புதன், 2 பிப்ரவரி, 2011

குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் வாழ்கின்றனர்

யாழ்.குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் துன்பகரமான அச்ச உணர்வுகளுடனே இருக்கிறார்கள் என யாழ். மாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில்  நடைபெற்ற விசேட சந்திப்பில் பிரித்தானிய மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழுவினருக்கும்; சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர்

63ஆவது சுதந்திர தினத்தையொட்டி எதிர்வரும் 6ஆம் திகதி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர் என்றும், இதற்கான விசேட வைபவம் வவுனியாவில் இடம்பெறும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்றது.

யாழில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.கிராமப் புறங்களிலேயே வேட்பாளர்கள் பலரும் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.