புதன், 22 செப்டம்பர், 2010

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..? திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன். அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன

வெறுமை நிறைந்த மனங்களில்

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..

பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.