சனி, 6 மார்ச், 2010

தமிழ் நாட்டில் ஏற்படும் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே நிருபாமா சிறீலங்கா வந்துள்ளார்

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கருத்து மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்கா வந்துள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னனியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் நாட்டில் ஏற்படும் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இந்திய மத்திய அரசு முழுமையாக ஆதரவுகளை வழங்கியிருந்தது. ஆனால் அது தற்போது 13 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு அப்பால் ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை காண்பதற்கு முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழகத் தலைவர்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே தற்போது இந்தியா முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் சிறீலங்காவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. அவற்றை எல்லாம் மழுங்கடிப்பதற்கே இந்தியா தற்போது முயன்று வருகின்றது. அதற்காகவே நிருபாமா சிறீலங்கா வந்துள்ளார். அமெரிக்காவும், பிரித்தானியாவும் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் விடுதலைப்புலிகளை முறியடிப்பதற்கு அவர்கள் தான் சிறீலங்கா அரசுக்கு பணமும், ஆயுதங்களும் வழங்கியவர்கள். தற்போது அவர்கள் அரசியல் தீர்வு தொடர்பில் பேசி வருகின்றனர். சிங்கள இன கடும்போக்காளர்களை கொண்ட அரசிடம் இருந்து நாம் எவ்வாறு அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தற்போது உள்ளுராட்சி சபைகளுக்கு எதனை வழங்கியுள்ளார்களோ அதனை தவிர நாம் எதனையும் அவர்களிடம் இருந்து பெறமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதி உச்ச இனவெறி,,,

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற தமிழ்மகன் ஒருவர் கதறியழுதபடி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தான்

கோசத்திற்குதான் தமிழ் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை பற்றி த தே கூ சொல்கின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல் அதன் உள்ளார்த்தமாக அதற்கு செயல்வடிவம் கொடுக்ககூடிய எந்த எண்ணமும் தற்போதைய அதன் தலைமைக்கு இல்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கனடா தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தை முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வருடம் மே மாதத்திற்கு முன்னரே ஒரு தீர்வுதிட்டத்தை தயாரித்திருந்தது. ஆனாலும் அதனை வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துவந்தார்கள். ஒஸ்லோ பிரகடனத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டிருப்பதாக இப்போது கூறுகிறார்கள். ஆனால் ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என மாவை சேனாதிராஜாவுக்கு ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் கூறப்பட்டிருந்தது. இடைக்கால தன்னாட்சி தீர்வு திட்டத்தின் அடிப்படையில் முயற்சிக்கலாம் ஆனால் ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்கமுடியாது என ஏற்கனவே தலைவரால் கூறப்பட்டிருந்தது. இத்தனை தியாகங்களுக்கு பின்னரும், மீண்டும் ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனால்தான் இரண்டு நாடுகளை கொண்ட ஒரு தேசம் என்ற அடிப்படையில் தீர்வை முன்னிலைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையோ இந்தியாவினதும் பிறநாடுகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கமைவாகத்தான் தமிழர்களின் தீர்வை முன்வைக்கவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல. அப்படியானால் இவர்கள் தமிழ்மக்களின் தலைமைகளாக அல்லாமல் அவர்களின் கைப்பொம்மைகளாகத்தான் செயற்படப்போகிறார்கள். அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றும் நோக்குடன் அவர்கள் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் திருமலை மாவட்டங்களில் போட்டியிடுகின்றோம். மற்றைய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைப்போம். பிழையான வழியில் செல்லும் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை சரியான வழிக்கு நகர்த்திவருவதற்காகவே குறித்த இரண்டு மாவட்டங்களிலும் எதிர்த்து போட்டியிடுகின்றோம். - என்று தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டார்.

சிங்கள குடியேற்றங்களை தடுக்க மொடரேற்றர்ஸ் முன்வரவேண்டும்?

தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக மேற்கத்தைய சமூகம், அரசியல்வாதிகள், மனித உரிமைவாதிகள் இந்த வாதத்தினை முன்னிறுத்தி அதற்கு தமிழ் மக்களின் ஆதரவினை பெறுவதிலும் முனைப்பாக உள்ளனர். இதற்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் MODARETORS என்ற தலைப்பு கொடுத்து வளர்ப்பதும் நாம் அறிந்த விடயம். சர்வதேசத்தின் இந்த திட்டம் இப்போது ஆரம்பிக்கப்படவில்லை அது 2002 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமாகின்ற போதே ஆரம்பிக்கபட்டது. அதாவது தமது திட்டங்களை நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது திணிப்பதற்கு புலிகளின் பலத்தினை சிதறடிப்பது. மாற்று தலைமைகளை கொண்டு வருவது. மாற்று கருத்துக்களை கொண்டுவருவது. என அவர்களின் திட்டம் இருந்தது. இது உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் செயற்படுத்தப்பட்டே வந்தது. எனினும் விடுதலைப்புலிகளின் பலத்தினால் அதனை கடந்த காலங்களில் நிறைவேற்ற முடியாமல் போனது என்பதனையும் குறிப்பிடவேண்டும். ஆனால் தற்போது அனைத்துலகத்தின் இந்த திட்டம் இலகுவாக அடையக்கூடியனவாக இருக்கின்றது என்பதில் சர்வதேசத்திற்கு அளப்பரிய மகிழ்ச்சி. விடுதலைப்புலிகளின் பலம் அல்லது தமிழர்களின் ஆயுத பலம் என்பது மேற்குலகத்திற்கு பிரச்சினையாக இருந்தாலும் அதுதான் தமிழர்களின் அரசியல் கொள்கைக்கு, அரசியல் குறிக்கோளை அடைய முக்கியமானது ஆதாரமானது என்பதனை தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.உணராதவர்கள் இப்போது உணர முற்படுவர். புலம்பெயர் தமிழர்களின் உணர்வை உள்வாங்கவேண்டும், அதனூடாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என நினைக்கும் சர்வதேச சமூகம் மிகவும் பெளவியமாக தமிழீழத்தினை ஆதரிப்பதாகவும் ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் கூறுகின்றது. இவ்வாறு கூறி புலிகளின் பலத்தினை அதாவது தமிழர்களின் தட்டிக்கேட்கும் சக்தியினை இல்லாது செய்வதில் சர்வதேசம் விடாப்பிடியாக உள்ளதனை பிரித்தானிய அமைச்சரான டேவிட் ஹன்சன் உரையில் இருந்து அறிய முடிகின்றது. கூடவே அண்மையில் ஜேர்மனி உட்பட பல வெளி நாடுகளில் மேற்கொள்ளப்படும் இயக்க ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இங்கு ஒன்றினை குறிப்பிடவேண்டும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்வதாக கூறும் சர்வதேச சமூகம் அந்த அபிலாசைகளை நடைமுறைப்படுத்தும் பூகோள அமைவிடம் இலங்கைதான் என்பதனை மறந்து விட்டனரா? ஏனெனில் எதற்காக தமிழர்கள் போராடுகின்றார்களோ அல்லது எதற்காக தமது உரிமைக்குரலினை எழுப்புகின்றார்களோ அதனை ஜன நாயக முறைப்படி செய்யுங்கள் என ஆலோசனை கூறும் சர்வதேச சமூகம்; தாயகத்தில் ஆயுத முனையில் , இராணுவ அச்சுறுத்தலின் மூலம் தமிழர் தாயகம் விழுங்கப்படுகின்றது. சிங்கள குடியேற்றம் செய்யப்படுகின்றது. இன வீதாசாரம் கிழக்கை போன்று வடக்கிலும் நிச்சயம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆகவே இந்த இன வீதாசார மாற்றம் நடந்த பின்னர் உங்கள் உரிமைகளை ஜன நாயக ரீதியில் பெறுங்கள் என்றால் சாத்தியமா? இலங்கை அரசாங்கம் கூட, ஏன் யாப்பு ரீதியாக தமிழர்கள் பிரிந்து செல்லலாம் என்று மாற்றம் கொண்டுவந்தால் கூட முடியாது. காரணம் அங்கு பெரும்பான்மையானவர் சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆகவே மேற்குலகத்தின் இந்த பூச்சாண்டி விளையாட்டுக்களை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போகின்றார்களா? , ஜன நாயகம் அல்லது சாத்தியமான வழிகள் அல்லது மேற்குலகத்துடன் ஒத்து போகவேண்டும் என்ற அடிப்படையில் எவ்வளவு காலம் செல்லப்போகின்றோம்? அதுவரைக்கும் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தினை தடுக்க என்ன உத்தரவாதம்? ஏதாவது சர்வதேசம் அதுபற்றி கதைக்கின்றார்களா? இதுவரை நடந்த கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் இவை எதுவும் உள்ளடக்கபடவில்லையே ஏன்? பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் வீடுகட்டுவதனை தட்டி கேட்கும் நாடுகள் ஏன் தமிழர் தாயக சிங்கள குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. பாலஸ்தீனத்தில் குடியேற்றத்தினை தற்காலிகமாவது நிறுத்தவேண்டும் என மேற்குலகம் கூறுகின்றது அல்லவா. ஆனால் தமிழர்களை ஜன நாயகமாக போராடுங்கள் என கூறும் சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதனை ஏன் கருத்தில் எடுக்கவில்லை? தமிழர்களின் ஆயுத போராட்டம் வன்முறை என்றும் பயங்கரவாதம் என்றும் அதனை தடைசெய்து ஒழித்த பெருமை சர்வதேசத்தினையே சாரும் அந்த வகையில் சர்வதேசம் தான் தாயகத்தில் தமிழர் நிலங்கள் மீதான சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும். இல்லையேல் தமிழர்கள் அதனை தடுக்க ஆதரவு வழங்கவேண்டும். ஆக குறைந்தது தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்வரையாவது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் என கேட்கவேண்டும். ஜன நாயக ரீதியில் , இலங்கையில் இவ்வாறான போராட்டங்களை செய்ய முடியாது அல்லது மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பதனை எவரும் மறுக்க முடியாது. ஆகையால் சர்வதேசத்துடன் சேர்ந்து சன நாயக ரீதியாக போராடுவோம் என புறப்படும் தமிழர்கள்; அதற்காக அமைப்புக்களை உருவாக்கி கவர்ச்சியாக விளம்பரம் செய்து மக்களை உள்வாங்கும் அமைப்புக்கள், தம்மை உலக ஒழுங்குக்கு ஏற்ப செயற்படும் புத்திசாலிகள் என கூறுபவர்கள் அனைவருமே இந்த பொறுப்பினை ஏற்க வேண்டும். தாயகத்தில் சிங்கள குடியேற்றம் முற்றுமுழுதாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்தில் எடுக்காது சர்வதேசம் ஓட்டம், இந்தியாவின் ஆதரவு என கூறிக்கொண்டு இருப்பவர்கள் இதனை நிச்சயமாக கருத்தில் எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தாயகத்தில் இனவீதாசார மாற்றம் ஏற்பட்ட பின்னர் உங்கள் ஜன நாயகம், போராட்டம், சர்வதேசத்துடன் ஒத்து போதல், இந்திய ஆதரவு என்ற எதுவுமே எடுபடப்போதில்லை என்பதனை புரிந்து செயற்படவேண்டும். 30 வருடமாக புலிகளால் செய்ய முடியாததனை நாம் எட்டு மாதத்தில் செய்ய முடியுமா? என புத்திசாலித்தனமாக கேளிவியினை கேட்டு தங்களை நியாயப்படுத்த முயலும் உள் நாட்டு, புலம்பெயர் தமிழர்கள் ஒன்றினை கவனத்தில் கொள்ளவேண்டும். புலிகள் காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் அப்புறபடுத்தப்பட்டன, புதிதாக ஆரம்பிக்க திட்டங்கள் இருந்தாலும் நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதனை கவனத்தில் எடுக்கவேண்டும். புலிகள் 30 வருடம் போராடியது போன்று நாமும் 30 வருடம் ஜன நாயக ரீதியாக போராடிய பின்னரே நீங்கள் கேள்விகளை கேட்கலாம் என்றால் அதற்கு ஆம் என சொல்லலாம் ஆனால் அதற்குள் தமிழர் தாயகம் சிங்கள மயமாகாமல் இருக்குமா?

இனவெறித்தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனம்.

ஆஸ்திரேலியா வில் தொடர்ந்து இந்தியர்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தொடரும் மனித உரிமை மீறல்களும் பெரும் கவலை தருவதாகவும், இவை கண்டனத்துக்குரியவை என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவநீதம்பிள்ளை கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்திரேலிய நிர்வாகம், இந்தத் தாக்குதலின் மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். தேசிய அளவிலும், மாகாண அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள வேண்டும். விசாரணை மற்றும் தண்டனைகளில் தீவிரம் காட்டப்பட வேண்டும். இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட வேண்டும்.

பெண்ணுக்கு இடையூறு விளைவித்த 4பொலிஸார் கைது

நேற்று இரவு மவுண்ட் லாவணியா கடற்கரையிலுள்ள மதுக்கடைக்கு அருகில் தனிமையில் நின்ற பெண்ணைக் கிண்டலடித்து தொந்தரவு செய்த பொலிஸார் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் நால்வரும் மதுவருந்தி விட்டு மேற்படி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் கோபமுற்ற பெண்ணின் உறவினர்கள் மவுண்ட் லாவணியா பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மதுவருந்தியதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதேவேளை தொந்தரவுக்கு உள்ளான அந்தப் பெண்ணும் மது அருந்தியிருந்தாரா? எனச் சோதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸாரும் மவுண்ட் லாவணியா குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மக்களிடையே நடக்கும் குற்றங்களை தடுக்கவென நியமிக்கப்படும் பொலிஸாரே தற்போது அதிகமாகக் குற்றங்கள் புரிந்து வருவது இலங்கையில் அதிகரித்து வரும் ஒருபோக்காக காணப்படுகிறது.

தாயகக் கொள்கையை ஆதரிக்க பிரி.வாழ் தமிழர்களுக்கு உரிமை உள்ளது

தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்று முன்நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்துபோன பின்னரும் ஏன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் அதனை வைத்திருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டேவிட் ஹன்சன் மேற்கண்டவாறு பதிலளித்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கீத் வாஸ் உரையாற்றுகையில் தெரிவித்தவை வரு மாறு: பிரிட்டிஷ் அரசு தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலைத் தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடயம் குறித்து அனைவரும் அறிவோம். அனைவரையும் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கம் அற்றுப்போய் விட்டது. இலங்கை அரசே இது குறித்து நம்பிக்கையாகவுள்ளது. இப்படியான சூழ்நிலையில் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து ஏன் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் பிரிட்டன் வைத்திருக்க வேண்டும்? விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதனுடன் தொடர்பில்லாத அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறான தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். இதற்குப் பதிலளித்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் குறிப்பிட்டவை வருமாறு: பிரிட்டனில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட 2000ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து அந்த அமைப்பு தமிழர் தாயகத்தை உருவாக்கும் தனது முயற்சிக்காகப் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது சட்டவிரோதமானது என்ற போதிலும் தமிழ் சமூகத்துக்கு தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கான உரிமை உள்ளது. இந்த விடயம் தொடர்பாகத் தமது கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. பிரிட்டனுக்கு கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவை குறித்த நீண்ட பாரம்பரியமுள்ளது. மேலும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிப்பவர்கள் இதனை நாடாளுமன்ற சதுக்கத்தில் வெளிப்படுத்த அனுமதியளிக்கப்படுவது அவசியமானது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளைத் தனிநபர்கள் ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நாடாளுமன்ற சதுக்கத்தில் தனி நபர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை வைத்துள்ளோம். எனினும், விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவார். மேலும் தடைகளை அகற்றுவதற்கும் அவரிடம் விண்ணப்பிக்கலாம் என்றார்.

நிலநடுக்கத்தால் பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு

சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளின் மொத்த கால அவகாசத்தில் 1.26 மைக்ரோ செகண்ட் குறையும் என நாசா விஞ்ஞானிகளின் முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் போது பூமியில் உள்ள பாறைகள் இடம்பெயரும். இதன் காரணமாக பூமி சுழலும் வேகம் மாறுவதால், ஒருநாளின் கால அவகாசமும் மாறுபடும். நாசாவில் பணியாற்றும் புவியியல் விஞ்ஞானி ரிச்சர்ட் க்ராஸ் என்பவர் கணினியின் உதவியுடன் நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8. ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோடு 8 செ.மீ. சாய்ந்துள்ளதையும், இதன் காரணமாக நாளின் காலஅவகாசம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவு குறைந்துள்ளதையும் கண்டறிந்துள்ளார். கடந்த 2004இல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தது. அதனால் நாளின் காலஅவகாசம் 6.8 மைக்ரோ செகண்ட் குறைந்தது குறிப்பிடத்தக்கது.