செவ்வாய், 23 மார்ச், 2010

வந்துவிட்டது மார்ச் 27: அந்த 60 நிமிடங்களுக்கு தயாரா?

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வரும் 27ம் தேதி இரவு ஒரு மணி நேரம் மட்டும் மின்சார உபயோகத்தை தவிர்க்க தயாராகி வருகின்றனர். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த, இயற்கைக்கான சர்வதேச நிதியம் (wwf) என்ற நிறுவனமும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து கடந்த 2007ம் ஆண்டில் ‘எர்த் அவர்’ என்ற திட்டத்தை அறிவித்தன. இயற்கையை பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு, மின்சார எரிசக்தி சேமிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அவசியமற்ற விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களையும் ‘ஆஃப்’ செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. முதலில் சிட்னி வாழ் மக்கள் சுமார் 22 லட்சம் பேர் சேர்ந்து செயல்படுத்தியதைப் பார்த்து உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் இதைப் பின்பற்ற மக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து ஒவ்வொரு மார்ச் மாதமும் இறுதி சனிக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை (அந்தந்த உள்ளூர் நேரப்படி)இந்த தி்ட்டத்தை கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாத இறுதி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் 88 நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 88 நகரங்களில் இந்த ‘எர்த் அவர்’ கடைப்பிடிக்கப்பட்டது. சுமார் 100 கோடி மக்கள் இந்த இயக்கத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் இநத திட்டத்தை கடைப்பிடிப்பதில் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் இந்தாண்டு ‘எர்த் அவர்’ வரும் சனிக்கிழமை (மார்ச் 27) கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்தாண்டை விட அதிகளவில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளன. வீடுகள், தனியார் நிறுவனங்கள், பல்வேறு அரசு கட்டிடங்கள், வளாகங்கள், நினைவுச் சின்னங்கள் என பல இடங்களிலும் வரும் 27ம் தேதி அந்தந்த பகுதிகளின் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயற்கை இருளை தரிசிக்க தயாராகி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக