வெள்ளி, 31 டிசம்பர், 2010

நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது.. புதிய வருடம் மாற்றங்களை தர வேண்டும்!

நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது. எந்த மாற்றங்களும் இல்லை. எந்த முன்னேற்றங்களும் இல்லை. மூடப்பட்ட ஊர்கள் அப்படியே இருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்ட  மக்கட் கூட்டத்தின் தொடரும் சாபம், இரத்தமும் சதையுமாய் எங்கள் காலத்திலும் பரவிச் செல்கிறது தமிழர்களுக்கு மட்டும் ஏன் துப்பாக்கிகளின்; அச்சுறுத்தல்கள் எப்பொழுதும் பரிசளிக்கப்படுகின்றன. உரிமைக்காக இலட்சியத்திற்காக துப்பாக்கி ஏந்திய மக்களை, தங்கள் துப்பாக்கிகளும் காக்கி உடைதரித்த துப்பாக்கிகளும் அச்சுறுத்துகின்றன.
 தமிழர்கள் எதையும் கேட்க முடியாத  அச்சமான சூழலுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று இந்தத் துர்ப்பாக்கியமான  துப்பாக்கிதாரிகளும் நினைக்கிறார்கள் வாழ்வுக்காக போராடும் தமிழ் பேசும் மக்களினின்வாழ்வுரிமைகள் சிறக்க வேண்டும். ஒன்றாய் பலம் சேரக்க வேண்டும்.  இன்றும் சிலர் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கிறது தாய்நிலம். கொல்லப்பட்டவர்களில் யாரினதோ சடலம் கொண்டு செல்லப்படும் பொழுது வெடியோசைகள் கனத்துக் கேட்கின்றன. இந்த வெடியோசைகள் புதுவருடத்திற்காகவா?
 

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எழுதியுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான நூல்

விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்‘ என்ற தலைப்பிலான நூல் ஒன்றை சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய எழுதி வெளியிட்டுள்ளார்.  இந்தநூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறை தரப்பில் கையாளப்பட்ட உத்திகள் தொடர்பாகவும் அவர் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் நிபந்தனையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்க மறுப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் விதித்திருக்கும் நிபந்தனையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.  வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்களும் மேற்கத்தேய நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

அல்வாயில் ஆயுததாரிகளால் பெண் கடத்தப்பட்டார்

அல்வாய் கிழக்குப் பகுதியில் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் வெள்ளைவானில் வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய் கிழக்கு மணியம் பாடசாலை வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான திருமதி யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். நேற்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதன்போது தாயாரை ஆயுததாரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இழுபறிபட்ட பிள்ளைகளை துப்பாக்கியால் அச்சுறுத்தி விட்டு அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட பெண் ஆறு பிள்ளைகளின் தாயாராவார்.

'சிலோன் போய் சிறிலங்கா வருகிறது'

இலங்கையில் பழைய காலனித்துவ கால பெயரான சிலோன் என்ற பெயரைக் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறிலங்கா என்று பெயரை மாற்றிவைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கைக்கு சிறிலங்கா என்று பெயரிடப்பட்டு 39 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் 2011இல் முடிந்தவரை விரைவாக நடக்கும்.அனாவசியமான காலனித்துவ கால எச்ச சொச்சங்களை களைவோம் என்ற புதுவருட உறுதி மொழியாக இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

குடத்தனைச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்!? மணற் விற்பனையை அம்பலப்படுத்தினாராம்!!

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.