செவ்வாய், 23 மார்ச், 2010

புதிதாகத்தோன்றும் போராட்ட விமர்சன புத்தி ஜீவிகள்........

ஒருவருக்கு செல்வம் வந்தகாலத்தில்,ஆகாயத்தில் விளங்குகின்ற விண் மீன்களிலும் பல அவருக்கு மிக்க உறவினராவர். அவரே தகாத துன்பத்தை அடைந்தால், அவரின் உறவுகளே அவரின் சொந்தமென்று சொல்ல விரும்பார். இதை இன்று உணர்வுள்ள ஈழத்தமிழ் மக்கள் கண்கூடாகக் காண்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களாக வேரோடி விழுதெறிந்து பெருவிருட்சமாகி எம் தமிழீழ மண்ணுக்கு நிழல்கொடுத்த ஆலமரம், ஏறக்குறைய இருபது நாடுகளின் ஆயுதபலத்தாலும்,ஆட்பலத்தாலும்,பல வருடகால சூழ்ச்சித் திட்டங்களாலும்,காட்டிக் கொடுப்புகளாலும் சென்ற ஆண்டு இறுதியாக முள்ளிவாய்க்காலில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டது. அந்த ஆலமரத்தில் கூடுகட்டி பெரும் புயல்களுக்கும், அடை மழைகளுக்கும் ஈடுகொடுத்து,துன்பங்களையே வாழ்க்கையாக வாழ்ந்த பறவைகளும் வீழ்ந்து, கூடுகளும் கலைந்து மாண்டுபோக, உயிரோடிருந்த ஒரு பகுதி பறவைகள் கொடியோரின் கைகளில் அகப்பட,ஓரு பகுதி பறவைகள் எதிரியின் முற்றுகையை உடைத்து தப்பிப் பறந்துசென்றன. அன்று அந்த ஆலமரத்தின் கீழ் பலகாலம் கொடிய வெய்யிலில் இளைப்பாறியவர்களே,இன்று அந்த ஆலமரத்தைப்பற்றி ஒரு சொட்டும் கவலைப்படாமல் நன்றியில்லாதவர்களாக, அதைக் கூறு கூறாகவெட்டி விறகாக்கி விற்பதில் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுவரை காலமும் தமிழ்மக்களாகிய எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பார்த்து வாய்மூடி மௌனமாக இருந்தோரில், ஆதரவு வழங்கியோரில், போற்றிப் புகழ்ந்தோரில் சிலர், இப்போது போராட்டத்தின் ஆயுதம் மௌனிக்கப்பட்டு 10 மாதங்களாகிய பின்பு பல விமர்சனங்கள் எழுதத்தொடங்கியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் எதையாவது எழுதவேண்டும், எழுதி எதிரியின் காலடியில் மண்டியிட்டு தங்கள் வசதிகளை ஏற்படுத்த பலபேர் கிளம்பியுள்ளனர். அதில் ஒருவர் அதிகப் பிரசங்கித்தனமாக, கப்பல்கட்டிய தமிழன் கப்பலுக்காக இறுதிநாளன்று காத்திருந்து மாண்டான், என எழுதியிருந்தார். மேலும், காட்டிற்குள் தோன்றி, காட்டிற்குள் வளர்ந்து, காட்டிற்குள் பாதுகாப்பாக இருந்த புலிகள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்று மிகவும் வேடிக்கையாகவும் அதேநேரம் வேதனையாகவும் இருந்தது. அவர் கூறும் புலிகள் நாலுகால் புலிகள். அவை காட்டில்தான் பிறக்கின்றன. எங்கள் தேசவிடுதலைக்காகப் பிறந்த இரண்டு கால் புலிகள் வீட்டிலே பிறந்து, உங்களோடே வளர்ந்து,உங்கள் துன்பங்களை, உங்கள் வேதனைகளை நேரில் பார்த்து தாங்கமுடியாமல் உங்களைப்போல் ஜடமாக வாழவிரும்பாமல் மண்ணுகாக மக்களுக்காக விடுதலைப் புலியானவர்கள். மற்றும் இறுதிப்போரின்போது விடுதலைப் புலிகளின் கையிலிருந்த கடல் ஆதிக்கம் சுருங்கத்தொடங்கி, போர் முடிவடைவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே அவர்களின் கடலாதிக்கம் முற்றாகக் கைவிட்டபின்பு, எந்தக் காட்டிலிருந்த புலிகளை, எந்தக் கடற்கரைக்கு இறுதிநாளின்போது வரும்படி யார் கட்டளையிட்டார்கள்? எங்கள் தமிழீழ எல்லைகளைச் சரியாக அறிந்திராதவர்கள், முள்ளிவாய்க்கால் எங்கே அமைந்துள்ளது என்பதை விளங்காதவர்கள் கூறும் சோடனைக் கதைகளைக் கேட்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. அவர் அதனுடன் நிற்பாட்டாமல், இறுதிப் போர்முடிந்து கடந்த 10 மாதத்தின் பின்பு ஞானம் பிறந்து, புலிகளின் அரசியல்துறை வெளிநாடுகளில் சரியாக இல்லை, மற்றும் புலம்பெயர் தேசத்திலுள்ள அமைப்புக்களின் தலைமைகள் எல்லாவற்றிலும் தன்னாலான குறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கும் ஒருபடி மேலேபோய், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் விடுதலை இலட்சியத்தையே வரித்து வாழ்வாக்கி போராடி வாழ்ந்து, தமது இரத்தமும் சதையும் பீறிட உயிரைக் கொடுத்த எங்களுக்காகவே தங்கள் உயிரையே தானம்செய்த தளபதிகளை, மாங்காய் தேங்காய் போன்று பொருட்களைப் போன்று டசின்கணக்கென எடைபோடும் இம்மாதிரியான தமிழர்களை எண்ணுகையில் எங்கள் உள்ளம் கொதிக்கின்றது. இவர்களைப் போன்றோர்க்கு இப்போது நேரம் நல்லாக இருப்பதால், பிள்ளையை நல்லாகக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குகிறதெல்லாம் இலாபம் என்ற வக்கரித்த மனப்பான்மையுடன், எதிரி செய்யும் வேலைகளை இவர்களே செய்து முடித்தாலும், காலம் ஒருநாள் பதில் சொல்லும். அவர் கூறியதுபோன்று எழும்ப இயலாத அடி விழுந்திருக்கலாம், ஆனால் விழ விழ எழுவது விடுதலைப் புலிகள். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் தமிழீழம் மலர்ந்தே தீரும். காலம் அதை தமிழர் கையில் தந்தேதீரும். கால்மார்க்ஸ் கூறியது போன்று இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லையெனினும் பெறுவதற்கான ஒரு உலகம் இருக்கின்றது. அதை எண்ணி நம்பிக்கையுடன் எம் பயணத்தைத் தெடர்வோம்.

சம்பிக்க ரத்னாயக்கா கேள்வி!

தென்னிலங்கையில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விவாதிக்கின்ற செயற்பாட்டாளர்கள் பலரும், போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் குறித்து எதுவும் பேசாது மறந்து விடுவதாக இடதுசாரி விடுதலை முன்னணியைச் சேர்ந்த சம்பிக்க ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். சுமார் 50 இலிருந்து 60 வரையிலான விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் போரின் போது கடுமையாகக் காயப்பட்டு கொழும்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற இவ்வமைப்பைச் சேர்ந்த 35 பெண் போராளிகள் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், இப்பெண்களின் நலன்கள் குறித்து எவரும் குரல் கொடுப்பதில்லை என்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பி.பி.சி. சிங்களச் சேவையில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கு நிரந்திர இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தாது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறினார். இவ்விவாதத்தில் சம்பிக்கா ரத்னாயக்காவின் கருத்தை மறுத்துப் பேசிய பிரபல நடிகையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவருமான கீதா குமாரசிங்க, விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து இப்பெண்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுவித்திருப்பதாகவும், அவருக்கு இப்பெண்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவின் கருத்தை ஏற்க மறுத்த சம்பிக்க ரத்னாயக்கா, தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினரின் குடும்பங்களின் மீது எடுக்கப்படுகின்ற கவனம் போல், போரின் போது இடம்பெயர்ந்த, படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பெண்கள் குறித்தும் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் அதற்கான தகுதி படைத்தவர்கள் என்பதையும் அவர் இவ்விவாதத்தில் சுட்டிக்காட்டினார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென, அரச மற்றும் எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா உள்ளது போன்று சிறிலங்காவிலும் பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளதாக சிறிலங்காவின் மகளிர் விவகார அமைச்சர் சுமேதா ஜயசிங்க தெரிவித்தார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அனைத்துக் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார். இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனாநாயக்க, உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடொன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் தவறிவிட்டது என குற்றம் சாட்டினார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 4.5 வீதமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட சம்பிக்கா ரத்னாயக்கா, 50 முதல் 60 வரையான பெண் போராளிகள் படைகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளபோதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் போராளிகளின் எண்ணிக்கை 1200 வரை இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியுயோர்க்கில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆர்ப்பாட்காரர்களுக்கு விருந்தளித்த கோகன்ன

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கீ மூன் வல்லுனர்கள் குழுவொன்றை அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்தார். ஐ.நா செயலாளரின் இந்த முடிவினை எதிர்த்து நியுயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா சபையினது தலைமைச் செயலகத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி சிறிலங்காவைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ‘எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை’ ஒழுங்குசெய்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட 16 சிறிலங்காவினர்களுக்கும் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோகன்ன நட்சத்திர விடுதியொன்றில் இரவு உணவு விருந்தொன்றை அண்மையில் வழங்கியிருக்கிறார். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிறிலங்காத் தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த 'எதிர்ப்புப் போராட்டத்தில்' பங்குகொண்டவர்களுக்கு கடந்த 13ம் திகதி இரவு விருந்து வழங்கப்பட்டதோடு ஒவ்வொருவருக்கும் 100 டொலர் பணம் வீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலாநிதி பாலித கோகன்ன ஒழுங்குசெய்திருந்த இரவு உணவு விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரே இந்தப் ஒளிப்படங்களை வெளியிட்டிருந்தார்.

வந்துவிட்டது மார்ச் 27: அந்த 60 நிமிடங்களுக்கு தயாரா?

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வரும் 27ம் தேதி இரவு ஒரு மணி நேரம் மட்டும் மின்சார உபயோகத்தை தவிர்க்க தயாராகி வருகின்றனர். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த, இயற்கைக்கான சர்வதேச நிதியம் (wwf) என்ற நிறுவனமும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து கடந்த 2007ம் ஆண்டில் ‘எர்த் அவர்’ என்ற திட்டத்தை அறிவித்தன. இயற்கையை பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு, மின்சார எரிசக்தி சேமிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அவசியமற்ற விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களையும் ‘ஆஃப்’ செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. முதலில் சிட்னி வாழ் மக்கள் சுமார் 22 லட்சம் பேர் சேர்ந்து செயல்படுத்தியதைப் பார்த்து உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் இதைப் பின்பற்ற மக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து ஒவ்வொரு மார்ச் மாதமும் இறுதி சனிக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை (அந்தந்த உள்ளூர் நேரப்படி)இந்த தி்ட்டத்தை கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாத இறுதி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் 88 நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 88 நகரங்களில் இந்த ‘எர்த் அவர்’ கடைப்பிடிக்கப்பட்டது. சுமார் 100 கோடி மக்கள் இந்த இயக்கத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் இநத திட்டத்தை கடைப்பிடிப்பதில் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் இந்தாண்டு ‘எர்த் அவர்’ வரும் சனிக்கிழமை (மார்ச் 27) கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்தாண்டை விட அதிகளவில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளன. வீடுகள், தனியார் நிறுவனங்கள், பல்வேறு அரசு கட்டிடங்கள், வளாகங்கள், நினைவுச் சின்னங்கள் என பல இடங்களிலும் வரும் 27ம் தேதி அந்தந்த பகுதிகளின் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயற்கை இருளை தரிசிக்க தயாராகி வருகின்றனர்.

உலகின் நான்காவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு சவூதி

உலகிலேயே அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நான்காவது மிகப்பெரிய நாடாக சவூதி அரேபியா திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. "ஸ்டாகோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்" - Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சீனா, இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சவூதி அரேபியா உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியா ஆயுதங்கள் வாங்குவதற்காக மொத்தம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆயுத இறக்குமதியில் இஸ்ரேல் கூட ஆறாவது இடத்தில்தான் உள்ளது.அதைவிட சவூதி அரேபியா நான்காவது இடத்தில் முன்னணியில் உள்ளது. மேலும் அமெரிக்காவிடமிருந்துதான் பெரும்பாலான ஆயுதங்களை வாங்கி வந்தது. இதனால் அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி வாடிக்கையாளராக சவூதி அரேபியா திகழ்கிறது. மேலும் பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி வாடிக்கையாளராகவும் சவூதி அரேபியா திகழ்கிறது.

முட்டாளைப் பார்த்து ஏன் பயப்படுகின்றீர்கள்?

அண்மையில் சிங்கப்பூர் ஸ்ரேய்ட ரைம்ஸ் பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ச அளித்த பேட்டி தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். அக்கடிதத்தில் 10 மாதங்களின் முன்னால் உலகின் சிறந்த இராணுவத் தளபதி எனது கணவர் என புகழாரம் சூட்டிய உங்கள் வாயால், தற்போது எனது கணவன் ஓர் முட்டாள் என தெரிவிக்கப்பட்டிருப்பதையிட்டு மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளளேன். அவ்வாறு அவர் முட்டாளாக இருந்தால் அவர் மீது ஏன் இத்தனை பீதி கொண்டு பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். அக்கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிங்கப்பூரில் வெளியாகும் 'ஸ்ரெய்ட் டைம்ஸ்' பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான பொன்சேகா அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும், எனது குடும்பமும் கவலையும், வேதனையும் அடைந்தோம். இவ்வாறு கூறியிருப்பதை பார்த்து, பத்து மாதங்களுக்கு முன்னர் அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதி என்று புகழாரம் சூட்டியது நீங்கள் தானா என்று நான் வியப்படைகின்றேன். அன்று போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் வெற்றிக் கேக்கை வெட்டுவதற்கு உரிமையானவர் ஜெனரல் சரத்பொன்சேகாவே என்று பகிரங்கமாகக் கூறி, அவரைக்கொண்டே கேக்கை வெட்டியதையும் மறந்துவீட்டீர்களா? இன்று யுத்த வெற்றியின் சூடு தணிவதற்குள் அவை அனைத்தும் மறக்கப்பட்டவையாகிப் போயுள்ளன. எனது கணவர் நீங்கள் சொல்வது போன்று அரசியல் தெரியாதவர் என்றால், அவ்வாறான ஒருவருக்குப் பயந்து சட்டவிரோதமாக கைது செய்து தடுத்துவைத்துப் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தியிருப்பது எதற்காக எனக் கேட்க விரும்புகின்றேன். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. எனது கணவருடன் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து, தங்களுக்கும் அரசுக்கும் எதிராக அரச விரோதச்சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆதரவாளர்கள் சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சதிக்குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் கடந்த தேர்தலில் மேற்கொண்ட மோசடிகள் எனது கணவரால் நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் படுதோல்வியை தழுவ நேரிடும் என்ற பயத்திலேயே அவரை சட்டத்திற்கு விரோதமாக தடுத்து வைத்துள்ளீர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், எனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உங்களிடம் பத்திரிகையாளர் கேட்டபோது நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலளிக்க தவறியுள்ளீர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்து அரந்தலாவை பிக்குகளைப் படுகொலை செய்த, ஸ்ரீ மகாபோதி முன்பாக பக்தர்களைச் சுட்டுக்கொன்ற, தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்திய கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோருக்கு உயர் பதவிகளும் வசதி வாய்ப்புகளும் வழங்கியுள்ளதுடன், புலிகளின் பிரதானிகளின் ஒருவரான கே.பி க்கும் இன்று உங்கள் தயவு கிடைத்துள்ளது. இந்நிலைமைகள் பார்க்கும்போது, புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி, தனது குடலை தனது கரங்களில் சுமந்து, மரணத்தின் வாசலுக்கு சென்றுவந்த எனது கணவர், இந்நாட்டுக்காக சிந்திய இரத்தத்தை இலகுவாக மறந்துள்ள நீங்கள், எனது கணவருக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறுவதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. இந்நாட்டின் மக்கள் 2010ம் ஆண்டு தமது தமிழ்-சிங்களப் புத்தாண்டை ஒன்றுபட்ட இலங்கையில், பயங்கரவாத அச்சுறுத்தல் அற்ற நிலையில், கொண்டாட வழிசமைப்பேன் என எனது கணவர் இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றியிருக்கின்றார். அதன் பலனை இன்று நீங்களும், உங்கள் குடும்பமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் எமது குடும்பத்திற்கு அதனை அனுபவிக்க மறுத்திருப்பது துரதிஸ்டவசமானது. இன்று எனது கணவருக்கு நீங்கள் இழைக்கும் கொடுமைகள் உங்கள் மனச்சாட்சியை என்றாவது உறுத்தாமல் விடாது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன். அத்துடன் எனது கணவர் உங்களிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்க மாட்டார் என்பதை மாத்திரம் உங்கள் மனதில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் எந்த தவறுகளையும் அவர் செய்யவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு. என அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன?

நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதுதான் தம்முடைய இலக்கு எனவும், அதன் மூலமாக அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ஸ்ரேட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை மீண்டும் தெரிவித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ, இனநெருக்கடியைத் தீர்ப்பதற்காக எவ்வாறான அணுகுமுறை தன்னிடம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். முக்கியமாக வடக்கு கிழக்கு இணைக்கப்படாது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதை மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். ஆக, இன நெருக்கடிக்கான நியாயமான ஒரு தீர்வைப் பொறுத்தவரையில், தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத்தான் ஜனாதிபதியின் இந்தப் பேட்டியும் உணர்த்தியிருக்கின்றது. அப்படியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்ப்பது எதற்காக என்ற கேள்வி எழலாம். அதேவேளையில், இனநெருக்கடி தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவைச் சந்தித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்து ஒன்று இவ்விடத்தில் கவனத்துகுரியதாக இருக்கின்றது. இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக்காண வேண்டுமானால், அது மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் எனத் தெரிவித்த ஹக்கீம், சிங்கள மக்களுடைய ஏகோபித்த ஆதரவைக் கொண்ட ஒருவராக மகிந்த ராஜபக்ஷ இருப்பதுதான் இதற்குக் காரணம் எனவும் தன்னுடைய கருத்துக்கான நியாயத்தை விளக்கியிருக்கின்றார். இன நெருக்கடிக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வைக்காண விரும்பினால் மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே அதனைச் செய்ய முடியும் என ஹக்கீம் அடித்துக்கூறியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. கடந்த காலங்களில் இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இனவாதக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாகவே கைவிடப்பட்டது. தற்போதைய நிலையில் இனவாதம் பேசக்கூடிய கட்சிகள் அனைத்தும் மகிந்தவுடனேயே உள்ளன, அல்லது செயலிழந்துபோயுள்ளன. அத்துடன் சிங்கள மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுக்கொண்ட ஒருவராகவே மகிந்த இருக்கின்றார். இந்த நிலையில் மகிந்தவினால் முன்வைக்கப்படும் தீர்வு ஒன்றுக்கு எதிராக மக்களைத் திரட்டிக்கொண்டு வீதியில் இறங்கிப் போராடக்கூடியளவுக்குப் பலம்வாய்ந்தவர்களாக சிங்களத் தலைவர்கள் யாரும் இல்லை. ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பலம்வாய்ந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கக்கூடிய நிலையிலேயே எதிர்க்கட்சிகள் இல்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டும் நிலையில் யாரும் இல்லை. இதனால்தான் இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்றைக்கொடுக்க வேண்டுமாயின் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருவரால் மட்டும்தான் முடியும் என்பதை ஹக்கீம் வெளிப்படுத்தியிருந்தார். இனநெருக்கடிக்கான தீர்வொன்றை முன்வைப்பதற்கான ஆதரவை சிங்கள மக்களிடமிருந்து மகிந்த ராஜபக்ஷ பெற்றிருக்கின்றார் எனக் குறிப்பிடும் மற்றொரு தமிழ் அரசியல் தலைவர், மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களப் பெரும்பான்மையின மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடுகின்றார். அதாவது, சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய எந்தவொரு தீர்வையும் முன்வைக்கக்கூடிய சக்தி அல்லது அதிகாரம் மகிந்த ராஜபக்ஷவிடம் உள்ளது. இது கடந்த கால அரசியல் தலைவர்கள் எவரிடமும் இல்லாத ஒன்று! தன்னுடைய இரண்டாவது பதவிக் காலத்துக்கும் தெரிவு செயப்பட்டுள்ள நிலையில், இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வொன்றைக் கொண்டுவருவது மகிந்த ராஜபக்ஷவுக்குக் கடினமான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, இனநெருக்கடி தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவின் உண்மையான அணுகுமுறை என்ன என்பதிலேயே இதற்கான பதில் தங்கியிருக்கின்றது. இனநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பது உண்மைதான். ஆனால், நியாயமான தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைத்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி ஐ.தே.க. கூட அதற்கு ஆதரவளிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். இருந்தபோதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இலக்கு வைப்பது இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காகவல்ல! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதை நோக்கமாகக்கொண்டே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அரசாங்கம் திட்டமிடுகின்றது. அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இரண்டு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்திலிருக்க முடியும் என்ற அரசியலமைப்பு விதிமுறையை மாற்றியமைத்து அதனை மேலும் ஒரு பதவிக்காலத்துக்கு அதிகாரத்திலிருப்பதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் சாவதற்கு ஆளும் கட்சி முயற்சிக்கலாம். இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொண்டவராக மகிந்த இருப்பதால் அவரால் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்த முடியும் என ஹக்கீம் தெரிவித்திருந்தாலும், அதற்கு மறுபக்கம் ஒன்றும் உள்ளது. அதாவது இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் மகிந்த ராஜபக்ஷவுக்குக்குள்ள விருப்பமே அது. இனப்பிரச்சினைத் தீர்வு, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்பவற்றை பிரதானமாக முன்வைத்தே சந்திரிகா குமாரதுங்கவும் அதிகாரத்துக்கு வந்தார். 1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் 62 வீதமான மக்களின் ஆதரவுடன் சந்திரிகாவினால் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக இருந்த போதிலும், தன்னுடைய 11 வருட ஆட்சிக் காலத்தில் அவரால் இந்த இரண்டில் எதனையுமே சாய முடியவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பது இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்று அதனைச் சாவதற்கான எந்தவொரு முயற்சியையும் சந்திரிகா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, சந்திரிகாவின் விருப்பமின்மையே இதற்கு உண்மையான காரணமாகக் கூறப்பட வேண்டும். தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரும் மகிந்த ராஜபக்ஷ இனநெருக்கடித் தீர்வில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வார் என்ற கேள்வி எழுகின்றது. தன்னுடைய முதலாவது பதவிக்காலத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று இரண்டாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்துவதிலேயே மகிந்த செலவிட்டார். போரில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குள்ள ஒருவராக வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு சலுகைகளைக் கொடுத்து அந்தச் செல்வாக்கை இழந்துவிடத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அண்மைக்காலக் கருத்துக்களின் மூலமாக உணர முடிகின்றது. இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அது வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய பேச்சுக்களில் அதனை அடிப்படையாகக் கொள்வதற்கு அரசாங்கம் முன்வருமா என்பது தெரியவில்லை. தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் மூன்று விடயங்கள் எதிர்காலப் பேச்சுக்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் இனநெருக்கடி தொடர்பில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது. * ஒன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை பகுதி 2 இல், 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. * இரண்டு காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கப்போவதில்லை என்பதை அண்மைக்காலப் பேட்டிகளில் மகிந்த ராஜபக்ஷ தெளிவாகத் தெரிவித்துவருகின்றார். இதனை விட பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ்த் தலைமையுடன் பேசப்போவதாகவும் அவர் தெரிவித்துவருகின்றார். ஆனால், புலிகள் கேட்டதை அவர்கள் கேட்கக்கூடாது என பேச்சுக்களுக்கு இப்போதே ஒரு நிபந்தனையையும் வைக்கின்றார். தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதையும், மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பு தமிழ்த் தரப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஆக, தமிழ்த் தலைமையைப் பலவீனப்படுத்துவதும், தான் நினைக்கும் அரைகுறையான ஒரு தீர்வை வழங்குவதும் தான் அரசாங்கத்தின் திட்டம் என்பது தெரிகின்றது. பலவீனமான ஒரு தமிழ்த் தலைமை தன்னுடைய இந்த முயற்சிகளை நடைமுறைச் சாத்தியமாக்க உதவும் என்பது அரசின் கணிப்பு, அதற்காகவும், ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிகாரத்தில் தொடர்வதற்காகவும்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனக் கூறலாம்.

இந்தியாவின் உளவியல் போர்!

முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திய அரசு மீதான அதிருப்திகள் அதிகரித்தே செல்கின்றது. சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் மீது இந்திய அரசு தொடுத்த மனிதாபிமானமற்ற போர் மட்டுமல்ல, அதற்குப் பின்னரான சிங்கள அரசின் அத்தனை கொடூரங்களையும் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த இந்திய அரசு தொடர்ந்தும் முன்நிற்பது ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு இந்திய அரசு மீது கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனைப் பகிரங்கமாகப் பதிவு செய்தும் வருகின்றார்கள். ஈழத் தமிழர்களின் மனங்களில் பெருகி வரும் இந்திய விரோத நிலை குறித்து இந்தியாவும் தற்போது கவலை கொள்ள ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்களின் இந்திய வெறுப்புநிலை உச்சம் பெறும் பட்சத்தில், சிங்கள தேசத்தின்மீதான இந்தியப் பிடி கேள்விக்குறியாகக் கூடிய அபாய நிலை குறித்தும், இதனால் உருவாகக்கூடிய எதிர்கால விளைவுகள் குறித்தும் இந்திய உளவுத் துறைகள் பலமாக ஆராய்ந்துள்ளன. அதற்காக ஈழத் தமிழர்கள் மீது சில உளவியல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர்களால் இந்தியாவைப் பகைத்து, இந்தியாவை மீறி என்னதான் செய்துவிட முடியும்? என்று எம்மில் சிலர் நினைப்பது போலன்றி, இந்தியா இது குறித்து அதிக அக்கறை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதிக அக்கறை என்றால். ஏதோ இந்தியா மனம் திருந்தி ஈழத் தமிழர்களுக்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறது என்ற அர்த்தம் அல்ல. ஈழத் தமிழர்களது இந்தியா மீதான கோபத்தையும், வெறுப்பையும் வேறு திசையில் திருப்பிவிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவும், சிறிலங்காவும் எதிர்பார்த்தது போல் முள்ளிவாய்காகலுடன் அத்தனையும் முடிவுக்கு வந்துவிடவில்லை. சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக வெளியிடப்பட்ட செய்திகள், ஆதாரங்கள் அத்தனையையும் தமிழ் மக்கள் நிராகரித்ததுடன், அது குறித்துப் பேசுவதையும் தவிர்த்து வருகின்றனர். தேசியத் தலைவர் அவர்களது மரணத்தை உறுதி செய்து விடுதலைப் புலிகளின் சர்வதேசங்களுக்கான தொடர்பாளர் கே.பி. அவர்கள் வெளியிட்ட அறிக்கையையும் அவர்கள் உதாசீனப்படுத்தியிருந்தார்கள். அதே போல், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் குறித்த இந்த இரு தேசங்களின் அறிவித்தல்களையும் தமிழீழ மக்கள் நிராகரித்தே வருகின்றனர். இது சிங்கள - இந்திய அரசுகளின் இலக்கை நிர்மூலம் செய்து வருகின்றது. தேசியத் தலைவர் அவர்கள் குறித்த பரப்புரைகளை நிராகரித்த புலம்பெயர் தமிழீழ சமூகம், அவரது பாதையில் தொடர்ந்து பயணித்து இறுதி இலக்கினை அடையும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்கள் பேரவைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்குப்பதிவு, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றது. இது, ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் இந்திய ஆதரவு தளத்திலிருந்து பிரித்து, மேற்குலகை நோக்கிச் சாய வைத்துள்ளது. ஈழத் தமிழர் தமது கைகளில் இருக்கும்வரை மட்டுமே இலங்கைத் தீவில் தனது நலன் காக்கப்படும் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே புரியும். இதன் காரணமாகவே, ஈழத் தமிழர்கள் தன்னை விட்டு விலகிச் செல்லா வண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆயினும், தற்போதுள்ள அரசியல் கள நிலையும், அந்த மக்களது மனநிலையும் தமக்;குச் சாதகமானதாக இல்லை என்பதை இந்தியா உணர்ந்தே வைத்துள்ளது. அதனால், இந்தியா ஈழத் தமிழர்கள் மீது பல்வேறு உளவியல் யுத்தங்களை மேற்கொண்டுள்ளது. 1) தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை தீவிர தமிழ்த் தேசிய விடுதலை அமைப்பாகத் தமிழீழ மக்களை நம்ப வைப்பது. தேர்தலில் வெற்றிபெற வைப்பது. 2) தமிழீழ மக்கள் மத்தியில் பெருகிவரும் இந்திய எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கும் விதமான செய்திகளை உருவாக்கிப் பரப்புதல். 3) புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலம் பெற்று வரும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவற்றிற்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைத்தல். ஆகிய மூன்று இலக்குக்கள் குறித்த நகர்வுகளை அவதானிக்க முடிகின்றது. அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேர்ணல் ஹரிகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிலையில் இறுக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதும், தமிழ்த் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான சுயாட்சியை வலியுறுத்தி, வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் கடும் போக்காளர்களான த.தே.கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண வலிந்து தெரிவித்துள்ளதும் இந்த முதலாவது இலக்கை நோக்கிய இந்திய நகர்வாகவே கருதப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து பத்து மாதங்கள் கடந்த நிலையில், இந்திய ஊடகங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் ஆகியோர் குறித்த தகவல்கள் திடீர் முளைப்பும், முக்கியத்தவமும் பெற்றுள்ளன. கடந்த பல மாதங்களாக இந்த இருவரும் 'இல்லை, இல்லவே இல்லை' என்ற கோதாவில் தமிழீழ மக்களை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு இப்படி ஒரு தகவலைக் கசிய விட்டதில் நிச்சயம் உள் நோக்கம் இருக்கவே செய்கின்றது. அதுவும், தமிழீழ மக்களது முக்கிய இரு தலைவர்கள் குறித்த செய்தியை இந்தியப் பத்திரிகைகள் அறிந்து கொண்டதும், அதனை முதன்மைப் படுத்தியதும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு உளவியற் போர் வியூகமே. தமிழீழ மக்கள் எதை நம்புவது? எதை நம்ப மறுப்பது? என்ற குழப்பத்தில், தமக்கு முன்பாக உள்ள பெரும் பிரச்சினையிலிருந்து கவனத்தை மாற்றுவதற்கான தந்திரோபாயத்தைக் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. இது இரண்டாவது உளவியல் தாக்குதல். மூன்றாவதாக, முள்ளிவாய்க்கால் பேரிழப்பிற்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கான பலமாக உருவாகி வரும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகிய இரண்டு அமைப்புக்கள் மீதான தாக்குதல். இது பிரித்தாளும் தந்திரம் ஊடாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றை முதன்மைப்படுத்துவதன் மூலம் இரண்டிற்கிடையேயும் முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைப்பது என்பது இந்தத் தாக்குதலின் இலக்கு. அண்மைக் காலங்களில் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த பிரமிப்பான செய்திகள், கருத்துக்கள் இந்திய, சிங்கள ஊடகங்களில் வருவதை அவதானிக்கலாம். 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற அற்புதமான தமிழ்த் தேசிய போராட்ட வடிவம் தற்போதுதான் செயல்பட ஆரம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடைக்காது. அதே போன்றே, ஏற்கனவே உருவாக்கப்பட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பை புலம்பெயர் தேசங்கள் எங்கும் முன்னெடுத்து, வரலாற்றுப் பதிவைப் புதுப்பித்து பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் ஆகியோரை அழைத்து முதலாவது மாநாட்டை நடாத்தி சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, போர்க் களத்தில் நிற்கும் உலகத் தமிழர் பேரவையையும் புறந்தள்ள முடியாது. நாடு கடந்த தமழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களது வார்த்தையில் சொல்வதானால், இந்த இரண்டு அமைப்புக்களும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான இரட்டைக் குழல் துப்பாக்கி. இவற்றிற்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைக்கும் நோக்கோடு மூன்றாவது தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களது விருப்பு வெறுப்புகள்மீது இந்தியா இவ்வளவு அக்கறை கொள்ளுமா? என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயமே. ஆனாலும், இந்திய வல்லாதிக்க நலன் பேண இலங்கையில் கால பதித்திருந்த இந்திய சமாதானப் படை காலத்தில் விடுதலைப் புலிகள் அதிர்ச்சிகரமான ஒரு நகர்வை மேற்கொண்டிருந்தனர். ஈழத் தமிழர்கள் மீதான இந்தியக் கொடுங் கரங்களை அகற்றுவதற்கு விடுதலைப் புலிகள் தமது எதிரியான சிங்கள தேசத்தின் ஜனாதிபதி பிரேமதாசவுடன் சமரசம் செய்து கொண்டதையும், அதன் காரணமாக இந்தியப் படைகள் அவமானத்துடன் வெளியேறிச் சென்றதும் பாடம் படிக்க வேண்டிய வரலாறு. தற்போதும், ஈழத் தமிழர்களது நிலை அவ்வாறேதான் உள்ளது. இந்தியக் கொடுங் கரங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள அவர்கள் மேற்குலகின் பக்கமோ, அல்லது சிறிலங்காவுடனான நேரடி சமரசங்களிலோ ஈடுபட்டால் நிலமை விபரீதமாகிவிடும் என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. மேற்குலகினதும், சர்வதேச அமைப்புக்களினதும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிங்கள தேசம் இந்திய நலன்கள் சார்ந்து ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்காமல் தொடர்ந்து பயணிக்க முடியாது. ஒரு புள்ளியில் நின்று நிதானிக்க வேண்டிய நிலை நிச்சயம் உருவாகும். அந்தப் புள்ளியில் இந்திய பிரசன்னம் என்பது தேவையற்றதாகிப் போய்விடும் என்பதே இந்தியக் கவலையாக உள்ளது.

திலீபன் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது:நல்லூரில் சம்பவம்

நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது.