சனி, 3 ஏப்ரல், 2010

அரசின் தேர்தல் களத்தில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள்! - விக்ரமபாகு கருணாரட்ன

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின்றனர். நாவலப்பிட்டிப் பிரதேசம் இன்று மஹிந்தானந்த அலுத்தகமகேவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர், இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர். ஏகாதிபத்திய விரோத நடிப்புக்கள் இன்று மேடையேற்றப்படுகின்றன. தேசத்தின் பஞ்சாயத்து, குமார என வர்ணிக்கப்படும் விமல் வீரவன்சவின் ஆடையைக் களைந்தால், உள்ளே அமெரிக்க உள்ளாடை இருப்பதைக் காணலாம். தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த அரசாங்கம் சரணாகதி அரசியலுக்குச் சென்று விடும். இடதுசாரிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் இந்த நாட்டில் தேசிய ஐக்கியம் நிலவியது. இன்று அது இல்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று இந்திய ஆதிக்க சக்திகளின் சதிக்குள் சிக்கிக் கிடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மீள முடியாதவாறு அதனுள் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் தான் கூட்டமைப்பில் இன்று சிதைவு ஏற்பட்டிருக்கின்றது. 40 வருட காலமாகத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் எமக்கு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சகல தகுதியும் உண்டு" என்றார்.

புரோட்டான் கதிர்கள் சாதனை வேகத்தில் மோதல்

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில், உலகளவில் இதுவரை இல்லாத வகையில் புரோட்டான் கதிர்களை அதிவேகமாக விஞ்ஞானிகள் மோதச் செய்துள்ளனர். இதுவரை அதிவேகம் எனக் கருதப்பட்ட வேகத்தை விட இன்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 3 மடங்கு வேகமாக புரோட்டான் கதிர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌பி‌‌க்-பே‌ங் ஆ‌ய்வு: சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் (ஒரு பில்லியன்=100 கோடி) ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌மோதலினால் ஏற்பட்ட பெருவெடிப்பின் விளைவாகவே ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க்-பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி அதில் உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது. இ‌ந்‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய போது உருவான அணு மோதலை செயற்கையாக உருவா‌க்‌கி, அத‌ன் மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 80க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த பல ஆயிரம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம், பொ‌றியாள‌ர்களு‌ம் பல ஆண்டுகளாக முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தற்போது 10 பில்லியன் டாலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. இந்த ஆய்வுக்காக ‌பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்து, அதில் பி‌ங்-பே‌ங் சோதனை‌யை கடந்த 2008 செப்டம்பரில் துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன் கதிர்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க விஞ்ஞானிகள் ‌திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தில் இன்று 7 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அளவில் புரோட்டான் கதிர்களை மோதச் செய்தனர். முன்னதாக புரோட்டான் கதிர்களை மோதச் செய்யும் பணியில் கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் சில மணி நேரம் தவித்தனர். எனினும், கோளாறுகளை சீரமைத்து அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் புரோட்டான் கதிர்களை அதிவேகத்தில் மோதச் செய்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008இல் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 2.36 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் வேகத்திலேயே புரோட்டான் கதிர்கள் மோதல் நடைபெற்றது

ஐ.நா மீது இலங்கை மீண்டும் குற்றச்சாட்டு

இலங்கையில் போர் முடிந்து 9 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஐ.நா வல்லுநர் குழு அமைக்கப்படுவதில் அவசரம் காட்டுவதாக இலங்கை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. ஈராக்கில் பிரிட்டன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்வதற்காக 9 ஆண்டுகளின் பின்னரே விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கை விவகாரத்தில் மட்டும் 9 மாதங்களில் வல்லுநர் குழு அமைக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தேர்தல் நடக்க முன்னர் இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட இருப்பதும் தமக்குச் சந்தேகம் இருப்பதாக அரசு கூறுகிறது. தேர்தல் நடக்கவுள்ள இந்தநேரத்தில் இந்த வல்லுநர் குழு தேவையில்லை, ஐ.நா செயலாளர் பான் கி மூன் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் ரோஹித கூறியுள்ளார். மேலும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதற்கான குழுவை அமைப்பதில் பான் கி மூன் பாதுகாப்புச் சபையிடம் அனுமதி பெறவேண்டும். எனவே பான் கி மூன் எமது நாட்டின் தேர்தலை மதிப்பதோடு, அதற்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டார் எனவும் தாம் நம்புவதாக ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

யுத்த காலத்தில் அனுபவித்தவற்றை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை

யுத்தத்தைப் பற்றியோ, நாங்கள் அனுபவித்தவற்றைப் பற்றியோ இப்போது நினைத்துப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை. உண்மையில் அது மிகவும் மோசமாக இருந்தது. எனது பெற்றோரை இழந்துவிட்டேன். இதிலும் பார்க்க வேறொரு மோசமான விடயம் இருக்குமென நான் நினைக்கவில்லை என்று ராகவன் சின்னத்துரை (15 வயது) என்ற மாணவன் கூறியுள்ளார். யுத்தத்தின் போது இந்த மாணவன் கிளிநொச்சியில் வசித்தார். 2008 இல் அவரும் குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து சென்றனர். இப்போது கிளிநொச்சிக்குத் திரும்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இந்த மாணவனும் ஒருவராகும். “2008 அக்டோபர் மாதமானது எனது வாழ்க்கையில் மோசமான காலமாகும். அந்த மாதமே எனது வாழ்க்கை மாறியது. பலருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அக்டோபர், டிசம்பருக்கிடையில் உக்கிரமான சண்டை இடம்பெற்றது. ஷெல் தாக்குதலால் மக்கள் மரணமடைந்தனர். யாரைக் குற்றம் சாட்டுவதென எனக்குத் தெரியாது. எவரையும் இப்போது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அதுவொரு மனவருத்தமான காலமாகும். அடுத்த வருடம் பரீட்சை எழுதப்போகிறேன். இப்போது எனது மூத்த சகோதரனுடன் கிளிநொச்சியில் இருக்கிறேன். அவர் இருப்பதால் நான் அதிர்ஷ்டசாலி. நல்ல கல்வியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். சிறப்பான எதிர்காலத்துக்காக முயற்சிக்கிறேன். பாடசாலைக்குப் போகவுள்ளேன். சிலவேளை துன்பமான நினைவுகளுடன் இருப்பது கஷ்டமானதாகும். பாடசாலையில் அதிகமானவற்றை நான் இழந்துவிட்டேன். உண்மையில் அதுவொரு கெட்டகாலமாகும். இப்போது எங்களுக்கு இருக்கும் பாரிய பிரச்சினை வீட்டுப் பிரச்சினையாகும். அதுவே எமக்கு முக்கியான தேவையாக உள்ளது. வீட்டு வசதி சிறப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. நாம் இருந்ததிலும் பார்க்க சிறப்பான நிலையிலிருக்கின்றோம் என்றாலும் எமக்கு அதிகளவு உதவி தேவைப்படுகிறது. எனது பெற்றோரை இழந்து விட்டேன். ஆனால், தினமும் அவர்களைப் பற்றி நினைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும். இந்த நினைவுகளிலிருந்து நாம் விடுபட்டு அப்பால் செல்ல வேண்டும் என்று எனது சகோதரர் கூறுகிறார். அதனை நான் செய்வேன் என்று அந்த மாணவன் ஐ.ஆர்.ஐ.என்.னுக்கு கூறியுள்ளார்.

நமது தேசிய தலைவர் வரலாறு என் வழிகாட்டி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அவரின் அடிப்படை தத்துவங்களில் இதுதான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இயற்கையை தோழனாக பார்த்தார். வரலாற்றை வழிகாட்டியாக துணை கொண்டார். எந்த ஒரு நிகழ்கால நடவடிக்கையும் கடந்த காலத்தின் நிகழ்வுகளிலிருந்து கற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும். அதுதான் நம்மை சரியான வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இழப்புகள் என்பது கால சுழற்சியின் கட்டாயம். எதையுமே இழக்காமல், எதையுமே பெற முடியாது. ஒன்றை இழப்பதின் மூலம்தான் மற்றொன்றை பெற முடியும். ஆகவே, இழப்பு என்பது நம்மை அச்சமூட்டுவதற்குப் பதிலாக, நம்மை அது வழிநடத்த வேண்டும். அதிலிருந்து கற்றப் பாடத்தை நாம் உள்வாங்கிக் கொண்டு, நமது நகர்வை மீண்டும் துள்ளியமாக தீர்மானமாக சிதைவு ஏற்படாமல் எச்சரிக்கையோடு, ஆனால், கொண்ட இலக்கை அடைவதற்கு பயன்படுத்தவேண்டும். ஆகவே நாம், வறண்ட காலத்தில் இருக்கிறோம் என்கிற மனப்போக்கிலிருந்து மாறி, நாம் வசந்த காலத்தை நோக்கி பயணிக்கிறோம் என்கின்ற உளவியல் கோட்பாட்டை இந்த நேரத்தில் தமிழ் உறவுகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்று ஒன்று இருந்தும்கூட நாம், இந்தியாவின் காலணியாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதால், தமிழர்களின் உரிமை குறித்து பேசுவது, தமிழரின் வாழ்வை நேசிப்பது, தமிழர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திப் பிடிப்பது, இந்திய ஏகாதிபத்திய சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகிறது. அது, நமது நாட்டை துண்டாடுவதற்கான ஒரு செயல் என்று பேசுவதோடு, பிரிவினைவாதம் என்கின்ற ஒரு வார்த்தையை தேசியவாதிகள் தவளையைப் போல் கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். தேசியங்கள் என்பது ஒரு தேசிய இனத்தை ஒடுக்குவதிலிருந்து துவங்குவது கிடையாது. மாறாக, அது வேறொரு தேசிய இனத்தை உயர்த்திப் பிடிப்பதிலிருந்தே உயர்வு பெறுகிறது. ஒரு தேசிய அடையாளத்தின் தன்மையை அதன் இறையாண்மையை ஒடுக்கிவிட்டு, பொதுவான ஒரு தேசிய அடையாளத்தை அறையலாம் என்று நினைப்பது அடக்குமுறை மட்டுமல்ல, அது அரசியல் ரீதியாக ஒரு எழுச்சியை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திலிருந்து உண்டாக்கும் என்பதை வரலாறு பலமுறை நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. வரலாற்றின் வழிகாட்டுதல் படியே நமது போராட்ட வாழ்வும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை நாம் கூர்ந்து பார்க்கும்போது, தமிழீழத்தின் உறுதியான செயல்பாடு நிச்சயமாகிவிட்டது. தமிழீழ அரசு அமைவதை உலக ஆதிக்கத்தாலோ, அல்லது நடைமுறை அடக்குமுறையாலோ அணைத்துப் போட முடியாது என்பதே உண்மை. கடந்தகால போர் நிறுத்தப்பட்டதற்கு நமக்கு வரலாறு காட்டிய வழிதான் காரணம். தம்மை சுற்றி எதிரிகள் ஒரேநேரத்தில் சூழ்ந்திருக்கும்போது, அவர்களை ஒரேநேரத்தில் எதிர்த்துப் போரிடுவதென்பது முட்டாள் தனம் மட்டுமல்ல, அது மீண்டும் நம்மை அடிமை தனத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை நமது தேசிய தலைமை உணர்ந்திருந்த காரணத்தால், அந்த போரை தவிர்த்தார். ஒருமுறை வியட்நாமிய அதிபர் கொரில்லா யுத்தத்தில் வழிகாட்டியான தோழர் ஹோ சி மின்னிடம் சகத்தோழர் ஒருவர் மிகக் கடுமையாக கேள்வி ஒன்றை முன் நிறுத்தினார். எவ்வளவு காலத்திற்குத்தான் நாம் இந்த கொள்ளைக்காரர்களை பொறுத்துக் கொண்டிருப்பது? நீங்கள் உத்தரவிடுங்கள் தோழர். அவர்களை நாங்கள் முற்றாக அழித்துவிடுகிறோம் என்றபோது, ஹோ சி மின் ஒரு புன்னகை சிந்தினார். பின்னர் அவர் கீழ்க்கண்டவாறு அந்த தோழருக்கு பதிலுரைத்தார். இந்த அறையினுள் எலி ஒன்று நுழைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அதன்மீது கல் எறிவீர்களா? அல்லது அதை பிடிக்க முயற்சி செய்வீர்களா? என்று கேட்டார். அந்த தோழர் அறைக்குள் கல்லெறிவது முட்டாள்தனம் என்றார். அதற்கு தோழர் ஹோ சி மின் சொன்னார், அரசியலிலும் அப்படிதான். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருசிறு துரும்பை அசைத்தால் ஒரு காடே அதிரும் என்றார். இன்று தமிழீழத்திற்குள் புகுந்துவிட்ட சிங்கள எலிகளைக்கூட நாம் கருவி கொண்டு துரத்தி அடிக்க முடியும். ஆனால் அதை பிடிப்பதற்கான காலத்தையே நமது தேசிய தலைமை முடிவு செய்திருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு நமது தேசிய தலைவரின் நடைமுறை வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது. நமது தேசிய தலைவரின் முடிவெடுப்புத் திறன் எவ்வளவு தொலைநோக்கோடு இருந்திருக்கிறது என்பதை கடந்தகால போர் நிறுத்தத்தில் அவர்கள் செய்த நடைமுறை செயல்களிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை உணர்ச்சி வசப்பட்டு, நமது தேசியப்படை தமிழீழத்தைத் தவிர்த்து, சிங்கள மக்களின்மீது தாக்குதல் நடத்தியிருக்குமேயானால், இன்று உலகளவில் தமிழீழத்திற்கு கிடைத்துவரும் ஆதரவுக்கு சிதைவு ஏற்பட்டிருக்கும். இன்று உலக நாடுகள் அங்கே நடந்தது இனப்படுகொலை என்று அறிவிக்கின்றன. நடைபெற்றது இன விடுதலைக்கான போராட்டம் என்று அறியத் தொடங்கி இருக்கின்றன. நமது தேசிய தலைவரின் அரசியல் முதிர்ச்சி, சரியான திட்டமிடல், இந்தகால அரசியலின் தேவையை இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகிறது. தமிழீழ மக்கள் விடுதலையோடு வாழ்வதற்காக தம்மை இழக்கவும் தயாராக இருக்கிறார்கள். உடல் மற்றும் உளவியல் ரீதியாக அவர்கள் இன்று ஒன்றுதிரண்டு போராட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக தமது உயிரையும் உடமைகளையும் இழப்பதற்கு மிகவும் விருப்பத்தோடு களம் கண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வு ஏற்பட அல்லது இந்த உணர்வு ஏற்பட ஒரேஒரு காரணம்தான் இருக்கிறது, அது போர்க்களத்திலே தேசிய தலைவர் எடுத்த அரசியல் முடிவுதான். அந்த முடிவே இன்று உலகத்தை ஒன்றிணைத்திருக்கிறது. சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான அணிச்சேர்ப்பை உறுதி செய்திருக்கிறது. எந்த நிலையிலும் தமிழீழம் வீழ்ந்து விடாமல் இருக்க, அந்த நகர்வே நமக்கு துணைபுரிந்தது. தோழர் லெனின் அடிக்கடி ஒரு வார்த்தையைச் சொல்லுவார். ஆயுத எழுச்சி என்பது ஒரு கலை என. ஆகவே, அந்த கலையை கையாளும் விதத்தை நம் தேசிய தலைவர் நன்கு அறிந்திருந்தார். தேவை ஏற்பட்டபோது அந்த கலையை அவர் சிறப்பாக பயன்படுத்தினார். தேவை இல்லாதபோது அதை மிக நேர்த்தியாக நிறுத்தி வைத்தார். காரணம், அவசரம் காட்டுவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ ஆயுதக்கலை என்பது சாதாரணமானது கிடையாது. காரணம் அதில் எவ்வளவு வெற்றி கிட்டுமோ அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை மிக சரியாக தேசிய தலைவர் வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டதால் தமது மக்களைவிட மேலானது ஒன்றுமில்லை. வெறும் கௌரவத்திற்காக தமது மக்களை இழக்க தயாராக இல்லை என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். ஆயுத எழுச்சிக்கான சூழல் மீண்டுமாய் ஏற்பட வேண்டுமென்றால் அது தேசிய ராணுவத்தை கடந்து, மக்கள் ராணுவமாக மாற்றப்படும்போது கட்டாயமாக்கப்படும் என்பதை பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. ஆகவே, இப்போது நாம் கருவி களத்திலிருந்து சற்று திரும்பி, அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றோம். உலகெங்கும் நமது அரசியல் தன்மைகளை நிலைநிறுத்த, நமது அரசியல் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, தமிழ் தேசிய அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், தனக்கான விடுதலையை நாம் பெற்றுக் கொள்வதற்கு வெறும் சாதாரண போர் முறைகளோடு நமது போராட்டம் நின்றுவிடக் கூடாது. அதைக்கடந்து மக்கள் எழுச்சியை உண்டாக்க வேண்டும். நாடு தழுவிய கிளர்ச்சியை செய்வதற்கு சரியான பரப்புரை கட்டமைப்புகளை நாம் படைக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஒரு சிறிய நாடு, குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு தேசிய இனம், பலம் பொருந்திய ராணுவத்தை எதிர்த்து வெற்றியடைய முடியும் என்பதை நமது தேசிய தலைமை சரியாக அறிந்த காரணத்தினால் இப்பொழுது தமிழீழத்தை சர்வதேச அளவில் அமைப்பதற்கான திட்டமிடல் மிக சிறப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த நடைமுறை செயல்களின் மூலமே தமிழீழ குடியரசிற்கான சாத்தியங்கள் மேலும் அதிகரிக்க முடியும். நமக்கான விடுதலை என்பது, தானாக நிகழப் போவதில்லை. அதை போராடித்தான் பெறவேண்டும் என்பதை நமது உறவுகள் உணர வேண்டும். எந்த நிலையிலும் போராட்டம் இல்லாத வெற்றி நிலைப்பது கிடையாது. நாம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் கிடைத்த படிப்பினைகளை வருங்கால போராட்டத்திற்கு செம்மையாக பயன்படுத்த வேண்டும். நமக்கான விடுதலைக்கு நாம் போராடுவதற்கு மனரீதியாக நாம் பக்குவப்பட வேண்டும். எமது தாய்நாடு எந்த நிலையிலும், வேறொருவன் கையில் அடிமையாக இருப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்கின்ற உணர்வு, தமிழ் உறவுகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். இந்த மனநிலையோடு நாம் களத்திற்கு வரும்போது, நமது வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். இரத்தக் கரை படிந்த இனவெறியர்கள் நம்மைப் பார்த்து கோரை பற்களில் வழியும் குருதி கரையோடு சிரிக்கலாம். நமது இன ஒடுக்குமுறைக்கெதிரான சமருக்கு துரோகம் செய்த தமிழ் உறவுகளே நம்மைப் பார்த்து நகைக்கலாம். ஆனாலும் அதையும்தாண்டி நமது வெற்றி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது வெற்றியின் தொடக்கம் பக்கத்தில் வந்துவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது ஐந்து அடிப்படை கட்டமைப்புகளை. ஒன்று, நமது தேசிய அளவிலான ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பை முன்னிருத்துவது. இரண்டு, கடந்த காலத்தில் கடும் துயருக்கு உள்ளான நமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. மூன்று, நமக்கான விடுதலையை வென்றெடுக்க நாமே மக்கள் குழுவை உருவாக்க, தேசிய தலைமையோடு இணக்கம் காட்டுவது. நான்கு, உலக நாடுகளில் உள்ள மக்களோடு இணைந்து நமது அடிமையின் நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் போராட்டத் தளத்தில்தான் இதுவரை நாம் செயல்பட்டோம் என்பதை வலியுறுத்துவது. அவர்களை நமது களத்திற்கு துணைக்கு அழைப்பது. ஐந்து, தேசிய தலைமையின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்று அதன்படி நடப்பது. இவைகளின் மூலம் நமது வெற்றியை நம்மால் உறுதியாக தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது நமது கட்டாய கடமை. இதைநாம் மறக்கக்கூடாது. இது நமது தேசிய தலைவரின் தத்துவத்திலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள்.

உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை: இதயச்சந்திரன்

இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது எனவும், தமிழ் மக்கள் தமது அடித்தளத்தில் இருந்து பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், கொள்கைகளைக் கைவிட்டு கீழிறங்கிச் செல்வது தற்காலத்தில் சாதகம் போன்று தென்பட்டாலும், தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனச்சுட்டிக்காட்டினார். "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஒருபோதும் கீழிறங்கிச் சென்றிருக்கவில்லை எனவும், தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசத்தைக்கொண்ட தேசிய இனம் என்ற அடிப்படையில் இருந்து பேச்சுக்கள் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவும், மகிந்த அரசாங்கமும் கூட்டுத்திட்டம் தீட்டியிருப்பதாகத் தெரிவித்த ஆய்வாளர் இதயச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்திற்குள் முடக்கி, அவர்களின் பேரம்பேசும் திறனை மழுங்கடிப்பதே இந்தியாவின் நோக்கம் எனவும், வட மாகாணத் தேர்தல் நடந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் போட்டியிடுமா? என்பதை இப்போதே தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டும் ஒன்றுபோல் காணப்பட்டாலும், அவை வேறான விடயங்களைக் கூறுவதாகவும், மாவீரர்கள், பொதுமக்களின் இழப்புக்களின் பின்னால் தமிழ் மக்கள் அடிபணிவு அரசியலுக்குள் சென்று விட்டார்களா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த அவர், சமஸ்டிக்காக இவ்வளவு உயிர்களும் இழக்கப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியை முன்வைத்தும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய இதயச்சந்திரன், இரண்டு தேர்தல் அறிக்கைகளையும் விரிவாக விளக்கிக் கூறினார். சிங்கள தேசத்தின் இறைமையைப் பகிர்வதைப் பற்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிப்பதாகவும், ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் விஞ்ஞாபனம் தமிழ் மக்களிற்கு தனியான இறைமை இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனையே வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், போராட முடியாதவர்களே அடிபணிவு அரசியலை மேற்கொள்ள முனைவர் எனவும் தெரிவித்தார். தனிநபர் வசைபாடல்கள் இடம்பெறுவது ஆரோக்கியம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் இதயச்சந்திரன், இதனை பிரதேசவாதமாகத் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறியதுடன், திருகோணமலையின் ஒரு பகுதியை அநுராதபுரத்துடன் இணைத்துவிடும் திட்டம் அரசுக்கு இருப்பதால், திருகோணமலையில் ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.