சனி, 10 ஏப்ரல், 2010

உயிர் அம்புகள்................!

காற்று, நிலம், நீர், வானம், நெருப்பு என எதைப் பார்த்தாலும் நமக்குள் உடனடியாக எழும் எண்ணம், நமது போராளிகளைக் குறித்ததாகத்தான் இருக்கிறது. நாம் மறுபடியும் மறுபடியும் எழுதிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும்கூட அந்த நினைவுகள் ஏனோ தீர்ந்துபோக மறுக்கிறது. தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுகள் மனங்களில் புகுந்து கலவரம் செய்கிறது. மறந்து போகத்தான் நினைக்கிறோம். ஆனால் நினைவுகளே அந்த நிகழ்வுகளாக இருக்கும்போது, மறந்துபோகுதலும், மறத்துப்போகுதலும் எப்படி நிகழும். ஒரு மண்ணின் விடுதலையை உறுதி செய்த அந்த மகத்தான ஈகம் அவ்வளவு எளிதில் மறந்துப்போக நம் மனங்கள் என்ன இரும்பால் ஆனதா? நம் நினைவுகள் அந்தளவிற்கு நன்றிக் கெட்டதா? நம்பிக்கை, வாழ்வின் மீது நம்பிக்கை. தமது எதிர்கால லட்சியத்தின்மீது நம்பிக்கை. தமது தலைமையின் மீது நம்பிக்கை. இதுதான் அந்த உயிர் கொடையாளர்கள், உயிர் அம்புகள் விடுதலையை உலகிற்கு அறிவித்த மாபெரும் ஈகப்போராளிகள் கரும்புலிகள் என அழைக்கப்பட்ட அந்த காவியங்கள் நம் நினைவுகளை விட்டு ஏனோ நகர மறுக்கிறார்கள். காற்றிலும் நீரிலும் வானிலும் சிதறி வெடித்து துகள்களாய்ப்போவோம் என்று அறிந்தபோதும் அந்த மரணத்தை புன்னகையோடு தோளில் சுமந்த அந்த தோழர்களை மே 17க்கு முன்னால் நம்மால் உற்றுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள் நம் செவிகளில் புகுந்து மனங்களை உலுக்கி எடுக்கும்போது, தமது மரணத்தை நிச்சயித்துக் கொண்ட அந்த மாவீரர்களின் அருள்வாழ்வு, அவர்கள் அந்த மண்ணின் விடுதலைக்காய் ஏற்றுக் கொண்ட பெரும் பொறுப்பு நம்மை ஏனோ அசைத்துப் பார்க்கிறது. உறங்க விழிகளை மூடினால், விழிகளுக்குள் புகுந்து அந்த நிகழ்வு நெருப்பாய் விரிகிறது. நீரில் கலந்த அந்த உயிர் அம்புகள் நீரை உடைத்து, அதிலிருந்து உயிராய் மேலோங்கி நிற்கிறது. முப்பதாண்டுகால வரலாற்றை உறுதி செய்த அந்த தியாகம், இதுவரை ஏனோ நமது குருதி வழிகளெல்லாம் குதித்து எம்புகிறது. மறக்க நினைக்கும்போதெல்லாம் அவை நமது ரத்த நாளங்களை சுண்டிப்பார்க்கிறது. சிதறி செத்துப்போவோம் என்பதை சிரித்து ஏற்றுக் கொண்ட தியாக வேள்விகள் அந்த கரும்புலிகள். நமது மண்ணின் விடுதலை நாம் சிதறுவதலிருந்து சீறி எழும் என்பதை நம்பி, தம்மை சிதறடித்துக் கொண்ட அவர்களின் நம்பிக்கைக்கு நாம் என்ன விலை கொடுக்கப் போகிறோம். கொடுங்கோலர்களைக் கண்டு பயந்து, நடுங்கி, உயிரச்சம் கொண்டு ஒதுங்கி வாழப்போகிறோமா? இல்லை நாய்களுக்கு வீசும் பதவிகளைப் போல அதிகார வர்க்கம் வீசும் சுகங்களைக் கண்டு வாலாட்டி, வலம்வரப் போகிறோமா? இல்லை உடலில் படும் காயத்திற்கு அஞ்சி நம் விடுதலைக்கான கடமையாற்றாமல் கண்களை மூடிக் கொள்ளப் போகிறோமா? அதற்கும் தேவையான காரணங்களை அடுக்கடுக்காய் சொல்லப்போகிறோமா? சொல்லுங்கள். இதோ நமது மனசாட்சியை உலுக்கப்போகும் மே 17 அருகில் வருகிறது. அவன் தமிழன் என்பதற்காக அல்ல, மாந்தம் என்பதற்காகவாவது நம் மனங்கள் அந்த பக்கத்தை நோக்கி பார்வையை திருப்பப் போகிறதா? ஒட்டுமொத்தமாய் ஒரு இனத்தை கடும் குண்டுகளுக்கு இரையாக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா? இல்லை பார்ப்பனிய இத்தாலிய பாசிச இந்திய அரசின் அடிமைகளாக, அவர்களின் ஏவலாளிகளாக இருக்கப்போகிறோமா என்பதை தீர்மானிக்கும் தருணத்திலே நாம் இருக்கிறோம். இன்று உலக நாடெங்கும் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேவின் சிங்கள பேரினவாத அரசு, தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. சாய்ந்து கொண்டிருக்கும் கொடையை உயர்த்திப் பிடிக்கும் வேலையை இந்திய வல்லாதிக்க அரசு ஏனோ இனம் புரியாமல் செய்து கொண்டிருக்கின்றது. என்ன காரணத்தினாலோ சிங்கள பேரினவாதத்தை இந்திய பாசிசம் தோள்மேல் போட்டு தாலாட்டுகிறது. உலகமே உற்றுப் பார்த்து நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது. இன அழிப்பு என்ற வார்த்தையை இந்திராகாந்தி அம்மையார் முதல் முதலில் இலங்கையை நோக்கி எரிதழலாய் வீசினார். ஆனால் இந்திராவின் மருமகளோ, ராஜபக்சேவின் வளர்ப்புத் தாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியா என்று சொல்லும்போது, அந்த சொத்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தமிழர்களிடம் ஒரு வார்த்தை கேட்காமல், தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணைபோன அரக்க குணத்தை என்னச் சொல்லி வர்ணிப்பது. ஒரு தாயாக வேண்டாம், ஒரு மனுசியாக நின்று பார்த்தாலும்கூட, நடைபெற்ற இன அழிப்பு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. வளர்ந்து உயர்ந்திருக்கும் இந்த மாந்தநேய நாகரீகத்திற்கு ஏற்புடையதல்ல. இந்த அடிப்படையில் நாம் இந்த நிகழ்வை பெரும் பரப்புரை தளமாக கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். போராடி பெற்ற விடுதலையை இழக்க பேரிடியாய் இந்திய பார்ப்பனிய அரசு தேசியம் பேசிக் கொண்டு துடைத்தழித்ததே, இந்த பெருங்கொடுமையை நாம் வரலாற்றிலே பதிவு செய்வதற்கு நமது வரலாற்று கடமை என்னதென்று சிந்திக்கத் தொடங்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. யாருக்கோ நிகழ்ந்ததல்ல. எமது சொந்த உறவுகளுக்கு நிகழ்ந்தது. உலகெங்கும் வாழும் இனிய தமிழ் உறவுகளே, இனியும் நாம் விழிகளை மூடிக் கொண்டிருக்க வேண்டாம். வாய்களை மூடிக் கொண்டிருக்க வேண்டாம். நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்கி எழுவோம். விழி திறந்து பார்த்து கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்துவோம். இனிவரும் காலம் நமக்கான காலம். நமது விடுதலை என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நமக்கான நாடு என்பது எழுதி முடிக்கப்பட்ட ஒன்று. சிறு சிறு இனங்களெல்லாம் உரிமையோடு சொந்த மண்ணிலே மகிழ்ச்சியோடு உலா வரும்போது, கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினம், சொந்த மண்ணில்லாமல் ஏதிலியாய் வலம் வருகிறதே. இந்த வரலாற்றை முறியடிப்போம். நமக்கான ஒரு நாடு. அதுதான் நமது கனவு. உலகெங்கும் வாழும் தமிழன், தமக்கான நாட்டை கட்டியமைக்க உறுதிபூணும் நாளாக நாம் மே 17ஐ தீர்மானிப்போம். அந்த நாள் தான் நமது இனத்தின் அவலக் குரலை அகிலமே அறியச் செய்த நாள். கொத்துக்கொத்தாய் நமது சொந்த ரத்தம் செத்து மடிந்த நாள். இதற்கான நீதி கேட்க நாம் எப்படி தயாராக இருக்கிறோம். இதற்கான நீதி கேட்க நாம் எவ்வாறு களத்திற்கு வரப்போகிறோம். இதற்கான நீதி கேட்க நாம் எப்படி கடமையாற்றப் போகிறோம் என்பதை களபலியாகிய கரும்புலிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் வாழும் தமிழனுக்கு உறங்குவதற்கான நாடு அமைக்கத்தான் அவர்கள் உடல் சிதறி இறந்துபோனார்கள். அவர்களின் கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை நாம் எல்லோருக்கும் உண்டு. அவர்கள் போர்களத்திலே உயிராயுதமாய் புறப்பட்ட உன்னத மாந்த மனங்கள். அவர்கள் தம்மை எரித்து, தமது இனம் வாழ விரும்பிய சுகந்தங்கள். அவர்கள் நமது சொந்தங்கள். இந்த கரும்புலிகளின் தியாகங்களை உண்மையாகவே நாம் ஏற்கிறோம் என்றால், அந்த தியாக மறவர்களின் உணர்வுகளை நாம் உள்ளபடியே மதிக்கிறோம் என்றால், நிச்சயமாய் நமக்கான நாடு அமையும் களத்தில் நமது பங்கு என்ன? என்பதை நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எந்த சமரசமும் வேண்டாம். நேர்மையாக நமக்குள் நாம் கேட்டுக் கொள்வோம். என் நாடு அமைவதற்கு நான் என்ன செய்யப் போகிறேன். என் நாடு அமைய, நான் என்ன செய்தேன். என் நாடு அமைய இனி நான் ஆற்றப்போகும் கடமை என்ன? என்பதை நமக்குள் நாம் கேட்டுக் கொள்வோம். யாருக்காகவும் அல்ல. நமக்காக நம்முடைய எதிர்கால சந்ததிக்காக நாம் கேட்கும் கேள்வி. நமது மொழிக்காக, நமது பண்பாட்டிற்காக, நமது கலாச்சாரத்திற்கான, நமக்கான அடையாளத்திற்கான நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. இதைத்தான் கரும்புலிகள் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார்கள். அதனால்தான் தாமாகவே வெடித்து சிதறினார்கள். நாம் வெடித்து சிதற வேண்டாம். குறைந்தபட்சம் என்ன செய்யலாம் என்றாவது சிந்திக்கலாம். இதுவே நாம் நமது தியாக சீலர்களுக்கு தரும் வணக்கமாக, மரியாதையாக இருக்கும். அந்த உயிராயுதங்களை, உயிர் அம்புகளை நாம் மனநிறைவோடு விடுதலைக்கான ஆயுதங்களாய் ஏறெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக