திங்கள், 8 மார்ச், 2010

பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இராணுவம் வெற்றிச் சின்னம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிங்கள இராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம், நந்திக் கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. இந் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் ஏரி அருகே இலங்கை இராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது. இதற்கிடையே, இறுதிக் கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் அப்பகுதிகளில், தமிழர்கள் யாரும் குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடி போய்க் கிடக்கின்றன. அதே சமயத்தில், முல்லைத்தீவு கடலோரக் கிராமங்களில் வேறு பகுதிகளை சேர்ந்த சிங்கள மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக