வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம்

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பேதங்களை மறந்து வீதியில் இறங்கி போராட சகல மக்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு பூராவுள்ள விகாரைகளில் விசேட பூஜைகளை நடத்தி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பிரபாகரனால் தற்போது எமக்கு தொல்லையில்லை. ஆனால், மீண்டுமொரு புதிய பிரபாகரனுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான சூழ்நிலையை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தம் சிந்தவும் உயிரையே தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினார். நேற்று தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜெனரல் சரத் பொன்சேகா இந்த நாட்டு மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள வீரமிக்க இராணுவ தளபதி. அவரை இன்று மிகவும் மோசமான விதத்தில் கைது செய்துள்ளனர். இதனை ஒருபோதும் இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ தளபதியொருவருக்கு எதிராக இவ்வாறு மோசமான நடவடிக்கைகளை எடுத்திருக்கக் கூடாது. அவர் பல தடவைகள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான போதும் கூட தமது பணியை இடைநிறுத்தாமல் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர். முதலாம் விஜயபாகு மன்னனுடைய காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புத்தராஜ போன்ற வீரர்கள் எவ்வாறு கௌரவிக்கப்பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த படை தலைவனுக்கு கௌரவம் வழங்க வேண்டும். மாறாக, அந்த படை வீரனுக்கெதிராக இவ்வாறான மோசமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது. நன்றியுள்ள எவரும் இதனை அனுமதிக்க மாட்டார்கள். உலகிலேயே சிறந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று அன்று பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுக்களை கூறியிருந்தார். அது மாத்திரமல்லாமல் நாடுபூராவும் அவருடைய கட்அவுட்கள், பதாகைகள் என்பன வைக்கப்பட்டு பால்சோறு உண்டு அவரை கௌரவித்தார்கள். அவ்வாறான ஒருவரையே இன்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீதும் சொத்துக்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். எனவே, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக வெற்றியடைந்திருந்தால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. ஊடக நிறுவனங்களை "சீல்' வைப்பதன் மூலம் ஊடகவியலாளர்களை தாக்கி அச்சுறுத்துவதன் மூலம் கருத்து சுதந்திரத்தையும் பறித்துள்ளனர். எனவே, இவ்வாறான கொடுங்கோலர்களிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். அதற்காக அச்சமின்றி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக