செவ்வாய், 23 மார்ச், 2010

புதிதாகத்தோன்றும் போராட்ட விமர்சன புத்தி ஜீவிகள்........

ஒருவருக்கு செல்வம் வந்தகாலத்தில்,ஆகாயத்தில் விளங்குகின்ற விண் மீன்களிலும் பல அவருக்கு மிக்க உறவினராவர். அவரே தகாத துன்பத்தை அடைந்தால், அவரின் உறவுகளே அவரின் சொந்தமென்று சொல்ல விரும்பார். இதை இன்று உணர்வுள்ள ஈழத்தமிழ் மக்கள் கண்கூடாகக் காண்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களாக வேரோடி விழுதெறிந்து பெருவிருட்சமாகி எம் தமிழீழ மண்ணுக்கு நிழல்கொடுத்த ஆலமரம், ஏறக்குறைய இருபது நாடுகளின் ஆயுதபலத்தாலும்,ஆட்பலத்தாலும்,பல வருடகால சூழ்ச்சித் திட்டங்களாலும்,காட்டிக் கொடுப்புகளாலும் சென்ற ஆண்டு இறுதியாக முள்ளிவாய்க்காலில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டது. அந்த ஆலமரத்தில் கூடுகட்டி பெரும் புயல்களுக்கும், அடை மழைகளுக்கும் ஈடுகொடுத்து,துன்பங்களையே வாழ்க்கையாக வாழ்ந்த பறவைகளும் வீழ்ந்து, கூடுகளும் கலைந்து மாண்டுபோக, உயிரோடிருந்த ஒரு பகுதி பறவைகள் கொடியோரின் கைகளில் அகப்பட,ஓரு பகுதி பறவைகள் எதிரியின் முற்றுகையை உடைத்து தப்பிப் பறந்துசென்றன. அன்று அந்த ஆலமரத்தின் கீழ் பலகாலம் கொடிய வெய்யிலில் இளைப்பாறியவர்களே,இன்று அந்த ஆலமரத்தைப்பற்றி ஒரு சொட்டும் கவலைப்படாமல் நன்றியில்லாதவர்களாக, அதைக் கூறு கூறாகவெட்டி விறகாக்கி விற்பதில் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுவரை காலமும் தமிழ்மக்களாகிய எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பார்த்து வாய்மூடி மௌனமாக இருந்தோரில், ஆதரவு வழங்கியோரில், போற்றிப் புகழ்ந்தோரில் சிலர், இப்போது போராட்டத்தின் ஆயுதம் மௌனிக்கப்பட்டு 10 மாதங்களாகிய பின்பு பல விமர்சனங்கள் எழுதத்தொடங்கியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் எதையாவது எழுதவேண்டும், எழுதி எதிரியின் காலடியில் மண்டியிட்டு தங்கள் வசதிகளை ஏற்படுத்த பலபேர் கிளம்பியுள்ளனர். அதில் ஒருவர் அதிகப் பிரசங்கித்தனமாக, கப்பல்கட்டிய தமிழன் கப்பலுக்காக இறுதிநாளன்று காத்திருந்து மாண்டான், என எழுதியிருந்தார். மேலும், காட்டிற்குள் தோன்றி, காட்டிற்குள் வளர்ந்து, காட்டிற்குள் பாதுகாப்பாக இருந்த புலிகள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்று மிகவும் வேடிக்கையாகவும் அதேநேரம் வேதனையாகவும் இருந்தது. அவர் கூறும் புலிகள் நாலுகால் புலிகள். அவை காட்டில்தான் பிறக்கின்றன. எங்கள் தேசவிடுதலைக்காகப் பிறந்த இரண்டு கால் புலிகள் வீட்டிலே பிறந்து, உங்களோடே வளர்ந்து,உங்கள் துன்பங்களை, உங்கள் வேதனைகளை நேரில் பார்த்து தாங்கமுடியாமல் உங்களைப்போல் ஜடமாக வாழவிரும்பாமல் மண்ணுகாக மக்களுக்காக விடுதலைப் புலியானவர்கள். மற்றும் இறுதிப்போரின்போது விடுதலைப் புலிகளின் கையிலிருந்த கடல் ஆதிக்கம் சுருங்கத்தொடங்கி, போர் முடிவடைவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே அவர்களின் கடலாதிக்கம் முற்றாகக் கைவிட்டபின்பு, எந்தக் காட்டிலிருந்த புலிகளை, எந்தக் கடற்கரைக்கு இறுதிநாளின்போது வரும்படி யார் கட்டளையிட்டார்கள்? எங்கள் தமிழீழ எல்லைகளைச் சரியாக அறிந்திராதவர்கள், முள்ளிவாய்க்கால் எங்கே அமைந்துள்ளது என்பதை விளங்காதவர்கள் கூறும் சோடனைக் கதைகளைக் கேட்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. அவர் அதனுடன் நிற்பாட்டாமல், இறுதிப் போர்முடிந்து கடந்த 10 மாதத்தின் பின்பு ஞானம் பிறந்து, புலிகளின் அரசியல்துறை வெளிநாடுகளில் சரியாக இல்லை, மற்றும் புலம்பெயர் தேசத்திலுள்ள அமைப்புக்களின் தலைமைகள் எல்லாவற்றிலும் தன்னாலான குறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கும் ஒருபடி மேலேபோய், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் விடுதலை இலட்சியத்தையே வரித்து வாழ்வாக்கி போராடி வாழ்ந்து, தமது இரத்தமும் சதையும் பீறிட உயிரைக் கொடுத்த எங்களுக்காகவே தங்கள் உயிரையே தானம்செய்த தளபதிகளை, மாங்காய் தேங்காய் போன்று பொருட்களைப் போன்று டசின்கணக்கென எடைபோடும் இம்மாதிரியான தமிழர்களை எண்ணுகையில் எங்கள் உள்ளம் கொதிக்கின்றது. இவர்களைப் போன்றோர்க்கு இப்போது நேரம் நல்லாக இருப்பதால், பிள்ளையை நல்லாகக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குகிறதெல்லாம் இலாபம் என்ற வக்கரித்த மனப்பான்மையுடன், எதிரி செய்யும் வேலைகளை இவர்களே செய்து முடித்தாலும், காலம் ஒருநாள் பதில் சொல்லும். அவர் கூறியதுபோன்று எழும்ப இயலாத அடி விழுந்திருக்கலாம், ஆனால் விழ விழ எழுவது விடுதலைப் புலிகள். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் தமிழீழம் மலர்ந்தே தீரும். காலம் அதை தமிழர் கையில் தந்தேதீரும். கால்மார்க்ஸ் கூறியது போன்று இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லையெனினும் பெறுவதற்கான ஒரு உலகம் இருக்கின்றது. அதை எண்ணி நம்பிக்கையுடன் எம் பயணத்தைத் தெடர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக