வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மௌனத்தின் மூலம் ....................


ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்!. சொந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் எங்களில் பெரும்பான்மையானவர்கள், இந்த நாட்டு மக்களைப் பார்த்து எங்களது வெளிப்படையான நாகரிகத்தை மாற்றிக்கொள்ள முயல்கிறோமே தவிர, மனதால் மாற்றம் அடைய மறுத்தே வருகின்றோம். எங்கள் கைகளில் முள்ளுக் கரண்டியும் கத்தியும் முளைத்த அளவிற்கு, எங்கள் மனங்களிலும், செயல்களிலும் புதிதாகப் பெரிய மாற்றங்கள் புதிதாக உருவாகிவிடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் யுத்த களம் பின் நோக்கிச் சென்றது போலவே, எங்கள் இலட்சிய சிந்தனைகளும் குறுகிய அரசியல் பிளவுகளோடு இன்னமும் வேகமாகப் பின் நகர்ந்தே வருகின்றது போலவே தோன்றுகிறது. தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் போராட வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கான தேர்தல் களத்தில் பிளவு பட்டு அணி திரண்டதையும், சிங்கள தேசம் போலவே தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதும், தமிழீழத்தின் தேசிய ஆன்மாக்களைக் காயப்படுத்துவதாகவே அமைகின்றது. விடுதலைப் புலிகளின் வேள்வித் தீயில் தம்மையும் அர்ப்பணித்துக்கொண்ட தமிழீழ மக்கள் மௌனமாக அழுவதைக்கூட, தமது அணிக்கான ஆதரவுக் குரலாகக் காட்டும் முயற்சியும் புலம் பெயர் தேசத்தின் கூட்டமைப்பு அணியினரால் மேற்கொள்ளப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் களமுனை வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டிருந்த தவறான நகர்வுகளும், புதிய கற்பிதங்களும் புலம்பெயர் தமிழீழப் போர்க் களத்தில் பலமான சலசலப்புகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியிருந்தது. அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களும் ஓங்கி ஒலித்தன. இந்தத் தேர்தலை முன் நிறுத்தி, ஈழத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு சுவரை எழுப்பும் சதி முயற்சிகளும் கூட மேற்கொள்ளப்பட்டன. நடைபெற்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள். அது, “நாங்கள் சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட விரும்பவில்லை” என்பதாகும். யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 168,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 65,119 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 9 வீதமானவர்கள் என்பதும், வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 41,673 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 15.6 வீதமானவர்கள் என்பதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 333,664 வாக்காளர்களில் 195,368 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 66,235 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 19.85 வீதத்தினர் மட்டுமே. அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 420,835 வாக்காளர்களில் 272,462 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 26,895 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 6.39 வீதத்தினர் மட்டுமே. திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான, அதாவது 80 வீதத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்திற்கான இந்தத் தேர்தலை நிராகரித்து, மௌனமாகத் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். சிங்கள அதிபருக்கான தேர்தலில், மலையகம் உட்பட வட – கிழக்குத் தமிழர்கள் கொடியவன் ராஜபக்ஷவை நிராகரித்ததுடன், பெரும்பான்மையான தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்காமல் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்த புலம் பெயர் தமிழர்களில் சிலர் தற்போது இந்தக் கணக்கைத் தமது வசதிக்காக மாற்றிப் போட்டுப் பார்க்கிறார்கள். ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற விரும்புகிறார்கள் என அவர்களின் விடுதலை உணர்வுகளைக் கொச்சைப்படுத்த முயல்கின்றனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் யாருக்கு வாக்குப் போடச் சொன்னார்களோ, அவர்களுக்கு நாம் வாக்குகளைப் போட்டோம். விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னபோது, நாங்கள் முற்றாகத் தேர்தலைப் புறக்கணித்தோம். இந்தத் தடவை அவர்கள் யாருக்கும் வாக்குப் போடும்படி சொல்லவில்லை. அதனால், தேர்தலைப் புறக்கணித்தோம் என்று கூறினார். ஈழத் தமிழர்களின் முடிவு இப்படித்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சார்பாக, ஓங்கிக் குரல் எழுப்பும் புலம்பெயர் தமிழர்களும் ஈழத் தமிழர்களின் இந்த விடுதலை உணர்வைப் பெருமிதத்தோடு புரிந்து கொள்கிறார்கள். ஈழத் தமிழர்களம சார்பாக சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேல் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது என்பதில்தான் அவர்களது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. எடுப்பார் கைப்பிள்ளையாக, கிடைத்த அரங்கத்தில் தப்புத் தாளங்கள் போட முயற்சித்தால் காலம் அவர்களுக்கான தண்டனையை வழங்கும். தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையோடு கல்லறைகளில் கண்ணுறங்கும் மாவீரர்களும், அந்த மண்ணுக்காய் மரணித்த மக்களும் மீண்டும் எழுவார்கள்.