வியாழன், 11 பிப்ரவரி, 2010

அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல

அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல. மக்களைப் பயமுறுத்தி அரசியல் நடத்திய யுகத்தை இம்முறை ஜனாதிபதித் தேர்தலோடு நாட்டிலிருந்தே தம்மால் ஒழிக்க முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தங்காலை நகரில் நேற்று நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். எழுபதுகளில் தமது அரசியல் வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் வழங்கிய மக்கள் மத்தியில் தற்போது தமது புதல்வரின் அரசியல் வாழ்க்கை ஆரம்ப நிகழ்வில் கருத்துக்களைப் பரிமாறக்கிடைத்தமை தமக்குக் கிடைத்த பாக்கியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தமதுரையில் மேலும் கூறியதாவது: எவருக்கும் அரசியல் செய்யக் கூடிய உரிமைகள் உள்ளது. எனினும், நாட்டை மீண்டும் பயங்கரவாதிகளுக்குக் காட்டிக்கொடுப்பதற்கோ நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது. 2500 வருடங்கள் பெளத்த உபதேசங்களால் போதிக்கப்பட்ட நன்றியுணர்வுடைய மக்கள் வாழும் இந்த நாட்டில் எப்போதும் வாய்மையே வெல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ; சகல இன, மத, சமூகங்களையும் கொண்ட இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்று, ஆசியாவிலேயே சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அம்பாந்தோட்டை மக்களுடன் இணைந்து தாமும் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாகவும் தெரிவித்த அவர்; தமது அன்பான தாயாரின் நிழலில் கல்விக்கண் திறந்து முதலெழுத்தைப் படித்தது போல் தந்தையாரின் அரவணைப்பிலிருந்து அரசியல் அரிச்சுவடியைக் கற்பதனைத் தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வுக்கு முன்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தங்காலை நகரில் அமைந்துள்ள பீ. ஏ. ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த சமரவீர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக