வியாழன், 18 மார்ச், 2010

அமெரிக்கா திட்டம்?

அணு குண்டு தயாரிப்பதற்கான திட்டத்தில் ஈரான் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாற்றிவரும் அமெரிக்கா, அதன் அணு சக்தி மையத்தைத் தகர்க்கும் குண்டுகளை இந்தியப் பெருங்கடலில் உள்ள தனது இராணுவத் தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரிட்டன் நாளிதழ் தெரிவித்துள்ளது. லண்டனில் இருந்து வெளிவரும் சண்டே ஹெரால்ட் எனும் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இச்செய்தியின்படி, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஈரானின் அணு சக்தி மையங்களை குண்டு வீசி அழிக்க, பங்கர் பஸ்டர்ஸ் என்றழைக்கப்படும், பூமிக்குள் ஊடுருவி பின் வெடிக்கும் சக்தி வாய்ந்த குண்டுகளை இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவில் உள்ள தனது இராணுவத் தளத்திற்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவின் கான்கர்ட் துறைமுகத்திலிருந்து 10 கப்பல்களில் புளூ-110, ஸ்மார்ட் என்றழைக்கப்படும் சக்தி வாய்ந்த குண்டுகள் 195ம், 2,000 பவுண்ட் எடை கொண்ட புளூ-117 குண்டுகளும் கப்பலில் ஏற்றப்பட்டு இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், இதனை குண்டு வீச்சி விமானங்களில் ஏற்றிச் சென்று ஈரான் அணு உலைகை அமெரிக்கா தாக்கியழிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத முயற்சியை முறியடிக்க அதன் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்

ஐரோப்பிய ஒற்றை நாணயமான யூரோவின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகளைக் கைகொள்வது பற்றியும் யூரோ நாணயத்தைப் புழங்கும் 16 நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்துகிறது. யூரோ நாணயத்தைப் புழங்கும் ஒரு நாடு தொடர்ந்து விதிகளை மீறிவந்தால், அந்த நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்வதையும் கடைசி வழியாக யூரோ நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜெர்மன் சான்செல்லர் அங்கேலா மெர்க்கெல் கூறியுள்ளார். கிரேக்கம் தற்பொது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடிதான் யூரோ நாணயம் இதுவரை சந்தித்ததிலேயே மிகப் பெரிய சவால் என மெர்க்கெல் வருணித்துள்ளார். யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நினைத்துப்பார்த்திராத ஒரு விஷயத்தைப் பரிசீலிக்கவும் ஜெர்மனி தயார் என்பதை மெர்க்கெலின் பேச்சு காட்டுவதாக பெர்லினில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தமிழ் இன அழிப்பு!

இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசாதாரண குழந்தை என்கின்ற தவறான தகவல் வழங்கப்பட்டு கர்ப்பிணித் தாய்கள் நம்பவைக்கப்பட்டு கபடத்தனமான கருக்கலைப்பு நடந்து வருதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவலை உறுதிசெய்கின்றது. மேலும் இளம்பெண்கள் கருத்தடை செய்துகொண்டால் நிவாரணம் சலுகைகள் வழங்குவதாகவும் ஏமாற்றப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றதாகவும், நாளொன்றுக்கு 12 பெண்கள் இந்த ஏமாற்று குடும்பக்கட்டுப்பாட்டு முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துறை சார் தகவல் தரவல்ல அதிகாரிகள் வாயிலாக அறியமுடிகின்றது. இதுவரையில் சுமார் 480 பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இலங்கை அரசின் இந்த இன அழிப்பு நடைவடிக்கைக்கு Populations Sewa Lanka எனப்படும் நிறுவனம் Population control எனும் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஆதரவளித்து வருவதாகவும், மேற்படி நிறுவனமே தனது தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி சலுகைகளை ஆசை காட்டி பட்டினியால் வாடுகின்ற ஏழைத் தாய்மாரை இன அழிப்பின் நவீன வடிவ செயற்திட்டத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அறியமுடிகின்றது. எனவே தொண்டு நிறுவனங்கள் எனும் போர்வையில் செயல்படும் அரச நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நிறுவனங்கள் மீது தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அத்தியாவசியமாகின்றது.

இவர்கள் யாருக்காக தம்மை தாமே ...............?எல்லோரும் மறந்துவிட்டோமா?அல்லது சோரம் போய் விட்டோமா ?

சிங்களக் கிராமமாக மாற்றப்படும் முறிகண்டி!


இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்கள், இரும்புத் தளபாடங்கள், மரங்கள் என்பன அங்கு குவிக்கப்பட்டுள்ளன. குளிரூட்டும் தன்மையுடைய தகரங்களே கூரைகளுக்காக அங்கு பயன்படுத்தப்படவுள்ளன. அந்தப் பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கக் கூடிய வர்த்த வருமானங்களை முழுமையாக ஆக்கிரமிப்பது என்துடன் திருமுறுகண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை தனிச் சிங்களப் பாடசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்று அங்கு சென்று திரும்பிய படைத் துறை உயர் அதிகாரி ஒருவர் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை முறிகண்டியில் இருந்து படிப்படியாக நகரும் ஆக்கிரமிப்பின் போது சிவபாத கலையம் என்ற பாடசாலையும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அங்கு அனுப்பப்பட்டு கொட்டில்களில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடசாலைக்கான பெயரானது சிங்கள வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கலையகம் என்ற விடயத்தினை சுருக்கியே பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் அறிவியல் நகர்க்கிராமங்கள் ஏற்கனவே மாவீர்களது குடும்பங்களின் குடியிருப்பாகவும், தமிழீழத்தின் பல்வேறு நிர்வாக அலுவலங்களையும் வறிய மக்களுக்கான குடியிருப்புக்கான காணிகளையும் உள்ளடக்கியவையாக விளங்கின. இதே போன்று அந்தக் கிராமங்களின் மத்தியிலேயே தமிழீழ காலநிலை அவதான நிலையம், அன்புச்சோலை மூதாளர் பேணலகம், மருத்துவக்கல்லூரி, தமிழ் பல்கலைக்கழகம், ஊடகக் கல்லூரி உட்பட்ட கட்டுமாணங்கள் செயற்பட்டும், செயற்படுவதற்கான பணிகள் பூர்த்தியடைந்த நிலையிலும் போர் இடப்பெயர்வுகள் காரணமாக அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இந்த நிலையில் முறிகண்டியில் தொங்கி படிப்படியாக அறிவியல் நகர் கிராமங்களையும் முறுகண்டிக்கு அருகாக இருக்கும் வசந்தபுரம் கிராமத்தையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான நகர்வுகளாவே இந்த சிங்கள ஆக்கிரமிப்புச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவருவதாக உணரமுடிகின்றது.

மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை .....

இந்திய - இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும், அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இதற்குப் பரிசாகத் தான் கச்சத் தீவு இலங்கைக்கு இந்தியாவால் விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் இருக்கும் பகுதிகளில் ஒரு பகுதியைச் சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது. இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்குவதற்குச் சிங்கள அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையின் பெட்ரோலிய வளர்ச்சித் துறை அமைச்சரான ஏ.எச்.எம்.பெளசி இந்த விவரங்களை அண்மையில் அறிவித்துள்ளார். இந்த எண்ணெய் எடுக்கப்படுமானால் தென் ஆசியாவில் செல்வ வளமிக்க நாடாக இலங்கை மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை இப்போது ஆண்டுக்கு 1,53,000 கோடி ரூபாய் பெறுமான எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எதிர்காலத்தில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை மாறும் என அவர் கூறினார். இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட பகுதி இந்திய அரசுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக கெய்ரன் இந்தியா என்னும் கம்பெனியின் துணை நிறுவனமான கெய்ரன் லங்கா என்னும் நிறுவனத்திற்கு இந்த குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 450 கோடி ரூபாயில் எண்ணெய் எடுக்கும் பணிகளைத் தொடங்க இருக்கிறது. இந்திய அரசில் உயர் பதவி வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிக முக்கிய அமைச்சர் ஒருவரின் குடும்பத்திற்குக் கெய்ரன் லங்கா நிறுவனம் சொந்தமானது. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அந்த நிறுவனம் சம்பாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் தொடங்குவதற்கு முன்ன தாகவே இந்த குத்தகை அந்த நிறுவனத் திற்குச் சிங்கள அரசினால் வழங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அமைச்சரின் முயற்சியால்தான் இந்திய அரசு முழுமையாக சிங்கள அரசுக்கு ஆயுத உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மன்னார் வளைகுடாப் பகுதியில் சுமார் 1000 கோடி பேரல் அளவுக்கு மேல் எண்ணெய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய அமைச்சருக்குச் சொந்தமான இந்த நிறுவனமும், சீனாவும் இன்னும் பிற நாடுகளும் மன்னார் வளை குடாவில் கிடைக்கும் எண்ணெயைப் பங்கு போடுவதற்கு சிங்கள அரசு முழுமையாக ஒப்புதல் தந்துள்ளது. 1974ஆம் ஆண்டு இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட உடன்பாட்டிற்கு இது எதிரானது. இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டாக இந்தப் பகுதியில் எண்ணெய் எடுக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அதைக் குத்தகைக்குக் கொடுக்க இலங்கைக்கு உரிமையில்லை. ஆனால் இந்த உடன்பாட்டை மீறி இலங்கை இவ்வாறு செய்வதை ஏன் என்று கேட்பதற்கு இந்திய அரசு முன்வராததற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அமைச்சரே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த குத்தகையைத் தன் குடும்ப நிறுவனத்திற்கு கொடுத்து விட்ட காரணத்தினால் தான் இந்த அமைச்சர் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பதும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.

பொட்டம்மானைப் பார்த்தீர்களா ?

தேசிய இளைஞர் இயக்கம் என்ற போர்வையில் கடந்த சில மாதங்களாக தமிழ் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு வருவதாக அறிகிறது. இலங்கை புலனாய்வுப் பிரிவினருடம் இயங்கி வரும் சிலரால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் இணையும் இளைஞர்கள் மாலையில் வீடுசெல்ல அனுமதிக்கப்படுவதால், அவர்கள் பெற்றோருக்கு என்ன நடக்கிறது என்பது சரிவரத் தெரிவதில்லை எனவும் கூறப்படுகிறது. சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு, பெரும் தொகைப் பணமும் வழங்கப்படுவதோடு மட்டுமால்லாது, இவ்வாறு சேர்க்கப்பட்ட இளைஞர்களைக் கொண்டு நடமாடும் போராளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ் இளைஞர்களைக் கொண்டு அப்பிரதேசக்தில் நடைபெறும் நிகழ்வுகள், விபரங்கள் மற்றும் சம்பவங்களையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் திரட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என்று அடிக்கடி விசாரித்துவரும் இராணுவத்தினர் பொட்டம்மான் குறித்தும் விபரங்களை கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக பொட்டம்மான் குறித்து இலங்கை புலனாய்வுத்துறையினர் நேரடியாகவே பல விசாரணைகளை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியல் வாதிகள் இவர் இறந்துவிட்டார் எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்ற போதிலும், இலங்கை புலனாய்வுத்துறையினரும், இந்தியாவும் இதனை நம்ப மறுக்கின்றது என்பதே ஜதார்த்தமாகும்.

உலக அரசியல் நிலவரம்தான் தமிழ் மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுகிறது - மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர்

தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 ஆவது கூட்டத்தொடரில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக கல்வி அபிவிருத்தி குழு உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. சபையின் உறுப்பினர்களுக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழிவுகள் என்பன தொடர்பில் நாம் தகவல்களை வழங்கியுள்ளோம். பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களை நாம் (பந்தி 86) வரவேற்கிறோம். இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான விதிகள் மீதான வன்முறைகள் தொடர்பான விவகாரங்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இனஅழிப்பு நடவடிக்கைகளும், வேறு சந்தர்ப்பங்களில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் பூகோள அரசியல் ஈடுபாடுகள் அது தொடர்பான விவாதங்களை புறம்தள்ளியுள்ளன. துருக்கியை எடுத்துக்கொண்டால், 3,000 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து குர்திஷ் இன மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிலர் மீண்டும் திரும்பியபோதும், அவர்களின் நிலமைகள் மிக மோசமாகவே உள்ளன. இந்த காலகட்டத்தில் துருக்கிக்கு பிரதான ஆயுத விநியோகத்தை அமெரிக்காவே மேற்கொண்டு வந்தது. எனவே குர்திஷ் இன மக்களின் எதிர்காலம் என்பது சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் பலரும் இன்றுவரை முகாம்களில் உள்ளனர். இந்த நிலமைகளை பிரதிநிதிகள் விவாதிக்க வேண்டும் என பந்தி 68 இல் நாம் கேட்டிருந்தோம். மனிதாபிமான நடவடிக்கைகளின் குறைபாடுகள், நாட்டின இறைமை என்ற போர்வையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிடாது தடுத்தல், உயர் பாதுகாப்பு வலையத்தின் பிரகடனம் போன்றவை தமிழ் மக்களை அவர்களின் செந்த இடங்களுக்கு திரும்புவதையோ அல்லது தமது சொத்துக்களை பார்வையிடுவதையோ தடுத்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிறீலங்கா அரசு சிங்கள மக்களையும், படையினரையும் குடியமர்த்தி வருகின்றது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது. இந்த இடம்பெயர்வுகள் மனிதநேய விதிகளின் கீழ் போர்க்குற்றங்களாகவே கருதப்படும் என பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அது குறித்து செயற்திறனற்று இருப்பது மனிதாபிமான விதிகளை மோசமாக பலவீனப்படுதும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தவர்களும் எமது நாட்டில் தஞ்சம் கோரலாம்

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தது ஒரு தடையாகாது என பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் அமைப்பில் 1992 ம் ஆண்டு இணைந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அமைப்பில் பல பதவி நிலைகளை வகித்திருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வன்னியில் இருந்து காடுகள் ஊடாக கொழும்புக்கு நகர்த்தும் நகர்வுப் பிரிவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார். அத்துடன், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் கட்டளை தளபதி பொட்டம்மானின் பாதுகாவலராகவும், புலனாய்வுப் பிரிவின் தாக்குதல் அணியின் இரண்டாம் நிலை தளபதியாகவும் பணியாற்றியிருந்தார். அவர் கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு பிரதேசத்துக்கு புலனாய்வுக்கான அனுப்பப்ட்ட போது, அவரது நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் கண்காணிக்க ஆரம்பித்த நிலையில், அவர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றுள்ளார். அங்கு, தாம் இலங்கைக்கு திரும்பும் பட்சத்தில், தாம் ஒரு தமிழன் என்ற அடிப்படையிலும், விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் அரசாங்கத்தினால் துன்புறுத்தப்படலாம் என கூறி, அவர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். அவரது மனுவினை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய உயர் நீதிமன்றம், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினராக இருப்பினும், அவர் அரசியல் தஞ்சம் கோர உரித்துடையவர் என தெரிவித்தது. எனினும் அவருக்கான அரசியல் தஞ்சம் வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர் இலங்கையில் இடம்பெற்ற பாரிய யுத்தத்தில் பங்கு கொண்டுள்ள நிலையில், யுத்த குற்றங்களிலும் பங்குடையவராகிறார். எனவே அவருக்கு அரசியல் தஞசம் வழங்க முடியாது என அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றத்தில் அவரது பங்கு குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா வீரபுரத்தில் றிசாத் பதியுதீனின் அராஜகம்

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு றிசாட் பதியுதீனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வீரபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் இந்த அராஜக அமைச்சரின் செயல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் குறித்த பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளுக்கு மேல் றிசாத் பதியுதீனின் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற பதியுதீனின் ஆதரவாளர்கள் இது குறித்து தொலைபேசி மூலம் பதியுதீனுக்கு அறிவித்துள்ளனர். இதனைச் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற அதிரடிப் படையினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரை தனியே அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த பதியுதீன் அந்த ஆதரவாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நான் கொலை செய்தால் என்னைக் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்று அதிகாரத்துடன் பேசிய றிசாத் பதியுதீனின் செயல் தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. தமிழரின் ஆயுத பலம் அழிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த அராஜகவாதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.