வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்கு பா.ஜ.க குரல்கொடுக்கின்றது.

சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ​ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் இலங்கையில் ஜனநாயக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,​​ இலங்கையில் முன்னாள் ​ ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பா.ஜ.க.​ தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது பாதுகாப்பு மற்றும் நலத்தினை உறுதிசெய்வதுடன்,​​ கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை உடனடியாக விடுவிக்க அதிபர் ராஜபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.​ வேண்டுகோள் விடுக்கிறது. அண்டை நாடான இலங்கையில் இதுபோன்று ஒரு ஜனநாயக அத்துமீறல் நடைபெறுவதை,​​ மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் ராஜபட்ச அரசு உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனவும் பா.ஜ.க.​ கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல

அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல. மக்களைப் பயமுறுத்தி அரசியல் நடத்திய யுகத்தை இம்முறை ஜனாதிபதித் தேர்தலோடு நாட்டிலிருந்தே தம்மால் ஒழிக்க முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தங்காலை நகரில் நேற்று நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். எழுபதுகளில் தமது அரசியல் வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் வழங்கிய மக்கள் மத்தியில் தற்போது தமது புதல்வரின் அரசியல் வாழ்க்கை ஆரம்ப நிகழ்வில் கருத்துக்களைப் பரிமாறக்கிடைத்தமை தமக்குக் கிடைத்த பாக்கியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தமதுரையில் மேலும் கூறியதாவது: எவருக்கும் அரசியல் செய்யக் கூடிய உரிமைகள் உள்ளது. எனினும், நாட்டை மீண்டும் பயங்கரவாதிகளுக்குக் காட்டிக்கொடுப்பதற்கோ நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது. 2500 வருடங்கள் பெளத்த உபதேசங்களால் போதிக்கப்பட்ட நன்றியுணர்வுடைய மக்கள் வாழும் இந்த நாட்டில் எப்போதும் வாய்மையே வெல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ; சகல இன, மத, சமூகங்களையும் கொண்ட இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்று, ஆசியாவிலேயே சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அம்பாந்தோட்டை மக்களுடன் இணைந்து தாமும் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாகவும் தெரிவித்த அவர்; தமது அன்பான தாயாரின் நிழலில் கல்விக்கண் திறந்து முதலெழுத்தைப் படித்தது போல் தந்தையாரின் அரவணைப்பிலிருந்து அரசியல் அரிச்சுவடியைக் கற்பதனைத் தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வுக்கு முன்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தங்காலை நகரில் அமைந்துள்ள பீ. ஏ. ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த சமரவீர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம்

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பேதங்களை மறந்து வீதியில் இறங்கி போராட சகல மக்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு பூராவுள்ள விகாரைகளில் விசேட பூஜைகளை நடத்தி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பிரபாகரனால் தற்போது எமக்கு தொல்லையில்லை. ஆனால், மீண்டுமொரு புதிய பிரபாகரனுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான சூழ்நிலையை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினார். நேற்று தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜெனரல் சரத் பொன்சேகா இந்த நாட்டு மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள வீரமிக்க இராணுவ தளபதி. அவரை இன்று மிகவும் மோசமான விதத்தில் கைது செய்துள்ளனர். இதனை ஒருபோதும் இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ தளபதியொருவருக்கு எதிராக இவ்வாறு மோசமான நடவடிக்கைகளை எடுத்திருக்கக் கூடாது. அவர் பல தடவைகள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான போதும் கூட தமது பணியை இடைநிறுத்தாமல் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர். முதலாம் விஜயபாகு மன்னனுடைய காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புத்தராஜ போன்ற வீரர்கள் எவ்வாறு கௌரவிக்கப்பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த படை தலைவனுக்கு கௌரவம் வழங்க வேண்டும். மாறாக, அந்த படை வீரனுக்கெதிராக இவ்வாறான மோசமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது. நன்றியுள்ள எவரும் இதனை அனுமதிக்க மாட்டார்கள். உலகிலேயே சிறந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று அன்று பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுக்களை கூறியிருந்தார். அது மாத்திரமல்லாமல் நாடுபூராவும் அவருடைய கட்அவுட்கள், பதாகைகள் என்பன வைக்கப்பட்டு பால்சோறு உண்டு அவரை கௌரவித்தார்கள். அவ்வாறான ஒருவரையே இன்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீதும் சொத்துக்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். எனவே, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக வெற்றியடைந்திருந்தால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. ஊடக நிறுவனங்களை "சீல்' வைப்பதன் மூலம் ஊடகவியலாளர்களை தாக்கி அச்சுறுத்துவதன் மூலம் கருத்து சுதந்திரத்தையும் பறித்துள்ளனர். எனவே, இவ்வாறான கொடுங்கோலர்களிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். அதற்காக அச்சமின்றி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்

அமெரிக்காவில் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்கலாம்

அல் கொய்தா தீவிரவாதிகள் இப்போது சிறிய அளவில்தான் இயங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது தாக்குதல் திறன் அப்படியே இருக்கிறது.அவர்கள் எந்த நேரத்திலும் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் செப்டம்பர்-11 தாக்குதல் போல பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடியாது. இப்போது அமெரிக்காவுக்கு ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தானை விட பாகிஸ்தான்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பாகிஸ்தான் பெரிய நாடு, அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடு, அங்கு முழுமையான ஜனநாயகம் இல்லை. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருந்தால் அது பிரச்சினையாக உருவெடுக்கும் என்றார்.

திறந்த வெளியில் தகனம் : பிரிட்டனில் இந்து நபருக்கு சட்டப்படி உரிமை

பிரிட்டனில் வசிக்கும், இந்து சமய நபர் ஒருவர், தான் இறந்த பிறகு திறந்த வெளியில் தகனம் செய்யப்படும் உரிமையைச் சட்டப்படி வென்றுள்ளார். பிரிட்டனின் சட்ட விதிமுறைகளின் படி உடலங்களை எரியூட்டும் கூடங்களில் மட்டுமே தகனம் செய்ய முடியும். எனவே 71 வயதான தேவாந்தர் காய் என்பவர், தான் இறந்த பிறகு தனது உடல் திறந்த வெளியில் தகனம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை அவரது உள்ளூராட்சி அதிகார சபை மறுத்துவிட்டது. எனினும் தனது முயற்சியை தேவாந்தர் காய் கைவிடவில்லை. தொடர்ந்து வாதிட்டார். ஒரு நல்ல மரணத்துக்கும், இறந்த பிறகு தனது ஆன்மா உடலில் இருந்து விடுபட்டுச் செல்லவும் திறந்த வெளி தகனம் மிகவும் அவசியம் என்று அவர் வாதிட்டார். வழக்கிலும் வென்று அதற்கான உரிமையை வென்றுள்ளார். இது தொடர்பான சட்டத்தில் தெளிவைப் பெறவே தான் வழக்கை தொடுத்தாக அவர் கூறினார்

மரபணு மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மரபணுக்களின் மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிறீன்லாந்தில் இருந்து மீட்கப்பட்ட பண்டையகால மனிதனின் தலை முடி மரபணுக்களை சோதனை செய்ததன் மூலம் இந்த புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நேசர் என்ற விஞ்ஞான ஆய்வு சஞ்சிகையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வயது வந்த ஆண்களின் தலை மையிர் கருமையாக காணப்பட்டதாகவும், தலையில் வழுக்கை விழுந்திருந்ததாகவும், கபில நிற கண்கணை கொண்டிருந்ததாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறித்த நபரின் மரபணு கிறீன்லாந்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அவரது பூர்வீகம் சைபீரியாவாக இருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குளிர்கால நிலைகளுக்கு ஏற்ற வகையில் குறித்த நபரின் உடற் கட்டமைப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தபாய சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்காவும் நோர்வேயும் கடும் தொனியில் மறுத்துள்ளன பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தபாய சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்காவும் நோர்வேயும் கடும் தொனியில் மறுத்துள்ளன

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் பிரசாரங்களுக்கு நிதியளித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நோர்வேயும் அமெரிக்காவும் மறுத்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக்குற்றச்சாட்டை சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ரெயிட் டைம்ஸ் செய்திதாளுக்கு இன்று வழங்கிய செவ்வியில் சுமத்தியிருந்தார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நோர்வே, ஏனைய நாடுகளின் தேர்தல்களிலும் ஜனநாயகத்திலும் தமது நாடு தலையிடாது என தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இன்று வெளியுறவுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதேவேளை கோத்தபாயவின் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் கடுமையான தொனியில் மறுத்துள்ளது. எனினும் கோத்தபாயவின் குற்றச்சாட்டில் எவ்வித உண்மைகளும் இல்லை என அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களின் பாதுகாப்பையும் ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சுதந்திரமாக கருத்து தெரிவித்தல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பனவற்றில் அனைத்து இலங்கையர்களும் சந்தோசமாக ஈடுபடுவது ஜனநாயக உரிமை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக பொன்சேகா போர்க்குற்றங்களை சுமத்திய நடவடிக்கைக்கு பின்னணியில் மேற்குலகின் மிகப்பெரிய சதி உள்ளது. பொன்சேகாவின் இந்த பிரசாரங்களுக்கு அமெரிக்கா, நோர்வே போன்ற‌ நாடுகள் பெருமளவு நிதியை வழங்கியுள்ளன. அது எமக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது. அரசுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர் ஒருவருக்கு நோர்வே நிதி வழங்கியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. சிங்கப்பூர் ஊடகமான ஸ்ரெய்ட் ரைம்ஸிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் மேற்கண்டவாறு குற்றச்சாட்டியிருந்தார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத்தையும் இலங்கை ஏமாற்றியது; இறுதியுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்

இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார் இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசினால் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்ட வெய்ஸ், தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது 14 வருட சேவையில் இருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள கோர்டன் வெய்ஸ் இலங்கை மோதல் குறித்து புத்தகமொன்றை எழுதி வருகிறார். இலங்கை அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றியது எனத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: சுமார் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் பலியாகினர் என நான் கேள்விப்பட்டேன். பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்களே இதனைத் தெரிவித்தன. பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக இக் காலப் பகுதியில் உறுதியளித்து வந்தது. பொதுமக்களுக்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படாது, இதுவே பல வருடங்களாக இலங்கை இராணுவத்தின் பாரம்பரியமாகவும், வழிகாட்டும் கொள்கையாகவும் உள்ளது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்றெல்லாம் இலங்கை அரசு தெரிவித்து வந்தது. எனினும், கொல்லப்பட்டவர்கள் என நான் கருதும் பொதுமக்களின் எண்ணிக் கையைக் கருத்தில் கொள்ளும்போது நிலைமை வேறு மாதிரியாக இருந்தது புலனாகின்றது. சகல விதமான ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கமுடையவையாகவும் அவை காணப்பட்டன. அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போர் முனையில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துக் கூறியது என அரச அதிகாரியொருவரே ஏற்றுக்கொண்டிருந்தார். விடுதலைப்புலிகளும் மக்களைத் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர். இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்குட்படுத்த வேண்டும். என்றார் அவர்.