புதன், 31 மார்ச், 2010

வீடு திரும்பியும் முடியாத துயரம்

சிறிலங்கா அரசு 1.9 லட்சம் இடம்பெயர்ந்த தமிழர்கள் மீள்குடியேறி விட்டதாக அறிவித்து வருகின்றது. ஆனால் பல ஆயிரக்கணக்கான மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. ராணுவ பாதுகாப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டதை மட்டுமே மீள்குடியேறியதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது வசிப்பிடங்களை அமைப்பதற்கான உதவியாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் [UNHCR] இதுநாள் வரையும் வழங்கி வந்த உதவியினை இடைநிறுத்தியிருக்கிறது. தமது அமைப்புக்கான நிதி வழங்கல்கள் குறைந்திருப்பதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்தே அகதி முகாம்களில் இருப்பவர்களும் மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பிற உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படும் பெண்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை எதிகொள்ள வேண்டிய அவலமும் நீடிக்கிறது. போரினால் கணவனை இழந்த மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தங்கள் கணவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளில் குடியேறும் இந்த பெண்கள் மீள்குடியேறிய பகுதிகளில் தங்களுக்கு ஏற்படக்கூடிய சட்ட விரோத செயல்களை நினைத்து அச்சமும் மிகுந்த கவலையும் அடைந்துள்ளதாக ஐ.நா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மீள்குடியேறி வரும் பகுதிகளில் சரியான குளியல் மற்றும் கழிப்பிடங்கள் இல்லாதது இந்த பெண்களுக்கு மேலும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற நிலையையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளதுடன் அவர்கள் அந்தரங்கங்களை பாதுகாக்க தனியாகவும் ஆபத்து நிறைந்த நிச்சயமற்ற பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய அவசியத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். முகாம்களிலேயே பரிசோதனை செய்யப்பட்ட பின்னரும் கூட முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் விடுதலை புலிகளுடனான தொடர்பு குறித்த கேள்விகளை தாங்கள் எதிர்நோக்கியதாகவும் அவை ராணுவம் மற்றும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக மீள்குடியேறி வரும் மக்களுக்கும் அந்த பகுதிகளில் உள்ள காவல் துறை மற்றும் ராணுவத்திற்குமிடையே மொழிப்பிரச்சினையும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீள்குடியேறிய பகுதிகளில் வாழ்க்கைதரம் மற்றும் அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருந்த போதிலும் கூட உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த மக்கள் முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்கு வந்தது பொதுவாக சற்று திருப்தியளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக