செவ்வாய், 29 டிசம்பர், 2009

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்?

சிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பு தமது முடிவினை விரைவினில் வெளிப்படுத்தவேண்டிய நிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தின் மூலம் சாதிக்கப்போவது என்னென்னவென்பது பற்றியும் அதற்கு அவசியமான காரணங்கள் பற்றியும் அலசுகிறது இக்கட்டுரை.
ஆட்சிமாற்றம் ஏன் அவசியம் என்பதற்குப் பத்துக்காரணங்களை இக்கட்டுரை இனங்கண்டுள்ளது. முன்னர் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி முழுமையான தொகுப்பாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் அதிகமாகவே இருக்ககூடும்.
ஆட்சி மாற்றத்தின் மூலமே டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றோரிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்க சாத்தியம் உள்ளது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகளை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் விடுவதன் மூலம் தமிழர்களது இருப்பையே இலங்கைத்தீவில் இல்லாமல் செய்துவிடுவதே மகிந்த சிந்தனையின் திட்டமாகும். மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை இவர்களும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வேலைகளுக்கே துணை போய்க்கொண்டிருப்பார்கள்.
சிங்கள தேசத்தின் அரசனாக வலம் வரும் மகிந்த ராஜபக்ச, தான் சிங்கள தேசத்தின் மன்னன் என்பதை நிலைநிறுத்தவே முயற்சி செய்கிறார். சிறிலங்காவில் சிறுபான்மையினங்கள் என்ற ஒன்று இல்லையெனக் கூறும் அவர் தேசப்பற்றாளர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் இரண்டு இனங்களே இருப்பதாகக் கூறுகிறார். இப்படியான மகிந்தவை ஆட்சியில் தொடரவிட்டால் தமிழர்களுக்கு நிச்சயமான அழிவென்பதே உறுதியாகிவிடும்.
மகிந்தவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச – போர் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லும் இன்றைய நிலையிலும் – தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகளுக்கும் முழுக்காரணமாக இருந்து வருகின்றார். தற்போது தேர்தல் காரணத்திற்காக தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் குறைந்தாலும் மீண்டும் ஆட்சி அதிகாரம் உறுதியானவுடன் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் சமயத்திற்கூட தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பிரான துரைரட்ணசிங்கத்தை விடுவிக்கும் எண்ணமோ அல்லது திஸ்ஸ நாயகத்தை விடுவிக்கும் எண்ணமோ இவர்களுக்கு இல்லை.
தற்போதைய சிறிலங்கா அரசானது மேற்குலகின் எந்தக் கருத்துக்களையும் செவிமடுக்ககூடிய நிலையில் இல்லை. அண்மையில் ஜிஎஸ்பி வரிச்சலுகை விடயத்திலோ அல்லது போர்க்குற்றங்களுக்கான விசாரணை தொடர்பிலோ மேற்குலகின் கரிசனைகளைக் கேட்கின்ற நிலையில் இல்லையென்பதைக் கண்டுகொள்ளலாம். மேற்குலக அரசியலானது தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் தற்போதும் அது அக்கறையுடனே செயற்பட்டு வருகின்றது. எனவே மேற்குலகின் கரிசனைகளைச் செவிமடுக்கக்கூடிய ஓர் அரசை மாற்றீடு செய்வதே தமிழர்களுக்குப் பலமாகவிருக்கும்.
தமிழ்மக்கள் தமது முக்கிய அரசியல் உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையோ அல்லது அவர்களது கருத்தைத் தெரிவிப்பதற்கான சூழ்நிலையோ இல்லாமல் இருக்கின்றது. தமிழர்கள் தமது கருத்தை தமது தாயகத்திலிருந்து பயமின்றித் தெரிவிக்க முடியாதவிடத்து எவ்வாறு எமது பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர முடியும்? ஆட்சி மாற்றத்தின் மூலம் ஒரளவுக்காவது அதற்கான சூழ்நிலை ஏற்படுமென எதிர்பார்க்ககூடிய நிலைமையுள்ளது. அவ்வாறான இடைவெளியே தாயகத்திலுள்ளவர்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுக்கும்.
தமிழ்வேட்பாளராக நிற்கும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்த இந்தியா விரும்புகிறது. தமிழர்களது போராட்டத்தைச் சிதைப்பதில் இறுதிவரை உறுதியுடன் செயற்பட்ட இந்தியா தமிழர்களது தேசிய ஆன்மாவைச் சிதைத்து சிறிலங்காவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்களது தேசிய அரசியலைக் கரைத்துவிட முனைகிறது. தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய நிலைமை தாயகத்தில் இல்லை. அதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தாதவரை அவ்வாறான முடிவுகளை எடுப்பது சரியாக இருக்காது. சிவாஜிலிங்கத்தின் தேசிய அரசியலை இந்தியா ஏற்றுக்கொள்ளாத அதேவேளை மகிந்தவை வெற்றிபெறவைப்பதற்கு சிவாஜிலிங்கத்தைப் பயன்படுத்த விரும்புகிறது.
தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின்போது சிவாஜிலிங்கத்தைக் கண்டு மகிந்த ராஜபக்ச கண்சிமிட்டியதாக தினக்குரலின் கட்டுரையாளர் கும்பகர்ணன் தெரிவித்துள்ளார். அந்தக் கண்சிமிட்டலின் பின்னுள்ள விடயங்களை எச்சரிக்கையுடனே நோக்கவேண்டும். மகிந்தவுடன் இணக்க அரசியல் நடத்தவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் சிறிகாந்தாவும் சிவநாதன் கிசோரும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது ஏன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். சிவநாதன் கிசோர் ஒருபடி மேலேபோய் மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக ஆதரவளிக்கப் போவதாகவும் தகவல்கள் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளையே பயன்படுத்தி தமிழ்மக்களின் வாக்குகளைப் பிரிக்க மகிந்த அரசு பயன்படுத்தும் உத்திகள்தாம் இவை.
தமிழர்களுக்குப் போரின் அவலத்தைப் பரிசளித்த படைத்தலைவர் என்ற வகையில் சரத் பொன்சேகா இருந்தாலும் அவர் ஆட்சி பீடம் ஏறினாலும் அவரால் முன்னைய அரச தலைவர்கள் போல செயற்படமுடியாது. பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பைப் போன்ற நிலையில்தான் சரத் பொன்சேகாவின் பதவி நிலை இருக்கும். பாராளுமன்றத்திற்கே அதிக அதிகாரங்கள் இருக்கும். அதன் மூலம் அதிகாரமற்ற அரச தலைவராகவே சரத் பொன்சேகா இருப்பார். எதிரிகள் பலவீனமாக இருக்கும்போதே தமிழர்களது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளில் ஜேவிபி தவிர்ந்த மற்றைய கட்சிகள் இனவாதத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அல்ல. ஜேவிபியில் கூட கடும் இனவாதத்தை முன்னிறுத்திய விமல் வீரவன்ச போன்றோர் மகிந்த அரசுடன் சென்றுவிட்டார்கள்.
மகிந்த அரசானது மலையகத் தமிழ் கட்சிகளைக் கையாளும் விதத்தைப் பார்க்கவேண்டும். அமைச்சுப்பதவிகளைக் காட்டி அவர்களது அரசியல் விலை பேசப்படுகின்றது. தற்போதைய நிலையில் மலையக அரசியல் தலைமைகள் சுயமாக தமது கட்சி தீர்மானங்களை எடுக்கமுடியாமல் இருக்கின்றனர். இதேபோல அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலிலும் தனது கட்சியின் சின்னத்திலேதான் போட்டியிடுமாறு டக்ளஸ் கூட
'அன்போடு' அறிவுறுத்தப்பட்டிருந்தார். தமிழர்களது அரசியலை முன்னெடுக்கும் எவரும் தமது கட்சியுடன் இணைந்துதான் செயற்படவேண்டும் என்பதில் மகிந்த அரசு கவனமாகவே இருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட காரணங்களிலிருந்து சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்றே தமிழர்களுக்கான தற்காலிகத் தளர்வொன்றை உடனடியாக வழங்கக்கூடியதாக இருப்பதுடன் அதுவே தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல் வேலைத்திட்டங்களுக்கும் பொருத்தமாகக் காணப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

ஈழநேசன்

அலைகள் ஓயாது....!

இதயத்தில் இனத்தின் விடுதலை நெருப்பை சுமந்து தமிழ் ஈழத்திற்காய் கடைசி மூச்சு வரை போராடி மடிந்த மாவீரர்கள் உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.... தேசத்தின் சுமையை தோள்களில் சுமந்து தமிழீழ தாயகத்திற்காய் உயிர் துறந்த மக்களே உங்களுக்கும் எங்கள் வீர வணக்கம்... தமிழினம் முடிந்து போன இனமல்ல எங்கெல்லாம் தமிழன் இருக்கின்றானோ அங்கெல்லாம் கனன்று கொண்டிருக்கும் விடுதலை நெருப்பு வாழும் போதும் தலைவன் வழித்தடத்தில் வாழ்ந்து வீழும் போதும் வெல்வோம் என்றபடி வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் மனங்களில் எறிந்த நெருப்பு நீதியை மறந்த உலகத்தின் கண்களுக்கு தமிழீழம் பொய்த்துப் போன கனவாகத் தெரியலாம் சற்று தாண்டவம் ஆடி தமிழ் இனத்தையே அழித்த கொடுங்கோலாட்சி சிங்களம் அழிந்து விட்டதாக நினைக்கும் ஆனாலும் நாங்கள் ஓயாத அலைகளாய் வீசிக் கொண்டிருப்போம் எங்களை உலகம் விரைவில் புரிந்து கொள்ளும் என்றுமில்லாதவாறு எழுகின்ற தமிழினத்தின் ஒன்ரினைவே இனியொரு விடுதலையை படைக்கும் என்பதை தமிழர்கள் மனங்களில் தெரிந்து கொள்ள வேண்டும் உலக வல்லரசுகளின் ஆசீர்வாதமும் சிங்கள அரக்க தாண்டவமும் உலகின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்த ஒரு குழந்தையின் குரல் வலையினை நசுக்கி விட்டிருக்கிறது உலக வல்லரசுகளின் மௌனம் கொடுத்த அங்கீகாரம் ஒரு இனத்தை கொடுமையாக அழித்து விட்டிருக்கிறது பிரசவிக்கப் போகின்ற தமிழீழ குழந்தையின் குருதி குடித்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும் எப்படி மன்னிக்க முடியும் விடுதலை நெருப்பைச் சுமக்கின்ற மனங்களே உங்கள் கரங்கள் எப்போதும் ஒன்றாய் இணையட்டும் விடுதலை சுமைகளை சுமக்கின்ற தோள்களே அவை எப்போதும் வலுவாய் இருக்கட்டும் அந்நிய தேசங்களில் அலைந்து திறந்தபடியே தாயகத்தை மறந்து அப்படியே காலம் கழிக்க முடியுமா? மீண்டும் நிமிர்வோம் என்ற நம்பிக்கை எங்கள் மனங்களில் நிறையவே இருக்கிறது நமக்கான வரலாற்றை படைக்க இனி அலையாய் எழுவோம் இன்று வரை நடந்து முடிந்த துயரங்களை எல்லாம் துடைத்து விடுதலை காற்றை சுவாசிக்கும் ஒரு காலம் நமக்கு கிடைப்பதற்காய் வீறுகொண்ட தாயக கனவை மனங்களில் நிறைப்போம்
உலக வரலாற்றில் தமிழீழம் படைப்போம்
"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"