புதன், 28 ஏப்ரல், 2010

பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்.....

தமிழீழ தேசியத் தலைவராகப் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரனை? ‘பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்!’ என்ற உறுதிப்பாட்டுடன் இத்தனை காலமும் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அந்த நாட்டில் இருந்து செயல்படும் ‘அலைகள்’ இணையதளத்தின் 10-வது ஆண்டுவிழாவில் முதன்முதலாக மேடையேறியதுடன், அலைகள் இணையதளத்துக்கு நீண்டதொரு பேட்டியும் அளித்திருந்தார். வேலுப்பிள்ளை மனோகரனிடம் பேட்டி பெறும் முதல் தமிழக ஊடகமாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் நாம் பேட்டி காண முயன்றோம். சி.செ.துரை என்பவர் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டோம். இனி நமது கேள்விகளும், அதற்கு வேலுப்பிள்ளை மனோகரன் அளித்த பதில்களும்…. டென்மார்க் நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், பிள்ளைகள் பற்றிச் சொல்ல முடியுமா? ‘‘நான் ஈழத்தில் வாழ்ந்தபோது சரக்குக் கப்பலில் மாலுமியாக (போசன்) பணி புரிந்தேன். உலகின் பல நாடுகளுக்கும் எமது கப்பல் போகும். இப்போது டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்தபோது கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. இப்போது மனைவி மற்றும் இரு மகன்களுடன் டென்மார்க்கில் உள்ள வைலை என்ற அமைதியான நகரில் எளிமையாக வாழ்ந்து வருகிறேன்.’’ மருத்துவத்திற்காக மலேசியாவில் இருந்து முறையான விசா பெற்று தமிழகம் வந்த உங்கள் தாயார் பார்வதி அம்மாள், திருப்பி அனுப்பப் பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘‘ ‘அலைகள்’ பத்தாண்டு விழாவிற்கு நான் தலைமை தாங்கப் போனபோதுதான், தாயார் திருப்பியனுப்பப்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. விழாவிற்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். அந்த நேரம் மலேசியா அரசு, தாயாருக்கு ஒரு மாத விசா நீட்டித்து வழங்கிவிட் டது என்ற செய்தி கிடைத்ததும் ஓரளவு ஆறுதலடைந்தேன். விசாவை தவறுதலாக வழங்குவதும் திருப்பி அனுப்புவதும் சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்குப் பொருந்தலாம். ஆனால், எனது தாயாரின் நிலையை எண்ணிப் பாரு ங்கள். தமது எதிரிக்குக்கூட இந்த அவல நிலை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதைவிட என்ன சொல்ல..’’ தங்கள் தாயார் பார்வதி அம்மாள் பற்றிய தகவல்களை தமிழகத் தலைவர்கள் யாராவது உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா? ‘‘இல்லை! நான் எனது தம்பியின் பெயரைப் பயன்படுத்தி வாழ்வில் எதையும் செய்தது கிடையாது. அப்படியான செயல்களை தம்பி விரும்பவும் மாட்டார். இதனால் அரசியல் தலைவர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த காலம்தொட்டு பழ.நெடுமாறன் எங்கள் குடும்ப நண்பராகவே பழகி வந்தார். அவ ருடன் மட்டுமே எனக்குத் தொடர்புண்டு. எனது தாயார் விடயம் தொடர்பாக அவர் பகிரங்கமாக கருத்துரைத்து வருகிறார். எனது தாயாரைத் தங்கள் தாய்போல பராமரிக்க தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள். அவர்களுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மற்றபடி என் தாயார் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.’’ ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது உங்களது தந்தை, தம்பி பிரபாகரன் ஆகியோர் உங்களிடம் ஏதாவது பேசினார்களா? அந்த போர்ச் சூழல் நிலவரம் குறித்து ஏதாவது தெரிவித்தார்களா? ‘‘பிரபாகரன் அவரது வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் அதிகமாக என்னிடம் தொடர்புகொண்டது கிடையாது. அப்படியே பேசினாலும் குடும்ப விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார். எனது தந்தை தாயகம் சென்ற பின் தந்தையார் மூலமாகத்தான் அனைவரது சுகங்களையும் நான் அறிந்து வந்தேன். ஆனால் சென்ற ஆண்டு போர் உச்சகட்டமடைந்தபோது, எனது தந்தை கடைசியாக என்னுடன் பேசினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்குப் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை.’’ முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சார்லஸ் இறந்தார் என்ற செய்தியை பிரபாகரன் மற்ற தளபதிகளிடம் ‘என் மகனையும், மகளையும் நாட்டுக்காக விதைத்து விட்டேன்’ என்று கூறியதாக சிலர் எழுதினார்கள். அது பற்றி பிரபாகரன் உங்களிடம் ஏதாவது கூறினாரா? அல்லது மற்ற தளபதிகள் மூலமாகவாவது தெரிவித்தாரா? ‘‘இப்படியொரு தகவலைக் கூறியவர்கள் எல்லோருமே இடையில் இருந்தவர்கள்தான். இது, இவர்கள் மூலம் பிரபாகரனால் சொல்லப்படக்கூடிய செய்தியா என்று நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். தனது பிள்ளைகள் தேர்வில் சித்தியடைந்த (வெற்றியடைந்த) தகவலை இதற்குமுன் ஒருமுறை என்னிடம் தெரிவித்த பிரபாகரன், அந்தத் தகவலைக் கூட இவர்களை வைத்தே சொல்லியிருப்பாரே..? சரி! பிரபாகரன் இதுபற்றிக் கூறாவிட்டாலும் என் தந்தையாவது அதை ஏதோ ஒரு வழியில் தெரிவித்திருப்பார். எனது குடும்பத்தினர் ஒருவருடைய குரலில் இருந்தும் சார்லஸ் இறந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல் எனக்கு வரவில்லை. அதனால்தான் மர்மம் இருக்கிறது என்றேன்.’’ முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகு பிரபாகரனின் உடலென்று ஓர் உடலைக் காட்டியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஒரு மூத்தவர், அண்ணன் என்கிற முறையில் ஏன் அவரது உடலை முறைப்படி நீங்கள் கௌரவத்துடன் பெற்று மரியாதை செய்ய முன்வரவில்லை? இந்தக் கேள்வி அனைவருக்கும் இருக்கிறதே? ‘‘இதற்குப் பதில் தர சிறிது முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்திலேயே தனது உயிர் மட்டுமல்ல, உடலும் கிடைக்கக் கூடாது என்ற உறுதியுடன் வாழ்ந்தவர் பிரபாகரன். அப்படிப்பட்டவருடைய உடல் என்று ஒன்று காண்பிக்கப்பட்டபோது நான் பலமாக யோசித்தேன். அது என்னுடைய தம்பியின் உடல்தான் என்பதை உறுதி செய்யக்கூடியவர் எனது தந்தைதான். அவர்தான் தம்பியுடன் கடைசி நேரம் வரை அங்கே இருந்தவர். அவரை அழைத்து வந்து அதைக் காண்பித்து உறுதி செய்ய வேண்டியதுதானே மரபு? அப்படி ஏன் செய்யவில்லை என்று எமக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சிங்கப்பூர் மற்றும் கனடாவில் இருந்து பேசுவதாகக் கூறி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவர், அந்த உடலுக்கு உரிமை கோரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது கே.பி. என்பவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, ‘கே.பி கூறுவதை நம்புவதா? அல்லது நீங்கள் கூறுவதை நம்புவதா?’ என்று நான் அவர்களைக் கேட்டேன். மேலும், அன்றைய நிலையில் சிறீலங்கா செல்வது பாதுகாப்பு சிக்கல் கொண்ட விடயமாக இருந்தது. நாம் அங்குபோன பின் தவறான ஓர் உடலத்தைக் காண்பித்து உறுதி செய்யும்படி வற்புறுத்தினால் நாம் மறுத்து விட்டுத் திரும்ப வழியிருக்குமா? என்பதையும் சிந்தித்தேன். இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நமது நிலைப் பாட்டின் நியாயத்தன்மை உங்களுக்குப் புரியும்.’’ உங்கள் தம்பி பிரபாகரனை நீங்கள் கடைசியாக எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தீர்கள்? மீண்டும் சந்திப்போம் என்று அப்போது ஏதும் நினைத்தீர்களா? நினைக்கின்றீர்களா? ‘‘இந்தக் கேள்விக்கு ஜோதிடம்தான் பதிலாக வருகிறது. ‘பிரபாகரனுடைய பிற்கால வாழ்வு நேதாஜியின் வாழ்வு போல மர்மமாக இருக்கும்’ என்று கூறியிருந்த ஜோதிடர் ஒருவர், ‘எனது ராசிக்கும் பிரபாகரனின் ராசிக்குமிடையே உள்ள நிலை காரணமாக இருவரும் சந்திப்பது சாத்தியமில்லை’ என்றும் கூறியிருந்தார். பிரபாகரனை ஈழத்தில் உள்ள ஒரு வீட்டில் கடைசியாக 1979-ம் ஆண்டு தற்செயலாக அங்கு சென்றபோது சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். பேசவில் லை. அவர் வந்ததும் நான் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டேன். பின்னர் சென்னைக்கு நானும் எனது தந்தையும் ஒருமுறை சென்றபோது, தம்பி அங்கு நிற்பதாகவும் (இருப்பதாகவும்) பார்க்கப் போகும்படியும் எனது தந்தை கூறினார். சேலத்தில் இருக்கும் எனது மனைவி இரண்டொரு நாளில் வந்தபின் அவருடன் சேர்ந்து சென்று தம்பி யைப் பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் ஒருமுறை (1987-ல்) தம்பியை இருவரும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவர் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.’’ பிரபாகரனின் இடம், இப்போது வெற்றிடமாக இருக்கிறதே. அடுத்த தலைவர் இவர்தான் என்று வேறு யாரையும் அவர் அடையாளம் காட்டாமல் விட்டிருப்பது பெரும் குழப்பமாக அல்லவா இருக்கிறது? ‘‘இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கென ஒரு நியதி இருக்கிறது. இவருக்குப் பின் இவர்தான் என்று யாரையும் அதில் நியமிப்பதில்லை. ஒரு போராளியின் இடம் வெற்றிடமானால், அவரது இடத்துக்கு இன்னொரு போராளி வருவார். எல்லா போராளிகளுடைய வெற்றிடங்களையும் காலமும், செயற்பாடும் நிரப்பிச் சென்றுள்ளன. ஒவ் வொரு வெற்றிடமும் காலத்தால் சரியாகவே நிரப்பப்பட்டுள்ளன. இதில் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. மேலும் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்களின் கையில் கொடுப்பதாக தம்பி தெரிவித்துள்ளார். அங்கும் அவர் மக்களையே அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.’’ ‘தலைவர் இறக்கவில்லை, பாதுகாப்பாக இருக்கின்றார்’ என்று முதலில் கூறிய கே.பி., பிறகு, ‘அவர் வீர மரணம் அடைந்து விட்டார்’ என்று கூறினார். ‘இப்படியொரு இரண்டுங் கெட்டான் பதிலை பிரபாகரன் தன் வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது’ என்று நீங்கள் இணையத்திற்குத் தெரிவித்திருந்தீர்கள். அப்படியென்றால்…? ‘‘உறைந்த மௌனத்தால் தம்பி ஏதோ ஒரு செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளார் என்பதுதான் பதில். மௌனத்தைப் போல சிறந்த, சரியான பதில், வார்த்தைகளில் இரு ப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரன் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு பதில்களை என்றுமே கொடுத்தது கிடையாது. இப்போது அவர் மௌனமாக ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.’’ தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் மரணமடைந்ததில் ‘இயற்கையானது’ என சிங்கள அரசு சொன்னது. ஆனால் நீங்கள் ‘மர்மம் இருப்பதாக’ கூறியுள்ளீர்கள். அதற்கான காரணங்கள்….? ‘‘தந்தையார் இறந்த செய்தியை எமக்கு அறிவிக்காமலே அவரது உடலை அடக்கம் செய்திருந்தால் இப்போது அவரையும் நாம் தேடிக் கொண்டுதானிருப்போம். அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிய நாங்கள் எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. என் தந்தை இறப்பதற்கு முன் அவரை சந்தித்தவரென யாருமில்லை. அவரை எங்கு வைத்திருந்தார்கள் என்பது பல மாதங்களாகத் தெரியவில்லை. ஆனால், அவர் இறந்தது மட்டும் தெரிந்தது என்றால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந் தது என்ற கேள்வி இயல்பாகவே வரும். எனது தந்தை கொண்டு செல்லப்பட்ட பின் அவருடைய குரலில் இருந்து ஒரு வார்த்தைகூட எமக்குக் கிடைக்காத நிலையில், அந்த மரணத்தை மர்மமற்ற இயற்கை மரணமென வர்ணிப்பதை ஏற்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.’’ தலைவர் பிரபாகரன், அவரது மனைவி, மக்கள் என அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சொல்லியாயிற்று. தந்தையின் மரணம்.. அலைக்கழிப்போடு தாய் ஓரிடம்…. இப்படி எல்லாமும் உங்கள் மனதை எப்படி வதைத்திருக்கிறது? என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்? ‘‘வாழ்வில் இதைவிட சுமப்பதற்கு பெரிய சுமை என்ன இருக்கப் போகிறது? அதைத்தான் சுமந்து கொண்டு வாழ்கிறேன். அந்தச் சோகத்தை தமிழ்ப்படுத்திக் கூற என்னால் முடியவில்லை.’’ பிரபாகரன் பெரிய தேசியத் தலைவராக அதிகாரத்தில் இருந்தபோதுகூட, அந்த அதிகாரங்களைக் கொஞ்சமேனும் பகிர்ந்துகொள்ளாமல் இப்படி ஒதுங்கி எளிமையாக வாழ்ந்து வருகிறீர்கள். அதுபற்றி தலைவர் எப்போதாவது உங்களிடம் கேட்டதுண்டா? ஏன் இப்படி என்று வருத்தப்பட்டதுண்டா? ‘‘என்றுமே கேட்டதில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவது, தம்பியுடன் தொடர்புகொள்வதெல்லாம் நமது சொந்த முடிவுகளே..’’ ‘என் தம்பி நேதாஜியை நேசித்தார். அவரைப் போலவே தூய்மையாக வாழ்ந்தார். நேதாஜியின் பிற்பகுதி வாழ்க்கைத் தோற்றத்தைப் போலவே கடந்த ஓராண்டு காலத்தை வைத்திருக்கிறார்… அதிலும் ஒரு போராட்டம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அதன் அர்த்தம்…? ‘‘நேதாஜியின் போராட்டம் முடிந்ததாக இன்று வரை யாருமே கூறியதில்லை. காந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தாலும், அந்தப் போராட்டத்தை அருவமாக நின்று நகர்த்தியது நேதாஜியின் போராட்ட சக்திதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல பிரபாகரன் 30 ஆண்டுகளாக நடாத்திய போராட்டமும் வெறும் பயங்கரவாத முத் திரையால் முடிவு கட்டப்பட முடியாத போராட்டமாகும். தமிழினத்தின் விடிவை முப்பதாண்டு காலமாக மின்னல் வேகத்தில் நகர்த்தியவர் அவர்தான். இனி எது நடந்தாலும் அது தம்பியின் தாக்கமில்லாமல் நடக்க முடியாதளவிற்கு முத்திரை பதித்துள்ளார். தமிழினத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்ற பந்தை அவர் சுவர் மீது அடித்தார். இப்போது அந்தப் பந்து புது விசையுடன் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பிரபாகரன் சுதந் திரத்தின் வடிவம், பிரபாகரன் மீதான தேடல் சுதந்திரத்தின் மீதான தேடலே என்பதுதான் அதன் அர்த்தம். நேதாஜியைத் தேடியவர்கள் இறுதியில் கண்டது சுதந்திரம் எ ன்பதுபோல இந்தத் தேடலும் விடிவினைத் தரும். அப்போது நேதாஜி போல பிரபாகரனும் சுதந்திர சூரியனாக அரசியல் வானில் பிரகாசிப்பார். இந்தியா சுதந்திரம் பெற்றது போல தமிழினமும் ஒருநாள் சுதந்திரம் பெறும்.’’ ‘பிரபாகரனது பிற்பகுதி வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாரும் அவரைக் காண இயலாது. அவர் எங்கே இருக்கின்றார் என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் ஆரம்பகாலத்தில் கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்’ என அலைகளுக்குத் தெரிவித்துள்ளீர்கள். அதுபற்றி விளக்கமாக பதில் தர இயலுமா? ‘‘‘நானும் தம்பியும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாது’ என்று கூறிய ஜோதிடர்தான் ‘பிரபாகரனை பிற்காலத்தில் யாருமே காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். ‘அவரை எல்லோரும் தேடுவார்கள் ஆனால் காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். இது எப்போதோ பார்த்த ஜோதிடம், இப்போது நினைத்தால் பொருந்தி வருகிறது. ஜோதிடம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.’’ தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு இயக்கத் தலைவர்கள் பற்றி உங்களுடைய கருத்து? அவர்களில் யார் யார் உங்களுடன் பேசுவார்கள்? தமிழகத்தில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது….? ‘‘நான் ஆரம்பத்திலேயே சொல்லியது போல அரசியல் தலைவர்களுடன் நான் தொடர்பு கொள்வதில்லை. பழ. நெடுமாறன் ஒருவருடன் மட்டுமே எனக்குத் தொடர்பி ருக்கிறது. ஆகவே, என்னிடம் தலைவர்கள் பற்றிய யாதொரு கருத்தும் கிடையாது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பிரபாகரன் நேசித்ததும், தமிழக இளைஞர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரனாக பிரபாகரனை நேசித்ததும் வரலாற்றில் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? தமிழக இளைஞர்களுக்கு எங்கள் அன்பையும், நன்றியையும் குமுதம் ரிப்போர்ட் டர் மூலமாகச் சொல்வதில் மகிழ்ச்சியடை கிறேன்.’’

நல்லூர் வளாகத்தில் சங்கிலியன் மன்னனின் நிலத்தில் நட்சத்திர விடுதி

இந்துக்கள் புனிதமாகப் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில், யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலயனின் நினைவாகவுள்ள காணியில் 80 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதியொன்றை 400 மில்லியன் ரூபா செலவில் அமைக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு யாழ் வர்த்தகர் சங்கமும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போதிலும், துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும் அரசிற்கு வழமைபோன்று துணைபோவதுடன், அதன் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி சங்கதிக்குக் கருத்துரைத்த யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதியொருவர், நல்லூர் புனித தலத்தில், அதுவும் சங்கிலி மன்னனுக்குச் சொந்தமான நிலத்திலும் இவ்வாறான நட்சத்திர விடுதி கட்டப்பட இருப்பதை தாம் எதிர்ப்பதுடன், வாழ்வாதார மற்றும் பொருண்மியப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள யாழ் மக்களுக்கு 400 மில்லியன் ரூபா செலவில் விடுதி தேவையில்லை எனவும் கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் மொத்தம் 150 அறைகள் மட்டுமே தற்பொழுது இருப்பதால், தென்னிலங்கை சிங்கள மக்களிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விடுதியை அமைத்து, அதன் மூலம் இலாபம் பெற சிறீலங்கா அரசு முனைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள, துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும், இந்த விடுதி நல்லூர் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கருத்துரைத்த யோகேஸ்வரி, குறிப்பிட்ட விடுதியை தமது அரசு சங்கிலியன் மன்னனின் காணியில் கட்ட முனையவில்லை எனவும், போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து தனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலத்திலேயே கட்டப்பட இருப்பதாகவும் வியாக்கியானம் அளித்துள்ளார். தமது அரசின் இந்தத் திட்டம் பற்றி உள்ளுர் தலைவர்களுடன் எதிர்வரும் மே மாதம் 10ஆம் நாள் பேச்சு நடத்தப்படும் எனவும் யோகேஸ்வரி மேலும் கூறியிருக்கின்றார். சிறீலங்கா அரசு மற்றும் துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் இந்த முயற்சிக்கு எதிராக அனைவரும் இணணைந்து குரல்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட வர்த்த சங்கப் பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

இளம் பெண் கடத்தல்; தம்பதியர் கைது

கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் துன்னாலையிலுள்ள உறவினர் வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றிருக்கின்றார். அப்போது வெள்ளை வானில் சென்ற சிலர் பெண்ணை மிதிவண்டியுடன் கடத்திச் சென்று அவரைக் கொல்வதற்காக கழுத்தை நெரித்திருக்கின்றனர். சற்று நேரத்தில் குறித்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக கருதிய கடத்தல்காரர்கள் அவரை அருகில் இருந்த புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பெண் மறுநாள் காலையில் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று நடந்ததைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இளம்பெண்ணை விசாரணை செய்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி இராஜ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றை அதிகாலை 4 மணிக்கு சுற்றிவளைத்தனர். அங்கு பெண்ணின் சைக்கிளும் அவரது நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அங்கிருந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்த பொலிஸார், விசாரணை செய்த பின்னர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவா, சந்தேக நபர்கள் இருவரையும் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு, பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார். இளம் பெண் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்பதும் தனிப்பட்ட விவகாரம் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய சம்பவம் ஏதும் இடம்பெற்றால் உடன் பொலிஸாருக்கு அல்லது நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

தமிழர் பகுதிகளில் சிங்களத்தில் அறிவிப்புப் பலகைகள்

தமிழர் பகுதிகளில் சிங்களத்தை புகுத்தும் வேலையை ராஜபக்சே படு வேகமாக செய்து வருகிறார். சிங்களர்களை ஏற்கனவே படிப்படியாக குடியமர்த்தி வரும் ராஜபக்சே அரசு தற்போது அறிவிப்புப் பலகைகளை சிங்களத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளாராம். தமிழர் தாயகத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள ராஜபக்சே இப்போது அதை சிங்கள பகுதியாக மாற்றும் முயற்சிகளில் வெறித்தனமாக ஈடுபட்டு வருகிறார். தமிழர்களின் நிலங்களையும், உரிமைகளையும் இப்போது சிங்களர்கள் பறிக்க ஆரம்பித்துள்ளனர். பகிரங்கமாகவும், ரகசியமாகவும் தமிழர்களின் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதற்கு அரசும், ராணுவமும் பக்க பலமாக உள்ளது, பாதுகாப்பும் தருகிறது. தமிழர் பகுதிகளில் இது நாள் வரை இல்லாத சிங்களமும் இப்போது ஊடுறுவ ஆரம்பித்து விட்டது. தப்பும் தவறுமாக தமிழ்ப் பகுதிகளில் சிங்களத்தில் ஊர்ப் பெயர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை எழுதி வைத்து வருகின்றனர். மேலும் தமிழர்களின் அடையாளங்களையும் அழித்தொழித்து வருகின்றனர். தமிழர் வழிபாட்டுத் தலங்களை காலி செய்து விட்டு புத்தர் சிலைகளை அங்கு கொண்டு வைத்து வருகிறார்கள். 1956-ம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இந்த சட்டம் தமிழர் பகுதிகளில் மட்டும் அமல்படுத்த முடியாமல் இருந்த்து. விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் தற்போது அது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. நயினா தீவு நாகபூசணியம்மன் கோவிலில் உள்ள அறிவிப்பு பலகைகளில் சிங்கள மொழி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொழும்பு, கண்டி, கதிர் காமத்தில் தமிழர்களின் கோவில்களில், தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் அறிவிப்பு பலகைகள் உள்ளன. முதன் முதலாக நயினா தீவு கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தையும், சிங்களர்களையும் தமிழர் பகுதிகளில் படு வேகமாக ஊடுறுவச் செய்து வரும் ராஜபக்சே அரசின் செயலைப் பார்த்து தமிழர்கள் பீதியுடன் உள்ளனர்.

போராளிகளை சிறையில் பார்வையிட ஐ. நா வுக்கு தொடர்ந்தும் தடை

விடுதலைப்புலிப் போராளிகளை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்னமும் தடையே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று கவலை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அட்ரெச் மஹே சிக் இவ்வாறு கவலை வெளியிட்டார். இம்முகாம்களில் சுமார் 12 ஆயிரம் பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து அரசின் நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களில் அநேகமானோர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் செல்வதற்கும் அங்குள்ளவர்களைப் பார்வையிடுவதற்கும் ஐ.நா.அதிகாரிகளைக் கூட அரசு அனுமதிப்பதில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். என்று அவர் மேலும் கூறியுள்ளார்

EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது!!

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும் இவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் உறுப்பினர் தான் எனத் தெரிவித்த தீபன் என்பவர் உறவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேரம் பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த பணப் பேரம் பேசலை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்குவதாக கூறி சிவில் உடையில் சென்ற பொலிசார் செல்லக்கிளி என்ற தீபனை வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ஈ.பீ.டீ.பீ முகாமில் வைத்து கைது செய்தனர். அத்துடன் கடத்தப்பட்ட தம்பிராசா ஜெயந்தனையும் பொலிசார் மீட்டனர். இவர் வழங்கிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு ஈ.பீ.டீ.பீயின் தற்போதய மன்னார் மாவட்ட பொறுப்பாளரர் லிங்கேசை பொலிசார் தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வவுனியா ஈ.பீ.டீ.பீ முகாமில் முக்கியஸ்த்தராக இருந்த லிங்கேஸ் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற கடந்த 24 ஆம் திகதி வவுனியாவிலேயே இருந்து இந்த கடத்தலுக்கு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இவரே வன்னியில் இருந்து செல்வம் என்ற பெயரில் அவர்களின் வானொலியிலும் செய்தியாளராக குரல் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிங்கேஸ் அல்லது செல்வம் என்ற இந்த முக்கியஸ்த்தரின் குழுவில் பிரதானியாக இயங்கும் செல்லக்கிழி என்ற தீபனின் வீடு ஈரப்பெரியகுளத்தில் யோசப் முகாமிற்கு அருகாமையில் உள்ள தம்ரோ தளபாடக் கடைக்கு அருகாமையில் உள்ளது. இலங்கைப் புலனாய்வுப் பிரிவு அமைப்புகள் குறிப்பாக ரி.ஐ.டீயுடன் இணைந்தும் வேலை செய்த இவர் பல வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனக் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லங்கேசின் குழுவில் தீபனின் மைத்துணரான சுரேஸ், வட்டக்கச்சி யோகன், நந்தினி முதலானோர் இயங்குவதாகவும் இவர்கள் இலங்கைப் புலனாய்வு அமைப்பான ரீ.ஐ.டீயுடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில வருடங்களாக வவுனியாவில் பெறப்பட்ட பல கப்பப் பணம் ஈரப்பெரியகுளத்திற்கு அண்மையில் உள்ள ஆலையம் அல்லது கடைகளிலேயே கைமாறப்பட்டதாக பணத்தை கப்பமாக செலுத்தியவர்கள் பலதடவைகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொலிசாரால் கைதான செல்லக்கிழி என்ற தீபன் தமது உறுப்பினர் அல்ல எனவும் தம்மிடம் பாதுகாப்பு கேட்டு காவற்துறையினர் வருவதற்கு சற்று முன்னரே தம்மிடம் வந்ததாக ஈ.பீ.டீ.பீயின் வவுனியா செயலகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். கணவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கணவன்மார்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாமலும், குழந்தைகளுக்கு பால்மா, உணவுகளுக்காக வீடுவீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பேரவலம் நிலவிவருகின்றது. தமக்கு உதவி வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினர், அரச அதிபர், பிரதேச செயலர்கள் உட்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பு கொண்ட போதிலும் தமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்படுகின்ற பெண்கள் கண்ணீர்விட்டு கதறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பங்களே வன்னியில் வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பங்களுக்காவது யாராவது புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வருவார்களா?