வெள்ளி, 22 ஜூலை, 2011

கறுப்பு ஜூலை கொடூரத்தின் 27 ஆவது நினைவு நாள் அதே 23 இல் இன்று தமிழரின் தலைவிதி நிர்ணயம்.

1983 ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புதினம்.இரத்தக்கறை படிந்த நாள் . பேரினவாதிகள் மிருகங்களாக மாறி தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகு நாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலையுண்ட 27 ஆவது நிறைவு நாள். இன்றும் ஜூலை 23. தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள்.

27 ஆண்டுகளுக்கு முன் 1983 ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலம் நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்கக் காட்சிகள் கண்முன் விரிகின்றன. அந்த சில நாள்களில் 3ஆயிரம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனம் அல்லது காயங்களுக்கு இலக்காகினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்களை இழந்து நிர்க்கதியாகினர். இந்த அக்கிரமம், அராஜகம், காடைத்தனங்களைப் புரிந்த பேரினவாதிகள் குதூகலித்து ஆரவாரித்து கொண்டாடியதை எப்படி மறப்பது?துயரம் மிகுந்த அந்த நினைவு நாளில் இன்று தமிழன் தன் தலைவிதியை நிர்ணயிக்கத் தயாராகிவிட்டான். தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவை சர்வதேசம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமிழரின் விடிவு அவர்களின் கைகளில் தான்!