வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

செஞ்சோலைசெல்வங்களின் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு !!!!.....

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட எமது செல்வங்களை நாம் தொலைத்த நாள்

சிங்கள இனவாத அரசின் இன வெறி தாண்டவம் அரங்கேறிய நாள் .உலகமே மௌனமாக இருந்த நாள் ..எமது செல்வங்களின் ஆத்மா சாந்தியினை வேண்டி நாம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்வோம் ..நாம் எமது செல்வங்களை புதைக்கவில்லை மாறாக விதைத்து உள்ளோம்...

உறவுகளைச் சந்திப்பதில் சிக்கல்கள்!!!!.....


கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்றுவருவதில் அவர்களது குடும்ப உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இராணுவத்தினரிடம் சரணடைந்த 11 ஆயிரம் பேரில். எண்ணாயிரம் பேர் வரையில் வவுனியா, திருகோணமலை, பொலநறுவை போன்ற பல் வேறுமட்டங்களில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புனர் வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.


இவர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சியளிப்பதற்காகவே இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடத்திற்கு மேற்பட்ட நிலையில் இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை குறிப்பாக பொலனறுவை மாவட்டத்திற்கு சென்று பார்ப்பதில் அவர்களின் குடும்ப உறவினர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.


போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வின் விளைவாக அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையில் அரசாங்கம் வழங்குகின்ற நிவாரண உதவிகளில் மாத்திரம் தங்கியிருக்கின்ற இந்தக் குடும்பங்கள் பெருமளவு நிதி செலவு, 5 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து தமது கணவன்மாரை, அல்லது மகன்மாரை பார்க்க வேண்டியிருக்கிறது. இளம் மனைவியர் தம்முடன் சிறு குழந்தைகளையும் அழைத்துச்செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.


இந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, மற்றும் மனித உரிமைகளுக்கான இல்லம் போன்ற அமைப்புக்கள் இவர்களின் பிரயாணத் தேவைக்காக உதவ முன்வந்துள்ள போதிலும் அவர்களின் தேவை அளப்பரியதாக இருக்கின்றது. இந்த நிலையில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள மூன்று புனர்வாழ்வு நிலையங்களுக்கும், தாங்கள் அடிக்கடி சென்று அவர்களைப் பார்ப்பதற்கான உதவிகளைச் செய்வதைவிட அவர்களை விடுதலை செய்வதால் தங்களுக்கும் தமது குடும்பங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்

கப்டன் அருணன்

அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.


நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.

அருணன் எமது வீட்டுக்கு வரும் நாட்கள் மிகமிக இனிமையாகக் கழியும். எந்தநேரமும் ஏதாவது பகிடிவிட்டுக் கொண்டேயிருப்பான். சிலநாட்களின் பின்னர்தான் அருணனின் கூத்துப்பாடல்கள் பாடும் திறமை எமக்குத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் வரும் நாட்களில் தவறாது சில பாடல்கள் பாடிக்காட்டித்தான் செல்லமுடியும்.
அப்போது ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. எதிரி கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அங்கிருந்து அவனை மேலும் முன்னேறவிடாமல் புலிகளின் அணிகள் தடுத்து நின்றிருந்தன. அப்போது அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப் படையணியின் ஒரு கொம்பனி நிலைகொண்டிருந்தது. அந்த அணியிலே அருணனும் இணைத்துக் கொள்ளப்பட்டான்.

காணி பிடிக்கிறார் கெளதம புத்தர் உறுதிக்காரச் சிவன் எங்கே?........

வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடக்கின்றதோ இல்லையோ கெளதம புத்தபிரான் மட்டும் வடக்கில் அதிக காணிகளைக் கைப்பற்றி விட்டார்.


வீதிகள், குளங்கள், அரசமரங்கள், கடற் கரையோரங்கள் எங்கும் கெளதம புத்தபிரானின் குடியிருப்புகள் எதற்காக இப்படி? அறத்தின் வழியில் அகிம்சையின் பாதையில் மனுக்குலத்தை வழிப்படுத்த போதித்த கெளதம புத்தபிரானுக்கு சிவனின் குடும்பம் குடியிருக்கும் வடக்கில் ஏன் இத்தனை விருப்பு?


ஓ! தன் பக்தர்கள் வடபுலத்தில் குடியேற்றப் படுவதற்கு முன்னதாக தான் குடியிருக்க வேண்டும் என்பதற்காகவா?பரவாயில்லை, நிலையில்லாத இந்த உலகில் இவை மட்டும் நிலையாகிவிடுமா என்ன? இவையெல்லாம் தற்காலக் கவலைகள் தான். யுத்தத்தில் தோற்றவனைவிட வென்றவனுக்கே அதிக கவலை என்று கூறியவர் கெளதம புத்தபிரான்.


எனவே அவரின் காணி சுவீகரிப்புக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனா லும் சொந்தக்காணிக்காரச் சிவன் குடும்பம் தம் வீட்டில் குடியிருக்க முடியாமல் இருப்பதை நினைக்கும் போதுதான் மனம் வெதும்புகின்றது.எத்தனையோ சைவாலயங்கள் யுத்தத்தால் உடைந்து சிதைந்து போயுள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரற்று பூசை வழிபாடுகள் ஏதும் அற்று இருண்டு போயுள்ளன.


நிலைமை இதுவாக இருக்கும் போது அவசர அவசரமாக கெளதம புத்தபிரான் காணி பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்து மதத்திற்கும் பெளத்தத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.இந்து மதக்கடவுள்கள் அதாவது சிவனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் விகாரைகளில் வைத்து வழிபாடாற்றப்படுகின்றனர்.


அதேநேரம் சமய கிரியை முறைகளிலும், அனுஷ்டானங்களிலும், சிற்ப சாஸ்திரங்களிலும் இந்து-பெளத்த கொள்கைகள் ஒத்துப் போவதை அவதானிக்க முடியும்.நிலைமை இதுவாக இருக்கும் போது வட புலத்தில் அதிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக வன்னிப் பெருநிலப்பரப்பிலும், யாழ். குடாநாட்டிலும் புத்தபிரானை பிரதிஷ்டை செய்வதென்பது உள்நோக்கம் கொண்டதாகும்.


எனவே சமயங்கள் கூறும் அறவழிகளைப் பின் பற்றுவதே மனித குலம் மேன்மையுறுவதற்கான வழியாகும். இதைவிடுத்து சமயத்தால், இனத்தால் மக்களை பிரித்து விரோதங்களை தோற்றுவிப்பதை தெய்வங்கள் ஒரு போதும் ஏற்பதும் இல்லை; அவை நிலைக்க விடுவதும் இல்லை.


ஆகையால் இலங்கை திருநாட்டில் அவரவர் வாழ்வியல் கோலங்களைப் பின்பற்றவும் தத்தம் சமய விழுமியங்களைத் தாம் வாழும் இடங்களில் நிலைநிறுத்தவும் கூடிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இல்லையேல் பிரதிஷ்டைகளுக்கு தனியான பாதுகாப்பு அமைப்புகள் தேவையானவையாக இருக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் .நல்லூர் முருகனுக்கு நேர்த்திக் கடன்!!!.....


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நல்லூர் முருகனுக்கு நேர்த்திக் கடன் வைத்திருந்தாராம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஸ எம்.பி. இந்நேரத்தின் கடனை நிறைவேற்றினால் ஆலயத்தைத் தரிசனம் செய்து வழிபாடு செய்வார் என்று முருகப் பெருமானுக்கு சத்தியம் செய்திருந்தாராம். இந்நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.பரிவாரங்கள் சகிதம் நல்லூர்க் கந்தனைத் தரிசித்தார். விசேட பூசை வழிபாடுகளையும் மேற்கொண்டார்.

இலங்கை ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா , மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸன் பெர் னாண்டோ ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.

சத்தியசோதனையில் சாதனை படைக்க வாரீர்!.....


வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம்.ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத்தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நான்கு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்த அரசு திட்டந்தீட்டியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்.

என்ன செய்வது? எங்கும் போக்கிரித்தனங்கள் தலை விரித்தாடத் தொடங்கினால் தேவையற்ற-ஆரோக்கிய மற்ற மற்றவர்களின் மனங்களை நோகடிக்கக் கூடிய வெறுவிலித்தன விமர்சனங்களே தாண்டவம் ஆடும்.இப்போதும் நாம் கூறுகின்றோம். அன்புக்குரிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே! தமிழ் மக்களின் நலன் கருதி ஒன்றுசேருங்கள். ஓரணியில் திரளுங்கள். அப்போது தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வெளிச்சத்துக்கு வந்து சேரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகிய மூவரும் வன்னிக்குச் சென்றனர்.

இராணுவ சீருடைகளை காணோமாம்?............

கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மினி முகாம் ஒன்றிலே கடமையாற்றி வரும் படைவீரர்களது இராணுவ சீருடைகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .துவைத்து காயப் போடப்பட்ட சீருடைகளே களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சீருடைகளை களவாடிய நபர்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.பிரதேச மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். களவாடப்பட்ட இராணுவச் சீருடைகள் , சந்தேகத்திடமானவர்களின் நடமாட்டங்கள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு படையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.