திங்கள், 8 மார்ச், 2010

பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இராணுவம் வெற்றிச் சின்னம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிங்கள இராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம், நந்திக் கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. இந் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் ஏரி அருகே இலங்கை இராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது. இதற்கிடையே, இறுதிக் கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் அப்பகுதிகளில், தமிழர்கள் யாரும் குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடி போய்க் கிடக்கின்றன. அதே சமயத்தில், முல்லைத்தீவு கடலோரக் கிராமங்களில் வேறு பகுதிகளை சேர்ந்த சிங்கள மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அயர்லாந்து, டப்ளினில் "எனது மகள் பயங்கரவாதி" திரைப்படம் ஒளிபரப்பு

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை எனது மகள் பயங்கரவாதி (My Daughter the Terrorist) எனும் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக காண்பிக்கப்பட்டது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டி ஆர்னஸ்ட் ( Beate Arnestad) அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை காண்பிக்கும் முன்னர் இந் நிகழ்ச்சியின் ஒருங்கமைப்பாளர் அங்கு வந்த பல்லின மக்களுக்கும் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு சிங்கள பேரினவாத அரசினால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதனையும், எவ்வாறு தமிழர்களின் ஆரம்பகால அகிம்சைப் போராட்டம் வன்முறையால் அடக்கி ஒடுக்கப்பட்டது என்பதனையும், பின்னர் எவ்வாறு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது என்பதனையும், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தம் எவ்வாறு சர்வதேச காரணிகளினால் முறிவடைந்தது என்பதனையும், இறுதிக்கட்டப் போரில் எவ்வாறு தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதனையும் தெளிவாக எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து இத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இத்திரைப்படக் காட்சிக்கு பல்லின மக்களும் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர்.

சந்திக்க துடிக்கும் மன்மோகன்: போக்குக் காட்டும் மகிந்த

அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்கம் இந்திய நலனுக்கு எதிரான அச்சுறுத்தலாகவே அனைவராலும் கருதப்படுகிறது. இலங்கைக்கு சீனா சமீபத்தில் செய்த நவீன ஆயுத தளபாட அன்பளிப்பு இந்திய ராணுவ மற்றும் அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகரிக்கப்பட விருக்கும் சீன ஆயுத விரிவாக்கம் இந்தியாவிர்க்கேதிரான ஆயுத களஞ்சியமாகவே மேற்குலக ஊடகங்களால் கருத்து வெளியிடப் பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு இந்தியா ஒரு தீர்வை ஏற்ப்படுத்திக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக சர்வதேச சமூகத்தால் உணரப்படும் பட்சத்தில் இந்தியா இவ்விடயத்தில் மெத்தனப் போக்கை கடை பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவையும் மீறிய சர்வதேசத்தின் தலையீடு ஒன்று ஏற்ப்படுவதை இந்தியா என்றுமே விரும்பாத ஒன்றாகும். எல்லாவற்றையும் விட நாடு கடந்த தமிழ்ழீழ அரசிட்க்கான உலக ஆதரவு பெருகி வருவதே இந்தியாவின் இரண்டு பெரிய கவலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்குலகின் சீற்றத்தை தணிப்பதற்கு ஆலோசனை வேண்டி சென்ற வாரம் இந்தியா சென்றிருந்த கோத்தபாயவிற்கு ஊடகங்களிடம் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ராஜதந்திர உறவுகளில் மென்மேலும் அது விரிசலை உண்டு பண்ணவே வழி வகுக்கும் என்றும் நிருபமா ராவ் மூலமாக அறிவுறுத்தப் பட்டுள்ளது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களில் இருந்து காத்துக் கொள்ள நடைமுறையில் சில தளர்வுகளை உண்டுபண்ணி இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அறிவுறுத்தல்படி (சொல்படி) நடக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இந்திய புலனாய்வு(RAW) கட்டமைப்பில் ஈழ விவகாரத்திற்க்கென இம்முறை புதிய அழகு ஒன்று ஏற்ப்படுத்தப் பட்டு அதன் பணி விரிவாக்கத்திற்காக முன்பைவிட பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் இம்முறை ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவ்விடயத்தில் மனமோஹனை உடனடியாக மகிந்த சந்திக்குமாறும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் இத்தகைய முண்டு கொடுப்புக்களை மகிந்த அலட்சியம் செய்து போக்குக் காட்டி வருவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன் பெறுபேறாகவே அதன் பின்னணியை ஆராய நிருபமாராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு மஹிந்டவிட்க்கு மீண்டும் ஒரு அழைப்பை விடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

மிகவும் சக்திவாய்ந்த புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்குலகத்தின் அசைவுகளை கட்டுப்படுத்துகின்றது: கோத்தபாய

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி வசதியில் முன்னிலையில் உள்ள சக்திவாய்ந்த புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்குலகத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச இந்தியாவில் இருந்து வெளிவரும் தெல்கா சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதன் முழு வடிவம் வருமாறு: கேள்வி: குறிப்பாக எந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அரசு பொன்சேகாவை கைது செய்துள்ளது? பதில்: அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை என்னால் கூறமுடியாது, ஏனெனில் அது தொடர்பான பட்டியல் இராணுவத்தரப்பால் தயாரிக்கப்படுகின்றது. அவர்கள் அதற்கான விதிகளை பின்பற்றி வருகின்றனர். அது சட்டவாளர்களின் பணி. கேள்வி: அதாவது அவருக்கு எதிராக குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்கள் இல்லை எனில் இது ஒரு தனிப்பட்ட நடவடிக்கை என அமையாதா? பதில்: இல்லை, சேவையில் இருந்தபோது எமது இராணுவத்திற்கு பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்ட சேதம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. அதன் மூலமே அவர் அரசியலில் பிரவேசித்துள்ளார். கேள்வி: அவர் அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டுமா? நீங்கள் கூறும் சேதம் என்ன? பதில்: ஜனநாயகத்தில் அவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். மூன்று சம்பவங்கள் அவரின் இந்த செயற்பாடுகளை மறைத்துள்ளன. அதாவது, அவர் போரை வழிநடத்தியவர், இரண்டாவது அவர் இராணுவத்தளபதியாக பதவி வகித்தவர், மூன்றாவது அவர் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை எதிர்த்து போட்டியிட்டதனால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பவை தான் அவை. ஆனால் உண்மை என்னவெனில் இராணுவத்தை அரசியல் மயப்படுத்தி அதனை அவர் சீரழித்துள்ளார். நாம் இந்தியாவின் காலாச்சாரத்தை பேணுவதில் பெருமை கொள்கிறோம், அங்கு இராணுவம் நடுநிலமை கொண்டது. ஆனால் அந்த நடைமுறை பொன்சேகாவினால் மீறப்படும் போது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழிகள் இருக்கவில்லை. கேள்வி: ஒரு போர் வீரனாக, அவருக்கு பல ஆதரவுகள் உள்ளன, அவை தான் அவரை போட்டியிட தூண்டின இல்லையா? பதில்: அவர் இராணுவத்தில் இருந்து உரியமுறையில் விலகி, அரசியலில் பிரவேசித்திருக்கலாம். ஆனால் அவர் அதிகார ஆசைக்காக தனது பதவியை பயன்படுத்தி அவருக்கு தேவையான தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரியாக இருந்தபோதும், இராணுவத்தளபதியாக இருந்தபோதும் அவர் அதனை மேற்கொண்டுள்ளார். அவர் தனது விடுதியை அரசியல் பணிகளுக்கும், இராணுவத்தின் வளங்களை அரசியல் தேவைகளுக்கும் பயன்படுத்தியிருந்தார். கேள்வி: எந்த வகையான அரசியல் செயற்பாடுகள்? ஏன் அவர் அப்போது கைது செய்யப்படவில்லை? பதில்: அவர் படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது தளபதிகளுடனும், மூத்த அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். தனக்குரிய பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் படையினரை கேட்டிருந்ததாக முறைப்பாடுகள் உண்டு. நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காது விட்டால் அது இராணுவத்தினருக்கு ஒரு தவறான வழிகாட்டலாக அமைந்துவிடும். ஒரு நடுநிலையான இராணுவத்தை பேணுவது எமது கடமை. இந்தியாவும் அவ்வாறே பேணிவருகின்றது. அல்லது அது அழிவடைந்துவிடும். கேள்வி: படை சிப்பாய்களை தவறாக பயன்படுத்தினார் பொன்சேகா என தெரிவித்திருந்தீர்கள் அது தொடர்பில் மேலதிக தகவல்களை தர முடியுமா? பதில்: இளம் படையினரும், தரநிலை குறைந்த இராணுவச் சிப்பாய்களும் வீதித்தடைகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் உள்ள மக்களிடம் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இராணுவத்தின் முன்னாள் தளபதி தேர்தலில் போட்டியிட்டதால் பெருமளவான படையினர் குழப்பமடைந்திருந்தனர். இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களிடமும் ஆதரவுகளை பெற அவர் முனைந்திருந்தார். அவர்களுக்கு அடைக்கலமும் வழங்கியிருந்தார். இராணுவத்தினரிடையே ஆய்வுகளை மேற்கொண்டு தேர்தல் வெற்றி தோல்வி தொடர்பில் கருத்துக்களையும் அவர் திரட்டியிருந்தார். அவர் தளபதியாக இருந்த போதும் அதனை மேற்கொண்டிருந்தார். அதனை நாம் அறிந்த போது, அதில் ஈடுபட்ட 15 மூத்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியிருந்தோம். கேள்வி: பொன்சேகா இராணுவப்புரட்சிக்கு முயன்றதாக, அரச தலைவரை படுகொலை செய்ய முயன்றதாக வேறு ஏதாவது முக்கிய குற்றச்சாட்டுக்கள் உண்டா? பதில்: நல்லது, அவை சிவில் சட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அது தொடர்பில் குற்றப்புலனாய்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது வேறுபட்ட நடைமுறை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டது, அவர் பதவியில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்காக. கேள்வி: மேற்குலக ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் பொன்சேகாவின் கைது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்து வருகின்றனவே? பதில்: நான் ஒன்றை தெரிந்துகொள்ள விரும்புகிறேன், அதாவது தான் அரச தலைவராக பதவியேற்றதும் மகிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்கப்போவதாக பொன்சேகா வெளிப்படையாக தெரிவித்தது தொடர்பில் ஏன் இவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை. கேள்வி: இராணுவத்தில் உள்ளபோது பொன்சேகா ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனை அவர் தனது மருமகன் ஊடாக மேற்கொண்டிருந்தார், ஆனால் அவர் ஏன் அன்று கைது செய்யப்படவில்லை? பதில்: அது தொடர்பான விபரங்களை நாம் தற்போதே அறிந்துள்ளோம். அதனை சந்தேகநபர்கள் தெரிவித்து வருகின்றனர். கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு விரைவான தீர்வு முன்வைக்க வேண்டும், போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இடம்பெயர்ந்த மக்கள் விரைவாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என தெரிவித்ததால் தான் அவர் தண்டிக்கப்பட்டதாக பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்? பதில்: பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அதிக பயிற்சிகளை பெறவேண்டும் என நன் விரும்புகிறேன். போர் முடிந்த பின்னர் அவர் இராணுவ உடையில் இருந்தபோது மேற்கொண்ட பேச்சுக்களை ஏன் நீங்கள் ஆராயவில்லை? அதன் பின்னர் அவர் வேட்பாளரான போதும் அவ்வாறு பேசியிருந்தார். அதாவது அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வை முன்வைப்பதற்காக படையினர் இரத்தம் சிந்தவில்லை என அவர் தெரிவித்திருந்தார். நாம் அதனை அனுமதிக்கவில்லை. இது இராணுவத்தை அரசியல் நடைமுறைகளுக்கு எதிரகக திருப்பும் திட்டமாகும். கேள்வி: வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளை உங்களின் உத்தரவுகளை தொடர்ந்தே படையினர் படுகொலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளது தொடர்பில் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள்? பதில்: விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைப்பீடம் சரணடைய முற்பட்டது, அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கே என போரின் பின்னர் பொன்சேகா தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் மறுதலையாக பேசுகின்றார். அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகிறார், வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை நான் படுகொலை செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கிறார். கேள்வி: ஆனால் உண்மையில் என்ன அங்கு நடைபெற்றது? பதில்: மே 18 ஆம் நாள் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார், அன்றைய தினம் விடுதலைப்புலிகளின் 200 தலைவர்கள் 400 சதுர கி. மீற்றர் பரப்பளவினுள் முடக்கப்பட்டனர். அவர்களை இராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது நள்ளிரவு நேரம். எனவே காட்டுப்பகுதியில் வெள்ளைக்கொடிகளுடன் வருபவர்களை அடையாளம் காண்பது கடினமானது. எனவே பலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் நந்திக்கடல் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்டார். அவரின் மகன் எதிர்த்திசையில் செல்ல முற்பட்டார். 10,000 விடுதலைப்புலிகள் வேறு திசையால் சரணடைந்தனர். அது ஒரு கடுமையான சமர். இராணுவத்தில் புதிதாக இணைந்தவர்களால் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களை இனம்காண முடியவில்லை. எனவே தான் அவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். கேள்வி: மேற்குலகம் தற்போதும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசி வருகின்றது. அது தொடர்பில் உங்களின் கருத்து என்ன? பதில்: எது போர்க்குற்றம் என்பது எமக்கு தெரியும். இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் பழிவாங்கும் படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் பெறுதல் தான் அவை. அதற்காக நாம் படையினரை கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டித்துள்ளோம். எனினும் எம்மால் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக, நாம் வைத்தியசாலைகள் மீது குண்டுகளை வீசியதாக அவர்கள் கூறுகின்றனர். அது வைத்தியசாலையாக அடையாளமிடப்பட்டிருந்தால் நாம் அதன் மீது குண்டு வீசினால் அது தவறு. ஆனால் நாம் அதனை மேற்கொள்ளவில்லை. இறுதிக்கட்ட போரில், விடுதலைப்புலிகள் சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டிருந்தனர். எனவே வைத்தியசாலை மீது குண்டுகள் பாய்வதை தடுக்க முடியவில்லை. மேலும் இந்த நிலைமைகளில் அங்கு பொதுமக்களோ அல்லது நோயாளர்களோ இருக்கவில்லை. கேள்வி: மேற்குலகம் ஏன் பொன்சேகாவை ஆதரிக்கின்றன? பதில்: முதலாவதாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, நிதி வசதியில் முன்னிலையில் உள்ள சக்திவாய்ந்த புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்குலகத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் அரசியலிலும், ஊடகத்துறையிலும் அதிக பங்கு வகிக்கின்றனர். இரண்டாவதாக மேற்குலகத்தின் சில நகர்வுகளை இலங்கை எற்றுக்கொள்ளவில்லை. மூன்றாவதாக பொன்சேகாவை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி அவர்களுக்கு அதிக ஆதரவுள்ளது என்பதால் மனித உரிமை அமைப்புக்கள் போர்க்குற்ற விசாரணைகளை முதன்மைப்படுத்தி வருகின்றன. கேள்வி: உங்களின் அரசு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பொன்சேகா விமர்சித்தது தொடர்பில்? பதில்: இடம்பெயர்ந்த மக்களின் விரைவான மீள்குடியேற்றத்தை ஜெனரல் பொன்சேகாவே பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எதிர்த்திருந்தார். அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என அவர் தெரிவித்திருந்தார். அதனால் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தாமதமாகியது. அவர் படைகளின் பிரதம அதிகாரியாக இருந்த போது மக்களை விடுவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசை விமர்சித்துள்ளார். கேள்வி: இறுதியில் என்ன நடந்தது? பதில்: யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பகுதிகளை போல புதிதாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கும் மக்கள் விரைவில் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவது பாதுகாப்பானது என விரும்பினோம், ஆனால் பொன்சேகா அதனை மறுத்தார். அதன் பின்னர் அவர்களை தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிவைப்பது தொடர்பில் நான் கருத்து கூறினேன். ஆனால் அவர்களை முன்னைய முகாம்களுக்கு இழுத்துவருமாறு பொன்சேகா தெரிவித்திருந்தார். எமக்கு வேறு நாடுகள் மற்றும் ஐ.நா போன்றவற்றிடம் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டது. ஆனால் பொன்சேகா பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து வாதாடினார். அதன் பின்னர் அரச தலைவர் அதில் தலையிட்டார். என்ன பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் பேசுகின்றீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார். ஏனெனில் 300,000 மக்கள் முகாம்களில் இருந்த போதே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 20,000 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். எனவே பாதுகாப்பு என்பது எங்குள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துமாறு அரச தலைவர் தெரிவித்தார்

இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? - பிரித்தானிய ஏடு ஆராய்கிறது

வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. தந்திரோபாயமான ரீதியில் - கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்தும் செயல் திட்டங்களை, இந்தியாவின் சொந்தக் கடற் பிராந்தியத்தில் சீனா ஏற்படுத்தி வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் [George Bush] நிர்வாகம் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் - இந்தியாவினைச் சுற்றி சீனா முன்னெடுக்கும் இவ்வாறான ஒவ்வொரு செயல் திட்டத்தினையும் ஒரு ‘முத்து’ என்றும், சீனா இந்த முத்துக்களைக் கோர்த்து ஒரு மூலோபாய வலைப் பின்னலை ஏற்படுத்த முனைகிறது என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் விபரித்திருந்தனர். இது பின்னர் சீனாவின் ‘முத்துமாலை’ மூலோபாயம் - “string of pearls” என பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “மறைமுகமான ஒரு தந்திரோபாயத்தின் ஒரு பகுதி தான் இந்த ‘முத்துமாலை முலோபாயம்’. இவ்வாறாக இந்தியாவினைச் சுற்றி சிலந்தி வலை போன்ற பலமான வலைப் பின்னலைப் பின்னுவதன் மூலம் - இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடி நிலை தோன்றுமிடத்து - இந்தியாவினை இந்த வலைக்குள் சிக்க வைப்பதை இலக்காகக் கொண்டதே இந்தத் தந்திரோபாயம்” என ஹொங்கொங்-இல் உள்ள Baptist University பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் Jean-Pierre Cabestan தெரிவிக்கிறார். இவ்வாறு பிரித்தானியாவில் வெளியாகும் Guardian Weekly ஏட்டிற்காக Bruno Philip எழுதியுள்ள ஓர் ஆய்வில் குறிப்பி்ட்டுள்ளார். அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி. Bruno Philip மேலும் எழுதியுள்ளதாவது: துறைமுகங்களை மேம்படுத்தும் செயல் திட்டங்களை உள்ளடக்கிய இந்த முனைப்புக்கள் முழுமையான வர்த்தகம்-சார் இலக்குகளைக் கொண்டதே என சீனா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் - சீனாவிற்குத் தேவையான மசகு எண்ணெயினைப் பெற்றுக்கொள்வதற்கான பிரதான வழங்கல் பாதையாக இந்து சமுத்திரம் இருந்துவரும் நிலையில், தென்னாசியப் பிராந்தியத்தில் மோதல் நிலை தோன்றுமிடத்து - இந்தியாவினைச் சூழவுள்ள நாடுகளில் தான் விரிவாக்கம் செய்துவரும் துறைமுகங்களை சீனா தனது இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தலாம் என அவதானிகள் கருதுகிறார்கள். பாகிஸ்தானின் Baluchistan மாகாணத்திலுள்ள Gwadar என்ற இடத்தில் சீனாவின் நிதியுதவியுடன மேற்கொள்ளப்பட்டுவரும் துறைமுக நிர்மாணம் இந்தியாவிற்கு அதியுச்ச கரிசனையினை ஏற்படுத்தியிருக்கிறது. பர்மாவின் Sittwe, Mergui மற்றும் Dawei ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் துறைமுக நிர்மாணப் பணிகளிலும் பீஜிங் ஈடுபட்டிருக்கிறது. இவை தவிர - அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை மும்முரமாக அபிவிருத்தி செய்துவரும் சீனா இலங்கையில் வேறு அதிக திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இந்தத் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கான செலவில் 85 வீதமான பணத்தினை சீனாவின் Exim வங்கி வழங்கியிருக்கிறது. அண்ணளவாக ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பணம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் பிரிவினைவாத விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான போருக்கும் சீனா தன்னாலான நிதியுதவியினை வழங்கியிருக்கிறது. பங்களாதேசின் சிட்டகொங் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் துறைமுகத்தினை ஆள்கடல் துறைமுகமாக நவீன மயப்படுத்துவதிலும் சீனா பங்களிப்பினைச் செய்திருக்கிறது. சீனாவின் ‘முத்துமாலை’ மூலோபாயத்தில் இறுதியாக இணைக்கப்பட்டிருக்கும் முத்தாக நேபாளம் மாறியிருக்கிது. இது நான்கு புறமும் தரையால் சூழப்பட்ட நாடாக இருந்தாலும் சீனாவைப் பொறுத்த வரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நேபாளம் அமைந்திருக்கிறது. 2008ம் ஆண்டில் நேபாளத்தின் அண்டை நாடான திபெத்தின் தலைநகர் Lhasa-வில் பிரச்சனைகள்ஏற்பட்ட பின்னர் - நேபாளம் திபெத்துடனான தனது எல்லைகளை இறுக்க வேண்டும் என்றும், நேபாளத்தில் பௌத்த துறவிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களை அடக்க வேண்டும் என்றும் சீனா நேபாளத்திற்குத் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. கடந்த மாதம் நேபாளப் பிரதமர் Madhav Kumar Nepal பீஜிங்கிற்கான தனது விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். சீன ஊடகங்களின் தகவலின் படி- இந்த விஜயமானது சீன-நேபாள எல்லைப் பாதுகாப்புத் தொடர்பான ஓர் உடன்பாடு எட்டப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. ஆனால், Chinese Global Times என்ற இணைய இதழில் கடந்த மாதம் எழுதப்பட்டிருந்த வெளியிடப்பட்டிருந்த தலையங்கம் - ‘இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு மேலாண்மை நிலையினைப் பெறுவதற்குச் சீனா முனைகிறது என்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் ஆழமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற அச்சம் தேவையற்ற ஒன்றே. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பெறப்படும் சீனாவிற்குத் தேவையான மசகு எண்ணெய் விநியோகங்கள் அனைத்தும் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதால் சீனா அந்த பிராந்தியத்தைக் கூர்ந்து அவதானித்து வருகிறது, அவ்வளவு தான்” என்று கூறுகின்றது. அப்படியானால் - ‘முத்துமாலை’ மூலோபாயத்தின் ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியான அச்சுறுத்தலைச் சீனா ஏற்படுத்த முனைவதாகக் கூறப்படுவது வெறும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியா? “ஆபிரிக்காவிலோ அல்லது மத்திய கிழக்கிலோ ஓர் அவசரகால நிலைமை ஏற்படுமானால் - அங்கிருக்கும் தனது நாட்டு மக்களை மீட்கும் பணிகளுக்காகச் சீனக் கடற் படையின் தேவை எழுமெனில், மேலே குறிப்பிட்டவாறு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனா அபிவிருத்தி செய்து வரும் துறைமுகங்கள் சீனக் கடற்படைக்கான பின்-தளங்களாகச் செயற்படும். எவ்வாறிருப்பினும் இந்தப் பிராந்தியத்தில் மோதல் நிலையொன்று தோன்றுமிடத்து நிலைமைகள் மிகவும் மோசமடைந்து காணப்படும்” எனப் பேராசிரியர் Jean-Pierre Cabestan தெரிவிக்கிறார். * இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.