செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சிறீலங்காவும் – மாலைதீவும் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும்

சிறீலங்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்து மாலைதீவை எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லகம தெரிவித்துள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வேறு வழிகளில் அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைப்புக் காட்டிவருவதாகவும் ரோகிதபோகல்லகமவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா மாலைதீவு போன்ற நாடுகளை மையங்கொண்டு இவர்கள் செயற்படக்கூடும் என்றும் எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிhந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாதிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் 4 ஆயிரம் விமானிகள் வேலை நிறுத்தம்

ஜெர்மனியில் ஏர்லைன் லுப்தான்சா விமான நிறுவனம் பிரசித்தி பெற்றது. இதில் சுமார் 4 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி 4 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 3 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பல விமானங்களின் போக்குவரத்து தாமதமாகவும் நடைபெறுகிறது. எனவே பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைநிறுத்த போராட்டம் வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுவதால் இதில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் வாபஸ் பெற்று வேறு விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு புதிய பாதுகாப்பு சோதனை

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் 10 நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு முகம் மற்றும் கைரேகை பரிசோதனைகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் தெரிவித்தார். அதே சமயம் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ள பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருப்பதை கெவின் சூசகமாக தெரிவித்தார்.

103 சிறுமிகளை கற்பழித்த காமுக மருத்துவர்

அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டேலவேர் மாகாணத்தில் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருப்பவர் எர்ல் பிராட்லி. இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதால் இவர் 103 சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெலவேர் மாகாணத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட வழக்காக இது உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த படுபாதகச் செயலை அந்த மருத்துவர் செய்து வந்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை பாலியல் கொடுமைப்படுத்தும் போது அதனை அவர் வீடியோவிலும் பதிவு செய்து வைத்துள்ளார். இதனிடையே பிராட்லியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதிக்ப்பட்டவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு.......................

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். இவரது முதலாவது கருத்தான அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்று எதனை கூறுகின்றார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? மா நில சுய ஆட்சியா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ தாயக நாட்டினையா? இவருக்கு எதிலுமே தெளிவு இல்லை அல்லது தேர்தலிற்காக எதனையும் கூறி நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஏற்றால் போல் கதைத்து தேர்தலில் வெல்லவேண்டும் என்பதே நோக்கம். அதாவது இலங்கை அரசாங்கமோ அன்றி இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது 13 வது சீர்திருத்தத்திற்கு மேலாக எதனையும் வழங்கவோ தயாராக இல்லை. இதனை மஹிந்த உறுதியாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு மேல் இலங்கை பாராளுமன்றில் எதனையாவது பெற முடியும் என மக்களுக்கு உறுதி மொழி கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுடன் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறுவது ஒரு நியாயப்பாடாக இருந்தாலும் அதனை கூட கூட்டமைப்பினால் தீர்க்கமுடியாது மாறாக அரசாங்கத்திடம் தம்மை காப்பாற்றி கொள்வதற்காக எதனையாவது செய்ய வேண்டும். நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை. இதில் இருந்து அவரது அரசியல் சாணக்கியம் எப்படி இருக்கின்றது என கூறமுடியும். ஆகவே மக்களை வைத்து தனக்கு விருப்பம் இல்லாதவர்களை வெளியேற்றுவதும் மக்களின் துன்பங்களை வைத்து தேர்தலில் எவ்வாறு வெல்லலாம் என திட்டமிடுவதும் அரசியல் சாணக்கியம் அல்ல அரசியல் போலித்தனம் என்றே கூற வேண்டும். 2004 ஆம் ஆண்டில் இவர் மக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான ஒற்றுமையினை வலியுறுத்தி , விடுதலைக்கான போராட்டத்திற்கு ஜன நாயக ரீதியான ஆதரவு திரட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிட வைத்தனர். 1000 மேற்பட்ட அரசியல் போராளிகளும் மக்களும் தமிழர் தாயகத்தில் வீடு வீடாக சென்றுதான் கூட்டமைப்புக்கு வாக்கு கேட்டார்கள். வாக்கு கேட்கும் போது எந்த ஒரு போராளியும் கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்புவதுஇலங்கை அரசாங்கம் எதுவும் தரும் என்பதற்காக அல்ல. அபிவிருத்திக்காக அல்ல எமது உரிமைகளுக்கான நியாயங்களை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் ஜன நாயக ரீதியில் எடுத்து உரைப்பதற்காகவே என தெளிவாக கூறி வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் சம்பந்தன் வானொலியில் கூறும்போது என்ன சொல்கின்றார். கடந்த வருட தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள் அதே மக்கள் தாம் ஏமாந்து போனதாகவும் தாம் தெரிவு செய்த பிரதி நிதிகள் வெறும் சுலோகங்களை சொன்னார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என கூறியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக கஜன் மற்றும் பத்மினி அவர்களின் நீக்கத்தினை நியாயப்படுத்தினார். இங்கு கேள்வி என்னவெனில் யாழ் உதயன் நிர்வாகமும் ஒரு சில யாழ் புத்திஜீவிகளும் மக்களின் ஒட்டுமொத்த கருத்தினை கூறமுடியாது. தவிர கடந்த தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆலோசனைப்படி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. அவர்களின் கருத்தின் படியே அனைவரும் நடந்தனர். தவிர யதார்த்தம் என்னவெனில் கோசங்களைத்தான் போடலாமே தவிர கூட்டமைப்பு எதனையும் செய்ய முடியாது. சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும். அவ்வாறு எனின் யாழ்ப்பாணம் சொலமன் சிறில் அவர்களும் கோசம் மட்டும் தான் போட்டார். ஏன் அவரை புதிய பட்டியலில் இருந்து நீக்கவில்லை. சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? சுலோகம் போடுகின்றவர்களை விடுத்து இராஜ தந்திரமாக கருமம் ஆற்றும் தலைவர் என உங்களை புகழ்பவர்களும் நீங்களும் இதுவரை முள்ளீவாய்க்காலிற்கு பின்னர் என்ன செய்தீர்கள்? ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள். தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட கிசோர், சிவாஜி ஆக்யோரின் முயற்சியே. இதற்காக அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் சிவாஜி, கிசோர் ஆகியோரின் முயற்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தாமே எல்லாம் செய்ததாக வெள்ளை வேட்டியுடன் முன்னுக்கு நின்றார்கள். படம் பிடித்து பத்திரிகைகளிலும் போட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மஹிந்தவுடன் சேர்ந்தார்கள் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ வேறு விடயம் ஆனால் அதனை சம்பந்தன் கூறுவதற்கு அருகதை இல்லை. ஏனெனில் அவரும் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது. ஆகவே சம்பந்தன் நிலைமைக்கேற்ப ஆள் மாறாட்டம் செய்வதனை நிறுத்தவேண்டும். ஒப்பீட்டு ரீதியாக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களே பல தடவை மக்களை ஏமாற்றியுள்ளனர். வெறும் சுலோகங்கள் என்று கூறும் சம்பந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தினையும் அதனை கொண்டுவந்த அரசியல் தலைவர்களையும் எதிர்த்தோ அல்லது தூக்கி வீசியோ பேசுவாரா? அதுவும் மக்களால் வாக்கு மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே. தமிழ் மக்களின் தலைமை என்பது மக்களுக்கு தெளிவான கருத்துக்களை கூறி சரியான தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களை வழி நடாத்தி செல்வதாகும். சுயாதீனமாக மக்கள் வாக்களிப்பது வேறு, அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், தனி நபர்களின் செல்வாக்கு, அரச செல்வாக்கு ஆகியனவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையினை சொல்லி அரசியலை நடாத்தவேண்டும். அதனை விடுத்து இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கு எதனை சொன்னால் மக்கள் ஏற்பார்கள் எதனை சொன்னால் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று திட்டம் போட்டு தனது வெற்றியினையும், தனது இருப்பிற்காக மற்றவர்களை புறம் தள்ளுவது ஜன நாயகம் அல்ல. இந்தியா ஒரு வருடத்திற்கு தீர்வு தரும், இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து தரும் என கூறுவதும் அதனை கஜேந்திரன், கஜன், பத்மினி ஆகியோர் எதிர்க்கின்றனர் என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா? தவிர சிங்களவன் இலங்கை முழுவதும் சிங்கள பெளத்த நாடு என்று கூறும்போது ஒரு சில தமிழ் எம்.பிக்கள் அதனை மறுத்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. அது வெறும் கோசம் என்றால் சம்பந்தனின் உண்மையான கோசம் என்ன? டக்ளசின் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுய ஆட்சியா? அப்படி எனில் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது.

அமெரிக்க நீதிமன்றில் இன்று வாதாடுகிறார் ருத்திரகுமாரன்

தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப் பட்ட அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இன்று நேரில் ஆஜராகி வாதிடவுள்ளார் என இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன. மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு களை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத் தில் வாதிடுவார் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந்நாட்டு தேசப்பற்றுச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், அது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முதல் தமிழர் அவர்தான் என்றும் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது?

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை

புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்,

.விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு. இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசுடன் முரண்படாமல் கையாளுவதற்கு சிறிலங்காவில் அரசியல் அதிகாரம் படைத்த தமிழர் சக்தி ஒன்று இந்தியாவுக்கு அவசர தேவையாக உள்ளது. தனது இந்த தேவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரே சரியான தெரிவாக இருக்கமுடியும் இந்தியா கருதுகிறது. அப்படிப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தபோது, தனது திட்டம் கைமீறிப்போய்விட்டதாக இந்தியா பீதியுற்றபோதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வசமான களமாக தற்போது வந்து வாய்த்திருக்கிறது. இந்த தேர்தலில் தமது ஆளுகைக்குள் செயற்படக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்குவதன்மூலம் மட்டுமே சிறிலங்காவில் தனது ஏனைய திட்டங்களை முன்னகர்த்த முடியும் என்று இந்தியா நம்புகிறது. அவ்வாறு தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரக்கூடிய கூட்டமைப்பினில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தீவிர சக்திகள் இடம்பெறுமாயின், அது கூட்டமைப்பின் ஊடாக முன்னகர்த்த உத்தேசித்துள்ள எதிர்கால முயற்சிகளுக்கு பாரிய தடங்கலாக அமையும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கூட்டமைப்பினுள் நிச்சயம் இடம்பெறக்கூடாது என்பதில் இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தமிழ் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு தாம் இடமளிப்பதாக கட்சியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது, அதற்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைமை ஒப்புதல் அளிக்காததிலிருந்து, கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரை வெளியகற்றவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைமை எவ்வளவுதூரம் உறுதியாக நிற்கிறது என்பது புலனாகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினை இந்தியாவின் மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டால், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டின் அழுத்தத்துக்கு உள்ளாகவேண்டிய தேவையில்லை என்று சோனியா அரசு ஆழமாக நம்புகிறது. கருணாநிதி தலைமையிலான மாநில அரசு தனக்கு சார்பாக என்றென்றும் இருந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உள்ளபோதும், தெலுங்கானாவில் தற்போது தனிமானிலமாக அமைக்கக்கோரி மேற்கொள்ளப்படுகின்றன மக்கள் கிளர்ச்சி போல எனையா மாநிலங்களிலும் வேறு விடயங்களில் தலைதூக்குமா என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, எந்த ஒரு விடயத்திலும் மாநில அரசுகள் மத்திய அரசினை பணயக்கைதியாக வைத்திருக்கக்கூடிய - சாத்தியமான - விடயங்களை விட்டுவைக்காமல் அவற்றை தானே நேரடியாக அணுகவேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவாக உள்ளார்கள். இதன் ஒரு நகர்வாகவே, சிறிலங்கா அரசியலையும் தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் அதனை தான் நினைத்ததுபோல வைத்திருக்கவும் இந்தியா தீர்க்கமான முடிவுடன் காய்நகர்த்திவருகிறது.

சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல்,,,,

பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள எவருக்காவது தெரியுமா? ஏன்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டான நிலமையிலேயே ஒன்றிணைய ஒத்துக்கொண்டார்கள். ஏன்பதும் உண்மையே. கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி சிவநாதன், கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதம் யாருக்கும் தெரியாமலிருக்கலாம். ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலக்கியம் பற்றி பேசி வருகின்றார். புளொட் தலைவர் மதில் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று. மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது. என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் அவசியத்துக்கான எண்ணக்கருவையே சிதைத்துவிட்டது. இவ்வாறான கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்பு இன்னும் மேலும் பலப்பட வேண்டும். என்ற மக்களின் எண்ணம் தவிடு பொடியாக்கப்பட்டதும் அல்லாமல் இருந்த ஒற்றுமையே சின்னாபின்னமாக்குமளவிற்கு நிலவரம் முற்றியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையினால் தமிழ்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளார்கள் என்பது வருத்தத்தைக் கொடுக்கின்றது. தந்திரோபாய அணுகுமுறையும் கொண்ட இலட்சியத்தில் பற்றுமில்லாததாலேயே இத் தேர்தல்களம் அசிங்கமான முகத்தை வெளிக்காட்டி நிற்கிறது. இவை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளாகும். தமிழ் மக்களிடையே ஒற்றுமை குலைவது அவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தானே. சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் தமிழ் மக்களின் வருங்கால நலனையிட்டு சிரத்தை கொள்ளாமல் தங்கள் தங்கள் கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் நலனை முன்னெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.