திங்கள், 22 மார்ச், 2010

எங்கள் வரலாற்றுப் பதிவுகளை காப்போம்

எமக்கு முன்னுள்ள முக்கிய தேவை பற்றி இந்த கட்டுரை ஊடாக ஆராயவிருக்கின்றோம். முப்பது ஆண்டுகால மிகப் பெரிய உலகம் வியக்கும் வகையிலான தமிழனத்தின் உன்னதப் போரும் அதன் பின்னரான தற்போதைய மாறுபட்ட சூழலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே நகர்ந்துவருகின்றது. அந்தப் போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட விலைகள் சராசரியாக மூன்று இலட்சம் வரையில் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த இடத்தில் நாங்கள் குறிப்பிடுவது விடுதலைக்காய் நேரடியாக வீழ்ந்த மாவீரர்கள் மற்றும் மக்கள். இந்த இடத்தில் ஒரு கனதியான பணி தற்போது உலகப் பரப்பில் வாழ்ந்துவருகின்ற எமது தமிழ் மக்களிடம் உள்ளது. அது மிகவும் இலகுவான பணி ஆனாலும் அது நெறிப்படுத்தல் இல்லாமையால் கவனிக்கப்படாமலேயே கிடப்பது வேதனைக்குரியது. எங்கள் விடுதலைப் போருக்கான அர்ப்பணிப்புக்கள் அதன் பின்னான காலச்சுழற்சி என்பவற்றில் எமது விடுதலைப் போரையும் மக்களையும் வைத்து பிழைப்பு நடத்த பலர் முற்படுகின்றமை அல்லது உண்மையான உள்ளார்ந்த உணர்வு நிலைப்பாட்டுடன் கூடிய முன்னெடுப்புக்கள் என மாறுப்பட்ட சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டாலும், எங்களுக்கான நீண்ட நோக்குடன் கூடிய பார்வைச் செலுத்தவேண்டியவர்களாக அனைத்து மக்களும் இருக்கின்றோம். எங்கள் உயிர்கள், எங்கள் இரத்தம், எங்கள் அங்கங்கள், எங்கள் அர்ப்பணிப்புக்கள், எங்கள் சொத்துக்கள் என எங்களுக்கான அனைத்தும் இழந்தும் மீளமுடியாத துயர் எங்களவர்களின் பிரிவு மட்டும் தான் என்பதை தற்போது நிலத்திலும் புலத்திலும் அனைவரும் புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்கள் போரும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் எங்களை உலகம் இன்று திரும்பிப் பார்க்கின்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எங்கள் போராட்டப் பயணம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது, அதன் வியக்கவைக்கின்ற பிரமிப்புக்கள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை என்பதை கால ஓட்டத்தில் நாங்கள் வார்தைகளால் மட்டும் தான் சொல்லப்போகின்றோமா? என்ற இக்கட்டான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான காரணம் எங்கள் கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமான நேரடியான ஆவணங்கள் எல்லாம் வன்னிலேயே இருந்தன. அனைத்தும் நிலங்களில் தாழ்க்கப்பட்டும் பல எரிக்கப்பட்டும், பல கைவிடப்பட்டும் உள்ளன. கருத்துரைகள், ஒளிப்படங்கள், ஒளிநாடாக்கள், பாடல்கள், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், காலப் பதிவுகள், வரலாறுகள், வரலாற்றுச் சான்றுகள், எங்கள் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், பிரமிப்புக்கள், எங்கள் தெருக்கள், எங்கள் கோவில்கள், எங்கள் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்காக வீழ்ந்தவர்களின் வரலாற்றுப்பதிவுகள், புகைப்படங்கள் எல்லாமும் எங்கள் கைகளில் இல்லை. அனைத்துப் பதிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான இணையம் அல்லது இணைய சேமிப்பு நடவடிக்கையினை புலம் பெயர் தளத்தில் இருக்கின்ற தாயகத்தையும் தாயக மக்களையும், விடுதலைப் போரையும் உண்மையாக நேசிக்கின்ற எவராது முன்வந்து மேற்கொள்ளவேண்டும். இந்த நடவடிக்கையினை தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்ததாகவோ யாருக்கும் முண்டு கொடுப்பதற்கான நடவடிக்கையாகவோ மேற்கொள்ளாமல் உண்மையான தேசநலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்டால் எங்களால் இழக்கப்பட்ட ஆவணங்களில் மிகக் கூடிய அளவினை உலகப்பரப்பில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சின்னசின்ன பதிவுகளை, புகைப்படங்களை, ஒலி, ஒளிப்பதிவுகளை, முன்னைய வெளியீடுகளை, புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இருக்கும் மாவீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் குறிப்பிட்டதற்கு அமைய யாராவது முன்வந்து ஆவணச் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உங்களிடம் இருக்கின்ற தகவல்களின் பிரதிகளை வழங்கியும் எங்கள் தொலைந்துபோகும் வரலாற்று ஆவணங்களை மீள ஒன்று திரட்டி சேமிப்பதற்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும்.

கொந்தளிப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கையின் எதிர்காலம்

உள்நாட்டிலும் குழப்பமான நிலை. வெளியேயும் மேற்குலகின் அதிகரித்து வரும் நெருக்கடிகள்,அழுத்தங்கள். அத்துடன் இந்தியாவா சீனாவா அமெரிக்காவா தங்கள் கால்களை பலமாக ஊன்றிக் கொள்வது என்ற போட்டிகள். இந்தப் போட்டிகள் உள் நாட்டில் உருவாக்கும் குழப்பங்கள். அரசியல் கட்சிகளின் அணிப் பெருக்கம். வெளியே புலம் பெயர்ந்த தமிழர்களைக் கையாள முற்படும் மேற்கின் போக்கு என ஒரு வெப்ப வளையம். இதில் யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் எங்கே, எப்படி நிற்பது என்று தெரியாது தடுமாறிக் கொண்டும் போட்டியிட்டுக் கொண்டுமிருக்கும் நிலைமை. இதற்காக சுருக்குக் கயிறுகளோடு சில நாடுகளும் கத்தி, பொல்லு, குண்டாந்தடிகளோடு சிலநாடுகளும் சவக்குழி, பொறிக் கிடங்குகளோடு சில நாடுகளும் என்று ஒரு மாபெரும் பொறிவெளியில் இலங்கை இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிந்து விட்டது என்று யாரும் ஆறுதலடைய முடியாதபடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எல்லாமே எதிர் மறை நிகழ்ச்சிகள். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா விடாது’ என்பது உலகப் பொதுக்கூற்றல்லவா! முன்னர், நிலைமைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கு போர் இருந்தது. புலிகள் இருந்தார்கள். இலங்கை அரசாங்கம் கொஞ்சம் விலகினால் புலிகளுக்கு நெருக்கமாக வந்து (இந்த நெருக்கம் இரகசிய வழிகளிலானது) அரசாங்கத்தைப் பணியவைக்கும் உத்தியை இந்த நாடுகள் பயன்படுத்தின. அல்லது ஆட்சியிலிருக்கும் தரப்புக்கு எதிராக இருக்கும் தரப்பைப் பலப்படுத்திப் பணிய வைக்க முயற்சித்தன. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதங்களிருக்கவில்லை. எது வாய்ப்பான தரப்பு என்பதே கவனிக்கப்பட்டது. புலிகள் இல்லாத வெளியில் உருவாகியிருக்கும் புதிய சூழலில் இலங்கையின் மீதான ஆதிக்கப் போட்டிகள் மும்முரமாகி விட்டன. இந்தியா புலிகளில்லாத இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை முழுமையாக்க முயற்சிக்கிறது. இதில் அது ஏறக்குறைய பாதி வெற்றியை அடைந்துமிருக்கிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒரு வித இணைநிலை உறவைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவுக்கு இனிப்பான முறையிலேயே அது கூடுதலாக நடந்து கொள்கிறது. இதேவேளை நீண்ட காலத்துக்குப் பின்னர் (புலிகள் இல்லாத சூழலில்) தமிழ் - சிங்கள அதிகார வர்க்கங்களோடு ஒரு இணைநிலை உறவை இந்தியா இப்போது கொண்டுள்ளது. (இந்த நிலை ஒரு அமைதித் தீர்வுக்கு இலங்கையைக் கொண்டு செல்ல உதவும். அதற்கான சூழலையே இந்தியா உருவாக்குகின்றது என்று சொல்வோர் உள்ளனர். இது வேடிக்கையானது. இலங்கையில் அமைதி நிலவ ஒரு போதுமே இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான காரணங்கள் பலவுண்டு. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்). இப்போது இந்தியாவுக்கு மகிந்த அரசோடும் உறவு. தமிழ்க் கூட்டமைப்போடும் உறவு என்ற ஒரு புதிய சூழல். இது இந்தியாவைப் பொறுத்து வெற்றியே. ஆனால் ஒரு எல்லைவரையான வெற்றிதான் இது. இதற்கு எதிரில் பொறிகளோடும் அதிக முனைப்புகளோடும் மேற்குலகம் இருக்கிறது. திரை மறைவிலான முயற்சிகளோடு சீனா உள்ளது. உலக அரங்கில் நிகழும் அதிகரித்த வர்த்தகப் போட்டிக்கு இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். இதனால் அந்தத்தரப்புகள் தமக்கு வாய்ப்பான இடங்களின் வழியாகக் காய்களை நகர்த்துகின்றன. கைகளை வைக்கின்றன. கால்களை ஊன்ற முயற்சிக்கின்றன. போர் முடிந்த நிலையில் நிச்சயமாக ஒரு அமைதி இலங்கையில் இதுவரையில் எட்டப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம், அகதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருதல், போர் நிகழ்ந்த பகுதிகளை அவற்றின் பாதிப்புகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புதல், சனங்களுக்குப்; புனர்வாழ்வழித்தல், அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுதல் என்று நிலைமைகள் மேம்பாடடைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அப்படி எதுவும் எளிதில் நடந்து விடப்போவதுமில்லை. அதற்கு இந்த நாடுகள் அனுமதிக்கப் போவதுமில்லை. போர் மனித உரிமை மீறல்களுடன்தான் நடந்தது என்று இந்த நாடுகள் அனைத்துக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் போரின்போது இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா நாடுகளும் எந்தப் பேதங்களுமில்லாமல் தாராளமாக உதவின. ஆனால், போருக்குப் பின்னர் அகதிகளுக்கு உதவவும் மீள் கட்டுமானம், புனரமைப்புப் போன்றவற்றுக்கு உதவவும் இவை தயாரில்லை. இது எப்படியிருக்கிறது? தமக்கு சார்பாக நடந்து கொண்டால் தாராள உதவி என்ற கொள்கை அன்றி வேறென்ன? இதற்குத் தனியே மகிந்த ராஜபக்ஸ மட்டும் காரணமல்ல. அவருக்கு இந்தக் குறைபாடுகளில் பெரும் பங்கிருந்தாலும் அவருக்கு அப்பால் ஏனைய அரசியல் தரப்பிருக்கும் சகலருக்கும் இவற்றில் பொறுப்பும் பங்குமுண்டு. போர் முடிந்த பின்னர் இரண்டு பெரும் தேர்தல்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால், போர் முடிவுற்றதைத் தவிர நாட்டில் நிலவும் வேறு எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்ததாக இல்லை. பதிலாக இன்னும் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியென்றால், என்னதான் நடக்கிறது? இனி என்னதான் நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதுதான் சுவாரஷ்யமான பகுதி. கொலனி ஆதிக்கத்தின் போது இலங்கை போன்ற நாடுகளை பிரித்தானியா பிரித்தாளும் தந்திரோபாயத்தின் மூலம் கையாண்டது. அங்குள்ள மக்களை இன, மத, மொழி அடிப்படைகளில் வௌ;வேறு சமூகங்களாகப் பிரித்தாண்டது. இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயம் மேற்குலகின் கைவந்த கலை. இதைப் பின்னர் இந்தியா கையாளத் தொடங்கியது. இதன் வெவ்வேறு வடிவங்கள்தான், ஐ.தே.க ஆட்சியிலிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தமக்குச் சார்பாகக் கையாள்வது. அது சாத்தியப்படாதபோது ஜே.வி.பியைக் கையாள்வது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தால் அதை வளைத்துப் போடுவது. முடியா விட்டால் எதிர்த்தரப்பைக் கையாள்வது. (சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1980 களின் நடுப்பகுதியில் ஜே. ஆரால் சிதைக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி யை இந்தியா கையாண்டதை இங்கே நினைவு கூரவேண்டும்). அல்லது தமிழ்க்கட்சிகளை, இயக்கங்களைக் கையாள்வது. இது இந்தியாவின் நடவடிக்கைகள் என்றால், போரின்போது நிகழ்ந்து கொண்டிருந்த சிதைவுகளை மையமாக வைத்துக் கொண்டு மேற்குலகம் ஒரு பக்கத்தாலும் சீனா இன்னொரு பக்கத்தாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இன்னொரு பக்கத்தாலும் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தின. அதாவது போர் எப்போதும் எதிர் எதிரான இரண்டு தரப்புகளைக் கொண்டது என்பதால் இவை இப்படித் தமது காரியங்களை இடையில் நின்று மேற்கொள்ள முடிந்தது. இந்தப் பிரித்தாளும் தந்திரமானது நேரடியான கொலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து அறுபது ஆண்டுகளான பின்னரும் தொடர்கிறது. அதுதான் கவலைக்குரியது. இப்போது இலங்கை அரசாங்கம் மேற்குலகுடன் வெளிப்படையான முரண் நிலைக்கு வந்துள்ளது. மேற்குலகமும் இலங்கையை வெளிப்படையாகவே மிரட்டவும் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடுதான், புலம் பெயர் தமிழர்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பிரித்தானியப் பிரதானிகள் கலந்து கொள்வதும் இவை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் முக்கிய கவனமெடுத்துக் கருத்துரைப்பதுமாகும். இன்னும் தங்கள் தேவைகளுக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாள முயற்சிக்கின்றது இந்த உலகம். எல்லாமே அவரவர் நலன்களுக்காக மட்டுமே நடக்கின்றன. இல்லையென்றால், வன்னிப் போரின்போது ஈழத்தமிழர்கள் கொட்டும் பனியில் நின்று போரை நிறுத்தும் படியும் அங்கே கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றும் படியும் வேண்டிய போது அதையெல்லாம் கண்டு கொள்ளாத மேற்குலகம் இப்பொழுது நடக்கும் இந்தச் சிறு கூட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறதே. இது சிரிப்பாக இல்லையா? மேற்குலகின் இந்த திடீர் மாற்றம் சில தமிழருக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் இப்போது தரலாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பொதுவாகவே தமிழ் சிங்கள மக்களிடம் ஒரு குறைபாடிருக்கிறது. தமிழர்கள் வெளிச்சக்திகளால் நெருக்குவாரப்படும் போது சிங்களர்கள் சந்தோசப் படுவார்கள்;. அதாவது தமிழர்களின் மூக்குகள் உடைபடும் போது சிங்களவர்கள் சிரிப்பார்கள். சிங்களவர்களின் மூக்கு உடைபடும் போ தமிழர்கள் சிரிப்பார்கள். ஆனால், இரண்டு தரப்பினரும் தலைகளும் உடைபடுகின்றன என்பதை இவர்களில் பலரும் கண்டு கொள்வதில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். இந்திய நெருக்கடி அல்லது அழுத்தம் என்பது இப்போது மறைமுகமானது. சிநேக ரீதியானது போல தோற்றம் காட்டுவது. காரணம் மகிந்த ராஜபக்ஸ ஒரு சுதேசியாகத் தோற்றம் தருபவர். அத்துடன் பிராந்திய நாடுகளுடனான உறவில் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தைக் கொண்டவர். மேலும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்குலக நெருக்கம் என்பது புலம் பெயர் தமிழர்களின் மூலமாக இலங்கைத் தமிழர்களை அனுசரிக்க வேண்டி வரலாம் என்ற எச்சரிக்கையுணர்வை உடையவர். மட்டுமல்ல, வருகின்ற காலத்தில் மேற்குலகத்துக்குச் சவாலாக பொருளாதார ரீதியில் சீனாவும் இந்தியாவும் எழுச்சிபெற்று வருவதையும் சரியாக விளங்கிக் கொண்டு காரியமாற்றுபவர் மகிந்த ராஜபக்ஸ. எனவே அவர் மேற்குலகத்தை விடவும் இந்தப் பிராந்தியத்துடனான உறவையே அதிகம் விரும்புகின்றார். இதை மேற்குலகம் விரும்பவில்லை. அதனால் அவரை அது நெருக்குகிறது. பழிவாங்கத்துடிக்கிறது. இந்த நெருக்கடியை தனியே நின்று அவரால் ஒரு போதுமே சமாளிக்க முடியாது. அதற்கு தமிழ் சிங்கள உறவுக்கான அடிப்படைகளை அவர் சீராக்க வேணும். இல்லை என்றால் இந்தியாவிடமோ சீனாவிடமோ சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போதும் மேற்குலகம் இலங்கையைச் சும்மா விட்டு விடாது.

பிரதான கட்சிகளே தமிழர்களைக் கொன்றன

கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர். இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தன. எனினும் ஜே.வி.பி. இதுவரையில் ஒரு தமிழரையேனும் கொலை செய்யவில்லை. தற்போது அழைக்கப்பட்டு வருவது போல, ஜே.வி.பி. ஒன்றும் இனவாத கட்சி அல்ல. கடந்த 1983ஆம் ஆண்டு, ரோஹன விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. செயல்பட்ட போது, யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கட்சிக் காரியாலயங்களைக் கொண்டிருந்தது. அதனையடுத்து சுமார் 27 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் தனது கிளைக் காரியாலயத்தை ஆரம்பிக்கிறது” என்றார். மேற்படிக் கூட்டத்தின் போது, வெறும் 40க்கும் குறைவான மக்களே வருகை தந்திருந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்களின் உறவினர்களே என்றும் கூறப்படுகிறது.

MTV - SIRASA தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்குள்ளானது.

அமைச்சர் ஒருவரின் அடியாட்களான குழுவொன்று மகாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான பிரேவூட் இடத்தில் அமைந்துள்ள MTV , SIRASA TV தொலைக்காட்சிகளின் தலைமைக்காரியாலயத்தின் மேல் தாக்குதல் நாடத்தியுள்ளனர். சுமார் 100 பேர் கொண்ட குழு அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நாடத்தியுள்ளது. இத்தாக்குதலில் கட்டடத்தின் கண்ணாடிகள் பலவும் நொருங்கியுள்ளதுடன், அங்கு தரிந்துநின்ற பல வாகனங்களும் சேதமாகியுள்ளதாக தெரியவருகின்றது. காடையர்களின் தாக்குதலை எதிர்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் திருப்பித்தாக்கியபோது அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளனர். சம்பவ இடம்திற்கு விரைந்;த பொலிஸார் கலககாரர்களில் சுமார் 16 பேரைக் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர்களின் சிலர் தாம் அமைச்சர் மேவின் சில்வாவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர். சம்வத்தை தொடர்ந்து எதிர்கட்சி , ஆழும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!

21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன. புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அனைவரும் அவற்றையெண்ணி அதிர்ச்சி, அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. மேற்குலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியும், இந்தியா, சீனா ஆகியவற்றின் வளர்ச்சியும் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தாலும், மற்றைய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்த அணுசக்தி வல்லமை இன்று சீனா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து தாண்டி ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் வரும் வாய்ப்பில் உள்ளன. கணணியின் வளர்ச்சி இன்று ஒவ்வொரு நடுத்தர வசதியுள்ள வீட்டிலும் உணரப்படுவதால் உலகத்தின் தொடர்புவலைப்பின்னல் ஒரு மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது. இங்கு ஆராயப்படும் விடயம் 100க்கு 90 வீதம் ஓர் அரசியல் சார்பானதாக இருந்தாலும், அதைப்பாதிக்கக்கூடிய பல காரணிகள் உருவாகுவதைக் காணலாம். முக்கியமாக பொருளாதார, இராணுவ அரசியல் காரணிகள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்று. இந்தியா தனது அண்டை நாடாகிய இலங்கையை, சுதந்திரமடைந்த அன்றைய தொடக்க காலத்தில் ஒரு சினேகித நாடாக நோக்கியிருக்கலாம். தற்போதய நிலையிலும்கூட இலங்கையை நேச நாடாக இந்தியா நோக்கவில்லை எனக்கூற முடியாது. ஆனால் துரதிர்ஷடவசமாக இலங்கையோ, இந்தியா தனது நேச நாடாக இருக்கவேண்டும் என அன்று தொடங்கி இன்றுவரை நினைத்ததாகச் சான்றுகள் இல்லை. சுமார் 5 இலட்சம் இந்தியர்களின் பிரஜாவுரிமையைப் பறிமுதல் செய்த இலங்கை, மிகுதியாகத் தங்கியிருந்தோர்களில் 40 விகிதத்தினர்க்கு மட்டுமே தனது குடியுரிமையை வழங்கியது. இந்திய-பாகிஸ்தான் யுத்தங்களிலும் இலங்கையின் எதிர் நிலைப்பாடு உலகறிந்த விடயம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் பரம எதிரிகளான, பாகிஸ்தானுடன் பாரிய நட்பைக் கொண்டும் சீனாவைத் தனது ஞானபிதாவாகப் பூஜிக்கும் இலங்கையரசை வேறென்னவென்று கூறமுடியும்? இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளினுள், தற்பொழுது, ஒரு நாடாவது இந்தியாவை ஆதரித்தோ அல்லது நட்புடனோ இருக்கிறதா என்றால் அதற்கு எதிரான பதில்தான் கிடைக்கும். சுருங்கக்கூறின் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்பது போல அவை அனைத்தும் ‘பகை நாடுகளே’ என்று கூறின் அது மிகையாகாது. வாழ்க இந்தியாவின் இராஜதந்திரம்!




எது எவ்வாறாகினும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் இருக்கும் இந்தியாவில் அதன் உள்நாட்டிலேயே அல்கொய்டா அச்சுறுத்தல்களும், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் சீனாவின் ஆதரவுடன் கூடிய விடுதலை நோக்கிய எழுச்சிகளும், மத்திய அரசுக்கு ஒரு தலையிடியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படியான குழப்பநிலையில் ஈழத்தமிழினத்தின் விடுதலை வெற்றியடைந்துவிட்டால், இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களும் ஈழத்தமிழினத்தை பின்பற்றிவிடுவார்களோ என ஐயம் கொண்டு, ஈழதமிழின அழிப்புக்கு இந்தியா துணை போனது என்று கொள்ளலாம். இது இவ்வாறிருக்க, இத்தகைய ‘தற்காப்பு’ மனப்பான்மையுடன் தொடர்ந்து இந்தியாவால், ஈழத்தமிழினத்தை அலட்சியம் செய்ய முடியுமா என்பது இந்நேரத்தில் ஓரு சர்ச்சைக்குறிய விடயமாகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் பொருளாதார, இராணுவ வளர்ச்சியும், இந்தியாவைச் சூழ்ந்த பகுதிகளிலும், முக்கியமாக இந்து சழுத்திரத்திலும்;, சீனா திடிரெனச் செலுத்தும் ஆதிக்கமும் எனலாம். இந்தக் கோணத்தில், சீனாவின் ‘முத்துமாலை வியூகம்’ இராணுவ வட்டாரங்களில் தற்போது பலமாகப் பேசப்படும் ஒன்றாகும். அத்துடன், அம்பாந்தோட்டைத் துறைமுகமும், கச்ச தீவிலும் (பால தீவிலும் உட்பட) சீனாவின் ஆதிக்கமும் இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழ் நாட்டின் சேது சமுத்திரத் திட்டத்தையே சீனாவின் நடமாட்டம் பாதிக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் சீனாவின் ஆதிக்கம் பொதுவாக இந்தியா முழுவதையும் பாதிப்பதோடு, தமிழ்நாடு, கேரளம் ஆகிய கடல் சார்ந்த மாநிலங்களின் பாதுகாப்பையும் பாரிய அளவில் பாதிக்கும். இந்தியாவிற்கும், மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் தேவையான ஆப்பிரிக்க–தூரக் கிழக்கைத் தொடுக்கும் வழங்கற் பாதையானது (இந்து சமுத்திரம்), அவர்களின் எண்ணை, வாயு போன்ற முக்கிய எரிபொருட்களைக் கொண்டு செல்லத் தேவையானதாகும். இத்தகைய முக்கிய வழங்கற்பாதையின் ஆதிக்கத்தைச் சீனாவிடம் இழக்க யாரும் விரும்பமுடியாது. பரந்து விரியும் உலக வாணிபத்தில், மேற்கு நாடுகள்கூட இவ்விடயத்தில் கரிசனையாக இருப்பதைக் காணலாம். அதே சமயத்தில், சீனா இத்தகைய நடவடிக்கையில் மும்முரமாகச் செயற்பட வேண்டிய காரணங்கள் யாவென ஆராய்ந்தால், சில விடயங்கள் வெளிச்சத்திற்கு வரலாம். 1. பொருளாதார ரீதியில், சீனா உலகின் ஈடுஇணையற்ற நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், சீன மக்களின் விடா முயற்சியும், சிறந்த கல்வியும், மலிவான உற்பத்தித்திறனும் ஆகும். அத்துடன் சீனாவின் ஊழலற்ற அரசியல் நிர்வாகம் அந்நாட்டை ஒரு தனித்துவமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அந்த பிராந்தியத்தில், தனக்கு ஆடுத்தப்படியாக இருக்கக்கூடிய நாடு இந்தியா என்பதால், பொருளாதாரத் துறையில் இந்தியா வலுவாக முன்னேறுவதைத் தடுத்தால், ஆசியாவில், உலகிலும்கூட சீனா ஒரு தனி உரிமையைப் பெறும் நிலை (ஆழnழிழடல) ஏற்படலாம். 2. ஆபிரிக்கா தூர கிழக்கு நாடுகளின் வழங்குப்பாதையான இந்து சமுத்திரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சீனா உலகின் எண்ணை, வாயு ஆகிய எரிபொருள் சக்திகளின் வினியோகத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கலாம். 3. சீனா இந்தியாவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து முறுகல் நிலையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற எல்லைப் பிரச்சனைகள் இன்னும் தீர்வின்றி சீனாவை உறுத்தி வருகின்றன. 4. பாகிஸ்தானுடன், இந்தியாவின் எதிர்போக்கான அணுகு முறைக்கு சீனாவும் பாகிஸ்தானும் கொண்டிருக்கும் நட்பு ஆசியா கண்டத்தில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 5. திபேத் பிரதேசத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவிற்கு ஏற்றதாக இருக்க முடியாது. 6. இந்தியாவின் அணு சக்தி முன்னேற்றம், சீனாவை (தான் ஒரு அணு சக்தி நாடாக இருந்த போதிலும்) ஓர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலையில் தள்ளும். 7. இலங்கையின் பொருளாதாரச் சீர்கேடு (விடுதலைப்புலிகளின் யுத்தத்தினால் ஏற்பட்டதால்)சீனாவை இந்தியாவுக்கு அண்மையில் சுலபமாக ஈர்க்க முடிந்தது. மேற்கூறிய காரணிகளைக் கருத்தில் கொள்ளும் சீனா, தனக்குச் சாதகமாக இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகளில் இறங்கியது வியப்பினை ஏற்படுத்த முடியாது. எனினும் சீனாவின் இந்த நடவடிக்கையை ஈடுசெய்ய இந்தியாவால் முடியுமா என்பதுதான் இந்திய அரசியல்வாதிகளை மட்டுமின்றி, மேற்குலக அரசியல்வாதிகளைக்கூட விழி பிதுங்க வைக்கும் கேள்வியாகும். இந்து சமுத்திரத்தைத் தக்க வைக்க வேண்டி வந்தால், இந்தியாவுக்கு, இலங்கையில் முழுதாகவோ அல்லது பாரிய ஒரு பகுதியிலோ பூரண ஆதிக்கம் தேவை என்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தக் கோணத்தில் நோக்குமபோது, இலங’கைத் தீவில், தமிழீழக் கடற்பரப்பு மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்குகிறது என்பது முக்கியம். இலங்கை அரசை இனித் தனது கட்டுப்பாட்டிற்குள் நட்புரீதியாக ஆயினும் கொண்டு வருவது என்பது தற்போது இந்தியாவிற்கு குதிரைக் கொம்பு ஆகும். சீனாவின் பொருளாதார அழுத்தம் இலங்கையச் சீனாவுக்கு மீளா அடிமை ஆக்கிவிட்டதை உலகம் முழுவதுமே நன்கு அறியும். இந்த நிலையிலிருந்து இலங்கையை எவருமே மீட்க முடியாது. இன்று, இந்து சமுத்திரத்தின் விதி ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம். இந்தியாவின் தென்புறத்தில் உள்ள இலங்கை சீனாவின் கட்டுப்பாட்டில் நாளுக்கு நாள் விழுங்கப்படும் நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு அதையொரு நுழைவாயிலாகப் பாவிக்கலாம் எனும் நப்பாசையில் சில சக்திகள் இருக்கலாம். இந்தியா கூட இந்த எண்ணத்திற்கு விதிவிலக்காக முடியாது. ஆனால், இதனை இராஜதந்திர முறையில் எவ்வாறு அணுகலாம் என்பதே ஒரு பொன்னான கேள்வியாகும். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன், இந்தியா தனது ‘பழைய வெளிநாட்டுக் கொள்கைகளை’ அறவே கைவிட வேண்டும். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையைக் கிள்ளும் போக்குக்கூட இனிப் பயனளிக்காது போகலாம். காரணம், இந்தியா ஒரு சமஷ்டித் தீர்வினை தமிழர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சில பிரமுகர்களைத் திருப்திபடுத்தி இலங்கையரசின் அரைச்சம்மத்ததைப் பெற்றாலும் 1. அத்தகைய தீர்வால் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. 2. அது தமிழ் மக்களின் போராட்ட உணர்வினை முற்றாக மழுங்கடித்துவிடும் என்று திட்டவட்டமாக ஒருபோதும் கூறமுடியாது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்த் தியாகத்தின் பின் ‘காலம் கடந்த சமஷ்டியை’ ஏற்பது, ‘மலையைக் கல்லி எலியைப் பிடித்தது’ போல் ஆகிவிடும். 3. இராஜபக்சே அரசு சொல்லளவில் சமஷ்டியை ஏற்றாலும், நடைமுறையில் அதை அமுல்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் கதியை எல்லோரும் அறிவர். 4. இந்தியாவின் பழைய தமிழீழத்திற்கெதிரான பிடிவாதக் கொள்கைக்கு வலுச்சேர்பது என்பதே இதன் பலனாகலாம். ஆனால் இராஜதந்திர முறையில் போக்கு சரியானதா என நோக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியோ, அல்லது சுயநிர்ணயமோ எழுத்தளவில் அப்படித் தீர்க்கப்பட்டாலும் கூட அது இந்தியாவின் பூகோள நிலைமையைச் சீர் செய்யுமா என்பதே முக்கியமாகும். ஏனெனில், இத்தகையத் தீர்வை இறுதியில் ஏற்கும் சிலர் இந்தியாவின் ‘கட்டுப்பாட்டில்’ இந்தியாவுக்கு ‘விசுவாசியாக’ இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வலு இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைப் பாதிக்க ஒருபோதும் முடியாது. ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட இலங்கையின் முழு ஆட்சியுமே இராஜபக்சேவினால் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இத்தகைய ‘பிச்சைக்கார அதிகாரத்துடன்’ தமிழ்த் தலைவர்களோ, தமிழ் மக்களோ, இந்தியாவையோ, இந்து சமுத்திரத்தையோ மீட்கவோ, கண்கானிக்கவோ ஒருபோதும் முடியாது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது அரைகுறைத் தீர்வைக் கொடுப்பதன் மூலம் இந்தியா தன்னைத்தானே ஏமாற்றினால் ‘தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை’ என்ற கதை போலாகிவிடும். இதற்கு மாறாக ஏதோ ஒரு காரணத்தால் இந்தியா தமிழீழக் கொள்கையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் இனஅழிப்பை நிறுத்தி, ஒரு புதிய அரசியற் பாதையைத் திறப்பதாக வைத்துக்கொன்டால் அதன் பெறுபேறுகளைக் கீழ்கண்டவாறு நோக்கலாம். 1. தமிழீழத்திற்கு தனது சொந்த வான், காலால், கடற்படைகளை வைத்திருக்கும் உரிமை கிடைக்கும். 2. தமிழ் மக்களின் கல்வித்திறன் உலகம் முழுவதிலுமே நற்பெயர் பெற்றிருக்கும் நிலையில், சிறிய நாடாக இருந்தாலும் அது வலுவுள்ள தொழில்நுட்பம் சார்ந்த படைத்திறனை உடையதாக இருக்கும். 3. தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டதால், அதனுடன் நேசநாடுகளாகப் பல நாடுகள் கூட்டுச்சேர முன்வரும். 4. தமிழீழத் தனியரசால் மட்டுமே சேதுத் சமுத்திரத் திட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். 5. வடக்கே இருக்கும் தமிழ் நாடு, கேரளா ஆகிய கடல் எல்லையில் உள்ள மாநிலங்களின் பாதுகாப்புடன் இந்து சமுத்திரத்தை தமிழீழ அரசு இந்தியாவுடன் சேர்ந்து கண்கானிக்கும். 6. தமிழ் மக்களின் போர் வலிமையை உலக நாடுகள் அனைத்தும் கடந்த 30 வருடமாக நடந்த போரின் மூலம் அறிந்தமையால், சீனா போன்ற நாடுகள் (அணுச் சக்தியில்லாத) சிறிய ரகப் போரை இக்கடற்பரப்பில் தொடுக்க பின் வாங்கும் (உலக அழிவைத் தவிர்ப்பதற்காக, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகளும் நடைமுறையில் அவற்றைப் பாவிக்க மாட்டா). 7. இலங்கையின் கடலோரப் பகுதியில் மூன்றில் இரண்டை தமிழீழக் கடற்பரப்பு கொள்வதால், இந்து சமுத்திரத்தைக் கண்கானிப்பது தமிழீழ அரசிற்கு பெரிய பிரச்சனையாக இருக்க முடியாது. எனவே, இதனால் தென்னிந்தியக் கடற்பரப்பின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும். 8. தமிழர்களின் பிரச்சனை முற்றாக தீர்க்கப்பட்ட நிலையில் மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் அனாவசியமாகத் தலையிடும் வாய்ப்புகள் குறையும். 9. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய ஒரு நாட்டையும் தனது நட்பு நாடாக இந்திய இராஜதந்திரத்தால் மாற்றமுடியாது. ஆனால், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பாரிய அழிவின் பின்னும் தமிழீழத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியா தனது தென்பகுதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்நடவடிக்கை தமிழகத்திலும் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்த உதவும். 10. ஆசியா உபகண்டத்தில் நடைபெற்ற ஈழமக்களின் இனஅழிப்பைக் கண்டிக்காது ஆதரித்து வந்த இந்தியா, அதற்கேற்ற தகுந்த பரிகாரத்தை மேற்கொள்ளாவிடின் அது ஐ.நா.வின் நிரந்தர பாதுகாப்புச் சபைக்குள் நுழையும் வாய்ப்பையும் வலுவாகப் பாதிக்கலாம். எனவே, இந்தியா தனது சொந்த நலன் கருதியாவது, தமிழ் மக்களின் தமிழீழக் கொள்கையை பூர்த்திச் செய்வதே அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தற்போது எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அதனையும் சீனா வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமிக்கும் முன் விரைவுப்படுத்துவதன் மூலம் இதன் முழுப்பலனையும் அடைவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு. முள்ளிவாய்க்காலின் அழிவும் பின்பும் உலகத் தமிழ் மக்கள் தமது வாக்கெடுப்பின் மூலம், தமிழீழக் கொள்கையை மீளுறுதி செய்ததோடு, உலகில் உள்ள 9 கோடி தமிழ் மக்களையும் ஒன்று சேர்க்கும் திராணியுள்ளவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நலனுக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், உலகில் எவருக்கும் தமது வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லையென்பதைப் பல நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்தியாவும் இதை உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி. (Courtesy:Pathivu)

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைப்பதில் பான் கீ மூன் உறுதி


சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களை தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறீலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம்பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதனிடையே சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து தனக்கு ஆலோசனைகளை வழங்கும் குழுவை அமைப்பதில் பான் கீ மூன் தீவிரமாக உள்ளதாகவும், அந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்கள் குறித்து நவநீதம்பிள்ளையுடன் அவர் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நாவின் இணைப்பு பேச்சாளர் பார்ஹான் ஹாக் தெரிவித்துள்ளார்.