திங்கள், 22 மார்ச், 2010

எங்கள் வரலாற்றுப் பதிவுகளை காப்போம்

எமக்கு முன்னுள்ள முக்கிய தேவை பற்றி இந்த கட்டுரை ஊடாக ஆராயவிருக்கின்றோம். முப்பது ஆண்டுகால மிகப் பெரிய உலகம் வியக்கும் வகையிலான தமிழனத்தின் உன்னதப் போரும் அதன் பின்னரான தற்போதைய மாறுபட்ட சூழலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே நகர்ந்துவருகின்றது. அந்தப் போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட விலைகள் சராசரியாக மூன்று இலட்சம் வரையில் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த இடத்தில் நாங்கள் குறிப்பிடுவது விடுதலைக்காய் நேரடியாக வீழ்ந்த மாவீரர்கள் மற்றும் மக்கள். இந்த இடத்தில் ஒரு கனதியான பணி தற்போது உலகப் பரப்பில் வாழ்ந்துவருகின்ற எமது தமிழ் மக்களிடம் உள்ளது. அது மிகவும் இலகுவான பணி ஆனாலும் அது நெறிப்படுத்தல் இல்லாமையால் கவனிக்கப்படாமலேயே கிடப்பது வேதனைக்குரியது. எங்கள் விடுதலைப் போருக்கான அர்ப்பணிப்புக்கள் அதன் பின்னான காலச்சுழற்சி என்பவற்றில் எமது விடுதலைப் போரையும் மக்களையும் வைத்து பிழைப்பு நடத்த பலர் முற்படுகின்றமை அல்லது உண்மையான உள்ளார்ந்த உணர்வு நிலைப்பாட்டுடன் கூடிய முன்னெடுப்புக்கள் என மாறுப்பட்ட சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டாலும், எங்களுக்கான நீண்ட நோக்குடன் கூடிய பார்வைச் செலுத்தவேண்டியவர்களாக அனைத்து மக்களும் இருக்கின்றோம். எங்கள் உயிர்கள், எங்கள் இரத்தம், எங்கள் அங்கங்கள், எங்கள் அர்ப்பணிப்புக்கள், எங்கள் சொத்துக்கள் என எங்களுக்கான அனைத்தும் இழந்தும் மீளமுடியாத துயர் எங்களவர்களின் பிரிவு மட்டும் தான் என்பதை தற்போது நிலத்திலும் புலத்திலும் அனைவரும் புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்கள் போரும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் எங்களை உலகம் இன்று திரும்பிப் பார்க்கின்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எங்கள் போராட்டப் பயணம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது, அதன் வியக்கவைக்கின்ற பிரமிப்புக்கள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை என்பதை கால ஓட்டத்தில் நாங்கள் வார்தைகளால் மட்டும் தான் சொல்லப்போகின்றோமா? என்ற இக்கட்டான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான காரணம் எங்கள் கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமான நேரடியான ஆவணங்கள் எல்லாம் வன்னிலேயே இருந்தன. அனைத்தும் நிலங்களில் தாழ்க்கப்பட்டும் பல எரிக்கப்பட்டும், பல கைவிடப்பட்டும் உள்ளன. கருத்துரைகள், ஒளிப்படங்கள், ஒளிநாடாக்கள், பாடல்கள், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், காலப் பதிவுகள், வரலாறுகள், வரலாற்றுச் சான்றுகள், எங்கள் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், பிரமிப்புக்கள், எங்கள் தெருக்கள், எங்கள் கோவில்கள், எங்கள் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்காக வீழ்ந்தவர்களின் வரலாற்றுப்பதிவுகள், புகைப்படங்கள் எல்லாமும் எங்கள் கைகளில் இல்லை. அனைத்துப் பதிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான இணையம் அல்லது இணைய சேமிப்பு நடவடிக்கையினை புலம் பெயர் தளத்தில் இருக்கின்ற தாயகத்தையும் தாயக மக்களையும், விடுதலைப் போரையும் உண்மையாக நேசிக்கின்ற எவராது முன்வந்து மேற்கொள்ளவேண்டும். இந்த நடவடிக்கையினை தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்ததாகவோ யாருக்கும் முண்டு கொடுப்பதற்கான நடவடிக்கையாகவோ மேற்கொள்ளாமல் உண்மையான தேசநலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்டால் எங்களால் இழக்கப்பட்ட ஆவணங்களில் மிகக் கூடிய அளவினை உலகப்பரப்பில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சின்னசின்ன பதிவுகளை, புகைப்படங்களை, ஒலி, ஒளிப்பதிவுகளை, முன்னைய வெளியீடுகளை, புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இருக்கும் மாவீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் குறிப்பிட்டதற்கு அமைய யாராவது முன்வந்து ஆவணச் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உங்களிடம் இருக்கின்ற தகவல்களின் பிரதிகளை வழங்கியும் எங்கள் தொலைந்துபோகும் வரலாற்று ஆவணங்களை மீள ஒன்று திரட்டி சேமிப்பதற்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக