வியாழன், 18 மார்ச், 2010

சிங்களக் கிராமமாக மாற்றப்படும் முறிகண்டி!


இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்கள், இரும்புத் தளபாடங்கள், மரங்கள் என்பன அங்கு குவிக்கப்பட்டுள்ளன. குளிரூட்டும் தன்மையுடைய தகரங்களே கூரைகளுக்காக அங்கு பயன்படுத்தப்படவுள்ளன. அந்தப் பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கக் கூடிய வர்த்த வருமானங்களை முழுமையாக ஆக்கிரமிப்பது என்துடன் திருமுறுகண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை தனிச் சிங்களப் பாடசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்று அங்கு சென்று திரும்பிய படைத் துறை உயர் அதிகாரி ஒருவர் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை முறிகண்டியில் இருந்து படிப்படியாக நகரும் ஆக்கிரமிப்பின் போது சிவபாத கலையம் என்ற பாடசாலையும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அங்கு அனுப்பப்பட்டு கொட்டில்களில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடசாலைக்கான பெயரானது சிங்கள வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கலையகம் என்ற விடயத்தினை சுருக்கியே பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் அறிவியல் நகர்க்கிராமங்கள் ஏற்கனவே மாவீர்களது குடும்பங்களின் குடியிருப்பாகவும், தமிழீழத்தின் பல்வேறு நிர்வாக அலுவலங்களையும் வறிய மக்களுக்கான குடியிருப்புக்கான காணிகளையும் உள்ளடக்கியவையாக விளங்கின. இதே போன்று அந்தக் கிராமங்களின் மத்தியிலேயே தமிழீழ காலநிலை அவதான நிலையம், அன்புச்சோலை மூதாளர் பேணலகம், மருத்துவக்கல்லூரி, தமிழ் பல்கலைக்கழகம், ஊடகக் கல்லூரி உட்பட்ட கட்டுமாணங்கள் செயற்பட்டும், செயற்படுவதற்கான பணிகள் பூர்த்தியடைந்த நிலையிலும் போர் இடப்பெயர்வுகள் காரணமாக அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இந்த நிலையில் முறிகண்டியில் தொங்கி படிப்படியாக அறிவியல் நகர் கிராமங்களையும் முறுகண்டிக்கு அருகாக இருக்கும் வசந்தபுரம் கிராமத்தையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான நகர்வுகளாவே இந்த சிங்கள ஆக்கிரமிப்புச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவருவதாக உணரமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக