சனி, 24 ஏப்ரல், 2010

அபூர்வம் ஆனால் நிஜம் !இது தான் ஐந்து தல நாகம் கண்ணால் இதனை பார்க்கும் போது நாம் ஏன் எமது நாட்டின் விடிவை பார்க்க முடியாது ...........?

கர்ணனுக்கு அங்கதேசம் மனோ கணேசனுக்கு… எங்கே தேசம்!

கொடைக்குக் கர்ணன் என்றுதான் நாம் அறிந்துள்ளோம். அந்தக் கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் துரியோதனன். இராஜகுமாரர்களுக்கான வில்வித்தைப் போட்டியில் கர்ணனும் கலந்து கொள்கின்றான். போட்டியில் கலந்து கொள்ள வந்த இராஜ குமாரர்கள் அத்தனை பேரும் கர்ணனைப் பார்த்து தேரோட்டியின் மகன் என ஏளனம் செய்கின்றனர். இராஜகுமாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய வில்வித்தைப் போட்டியில் தேரோட்டியின் மகன் எங்ஙனம் பங்கேற்ற முடியும் என சர்ச்சை எழுகின்றது.கர்ணன் நாணிக்கோணி தலைகுனிந்து நிற்கிறான். அந்த நேரத்தில் சபை நடுவே எழுந்து கர்ணனை நான் இராஜகுமாரன் ஆக்குகின்றேன் என துரியோதனன் முழுங்குகின்றான். கர்ணனை இராஜகுமாரனாக்கினால் அவனுக்கு தேசம் எங்கே என்று வினா எழுகிறது.‘அங்கததேசம்’ என்று துரியோதனன் மொழி கின்றான். துரியோதனனின் மொழிதலோடு கர்ணனுக்கு முடிசூட்டப்படுகிறது. இராஜகுமாரன் ஆனான் கர்ணன். இங்குதான் துரியோதனனின் உயர்ந்த குணம் வெளிப்படுகின்றது. கொடை வள்ளலான கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் அல்லவா துரியோதனன். அவன் கொடை கொடுக்காவிடில் பார்த்த சாரதிக்கு கொடை கொடுப்பதற்குக் கூட கர்ணன் இருந்திருக்க மாட்டான். எனவே கொடையில் சிறந்தவன் யாரென்றால் துரியோதனன் என்றுதான் கூற வேண்டும். இதை நாம் கூறினால் இதெல்லாம் இப்போது எதற்கு என்று நீங்கள் நிச்சயம் கேட்பீர்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகின்றது. மனோ கணேசன் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி அவரின் காலை வாரிவிட்டது.தமிழ் மக்களுக்காக துணிந்து குரல் கொடுத்தவர் மனோகணேசன். இந்த உண்மையை தமிழ் மக்கள் மறத்தல் ஆகாது. மனோகணேசன் நாடாளுமன்றம் சென்றால் மச்ச இயந்திரத்தை வீழ்த்தும் வல்லமை தமிழருக்குக் கிடைக்கும். எங்கே மனோ கணேசனுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ‘அங்கததேசத்தை’ கொடுக்குமா என்று பார்ப்போம். கொடுத்தால் நன்மை நமக்கே.

தொடரும் கருணாநிதியின் துரோகம்


ஒரு கோட்டை சிறியதாக்க அதன் அருகிலேயே ஒரு பெரிய கோடு போட்டால் அது சிறியதாகி விடுகிறது.இதையே தான் கலைஞர் கருணாநிதி வேத வாக்காகக் கொண்டிருக்கிறார் போலும்.ஒரு துரோகச்செயலை மூடி மறைக்க இன்னொரு துரோகம் அதைவிட பெரியதாய் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். ஈழப்பிரச்சினையில் கடிதம் எழுதி எழுதியே மூண்டெழுந்த உணர்வலைகளைக் காலம் தாழ்த்தியபடி இந்தியா செய்த அத்தனை துரோகத்துக்கும் ஒத்து ஊதிக்கொண்டிருந்த இந்தக் கலைஞர் ,பேரனுக்கும் மகனுக்கும் மந்திரி பதவி வாங்க முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் தில்லிக்கு சென்று சண்டையிட்டார். முத்துக்குமார் உயிரை ஈகம் செய்த பொது மாணவர் பிரச்சினை வந்துவிடக் கூடாதென்று கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுப்பளித்து மாணவர் சமுதாயத்தை இழிவு படுத்தினார். இப்படி தன் சக்திக்கு மீறி துரோகமிழைத்து வரும் கருணாநிதியிடம் நளினியின் ஆயுள் தண்டனையை குறைக்கப் பரிந்துரை செய்யும் கருணை மனு வந்தபோது தன்னிடம் சகல அதிகாரங்கள் இருந்த போதும் அதை மறுத்து தண்டனைக்குறைப்பு செய்யவில்லை. பொய் வழக்கில் சிறையிலிருக்கும் நளினிக்கு கருணை காட்டாத கலைஞர் தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் சிறையிலிருந்த குற்றவாளிகளுக்கு கருணை காட்டினார். நளினியின் கருணை மனு மீதான வழக்கு விசாரணையின் போது நிதிபதி கேட்ட கேள்விக்கு அரசு வழக்கறிஞர் பதில் அளித்ததைக் கேட்டு நீதிமன்ற வளாகமே சிரித்தது. நளினி விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நளினியின் தாயார் வசிக்கும் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியதைக்கேட்டு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது தான். விசாரணையில் தான் பிடியில் இருக்கும் கைதி ஒருவரிடமே தான் நினைத்ததை வாக்குமூலமாக வாங்கும் சக்தி படைத்த காவல்துறை ஆய்வாளர் தரும் வாக்குமூலம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள பெரிய ஞானம் தேவையில்லை தானே. நளினியிடமே பொய் வாக்குமூலம் வாங்கி பத்தொன்பது ஆண்டுகள் சிறை வாசம் வாங்கிக்கொடுத்த கயவனின் வாக்குமூலம் மட்டும் நீதியோடு இருக்குமா என்ன ? பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துத் திருப்பியனுப்பியதை மறைக்க சிறையிலிருக்கும் நளினியிடம் கைபேசி இருந்ததாகப் பொய்வழக்குப்போடுகிறார் கருணாநிதி. நளினி வெளியே வர இருந்த அத்தனை வாய்ப்புகளையும் தட்டிவிட்டு அவரை மென்மேலும் சிறைவாசியாக்கி விடுதலைக்கான எந்த வாய்ப்பும் அந்ததாய்க்கு கிடைக்கவிடாமல் செய்த கருணாநிதியின் துரோகம் முடிவே இல்லாமல் தொடர்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

சிறிலங்காவின் ‘பெருமை’யை கூட்ட இந்திய அரசின் ‘முயற்சி’ - துணை போகும் பாலிவுட்!

இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy - IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழா ஐஃபா விருது வழங்கு விழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஐஃபா விருது விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும். 2000வது ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும், 2001இல் தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியிலும், 2002இல் மலேசியாவிலும், 2003இல் தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004இல் சிங்கப்பூரிலும், 2005இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006இல் துபாயிலும், 2007இல் இங்கிலாந்தின் யார்‌க்சயர் நகரிலும், 2008இல் பாங்காக்கிலும், 2009ஆம் ஆண்டு மக்காவிலும் ஐஃபா விருது விழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வந்த நாளில் இருந்தே இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், கொழும்புவில் இதை நடத்துவதற்கான பின்னணிக் குறித்தும் பல விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், ஐஃபா விருது விழாவை நடத்த அயர்லாந்து அரசும், தென் கொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் ஐஃபா அமைப்பை மிகவும் நெருக்கின. இதற்குக் காரணம் இந்த விழா நடைபெறும் நகரம், அந்த நாட்டு அரசிற்கு மிகப் பெரிய நிதிச் செலவு ஏதுமின்றி, ஐஃபா விழா நடப்பதாலேயே அந்த நகரை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இது அந்த நாட்டிற்கு சுற்றுலா வருகையை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாக, இந்த விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர். சிங்கப்பூரில் ஐஃபா விழா நடக்கும்போது 30,000 சுற்றுலா பயணிகள் கூடுதலாக அந்நாட்டிற்கு வந்தனர். மூன்றாவதாக, இந்த விழாவின்போது ஏற்படும் வணிக ஒப்பந்தங்கள். பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழா நிக்ழ்ச்சி தொலைக்காட்சியின் மூலம் 50 முதல் 60 கோடி பேர் வரை கண்டுகளிப்பதால் அந்நாட்டி‌ன் சுற்றுலா மையங்களையும், இயற்கை எழிலையும் காட்டி, அதன் மூலம் திரைப்படப் படபிடிப்புகளுக்கு வாய்ப்பை மேம்படுத்தலாம். இதுவே இவ்விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முன்னேறிய நாடுகள் கூட அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா அதற்காக ஐஃபாவிற்கு ரூ.50 கோடி அளிப்பதாகக் கூட உறுதியளித்திருந்து என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், சற்றும் எதிர்பாரா வண்ணம் இந்த விழாவை கொழும்புவில் நடத்த இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன பின்னணி என்றும் கேள்வி எழுந்தது. இந்தியப் பின்னணி! பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்க அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து இன்று வரை சிறிலங்க அரசிற்கு உலகளாவிய அளவில் அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்கடி அதிகரித்து வருகிறது. தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு தட்டிக்கழித்த காரணத்தினால், அந்நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு அளித்துவந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்துவதென முடிவெடுத்து அறிவித்தது. அயர்லாந்து தலைநகரில் கடந்த ஜனவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நடந்த உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம், தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், வன்னி முகாமில் நடந்த மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை மெய்‌ப்பிக்கின்றது என்றும் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு எதிரான தமிழினப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஐ.நா.வின் நிதிச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக உள்ளவரும், தனது வாழ்வில் காந்தியின் அகிம்சை கொள்கையை கடைபிடித்து வருவதற்காக விருது பெற்ற பிரான்சுவா ஹூடார்ட் தலைமையிலான நிரந்தரத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியதன் காரணமாக, அதுவரை அசையாமல் இருந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன், போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்தார். தனது நாட்டு மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய சிறிலங்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தி வரும் நிலையில்தான், அந்த நாட்டின் ‘பெருமை’யை கூட்ட, இந்திய அரசின் உந்துதலால் ஐஃபா விருது விழா கொழும்புவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்க அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இந்திய அரசின் ‘முயற்சி’யே என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் போகிறதா? சிறிலங்க அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா விதத்திலும் துணை போனது இந்திய அரசு என்பது உலகளாவிய உண்மையாகிவிட்ட நிலையில், அதனை மறைப்பதற்கு இந்த விழாவை நடத்த இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுட் துணை போகிறதே என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்ச்சியலையாகும். ‘இலங்கை ஒரு அமைதியான, அழகிய தீவு’ என்றும், அருமையான சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்றும் கூறி, அந்நாட்டை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அங்கு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மறைக்க நடக்கும் முயற்சியே இந்த விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திய அரசின் துணைகொண்டு தமிழினப் படுகொலை செய்து முடித்த சிறிலங்க அரசிற்கு, அதனை மறைக்க உதவவே ஐஃபா விருது வழங்கு விழாவை அங்கு தள்ளியுள்ளது டெல்லி அரசு. இல்லையென்றால் லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்கள் தொங்கிக்கொண்டு பின்னால் வர, உலக நாடுகளின் சினத்திற்கு ஆளாகி நிற்கும் இலங்கையை ஐஃபா எதற்குத் தேர்ந்தெடுக்கிறது? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகள் நடந்த அந்த இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாய விசாரணையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுவரும் சூழலில், இனப்படுகொலைக்கு காரணமான அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக தங்கிக்கொண்டு விழா அறிவிப்பை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை. இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டது அமிதாப் பச்சனுக்கோ அல்லது இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கோ தெரியாதா? சிறிலங்க கடற்படையினரால் 400க்கும் அதிகமான தமிழ்நாட்டின் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறைத்து அந்நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்திய அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகம் துணை போகலாமா? தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது. சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டி‌ல் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா? உள்நாட்டுப் போரினால் அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் தங்கள் குடும்ப உறவுகளையும், வாழ்ந்த இடங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக‌த் திரிகின்றனர் என்பதை அறிந்துதான் அந்த விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லது எதையுமே அறியாத ஒரு கனவுலகில் அமிதாப்பும் பாலிவுட்டும் மிதக்கின்றனவா? புரியவில்லை. தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர். சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் மீனவர்களின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய இரணம் இன்னமும் ஆறவில்லை. அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏங்கித் தவிக்கிறது. இதனைப் புரியாத பாலிவுட், கொழும்புவில் விருது விழாவை நடத்தச் செல்லுமானால், அது இதுநாள் வரை போற்றப்படும் உறவிற்கு பாதமாகவே முடியும்.

கண்ணகி பிறந்த இந்தியாவின் புதிய உலக ஒழுங்கு முறை ஏற்படுத்திய தாக்கம் ...........!

ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோ, பெண்ணுக்கோ, கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது. அதில் இளைஞர்களிடம் உங்கள் வருங்கால மனைவி கற்புடையவராக இருந்திருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் வருங்கால மனைவி கற்போடு இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றனர். 37 சதவீதம் பேர் மட்டும் கற்புடைய பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்றனர். ஆணோ, பெண்ணோ திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று 37 சதவீதம் பேர் கூறினார்கள். லக்னோவை சேர்ந்த நேகர்பர்த் (வயது 28) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கூறும் போது “ஒரு பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியமானது. ஆனால் நல்ல குணத்துக்கும் கற்புக்கும் சம்பந்தம் கிடையாது” நமக்கு யார் பொருத்தமானவள் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர அவள் கற்போடு இருக்கிறாளா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார். அங்கீதாசர்மா (24) என்ற இளம் பெண் கூறும் போது, “திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையை அவர் கற்போடு இருக்கிறாரா? என்று சோதனை நடத்த முடியாது. எனது கற்பு பற்றி கேள்வி எழுப்புபவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார். லக்னோவை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ரேணு மாக்கர் கூறும் போது “என்னிடம் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்களில் 80 சதவீதம் பேர் ஏற்கனவே “செக்ஸ்” உறவு வைத்துள்ளனர்” என்றார்.

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்


கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது. கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது. வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள் இவ்வாலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம். 01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பொது மக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார். 02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது. 03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ஆம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

டக்ளஸ் தேவானந்தாக்கு ஆப்பு வைத்த மகிந்த‌

நேற்று அறிவிக்கப்பட்ட‌ அமைச்சரவையில் கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டவர் வன்னியில் தமிழின விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழரது வாக்குரிமையையும் தடுத்த ரிசாட் பதியுதீன் ஆவார். அதே நேரத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். டக்ளஸ் தேவானந்தாவிற்கு சிறுகைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டிருப்பது டக்ளஸை அவமானப்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அரசிற்கு முண்டு கொடுத்த டக்ளஸைப் பின்தள்ளி அண்மையில் அரசில் இணைந்து கொண்ட பதியுதீனுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது குறித்து ஈ.பி.டி.பி வட்டாரங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் அங்கயன் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடி உறுப்பினர்களை முன்னிறுத்த திட்டமிட்டுள்ள ராஜபக்ச சகோதரர்கள் அதற்கு முன்னோடியாகவே இந்தப் பதவிக்குறைப்பு வேலைத்திட்டத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்துள்ளனர் என்கின்றனர் அவர்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் கொழும்புச் செய்தியாளர்கள்

தமிழகத்தில் ஈழத்தமிழ்மகன் கப்பம் கோரி கடத்தல் ....

தமிழகத்தில், ஈழத்தமிழ்மகன் கப்பம் கோரி கடத்தப்பட்டுள்ளார். தாயகத்தில் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஸ்ரீலங்காப்படையினரின் ஒட்டுக்குழுவினரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுவரும்நிலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதேபாணியிலான கடத்தல் சம்பவம் ஒன்று தமிழகத்தின் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் நீலாங்கரையினை அடுத்து கானத்தூரில் குடும்பத்துடன் வசித்துவந்த 35 அகவையுடைய ஜெயமோகன் என்பவரது வீட்டிற்கு சென்ற இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களும் இரண்டு சென்னை தமிழ் இளைஞர்களும், தாங்கள் கியூப்பரிவு காவல்துறையினர் எனவும் விசாரிக்க வேண்டும் என கூறி ஊர்தியில் கடத்தப்பட்டு மாமல்லபுரம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கிருந்துகொண்டு பத்து இலட்சம் ரூபா இந்தியப்பணம் கப்பம் கோரப்பட்டுள்ளது. இன்நிலையில் அவரது துணைவியால் கியூப்பிரிவு காவல்துறையினருக்கு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தின் கியூப்பிரிவு காவல்துறையினர் சென்று கடத்தப்பட்ட ஜெயமேகனை மீட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கடத்தப்பட்ட ஜெயமோகன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ள இன்நிகழ்வு தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை தோற்றிவித்துள்ளது. தாயகத்தில் ஸ்ரீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் இதே பாணியிலான கடத்தல்களை தற்போது மேற்கொண்டுவரும் நிலையில் ஒட்டுக்குழுவினரின் செயற்பாட்டாளர்களாலேயே இக்கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்?


விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும். அதாவது கற்பழிப்பு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின. இவ்விதம் சமூகச் சீரழிவை அடியோடு அழித்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும். இப்போது அவர்கள் இல்லாத துணிவில் சமூகச் சீரழிவு யாழ். குடாநாட்டில் எழுந்து நின்று ஆடத் தலைப்பட்டுள்ளது. கற்பழிப்பு, களவு, கொள்ளை, தனிமையில் இருப்பவர்களை கொலை செய்தல், கோஷ்டி மோதல், மதுபோதை, சந்திச் சண்டித்தனம் என எல்லாம் தலை விரித்தாடுவதை காணும் போது நெஞ்சம் வெடிக் கின்றது. நிலைமை இப்படியே போகுமாயின் தென்பகுதியில் இருக்கக் கூடிய பாதாள உலகக் கோஷ்டி யாழ். குடாநாட்டில் உருவெடுக்கலாம் என்ற அச்சம் நியாயமானதாகவே இருக்கும். எனவே யாழ். குடாநாட்டில் உருவெடுக்கும் கலாசாரச் சீரழிவை அச்சமான வாழ்வை மூலவேருடன் பிரட்ட யாழ்ப்பாணச் சமூகம் முன்வரவேண்டும். இதுவிடயத்தில் நீதி பரிபாலனத்தின் பங்கோ மிகவும் அவசியமானதாகும். காவல்துறையினர் சட்டத்தை நிலைநாட்ட திடசங்கற்பம் பூண வேண்டும். இலஞ்ச ஊழல், பக்கச் சார்பு என எவையும் பொலிஸாரிடம் இருக்குமாயின் சமூகச் சீரழிவில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்ளவும் வலுவடையவும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொலிஸாரின் முன் பாரிய பொறுப்பு உள்ளது. பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தங்கள் நிர்வாகக் கடமைகளை நேர்மையுடன் செய்யும் போது அவர்களின் கட்டுப்பாட்டில் கடமையாற்றும் பொலிஸார் சுயலாபம் தேடுவதில் இறங்க மாட் டார்கள். இதற்கு அப்பால் சமூகச் சீரழிவில் ஈடுபட்டவர் களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது தொடர்பில் யாழ்.குடாநாட்டு சட்டத்தரணிகள் ஒரு தீர்க்கமான முடிபினை எடுக்க வேண்டும். பணத்திற்காக எவரையும் மீட்டுவிடுவது என்னும் கொள்கை அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் பாதிக்கும். இவை யாவற்றுக்கும் மேலாக சமூக உறவு, இளைஞர்களுக்கான வழிகாட்டல், வேலைவாய்ப்பு, புரள்வான வாழ்விலிருந்து மீள்வதற்கான ஆத்மீகச் சிந்தனை, பெற்றோரின் கண்காணிப்பு, பாசமான குடும்ப உறவு, நம்பிக்கை தரக்கூடிய நட்பு என பல வகை சமூக நலமேம்பாடுகளையும் சமநேரத்தில் சமாந்தரமாக கட்டியயழுப்புவது கட்டாயமானதாகும். இது விடயத்தில் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலாசார அலுவலர்கள், பிர தேச சபைகள், அரச சார்பற்ற அமைப்புகள் போன் றன அனைத்தும் தனித்து கூட்டாக இணைந்து பணியாற்றுமாக இருந்தால் கலாசார சீரழிவை மூல வேருடன் பிடுங்கிவிடுவது மிக எளிதாகும். இதனைச் செய்வதற்கு அரசியற்பலம் உதவி தேவையென்பது மறுப்பதற்கில்லை.

விடுதலைப் புலிகள் மீது பொய்யான போர்க்குற்ற வழக்குகள்: இந்தியா ஆலோசனை


சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுப்பதற்கு சிறீலங்கா அரசு முனைந்து வருவதுடன், இது தொடர்பாக கைதான விடுதலைப் புலிகள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். தாம் கூறும் பொய்யான போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற தவறான தகலைத் தெரிவித்தே, இவ்வாறான முயற்சியில் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தோ்தலில் மகிந்த தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்திய அரசின் ஆலோசனையில் இவ்வாறான செயற்பாடுகள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் புரிவதாக்க்கூறியே சிறீலங்கா அரசினால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டவர்களால் இவ்வாறான போர்க்குற்றம் சுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப் புலிகள் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கான உதவிகளைப் புரிவதன் ஊடாக இந்திய – சிறீலங்கா அரசுகளின் இந்த முயற்சியைத் தடுக்க முடியும் என நம்பப்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.................!


தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. கடைசியாக எமக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பமாக நாடு கடந்த தமிழீழ அரசு விளங்குகின்றது. அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொதுத் தேர்தலின் பின்னர் தமிழீழத் தனிநாட்டிற்கான ஒரு அரசு நாடு கடந்து அமையப் போகின்றது என்பது ஈழத் தமிழினத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாக அமையப் போகின்றது. நயவஞ்சகத்தனத்தால் எமது விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களிடத்தில் தனிநாட்டுக்கான அவா- விருப்பம்- தேவை அற்றுப் போய்விட்டது என்ற சிங்களத்தின் கபடத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு. புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்குகொண்டு- அலைஅலையாக நீங்கள் அளிக்கும் வாக்குகள் சிங்களத்தின் உச்சிமண்டையை மீண்டுமொரு தடவை பிளந்தே தீரும். புலம்பெயர் தமிழர்களே! இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென சர்வதேசத்தின் முன் சிங்களம் செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள். சிங்களத்தின் கொடூர கரங்களிலிருந்து தப்பித்து நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்து உங்களது உரிமை அவாவை உலகிற்கு எடுத்துக் கூறுங்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதென்று சொன்னவர்களின் முகத்தில் ஓங்கி அறையுங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் அண்ணன் உருத்திரகுமாருக்கு கைகொடுங்கள். அவரது உன்னதமான பணி எழுச்சிகொள்ள வழிசெய்யுங்கள். நாங்கள் பிரிந்து நிற்பது இனியும் வேண்டாம். புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வடிவம் கொடுப்போம். எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவன் நேரடியாக வராவிட்டாலும் அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம். சிந்திப்போம்...விரைந்து செயற்படுவோம்..நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதன் மூலம் தனிநாட்டுக்கு சிறந்த அத்திபாரத்தை இடுவோம்.