புதன், 31 மார்ச், 2010


மண்எண்ணெய், பெற்றோல் மடைக்கதைகளுக்கும் பிரபாகரன் பெயரை பயன்படுத்தும் அரசு

நான் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை. தாய்நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டும் என்றே கருதினேன். அதற்கு முதலில் பிரபாகரனை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்போதே அது சாத்தியமாகும். அதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்” என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவையில் சகலரும் அமைதியாக இருந்த போது நான் குரல் கொடுத்தேன், பிரச்சினையை கண்டு முகமூடி அணியவில்லை. பிரச்சினைக்கு முகம்கொடுத்தேன். தேர்தல் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளமைதான் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “யுத்தத்திற்காக 2008 ஆம் ஆண்டில் 470 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டு 250 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரிகள் அதிகரிக்கப்பட்டு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. தற்போது பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு முழுமையாகவே வரி அறவிடப்படுவதில்லை. பருப்பு மற்றும் சீனி போன்ற பொருட்களுக்கு அறவிடப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. எனினும் இம்முறை குறைவடைந்துள்ளது. இதுவே எனக்குப் பிரச்சினையாக இருக்கின்றது. பொருட்களின் விலைகள் குறையாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சந்தோஷமாக இருந்திருக்கும். அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுத்தோமே தவிர அமைச்சுப் பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்குச் சேவையாற்றவேண்டும் என்ற நோக்கிலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன். காஸ் விலை குறைக்கப்பட்டமையினால் நுகர்வோர் மாதத்திற்கு 300 ரூபாவினையும் பெற்றோல் விலை குறைந்தமையினால் 100 லீற்றர் பெற்றோலை பாவிக்கும் ஒருவர் 4200 ரூபாவையும், டீசல் விலை குறைக்கப்பட்டமையினால் 50 லீற்றர் டீசலை பயன்படுத்தும் ஒருவர் 1800 ரூபானையும் மீதப்படுத்த முடிந்துள்ளது” என்றார்.

சிறீலங்காவின் உறவு தொடர்பில் எதிர்காலததில் கவனிக்கவேண்டிய விடயங்கள்: டேவிட் மிலிபாண்ட்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறீலங்காவின் உறவுநிலை தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய விடயங்கள் பற்றி தெரிவித்துள்ளார். வன்முறைகளை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வன்முறைகள் எந்த நாட்டுக்கும் சமூகத்திற்கும் உதவப்போவதில்லை எனவும் அதனை கட்டுபடுத்தவேண்டும் எனவும் இரண்டாவதாக மனித சமூக பொருளாதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் சமமான தரப்பில் கையாளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக ஐனாதிபதி தேர்தல்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் கவலை வெளியிட்டுள்ளார். ஒரு சமூகத்தில் சிறந்த ஐனநாயகம் தேர்தல்களை நடாத்துவதில் மாதிரமல்லாமல் சுதந்திரமாக தகவல்களை வெளியிடுவதிலும், சுதந்திரமான நீதித்துறையிலும் இருந்துதான் உருவாகிறது என மேலும் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் சகல மக்களையும் சமமாக மதித்து சமஉரிமையுடன் வாழக்கூடியவகையில் காப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் இது ஒருசவாலான விடயம் எனவும் சிவில் சமூதாயத்தில் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை மதித்து நடப்பது முக்கியமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசாங்கத்துடன் வர்த்த உறவுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் வர்த்தக சலுகைகளை வழங்குவதில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பார்க்கப்படுவதால் சிறீலங்காவிற்கு அச்சலுகைகளை வழங்குவதில் இருந்து பலவந்தமாக சலுகைகளை நிறுத்தவேண்டியேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் இவ்விடயங்களில் இந்தக்காலப்பகுதியில் கவனம் செலுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பியும் முடியாத துயரம்

சிறிலங்கா அரசு 1.9 லட்சம் இடம்பெயர்ந்த தமிழர்கள் மீள்குடியேறி விட்டதாக அறிவித்து வருகின்றது. ஆனால் பல ஆயிரக்கணக்கான மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. ராணுவ பாதுகாப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டதை மட்டுமே மீள்குடியேறியதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது வசிப்பிடங்களை அமைப்பதற்கான உதவியாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் [UNHCR] இதுநாள் வரையும் வழங்கி வந்த உதவியினை இடைநிறுத்தியிருக்கிறது. தமது அமைப்புக்கான நிதி வழங்கல்கள் குறைந்திருப்பதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்தே அகதி முகாம்களில் இருப்பவர்களும் மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பிற உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படும் பெண்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை எதிகொள்ள வேண்டிய அவலமும் நீடிக்கிறது. போரினால் கணவனை இழந்த மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தங்கள் கணவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளில் குடியேறும் இந்த பெண்கள் மீள்குடியேறிய பகுதிகளில் தங்களுக்கு ஏற்படக்கூடிய சட்ட விரோத செயல்களை நினைத்து அச்சமும் மிகுந்த கவலையும் அடைந்துள்ளதாக ஐ.நா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மீள்குடியேறி வரும் பகுதிகளில் சரியான குளியல் மற்றும் கழிப்பிடங்கள் இல்லாதது இந்த பெண்களுக்கு மேலும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற நிலையையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளதுடன் அவர்கள் அந்தரங்கங்களை பாதுகாக்க தனியாகவும் ஆபத்து நிறைந்த நிச்சயமற்ற பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய அவசியத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். முகாம்களிலேயே பரிசோதனை செய்யப்பட்ட பின்னரும் கூட முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் விடுதலை புலிகளுடனான தொடர்பு குறித்த கேள்விகளை தாங்கள் எதிர்நோக்கியதாகவும் அவை ராணுவம் மற்றும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக மீள்குடியேறி வரும் மக்களுக்கும் அந்த பகுதிகளில் உள்ள காவல் துறை மற்றும் ராணுவத்திற்குமிடையே மொழிப்பிரச்சினையும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீள்குடியேறிய பகுதிகளில் வாழ்க்கைதரம் மற்றும் அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருந்த போதிலும் கூட உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த மக்கள் முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்கு வந்தது பொதுவாக சற்று திருப்தியளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எதிரிகளை இனம்கண்டு சிங்களத்தை எதிர்கொள்ளுமா நாடு கடந்த தமிழீழ அரசு...?

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்ட ஸ்ரீலங்கா புலனாய்வு அதன் அறிகுறியாக கனடா மற்றும் ஜெர்மனியில் அதன் புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விட்டு புலம் பெயர் மக்களிடையே பிளவை ஏற்ப்படுத்தி வருகிறது. மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் செயற்பட்டதைப் போன்று பிரித்தானியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் ஸ்ரீலங்கா புலனாய்வு செயல்பட முடியாத காரணத்தினால் பணத்திற்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் விலை போகும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இலங்கைக்கான ஜெர்மனி நாட்டின் தூதர் ஜெகத் டயஸ் கடந்த வாரம் லண்டன் வந்து இருப்பதாக தகவல் கசிகிறது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும் எனும் சூத்திரத்தை பரிசீலித்து பார்க்க நாடு கடந்த அரசாங்கத்திட்க்கு அரணாக இருப்பவர்களையும் தூணாக தாங்கி நிற்பவர்களையும் முதலில் இனம் கண்டு அவர்களை பேரம் பேசி தங்கள் வலையில் வீழ்த்த சதித் திட்டம் நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்க உயர் மட்டத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அச்சம் கொண்டு பார்க்கும் இலங்கையும் இந்தியாவும் முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என சதி திட்டங்களை வகுத்து வருகின்றன. சகல நாடுகளிலும் உள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கட்டமைப்பின் இறுக்கம் குறித்தும் தற்பொழுது புலனாய்வு அமைப்புக்கள் தகவல் திரட்டி வருகின்றன. இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம் என தெரிவித்துள்ளன.


இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியாகக் கருதலாம்!

இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 62 அயல் நாடுகளின் ஆதரவுகளை பெறுவது அவசியமானது. அதனை ஈரான் முன்னெடுத்து வருகின்றது. முஸ்லீம் உலகத்தின் ஆதரவுகளை இந்தியா பெற மேற்கொண்டுவரும் முயற்சிகள் அண்மைக்காலமாக தோல்வியடைந்து வருகின்றன. சவுதி அரேபியாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தோல்வியுடன் திரும்பியுள்ளார். துருக்கி அரச தலைவரை இந்திய அழைத்துள்ள போதும், அவரும் இந்தியா வருவதை விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்த்தானை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியா ஈரானுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயன்றபோதும் ஈரான் அதில் அக்கறை கொள்ளவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், அதனை இரு தடவைகள் மாற்றி அமைத்த ஈரான் பின்னர் அதனை கைவிட்டுள்ளது. எதிர்கால விஜயம் தொடர்பிலும் எதனையும் ஈரான் தெரிவிக்கவில்லை. அணுசக்தி திட்டத்தின் மீதான தடை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தனது ஆதரவுகளை தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவுக்கான 6 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்தையும் ஈரான் இரத்துச் செய்துள்ளது. இந்த எல்என்ஜி திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது. இதனிடையே இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவுகளும், ஈரானை கடும் விசனமடைய வைத்துள்ளது. இந்தியாவின் இரட்டை அணுகுமுறைகள் ஈரான் விடயத்தில் தோல்வி கண்டுள்ளது. பாகிஸ்த்தானின் பிரச்சனையானது புதுடில்லிக்கு சிக்கலானது. 1980 களில் ஈரானும், பாகிஸ்த்தானும் போட்டியான நாடுகள். தமது அனுபவங்களில் இருந்து அவர்கள் தற்போது பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர். மன்மோகன் சிங்கின் ஈரான் விஜயம் தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், தற்போது அதில் அக்கறை அற்ற நிலையில் ஈரான் உள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் பல வேற்றுமைகள் தோற்றம்பெற்று வருகின்றபோதும், ஒரு விடயத்தில் இரு நாடுகளும் ஒரே கொள்கையை கொண்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோ படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் தான் இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன. ஆப்கான் பிரச்சனை தொடர்பாக இஸ்ரன்புல் பகுதியில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படவில்லை. இந்த மாநாட்டை ஈரான், பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகள் ஒழுங்கு செய்திருந்தன. இது தொடர்பில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவுக்கு இரண்டாம் தர வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரானில் இருந்து பாகிஸ்த்தான் ஊடாக எண்ணை விநியோக குழாய்களை அமைப்பதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. பாகிஸ்த்தானில் இருந்து ஈரானின் தலைநகருக்கு தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு துருக்கி பல பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்த்தானுடன் தாஜிகிஸ்தான் மற்றும் உபெஸ்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் வீதிகளையும் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லீம் உலகத்தின் இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்புரிமை பெறும் இந்தியாவின் கனவும் கலைந்து விடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சொல்வதொன்று செய்வதொன்று என எப்பொழுதுமே இரட்டை நிலையை கையாண்டு வரும் இந்தியா மீது மேற்குலகின் முக்கிய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ளன.இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்தாலும் இந்தியா அல்லாத மாற்று சக்தியினால் மேற்குலகின் நலன்கள் பாதுகாக்கப்படுமிடத்து இந்தியாவை மேலும் தனிமைப் படுத்தும் ஒரு நிகழ்வாகவே இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு அமையலாம். சீனா ரஷ்ய விசயங்களில் ஆர்வம் காட்டும் மகிந்த இந்தியாவினால் மகிந்தவுக்கு இரண்டு முறை விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் மகிந்தவினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்தவின் இத்தகைய நிலைப்பாடு சீன, பாகிஸ்தான், ரஷ்யவுடன் இணைந்த முஸ்லிம் நாடுகளின் கூட்டு நடவடிக்கையாகவே கருத வாய்ப்புண்டு. இந்தியாவை 26 துண்டுகளாக உடைப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க முடியும் என தெரிவித்துவரும் சீனா தற்போது முஸ்லீம் நாடுகளை தனது பக்கம் திருப்பியுள்ளது இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படுகின்றது.