சனி, 10 ஏப்ரல், 2010


உலகமே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் தேர்தல் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. சிங்கள பாசிச ஆட்சி அதிகாரம் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜபக்சேவின் ஆட்சி அதிகாரம் அங்கீகாரம் பெற்று, தமது ஒடுக்குமுறைக்கான அத்தியாயத்தின் அடுத்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்க இயற்கையும், காலமும் இணைந்து நல்லதொரு வாய்ப்பினை ராஜபக்சேவிற்கு வழங்கியிருக்கிறது. நடைபெற்ற தேர்தலில், மொத்த மக்களில் வெறும் 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். தமிழீழத்தில் தேசிய தலைமை தற்போது எவ்வித கட்டளையும் பிறப்பிக்காத சூழலில், தமிழர்கள் மிகக் குறைந்த அளவில் வாக்களித்திருக்கிறார்கள்.தேசிய தலைவரோ, தமிழ் தேசிய தலைமையோ தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும்கூட, மக்கள் வாக்களிக்க தவறியிருக்கிறார்கள். இதன்மூலம் இந்திய-பார்ப்பனிய இத்தாலிய பாசிச அரசுக்கும், இலங்கையின் சிங்கள பேரினவாத அரசுக்கும், தமிழீழ மக்கள் முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் ஒரு செய்தி, நாங்கள் எந்த நிலையிலும் சிங்கள தேசியத்தோடு இணைந்து வாழ முடியாது. எமக்கான நாடு, எமக்கான மொழி, எமக்கான பண்பாடு, எமது கலாச்சார நடுவங்களோடுத்தான் எமது வாழ்வு என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். இப்போது, புலிகள் மிரட்டி மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள் என்று யாரும் பரப்புரை செய்ய முடியாது. மக்கள் இயற்கையாக தமக்கான விடுதலையை அழுத்தமாக தங்கள் மனங்களில் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து எந்த காலத்திலும், எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதையே இவ்வளவு பெரிய இக்கட்டான நிலைக்குப் பிறகும் அவர்கள் ஓங்கி உரைத்திருக்கிறார்கள். உலகளாவிய அரசியல் சூழல் இப்போது திசை மாறுகிறது. நாம் உலகளாவிய அரசியலை உற்றுப் பார்ப்பதற்கு முன்னால், உலகெங்கும் எழுந்திருக்கும் எழுச்சியோடு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனவிடுதலை போர் தடங்களை ஒரு பார்வை பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஏதோ தமிழீழத்தில் மட்டுமே தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை திருத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற தவறான நிலைப்பாடு பொதுவாக தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பெருமளவில் இருக்கிறது. முறையாக தனிநாடு அல்லது தேசியத்தின் அடையாளத்தை காத்துக் கொள்ளும் ஒரு போராட்ட வடிவத்தை தமிழ்நாடு தான் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் வரலாறு அதை மாற்றி, தடம் புரள வைத்துவிட்டது. காலம் அந்த வாய்ப்பை தமிழீழத்திற்கு வழங்கியிருக்கிறது. உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள், தமக்கான உரிமையை இழக்க ஒருபோதும் தயாராக இல்லாத காரணத்தினால், ரசியாவில் செசன்சியா, சீனத்தில் திபெத் மற்றும் கிழக்கு புக்கிஸ்தான், இஸ்ரேலில் பாலஸ்தீனம், ஸ்பெயினில் பாங்கு, கனடாவில் கியூபெக், இங்கிலாந்தில் வடஅயர்லாந்து, பிலிப்பெயின்சில் பங்சோமோர்ஜா, பாகிஸ்தானில் பக்டுனிஸ்தான் என உலகெங்கும் தேசிய இனங்கள் தமது தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ளும் போராட்டத்தின் காட்சிதான், சிங்கள பேரினவாத அரசிடமிருந்து தமிழ் தேசிய விடுதலையை நடத்தி, அதன்மூலம் தமக்கான மொழி அடையாளத்தையும், இன அடையாளத்தையும் மீட்டெடுப்பது என்கின்ற ஒரு நெடிய பயணம். இன்னும் அதன் வீரம், அதன் பக்குவம், அதன் வீச்சு மாறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. களத்தின் தன்மைகள் மாறுவதும் அல்லது மாற்றப்படுவதும் போர் வடிவத்தின் சூழல்கள் சொல்லித்தரும். அந்த அடிப்படையிலேயே தமிழீழத்திலும் போர் வடிவத்தின் சூழல்கள், கள வடிவமைப்புகள் மாறியிருக்கிறதே தவிர, போருக்கான தன்மையோ, அதன் தேவைகளை மீட்டெடுக்க வேண்டிய காரணமோ இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. குறிப்பாக எந்த ஒரு தேசிய இனமும், தம்மை முழுமைப்படுத்திக் கொள்ள நினைத்தாலும், அந்த தேசிய இனங்களுக்கு மொழி என்பது ஒரு அடிப்படை கட்டமைப்புக் கொண்டதாக, அந்த இனத்தின் அடையாளமாக இருக்கிறது என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. காரணம், ஒவ்வொரு தேசிய இனத்திற்கான மொழியே அவர்களை அவர்களுக்குள் உணர்வுப் பூர்வமாக உள்ளார்ந்து அடையாளப்படுத்திக் கொள்ளவும், ஆழமாக பழகவும் உந்தித்தள்ளுகிறது. மேலும் தமது சொந்த மொழியின் மூலம் கற்றலும் கேட்டலும் அவர்களுக்கு மேலும் தம்முடைய தனிமனித ஆளுமையை செழித்தோங்க செய்கிறது. ஆகவேதான் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் மொழி அடையாளத்தைக் காக்க போராடுகிறார்கள். ஒரு தேசிய இனத்தின் மொழி சிதைவு, அந்த தேசிய இனத்தின் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்தொழிக்க துணைபுரியும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தமிழ் என்கின்ற ஒரு மொழி நமக்கான மொழியாக இருந்தும் கூட, தமிழ் பேசுவது ஏதோ அவமானகரமானது என்பதைப்போன்றும், தமிழ் பேசுபவர்கள் அறியாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் போலவும், தமிழ் பேசும் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒதுக்குப்புறமான சூழலில் வாழ்பவர்கள் என்பதைப்போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இதன் காரணமாக ஆங்கிலமோ, அல்லது பிற மொழியோ அறியாத தமிழர்கள், தாம் ஏதோ ஒன்றுமே தெரியாதவர் என்பதைப்போன்றும், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிமேதாவிகள் என்கின்ற எண்ணத்தோடும் ஒரு வழக்கத்தை தமக்குள் உருவாக்கிக் கொண்ட காரணத்தினால் அவர்களின் செயல்களில் தாழ்வு மனப்பான்மை ஓங்கி நின்றிருப்பதை காண முடிகிறது. ஆகவே நாம் நமக்கான மொழி அடையாளத்தை காத்துக் கொள்வதற்கு தமிழர்களிடம் தமிழில் தான் பேசுவேன். தமிழ் தெரிந்தவர்களுடன் தமிழ் மொழியில்தான் உறவாடுவேன் என்கின்ற நிலைப்பாடு நம் ஒவ்வொருவருக்குள்ளும் அசைக்கமுடியாத அச்சாக நீடித்திருக்க வேண்டும். இதுதான் நாம் இன அடையாளத்தைக் காக்கும் சமரின் முதல்படியாக அமையும். நமது தேசிய அடையாளத்தைக் காத்துக் கொள்ளும் போராட்டம் என்றாலும்கூட, இதிலே முதலாளித்துவத்தின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்ததை தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே நம்மால் கணிக்க முடிந்தது. நாம் முன்னர் சொன்னதைப் போலவே, நடந்து முடிந்த இலங்கையின் தேர்தல், உலகநாடுகளில் ஒரு அழுத்தமான அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜபக்சே அரசு தொடர்ந்து சீனத்திற்கு ஆதரவு தருவதும், இதன் காரணமாக சீனத்தின் ஆதிக்கத்தை சிங்கள தேசத்தில் கட்டி அமைப்பதுமான செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் ராஜபக்சேவின் அசைவுகள் ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் பக்கம் தமது கால்களை திருப்புவதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதை புரிந்து கொண்ட இந்திய பார்ப்பனிய வல்லாதிக்க அரசு, ராஜபக்சேவை வீழ்த்துவதற்கு, சரத்பொன்சேக என்கின்ற ஒரு பொம்மையை பயன்படுத்த, களத்திலே இறக்கியது. ஆனால் இந்தியாவின் தோல்வி அங்கே பெரும் மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்தியா நினைத்ததைப் போன்று அரசியல் சூழல் அங்கே அமையாத காரணத்தினால், இனிவரும் காலங்களில் ராஜபக்சேவின் அசைவு எவ்வாறு இருக்கும் என்பதை இந்தியா இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முனைப்புக் காட்டுகிறது. அது, தொடர்ச்சியாக எப்படியாவது இலங்கையை நமது கட்டுப்பாட்டிற்குள் நிறுத்திக் கொள்ள செய்த முயற்சிகள் அனைத்தும் தவிடுப்பொடியாகி விட்டது. இது இந்தியாவை மிகவும் கவலைப்பட வைத்த ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. ஆனாலும் காலம் எதையும் தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டதால், நாம் அதன் போக்கிலேயே அதை விட்டுவிடலாம். அதேப்போன்றே இலங்கை, தொடர்ந்து சீனத்திற்கு ஆதரவு தருவதை அமெரிக்காவாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமெரிக்க வல்லாதிக்க அரசு, தமது கொடுங்கரங்களை உலகெங்கும் பரப்பி, உலகின் பேட்டை ரவுடியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும்கூட, அதன் அரசியல் அணுகுமுறைகள் இப்போது யாரை வீழ்த்த யாரோடு கூட்டு என்கின்ற நிலைப்பாட்டை தொட்டிருக்கிறது. அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலிலும் ராஜபக்சே பெற்றிருக்கும் வெற்றியானது, இந்திய-அமெரிக்க வல்லாதிக்க சக்திகளுக்கு எதிர்வினை ஆற்றக்கூடியதாக அமையும் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை உள்வாங்கிக் கொண்ட அமெரிக்கா, தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது, போராளிகளை ஒடுக்குவது, தேசிய இனவிடுதலை போராட்டத்தை முடக்கிப் போடுவது என்கின்ற தமது பெரியண்ணன் நிலைபாட்டிலிருந்து கீழிறங்கி வந்து, திபெத்திய தலைவர் தலாய்லாமாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசியிருக்கிறது. அமெரிக்காவின் அதிபர் ஒபாமா, தலாய்லாமாவிடம் பல்வேறு அரசியல் ஆலோசனைகள் நடத்தியதாக செய்திகள் சொல்கின்றன. திபெத் பிரச்சனையில் தேவையில்லாமல் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை சீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும்கூட, சீனாவை சீண்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது தொடர்ந்து நீடிக்குமாயின், ராஜபக்சே சீனத்தின் கூட்டாளியாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அமெரிக்கா நேரிடையாக புலிகளின் ஆதரவு ஆற்றலாக நிற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. காரணம், வரலாற்றில் எது, எப்போது, எப்படி நிகழும் என்பதை யாராலும் வரையறுக்க முடியாது. சீனாவும் இந்தியாவும் அப்போது தனிமைப்படுத்தப்படலாம். அமெரிக்கா தான் முன்வந்து, இலங்கையில் போராடியது இனவிடுதலைக்கான போராட்டம்தான் என்பதை உலக நாடுகள் சபையில் அறிவிக்க முயற்சி எடுக்கலாம். காரணம், ஐ.நா.சபை என்பது அமெரிக்காவின் கண்ணசைவிற்கு ஏற்று நடைபெறும் அமைப்பு என்பதால், ஐ.நா. இப்போது நேரிடையாக ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கலாம். இதன் பின்னணியில் இந்த போர் குற்றத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் துணை புரிந்ததால் இவர்களையும் சேர்த்து உலக நீதிமன்றத்தில் விசாரிக்க அழைப்பு அனுப்பலாம். அது உலக நாடுகளில் சீனாவையும், இந்தியாவையும் அவமானப்படுத்த பெரும் உதவிப்புரியும். இந்த நிலையை நோக்கித்தான் நடந்து முடிந்த அரசியல் நகர்வுகள் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் எதுவும் நடக்கலாம் என்கின்ற தத்துவார்த்தத்தின்படி, இந்தியாவும் சீனாவும் தோற்கடிக்கப்பட, பகடைக்காயாக சிங்களத்தை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருப்பதின் வெளிச்ச கீற்றுகள் அங்காங்கே தெரிய தொடங்கி இருக்கின்றன. சரியான அரசியல் நகர்வு இல்லாத இந்தியாவின் சித்தாந்தம், தமிழீழ போராட்டத்தை நசுக்கியதின் மூலம் சிதைந்து போக தொடங்கி இருக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக உலகெங்கும் நடக்கும் தேசிய இனவிடுதலைப் போராட்டம் மேலும் வீச்சடையும். அதற்கு காரணமாய் தமிழீழ விடுதலைப் போராட்டமே இருக்கும் என்பதை இன்னும் சில காலங்களில் வரலாறு நமக்கு சொல்லித்தரும். இது புரியாமல் இந்தியா, ராஜபக்சேவிடம் பரிதாபமாக தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அரசியல் நகர்வுகளை தமிழ் தேசிய தலைமை மிகவும் நுண்ணிய பகுப்பாய்வோடு நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நாம் பெற்றது வடுக்கள் அல்ல, வெற்றியின் தொடக்கம். நமது தேசிய தலைமையும், நமது தேசிய தலைவரும் அதை மிகத் திறமையாக வடிவமைத்து தமிழ் தேசிய அடையாளத்தை மட்டுமல்ல, உலகெங்கும் நடக்கும் தேசிய இன விடுதலை போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வரலாற்று கடமையை செய்து முடித்திருக்கிறார்கள். நாளை உலகம் எமது விடுதலைக்கான முதற்படியாக விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப் போராளிகளும் தமிழ் தேசிய தலைவரும் இருந்தார் என்பதை சொல்லி, கொண்டாடி மகிழும். தமிழ் தேசிய தலைவர் இனி உலக நாயகராக கொண்டாடப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக