செவ்வாய், 23 மார்ச், 2010

சம்பிக்க ரத்னாயக்கா கேள்வி!

தென்னிலங்கையில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விவாதிக்கின்ற செயற்பாட்டாளர்கள் பலரும், போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் குறித்து எதுவும் பேசாது மறந்து விடுவதாக இடதுசாரி விடுதலை முன்னணியைச் சேர்ந்த சம்பிக்க ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். சுமார் 50 இலிருந்து 60 வரையிலான விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் போரின் போது கடுமையாகக் காயப்பட்டு கொழும்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற இவ்வமைப்பைச் சேர்ந்த 35 பெண் போராளிகள் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், இப்பெண்களின் நலன்கள் குறித்து எவரும் குரல் கொடுப்பதில்லை என்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பி.பி.சி. சிங்களச் சேவையில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கு நிரந்திர இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தாது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறினார். இவ்விவாதத்தில் சம்பிக்கா ரத்னாயக்காவின் கருத்தை மறுத்துப் பேசிய பிரபல நடிகையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவருமான கீதா குமாரசிங்க, விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து இப்பெண்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுவித்திருப்பதாகவும், அவருக்கு இப்பெண்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவின் கருத்தை ஏற்க மறுத்த சம்பிக்க ரத்னாயக்கா, தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினரின் குடும்பங்களின் மீது எடுக்கப்படுகின்ற கவனம் போல், போரின் போது இடம்பெயர்ந்த, படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பெண்கள் குறித்தும் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் அதற்கான தகுதி படைத்தவர்கள் என்பதையும் அவர் இவ்விவாதத்தில் சுட்டிக்காட்டினார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென, அரச மற்றும் எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா உள்ளது போன்று சிறிலங்காவிலும் பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளதாக சிறிலங்காவின் மகளிர் விவகார அமைச்சர் சுமேதா ஜயசிங்க தெரிவித்தார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அனைத்துக் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார். இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனாநாயக்க, உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடொன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் தவறிவிட்டது என குற்றம் சாட்டினார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 4.5 வீதமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட சம்பிக்கா ரத்னாயக்கா, 50 முதல் 60 வரையான பெண் போராளிகள் படைகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளபோதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் போராளிகளின் எண்ணிக்கை 1200 வரை இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக