வியாழன், 1 ஏப்ரல், 2010

வீணைத் தலைவருக்கு யாழிலிருந்து திறந்தமடல்


1. சனாதிபதித்தேர்தலின் பின்னர் நீங்கள் விட்ட அறிக்கையில் உங்கள் பெரும்பாலான ஆதரவாளர்கள் நீங்கள் தனித்து போட்டியிடுவதனையே விரும்புவதாகவும் அதுதொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் இரண்டுமுறை அறிக்கை விட்டீர்களே பின்னர் ஏன் மகிந்தவின் கண்டிப்பான உத்தரவுக்கு இணங்கி போனீர்கள்? நீங்கள் தனித்து போட்டியிட்டால் 2-4 ஆசனங்கள்வரை பெறக்கூடியதாக இருக்குமென்று சனாதிபதிக்கு சொன்னபோது 4 சீற்றுவேணுமோ ஒரு அமைச்சு வேணுமோ? என அவர் திருப்பிகேட்டதாகவும் அறிகிறோம் உண்மையா? சொர்க்கமே என்றாலும் ஒரு அமைச்சை போலவருமா? அதுசரி இணங்கி போனால்தானே உங்கள் சகாக்களின் (உறுப்பினர்களினதும் அவர்கள் குடும்பத்தினதும்) வயிற்றுபிளைப்பாவது சங்கடமில்லாமல் போகும். இல்லாவிடின் அவர்கள் பழையபடி (இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்)கடத்தல், கப்பம்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் பின்னர் கட்சியின் மரியாதை போய்விடுமென்று சொன்னீர்களாம் உண்மையா? இப்போ சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் விடயம் வெளியில் தெரியவரப்போகிறதே என்ன செய்வதாக உத்தேசம் 3கோடி கேட்டார்களாம் நான்கு கோடி கொடுத்தாவது விசயத்தை மறைத்துவிடப்பாருங்கள். இல்லாவிடின் ஒரு சீற்றும் இல்லாமல் போய்விடும்.
2. மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்தீர்களோ இல்லையோ உங்கள் பிரச்சார பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் எல்லா வீட்டு மதில்களிலும் இடம்பிடித்துள்ளன. உங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பிரசுரங்களையே (மகிந்தரால் நேரடியாக உங்களுக்கெதிராக நிறுத்தப்பட்டோரின்) கிழித்தெறிந்துவிட்டும் அதற்கு மேலாகவும் ஒட்டுகின்றீர்களே யாரின் மனதில் இடம்பிடிக்க.
கோப்பாய் பகுதியில் உங்கள் அட்டகாசம் தாங்கமுடியவில்லையே! கரவெட்டிப்பகுதியில் ஆயிரத்திற்கு மேல் ஒட்டினீர்களே ஒரு பிரசுரமாவது ஒழுங்காக கிழிக்காமல்; இருக்கிறதா? ஒருமுறை போய்பாருங்கோ கரும்புலி மில்லரை பெற்ற மண்ணப்பா அங்கேயும் உங்கள் அவல் அவியுமா? அங்கே மற்றவர்களின் பிரசுரங்கள் அப்படியே இருக்கிறதே. மற்ற இடங்களில் கிழிக்கவில்லையே என சந்தோசப்படாதீர்கள் 35000 மாவீரர்களில் 10000மேற்பட்டவர்கள் யாழ்பாண மண்ணிலே உருவானவர்கள் அவர்கள் ஒவொருவரினதும் உற்றார் உறவினர்களே இங்கே இருக்கின்றார்கள் ஒவொருவரின் ஆள்மனமும் குமுறிகொண்டுதானிருக்கின்றது.
உயிர்ப் பயத்திலேயே எனையோர் கிழிக்காமல் இருக்கிறார்கள் நீங்கள் 2006-2009 இடையான காலப்பகுதியில் இராணுவத்துடன் சேர்ந்து 2500-3000 வரையினான இளைஞர்களை கடத்திகொலை செய்தீர்களே உங்களுக்கு ஞாபகமிருக்காது. என்ன அழகாக வர்ணம் பூசப்பட்ட மதில்களை உங்கள் கூலிப்பட்டாளங்கள் அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், வீட்டுவாசலால் புறப்படும்போதே இந்த தாடிக்கேடிகளின் முகத்திலா முழித்து செல்வதென்று எதிர்வீட்டு பாலா அண்ண அடிக்கடி எங்கள் சுவரைபார்த்து சினப்பதுவும், காலைவிடிந்தவுடன் கோயில்களில் சிவபுராணமோ திருப்பள்ளியெழுச்சியோதான் படிப்பதுண்டு.
ஆனால் உங்கள் கதாபிரசங்கத்தைதான்  விடிந்தவுடன் கேட்கும் அழுகுரல் போல ஓலமிடுகின்றீர்களே இதனால் எதிர்ப்புக்கள்தான்கூடும். நீங்கள் நல்லது செய்தால் விளம்பரம் தேவையில்லை மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள் உலகத்திலே தமிழர்களுக்கென்று ஒருவர் இருக்கின்றார் அவர் பிரச்சாரம் செய்வதுமில்லை பிரசுரம் வெளியிடுவதுமில்லை கதைப்பதில்லை விளம்பரமில்லை செயல்மட்டுமே செய்தார்.
ஆனால் ஒவொரு தமிழரும் ஆழ்மனதில்; வைத்து பூசிக்கின்றார்கள் எதற்கென்று சிந்தித்து பார்த்ததில்லையா? அதில் ஒரு ஐந்து வீதமாவது நல்லவராக இருக்க முயற்சிக்கலாமே. பாடசாலை மாணவனை கடத்தி கப்பம் கேட்கிறாராம் உங்கள் தென்மராட்சி அமைப்பாளர் வடமராட்சி அமைப்பாளரோ வவுனியாவிலிருந்து சகோதரியை அழைத்து சில பெண்களுடன்சேர்ந்து வீடுவீடாக கதவு தட்டுகினமாம். முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து நியமனம் தருவதான பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லுகினமாம்.
3. பாசையூர் பிரதேசத்தில் உங்கள் கட்சி அமைப்பாளரின் இலக்கத்தை சொல்லியே உங்களுக்கு பிரச்சாரம் நடக்கிறதாம் என்ன வங்குரோத்து நிலமை நினைக்கவே கவலையா இருக்கு. உங்கள் சனாதிபதியின் பிரசுரத்திற்கு மேலாகவே உங்கள் பிரசுரங்கள் ஒட்டப்படுகிறது. அவளவு வெறுப்போ அவரில என்னப்பா செய்யிறது பிள்ளையானபோல தனிய சின்னத்தில கேட்கலாமெண்டா விடுறாங்களில்லை கேட்டா அமைச்சும் போயிடும் இவளவு காலமும் கனவு கண்ட முதலமைச்சு ஆசையும் போய்விடும் என்ன செய்யிறது கண்டத்தில சனிபோல கவனமா இருங்கோ.
4. அச்சுவேலி கூட்டதிலையும் ஆக்களை காணேல்ல உங்கடை சகாக்கள்தான் அரைவாசிப்பேர் வந்தினம் இப்ப கொஞ்சம் பாதுகாப்பும் கூட்டியாச்சுபோல அவங்கட வாகனம்தான் கனக்க நிண்டது. கொஞ்சப்பேர் தொண்டர் ஆசிரியருக்கும் பட்டதாரி ஆசிரியருக்கும் நியமனத்துக்காக எல்லா கூட்டத்துக்கும் வரச்சொல்லுறாங்களெண்டு அலுத்து கொள்ளுதுகள். 1999ஆம் ஆண்டு சிறீதர் தியட்டரில வைத்து சமுத்தி நியமனம் கொடுத்தபோது மத்தியில் கூட்டாட்சி என்று நீங்கள் சொல்லிமுடிய மாநிலத்தில சுயாட்சியெண்டு அவையள் திருப்பி சொல்லோணுமெண்டு நீங்கள் வற்புறுத்த எல்லாரும் அமைதியாயிருக்க உங்களுக்கு விருப்பமில்ல போல எண்டு நீங்க சொன்னது ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன்.
5. கடந்த சனாதிபதி தேர்தலில் நல்லூர் கோவிலில் மகிந்தவுடன் நீங்கள் வந்தபோது வேட்டிஅவிழ்ந்துபோனதும் ஞாபகம் இருக்கோ ஆனால் பக்கத்திலநிண்ட அம்மா (யாழ்மேயர்)அடிக்கடி சொல்லி திரியிறாவாம். திரும்பவும் உங்கட தலைவர் ஏப்பிரல் முதலாம் திகதி வாறாராம் வேட்டியை கவனமா கட்டுங்கோ ஏப்பிரல் முதலாம் திகதி(முட்டாள்கள் தினம்) தமிழர்களை முட்டாளாக்க மீண்டுமொருமுறை யாழ் வாறார் கவனம் கபில்நாத் விடயம் தொடர்பாயும் காதோடகாதா சமாளிச்சிடுங்கோ. அவரையும் அங்கஜன் இராமநாதன்தானாம் வரவேற்க போறார் உங்கடபாடு கஸ்டம்தான்.
6. உங்களை பற்றி நிறைய நம்பிக்கை எங்களுக்கிருக்கு நாங்கள் அங்க இருந்து ஒவ்வொருநாளும் செத்துகொண்டும் பசிவேதனையிலும் தவித்தபோது இந்தியாவிலேகூட மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தினார்கள் தீக்குளித்தார்கள் ஆனால் ஒரே இரத்த உறவுகள் இங்கே கொதிப்படையகூடாது என்பதற்காக கேழிக்கை இசைநிகழ்ச்சிகளையும,; விளையாட்டுபோட்டிகளையும் அடுத்தடுத்து நடாத்தி மக்கள் மனங்களை காத்தவரல்லவா?
7. கடந்த தேர்தலில் நீங்கள் அச்சடித்த பிரசுரங்களை பத்திரிகையில் வைத்து விநியோகிக்க மறுத்த உங்கள் ஆதரவு பத்திரிகையான வலம்புரியையே நடுவீதியில் வைத்து உங்கள் சகாக்கள் கொழுத்தினார்களே அப்போதைய உங்கள் பத்திரிகை தர்மத்தையும் பார்த்தனாங்கள்தானே.
8. அரச உடைமைகள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாதாம் ஆனால் திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரி வாகனம் முழுவதும் வெற்றிலைச்சின்ன சுவரொட்டியோட திரியுது தெரியுமோ உங்களுக்கு தெரியாது மக்களுக்கு புரியும்.
9. எல்லோரும் ஓடிப்போனபோது நாங்கள்தான் நிண்டம் எண்டு சொல்லுறிங்களே 2002ஆம் ஆண்டிலிருந்து சிலஆண்டுகள் எங்க போனிங்கள் வடமராட்சி அலுவலகத்தை மக்கள் தாக்கி அழித்தபோது ஓடிப்போய் நெல்லியடி பொலீஸ் நிலயத்தில் உங்கடைஆக்கள் தஞ்சம் கோரியதும் பின்னர் கம்போடியாவுக்கு ஓடிப்போனதும் மக்களுக்கு தெரியாதெண்டு நீங்கள் நினைச்சல் நாமென்னசெய்ய.
10. இருமாதங்களுக்குமுன்னர் நீங்கள் கட்சிக்குள் முறுகுப்பட்டு இராஜனாமாச்செய்வதாகவும் மக்கள் இதை விரும்பாமல் ஆர்ப்பாட்டம் தெய்வதாகவும் உங்கள் கூலியாட்களே முதல்நாளே டிப்போவிற்கு மிரட்டியதும் தனியார் வாகனங்களை மறித்து தாக்கியதையும் நாமறிவோம். முன்னர் இந்திய அரசியல் பாணியில் நீங்கள் இராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்து ஊர்வலம் வந்ததையும் நெல்லியடியில் மக்கள் பஸ்ஸிற்கு காந்துநிற்க நீங்கள் கையசைத்து சென்றீர்களே யாராவது ஒருவர் உங்களுக்கு கையசைத்தார்களா எத்தனைபேர் இந்த தொலைவாங்களால ஒன்டும் செய்யயேலா என திட்டியதையும் நீங்கள் அறியமாட்டிங்களே.
11. இறுதியாக ஒன்று எலெக்சன் முடிவு வரும் வழமைபோல பீ.பி.சி உங்களை பேட்டி காணும் தோல்விக்கான காரணம் கேட்பார்கள் நீங்கள் இதில் எதையும் சொல்லிப்போடாதேங்கோ வழமைபோல மக்கள் மீண்டுமொருமுறை தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளார்கள் என்ற உங்கள் பதிலையே சொல்லுங்கோ 

ஆனந்தபுரம் ஓர்ஆண்டு..

வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.


அதன் நினைவுகளை மீட்டிப்பார்கவேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.


இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.


தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஆனந்தபுரத்தினை விட்டு பின்னகரமாட்டேன் என்பதற்கு இணங்க சில நேரடி கட்டளைகளை வழங்கிகொண்டு இருந்தார். தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிகேடியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள்.


இதேபோன்றுதான் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து ஆண்டு ஒன்றாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.


இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை ஜனநாயக ரீதியில் மேற்கொள்வோம்.