சனி, 10 ஏப்ரல், 2010

உயிர் அம்புகள்................!

காற்று, நிலம், நீர், வானம், நெருப்பு என எதைப் பார்த்தாலும் நமக்குள் உடனடியாக எழும் எண்ணம், நமது போராளிகளைக் குறித்ததாகத்தான் இருக்கிறது. நாம் மறுபடியும் மறுபடியும் எழுதிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும்கூட அந்த நினைவுகள் ஏனோ தீர்ந்துபோக மறுக்கிறது. தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுகள் மனங்களில் புகுந்து கலவரம் செய்கிறது. மறந்து போகத்தான் நினைக்கிறோம். ஆனால் நினைவுகளே அந்த நிகழ்வுகளாக இருக்கும்போது, மறந்துபோகுதலும், மறத்துப்போகுதலும் எப்படி நிகழும். ஒரு மண்ணின் விடுதலையை உறுதி செய்த அந்த மகத்தான ஈகம் அவ்வளவு எளிதில் மறந்துப்போக நம் மனங்கள் என்ன இரும்பால் ஆனதா? நம் நினைவுகள் அந்தளவிற்கு நன்றிக் கெட்டதா? நம்பிக்கை, வாழ்வின் மீது நம்பிக்கை. தமது எதிர்கால லட்சியத்தின்மீது நம்பிக்கை. தமது தலைமையின் மீது நம்பிக்கை. இதுதான் அந்த உயிர் கொடையாளர்கள், உயிர் அம்புகள் விடுதலையை உலகிற்கு அறிவித்த மாபெரும் ஈகப்போராளிகள் கரும்புலிகள் என அழைக்கப்பட்ட அந்த காவியங்கள் நம் நினைவுகளை விட்டு ஏனோ நகர மறுக்கிறார்கள். காற்றிலும் நீரிலும் வானிலும் சிதறி வெடித்து துகள்களாய்ப்போவோம் என்று அறிந்தபோதும் அந்த மரணத்தை புன்னகையோடு தோளில் சுமந்த அந்த தோழர்களை மே 17க்கு முன்னால் நம்மால் உற்றுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள் நம் செவிகளில் புகுந்து மனங்களை உலுக்கி எடுக்கும்போது, தமது மரணத்தை நிச்சயித்துக் கொண்ட அந்த மாவீரர்களின் அருள்வாழ்வு, அவர்கள் அந்த மண்ணின் விடுதலைக்காய் ஏற்றுக் கொண்ட பெரும் பொறுப்பு நம்மை ஏனோ அசைத்துப் பார்க்கிறது. உறங்க விழிகளை மூடினால், விழிகளுக்குள் புகுந்து அந்த நிகழ்வு நெருப்பாய் விரிகிறது. நீரில் கலந்த அந்த உயிர் அம்புகள் நீரை உடைத்து, அதிலிருந்து உயிராய் மேலோங்கி நிற்கிறது. முப்பதாண்டுகால வரலாற்றை உறுதி செய்த அந்த தியாகம், இதுவரை ஏனோ நமது குருதி வழிகளெல்லாம் குதித்து எம்புகிறது. மறக்க நினைக்கும்போதெல்லாம் அவை நமது ரத்த நாளங்களை சுண்டிப்பார்க்கிறது. சிதறி செத்துப்போவோம் என்பதை சிரித்து ஏற்றுக் கொண்ட தியாக வேள்விகள் அந்த கரும்புலிகள். நமது மண்ணின் விடுதலை நாம் சிதறுவதலிருந்து சீறி எழும் என்பதை நம்பி, தம்மை சிதறடித்துக் கொண்ட அவர்களின் நம்பிக்கைக்கு நாம் என்ன விலை கொடுக்கப் போகிறோம். கொடுங்கோலர்களைக் கண்டு பயந்து, நடுங்கி, உயிரச்சம் கொண்டு ஒதுங்கி வாழப்போகிறோமா? இல்லை நாய்களுக்கு வீசும் பதவிகளைப் போல அதிகார வர்க்கம் வீசும் சுகங்களைக் கண்டு வாலாட்டி, வலம்வரப் போகிறோமா? இல்லை உடலில் படும் காயத்திற்கு அஞ்சி நம் விடுதலைக்கான கடமையாற்றாமல் கண்களை மூடிக் கொள்ளப் போகிறோமா? அதற்கும் தேவையான காரணங்களை அடுக்கடுக்காய் சொல்லப்போகிறோமா? சொல்லுங்கள். இதோ நமது மனசாட்சியை உலுக்கப்போகும் மே 17 அருகில் வருகிறது. அவன் தமிழன் என்பதற்காக அல்ல, மாந்தம் என்பதற்காகவாவது நம் மனங்கள் அந்த பக்கத்தை நோக்கி பார்வையை திருப்பப் போகிறதா? ஒட்டுமொத்தமாய் ஒரு இனத்தை கடும் குண்டுகளுக்கு இரையாக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா? இல்லை பார்ப்பனிய இத்தாலிய பாசிச இந்திய அரசின் அடிமைகளாக, அவர்களின் ஏவலாளிகளாக இருக்கப்போகிறோமா என்பதை தீர்மானிக்கும் தருணத்திலே நாம் இருக்கிறோம். இன்று உலக நாடெங்கும் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேவின் சிங்கள பேரினவாத அரசு, தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. சாய்ந்து கொண்டிருக்கும் கொடையை உயர்த்திப் பிடிக்கும் வேலையை இந்திய வல்லாதிக்க அரசு ஏனோ இனம் புரியாமல் செய்து கொண்டிருக்கின்றது. என்ன காரணத்தினாலோ சிங்கள பேரினவாதத்தை இந்திய பாசிசம் தோள்மேல் போட்டு தாலாட்டுகிறது. உலகமே உற்றுப் பார்த்து நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது. இன அழிப்பு என்ற வார்த்தையை இந்திராகாந்தி அம்மையார் முதல் முதலில் இலங்கையை நோக்கி எரிதழலாய் வீசினார். ஆனால் இந்திராவின் மருமகளோ, ராஜபக்சேவின் வளர்ப்புத் தாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியா என்று சொல்லும்போது, அந்த சொத்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தமிழர்களிடம் ஒரு வார்த்தை கேட்காமல், தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணைபோன அரக்க குணத்தை என்னச் சொல்லி வர்ணிப்பது. ஒரு தாயாக வேண்டாம், ஒரு மனுசியாக நின்று பார்த்தாலும்கூட, நடைபெற்ற இன அழிப்பு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. வளர்ந்து உயர்ந்திருக்கும் இந்த மாந்தநேய நாகரீகத்திற்கு ஏற்புடையதல்ல. இந்த அடிப்படையில் நாம் இந்த நிகழ்வை பெரும் பரப்புரை தளமாக கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். போராடி பெற்ற விடுதலையை இழக்க பேரிடியாய் இந்திய பார்ப்பனிய அரசு தேசியம் பேசிக் கொண்டு துடைத்தழித்ததே, இந்த பெருங்கொடுமையை நாம் வரலாற்றிலே பதிவு செய்வதற்கு நமது வரலாற்று கடமை என்னதென்று சிந்திக்கத் தொடங்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. யாருக்கோ நிகழ்ந்ததல்ல. எமது சொந்த உறவுகளுக்கு நிகழ்ந்தது. உலகெங்கும் வாழும் இனிய தமிழ் உறவுகளே, இனியும் நாம் விழிகளை மூடிக் கொண்டிருக்க வேண்டாம். வாய்களை மூடிக் கொண்டிருக்க வேண்டாம். நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்கி எழுவோம். விழி திறந்து பார்த்து கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்துவோம். இனிவரும் காலம் நமக்கான காலம். நமது விடுதலை என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நமக்கான நாடு என்பது எழுதி முடிக்கப்பட்ட ஒன்று. சிறு சிறு இனங்களெல்லாம் உரிமையோடு சொந்த மண்ணிலே மகிழ்ச்சியோடு உலா வரும்போது, கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினம், சொந்த மண்ணில்லாமல் ஏதிலியாய் வலம் வருகிறதே. இந்த வரலாற்றை முறியடிப்போம். நமக்கான ஒரு நாடு. அதுதான் நமது கனவு. உலகெங்கும் வாழும் தமிழன், தமக்கான நாட்டை கட்டியமைக்க உறுதிபூணும் நாளாக நாம் மே 17ஐ தீர்மானிப்போம். அந்த நாள் தான் நமது இனத்தின் அவலக் குரலை அகிலமே அறியச் செய்த நாள். கொத்துக்கொத்தாய் நமது சொந்த ரத்தம் செத்து மடிந்த நாள். இதற்கான நீதி கேட்க நாம் எப்படி தயாராக இருக்கிறோம். இதற்கான நீதி கேட்க நாம் எவ்வாறு களத்திற்கு வரப்போகிறோம். இதற்கான நீதி கேட்க நாம் எப்படி கடமையாற்றப் போகிறோம் என்பதை களபலியாகிய கரும்புலிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் வாழும் தமிழனுக்கு உறங்குவதற்கான நாடு அமைக்கத்தான் அவர்கள் உடல் சிதறி இறந்துபோனார்கள். அவர்களின் கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை நாம் எல்லோருக்கும் உண்டு. அவர்கள் போர்களத்திலே உயிராயுதமாய் புறப்பட்ட உன்னத மாந்த மனங்கள். அவர்கள் தம்மை எரித்து, தமது இனம் வாழ விரும்பிய சுகந்தங்கள். அவர்கள் நமது சொந்தங்கள். இந்த கரும்புலிகளின் தியாகங்களை உண்மையாகவே நாம் ஏற்கிறோம் என்றால், அந்த தியாக மறவர்களின் உணர்வுகளை நாம் உள்ளபடியே மதிக்கிறோம் என்றால், நிச்சயமாய் நமக்கான நாடு அமையும் களத்தில் நமது பங்கு என்ன? என்பதை நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எந்த சமரசமும் வேண்டாம். நேர்மையாக நமக்குள் நாம் கேட்டுக் கொள்வோம். என் நாடு அமைவதற்கு நான் என்ன செய்யப் போகிறேன். என் நாடு அமைய, நான் என்ன செய்தேன். என் நாடு அமைய இனி நான் ஆற்றப்போகும் கடமை என்ன? என்பதை நமக்குள் நாம் கேட்டுக் கொள்வோம். யாருக்காகவும் அல்ல. நமக்காக நம்முடைய எதிர்கால சந்ததிக்காக நாம் கேட்கும் கேள்வி. நமது மொழிக்காக, நமது பண்பாட்டிற்காக, நமது கலாச்சாரத்திற்கான, நமக்கான அடையாளத்திற்கான நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. இதைத்தான் கரும்புலிகள் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார்கள். அதனால்தான் தாமாகவே வெடித்து சிதறினார்கள். நாம் வெடித்து சிதற வேண்டாம். குறைந்தபட்சம் என்ன செய்யலாம் என்றாவது சிந்திக்கலாம். இதுவே நாம் நமது தியாக சீலர்களுக்கு தரும் வணக்கமாக, மரியாதையாக இருக்கும். அந்த உயிராயுதங்களை, உயிர் அம்புகளை நாம் மனநிறைவோடு விடுதலைக்கான ஆயுதங்களாய் ஏறெடுப்போம்.

தலைமையை தேடுகின்றனர்

தமக்கான புதிய அரசியல் தலைமையை தேடுகின்றனர் ஈழத் தமிழ் மக்கள்: பொதுத் தேர்தலில் அவர்கள் கூறிய செய்தி அதுதான் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களில் ஏறத்தாள 70 தொடக்கம் 80 விகித மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களின் இந்த புறக்கணிப்புக்கள் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களை சேர்ந்த 1,800 பேர் போட்டியிட்டிருந்தனர். ஆனால் வடக்கில் 18 விகித மக்களே வாக்களித்துள்ளனர். யாழில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களையும் சேர்த்தால் அது 23 விகிதமாகும். சிறீலங்காவில் 56 விகித மக்கள் வாக்களித்துள்ளனர். வழமையாக சிறீலங்காவின் பொதுத்தேர்தலில் 75 விகித மக்கள் வாக்களித்துவந்த நிலையில் இந்த தடவை ஏற்பட்ட வீழ்ச்சி என்பது தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் சிறீலங்காவின் ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கையிழந்து விட்டனர் என்பதை தான் காண்பிக்கின்றது. மேலும் யாழ் குடாநாட்டில் 7,24,000 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அலுவலக அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன. எனினும் தற்போது அதிக மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளதால் அதன் உண்மையான எண்ணிக்கை 6 இலட்சமாக இருக்கலாம் என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் மிகப்பெரும் ஊடக பரப்புரை பலத்துடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழ்குடாநாட்டில் 65,119 வாக்குகளையே பெறமுடிந்துள்ளது. ஆனால் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரித்தானியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 64,256 புலம்பெயர் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே, வடக்கில் மக்கள் தமது மௌனத்தின் ஊடாக கூற வந்த செய்தி என்ன? அவர்கள் தமக்கான அர்ப்பணிப்புள்ள புதிய அரசியல் தலைமை ஒன்றை தேடுகின்றனர் என்பதே அதன் அர்த்தமாகும். பலவித அழுத்தங்களுக்கு மத்தியில் வாழும் அந்த மக்கள் அதனை தான் தெளிவாக தெரிவித்துச் சென்றுள்ளனர். யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65,119 வாக்குகளையும், ஈபிடிபி துணைஇராணுவக்குழு மற்றும் அரச கூட்டணி 47,622 வாக்குகளையும், ஐ.தே.க 12,624 வாக்குகளையும், தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி 6,362 வாக்குகளையும் பெற்றுள்ளன. வன்னியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 41,673 வாக்குகளையும், மட்டக்களப்பில் 66,235 வாக்குகளையும் பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 634,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு போர் நிறைவுபெற்ற பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறீலங்காவின் ஜனநாயக செயற்பாடுகளிலும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு பொதுத்தேர்தலில் களமிறங்கியவர்களையும் முற்றாக புறக்கணித்துள்ள இந்த அப்பாவித் தமிழ் மக்களின் அரசியல் தேடல் என்பது தான் என்ன? முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் புதைந்துபோன தமது அக்கினிக் குழந்தைகள் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் மீண்டெடுக்க மீண்டும் திரும்பி வாருவார்கள் என்பதா? அல்லது தற்காலிகமாக ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிச்சென்ற தமது தேசத்தின் புதல்வர்களின் கை அசைப்புக்காகவா?

உலகமே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் தேர்தல் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. சிங்கள பாசிச ஆட்சி அதிகாரம் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜபக்சேவின் ஆட்சி அதிகாரம் அங்கீகாரம் பெற்று, தமது ஒடுக்குமுறைக்கான அத்தியாயத்தின் அடுத்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்க இயற்கையும், காலமும் இணைந்து நல்லதொரு வாய்ப்பினை ராஜபக்சேவிற்கு வழங்கியிருக்கிறது. நடைபெற்ற தேர்தலில், மொத்த மக்களில் வெறும் 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். தமிழீழத்தில் தேசிய தலைமை தற்போது எவ்வித கட்டளையும் பிறப்பிக்காத சூழலில், தமிழர்கள் மிகக் குறைந்த அளவில் வாக்களித்திருக்கிறார்கள்.தேசிய தலைவரோ, தமிழ் தேசிய தலைமையோ தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும்கூட, மக்கள் வாக்களிக்க தவறியிருக்கிறார்கள். இதன்மூலம் இந்திய-பார்ப்பனிய இத்தாலிய பாசிச அரசுக்கும், இலங்கையின் சிங்கள பேரினவாத அரசுக்கும், தமிழீழ மக்கள் முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் ஒரு செய்தி, நாங்கள் எந்த நிலையிலும் சிங்கள தேசியத்தோடு இணைந்து வாழ முடியாது. எமக்கான நாடு, எமக்கான மொழி, எமக்கான பண்பாடு, எமது கலாச்சார நடுவங்களோடுத்தான் எமது வாழ்வு என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். இப்போது, புலிகள் மிரட்டி மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள் என்று யாரும் பரப்புரை செய்ய முடியாது. மக்கள் இயற்கையாக தமக்கான விடுதலையை அழுத்தமாக தங்கள் மனங்களில் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து எந்த காலத்திலும், எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதையே இவ்வளவு பெரிய இக்கட்டான நிலைக்குப் பிறகும் அவர்கள் ஓங்கி உரைத்திருக்கிறார்கள். உலகளாவிய அரசியல் சூழல் இப்போது திசை மாறுகிறது. நாம் உலகளாவிய அரசியலை உற்றுப் பார்ப்பதற்கு முன்னால், உலகெங்கும் எழுந்திருக்கும் எழுச்சியோடு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனவிடுதலை போர் தடங்களை ஒரு பார்வை பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஏதோ தமிழீழத்தில் மட்டுமே தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை திருத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற தவறான நிலைப்பாடு பொதுவாக தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பெருமளவில் இருக்கிறது. முறையாக தனிநாடு அல்லது தேசியத்தின் அடையாளத்தை காத்துக் கொள்ளும் ஒரு போராட்ட வடிவத்தை தமிழ்நாடு தான் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் வரலாறு அதை மாற்றி, தடம் புரள வைத்துவிட்டது. காலம் அந்த வாய்ப்பை தமிழீழத்திற்கு வழங்கியிருக்கிறது. உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள், தமக்கான உரிமையை இழக்க ஒருபோதும் தயாராக இல்லாத காரணத்தினால், ரசியாவில் செசன்சியா, சீனத்தில் திபெத் மற்றும் கிழக்கு புக்கிஸ்தான், இஸ்ரேலில் பாலஸ்தீனம், ஸ்பெயினில் பாங்கு, கனடாவில் கியூபெக், இங்கிலாந்தில் வடஅயர்லாந்து, பிலிப்பெயின்சில் பங்சோமோர்ஜா, பாகிஸ்தானில் பக்டுனிஸ்தான் என உலகெங்கும் தேசிய இனங்கள் தமது தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ளும் போராட்டத்தின் காட்சிதான், சிங்கள பேரினவாத அரசிடமிருந்து தமிழ் தேசிய விடுதலையை நடத்தி, அதன்மூலம் தமக்கான மொழி அடையாளத்தையும், இன அடையாளத்தையும் மீட்டெடுப்பது என்கின்ற ஒரு நெடிய பயணம். இன்னும் அதன் வீரம், அதன் பக்குவம், அதன் வீச்சு மாறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. களத்தின் தன்மைகள் மாறுவதும் அல்லது மாற்றப்படுவதும் போர் வடிவத்தின் சூழல்கள் சொல்லித்தரும். அந்த அடிப்படையிலேயே தமிழீழத்திலும் போர் வடிவத்தின் சூழல்கள், கள வடிவமைப்புகள் மாறியிருக்கிறதே தவிர, போருக்கான தன்மையோ, அதன் தேவைகளை மீட்டெடுக்க வேண்டிய காரணமோ இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. குறிப்பாக எந்த ஒரு தேசிய இனமும், தம்மை முழுமைப்படுத்திக் கொள்ள நினைத்தாலும், அந்த தேசிய இனங்களுக்கு மொழி என்பது ஒரு அடிப்படை கட்டமைப்புக் கொண்டதாக, அந்த இனத்தின் அடையாளமாக இருக்கிறது என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. காரணம், ஒவ்வொரு தேசிய இனத்திற்கான மொழியே அவர்களை அவர்களுக்குள் உணர்வுப் பூர்வமாக உள்ளார்ந்து அடையாளப்படுத்திக் கொள்ளவும், ஆழமாக பழகவும் உந்தித்தள்ளுகிறது. மேலும் தமது சொந்த மொழியின் மூலம் கற்றலும் கேட்டலும் அவர்களுக்கு மேலும் தம்முடைய தனிமனித ஆளுமையை செழித்தோங்க செய்கிறது. ஆகவேதான் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் மொழி அடையாளத்தைக் காக்க போராடுகிறார்கள். ஒரு தேசிய இனத்தின் மொழி சிதைவு, அந்த தேசிய இனத்தின் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்தொழிக்க துணைபுரியும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தமிழ் என்கின்ற ஒரு மொழி நமக்கான மொழியாக இருந்தும் கூட, தமிழ் பேசுவது ஏதோ அவமானகரமானது என்பதைப்போன்றும், தமிழ் பேசுபவர்கள் அறியாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் போலவும், தமிழ் பேசும் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒதுக்குப்புறமான சூழலில் வாழ்பவர்கள் என்பதைப்போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இதன் காரணமாக ஆங்கிலமோ, அல்லது பிற மொழியோ அறியாத தமிழர்கள், தாம் ஏதோ ஒன்றுமே தெரியாதவர் என்பதைப்போன்றும், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிமேதாவிகள் என்கின்ற எண்ணத்தோடும் ஒரு வழக்கத்தை தமக்குள் உருவாக்கிக் கொண்ட காரணத்தினால் அவர்களின் செயல்களில் தாழ்வு மனப்பான்மை ஓங்கி நின்றிருப்பதை காண முடிகிறது. ஆகவே நாம் நமக்கான மொழி அடையாளத்தை காத்துக் கொள்வதற்கு தமிழர்களிடம் தமிழில் தான் பேசுவேன். தமிழ் தெரிந்தவர்களுடன் தமிழ் மொழியில்தான் உறவாடுவேன் என்கின்ற நிலைப்பாடு நம் ஒவ்வொருவருக்குள்ளும் அசைக்கமுடியாத அச்சாக நீடித்திருக்க வேண்டும். இதுதான் நாம் இன அடையாளத்தைக் காக்கும் சமரின் முதல்படியாக அமையும். நமது தேசிய அடையாளத்தைக் காத்துக் கொள்ளும் போராட்டம் என்றாலும்கூட, இதிலே முதலாளித்துவத்தின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்ததை தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே நம்மால் கணிக்க முடிந்தது. நாம் முன்னர் சொன்னதைப் போலவே, நடந்து முடிந்த இலங்கையின் தேர்தல், உலகநாடுகளில் ஒரு அழுத்தமான அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜபக்சே அரசு தொடர்ந்து சீனத்திற்கு ஆதரவு தருவதும், இதன் காரணமாக சீனத்தின் ஆதிக்கத்தை சிங்கள தேசத்தில் கட்டி அமைப்பதுமான செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் ராஜபக்சேவின் அசைவுகள் ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் பக்கம் தமது கால்களை திருப்புவதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதை புரிந்து கொண்ட இந்திய பார்ப்பனிய வல்லாதிக்க அரசு, ராஜபக்சேவை வீழ்த்துவதற்கு, சரத்பொன்சேக என்கின்ற ஒரு பொம்மையை பயன்படுத்த, களத்திலே இறக்கியது. ஆனால் இந்தியாவின் தோல்வி அங்கே பெரும் மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்தியா நினைத்ததைப் போன்று அரசியல் சூழல் அங்கே அமையாத காரணத்தினால், இனிவரும் காலங்களில் ராஜபக்சேவின் அசைவு எவ்வாறு இருக்கும் என்பதை இந்தியா இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முனைப்புக் காட்டுகிறது. அது, தொடர்ச்சியாக எப்படியாவது இலங்கையை நமது கட்டுப்பாட்டிற்குள் நிறுத்திக் கொள்ள செய்த முயற்சிகள் அனைத்தும் தவிடுப்பொடியாகி விட்டது. இது இந்தியாவை மிகவும் கவலைப்பட வைத்த ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. ஆனாலும் காலம் எதையும் தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டதால், நாம் அதன் போக்கிலேயே அதை விட்டுவிடலாம். அதேப்போன்றே இலங்கை, தொடர்ந்து சீனத்திற்கு ஆதரவு தருவதை அமெரிக்காவாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமெரிக்க வல்லாதிக்க அரசு, தமது கொடுங்கரங்களை உலகெங்கும் பரப்பி, உலகின் பேட்டை ரவுடியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும்கூட, அதன் அரசியல் அணுகுமுறைகள் இப்போது யாரை வீழ்த்த யாரோடு கூட்டு என்கின்ற நிலைப்பாட்டை தொட்டிருக்கிறது. அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலிலும் ராஜபக்சே பெற்றிருக்கும் வெற்றியானது, இந்திய-அமெரிக்க வல்லாதிக்க சக்திகளுக்கு எதிர்வினை ஆற்றக்கூடியதாக அமையும் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை உள்வாங்கிக் கொண்ட அமெரிக்கா, தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது, போராளிகளை ஒடுக்குவது, தேசிய இனவிடுதலை போராட்டத்தை முடக்கிப் போடுவது என்கின்ற தமது பெரியண்ணன் நிலைபாட்டிலிருந்து கீழிறங்கி வந்து, திபெத்திய தலைவர் தலாய்லாமாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசியிருக்கிறது. அமெரிக்காவின் அதிபர் ஒபாமா, தலாய்லாமாவிடம் பல்வேறு அரசியல் ஆலோசனைகள் நடத்தியதாக செய்திகள் சொல்கின்றன. திபெத் பிரச்சனையில் தேவையில்லாமல் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை சீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும்கூட, சீனாவை சீண்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது தொடர்ந்து நீடிக்குமாயின், ராஜபக்சே சீனத்தின் கூட்டாளியாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அமெரிக்கா நேரிடையாக புலிகளின் ஆதரவு ஆற்றலாக நிற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. காரணம், வரலாற்றில் எது, எப்போது, எப்படி நிகழும் என்பதை யாராலும் வரையறுக்க முடியாது. சீனாவும் இந்தியாவும் அப்போது தனிமைப்படுத்தப்படலாம். அமெரிக்கா தான் முன்வந்து, இலங்கையில் போராடியது இனவிடுதலைக்கான போராட்டம்தான் என்பதை உலக நாடுகள் சபையில் அறிவிக்க முயற்சி எடுக்கலாம். காரணம், ஐ.நா.சபை என்பது அமெரிக்காவின் கண்ணசைவிற்கு ஏற்று நடைபெறும் அமைப்பு என்பதால், ஐ.நா. இப்போது நேரிடையாக ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கலாம். இதன் பின்னணியில் இந்த போர் குற்றத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் துணை புரிந்ததால் இவர்களையும் சேர்த்து உலக நீதிமன்றத்தில் விசாரிக்க அழைப்பு அனுப்பலாம். அது உலக நாடுகளில் சீனாவையும், இந்தியாவையும் அவமானப்படுத்த பெரும் உதவிப்புரியும். இந்த நிலையை நோக்கித்தான் நடந்து முடிந்த அரசியல் நகர்வுகள் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் எதுவும் நடக்கலாம் என்கின்ற தத்துவார்த்தத்தின்படி, இந்தியாவும் சீனாவும் தோற்கடிக்கப்பட, பகடைக்காயாக சிங்களத்தை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருப்பதின் வெளிச்ச கீற்றுகள் அங்காங்கே தெரிய தொடங்கி இருக்கின்றன. சரியான அரசியல் நகர்வு இல்லாத இந்தியாவின் சித்தாந்தம், தமிழீழ போராட்டத்தை நசுக்கியதின் மூலம் சிதைந்து போக தொடங்கி இருக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக உலகெங்கும் நடக்கும் தேசிய இனவிடுதலைப் போராட்டம் மேலும் வீச்சடையும். அதற்கு காரணமாய் தமிழீழ விடுதலைப் போராட்டமே இருக்கும் என்பதை இன்னும் சில காலங்களில் வரலாறு நமக்கு சொல்லித்தரும். இது புரியாமல் இந்தியா, ராஜபக்சேவிடம் பரிதாபமாக தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அரசியல் நகர்வுகளை தமிழ் தேசிய தலைமை மிகவும் நுண்ணிய பகுப்பாய்வோடு நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நாம் பெற்றது வடுக்கள் அல்ல, வெற்றியின் தொடக்கம். நமது தேசிய தலைமையும், நமது தேசிய தலைவரும் அதை மிகத் திறமையாக வடிவமைத்து தமிழ் தேசிய அடையாளத்தை மட்டுமல்ல, உலகெங்கும் நடக்கும் தேசிய இன விடுதலை போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வரலாற்று கடமையை செய்து முடித்திருக்கிறார்கள். நாளை உலகம் எமது விடுதலைக்கான முதற்படியாக விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப் போராளிகளும் தமிழ் தேசிய தலைவரும் இருந்தார் என்பதை சொல்லி, கொண்டாடி மகிழும். தமிழ் தேசிய தலைவர் இனி உலக நாயகராக கொண்டாடப்படுவார்.

மாவை சேனாதிராசாவுக்கு ஓர் அன்பு மடல்

அன்புக்குரிய மாவை சேனாதிராசாவுக்கு! அன்பு வணக்கம். யாழ்.மாவட்டத்தில் ஐந்து ஆசனங்கள் பெற்றீர்கள் என்ற செய்தியறிந்து மகிழ்வடைந்தோம். அதிலும் விருப்பு வாக்குக் கிடைத்த ஒழுங்கு கண்டு இன்னும் மகிழ்வு.வாக்காளப் பெருமக்கள்? சேர்ந்து திட்டமிட்டு விருப்பு வாக்கை ஒழுங்கமைத்திருக்கின்றார்கள். முதலில் உங்களுக்கு. இரண்டாவது உங்களோடு இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு. மூன்றாவது முதுமையிலும் காங்கிரஸைத் தூக்கி எறிந்து விட்டு தங்களிடம் வந்த விநாயகமூர்த்திக்கு. இப்படியே உங்கள் விருப்பு ஒழுங்கு அமைந் திருக்கின்றது. இறைவனே நேரில் வந்து நின்று ஒழுங்குபடுத்தினாலும் இப்படியயாரு ஒழுங்கு கிடைப்பது அரிது. அந்த அரிதான விடயம் உங்கள் கட்சிக்குக் கிடைத்திருக்கின்றது. இருந்தும் உங்களோடு அன்று தொடக்கம் இன்று வரை இருந்து கட்சிக் காகப்பாடுபட்ட கட்சியின் செயலாளர் எக்ஸ். குலநாயகத்தையும்இ சீ.வீ.கே.சிவஞானத்தையும் விருப்பு வாக்குத் திட்டமிடலில் சேர்த்திருக்கலாம். என்ன செய்வது இப்போது உங்கள் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட உங்களிடம் இல்லை என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ‘வீடு' என்ற தேர்தல் பிரசாரப் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் அச்சடித்து விட்டு கனடாவில் அச்சடித்ததாகக் கூறி உங்கள் தரப்பினர் வெளியிட்ட போது, உங்கள் கட்சியில் போட்டியிட்ட பலர் எங்களிடம் முறையிட்டார்கள்.கட்சிக்குள்ளேயே இப்படியொரு கழுத்தறுப்பு நடப்பதாக அவர்கள் குற்றஞ்சுமத்தினார்கள். இருந்தும் நாங்கள் நாகரிகம் கருதி அவர்களின் குற்றச்சாட்டுக்களை வெளியிட விரும்பவில்லை. நீங்கள் விரும்பினால் குற்றஞ்சுமத்திய உங்கள் கட்சி வேட்பாளர்களின் கருத்துக்களை பிரசுரிக்க முடியும்.தேர்தல் முடிபுகள் வர முன்னதாக-விருப்பு வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக உங்கள் தரப்பால் வெடி கொளுத்தி ஆர்ப்பரிக்க எப்படி முடிந்தது? எதுவாயினும் உங்கள் மீது மதிப் புண்டு. உங்களிடம் அன்பாகத் தெரிவிப்பதுஇ வன்னி யில் வெடிகுண்டுகளுக்குத் தங்கள் பிள்ளைகளை - உறவுகளைப் பலிகொடுத்து விட்டு வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மனிதங்கள்இ உங்கள் வெற்றியாளர்கள் சிலரின் வெடி கொளுத்தலில் திடுக்கிட்டு கலங்குகின்றன. வென்றது மகிழ்வுதான். அதற்காக வெடி கொளுத்துவது உங்கள் மனச்சாட்சிக்கு உடன்பாடானதா? என்று சொல்லுங்கள். உங்கள் குடும்பங்களில் அப்படியொரு இழப்பென்றால் வெடிகொளுத்துவீர்களா? இடப்பெயர்வுஇ முகாம் வாழ்வு என்றெல்லாம் துன்பம் அளந்த நீங்கள் ஒரு கணத்தில் அதையல்லாம் மறந்து வெடிகொளுத்துவீர்களாயின், உங்களுக்குள்ளும்... புகுந்து விட்டதென்றல்லவா எண்ணத் தோன்றுகின்றது. ஏதோ கவனம்! கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

ஆங்கில சுருக்காக்கம் பயன்படுத்துவது தடை!

சீன தொலைக்காட்சிகளில் ஆங்கில சுருக்காக்கம் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தை WHO என குறிப்பிடுவதைப் போல பல்வேறு சூழலில் சுருக்கமான ஆங்கில வார்த்தை பிரயோகம் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலம் தவிர்த்து பல்வேறு வேற்று மொழி தொலைக்காட்சிகளும் செய்திகளை வெளியிடும் போது இதுபோன்ற ஆங்கில வார்த்தை சுருக்கங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சீனாவில் இதுபோன்ற ஆங்கில சொல்லாடல்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. சீனா மத்திய தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பெய்ஜிங் தொலைக்காட்சி உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை சீன அரசு அனுப்பியுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில், ஆங்கில சுருக்காக்கங்கபளுக்கு இணையான சீன வார்த்தைகளை பயன்படுத்துமாறு ஒளிபரப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதிக புழக்கத்தில் உள்ள GDP, WTO, CPI, NBA உள்ளிட்ட சுருக்காக்கங்களை தவிர்த்து அவற்றுக்கு இணையான சீன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியது சீன தொலைக்காட்சிகளுக்கு கட்டாயமாகி உள்ளது. ஆனால், ‘மேற்கத்திய நாடுகள் பல புதிய சைங்கிலீஷ் (சீன ஆங்கில கலப்பு) வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் போது நாமும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து தான் போக வேண்டும். இன்றைய தாராளமயமாக்கல் உலகத்தில் இதுபோன்ற வீராப்பு எடுபடாது’ என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

தோற்றுப்போன அமைச்சர்கள்

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்குகளின் விபரங்கள் இன்னமும் முழுமையாக வெளியிடப்படாத அதேநேரம் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையின் காரணமாக இரண்டு மாவட்டங்களில் [திருக்கோணமலை, கண்டி] மீள்வாக்குப்பதிவு மேற்கொள்ளுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குத் தாவிய அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம, நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறொகொட ஆகியோர் தங்களது ஆசனங்களை இழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் மொத்த வாக்குகளில் 9.35 சதவீத வாக்குகளைப் மட்டும் பெற்றிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலான 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' ஒரு ஆசனத்தையேனும் தனதாக்கவில்லை. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னணியில் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த நாடாளுமன்றில் 12 ஆசனங்களைப் பெற்றிருப்பதுடன் மூன்றாவது பலமான கட்சியாகவும் விளங்குகின்றது. இதுவரைக்கும் வெளியான விருப்பு வாக்குகளின் விபரத்தின்படி 200,000 விருப்புவாக்குகளைத் தனதாக்கியிருக்கும் தேசிய சனநாயக முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அதிகூடிய விருப்பு வாக்கினைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார். தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவினைச் சேர்நத சுற்றுச்சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவர்களில் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள். இவரைத் தொடர்ந்து அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அரசியலுக்குள் புதிதாக நுழைந்திருக்கும் கிரிக்கெற் விளையாட்டு வீரரான சனத் ஜெயசூரிய மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுப் நாடாளுமன்றம் செல்கிறார். அதேநேரம், மகிந்த ராஜபக்சவினது கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, நாட்டுக்கு உலகக்கோப்பையினை வென்றுகொடுத்த கிரிக்கெட் அணியின் தலைவர் அருச்சுனா ரணதுங்க குருணாகலை மாவட்டத்தில் ஆசனத்தினைக் கைப்பற்றியிருக்கிறார். மகிந்த அரசிலிருந்து விலகிய அருச்சுனா ரணதுங்க ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான சனநாயகத் தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகூடிய விருப்புவாக்கினைப் பெற்றுப் நாடாளுமன்றம் செல்கிறார். முன்னாள் சிறிலங்காவும் மலேசியாவிற்கான சிறிலங்காவினது தூதுவருமான றோசி சேனநாயக்கவும் கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைத் தனதாக்கியிருக்கிறார். கம்பகா மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் குடியரசு அதிபரின் சிறப்பு ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயினது துணைவியார் கலாநிதி சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கம்பகா மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். சர்ச்சைக்குரிய அமைச்சர் கலாநிதி மேவின் சில்வா இந்த மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட நிமல் சிறீபால டீசில்வா ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அதேநேரம் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் நந்தன குணதிலகை தனது ஆசனத்தினை இழந்திருக்கிறார். இரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த அமைச்சரான வாசுதேவ நாயணக்கார பாராளுமன்றில் தனது இடத்தினைத் தக்கவைத்திருக்கும் அதேநேரம், அமைச்சர் மகிந்த ரத்தினதிலக தனது ஆசனத்தினை இழந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீள்வாக்குப்பதிவு நடாத்தப்படும் வரைக்கும் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவு வெளியிடப்படமாட்டாது.

நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக விழா!

2008 ஆம் ஆண்டு ஈழத்தின் நான்காம் கட்ட போரின் கடைசி யுத்தத்தில் சிங்கள பேரினவாத அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தமிழின படுகொலையை நிகழ்த்த ஆரம்பித்த தருணத்தில் தமிழகம் முழுவதுமே இந்தியாவின் துரோகச் செயலைக் கண்டித்து கொந்தளிக்க ஆரம்பித்தது. 16 தமிழர்கள் தங்களது தேக்குமர உடலை தீயிட்டு எரித்து ஈழத்தமிழினத்தைக் காப்பதற்கு குரல் கொடுத்து மடிந்தனர். செந்தமிழன் சீமான் தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தமிழகர்களிடையே சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தமிழகத்தில் மக்கள் அனைவரும் கொதித்தெழுந்தப் போதிலும் தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ கண்டு கொள்ளாதது மட்டுமன்றி ஈழத்தமிழினப் படுகொலைக்கு பல்வேறு வகையிலே சிங்கள அரசோடு தோளோடு தோள் நின்றது. அதன் காரணமாக மே 16 தொடங்கி 18-க்குள்; 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகப்பெரும் அழிவை தமிழினம் சந்தித்தபோது, தாய் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் 9 கோடி தமிழர்களும் அதிர்ச்சியோடு நெஞ்சடைத்து நின்றனர். தமிழகத்தில் மக்கள் அனைவருமே ஈழத்தமிழினத்தை பாதுகாக்க சீமான் பின்னே திரண்டு நின்றப் போதிலும் அரசியல் பலம் இல்லாத ஒரே காரணத்தினால் தமிழினம் இனப்படுகொலையை சந்திக்க நேர்ந்தது. அரசியல் அதிகாரத்தை மக்கள் சக்தியோடு அடையவே செந்தமிழன் சீமான் நாம் தமிழர் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினார். அக்கட்சியின் கொடியை நாளை (ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள்) அறிமுகம் செய்கிறார். தஞ்சாவூர் திலகர் திடலில் உள்ள பேரரசன் ராசராசன் அரங்கத்தில் இந்நிகழ்ச்சி பெரிதொரு நிகழ்வாக நடந்தேற உள்ளது. பேராசிரியர் தீரன் அவர்கள் கொடி விளக்க அறிமுக உரை மேற்கொள்கிறார். மற்றும் அந்நிகழ்ச்சியில், ஆவல கணேசன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பேராயர் சூசை, முனைவர் தா.மணி, வழக்குரைஞர்கள் நல்லதுரை, மணிசெந்தில், ரா.வீரகுமரன், மூ.கருணாநிதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், சக்திவேல் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளனர். இன்று, இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் பேரணியும் அதைத் தெடர்ந்து 5 மணி அளவில் தேனிசை செல்லப்பாவின் தமிழிசை நிகழ்ச்சித் தொடங்கி, கொடி அறிமுக விழாவும், மாநாடும் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 4 மணியிலிருந்து நிகழ்ச்சிகளை நேரடிக் காட்சிகளாக www.naamtamilar.org எனும் இணையதளத்தில் பார்க்கலாம். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் முழவதிலுமிருந்து பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அலைகடலென ஆர்ப்பாரித்தவாறு தஞ்சையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். உலகம் முழவதிலும் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் வாழும் தமிழர்கள், ஆவலோடு, செந்தமிழன் சீமானின், விழா நிறைவுப் பேருரையை கேட்பதற்கு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.