வியாழன், 21 ஜூலை, 2011

இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்ததால் அவனது புனைப் பெயரைக் கூறி வீரா இல்லையா என்றேன். நான் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டதால் அந்த அம்மா எந்தவித தயக்கமும் இன்றி அப்படி ஒருவர் இல்லை என்று கன்னத்தில் அறைந்த மாதிரி பதிலைச் சொல்லி விட்டு கொட்டிலுக்குள் சென்றுவிட்டா.