புதன், 31 மார்ச், 2010

எதிரிகளை இனம்கண்டு சிங்களத்தை எதிர்கொள்ளுமா நாடு கடந்த தமிழீழ அரசு...?

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்ட ஸ்ரீலங்கா புலனாய்வு அதன் அறிகுறியாக கனடா மற்றும் ஜெர்மனியில் அதன் புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விட்டு புலம் பெயர் மக்களிடையே பிளவை ஏற்ப்படுத்தி வருகிறது. மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் செயற்பட்டதைப் போன்று பிரித்தானியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் ஸ்ரீலங்கா புலனாய்வு செயல்பட முடியாத காரணத்தினால் பணத்திற்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் விலை போகும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இலங்கைக்கான ஜெர்மனி நாட்டின் தூதர் ஜெகத் டயஸ் கடந்த வாரம் லண்டன் வந்து இருப்பதாக தகவல் கசிகிறது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும் எனும் சூத்திரத்தை பரிசீலித்து பார்க்க நாடு கடந்த அரசாங்கத்திட்க்கு அரணாக இருப்பவர்களையும் தூணாக தாங்கி நிற்பவர்களையும் முதலில் இனம் கண்டு அவர்களை பேரம் பேசி தங்கள் வலையில் வீழ்த்த சதித் திட்டம் நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்க உயர் மட்டத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அச்சம் கொண்டு பார்க்கும் இலங்கையும் இந்தியாவும் முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என சதி திட்டங்களை வகுத்து வருகின்றன. சகல நாடுகளிலும் உள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கட்டமைப்பின் இறுக்கம் குறித்தும் தற்பொழுது புலனாய்வு அமைப்புக்கள் தகவல் திரட்டி வருகின்றன. இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம் என தெரிவித்துள்ளன.



நாடு கடந்த அரசாங்கத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்க்கு, அதனை ஒரு இறுக்கமான புலனாய்வு கட்டமைப்பாக உருவாக்கி செயல்படுவதோடு நிற்காமல் நாடு கடந்த அரசாங்கத்தின் செயபாடுகளை கண்காணிக்கவல்ல ஒரு குழு அமைப்பதோடு அதன் ஒவ்வொரு நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்ல ஒரு பாதுகாப்புக் குழு அமைத்து இம்மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுவதே எதிரிகளின் சதி வலையில் விழாமல் செயல்படுவதற்கான முன்னேற்பாடாக அமையும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக