார்வையை இழந்துள்ளனர். ஐந்து பேர் இரு கால்களையும் இழந்துள்ளனர். 686 பேர் ஒரு காலை இழந்துள்ளனர். 17 பேர் இரு கைகளையும் இழந்துள்ளனர். 387 பேர் ஒரு கையை இழந்துள்ளனர். இந்த வருடத்தின் மார்ச் மாதம் 1 ஆம் நாளில் இருந்து 10,781 பேர் 17 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,791 பேர் ஆண்களும், 1,990 பேர் பெண்களும், 397 சிறுவர்களும் உள்ளனர்.

கஜேந்திரனின் மறுப்பு அறிக்கையும்,நம்பகதன்மைகளின் வெளிப்பாடும் ........

15-03-2010 ஊடக அறிக்கை கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது. மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒரு இந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர். திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்குதமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன். வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல. இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல. கடந்த 12-3-2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13-3-2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை. எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வந்தார் சென்றார்................

தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலிருந்த தொடர்புகளை மீளவும் ஏற்படுத்துவதற்குத் துணைத் தூதரகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு இந்தியா விரும்புகிறது. தூதரகம் அமைக்கும் இந்தியாவின் பிரேரணையினை சிறிலங்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறன்று நாட்டினது குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாகக் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தினை அமைக்கும் தமது முனைப்புத் தொடர்பில் மகிந்தவிற்கு எடுத்துக்கூறியதாக இந்தியப் பத்திரிகையாளர்களுடனான உத்தியோகப் பற்றற்ற சந்திப்பின் போது வெளிவிவகாரச் செயலர் நிருபாமா ராவ் கூறியிருக்கிறார். இந்தியாவின் சென்னை, மும்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் சிறிலங்கா தனது துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவின் ஒரேயொரு துணைத் தூதரகம் கண்டியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினது ஏனைய பாகங்களில் இந்தியா தனது துணைத் தூதரகங்களை அமைக்க விரும்பினால் அது தொடர்பாகத் தமக்கு எந்தத் தயக்கமும் இல்லையென சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லகம ஒரு சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான நடைமுறைச் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படவேண்டியிருக்கிறது என்றும் யாழ் குடாநாட்டினது மக்களின் நலனே துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான அடைப்படை நோக்கம் என உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “துணைத் தூதரகம் அமைக்கப்படுமிடத்து அது குடாநாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையான விசாவினை இலகுவாகப் பெறுவதற்கு வழிசெய்யும் என்பதற்கப்பால் சிறிலங்காவின் வட மாகணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும் உதவும்” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பரந்துபட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று, மூன்று நாள் பயணமாக ராவ் கொழும்பு சென்றிருந்தார். சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்துவிட்டாலும் அரசியல் தீர்வுக்கான தேடல் அங்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா பாராளுமன்றில் தனது எழுத்து மூலப் பதிலில் தெரிவித்திருந்த ஓரிரு நாட்களின் பின்னர் நிருபாமாவின் கொழும்புக்கான இந்த பயணம் இடம்பெற்றது. வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் நிருபாமா ராவ் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் இது அமைகிறது. இடம்பெயர்ந்திருக்கும் தமிழ்ப் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை வரவேற்ற நிருபாமாராவ் முல்லைத்தீவு மற்றும் கிளிநெச்சிப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமிடத்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் இயல்பாக வாழும் நிலைதோன்றும் என ராஜபக்சவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவரது கொழும்பு பயணம் தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரு ராஜபக்ச வெற்றி பெற்றமைக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்த நிருபாமா, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சனநாயக முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெறுவதானது சிறீலங்காவினது அனைத்து இன மக்களும் அமைதியுடனும் இணக்கப்பாட்டுடனும் வாழக்கூடியவகையில் அரசியல் இணக்கப்பாட்டினை முன்னெடுப்பதற்கேற்ற ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். கொழும்பில் தான் தூதுவராக இருந்த காலத்திற்குப் பின்னர் இப்போது நிறைய விடயங்கள் நடந்தேறிவிட்டன என்பதையும் இந்தச் சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதாகக் கூறிய நிருபமா ராவ், இந்த விவகாரம் தற்போது அனைத்துலக சமூகத்தின் கவனத்தில் இருந்து அகன்று விட்டதாகவும் தெரிவித்தார். தற்போதைய அரசியல் விவகாரம் குறித்துக் கலந்துரையாடுகையில், நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் 1,000 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுவது மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என நிருபமா கூறினார். நிலையான அமைதியுடன் அந்த மாற்றம் நடந்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். அண்மையில் நடைபெற்ற, கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் 3,000 இந்தியர்கள் கலந்துகொண்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த பரிமாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் ராஜபக்ச இந்தியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும் எனத் தான் அழைப்பு விடுத்ததாகவும் ஏப்பிரல் 8ம் நாள் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலின் பின்னர் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் இணங்கியிருப்பதாகவும் வெளியுறவுச் செயலர் குறிப்பிட்டார். ராஜபக்சவினது இந்திய பயணத்தினது திகதி தொடர்பாக பின்னர் திட்டமிடப்படும் என உத்தியோக பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகாரச் செயலர், குடியரசுத் தலைவருக்கான சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் தனது கொழும்பு பயணத்தின் போது நிருபாமா சந்தித்திருக்கிறார். இவை தவிர, தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட நாட்டினது முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடும் வெளியுறவுச் செயலர் சந்திப்பினை நடாத்தியிருக்கிறார். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளை ராஜபக்ச பாராட்டியதாக இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறிலங்காவின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் புகையிரதப்பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்களைச் சீர்செய்யும் பணிக்கென 425 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டிருப்பதை சிறிலங்கா வரவேற்றிருக்கிறது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தற்போது தங்கியிருக்கும் 70,000 மக்களும் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே தங்கியிருக்கக்கூடும் என குடியரசுத் தலைவர் நிருபாமாவிடம் தெரிவித்ததாக தூதரகத்தின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்குத் தொடர்ந்தும் உதவுவதே இந்திய அரசாங்கத்தின் நோக்கம் என வெளிவிவகார அமைச்சருடனும் அவரது அமைச்சக அதிகாரிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பின் போது நிருபாமா உறுதியளித்திருக்கிறார். இடம்பெயர்ந்தவர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு இந்தியா தனது உதவிகளை வழங்கும் எனவும் இந்திய வெளியுறவுச் செயலர் அறிவித்திருக்கிறார். இடம்பெயர்ந்தவர்களின் நன்மைகருதி தற்காலிக வீடுகளை அமைத்தல், போரின் போது சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் மற்றும் வீடற்றவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்தல் போன்றவை இந்த வீடமைப்புத் திட்டத்திற்குள் அடங்கும். சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் போக்குவரவுத் துறையினை மேம்படுத்துவதற்காக 55 பேருந்துகளை கல்விசார், கலாச்சார மற்றும் சமூக அமைப்புக்களுக்கும் இந்தப் பகுதியின் உள்ளுராட்சிக் கட்டமைப்புகளுக்கும் வழங்குவதற்கு இந்தியா அனுமதியளித்திருக்கிறது. சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் தொடருந்து பாதை கட்டுமானப் பணிகளுக்கு மேலதிக நிதியினை வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிருபாமா தெரிவித்தார். “இந்திய-இலங்கை உறவில் கலாசார தொடர்புகளையும் பொதுவான பாரம்பரியத்தைப் பேணுவதுமே மிக முக்கிய விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன. தலதா மாளிகை வளாகத்தினுள் சர்வதேச பௌத்த அரும்பொருள் காட்சியகம் ஒன்றை நிறுவுவதில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு இந்தியா தீர்மானித்திருக்கிறதென நிருபாமா தெரிவித்தார்”, என இந்திய தூதரக அறிக்கை கூறுகிறது. இந்தியத் தேசிய அரும்பொருள் காட்சியகத்தின் வழிகாட்டலின் கீழ் ஓர் கலைக் காட்சியகத்தினை சிறிலங்காவில் நிறுவுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னாரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காகவும் இந்தியா தனது உதவிகளை வழங்கும் என நிருபாமா தெரிவித்தார். மேற்குறித்த இந்தப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவின் மகாவலிபுரத்திலுள்ள கட்டடக்கலைக் கல்லூரி [College of Architecture] இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் [Archeological Survey of India] என்பனவற்றின் அலுவலர்களை உள்ளடக்கிய குழுவொன்று இலங்கைக்கு வரவிருக்கிறது. மேலும் கலை, கலாச்சாரம், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற விடயங்களில் மக்களமைப்புக்கள் மேற்கொள்ளும் முனைப்புக்களுக்குத் தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கிவரும் தனித்துவமானதோர் அரச நிறுவனமாகச் செயற்படும் இந்திய-இலங்கை அறக்கட்டளை நிறுவனத்திற்கு [India-Sri Lanka Foundation] இந்தியா வழங்கிவரும் ஆதரவினை அதிகரிப்பது என்ற முடிவினையும் நிருபாமா ராவ் அறிவித்தார்

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?

கண்டி மாவட்டத்தில் அராஜக அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகச் சுலோக அட்டை ஏந்தி நாடாளுமன்றில் போராட்டம் நிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார நிலையமாக நாவலப்பிட்டி காவல் நிலையம் இயங்குவதாகவும் கூறியுள்ளார். புதிதாக முகிழ்ந்து வரும், மனோ கணேசனின் மலையக தலைமைத்துவம் குறித்து அச்சம் கொள்ளும் சக்திகள், அவரைத் தமது முதன்மையான அரசியல் இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன போல் தெரிகின்றது. மலையக தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்குப் பல அச்சுறுத்தல்களையும் அவர்களிடையே பிளவுகளையும் மேற்கொண்டு பேரினவாத கூட்டுக் குழுக்களை அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் பெரும்பான்மையின மக்களின் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை மலையகத்தில் அதிகரிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள், வேறு பரிமாணத்தில் வடகிழக்கில் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம். வடக்கு, கிழக்கில் 31 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 1,867 பேர் மோதுகின்றனர். யாழ். மாவட்டத்தில் 12 குழுக்களும் மட்டக்களப்பில் 26 குழுக்களும் திருமலையில் 14 குழுக்களும் அம்பாறையில் 49 குழுக்களும், சுயேச்சையாக கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. வடக்கு, கிழக்கில் 1,000 பேரளவில் போட்டியிடுவதால் மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ். போர் முடிவடைந்ததால் நாட்டின் அபிவிருத்திக்கும் மீள்கட்டுமானப் பணிகளுக்கும் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு நிருபமா ராவ் வருகை தந்ததாகக் கூறப்பட்டது. ஆனாலும், இப்பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர், பிரித்தெடுக்கப்பட்ட, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பினை விடுத்ததாக வந்த செய்தியே சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது. 5th-Cartoonஇந்தியாவின் அனுசரணை இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லையென நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு முக்கிய செய்தியொன்று இச்சந்திப்பினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 1987இல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் விதந்துரைக்கும் மாகாண சபைத் தீர்வினையும் 13ஆவது திருத்தச் சட்டம் கூறும் அதிகாரப் பரவலாக்கத்தினையும் (அதிகாரப் பகிர்வல்ல) தவிர, வேறெந்த தீர்வுத் திட்டங்களையும் இலங்கை அரசின் மீது தம்மால் திணிக்கவோ அல்லது வலியுறுத்தவோ முடியாதென்கிற விவகாரத்தை மறைமுகமாக கூற விழைகிறது இந்திய அரசு. தனது இந்தியப் பயணத்தின்போது, காணி மற்றும் காவல்துறை அமைக்கும் அதிகாரங்களைப் பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் முன்வைப்பாரெனக் கருதலாம். அத்தோடு, மாகாண சபை ஆட்சி முறைமையை வலுப்படுத்தும் அல்லது சீர் செய்யும் நகர்வுகளையே இந்தியா முன்னெடுக்குமென எதிர்பார்க்கலாம். ஆனாலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் தரப்பினர் பெற்றால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக நடைமுறையிலுள்ள அரைகுறையான மாகாண சபை அதிகாரங்களை அழித்து விடும் நிலையும் ஏற்படலாம். அப்போது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை தாம் ஆதரிப்பதாகக் கூறிவரும் இந்தியாவும் மேற்குலகும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மேற்கொள்ளும் முடிவுகளை நிராகரிக்க முடியாததொரு கையறு நிலைக்குத் தள்ளப்படும். அதேவேளை, பிராந்திய அரசியலில் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிகளை எதிர்கொள்ளும் இந்திய வல்லாதிக்கமானது, மாகாண சபைத் தீர்வினை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவதோடு தனது வகிபாகத்தை மட்டுப்படுத்திவிடுமென்பது யதார்த்தமாகும். ஆனாலும் இங்கு புரிதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழர் தாயக இறைமையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். அனைத்து இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வு என்பதன் உட்பொருள் பெரும்பான்மையின மக்களின் முழு இலங்கைக்குமான இறைமையை இங்கு வாழும் சிறுபான்மையான பூர்வீக தேசிய இனமானது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், 2002 டிசம்பரில் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட “ஒஸ்லோ பிரகடனம்’ என்று தவறாக அழைக்கப்படும் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படலாமெனக் கூறுகிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி அடிப்படையில் ஆட்சிமுறை அமைய வேண்டும் என்பதுதான் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையில் ஒஸ்லோவில் இருதரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையின் சாராம்சமாகும். ஆனாலும் மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் (ஈஞுதிணிடூதtடிணிண ணிஞூ கணிதீஞுணூ) என்கிற பதத்தை பிரயோகிக்கவே அன்று சிங்களதேசம் விரும்பியது. tna-1ஆகவே, ஒஸ்லோ உடன்பாட்டினை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதன் அடிப்படையிலா அல்லது அன்ரன் பாலசிங்கம் கூறியது போல் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையிலா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஒஸ்லோ விவகாரத்தை கையிலெடுத்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒஸ்லோ நகர்வினை இலங்கை ஆட்சியாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள். ஆனால், தனியரசுக் கோட்பாட்டை மட்டுமல்ல, ஒஸ்லோ கதைகளையும் சிங்களதேசம் விரும்பாதென்பதை கூட்டமைப்பின் தலைவர் இப்போது புரிந்து கொள்வார். அதேபோல் ஒருநாடு இருதேசம், கூட்டாட்சி போன்ற தமிழர் இறைமையை அடித்தளமாகக் கொண்ட கோட்பாடுகளையும் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ளாது. தமிழர் தரப்பின் கோட்பாட்டு ரீதியான அகநிலை முரண்பாடுகளுக்கும், தென்னாசியாவில் தமிழர் தாயக புவிவியல் அமைவிடத்தால் எழும் அனைத்துலக உறவுச் சிக்கல்களுக்கும் இடைவெளி மிகப் பெரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்படக்கூடிய குறைந்தபட்ச தீர்வுக் கோரிக்கையான ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமை என்பதனை சிங்களதேசம் பரீசிலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை நிலையாகும். இவை தவிர அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற சொல்லாடல்கள் தற்போது தீர்வு யோசனைகளில் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஜாலங்களாகக் காணப்படுகிறது. இதில் அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை என்கிற அடிப்படைக் கோட்பாட்டை நிராகரிக்காத கருத்தியலைக் கொண்ட நடைமுறை சார்ந்த அரசியல் படி நிலையாகும். ஆனால், சிங்களதேசம் முன்வைக்கும் அதிகாரப் பரவலாக்கலானது சிங்கள தேசத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு ஏனைய தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் வெறும் நிர்வாகப் பரவலாக்க நடைமுறையை சார்ந்ததாகும். இறைமையற்ற சுயநிர்ணய உரிமை, அதன் உள்ளார்ந்த இறுக்கமான பண்புகளை இழந்து வெறும் சொற் பிரயோகமாகவே கருதப்படும். ஆகவே, தாயகம், தேசியம் என்கிற அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரிக்கும் முரண்நிலைச் சக்திகள் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது அதிசயமான விடயமல்ல. ஒஸ்லோ உடன்படிக்கையில் ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட இறைமையுள்ள சமஷ்டி குறித்து தொடர்ந்து பேசுவதற்கும் சிங்களதேசம் மறுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தடைநீக்கியாக முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முறைமையினை அவ்வடிவமானது தமிழரின் இறைமையை உள்ளடக்கியதாக இருந்ததால் அதனையும் சிங்களதேசம் நிராகரித்தது. ஆகவே, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஜனாதிபதி முறைமையானது அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவோ அல்லது தேசிய இனமொன்றின் பிரிக்க முடியாத பிறப்புரிமை சார்ந்த இறைமையுள்ள தமிழினத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டென்பதை ஏற்றுக்கொள்ளவோ மாட்டாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி கூறி வருகிறார். அதற்கு இந்தியாவின் ஆதரவு உண்டென்று நம்பலாம். 1980களில் பல் போராட்ட இயக்கங்களைக் கையாண்டது போலவே இப்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை கையாள இந்தியா எண்ணுகிறது. ஏற்கெனவே கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோட்பாட்டு ரீதியிலான உடைவுகள், பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு சாதகமான தளத்தினை உருவாக்கப் போகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சரை வரவேற்பதன் ஊடாக மாகாண சபை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றையே தீர்விற்கான தமது விருப்பத் தெரிவாக இந்தியா கொண்டுள்ளதென்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொள்வார்களா? இந்தியாவை விட்டால் வேறு கதியில்லையென்றால் அவர்கள் பரிந்துரைக்கும் அதிகாரமற்ற மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்வதைத் தவிர கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை. ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயந்தான் இனப்பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் தீர்வு. அதை மெருகூட்டி அழகுபடுத்தி தமிழர் மீது திணிக்கும் நகர்வினையே இந்தியா முன்னெடுக்கிறது. ஆகவே, கூட்டமைப்பு முன்வைக்கும் குறைந்தபட்ச சமஷ்டி கோரிக்கைகளை இந்திய இலங்கை தரப்புகள் ஏற்றுக்கொள்ள முன்வராது என்பதை உணர்ந்து கொள்ளலாம். — இதயச்சந்திரன்